தார் அல் உலூம்
தார் அல் உலூம் என்பது அறிவுக்கான இடங்களைக் குறிக்கும். மதரசாக்கள், உயர்நிலை மதக்கல்வி நிலையங்கள் (பெரும்பாலான இஸ்லாமிய தேசங்களில் தற்காலங்களில் இவை பல்கலைக்கழகங்களாக அறியப்படுகின்றன, BA, MA போன்ற பட்டங்களும் அரபு மொழியிலும், இஸ்லாமிய மதக் கல்வியிலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் வழங்கப்படுகின்றன.) இங்கே படிக்கும் மாணவர்கள் ’தல்ஹப்’ என்றும் ’தாலிப்’ என்றும் அறியப்படுகிறார்கள்.
இந்த தார் அல் உலூம்கள் இந்திய உலமாக்களால் முதன்முதலில் அமைக்கப்பட்டவை. உலெமாக்கள், உலுமாக்கள் என்றும் அழைக்கப்படும் இவர்கள் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்கள், நீதிமுறை, ஹதீஸ்/ஹடித் எனப்படும் முகமதுவின் சொற்களுக்கும் செயல்களுக்குமான விளக்கங்கள், தஃப்ஸீர் எனப்படும் குரான் வாசகங்களுக்கான விளக்கங்கள், உரைகள் ஆகியவற்றில் நிபுணர்கள். இந்த உலமாக்கள் அடிப்படைக் கல்வியைப் பிறருக்குப் போதிக்கும் இடம் மதரசா என்று அறியப்படும். பல உலமாக்கள் சேர்ந்து ஒரு பெரும் கல்விக்கூடம் அமைத்துக் கொண்டு இஸ்லாமிய உயர்கல்வியைக் கற்பிக்கும் இடம் தார் அல் உலூம்.
Zaman, Muhammad Qasim (2002). The Ulama in Contemporary Islam: Custodians of Change. Princeton University Press. ISBN 0-691-09680-5.
இந்த தார் அல் உலூம்களின் பாடத்திட்டம் தார்ஸ் இ நிஜாமி எனப்படும். இது பொது ஆண்டு 1065ல் பாக்தாத்தில் அல் நிஜம்மியா என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. இது மத்தியகால வரலாற்றில் மிகப் பெரிய இஸ்லாமியக் கல்விக்கூடமாக இருந்தது. இது 3000 மாணவர்களைக் கொண்ட கல்விக்கூடமாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு இஸ்லாமியக் கல்விக்கூடங்களுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படை இன்று வரையில் இந்த நிஜாமி திட்டம் தான்.
"Religious Education and the Rhetoric of Reform: The Madrasa in British India and Pakistan". Comparative Studies in Society and History 41 (2): 294–323.
இங்கே தஃப்ஸீர் எனப்படும் குரான் குறித்த விளக்கங்கள், கருத்தாக்கங்கள், குரானை மனப்பாடம் செய்யும் ஹிஃப்ஸ், ஸர்ஃப், நாஹவ் எனப்படும் அராபிய இலக்கணம், மொழியியல் மற்றும் தாரிக் எனப்படும் இஸ்லாமிய வரலாறு, ஃபிக்ஹ் எனப்படும் இஸ்லாமிய நீதிமுறை, ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டம் ஆகியன கற்றுத்தரப்படும்.
இந்த தார் அல் உலூம்கள் பாரதத்தில் உத்திரப் பிரதேசம் தேவ்பந்திலும், லட்சுமணாபுரியிலும், பாகிஸ்தானில் கராச்சியில் நான்கு இடங்களிலும், இங்கிலாந்தில் லண்டன், பிர்மிங்கம், போல்டன் ஆகிய இடங்களிலும், அமெரிக்காவில் நியூயார்க்கிலும், கனடாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும், பங்களாதேஷிலும் புகழ்பெற்று விளங்குகின்றன. பொது ஆண்டு 959ல் எகிப்தின் கெய்ரோ நகரில் புகழ்பெற்ற அல் அசார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. வேறு சில உயர்கல்விக் கூடங்களும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் வந்தன.
இந்த உலமாக்கள் தங்கள் பணியின் மூலமாக இதுவரை விட்டுச் சென்றது பிரச்சினைகளையும், தொடர் வாதப்பிரதிவாதங்களையும் மட்டுமே. இந்த உலமாக்கள் ஹதீஸ், குரான் குறித்துக் கூறிவைத்த அளவுக்கு மதத் தத்துவம், முன்னேற்றச் சிந்தனைகள், ஆகியவை குறித்து எதுவும் கூறாதது வரலாறு. இவர்கள் இஸ்லாமிய நாடுகளில் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவர்களாக இருந்து வந்தனர். ஆனால் எகிப்தில் நாசரும், துருக்கியில் முஸ்தஃபாவும் இவர்களை மதப்பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மட்டும் என்ற நிலைக்கு ஆக்கிவிட்டனர். அதன்பிறகு பல இஸ்லாமிய நாடுகளிலும் உலமாக்களின் ஆதிக்கம் அற்றுப்போனது.
மதரசா
மதரசா என்பது கற்பதும் கேட்பதும் நடக்கும் இடம் என்று பொருள்படும் சொல். இஸ்லாமிய மதக் கல்வியில் தொடக்கக் கல்வி முதல் பல்கலைக் கழக உயர்கல்வி வரை கற்பதைக் குறிப்பதாக இந்தச் சொல் இருந்தது. ஆனால் காலப்போக்கில் ஆங்கிலேய முறையில் school என்ற சொல்லுக்கு ஒத்த சொல்லாக இது மருவியது. உயர்கல்விக்கூடங்கள் தார் அல் உலூம் ஆகின. மதரசாக்கள் மதக்கல்வியை மட்டுமே முக்கியமாகக் கற்பித்தன. தார் அல் உலூம் என்பது உலகியல், சார்ந்த பல்வேறு விவரங்களைக் கற்பிக்கும் இடமாக உருவெடுத்தது.
பல்வேறு போர்கள், மன்னர்களின் படுகொலைகள், சதித்திட்டங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு 11ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் வஹாபி இஸ்லாமின் முன்னோடியான ஹன்பலி/சலாஃபி முறைமைகளின் பொற்காலம் என்று கருதப்பட்டது. இதன் பிறகு காலிஃபாக்களின் தலைமையில் இஸ்லாமியப் பேரரசு அமைந்த போது முக்கிய நகரங்களில் மட்டும் இருந்த மதரசாக்கள் ஓவ்வொரு ஊர்களிலும் மசூதிகளுக்கு அருகே செயல்பட ஆரம்பித்தன.
இஸ்லாமுக்கு துருக்கியர் தலைமை ஏற்றப்பின் இவற்றில் மதக்கல்வியோடு கணிதம், வானவியல், புவியியல், தத்துவம் ஆகிய பாடங்களின் அடிப்படைகள் பயிற்றுவிக்கப்பட்டன. துருக்கியப் பேரரசின் முதலாம் சுலைமான் மன்னனின் காலத்தில் (1520 – 1566) மதரசாக் கல்வியில் மருத்துவம் சேர்க்கப்பட்டது. ஆனால் ஹதீஸ் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. துருக்கிய ஓட்டாமன் மன்னர்களின் சீர்திருத்தங்கள் இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானவை என்ற மாறாக் கருத்துடன் செயல்பட்ட வஹாபியர்கள் ஓட்டாமன் துருக்கியின் வீழ்ச்சிக்குப் பின் இஸ்லாமின் தலைமைப் பீடமாக வஹாபியத்தின் பிறப்பிடமான சவூதி அரேபியாவை அரியணை ஏற்றினர்.
இந்த மார்க்க அறிஞர்களில் பெண்பால் அறிஞர்கள் அலிமாஹ் என்று அழைக்கப்படுவர். இவர்கள் பெண்களுக்கு மார்க்க கல்வி கற்பிப்பவர்கள். மதரசாக்களில் மட்டுமே பெண்களுக்கு அனுமதி உண்டு. தார் அல் உலூம்களில் பெண்கள் கற்க அனுமதி இல்லை. பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இல்லை என்று சொல்லப்பட்ட போதும் மார்க்க அறிஞர்களில் பெண்களுக்கு ’அலிமாக்கள்’ என்று பட்டம் இருக்கிற போதும் அடிப்படை வேறுபாடுகள் இதைக் கேலிக்கூத்தாக்குகின்றன.
முகமது நபியின் மனைவிகளில் கதிஜா மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடியவராக இருந்துள்ளார். சிறந்த வணிகரான கதிஜா யாராலும் ஒடுக்கப்படவோ, யாருக்கும் அடங்கிப்போகவோ இல்லை. முகமது நபியின் பிரியத்துக்குரிய மனைவி ஆயிஷா நீதி, அரசியல், போர் என்று பல விஷயங்களில் திறம் படைத்தவராக இருந்துள்ளார். இவர் மூலம் ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட ஹதிஸ்கள் விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. முகமதுவின் பிற 11 மனைவியரில் சிலரும், சில இடக்கைப் பெண்களும் தோல் பொருட்கள் செய்பவர்களாகவும், அலிமாக்களாகவும், மதச்சட்டதிட்டங்களை விவாதிக்கும் அளவு கற்றறிந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.
Lindsay, James E. (2005), Daily Life in the Medieval Islamic World, Greenwood Publishing Group, p. 198, ISBN 0-313-32270-8
வஹாபியர்கள் இப்படிப் பெண்கள் பலதுறைகளில் பிரகாசிப்பதைத் தடுக்க விழைகின்றனர். இவர்களது இந்தச் செயலுக்கு எதிர்ப்புகள் வந்த போதும் வஹாபியத்தின் இறுகிய பிடி இவர்களது அன்றாடச் செயல்பாடுகளுக்கும் பல கெடுபிடிகளை விதித்திருக்கிறது. பெண்கள் பொறியியல், பத்திரிகைத்துறை, மருத்துவம், கட்டிடக்கலை ஆகியவற்றைப் படிக்க பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் குரானில் பெண்களின் முதன்மைக் கடமை மனைவி மற்றும் தாய் ஆகியவையே என்று சொல்லியிருப்பது. இதன் உச்சமாகப் பெண் வெறுப்பும் பெண்களை மனிதர்களாக மதிக்காத நிலையும் இருக்கிறது.
http://www.moroccoworldnews.com/2013/04/87234/womens-rights-in-saudi-arabia-wahhabism-vs-islam/
http://www.gatestoneinstitute.org/1133/saudi-arabia-wahhabis-vs-women
இவை இஸ்லாமின் ஆதிக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று சில முஸ்லிம்கள் வாதிடும் போதும் குரான் பெண்களை ஆண்களை விட ஒரு படி கீழாகவே வைத்துப் பார்க்கிறது என்பது உண்மையே.
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (குரான் 4:34)
வஹாபியத்தில் பல இயற்கை நியதிக்கு விரோதமான செயல்பாடுகள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் இருக்கின்றன. அவை குறித்துப் பார்க்கும் முன்னர் வஹாபியத்தின் வரலாற்றுப் பின்னணியை முழுமையாகப் பார்த்துவிடுவதே நன்று என்பதால் அடுத்து வஹாபியத்தின் பாரத வரலாறு குறித்துப் பார்ப்போம்.