கஜினி வம்சத்தின் ஆட்சியில் கோரி எனும் மலைவம்சப் போர்வீரர்கள் பலர் கஜினி சுல்தான்களின் வீண் அச்சத்தால் கொல்லப்பட்டனர். அவர்களின் கொலைக்குப் பழிவாங்க பல முறைகள் கஜினி நகரையும் அந்த ராஜ்ஜியத்தையும் கோரி வம்சத்தினர் சூறையாடினர். ஆனால் தம்மை ஒரு ராஜ வம்சமாக நிறுவிக் கொண்டது 12ஆம் நூற்றாண்டில் தான். 1152ல் அலா அல்தின் முகமது என்பவன் கப்பம் கட்ட மறுத்து செல்ஜுக் அரசுக்கு எதிராகப் போர்தொடுத்தான். அவன் தோற்றுப் பிடிபட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தான். பின் பெரும் செல்வத்தைக் கொடுத்து மீட்கப்பட்டான். இவன் சிலகாலம் ஆண்டபின் 1161ல் மாண்டான். இவனது மகன் சைஃப் அல்தின் முகமது பட்டத்துக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் ஒரு போரில் இறந்தான்.
இதன் பிறகு இவனது ஒன்றுவிட்ட சகோதரன் கியாத் அல்தின் முகமது ஆட்சிக்கு வந்தான் இவனது சகோதரன் முயிஸ் அல்தின் முகமது என்ற ஷகாப் அல்தின் முகமதுவுடன் சேர்ந்து கொண்டு அபுல் அப்பாஸ் என்ற தங்களது வம்சத்து விரோதியைக் கொன்றான். தனது மாமன் ஃபக்ர் அல்தின் மசூதை போரில் வென்று விரட்டியடித்தான். 1173ல் முயிஸ் அல்தின் தனது மூதாதையர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க கஜினி நகரைச் சூறையாடினான். அங்கிருந்து ஹிந்துஸ்தானத்தின் மீது படையெடுக்க தளம் அமைத்தான். 1175ல் மூல்தான் நகரைப் பிடித்தான். 1179ல் குஜராத் மீது படையெடுத்தான். ஆனால் ஹிந்து அரசன் இரண்டாம் பீமதேவ சோலங்கியிடம் மிக மோசமாகத் தோற்றோடினான். இப்போரில் பீமதேவன் இளைஞனாக இருந்ததால் அவனது தாய் நைகிதேவி போரை முன்னின்று நடத்தினாள். தோற்றுத் திரும்பினான் எனினும் கஜினி வம்ச அரசனிடம் இருந்து சியால்கோட், பெஷாவர் ஆகிய பகுதிகளைப் பிடித்துக் கொண்டான் முயிஸ் அல்தின். இதன் பிறகு சில காலம் ஹிந்துஸ்தானத்துப் பக்கம் வராதிருந்தான். 1186ல் லாகூரைப் படையெடுத்துப் பிடித்துக் கொண்டான். கஜினி வம்சத்தின் ஆளுநர் குஸ்ரு மாலிக்கைக் கொலை செய்தான். இதன் மூலம் கஜினி வம்சத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தான்.
இந்நிலையில் ஹிந்துஸ்தானத்தில் நடந்த சில அரசியல் சார்ந்த விவகாரங்களைக் குறித்துப் பார்ப்பது அவசியமாகிறது. 1149ல் சோமேஸ்வர சௌஹான் என்ற அஜ்மீர் மன்னனுக்கு பிரிதிவிராஜன் என்ற மகன் பிறந்தான். கன்னோஜி மன்னன் ஜெயசந்திரன் ஒரு வகையில் இவனது மாமன். சோமேஸ்வர சௌஹான் தில்லி மன்னன் அனங்கபாலனுக்கு வயதான காரணத்தால் தில்லி நிர்வாகத்தையும் கவனித்துவந்தான். இந்நிலையில் அனங்கபாலன் மறைவுக்குப் பிறகு தில்லி ராஜ்ஜியம் சோமேஸ்வரனுக்கு வந்தது. சோமேஸ்வரன் காலத்துக்குப் பிறகு வயதில் மூத்த உறவினன் என்ற முறையில் கன்னோஜி மன்னன் ஜெயசந்திரன் தில்லிக்கு உரிமை கோரினான். ஆனால் பிருதிவிராஜன் தன் தந்தையின் ஆளுமையில் இருந்த ராஜ்ஜியத்தை விட்டுத்தரவில்லை. ஒரு அரசியல் விவகாரத்தில் பிருதிவிராஜனின் முக்கியப் படைத்தளபதி ஒருவன் குஜராத்தை ஆண்ட முதலாம் பீமதேவனிடம் தன் நாட்டுப் படைகள் குறித்த விவரங்களைச் சொல்லிவிட்டான். இதனால் பீமதேவன் அஜ்மீர் மீது படையெடுத்தான். பீமதேவனின் மகன் வனராஜ் என்பவன் யுத்த தந்திரங்கள், வியூகங்களில் நிபுணன் என்று எதிரிகளால் அஞ்சப்பட்டான்.
துரோகியான அந்தத் தளபதியின் செயலை அறியாத பிருதிவிராஜன் போருக்குச் சென்றான். துரோகி தளபதி யுத்தகளத்தில் பிருதிவியின் படையினருக்கு விஷம் வைத்தான். இதனால் படைபலம் வெறும் 300 பேர் என்ற நிலையில் பிருதிவிராஜனை அழிக்க 500 பேர் கொண்ட படையை அனுப்பினான் பீமதேவன். ஆனால் பீமதேவன் படை தோற்றோடியது. பிறகு 1000 வீரர்களை நடுநிசியில் அனுப்பினான் பீமதேவன். வெற்றி கிட்டவில்லை. மறுநாள் தானே படைகளோடு வந்து பிருதிவிராஜனுடன் மோதினான். ஆனால் பிருதிவியின் வீரத்துக்கு முன் மோசமாகத் தோற்றான்.
இந்தப் போர் முடித்து திரும்பும்போது பிருதிவிராஜனுக்காகப் போரிட்டுக் காயமுற்ற தில்லி படைகளுக்குச் சிகிச்சை தர ஒரு தோட்டத்தில் தங்கினர். அந்தத் தோட்டம் மஹோபா நாட்டைச் சேர்ந்தது. அனுமதியின்றித் தங்கியதற்காக படையினர் அவமானப்படுத்தப்பட்டனர். பிருதிவிராஜன் அவமானம் பொறுக்காது மஹோபா மீது போர் தொடுத்தான். அந்தப் போரில் ஒரு பக்கம் வெற்றி என்ற போதும் பிருதிவி மோசமாகக் காயமுற்றான். அவனது தோழன் சஞ்சம் ராய் அவன் மீது படுத்துக் கொண்டு பருந்துகளுக்குத் தன்னை இறையாக்கி மன்னனைக் காத்தான். இதன் பிறகு பிருதிவிராஜன் உடல் நலம் தேறிவருகையில் ராய்சந்த் என்ற மன்னன் தலைமையில் சுற்றுவட்டார ராஜ்ஜியங்கள் பிருதிவி மீது போர் தொடுத்தன. மக்களின் ஏகோபித்த ஆதரவும் வீரமிக்க படையினையும் கொண்ட பிருதிவி ராய்சந்தை போரில் கொன்றான். அதோடு அவனுக்கு ஆதரவான ராஜ்ஜியங்களைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்.
இந்நிலையில் ஜெயச்சந்திரன் 1175ல் ராஜசூய யாகம் செய்து தனது மேன்மையை நிலைநாட்ட முடிவுசெய்தான். சுற்றி இருந்த ராஜ்ஜியங்கள் வீரனான ஜெயச்சந்திரனோடு போர் புரியாமல் அவனது ஆளுமையை ஏற்றன. ஆனால் பிருதிவி ஜெயசந்திரனின் மேன்மையை ஒப்புக்கொண்டு தலைவணங்கவில்லை. இதில் கோபமுற்ற ஜெயசந்திரன் பிருதிவிராஜனைப் போல ஒரு பொம்மை செய்து அதைத் தன் அரண்மனையின் வாயில்காப்போன் போல நிறுத்தி வைத்தான்.
வெகுண்டெழுந்த பிருதிவி ஜெயச்சந்திரனின் மீது படையெடுத்தான். பல மன்னர்கள் சூழ்ந்திருக்க அரண்மனையில் புகுந்து அவனது மகள் சம்ய்க்தையைத் தூக்கிச் சென்றான் பிருதிவி. அவனைத் தடுக்கவும் வெல்லவும் யாராலும் இயலவில்லை. இதில் கோபம் கொண்டிருந்த ஜெயச்சந்திரன் 1186ல் லாகூரைப் பிடித்துக் கொண்ட கோரி வம்சத்தினரிடம் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டான். 1191ல் தில்லி மீது படையெடுத்தான் ஷகாப் அல்தின் என்கிற முயிஸ் அல்தின் முகமது. இவனே பொதுவாக கோரி முகமது என்று அழைக்கப்பட்டான். இவன் தில்லி மீது படையெடுத்த போது தில்லியை நிர்வகித்து வந்த இளவரசன் கோவிந்தராஜனின் தலைமையில் ஒரு லட்சம் வீரர்கள் கொண்ட படையை அனுப்பினான் பிருதிவிராஜன். மேலும் படைகளுடன் காத்திருந்தான் பிருதிவி. ஷகாப் அல்தின் முகமது கோரி மூன்று லட்சம் வீரர்களுடன் வந்திருந்தான்.
ஆனால் போரில் ராஜபுத்திரப் படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஷகாப் அல்தின் முகமது கோரியின் படைகள் பின்வாங்கி ஓடின. ராஜபுத்திர யானைப் படையின் தாக்குதல் கோரமாக இருந்தது. கோவிந்தராஜன் காயமடைந்த போதும் யானை மீதேறிப் போரிட்டான். ஷகாப் அல்தின் முகமது கோரி சிறைப்பிடிக்கப்பட்டான். பித்தோர்கர் கோட்டையில் பிருதிவிராஜனின் முன் நிறுத்தப்பட்டான் கோரி. அமைச்சர்கள் தளபதிகள் அனைவரும் அவனைக் கொன்றுவிடச் சொன்னபோதும் உயிர்ப்பிச்சை கேட்டு இறைஞ்சிய ஷகாப் அல்தின் முகமது கோரியை பிருதிவிராஜன் மரியாதையுடன் நடத்தி விடுவித்தான். இது மிக மோசமான பின் விளைவை ஏற்படுத்தும் என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
A Global Chronology of Conflict: From the Ancient World to the Modern Middle East, Vol. I, ed. Spencer C. Tucker, (ABC-CLIO, 2010)
The Iranian World, C.E. Bosworth, The Cambridge History of Iran, Vol. 5, ed. J. A. Boyle, John Andrew Boyle, (Cambridge University Press, 1968)
http://www.iranicaonline.org/articles/ghaznavids
Andre Wink, Al-Hind: The Making of the Indo-Islamic World, Vol. 2.