1192ல் மீண்டும் படையெடுத்து வந்த கோரி முகமது பிருதிவிராஜனை இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் சொல்லியும் தன்னிடம் சரணடையும்படியும் ஆள் அனுப்பினான். பிருதிவிராஜன் தான் மாற முடியாது என்றும் சர்ஹிந்த் பகுதியில் இருந்து ஓடிவிடும்படியும் பதில் அனுப்பினான். தன் படைகளைத் திரட்டிக் கொண்டு கிளம்பிய பிருதிவிராஜனை கோரி முகமது இடைமறித்தான் தாக்குதலுக்கு முன் தன் சகோதரனே அரசன் என்றும் அவனது உத்தரவு இல்லாமல் தான் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் கூறினான். இரு படைகளும் கூடாரங்கள் அமைத்துத் தங்கின. பிருதிவி போர் தொடங்க சூரிய உதயத்துக்காகக் காத்திருந்தான்.
ஆனால் ஜெயசந்திரனின் உதவியுடன் பிருதிவியின் படைபலம் போர்த்தந்திரங்களை அறிந்து வைத்திருந்த முகமது விடியலுக்கு முன் சிறு படையுடன் தாக்குதலில் இறங்கினான். இருளில் நடந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர். இது ராஜபுத்திர வீரர்களை கலங்கச் செய்தது. ஆனால் முறையான போர் தொடங்க பிருதிவிராஜன் கோரியின் பதிலுக்குக் காத்திருந்தான். ஆனால் அண்ணனிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்ன முகமது பதில் சொல்லாமல் பிருதிவியின் படைகளை இரவில் தாக்கியே பல ஆயிரம் வீரர்களைக் கொன்றான். ஜெயச்சந்திரன் தன் பங்கிற்குப் படைகளின் நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக தன் படைகள் உதவிக்கு வராது என்றும் கோரிக்கு ஆதரவாகப் போரிடப் போவதாகவும் பிருதிவியின் படைகளிடையே செய்தி பரப்பினான்.
கோரி முகமதுவின் படை வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். காரணம், குதிரைப்படை, யானைப்படை உள்ளிட்ட 10 லட்சம் வீரர்கள் கொண்ட பிருதிவியின் படையை நேருக்கு நேர் எதிர்த்துப் போரிட்டு அழிவதைவிட இப்படி ஒருபுறம் பேச்சுவார்த்தை என்று பிருதிவியைக் காக்க வைத்துவிட்டு மறுபுறம் ஆயிரம் பேர் கொண்ட படையுடன் சென்று எதிரிகளைத் தாக்கிக் கொன்றுவிட்டு வருவது அவர்களுக்குப் பிடித்திருந்தது. பிருதிவியின் படை இந்தத் தாக்குதலில் கலக்கம் அடைந்தது. ஜெயச்சந்திரன் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டான் என்ற செய்தி இதுவரை ராஜபுத்திரர்கள் கேள்விப்பட்டிருக்காத துரோகம். இதுவேறு அவர்களை மனதளவில் மிகவும் நொந்து போகச் செய்தது.
இந்நிலையில் பொறுத்தது போதும் என்று பிருதிவி போர் தொடுத்தான். அவனது திட்டமிடும் முறைகள் ஜெயச்சந்திரனால் ஏற்கனவே விவரமாக எடுத்துரைக்கப்பட்டு தயாராக இருந்த கோரி தன் படைகளை ஐந்தாகப் பிரித்தான். நான்கு புறங்களில் இருந்தும் பிருதிவியின் படைகள் தாக்கப்பட்டன. கோரமான போரில் மனதளவில் தளர்ந்திருந்தாலும் பிருதிவியின் படை வீரத்துடன் போரிட்டது. இந்நிலையில் முகமது கோரி தன்வசமிருந்த 12000 வீரர்களுடன் பிருதிவியின் காலாட்படையை ஊடறுத்துத் தாக்கினான். இந்தத் தாக்குதலை எதிர்பாராத பிருதிவி சற்றே நிலைகுலைந்தாலும் போர் உத்திகளை மாற்றும் போது அதற்கேற்ப ஜெயச்சந்திரனின் ஆலோசனையுடன் கோரியும் தன் உத்திகளை மாற்றினான். இறுதியாக போரில் பிருதிவியை கோரி தோற்கடித்தான். அவனது கண்களைக் குருடாக்கினான். தன் அடிமையாகப் பிடித்துச் சென்றான் என்று ஃபெரிஷ்டா தன் நூலில் கூறியிருக்கிறார்.
பிருதிவிராஜ் ராசோ என்ற நாட்டுப்புறப்பாடல்கள் அடங்கிய நூலில் பிருதிவி குருடாக்கப்பட்டு அடிமையாகக் கொண்டு செல்லப்பட்ட போது பிருதிவிராஜன் சத்தம் வரும் திசைநோக்கி அம்பெய்வதில் வல்லவன் என்று கேள்விப்பட்டு வில்லும் அம்பும் கொடுத்து அவனை சப்தம் வரும் திசையில் அம்பெய்யச் சொன்னான். முகமதின் குரல் கேட்டு அம்பெய்து பிருதிவி அவனைக் கொன்றான் என்பது செவிவழிக் கதை. இன்றும் ஆஃப்கனிஸ்தானில் கோரியின் சமாதிக்கு அருகே உள்ள பிருதிவியின் சமாதியை மிதித்துச் சென்று தங்கள் கோபத்தை முகமதியர்கள் வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
பிருதிவியின் மனைவி சம்யுக்தையை கோரி முகமது அவனது கண்முன்னே கவர்ந்து கொண்டான் என்று ஃபெரிஷ்டா தனது குல்ஷன் இ இப்ராஹிமி (தாரிக் இ ஃபிரிஷ்டா என்றும் அறியப்படும்) புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார். பிருதிவி முடமாக்கப்பட்டு கண்முன்னே தன் இனப்பெண்கள் வன்கொடூரத்துக்கு ஆளாவதைக் கண்டு வெதும்பி கொடுமையான சாவுக்கு ஆளானான் என்கிறார் இவர்.
லக்ஷ்மிதர் என்பவர் எழுதிய விருத்தவிதி வித்வாம்சா என்ற புத்தகத்தில் பிருதிவிராஜனின் படைகள் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் மனைவியையோ அல்லது தங்களது ஆசை நாயகிகளையோ உடன் அழைத்துச் சென்றதாகவும் இதற்குக் காரணமாக பிருதிவி சம்யுக்தையை அழைத்துவந்ததையும் கூறியிருக்கிறார். இந்தப் பெண்களைக் கொள்ளையிட இரவுத்தாக்குதலில் கோரியின் படையினர் முயன்ற போது அவர்களைத்தடுத்த ஸ்கந்தா என்ற முக்கியத் தளபதி கொல்லப்பட்டார் என்றும் அதுவும் ராஜபுத்திரப் படைகளின் மனச் சோர்வுக்கு ஒரு காரணம் என்றும் லக்ஷ்மிதர் கூறுகிறார்.
இதில் சிறைப்பிடிக்கப்பட்ட ராஜபுத்திர வீரர்கள் முடமாக்கப்பட்டு பாரசீக அடிமைச் சந்தைகளில் விற்கப்பட்டனர். அவர்களது குழந்தைகளுக்கு சுன்னத் செய்யப்பட்டு இஸ்லாமியர்களாக மதரசாக்களில் வளர்க்கப்பட்டனர். பெண்கள் படையினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு அடிமைச் சந்தைகளில் விற்கப்பட்டனர். சிலர் இஸ்லாமியத் தளபதிகளின் இடக்கைப் பெண்டிராக (காமக்கிழத்திகளாக) சிறைவைக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் அனைவரும் கட்டாயமாக இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் ராஜபுத்திர வீரர்களை நிலைகுலையச் செய்தது. அவர்களது நம்பிக்கை உடைந்து போனது. அவர்கள் தப்பிச் சென்று தங்கள் ஊர்களில் கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர். முகமதியப் படையை எதிர்ப்பதே அவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஜெயச்சந்திரன் செய்த துரோகத்தால் தங்களுக்குள் நம்பிக்கை இழந்து ஒருவரை ஒருவர் சந்தேகிக்கத் தொடங்கினர்.
பிருதிவிராஜனின் அதீத தன்னம்பிக்கையும் எதிரியிடம் காட்டிய கருணையும் ஹிந்துஸ்தானத்துக்குப் பேரிழப்பானது. ஜெயசந்திரனின் துரோகம் இருந்த போதும் பிருதிவி எதிரியிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளாது கருணையின்றி முதல் போரில் 1191லேயே அவனை விரட்டிச் சென்று அடக்கியிருந்தால் ஹிந்துஸ்தானத்துக்கு இப்படி ஒரு பேரிழப்பு ஏற்பட்டிருக்காது. நமது முன்னோர்களின் பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையுமே ஹிந்துஸ்தானம் இன்னமும் சந்தித்து வரும் இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் காரணமானது.
இதன் பின்னர் அஜ்மீருக்குச் சென்று அந்த நகரைக் கொள்ளையிட்ட முகமது அங்கே வராஹப்பெருமாள் கோவிலுக்கு அருகே குடிசையில் இருந்த க்வாஜா மோயினுதீன் சிஷ்டிக்கு பல பரிசுகள் அளித்தான். தன் வெற்றிக்கு அல்லாவிடம் பிரார்த்தித்த அவருக்காக இரண்டரை நாட்களில் ஒரு மாளிகையை நிர்மாணித்தான். ஆனால் கோவிலில் நாட்டம் கொண்ட அவர் அங்கேயே தான் வசிக்கப்போவதாகச் சொன்னார். இன்று அந்த வராஹப் பெருமாள் கோவில் இல்லை. க்வாஜா மோயினுதீன் சிஷ்டியின் தர்ஹா மட்டுமே இருக்கிறது.
The State at War in South Asia, By Pradeep Barua, 2005 ISBN:0803213441
Viruddhavidhi-vidhvamsa by Laksmidhar
Gulshan-i-Ibrahimi by Ferishta
The Hammir-Mahakavya of Nayachandra Suri.
Prabandha-chintamani by Merutunga
Prithviraj Vijay by Jayanka