×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வரலாற்று ஆசிரியரான கோயாபெல்ஸ்

Tuesday, 23 April 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

வரலாறு டாட் காம் இனையதளத்தில் வெளியான கட்டுரைக்கு எனது மறுப்பு. இதை அந்தத் தளம் பிரசுரிக்க மறுத்து விட்டது.

வரலாறு டாட் காம் கட்டுரை : http://www.varalaaru.com/Default.asp?articleid=1083

குறிப்பு: இக்கட்டுரையில் வரலாறு டாட் காம் கட்டுரையின் பகுதிகள் இரண்டு கோடுகள் மூலம் ( //......//) அடையாளப் படுத்தப்படுகிறது.

//ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றம் ஏன்?// இது தான் என் கேள்வியும்.

14.4.1963 ல்  திருக்குறள் மாநாடு நடத்தி, ஆண்டு தோறும் திருவள்ளுவர் நினைவாக சூலைத் திங்கள் 21 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரையில் யாதேனும் ஒரு நாளை அரசாங்கம் விடுமுறையாக விடவேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் தி.மு.க நிறுவனர் அறிஞர் அண்ணா. இந்தக் கோரிக்கையை ஏற்று 1966 ஆம் ஆண்டு முதல், தமிழ் அறிஞர்களின் திடமான முடிவின்படி, வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுடம் (பனை) என்பதனால், சூன்  திங்கள் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாட விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை வைத்த ஒருவரான  அறிஞர் அண்ணா, 1967 ல் ஆட்சிக்கு வந்த பின், திருவள்ளுவர் தினத்தை சூன் மாதத்திலிருந்து மாற்ற வில்லை. அண்ணாவின் மறைவுக்கு பிறகு,1970 ல் கருணாநிதி தை மாதத்திற்கு திருவள்ளுவர் தினத்தை மாற்றியது என்பது வரலாறு.

1963 ல் திருவள்ளுவர் தினம் சூலையில் (ஆடி ) வேண்டும் என்பது  அண்ணாவின் கோரிக்கை. அதிலிருந்து மூன்றாவது ஆண்டு அதாவது 1966 ல், சூனில்(வைகாசி ) திருவள்ளுவர் தினம் அறிவித்தவுடன், கோரிக்கை வைத்த அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் வரவேற்கின்றனர். அதிலிருந்து 3 ஆண்டிற்குள் கருணாநிதி 1970 ல், தை மாதத்தை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார்! எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும் !  ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றுவது தவறு தான் !

இனி வரலாறு தளத்தின் தலையங்கக் கட்டுரையை பார்ப்போம் !

//புத்தாண்டு வாழ்த்துக்கள் !//
சரி, இது கட்டுரையாளர்களின் தனிப்பட்ட விருப்பம், குறை கூற முடியாது. அடுத்த வரியை பாருங்கள்!

//அவர்களுக்காக ஏற்க்கனவே பல தமிழ் அறிஞர்களால் நிரூபிக்கப் பட்ட ஒன்றை மீண்டும் ஒருமுறை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கப் போவதில்லை.//

எந்த அறிஞர் நிரூபித்தார் ? எப்போது நிரூபித்தார் ? 'தை' யே தமிழ்ப் புத்தாண்டு என்று நீதி மன்றத்தில் affidavit தாக்கல் செய்தவர்களுக்கும், கருணாநிதியால் மாற்றத்திற்கு   ஆலோசனை வழங்கிய  அறிஞர்கள் என்று பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கும், குடந்தை மூவர் முதலிகள் முற்றம் என்ற அமைப்பின் சார்பாக ஓர் ஆய்வரங்கிற்கு சான்றுகள் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.  இன்று வரை எந்தச் சான்றும் தரப்படவில்லை. இலக்கியங்களிலிருந்தோ, கல்வெட்டுக்களிலிருந்தோ,எதாவது மரபு வழக்காட்டுதலிலோ,அல்லது அறிவியல் அடிப்படையிலோ,ஏதேனும் ஒரு சான்றாவது கொடுக்கப்பட்டுள்ளதா? நிரூபணம் என்றால், நான் சொல்லி விட்டேன் நான் சொல்லி விட்டேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வதா? அல்லது நான் நின்றால் சரித்திரம் , நடந்தால் திக்விஜயம் என்று அடுக்கிப் பேசும் மேடைப் பேச்சா? வரலாறு தெரிந்தவர்களுக்கு அறிமுகமான ஒரு பாத்திரம் ஹிட்லர். அவன் வெற்றிக்கு காரணமான ஒருவர் கோயாபெல்ஸ். இவரின் தத்துவம் கூர்ந்து கவனிக்கத் தக்கது." ஒரு பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் " அது போலத் தான் இந்த //தமிழ் அறிஞர்களால் நிரூபிக்கப் பட்ட //  என்ற சொற்றொடர். ஹிட்லரை ஒரு 'சைகோ' என்று சொல்லும் வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஆட்சியாளரால் தான் கோயாபெல்ஸ் போன்றவர்களை ஊக்குவிக்க முடியம் என்பது ஒரு கருத்து. இந்த ஆண்டு மாற்ற பாசிச செயல்பாடு, நாசி பண்பாட்டின் சாயலில் உள்ளது என்பதில் ஐயமில்லை.

//அரசின் அறிவுப்புகளால் முடிவு செய்யப் படுபவைகளா பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் ?//
இது நியாயமான வாதம்.. அப்படியென்றால் 2009 ல் கருணாநிதியிடம் இந்தக் கருத்தை வரலாறு டாட் காம் தெரிவித்திருக்கலாமே? கருணாநிதிக்கும், அரசு என்பது நீங்கள் கூறுவது போல் விடுதலை பெற்று 62 ஆண்டுகளாகி  இருக்கும் ஜனநாயக அரசு என்பது நினைவுக்கு வந்திருக்கும்!

//விக்ரமன் , சாலிவாகனன்//  என்ற நினைப்பும் இருந்திருக்காது !

//மானமும் அறிவும் நிரம்பிய, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆபாசக் குப்பையான 60 ஆண்டு பிறப்பு பற்றிய கதையையா நம்பிக்கொண்டு இத்தனை காலமும் தமிழன் சித்திரையில் புத்தாண்டைக் கொண்டாடிவந்தான் //
இங்கு கேள்வி, ஆண்டுத் தொடக்கம் சித்திரையா ? தையா ? என்பது தான். 60 ஆண்டு சுழற்சிக்கும் முதல் மாதத்திற்கும் என்ன சம்மந்தம் ?

//60 ஆண்டு முறை தமிழர் கண்டதே //
நான் சொல்லவில்லை! கருணாநிதி அரசுக்காக தமிழ் அண்ணல் இராம . பெரிய கருப்பன் அவர்கள்  தாக்கல் செய்த நீதிமன்ற  affidavit சொல்கிறது. 60 ஆண்டுகளின் பெயர் சோழர் கல்வெட்டுகளிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளிலும் விஜயநகர பேரரசு தோன்றுவதற்கு முன்பே இடம் பெற்றுள்ளதே ? அப்படி என்றால் அவர்களும் மானமும் அறிவும் இல்லாதவர்களா? பத்தாம் நூற்றாண்டில் பிராமண, சத்திரிய, விஸ்வகர்மா மற்றும் சூத்திர வர்ணத்தை சார்ந்த 98 ஜாதியினர் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியதாக கல்வெட்டு உள்ளதே, அவர்களும் மானம் கெட்டவர்களா? பங்குனியை கடை மாதம் என்று அகத்தியர் பன்னீராயிரம் சொல்கிறதே, அப்படியென்றால் அகத்தியரும் அறிவற்றவன், மானம் கேட்டவன்! திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக என்று சித்திரை மாதத்தை முதல் மாதம் என்று சொன்ன நக்கீரன் அறிவற்றவன்! மானம் கேட்டவன் ! இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு மேட ராசி என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்த முனைவர் மா.ராசமாணிக்கனார் அறிவற்றவர்! மானம் கேட்டவர் ! சுமார் 500 ஆண்டுகள் முன்பு புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று சொன்ன கமலை ஞான பிரகாசர் அறிவற்றவர் ! மானம் கேட்டவர் ! சித்திரையை முதல் மாதம் என்று சொன்ன நாமக்கல் கவிஞர் அறிவற்றவர்! மானம் கேட்டவர்கள்!

பல நூற்றாண்டுகாலமாக சித்திரையை ஆண்டு பிறப்பாக கொண்டாடிய  தமிழ் மன்னர்களும், புலவர்களும், சான்றோர்களும்,நம் குடி மக்களும் அறிவற்றவர்கள் ! மானம் கேட்டவர்கள் !


அப்படியென்றால் அறிவாளி யார் ? மானமுள்ளவர் யார் ? இதற்க்கான விடையும் வரலாறு டாட் காம் கட்டுரையில் உள்ளது.

// பெரியாராலேயே முடியாதது நம்மாலா முடிய போகிறது ?//
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன வரை வெட்கம் கெட்டு தந்தை என்று சொல்லுவது அறிவுடைமை ! தன்மானம் ! முலையிலிருந்து தீ வைத்து எரித்தாளாம் ! கற்ப்புக்கரசியாம் ! முட்டாள் பெண்பிள்ளை! இது கண்ணகிக்கு ஈ. வே.ரா கொடுத்த வெகுமதி.....இதை ஏற்றுக்கொண்டால் அறிவாளி ! தன்மானச் சிங்கம் ! ஆரியம் நன்று தமிழ் தீது என்று சொன்ன குயக்கோடனை அழித்த நக்கீரன் சொன்ன சித்திரையை பின்பற்றுபவன் மானங்கெட்டவனா? தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாருக்கு தந்தை உறவைக் கொடுத்தவர்கள் மானங்கெட்டவர்களா?

//1921 ல் மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழ் அறிஞர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள் தான்  தை மாதம் தமிழ் புத்தாண்டு தொடக்கம் //

1921 ல் எந்த நாளில் இந்தக் கூட்டம் நடந்தது ? அந்த ஆண்டு பொங்கல் விழாவை மறைமலை அடிகள் இலங்கையில் கொண்டாடியதாக அவர் மகன் மறை.திருநாவுக்கரசு எழுதுகிறார். சரி, அதற்குப் பின் பச்சையப்பன் கல்லூரியில் கூடம் எந்தத் தேதியில் நடந்தது ? புளுகுவதற்கு ஒரு அளவு உள்ளது.

சென்னையில் திருவள்ளுவர் திருநாள் கழகத்தால்  1935  ஆம் ஆண்டு மே திங்கள் 18 மற்றும் 19 நாள் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மறை மலை அடிகள் //கிறுத்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்// (திருவள்ளுவர் நினைவு மலர் பக்கம் .௧௧௭(117) ) என்று சொன்னதைத் தவிர, தை மாதம் பற்றியோ, தமிழ் ஆண்டு பற்றியோ  எதுவும் குறிப்பிடவில்லை. இந்தக் கூட்டத்தில் திரு.வி.க, தே. போ.மீ போன்ற சான்றோர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுடம் என்பதே! மறைமலை அடிகளின் வள்ளுவர் காலத்தை  அவர்கள் ஆமோதிக்கவில்லை. மு.வ. அவர்கள் திருவள்ளுவர் காலம் கி.பி. முதல் நூற்றண்டிர்க்குப்பின் என்று குறிப்பிடுகிறார்.பெரும்பாலான அறிஞர்களும் அங்கனமே குறிப்பிடுகிறார்கள்.

திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் முடிவு செய்யப்பட்ட 9 நோக்கங்களில், 'தை'யோ, தமிழ் புத்தாண்டோ இடம் பெறவில்லை. (திருவள்ளுவர் நினைவு மலர்) தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் வைகாசி அனுடம் திருவள்ளுவர் தினமாக 1935 ல் கொண்டாடப்பட்டதையும், எந்தெந்த அறிஞர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் திருவள்ளுவர் திருநாள் மலர் பக்கம் .௧௨௮(128) - ௧௩௦ (130)  ல் காணலாம். 15.5.1955 ல் தமிழ் மறைக் கழகம் , தமிழினத்தை ஒன்று படுத்தும் திருநாள், திருவள்ளுவர் திருநாள் .அது வைகாசி அனுடம் என்று திருவள்ளுவர் திருநாள் மலர் வெளியிட்டிருக்கிறது. இதில் 'தை'யை வள்ளுவர் தினம் என்று சொன்ன கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களை கடுமையாக கண்டித்துள்ளார் திரு கா.போ.ரத்னம் அவர்கள். வைகாசி அனுடம் தான் திருவள்ளுவர் தினம் என்று உறுதி செய்த தமிழ் அறிஞர் பட்டியல் இம் மலரில் வெளியிடப்பட்டுள்ளது. யார் அந்த அறிஞர்கள் ? சில பிரசித்தி பெற்ற அறிஞர்களை பார்ப்போம் . பேரா . ரா.பி.சேது பிள்ளை, திரு . மா.போ.சி, வித்துவான் பண்டிதர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், புலவரேறு அ.வரதநஞ்சைய்யன், முனைவர்.மா.இராசமாணிக்கனார்,சித்தாந்த சிரோமணி.ரி.எஸ்.கந்தசாமி முதலியார்,கவியோகி சுத்தானந்த பாரதியார் , டாக்டர் மு.வரதராசனார், புலவர்.சி.இலக்குவனார், சுவாமி.சித்பவானந்தர், வேதாரண்யம் சர்தார், ஆ.வேதரத்தினம், திரு.கி.வா.ஜகன்னாதன்,கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்,கல்கி.ரா.கிருஷ்ணமுர்த்தி, இவர்கள் முட்டாள்களா? மானம் கெட்டவர்களா? தமிழ் அறிஞர்கள் இல்லையா ? இந்த ஆதாரங்களின்  அடிப்படையில், தை 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகவும்,தை மாதம் ஆண்டுத் தொடக்கமாகவும்  அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

சூலை மாதத்தில் திருவள்ளுவர் தினம் அறிவிக்கப் பட வேண்டும் என்ற அறிஞர் அண்ணாவின் 1963 கோரிக்கையும், 1966 ல் தமிழக அரசின் சூன் 2 திருவள்ளுவர் தின விடுப்பையும் பார்க்கும் போது,  //1921, 1939 தமிழனுக்கு உண்மையை உணர்த்த விழைந்த தமிழ் அறிஞர்கள்//  என்று தை வேஷம் போட, அறிஞர்களை துணைக்கு அழைப்பது , ஹிட்லர் ஆட்சியின் கோயாபெல்ஸ்-ஐ  நினைவுபடுத்துகிறது.

//ஒரு வேளை 1969 லோ அல்லது 1971 லோ ஆணையிட்டிருந்தால்//
இது கவனிக்கப்பட வேண்டிய வாக்கியம். தி.மு.க ஆட்சி பீடம் ஏறிய 1967ல் குறிப்பிடப்படவில்லை.அப்படியென்றால் அண்ணாதுரை தை 2 ஐ திருவள்ளுவர் தினமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கட்டுரையாளருக்குத் தெரிந்திருக்கிறது. இது கருணாநிதியின் விளம்பர மோகமும்,வெறுப்புணர்ச்சியின் அடையாள வேட்டை என்பதைக் கட்டுரையாளரே ஒத்துக்கொண்டு விட்டார் அவர் தவற்றை மறைக்க, // அவர்கள் மனது மாறப்போவதில்லை // என்று நம் மீது பிளேட்டைத் திருப்புகிறார்..

//ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சிகள் மாறலாம்.ஆனால் நம் வழக்கங்கள் மாறலாகாது.// 
எது வழக்கம் ? சித்திரையா? தை யா? தை முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டதற்கு சான்று உள்ளதா? மானம் உள்ளவன் என்றால் சான்று கேட்ட மூவர் முதலிகள் முற்றத்திற்கு அதை கொடுத்திருப்பான். அறிவுள்ளவன்  அதை ஆராய்ச்சி பூர்வமாக அணுகி நிறுவ முயற்ச்சித்திருப்பான். வெறுப்பையும், நஞ்சையும் மனதில் வைத்திருக்கும் சுய நல வாதிதான், பொய்யுரையும், இனவெறி பிரச்சாரத்தையும் முன்னிறுத்தி பிழைப்பு நடத்துவான். இத்தரத்தில் உள்ள கட்டுரைகள், வரலாறு என்ற இணையதளத்தில் வருவதை விட 'வசைபாடு', 'கட்டுக்கதை','சவடால்',போன்ற தளங்களில் வருவது பொருத்தமாக இருக்கும்.

Read 2087 times
Rate this item
(0 votes)
Last modified on Friday, 10 October 2014 10:37

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment