×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வாலறுந்த நரி : இது வரலாறு

Thursday, 23 May 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

வரலாறு டாட் காம் இனையதளத்தில் வெளியான கட்டுரைக்கு பல நண்பர்கள் மறுப்பும் கண்டனமும் தெரிவித்ததால், அதற்கு ஒரு மழுப்பல் கட்டுரையை அந்த வலைத் தளம் வெளியிட்டது. அந்த மழுப்பலையும், பொய்மையையும் தோலுரித்துக் காட்ட எழுதப்பட்ட கட்டுரை இது. இதையும் அந்தத் தளம் பிரசுரிக்க மறுத்து விட்டது. வரலாறு டாட் காம் கட்டுரை : http://www.varalaaru.com/Default.asp?ArticleId=1094

குறிப்பு: இக்கட்டுரையில் வரலாறு டாட் காம் கட்டுரையின் பகுதிகள் இரண்டு கோடுகள் மூலம் ( //......//) அடையாளப் படுத்தப்படுகிறது.

திருட்டு நரி ஒன்று ஊருக்குள் புகுந்து கோழி, ஆடு, மாடுகளைத் திருடச் சென்றது. ஊர்க்காரர்கள் பார்த்து விடவே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று காட்டுக்கு ஓடியது. ஓடும் வழியில் வேலியில் சிக்கி, நரியின் வால் அறுந்து விட்டது. காட்டிற்குள் சக நரிகள் கேலி செய்யும் என்ற பயத்தில், பல நாட்கள் எந்த நரியின் கண்களிலும் படாமல் குகைக்குள்ளேயே மறைந்து இருந்தது. எவ்வளவு நாள் தான் மறைந்திருக்க முடியும்? இரை தேட வெளியே வந்தாக வேண்டுமே! முடிவோடு ஒரு பௌர்ணமி நாளன்று பாறையின் மீது உட்கார்ந்து கொண்டு, அனைத்து நரிகளும் பார்க்கும் படியாக, முழு நிலவை பார்த்தபடியே இருந்த்து. மற்ற நரிகள் ‘நீ ஏன் நிலவையே வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறாய்’ என்று கேட்க, ‘அதில் கடவுள் தெரிகிறார்’ என்று அந்தப் புரட்டு நரி சொன்னதாம். மற்ற நரிகளோ, ‘பீலா விடுகிறாயா’ என்று அந்த நரியைக் கிண்டல் செய்ததாம். அதற்கு அந்த நரி, ‘என்னைப் போல வாலை அறுத்துக் கொண்டு வாருங்கள், கடவுள் உங்கள் கண்களுக்கும் தெரிவார்’ என்று அறிவு ஜீவி போலப் பேசி, மற்ற நரிகளை நம்ப வைத்து வாலறுத்துக் கொள்ளச் செய்த்து. வாலறுந்த மற்ற நரிகளெல்லாம் நிலவைப் பார்த்து விட்டு திருட்டு நரியிடம், ‘கடவுள் தெரியவில்லையே’ என்று அங்கலாய்க்க, புரட்டு நரியோ, ‘என் வால் தான் அறுந்து போச்சுதே, இப்ப உங்க வாலும் அறுந்து போச்சுதே, இனி என்னை மட்டும் யாரும் வாலறுந்த நரி என்று சொல்ல முடியாதே, ஹைய்யா’ என்று சொல்லி சந்தோஷமாக இரை தேடப் புறப்பட்ட்து. இந்தக் கதை, சின்ன வயதில் பாட்டி சொன்னதாக நினைவு. வரலாறு இணையதளத்தில் “ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றம் ஏன்” என்ற கட்டுரை, தைப்புத்தாண்டு வாழ்த்துடன் தொடங்கியது. அதில் தையை ஏற்காதவர்கள் முட்டாள்கள் என்றெல்லாம் சொல்லி, ஏதோ அறிவியலை மறுத்த பேதைகளாக, சித்திரையை பண்டு தொட்டுக் கொண்டாடி வரும் தமிழர்கள் சித்தரிக்கப்பட்டார்கள். அதே இணைய தளத்தின் “எது தான் தமிழ்ப் புத்தாண்டு” கட்டுரை,

//சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை, தையில் தமிழ்ப்   புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்தச் சான்றும் இல்லை.//

சான்றில்லாமல், தையே புத்தாண்டு என்ற தொனியோடு கட்டுரையை எழுதி விட்டு, அதற்கு தமிழ்ச் சமுதாயம் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்தவுடன், தைக்கு ஆதாரமில்லை என்று ஒப்புக் கொண்டு விட்டு, வழக்கம் போல வேறு தலையங்கத்தை எழுதி விட்டுப் போக வேண்டியது தானே, எதற்கு இந்த வாலறுந்த நரி வேலை?

// தமிழ்க் கடல் மறைமலை அடிகள், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விஸ்வநாதம் போன்ற ஆய்வு நெறி அறிந்த, புலமை மிக்க அறிஞர்கள் ஒரு கருத்தை வலியுறுத்தியிருக்கும் போது, நிச்சயம் அவர்கள் தகுந்த பின்புலம் இல்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.//

இதே கட்டுரையில், இன்னொரு மேற்கோள் –

// மறைமலை அடிகள் தலைமையில், புத்தாண்டு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் வெளி வந்த நாளிதழ்கள் மற்றும் மாத      இதழ்களை, மறைமலை அடிகள் நூலகம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற இடங்களில் கடந்த ஒரு மாத காலமாகத் தேடிப் பார்த்தாலும், இது பற்றிய செய்திகள் இது வரை காணக் கிடைக்கவில்லை.//

அது சரி, இருந்தால் தானே கிடைக்கப் போகிறது!

எந்த ஆதாரமும் இல்லாமல், வாய்க்கு வந்ததையெல்லாம் தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்பவர்கள் தான் தமிழ்க் கடல், முத்தமிழ்க் காவலர் என்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரர்களா? இல்லையென்றால், தைப் புத்தாண்டிற்காக இவர்கள் போலி சாட்சிகளாக நிறுத்தப்படுகிறார்களா?

// வரலாற்றை எழுதும் போது உணர்ச்சி வசப்படாமல் எழுதுவதே முறை.//

அந்த அடிப்படையில், மறைமலை அடிகளும், கி.ஆ.பெ. விசுவநாதமும் தவறி விட்டார்களே? இவர்களை வரலாறு டாட் காம் பாணியில்மானம் கெட்டவர்கள், அறிவற்றவர்கள் என்று பட்டம் கொடுக்கலாமா? இல்லையென்றால், தகுந்த பின்புலம் இல்லாமல் சொல்லி விட்டார்கள் என்பதை வெளிக் கொண்டு வந்த, எங்களைப் போன்ற எளியவர்களுக்கு இந்தப் பட்டங்கள் பொருந்துமா?

// சங்க காலத்தில், தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்கே சான்றில்லை //

எதற்கு இந்த வாலறுந்த நரித்தனம்? குப்புறக் கவிழ்ந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, தமிழனை முட்டாள்களாகச் சித்தரிக்கும் வேலை? புத்தாண்டைத் தமிழன் கொண்டாடவில்லை என்றால், தமிழகத்தில் நிலவி வந்த காலகணிதங்கள் எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது? போகிற போக்கில், கணியன் பூங்குன்றன், ஆரியபட்டாவிடம் இருந்து ஆட்டையைப் போட்டு விட்டான், டமாஸ்கஸிலிருந்து திருடி விட்டான், கிரேக்கத்திலிருந்து களவாண்டு விட்டான் என்று கூட சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை. ஆண்டு என்று ஒன்று இருந்தால், தொடக்கம் என்று ஒன்று இருக்கத் தானே வேண்டும். ’தை’யுக்கு ஆதாரமில்லை என்பதற்காக, ஒட்டு மொத்த தமிழனுக்கும் ஆண்டில்லை, நாளில்லை, நட்சத்திரமில்லை, என்றெல்லாம் தமிழனை, ஈ.வே.ரா. மொழியில் காட்டுமிராண்டிகள்என்று ஏன் வசை பாடுகிறீர்கள்?

//சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு தான் (உத்திராயணத் தொடக்கம்)    புத்தாண்டு தொடங்குகிறது என்பதற்கு அறிகுறி என்பதை மனதில் நிறுத்திக் கொள்வோம். தை முதல் தேதியன்று நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்பு இல்லை. சரி, இந்த நிகழ்வு சித்திரை முதல் தேதி நிகழ்கிறது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் எவை?//

இது வரலாறு டாட் காமின் காமெடி பன்ச். திரு. இராமச்சந்திரன் அவர்களின் “சித்திரையில் தான் புத்தாண்டு” கட்டுரையில் வரும் வாசகத்திற்கு இவர்களின் மறுமொழி. அந்த வாசகம் என்ன? சங்க இலக்கியங்களில் தைநீராடல் எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாக குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே; ஆனால் அதனை சூரிய வழிபாட்டுடன் தொடர்பு படுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு தை மாத முதல் தேதியன்று தான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய சொற்றொடர் என்னவென்றால், புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு தை மாத முதல் தேதியன்று தான் நிகழ்கிறது என்பது தான். எந்த இடத்தில் உத்திராயணம் ஆண்டுத் தொடக்கம் என்று திரு. இராமச்சந்திரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்? வரலாறு டாட் காம் போன்ற இணைய தளங்கள் உத்திராயணத்தை ஆண்டுத் தொடக்கத்துடன் தொடர்பு படுத்துவதில் கூட நியாமில்லை. அதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதைத் தான் இந்தக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

// மஹாபாரதத்தின் காலத்தை கி.மு. 1300 என்று கூறுவது எப்படி? தமிழ் ஹிந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு என்று கூறுகிறதே? //

இதற்கும் தமிழ்ப்புத்தாண்டிற்கும் என்ன தொடர்பு? திருவள்ளுவர், கிறுஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தார் என்கிறார் மறைமலை அடிகள். டாக்டர். மு.வ. அவர்களோ, கி.பி. ஒன்று முதல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்கிறார். திரு. வையாபுரிப் பிள்ளை அவர்களோ, ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பின் என்கிறார். கால கணிதத்தில் இந்த அறிஞர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பதற்காக, திருவள்ளுவர் என்று ஒருவர் இருந்ததேயில்லை என்று முடிவு செய்து விடலாமா?

// உறைய வைக்காத குளிர் கொண்ட தமிழ்நாட்டில், வெயிற்காலம் ஏன் வரவேற்க்கப்பட்டது? //

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதற்கு முன், இளங்கோவடிகளிடம் கேட்கலாமே! சிலப்பதிகாரம் வேனிற்காலத்தை ஏன் வரவேற்றது 

     நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும்
     தமிழ்வரம்பறுத்த தண்புன நன்னாட்டு
     மாட மதுரையும் பீடா ருறந்தையும்
     கலிகெழு வஞ்சியு மொலிபுனற் புகாரும்
     அரைசு வீற்றிருந்த வுரைசால் சிறப்பின்
     மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய
     இன்னிள வேனில் வந்தன னிவணென
     வளங்கெழு பொதியின் மாமுனி பயந்த
     இளங்காற் றூத னிசைத்தன னாதலின்
     மகர வெல்கொடி மைந்தன் சேனை
     புகரறு கோலங் கொள்ளு மென் பதுபோற்
     டிமிடை சோலைக் குயிலோ னென்னும்
     படையுள் படுவோன் பணிமொழி கூற
     மடலவிழ் கானற் கடல்விளை யாட்டினுட்
     கோவல னூடக் கூடா தேகிய

உயிர்கள் வாழ வெப்பம் தேவைப்படுகிறது. இதை இளங்கோவடிகள் அறிந்திருந்தார். இந்தக் காலத்தில் தான் பூக்கள் பூக்கத் தொடங்கும். இந்த முதல் பூ பூக்கும் காலத்தை வரவேற்கும் மரபு சங்க காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் தொடர்ந்து வருகிறது. சாதாரண பனியில் கூட மலர்கள் வாடி விடும். நீர்ப்பூக்கள் மட்டுமே மலரும். அவையும் கூட, பனி அதிகமானால் வாடி விடும். ஒரு உயிர் அழியும் காலத்தே முதல் காலமாக சான்றோர்கள் கடைபிடிக்க மாட்டார்கள்.“மகளிர்க்கெல்லாம் நஞ்செனத் தகையவாகி நளியிரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சமொத்தலர்ந்த செய்ய கண்ணன்” என இராமனின் கண் பற்றிய வர்ணனை கம்ப இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. பனியில் நீர் பூவான தாமரை  கூட வாடும் ஆனால் ராமா, உன் கண்கள் பனிக்கு கூட வாடாத தாமரை போன்றவை என்று இல் பொருள் உவமை அணியாக ராமனின் கண்களை கம்பர் குறிப்பிடுகிறார்

இன்று, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நால் வகை நிலத்தையும் சூறையாடி, தமிழகத்தைப் பாலையாக்கிய பின்பும், மாசி மாதம் வரை பனி விழத் தானே செய்கிறது! இந்தக் காலங்களில் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலையும், காய் விலையும் சட்டென்று ஏறுகிறதே! இதை வசந்த காலம் என்று தான் சொல்ல வேண்டுமோ?

// பங்குனி முயக்கமும், உள்ளி விழவும் வட நாட்டு பண்டிகையான ஹோலியுடன் தொடர்பு படுத்தப்படுவது எந்த அடிப்படையில்? //

வட இந்தியாவில், ஹோலிப் பண்டிகையை “ஹூளா, ஹூளி” என்று சொல்வது வழக்கம். திவ்யப் பிரபந்த அவதாரிகை என்ற 14ம் நூற்றாண்டு வைணவ உரையில் ஹோளக அதிகரண நியாயம் என்ற தொடர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது களவு ஒழுக்கத்தை குறிப்பிடுகிறது. இது பங்குனி உத்தரத்தை பற்றிய குறிப்பில் இடம் பெறுகிறது. ஒலித் திருவிழாவாக இன்றும் ஹோலிப் பண்டிகை ராஜஸ்தான், பிகானேரில் சிறப்பாக்க் கொண்டாடப் படுகிறது. இதையே சம்பந்தர் பெருமான், மயிலாப்பூர் ஒலித் திருவிழா என்று பங்குனி உத்திரத்தைக் குறிப்பிடுவது ஆய்வு நோக்கத்தில் பார்ப்பவர்கள் மட்டுமே தெரியும். கண்களில் காமாலை கப்பியிருந்தால் என் செய்ய?

// காமன் பண்டிகைக்கும் இந்திர விழாவிற்கும் என்ன தொடர்பு? மேலும் இந்திர விழாவுக்கும் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு? //

காமன் பண்டிகையை பங்குனி உத்திரத்தில் கொண்டாடி விட்டு, மறுதினம் இந்திர விழா தொடங்கும். மணிமேகலை படித்தவர்களுக்கு இதன் உட்பொருள் உள்ளபடியே விளங்கும். பங்குனி மாத பௌர்ணமியைத் தொடரும் பிரதமையிலிருந்து 28 நாட்கள் இந்திரனுக்கு விழா எடுத்த செய்தியை மணிமேகலை விழவரைக்காதை குறிப்பிடுகிறது

     விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று
     மண்ணகத்தென்றன் வான் பதி தன்னுள்
     மேலோர் விழைய விழாக்கோளெடுத்த
     நாலேழ் நாளினு நன்கினி துறைகென
     மணிமேகலை விழாவறை காதை (5_9)

இந்திர விழா கொண்டாடுவதனால் புத்தாண்டு என்றோ, காமவேள் விழவு நடத்துவதால் புத்தாண்டு என்றோ யாரும் வாதிடவில்லை. இளவேனிற் காலம் என்பது இனிமையான பருவம். இதன் இனிமையை காதலுடன் தொடர்பு படுத்தியும், திருமணங்களுடன் தொடர்பு படுத்தியும் இலக்கியங்கள் நம்மை பரவசப்படுத்துகின்றன. இந்தக் காலத்தின் இனிமையை சுட்டிக் காட்டுவதற்குத் தான் இந்த விழாக்கள் மேற்கோள் காட்டப்பட்டனவே தவிர, இந்த விழாக்களினால் சித்திரை புத்தாண்டு என்று யாரும் வாதிடவில்லை.

// உண்மையிலேயே ஜோதிடம் ஒரு அறிவியலா? //

இந்தக் கேள்வியை முனைவர். வெங்கட்ராமன் அவர்களிடம் கேட்பதற்கு முன், ஜோதிட நூல்கள் படைத்த கணியன்களையும், ஆசான்களையும், அறிவர்களையும் புறந்தள்ளி விடலாமா? கணியன் பூங்குன்றன், அறிவியலார் இல்லையா?

// சாந்திரமான முறையில் பூர்ணிமாந்த கணக்கீட்டுடன் இணைத்திருப்பது ஏன்? இது ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்து வருகிற வகையில் புதிய விளக்கம் அளிக்கிற ஒரு ஒத்திசைவா? //

இந்திர விழா, பௌர்ணமிக்கும் பின் வருகிற பிரதமையில் ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தக் கேள்வியை சங்ககாலத் தமிழர்களிடம் சென்று கேட்டு விட்டு வந்து உங்களுக்கு பதிலளிக்கிறேன். இருப்பினும், ஒத்திசைவு என்ற சொல்லுக்கு நான் பதில் சொல்லியேயாக வேண்டும். தம்பிரான் வணக்கம், என்ற 16 ஆம்  நூற்றாண்டு கிறிஸ்தவ நூல், அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது, அதற்கு தமிழில் இணைச் சொல்லாக அர்ப்பிகை என்று ஐப்பசி மாதம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில், ஜனவரி தை தானே? 19ம் நூற்றாண்டு, தரங்கம்பாடி டேனிஷ் ஆவணங்கள் தையை ஜனவரி என்று தானே குறிப்பிடுகிறது! ஐரோப்பியர்களுக்கு ஜனவரி தானே புத்தாண்டு? அப்படியென்றால், இந்த ஐரோப்பிய ஆவணங்களின் படி தான்  தை புத்தாண்டாக இருக்க முடியும்? யார் ஒத்திசைக்கிறார்கள், ஒத்து ஊதுகிறார்கள்?

// இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுத்திருப்பதால், பூர்ணிமாந்த முறையில் சித்திரையின் கடைசி நாள் தான் ஆண்டின் தொடக்கமா? //

இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் – இதில் கவனிக்கப் பட வேண்டியது தொடக்க காலம். இங்கு முதல் நாள் என்ற குறிப்பு இடம் பெறவில்லை. முதல் நாள் இந்திர விழா தொடங்கினால், இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? மணிமேகலை என்ற காப்பியத்தைப் படித்தவர்களுக்கு இந்த இந்திர விழாவைப் பற்றிய தெளிவு இருக்கும். இந்திர விழா 28 நாட்கள் நடை பெற்று, சித்திரா பௌர்ணமியுடன் முடிவடையும் செய்தியை, மணிமேகலை சுட்டிக் காட்டுகிறது. பூர்ணிமாந்தக் கணக்கின் படி, பங்குனி உத்திரத்துக்கு அடுத்த நாள் தொடங்கி, மாதம் முழுவதும் சிறப்பாக்க் கொண்டாடப்பட்டு சித்திரா பௌர்ணமியில் உச்ச கட்டக் கொண்டாட்டத்துடன் முடிகிறது. இதோ அந்தப் பாடல் – மணிமேகலையில் விழவரைக்காதை 5-9

     விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று
     மண்ணகத்தென்றன் வான் பதி தன்னுள்
     மேலோர் விழைய விழாக்கோளெடுத்த
     நாலேழ் நாளினு நன்கினி துறைகென
     மணிமேகலை விழாவறை காதை (5_9)
     
// சோழர் காலக் கல்வெட்டுக்கள் உத்திராயணத் துவக்கம் தை முதல் நாள் என்று குறிப்பிடும் போது, அதை ஏன் புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்? //

உத்திராயணம் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதால் அதை ஆண்டுத் தொடக்கமாக வரித்துக் கொள்ளலாம். எப்படி? ஞாயிற்றுக் கிழமை விடுமுறை வருகிறது என்பதால், என் பிறந்த நாளை ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றிக் கொள்ளலாமா? அப்படியென்றால் தானே, உற்றார், உறவினர், நண்பர்களுடன் நான் அதைக் கொண்டாட முடியும்? அதன் அடிப்படையிலேயே பணி மூப்பு, போன்றவைகள் நிர்ணயிக்கப் படும்! இது எப்படி?

// கார் காலம் தானே முதலாவதாக குறிப்பிடப்படுகிறது? இது தொல் தமிழ் மரபில்லையா? //
 
     முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
     சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

தொல்காப்பியத்தின் பொருளாதிகாரத்தின் அகத்திணையியலில், முல்லை நிலப் பெண்களின் உயர்ந்த கற்பொழுக்கத்தின் அடிப்படையில் காலங்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது என்று நச்சினார்க்கினியர் தனது உரையில் தெரிவித்திருக்கிறார். இலக்கணங்களுக்கும் இலக்கியங்களுக்கும் உரையெழுதிய நச்சினார்க்கினியர் தன் காலத்துச் சிந்தனைகளைப் புகுத்தினார் என்று குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால், ஆதாரமேயில்லாமல் தையை ஆண்டுத் தொடக்கம் என்று சொல்லும் மறைமலை அடிகளும், கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும் சங்க காலத்திலிருந்தே வாழ்ந்து வருகிறார்களா? வயது 2000, 3000 இருக்குமோ?

வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவால் அறிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரதிதாசன் காலங்களை எப்படி வரிசைப் படுத்துகிறார் ?

கொத்து கொத்தாய் பாவிருக்கும் சித்திரையிலேயே
கூவும் குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மேத்தகுளி ராயிருக்கும் மார்கழியிலே - மிக
வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிரப்பிலே
 (இளைஞர் இலக்கியம், பாரதிதாசன், ப.32)

// ஏன் சித்திரை முதல் தேதியிலும், ஒவ்வொரு ஆண்டும் தொடங்குவதாக ஜோதிடம் கூறுகிறது?//

ஆண்டு சித்திரையில் தான் தொடங்கும். அது கர வருடமானாலும், சாலிவாகன சகாப்தமானாலும், போஜ ராஜப்தமானாலும், ஏன் 2009 வரை திருவள்ளுவராண்டு ஆனாலும், சித்திரையில் தானே துவங்கும். கணக்கீடு மற்றும் தொடராண்டை தொடக்கத்துடன் ஏன் தான் குழப்புகிறார்களோ?

// சூரியனுக்கும் புத்தாண்டுக்குமிடையே உள்ள தொடர்பை வகுத்தவர் யார்?//

பகலுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொடர்பை வகுத்தவர் யார்? அவரே தான் இந்தத் தொடர்பையும் ஏற்படுத்தினார். ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தது ஒரு நாள். 30 நாட்கள் ஒரு மாதம். இதுவே சராசரியாக சந்திரன் பூமியைச் சுற்றி வர எடுக்கும் காலம். சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஒரு ஆண்டு. இது தான் இந்தக் கணிதத்தின் அடிப்படை. யார் வகுத்தார்கள் என்று கோபப்பட்டு மெரினா கடற்கரையில் சூரியனை உதிக்க விடமாட்டோம் என்று மறியல் போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி. அதையும் மீறி சூரியன் வந்தால், சூரியன் தோன்றத் தொடங்கியது முதல், சூரியன் முழுதாகத் தெரியும் வரை உண்ணாநிலைப் போர் இருப்பார்களோ தியாகச் செம்மல்கள்?

//  சூரியன் ஒரு ராசிக்குள் நுழைவது தான் புத்தாண்டு என்று எப்படி எடுத்துக் கொள்வது?//

சரி, வேண்டாம். பின் எதை எடுத்துக் கொள்வது? தையும் சூரியன் மகர ராசிக்குள் நுழைவது தானே? நாளை முதல் கடியாரத்தில் ஒரு எண்ணை முள் தொட்டவுடன், கால நிர்ணயம் செய்வது என்ன நியாயம் என்று கடியாரங்களை எல்லாம் கள்ளிக்குடி இரயில் தண்டவாளத்தில் வைத்து விடுவோம். சரி தானே?

// மேட ராசி என்று நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்கள் குறிப்பிடுவதால், அது சித்திரை தான் என்கிறார்கள். உரையாசிரியர்கள் சங்க இயற்றப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர்.//

அப்படியென்றால், வரலாறு ஆய்வு தளத்தில் பிரசுரிக்கப்படும் கல்வெட்டாராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் சங்க காலத் தமிழர்களால் தான் எழுதப் படுகிறதா?

// சூரியன் சுற்றுகிறது என்ற தொடரே, அந்தப் பாதையை வட்டம் என்கிறது. வட்ட்த்திற்கு ஏது தலையும் வாலும்? அப்படியே ஏதாவது புள்ளியிலிருந்து   தொடங்க வேண்டும் என்றாலும், தலையாக என்பதை முதலாக என்று ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது.//

என்ன சிக்கலோ? ஒரு வேளை, முயலுக்கு மூன்று கால் என்பதை சாதிக்கத் துடிக்கும் சிக்கலாகத் தான் இருக்குமோ? மேட ராசி முதலான என்றால், அது தொடங்கி என்பது பொருத்தமாக இருக்குமா, அல்லது மேட ராசி போன்ற என்பது பொருத்தமாக இருக்குமா? விண்ணூர்பு திருதரும் வீங்கு செலல் மண்டிலம்  என்பது சூரிய மண்டிலத்தை குறிக்கிறது.  ஒன்பது கோள்களின் முதலாவதாகவும், நடு நாயகமாகவும் விளங்குவது சூரியன். கொள் மீன்களின் அதிபதி சூரியன், நாள்மீன்களின் அதிபதி சந்திரன்.இது சங்ககால புரிதல். இந்த அடிப்படையில் கோள்களின் அதிபதியான சூரியன் ஆட்டின் உரிவிலுள்ள ராசியிலிருந்து தன் ஆட்டை வட்டப்  பயணத்தை தொடங்குகிறான். இதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்? ஆட்டை தலையாகவும் மீனை வாலாகவும் கொண்டது ஆட்டை வட்டம். சித்திரையும் இல்லை தையும் இல்லை என்பது பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டும் செயலல்லவா?
  
// பனிரெண்டு ராசிகளை கார்த்திகைக் குரிய இடவ வீதி, திருவாதிரைக்குரிய மிதுன வீதி மற்றும் பரணிக்குரிய மேட வீதி என்று பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் கூறும் வரிசையில் பார்த்தாலும், வீதிகளில் ரிஷபமும்,ராசிகளில் கன்னியுமே முதலாவதாக வருகின்றன. எனவே,நெடுநல்வாடையில் முதல் ராசியாக மேட ராசி தான் குறிப்பிடப்படுகிறதா என்று தெளிவாக இல்லை.//

இது என்ன முடிச்சு? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள முடிச்சு. வீதி என்பது,  இரவும் பகலும் சம்மாக இருக்கும் சமநோக்கு காலத்தையும், பகல் போது அதிகம் இருக்கும் காலத்தையும், இரவுப் போது அதிகம் இருக்கும் காலத்தையும் பிரித்து வகைப்படுத்தும் முறையாகும். இதை கதிரவனின் இயக்கத் தொடக்கத்துடன் தொடர்பு படுத்தும் முடிச்சு, அடேங்கப்பா! ஓவியக் கற்பனையப்பா! 
 
//  ஜோதிடத்தில் மட்டுமே மேட ராசியும், சித்திரையும் இணைத்துக் கூறப்படுகின்றன.  //

மேட ஞாயிறு என்று கல்வெட்டில் வந்தால், வரலாறு டாட் காம் அறிஞர்கள் அதை எந்த மாதம் என்று கொள்வார்கள்? அப்படியென்றால், இது வரை நீங்கள் பதிப்பித்த கட்டுரைகளில் மேட ஞாயிறை எப்படி விளக்கியிருக்கிறீர்கள்? நீங்கள் மேட ஞாயிறை சித்திரை என்று விவரித்திருந்தீர்கள் என்றால், காழியூர் நாராயணனுக்கு பதிலாக, காலையில் ஜோதிடப் பலன் சொல்ல செல்வீர்களா?

//  மார்கழிப் பௌர்ணமி ஏன் மிருகசீர்ஷத்தில் வராமல், திருவாதிரையில் வருகிறது?//

இதற்காக வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுத் தலைமையில், நாம் நீதி கேட்டு ஒரு நெடும் பயணம் செல்வோமா? எல்லா ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் முழு நிலவு தோன்றாது என்பதை அறிந்து தான், காலக் கணக்கில் அதிக மாதம் என்ற ஒரு சரி செய்யும் ஏற்பாட்டை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இந்த அடிப்படை அறிவியல் தெரிந்திருந்தால் நெடும் பயணம் தேவையிராது என்று நினைக்கிறேன்.

// எந்தக் கோயிலில், எந்தப் பகுதியில் உள்ள கல்வெட்டு இதைக் கூறுகிறது என்பதைத் தெரிவிப்பதுடன், கல்வெட்டின் முழுப் பாடத்தையும் வெளியிட்டால் நன்றாகும்.//

இந்த கல்வெட்டு பற்றி 11.1.2012 துக்ளக் இதழில் பேரா. சாமி தியாகராஜன் அவர்கள்,சரித்திரச்செம்மல் ச .கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கட்டுரையை மேற்கோள்காட்டியுள்ளார். இந்த கல்வெட்டின் குறிப்பு, தமிழ் நாடு தொல்லியல் துறையால் பதிக்கப்பட்ட காஞ்சிபுர மாவட்ட கல்வெட்டுகள் என்ற தொகுப்பில் காணலாம்.
                              
// தையில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவதே பொருத்தம் என்று உரைத்த தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேரா. க.நமச்சிவாயனார், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேரா. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பி.டி. ராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகிய அறிஞர்களின் முடிவு ஆழ்ந்து சிந்திக்க தக்கதாக உள்ளது.//
                                          
இவர்கள் எப்போது, எங்கே, தைப் புத்தாண்டு என்று முடிவு செய்தார்கள், அதற்கான சான்று எங்கே? எனது முந்தைய கட்டுரையில் இதற்கான சான்றைத் தானே நான் கேட்டேன். அதைக் கொடுக்க முடியாமல், மறைமலை அடிகள் தலைமையில், புத்தாண்டு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்ட்த்தில் வெளி வந்த நாளிதழ்கள் மற்றும் மாத      இதழ்களை, மறைமலை அடிகள் நூலகம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்,    அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற இடங்களில் கடந்த ஒரு மாத காலமாகத் தேடிப் பார்த்தாலும், இது பற்றிய செய்திகள் இது வரை காணக் கிடைக்கவில்லை என்று எழுதி விட்டு, அதே பல்லவியைப் பாடுகிறீர்களே, நீங்கள் தான் கரகாட்டக்காரன் திரைப் படத்தின் செந்திலா? நான் தான் கவுண்டமணியா? நல்ல ஒரு ரூபாய் வாழைப்பழக் கதையாக இருக்கிறதே! பலே!

நீங்கள் குறிப்பிட்ட பாரதிதாசன் திங்கள் பன்னிரண்டு என்ற கவிதையில்

சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி-பு
ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லம்- இவை
ஓராண்டின் பனிரெண்டு திங்களின் பெயர்.

தையில் ஏன் தொடங்கவில்லை?

சித்திரை இடையில் வந்து சேர்ந்தது என்று எந்த அடிப்படையில் கட்டுரையாளர்கள் சொல்கிறார்கள் ? அப்படியே சேர்ந்திருந்தாலும் எப்போது வந்து சேர்ந்தது என்று சொல்ல முடியுமா ? இந்த ஒரு கேள்விக்காவது பதில் சொல்லுங்களேன் ? கேள்வி மேல கேள்வி கேட்கிறீர்கள். நாங்களும் பொறுமையாக பதில் சொல்கிறோம்., இப்ப எங்க ஆட்டம்.

இக்கட்டுரையில், 60 ஆண்டு சுழற்ச்சி முறை பற்றிய குறிப்பு இடம் பெறுகிறதே, அதற்கும் சித்திரைக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லாமல், 60 ஆண்டைக் குறிப்பிட்டாவது, கட்டுரையைப் பத்து பக்கத்துக்கு நீட்டலாம் என்று நினைத்திருக்கிறார்கள் போலும்.

ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் ஜோதிடம் சார்ந்த விஷயங்களை, ஜோதிடத்தின் வாயிலாக எதிர்கொள்ள வேண்டுமேயல்லாது, இலக்கியத்தில் அதற்கு பொருள் தேடுவது பொருத்தமாகாது.
                                          
ஆடு என்பது பல பொருளில் வரும் என்று மேட்த்தைத் தவிர, என்னெல்லாம் பொருள் படும் என்ற ஆராய்ச்சி, தோள் மேல் மேடத்தைப் போட்டு, ஊரைச் சுற்றித் தேடுவது போல உள்ளது. பாவம், பரிதாபம், தோளில் தானய்யா இருக்கிறது. கொஞ்சம் தான் பாருமேன். இது பிடிவாதமா இல்லை பித்தலாட்டமா?

 

Read 2292 times
Rate this item
(0 votes)
Last modified on Friday, 10 October 2014 10:37

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment