×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஒவ்வொரு துகளும் ஒரு மஹாமேரு - 2

Sunday, 30 March 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

திருச்சி - கரூர் பிரதான சாலை வழியாக திருச்சியின் வெளிப்புறம் நகர்வதற்கோ, அல்லது திருச்சிக்குள் நுழைவதற்கோ பயணித்தால், இரு புறமும் தென்னை வளாகங்களுடன், ஒருபுறம் காவிரியின் உயர்ந்த கரை மேட்டுக்கு அப்பால் முழுமையாக கண்ணுக்குள் ஒளிக்க முடியாத மணல்விரிப்பும், தண்ணீருமாக, மறுபுறம் காவிரிக்கு இணையான ரயில் தண்டவாளங்களுமாக ஒரு ரம்மியமான சூழலில் நகர்வோம்.

 

இது எனது வேலைக்குப் போன வாலிப வயதிலிருந்து நான் அனுபவித்த காட்சி… முழுமையாக தண்ணீர் வெள்ளமில்லையானாலும், அனேகமாக தண்ணீரும், மணல் திட்டுக்களுமாக ஒரு சொப்பன உலகில் நிற்கும் சந்தோஷம் நம்மைக்கவ்விய காலங்கள்…

 

வெறும் அம்பது பைசா சோழன் பஸ் டிக்கட் இத்தனை சந்தோஷத்தினை தருமா… என்றால், ஆமாம்.. காசை மீறின காற்றின் இசை தரும் சோலைவழி சொர்க்கமாக பார்த்த நாட்கள் அவை… கண்டக்டர் விசிலை வீறிட்டு நிறுத்தும் நேரம் தவிர, மற்றைய பொழுதுகள் அட்சர சுத்தமாக வாலி - இளையராஜா - வைரமுத்து பாடல்கள் என திரும்பத்திரும்பக் கேட்டு மனப்பாடமான வசந்த காவிரியின் பாதை.

 

திருமணமும், திருப்புமுனையான இந்தோனேசிய வருடங்களும், என்னை இந்த ஜீவிதமான இந்தியத்திலிருந்து விலக்கி வைத்தாலும், முழுமையாக தமிழ் நாட்டிற்கு திரும்பிய பின்னால், மறுபடி, திருச்சியின் மாபெரும் தொண்டு நிறுவனமான ”சேவை”யின் ஆலோசகராகச் செல்லும் வாய்ப்பில், நான் மறுபடியும் அந்த வழியே பயணித்தேன். காலை வேளையின் பரபரப்பில், சேவையின் நிறுவனருடன் பேசிக்கொண்டே கரூர் நோக்கிய சாலையில் பயணித்த வேளையில், எனக்கு எந்த வித்தியாசமும் உணரமுடியவில்லை.

 

காவிரியில் அத்தனை தண்ணீர் இல்லாததற்கு காரணம், வேனில் வேளையெனக் கொண்டேன். ஆனால், மாலையில், திருச்சி மாநகருக்குள் திரும்பும் போது, நகருக்குள் நுழைய எறும்பு போலவும் ஒற்றை வரிசையில் கார் நகர்ந்தது. ஓட்டுனரிடம் காரணம் கேட்டேன்;

 

தினசரி நடக்கும் தொல்லையென்றார். இரண்டு வரிசையான பாதை என்றாலும், அரசியல் கூட்டத்திற்கு கிராமங்களிலிருந்து ஆட்களை அள்ளிவரும் வேகத்தில் வந்தது போல லாரி வரிசைகளை பாதை நீளம் முழுவதும் காண முடிந்தது.

 

LINED LORRIES IN TIRUCHY -KARUR ROAD

 

இந்த தினசரித்தொல்லை, எங்கள் காரை மட்டுமா நிறுத்தி வைத்தது? நான் கண்ட வாலிப கால வசீகர தென்னை, வாழைத்தோப்புகளையும் அல்லவா புரட்டிப்போட்டுள்ளது?

 

காரணம் கண்டதும் நானும் ஒரு இந்தியன் எனச்சொல்ல வெட்கப்பட வைத்தது.

 

இந்தோனேசியாவில், எந்த மணல் வெளியினை தெய்வமெனக் கொண்டாடுகிறார்களோ, அது போன்ற இந்த ஆற்று மணல் வெளியினை, அட்டகாசமாக இரவில் கொள்ளை கொள்ளத்தான் இத்தனை வண்டிகளும்.

 

சிறு வயதில், திருச்சி சிந்தாமணி அக்ரஹாரத்தில் என் அத்தை வீட்டின் பின்னால், ஓடும் காவிரியின் மணல் திட்டுக்களிடையில் கால் வைத்து குதித்து, காலுக்கடியிலிருந்து குபுக்கென தண்ணீர் கொப்பளிப்பதை ஒரு விளையாட்டாக ரசித்தது, என் கண்ணுள் விரிந்து, கண்ணீராக வழிந்தது.

 

அன்றைய காவேரி, நல்ல வெள்ளை மேனியில் வளப்பமான சதைப்பற்றின் வசீகரமான என் அத்தை போலத்தெரிந்தாள். அத்தை மடியில் அமர்ந்து கதை கேட்ட நாள் போல, காவிரி மணலில், குழந்தைகள் சேர்ந்து மலைகோட்டையைக் கட்டி மகிழ்ந்திருக்கிறோம்.

 

ஆனால், இன்று…

OVVORU THUGALUM ORU MAHAMERU - II - ARAKANIN KAIGAL WW

 

எங்கள் விரல்களின் அளைவில் கிளுகிளுத்த காவேரி… இன்றைக்கு, பொக் லைன் இயந்த்திரங்களின் வெறி கொண்ட கீரல்களால் குதறி சீழ்நோய் கண்ட பெண் போலவும் காணப்படுகிறாள்.

 

இந்தத் தொடர் சீரழிவை விவரிக்க, வருத்தம், விசனம், அழுகை என்கிற வார்த்தைக்கும் அப்பால், சோகவிருத்தம் என்ற வார்த்தைதான் சொல்லகராதியில் கொண்டுவர வேண்டும்.

 

என்ன தமிழ் நாட்டிலிருந்து கொண்டு, குற்றப்பத்திரிக்கை வாசிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறாயே என்கிறீர்களா....

 

ஒரு சமயம் நான் பள்ளிக்கூடம் முடிக்காத சமயத்தில், காஞ்சி மகா ஸ்வாமி ஆந்திர மாநிலம், கர்னூலில் முகாமிட்டிருந்த ஏப்ரல் மாதம்; மஹாஸ்வாமியைத்தேடி, நாங்கள் அந்த முகாமிற்கு போன நேரம், ஆற்றில் குளிக்க அவர் சென்றிருந்ததாக விவரம் சொன்னவர்கள், ஆற்றுக்கான பாதையைக்காட்டி அகன்றார்கள்.

 

படைக்கும் வெயிலாயிருந்தாலும், துங்கபத்திரையின் நுரைத்த நீர் வளமும் காற்றும், எங்களை ஆற்றுப்படுத்தியது. நதி என்றால், இதுதான் நதி என்பதாக எனக்குள் அவள் அழகி பட்டம் வாங்கினாள்.

 


மஹாஸ்வாமி வெறும் ஆற்று மணலை தன் அகண்ட கை விரித்து எடுத்து குழைத்து உடலில் பூசி, குளித்த்து கண்டு, என் அன்னையிடம் கேட்டேன்…

 

ஏன்.. ஆற்றுமண் பூசி குளிக்கிறார் என்று..

 

அம்மா, அதில்தான் எத்தனையோ கனிம வளமும், மூலிகை வாசமும் இருப்பதாக சொன்னார். இந்த தபஸ்வி போன்ற எத்தனையோ மகான்கள் குளித்து எழுந்து புனிதப்படுத்திய துங்கையின் நீரினால்,  நாங்களும் புனிதம் பெற்றோம். இந்தியனாகப் பிறக்க கொடுத்து வைத்திருக்கவேண்டுமென்ற கர்வம் அன்றைக்கு எனக்குள் ததும்பியது என்னவோ உண்மை.

 

…, அடுத்த வீட்டின் அக்கப்போரை விரும்பாத ஆளாயிருந்தாலும், அண்டை மாநிலங்களில் ஓடும் ஆறுகளின் இன்றைய அழகென்ன என்று பார்க்க தோன்றியது.

 THE PLIGHT IN ANDRA

 

காலை பதிப்பு இந்து நாளிதழினைப் புரட்டின போது, கண்டெடுத்தது தான் துங்கையின் இன்றைய நிலை பற்றிய புகைப்படம் - மணல் கொள்ளையர்களால், பள்ளப்பட்ட நிலையில் வருடம் தோறும் வரும் மழையில், வீறு கொண்டு வேகமெடுத்து வாழ்வாதரங்களை எல்லாம், வெள்ளம் கொண்டு வழித்தொழிக்கிறாளாம்

 

OVVORU THUGALUM ORU MAHAMERU - II - ARASANGA PALAM AZINTHA KOLAM WW

 

அட!... கர்னாடக மக்கள் காவிரியால், கர்வம் கொண்டு, எங்களுடையது மட்டுமே காவேரி என வழக்காடுமன்றம் தழுவின நிலையில், அங்கேனும், காவிரிக்கும் அதன் உப நதிகளுக்கும் அன்னையின் மரியாதை இருக்காதா என்ன என, நம்பிக்கையோடு கண்களை ’டைம்ஸ் ஆப் இந்தியா” பெங்களூரு இதழினை புரட்டினால், மணல் கொள்ளையால் தும்கூர் மாவட்டத்தில் அரசாங்கம் கட்டின பாலம் புரண்டு, மழையில், இடிந்து, அழிந்த கோலத்தில்…

 

யார் செய்தால், சரி? யார் செய்தால், குற்றம்? இந்தியத் திரு நாட்டில், நதிகளுக்காகப் பொது ஆணையம் இல்லாத பட்சத்தில், அரசியல் ரீதியில், வாக்கு வங்கிகளுக்காக இயங்கும் மாநில அளவிலான கட்சிகளும், மக்களின் ஓட்டுகளை தேர்தலில் கண்டு ராஜ்ய சபா போய் உட்காரும் உறுப்பினர்களும், மனசாட்சியை மக்கள் மன்றத்தில் பதவிக்கான உறுதி மொழி எடுக்க மட்டுமே உபயோகப்படுத்திக் கொள்ளும் ரப்பர் ஸ்டாம்பாக ஆக்கிய பின், மணல் கொள்ளையைக் கண்டு கொள்ளாமலிருந்தால், கை நிறைய பணம் என்பதுதான் உண்மை.

 

THE DEVASATED COCONUT GROVES ALONG KAVERY TN WW

யாருக்குத்தான் தெரியாது? இயற்கைவளங்களும், இயற்கை சார்ந்த மரம், செடி, கொடி, மனிதன் என எல்லோருடைய வாழ்வையும் சிதைக்கும் வண்ணம், மண் கொள்ளை ஆற்றின் போக்கையே அழித்து, வானிலையின் தன்மையையே குலைக்கும் காரணமாக அமைகிறதென்று?!!!

 

ஜீவிதமான இயற்கை சார்ந்த வாழ்வில், அமைதியும் பேரானந்தமும் கண்டவர்கள் நம் முன்னோர்கள் என சரித்திரம் சொல்லவில்லையா…

 

முன் காலத்தில், குளியலறை கட்டியா குளித்து முழுகினார்கள்? நதிக்கரை நாகரீகம் நமக்குள் நன்மையானது. விடியாத கருக்கலில், ஆற்றில் நீராடி, குடத்தில் புது நீரெடுத்து பானையில் சமைத்த வாழ்க்கை உவகையின் உற்பத்தியானது.

 

வியாதியில் விழுந்து பல காலம் கிடந்தவர்கள், வெகு சொற்பம் பேர்… இருக்கும் வரை, விருந்துபசரித்து வாழ்ந்து, வாழ்க்கைக்கு விடை கொடுத்தவர்தான் அனேகம்.

 

என் அன்னையின் பாட்டி, திருவண்டுதுறையில், காலையில் ஆற்றில் குளித்து அடுக்களைக்குள் தண்ணீர் குடத்தோடு, அரிசிகுதிருக்கு அருகில் அமர்ந்தவள், என்னவோ போலிருக்கிறதென்று, சொல்லி சாய்ந்தாள். எழுந்திருக்கவே இல்லை.

 

இதுவல்லவா! நிறைவான வாழ்க்கை. உட்கார்ந்த நிலையில், உயிர் போன பாட்டியை பார்க்க, பேரக்குழந்தைகளுக்கு நம்பிக்கை இல்லையாம். இது என் அம்மா சொன்ன கதை.

 

நதியும், வீடும், நடுத்தர வாக்கிலமைந்த கொல்லையும், அதன் வாழையும், தென்னையும், சிறு காய்கறித் தோட்டமும் எவ்வளவு பெரிய ஆரோக்கியத்தினை நமக்கு ஆசீர்வதித்திருந்தது?

 

உலக நாடுகளின் நடுவில் நாமும் முன்னேற்றம் வரிசை என்ற பெயரில், நாகரீத்தின் தொட்டில்களை தொலைத்து விட்டு, மலடிகளாக அல்லவா… வக்கற்று நிற்கிறோம்…?!!!

 

தமிழ்க்குடியை மூத்த குடிகள் என மார்தட்டும் இன்றைய அரசியலாளர்களுக்கு, தங்கள் நாகரீகத்தில், மணல் கொள்ளை, தன் தலைக்கு தானே தீ வைத்துக் கொள்ளுவதற்கு ஒப்பாக்கும் என ஏன் தெரியவில்லை?

 

இப்போது சொல்லுங்கள்!

இந்தோனேசிய தெங்கர் அம்மாவின் நம்பிக்கை மூடத்தனமா? அல்லது மூத்த இந்து பாரம்பரியத்தின் தீர்க்க தரிசனமா?

ஒவ்வொரு மணற்துகளும் ஒரு மகா மேரு என அவர் சொன்னது போல,

நம் மண்ணில், ஒவ்வொரு மணற்துகளும் அந்த நதியின் ரூபம்.

 

மணலின் தேவைக்கு, நாம் என்ன செய்வோம் எனும் கேள்விக்கு முன்னால், என் கேள்விகளுக்கும் கொஞ்சம் உங்கள் ஆய்வு மூளையை அடுத்த இதழில் கொடுங்கள்…

(தொடரும்)

Read 1849 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 18:42

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment