×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் சமயம் சைவசமயமே

Silappathikara-Asiriyar-1Silappathikara-Asiriyar-2

சிலப்பதிகாரத்தை எழுதிய வித்தகப் புலமையாளர் இளங்கோவடிகள் என்றும் சிலர் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என எழுதியும் பேசியும் வருகின்றனர். அவர் சமண சமயத்தவர் எனக் கூறுவதற்கு நூலில் எந்த ஆதாரமும இல்லை. பிறகு ஏன் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் என்றால், அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் சொல்லிச் சென்ற கருத்தை ஏற்று அவ்வாறு சொல்லிவருகின்றனர்.

 

அடியார்க்கு நல்லார் என்ன சொல்லியிருக்கிறார்?

 

“குணவாயிற் கோட்டத்து அரசுதுறந் திருந்த குடக்கோச் சேரன் இளங்கோவடிகட்கு” என்று தொடங்குகின்ற பதிகத்தின் இவ்விரண்டு அடிகட்குப் பொருள் சொல்ல வந்த அடியார்க்கு நல்லார்,

 

“திருக்குணவாயில் என்னும் ஊரில் இருந்த அருகன் கோயிலில் இராசபோகத்தைத் துறந்து இருந்த இளங்கோவடிகட்கு” எனப் பொருள் எழுதுகிறார். குணவாயில் கோட்டம் திருக்குணவாயிலில் இருந்த அருகன் கோயில்.

 

அருகன் - சமண மதத்தவர் வணங்கும் தேவன்.
கோட்டம் - கோயில்
அடிகள் - துறவிகட்கான அடையாளப் பெயர்.

 

அரச போகத்தைத் துறந்து, துறவியாகி அருகன் கோயிலில் வந்து தங்கியிருந்தார் இளங்கோ என்கிறார் அடியார்க்கு நல்லார். இந்த உரைகொண்டு இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு உரையெழுதிய அடியார்க்கு நல்லார், இளங்கோ சமண சமயத்தவர் எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனினும் அவர் சமணம் சார்ந்தவர் என்ற எண்ணத்திலேயே அடியார்க்கு நல்லார் அவ்வாறு எழுதியுள்ளார் எனக் கொள்வதில் தவறில்லை.

 

கோட்டம் என்ற சொல்லுக்கு கோயில் என்பது பொருள். இது பொதுப்பெயர் எந்தத் தெய்வம் குடிகொண்டிருந்தாலும் அந்த இடத்தைக் கோட்டம் எனச் சொல்வது அக்கால வழக்கு.

 

இது போன்றதுதான் அடிகள் என்னும் சொல்லும். அதுவும் பொதுப்பெயரே. எந்த சமயத்துத் துறவியாயினும் அவரை அடிகள் என்று சொல்லுவது சமய மரபு.

 

மணிமேகலையில் வரும் புத்த மதத் துறவி ஒருவரை அறவணடிகள் என அந்த நூல் சொல்லும். நமது சைவத்தில் நால்வரில் ஒருவராகிய “மாணிக்கவாசகரைஅடிகள்” எனச் சொல்வது வழக்கம். சிவபெருமானையே சைவம் அடிகள் என அழைக்கும். ஆதலால் அடிகள் என்னும் பொதுப்யெரைச் சமணசமயத்துத் துறவிக்கு மட்டும் சிறப்பாக உரியது போல எழுதிய அடியார்க்கு நல்லார் உரை பொருத்தம் அன்று.

 

கனாத்திறம் உரைத்த கதையுள் “அமரர்தருக் கோட்டம்” (கற்பகமரம் இருக்கும் கோயில்) “வெள்ளானைக் கோட்டம்” (ஐராவதம் இருக்கும் கோயில்)” "புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம்” (பலதேவன் கோயில்) ”உச்சிக்கிழான் கோட்டம்” (சூரியனார் கோயில்) “வேல் கோட்டம” (முருகன் கோயில்) எனப் பல்வேறு தெய்வங்கள் எழுந்தருளிய கோயில்களைக் கோட்டம் என்ற சொல்லாலேயே சுட்டிக் செல்கின்றார் இளங்கோவடிகள்.

 

இதிலிருந்து கோட்டம் என்பது அருகதேவன் எழுந்தருளியுள்ள கோயிலை மட்டும் குறிக்கும் சொல் அன்று என்பது தெளிவாகிறது. ஆதலால் கோட்டம் என்னும் சொல்லையும், அடிகள் என்னும் சொல்லையும் இளங்கோவிற்குரியது போலப் பொருள் கண்ட அடியார்க்கு நல்லார் உரை ஏற்கத்தக்கதாக இல்லை எனத் துணிந்து கூறலாம்.

 

சரி! அப்படியாயின் இளங்கோவின் சமயம் எதுவாக இருக்கும். என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். அது பற்றிப் பார்ப்போம்.

 

சிவனடியார்க்கு சிவனருளால் பிறந்த செங்குட்டுவன் - இளங்கோ.

செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவன்” எனக் கால் கோட்காதையிலும்

 

ஆனேறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி
மாநிலம் விளக்கிய மன்னவன்

என வரந்தரு காதையிலும், சிவபெருமான் அருளால் செங்குட்டுவன் பிறந்தான் எனத் தெளிவாகச் சொல்கிறார் இளங்கோ.
(செஞ்சடைவானன் - சிவன்: ஆனேறு ஊர்ந்தோன் - சிவன்)

 

சிவனருளால் பிறந்த செங்குட்டுவன் சிறந்த சிவபக்தன் என்பதையும், சிவனை அன்றி வேறு தெய்வத்தை வணங்காதவன் என்பதையும் கால் கோட் கதையில் தெளிவாகக் கூறுகிறார்.

 

உலகுபொதி உகுவத்து உயர்ந்தோன் சேவடி
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி” என்னும்
அடிகளின் அர்த்தம் பார்ப்போமா!

 

ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுலகத்தைத் தன்னுள் கொண்டவனாகிய சிவபெருமானின் சிவந்த அடிகளை வேறு தெய்வங்களை வணங்காத தலையால் வணங்கி” என்பது அர்த்தம்.

 

வடதிசையின் மேல் போர் எடுத்துப் புறப்பட்ட செங்குட்டுவனிடம் திருமாலின் பிரசாதம் தரப்படுகிறது. திருமால் கோயில் பட்டர்கள் கொண்டுவந்து தந்த சேடத்தை அவன் தலைமீது வைத்துக் கொள்ளவில்லையாம். ஏன்? சிவபெருமானின் திருவடி அவனது தலையில் இருப்பதால் அவ்வாறு செய்யவில்லை. பிறகு என்ன செய்தான்? திருமால் கோயில் சேடத்தை வாங்கித் தன் தோள் மீது வைத்துக் கொண்டானாம். இதுதான் உண்மை.

 

மேற்காணும் செய்திகளிலிருந்து செங்குட்டுவனின் சிவபக்தியை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா!

 

மேலும் ஓர் இடம்.

 

கனகவிசயரைத் தோற்கடித்து வெற்றிகொண்ட அரசன் செங்குட்டுவன், தன் அமைச்சன் வில்லவன் கோதையை அழைத்து, இமயமலையில் வேள்வி செய்து சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் அந்தணர்கட்கு எந்தத் துன்பமும் வாராதவாறு நீ சென்று காக்கவேண்டும் எனக் கட்டளை இடுகிறான் என்றால் சமய உணர்வில் அவன் எப்பேர்ப்பட்டவனாக இருந்தான் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். செங்குட்டுவன் தம்பி இளங்கோ என்பது வரலாறு. இவர்கள் பெற்றோரின் வேண்டுதலால் சிவனருளால் செங்குட்டுவன் பிறந்தான் என இளங்கோ கூறுகிறார். சிவனருளால் செங்குட்டுவன் தோன்றியது போலவே நமது இளங்கோவும் சிவனருளால் தோன்றியவரே எனக் கொள்வதில் தவறுகாண முடியாது. எனெனில் இவர்கள் பெற்றோர் சிவசமயத்தைச் சேர்ந்து சிவனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டவர்கள் என்பதால் அவ்வாறுதான் நிகழ்ச்சி நடந்திருக்க முடியும்.

 

சிவனடியார்கட்குப் பிறந்த பிள்ளையாகிய இளங்கோ சிவபக்தனாகிய செங்குட்டுவனுக்குத் தம்பி. இப்பேர்ப்பட்ட குடும்பத்துப் பிள்ளை வேறு சமயத்திற்குச் செல்லவேமாட்டார். இளங்கோ துறவியானதும் உண்மை. அவர் சைவ சமயத் துறவியாக, சைவ சமய அடிகளாக இருந்திருக்கிறார் என்பதும் உண்மை.


(நன்றி: - ஹிந்து மித்திரன்)

 

Read 3387 times
Rate this item
(2 votes)
Last modified on Friday, 10 October 2014 10:34

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

3 comments

  • Comment Link சஜ்ஜன் ராஜ் Sunday, 16 March 2014 14:36 posted by சஜ்ஜன் ராஜ்

    Please describe in Hindi or English also. sothat the mass can understand these valuable things.

  • Comment Link ஜெய்வந்த் Friday, 14 March 2014 17:33 posted by ஜெய்வந்த்

    அருமையான ஆய்வுக்கட்டுரை. இதுபோன்று பல தரமான கட்டுரைகளை வெளியிடுவீர்கள் என்று நம்புகின்றேன். தனிப்பட்ட மறையில் நம் வேத சாஸ்திரங்களை மழுங்கடிக்க புதிய புதிய கதைகளை ஆதாரமிலாமல் சொல்கிறார்கள் தீவிரவாதிகள். ஆசீவாகம் அதற்கு ஒரு உதாரணம். sishri.org, thinnai.com, vivanu போன்ற பல கோஷ்ட்டிகள் உண்டு. ஆனால் புதிதாக பல கதைகள் : சிவந்த தமிழர் எல்லாம் தாய முறையில் ஆரியர்க்கு பிறந்தவர்கள், மூவேந்தரும் அலெக்ஸ்சான்டரின் பரம்பரை, என்று பல தவறான ஆதாரங்களுடனும், நம் வேதங்களை படித்து அதனை திரிப்பவர்களும் நிறைய உள்ளனர். இதுபோன்ற கயமிகளுக்கு மறுப்புரையும் தாங்கள் ஒரு தனி section இல் வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன். என்னை தொடர்பு கொண்டீர்களேயானால், அந்த கயமிகளையும், அவர்கள் கதைகளையும் தருகிறேன். நன்றி

  • Comment Link பாண்டியன் Friday, 14 March 2014 12:24 posted by பாண்டியன்

    மிக அருமையான விளக்கம் . இதை தமிழ் விக்கிபிடியாவில் ஏற்றுங்கள் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்

Leave a comment