×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தேவ பூமியில் தெய்வீக நதிக்கரையில் தெய்வப்புலவர்

Saturday, 29 August 2015 15:52 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

 

தமிழறிஞர் பத்மஸ்ரீ வ.சுப்பையாபிள்ளை அவர்களால் 17.01.1935 அன்று தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 17.01.2015 அன்று மீண்டும் புத்துயிர் பெற்றது.
 
 
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 1
பேராசிரியர் முனைவர் சாமி தியாகராஜன் அவர்களைத் தலைவராகக் கொண்டு மீண்டும் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், தன்னுடைய முதல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில், உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் கங்கைக் கரையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கல்திருமேனியை நிறுவுவதென்று முடிவு செய்து தீர்மானமும் நிறைவேற்றியது.
 
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 2
 
அந்தச் சமயத்தில், திருவள்ளுவர் புகழையும் திருக்குறளின் மேன் மையையும் பாரதம் முழுவதும் கொண்டு செல்வதைத் தலையாய கடமையாகக் கொண்டு செயலாற்றி வரும் உத்தர்கண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபை உறுப்பினர் திரு.தருண் விஜய் அவர்களை, கங்கைக் கரையில் திருவள்ளுவரின் கல்திருமேனியை நிறுவுவது தொடர்பாக, திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் அணுகிய போது, அவர் அந்தப் பணிக்குத் தானும் உதவி புரிவதாக உடனடியாக ஒப்புக்கொண்டார். 
 
 
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 3
அதனைத் தொடர்ந்து நான்கரை அடி உயர திருவள்ளுவர் கல்திருமேனியை உருவாக்குவதற்காக, 20.02.2015 அன்று, மஹாபலிபுரம் காயத்ரி சிற்பக்கூடத்தில், திருமேனியை உருவாக்குவதற்காக வாங்கப்பட்டிருந்த கல்லிற்குப் பூஜை நடத்தப்பட்டது. காயத்ரி சிற்பக்கூடத்தின் உரிமையாளர் திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கல்லிற்குப் பூஜை செய்து தன்னுடைய திருப்பணியைத் தொடங்கினார். 
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 4
 
 
தற்போது திருவள்ளுவர் கல்திருமேனி உருவாகி நிறைவடைந்த நிலையில், அதை உத்தர்கண்ட் மாநில பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்களிடம் ஒப்படைக்கும் விழா சென்னையில் மிகவும் விமரிசையாக நடந்தது. 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 5
 
 
 
27.08.2015 அன்று சென்னை தி.நகர் வாணிமகாலில் திருவள்ளுவர் திருநாட்கழகம் சார்பாக நடைபெற்ற விழாவில், விழாவிற்குத் தலைமையேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வெ.இராமசுப்பிரமணியன் அவர்கள், மஹாபலிபுரத்தில் உருவாகி வரும் கல்திருமேனியைப் போன்ற சிறிய பிரதி ஒன்றை தருண் விஜய் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.  
 
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 6
 
அப்போது சிறப்புரை ஆற்றிய நீதியரசர் இராமசுப்பிரமணியன் அவர்கள், “திருவள்ளுவருக்கு ஒரு சிறப்பு என்னவென்றால், அவரை யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம். அனைத்து மதத்தினரும் விரும்பும் வண்ணம் பொதுவானதாக 1330 குறட்பாக்களைக் கொடுத்துள்ளார். அவர் தன்னைப்பற்றிய எந்த ஒரு அடையாளத்தையும் விட்டு வைக்கவில்லை. தன்னைப் பற்றிய அடையாளம் எதையும் காட்டிக்கொள்ளாமல் அனைவருக்கும் பொதுவான அருமையான சிறப்பான நூலைப் படைக்க முடியும் என்றால் அது திருவள்ளுவர் ஒருவரால் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது” என்றார். 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 7
 
 
அவர் மேலும் பேசுகையில், “கஷ்டப்பட்டு சம்பாதிக்கப்படும் பணம் கவலையோடு பாதுகாக்கப்படுகிறது. துக்கத்தோடு இழக்கப்படுகிறது. ஆனால் சேர்த்து வைத்த அனைத்தும் அனுபவிக்கப்படுவதில்லை. அனுபவிக்க முடியாமலேயே மனிதன் இறந்துபோகிறான். திருக்குறளைக் கடைப்பிடித்து அதன் கருத்துக்களைப் பின்பற்றி நம் வாழ்க்கையை நடத்திச் சென்றால் எந்தப் பிரச்சனையும் இன்றி நல்லபடியாக வாழலாம்” என்றார்.      
திருவள்ளுவர் திருமேனியைப் பெற்றுக்கொண்ட தருண் விஜய் தன் ஏற்புரையில், “திருவள்ளுவர் ஒரு தேசியக்கவி. அவருடைய நூலான திருக்குறள் ஜாதி வேற்றுமைகளையும், வன்முறையையும் ஒழிக்கக்கூடிய நல்ல கருத்துக்களைக் கொண்டது. அதைத் தேசிய நூலாக ஆக்கவேண்டும். நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் திருக்குறள் கட்டாயப்பாடமாக ஆக்கப்படவேண்டும். அதைப் பிரத்மர் மோடியிடம் வலியுறுத்துவேன். அப்போதுதான் நாட்டின் மற்ற பகுதிகளிலும் இருக்கும் மக்களும் அதைப் படித்துப் பயன்பெறுவர்” என்றார். 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 8
 
 
நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் தெரியாமல் இருப்பது தமக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்ததாகக் கூறிய தருண் விஜய், பஞ்சாப் மாநிலத்தில் பல கல்லூரிகளில் திருக்குறள் மாணவர்களுக்குக் கிடைக்கப்பெறுவதாகவும், ஹிமாச்சல பிரதேசத்தின் பள்ளிகளில் பிரார்த்தனை வகுப்புகளில் திருக்குறளும், திருவள்ளுவரின் சரித்திரமும் வாசிக்கப்படுவதாகவும் கூறினார்.  
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 10
 
 
”நாட்டில் பாடப்புத்தகங்ளில் தென்னிந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. அசோகச் சக்கிர்வர்த்தியையும், சந்திர குப்த மௌரியரையும் போற்றும் பாடப்புத்தகங்கள், ராஜராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும், சேர பாண்டிய மன்னர்களையும், கிருஷ்ண  தேவராயரையும் போற்றுவதில்லை. பக்த மீராவைப் போற்றும் பாடப்புத்தகங்கள் ஆண்டாளைப் போற்றுவதில்லை. ஜான்ஸி ராணியைப் போற்றும் பாடப்புத்தகங்கள் வேலு நாச்சியாரைப் போற்றுவதில்லை. வால்மீகியை போற்றும் பாடப்புத்தகங்கள் கம்பரையும் வள்ளுவரையும் போற்றுவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். தென்னிந்திய வரலாற்றை நாடெங்கும் கொண்டு செல்ல வேண்டும்” என்றார் தருண் விஜய். 
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 18
 
 
மேலும் தொடர்ந்த அவர், “கங்கைக் கரையில் திருவள்ளுவர் கல்திருமேனியை நிறுவுவதற்கான நிலம் உத்திரப்பிரதேச மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்காக நான் அம்மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்களை அணுகியபோது,  சிலை நிறுவுவதற்கு அவர் மனமுவந்து நிலம் அளிப்பதற்குச் சம்மதித்தார். உத்தர்கண்ட் அரசாங்கத்தையும் அணுகியுள்ளேன். விரைவில் ஹரித்வார் நகரில் கங்கைக் கரையில் திருவள்ளுவர் கல்திருமேனியை நிறுவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார். 
முன்னதாக வாழ்த்துரை வழங்கிய மத்திய அரசின் கப்பல்துறை, நெடுஞ்சாலைத்துறை, சாலைப்போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், “திருவள்ளுவரின் திருக்குறள் ஜாதி, மதம், மொழி, இனம் அனைத்தையும் கடந்து அனைவருக்கும் பொதுவான நூலாக, உலக மக்கள் அனைவரையும் கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவர்ந்து வந்துள்ளது. அத்தகைய அற்புதமான நூலை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு சிலை நிறுவுவதோடு நிற்காமல், அந்தச் சிலையை உட்கொண்டிருக்கும் கோவிலையும் எழுப்ப வேண்டும். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றரார். அவருடைய யோசனையை தருண் விஜய் அவர்களும் ஆமோதித்து, அதற்குத் தானும் ஒத்துழைப்பதகச் சொன்னார். 
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 11
 
 
முன்னதாகத் திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் இளைய அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் அருளாசி வழங்கினார். கோவை ஆனைகட்டி ஆர்ஷ வித்யா பீடத்தின் நிறுவனர் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் அருளாசிச் செய்தி படிக்கப்பட்டது. 
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 12
 
 
பேச்சாளரும் தமிழ் பேராசிரியருமான முனைவர் இ.ச.பர்வீன் சுல்தானா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி அவர்களின் வாழ்த்துச் செய்தியும் படிக்கப்பட்டது.
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 13
 
 
துவக்கத்தில் வரவேற்புரை வழங்கிய திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் தலைவர் பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்கள், திருவள்ளுவர் திருநாட்கழகம் உருவான வரலாற்றையும், திருவள்ளுவர் கல்திருமேனி உருவான வரலாற்றையும் விவரமாக எடுத்துரைத்தார். 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 14
 
 
 
திருவள்ளுவர் கல்திருமேனியை உருவாக்கிய காயத்ரி சிற்பக்கூடத்தின் உரிமையாளர் சிற்பி கிருஷ்ணமூர்த்தி, அந்தக் கல்திருமேனியை சென்னையில் இருந்து ஹரித்வாருக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க., மாநில தொழிற்பிரிவுத் தலைவர் டால்ஃபின் ஸ்ரீதர், தமிழ் மக்களுக்குச் சித்திரைத் தமிழ் புத்தாண்டு திரும்பவும் கிடைக்கப் பெரும்பங்காற்றிய வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பால கௌதமன் அவர்கள், கடவுள் வாழ்த்தும் நாட்டு வாழ்த்தும் பாடிய திருக்குறள் மாமணி திருமதி சிந்துஜா அவர்கள் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 15
 
 
திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் புரவலர்கள் தொழிலதிபர் திரு.ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரியும் திரு.முத்துக்குமாரசாமியும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  
 
 
Thiruvalluvar Thirunaal Kazhagam 16
 
 
திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் ஆலோசகர் சேக்கிழார் அடிப்பொடி, முதுமுனைவர் உயர்திரு.டி.என்.இராமச்சந்திரன், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவனர் திரு.வேதாந்தம்ஜி, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் திரு.ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி, பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் திரு.இல.கணேசன், கல்வியாளரும் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன், பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மாநிலத் துணைத்தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா முதல்வர் டாக்டர் கிரிஜா சேஷாத்ரி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.     
Read 811 times
Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 01 September 2015 12:18

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment