×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

கம்பன் என்றொரு மானிடன் (நூல் வெளியீட்டு விழா மற்றும் நூல் விமரிசனம்)

Wednesday, 18 November 2015 17:15 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

நூல் வெளியீட்டு விழா

சென்னையில்  உள்ள  தருமையாதீனம்  மடத்தில்  தமிழாகரர்  பேராசிரியர்  சாமி தியாகராஜன்  அவர்கள்  எழுதிய  “கம்பன் என்றொரு மானிடன்” என்ற நூல், 17.10.2015  சனிக்கிழமை  அன்று  மாலை 6.30  மணியளவில்  வெளியிடப்பட்டது. 
 
Kamban Book
 
திருமதி.சிந்துஜா  அவர்கள்  பாடிய  இறை வணக்கத்துடன்  விழா  துவங்கியது.
 
Sindhuja Prayer
 
 
 
 
தமிழ்நாடு  விசுவ  ஹிந்து  பரிஷத்தின்  நிறுவனரும்  தமிழ்  முற்றத்தின் தலைவருமான  மானனீய  வேதாந்தம்ஜி  அவர்கள்  விழாவுக்குத்  தலைமை வகித்தார்.  நூலின்  வெளியீட்டாளர்களான  கற்பகம்  புத்தகாலயாவின்   நிறுவனர்  திரு.இராமன் நல்லதம்பி  அனைவரையும்  வரவேற்றார். 
 
 
Raman Nallathambi
 
 
 
சிட்டி யூனியன்  வங்கியின்  இயக்குனர்  திரு.காமகோடி  அவர்கள்  நூலை வெளியிட,  டெக்ஸ்  பையோஸையன்ஸஸ்  நிறுவனத்தின்  தலைவரும் ஓராசிரியர்  பள்ளிகளின்  கௌரவச் செயலாளருமான திரு.ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி,  கம்ப  ராமாயண  உரையாசிரியரும்  அம்பத்தூர் கம்பன்  கழகத்தின்  தலைவருமான  பள்ளத்தூர்  திரு.பழ.பழனியப்பன்,  பாரதி கவிதைகள்  உரையாசிரியர்  திரு.பத்மதேவன்  ஆகியோர்  பெற்றுகொண்டனர். 
 
 
Book Release
 
 
 
பாரதிய  ஜனதா  கட்சியின்  மூத்த  தலைவரும்  பொற்றாமரை  இலக்கிய அமைப்பின்  நிறுவனருமான  திரு.இல கணேசன்  அவர்களும்,  வழக்கறிஞர் திரு.பாலசீனிவாசன்  அவர்களும்  நூலின்  திறனை  ஆய்ந்து  உரைத்தனர். 
விழாவுக்குத்  தலைமை  வகித்த  மானனீய  வேதாந்தம்ஜி  அவர்கள்,  பேராசிரியர் சாமி  தியாகராஜன்  அவர்களின்  இலக்கியச்  சொற்பொழிவுகளையும்,  எழுத்து வண்ணத்தையும்  பாராட்டிப்  பேசினார்.  ஞானசம்பந்தர்  மேல்  அதிகமான காதல் கொண்டவர்  என்றும்  கம்பனையும்,  பெரியபுராணத்தையும்  அவர்  பேசும் போது தாம்  மெய்மறந்து  கேட்டிருப்பதாகவும்  கூறினார்.
 
 
 
Vedantamji
 
 
 
தஞ்சை  சாஸ்திரா  பல்கலைக்கழகத்தில்  டாக்டர்  பட்டம்  பெற்றவரான திரு.காமகோடி  அவர்கள்,  சமயம்  இல்லாமல்  தமிழ்  சிறப்படைய முடியாது என்றார்.  இந்த  நூலின்  முதல்  பதிப்பை  2004ம்  ஆண்டில்  வெளியிட்டவர் திரு.காமகோடி  அவர்களின்  தந்தையும்  கும்பகோணம்  சிட்டி  யூனியன் வங்கியின்  நிறுவனருமான  திரு.நாராயணன்  என்பது  குறிப்பிடத்தக்கது. 
 
 
Sri Kamakoti
 
 
அதன்  பிறகு  வழக்கறிஞர்  திரு.பால சீனிவாசன்  அவர்கள்  நூலின் திறமுரைத்தபோது,  நூலில்  உள்ள  8  கட்டுரைகளிலிருந்து  சில  இடங்களைத்  தேர்ந்தெடுத்துப்  பேசினர்.  குறிப்பாக  தென்றல்  எனும்  தேவன்  என்கிற கட்டுரையைப்  பற்றி  மிகவும்  விரிவாக  பல  விளக்கங்களுடன்  பேசினார். நூலாசிரியர்  பல  விஷயங்களை  எவ்வளவு  அழகாகக்  கையாண்டுள்ளார் என்பதையும்  வியந்து  பேசினார். 
 
 
Bala Srinivasan
 
 
  
பா.ஜ.க.  தலைவரும்  பொற்றாமரை  அமைப்பின்   நிறுவனருமான  திரு.இல கணேசன்  அவர்கள்  தன்னுடைய  திறமுரையில்,   நூலின் கட்டுரைகளில்  உள்ள சிறப்பான  விஷயங்களைப்  பற்றிப்  பேசினார்.  கம்பன்  என்றொரு  மானிடன் என்கிற  மஹாகவி  பாரதியாரின்  சொற்றொடரை,  கம்ப ராமாயணத்தை  ஆய்வு செய்து  பேராசிரியர்  சாமி  தியாகராஜன்  அற்புதமாக  நிறுவியுள்ளார்  என்று கூறினார்.  வாலி வதம்  பற்றியும் சிறப்பாகப்  பேசினார்.  வாளெடுத்துப்  போராடும் போராளியாக  இல்லாமல்  எழுது கோலெடுத்துப்  போராடும்,  போராளியாகத்தான் நான்  பேராசிரியர்  சாமி  தியாகராஜனை  பார்க்கிறேன்  என்று  நூலாசிரியரைப் பாராட்டிப் பேசினார்.
 
 
Sri Ila Ganesan ji
 
 
 
மயில்  குளிரில்  நடுங்குவதைப்  பார்த்து  மனமிரங்கிய  பேகன் அதற்குப் போர்வையைக்  கொடுத்துக் காப்பாற்றினான்.  பாரி முல்லைக் கொடி படர்வதற்குக்  கொம்பின்றி  வாடுவதைக்  கண்டு  தன்  தேரைக்  கொடுத்தான், புறாவுக்காக  சிபிச்சக்கரவர்த்தி  தன்  தசையை  வெட்டிக்  கொடுத்தான். இவைகளெல்லாம்  மானுடனுக்குரிய  பண்புகள். 
 
இவர்கள்  “வையத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையும்
தெய்வத்துள்  வைக்கப்படும்” என்ற  குறளுக்கு  எடுத்துக் காட்டாக  வாழ்ந்தவர்கள்.
 
 “எத்துணையும்  பேதமுறாது  எவ்வுயிரும்
தம் முயிர் போல்  எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய்  உவக்கின்றார்
யாவர்அவர்  உளந்தான்  சுத்த
சித்துருவாய்  எம்பெரு மான்  நடம்புரியும்
இடம் என நான்  தெரிந்தேன்  அந்த
வித்தகர்தம்  அடிக்கேவல்  புரிந்திடஎன்
சிந்தை மிக விழைந்த தாலோ”                      என்று வள்ளலார்  பாடினார். 
 
சித்திரத்தில்  அலர்ந்த  செந்தாமரையை  ஒத்தது  போல்  ராமனது  முகம் இருந்ததைக்  கம்பர்  கூறினார்.  இன்பமும்,  துன்பமும்  ஒன்றாகக்  கருதுவதே மானுடன்  இயல்பு,  என்றும்  பேசினார்.
 
 
Sri L Ganesan
 
 
விழாவிற்கு  வந்த  அனைத்து  விருந்தினருக்கும்  பொன்னாடை  போர்த்தப்பட்டது.  தமிழ்நாடு  விசுவ  ஹிந்து  பரிஷத்  மாநிலத்  தலைவர் திரு.ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி,   ஓராசிரியர் பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீசன்,  ஹிந்து வித்யாலயாக்களின்  முதல்வர்  டாக்டர்.திருமதி.கிரிஜா சேஷாத்ரி  மற்றும்  ஹிந்து  வித்யாலயாவின்  ஆசிரியர்கள்,  தமிழ்முற்றம் பேராசான்கள்,  தமிழ்  ஆர்வலர்கள்,  பல  அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மகளிர்கள்  பெருமளவில்  கலந்து  கொண்டு  விழாவைச்  சிறப்பித்தனர்.
 
 
 
Audience
 
 
 
வேத  விஞ்ஞான  ஆராய்ச்சி  மையத்தைச்  சேர்ந்த  பல  அங்கத்தினகள் கலந்து கொண்டனர். 
 
Audience 2
 
பத்திரிகையாளர்  திரு.பி.ஆர்.ஹரன்  அவர்கள்  நிகழ்ச்சிகளைத்   தொகுத்து வழங்கினார்.
 
Sami Thiagarajan
 
 
பேராசிரியர்  சாமி  தியாகராஜன்  அவர்கள்  தனது  ஏற்புரையை  வழங்கி  நன்றியும் கூறினார்.  நாட்டு  வாழ்த்துடன்  நூல்  வெளியீட்டு விழா  நிறைவுற்றது.
 
 
நூல் விமரிசனம்    -    பி.ஆர்.கீதா
 
 Kamban Enroru Manidan
 
“நவில்தொறும் நூல் நயம் போலும்
பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு” 
 
 
என்ற திருக்குறளின் பொருள் யாவரும் அறிந்ததே. திரு.சாமி தியாகராசன் அவர்களின் “கம்பன் என்றொரு மானிடன்” என்ற நூலும் அவர்தம் பண்புக்கு உரைகல்லாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. இந்நூலில் பாரதியின் வாக்கினைக் கம்பன் கண்ட மானுடவியல் மூலம் அவர் எடுத்துக்கூறும் பாங்கும், விளக்கும் விதமும் அருமை. கம்பனைப் பற்றி எத்துணையோ ஆசிரியர்களும் தமிழறிந்த சான்றோரும் தத்தம் நோக்கில் விரிவுரை ஆற்றியுள்ளனர்; ஆய்வு நூல்கள் எழுதியுள்ளனர். அவர்களின் வரிசையில் வந்த சாமி தியாகராசன் அவர்களும் தம் நூலில் கம்பனைப் பற்றி ஆய்ந்து கூறியுள்ளார். ஆனால் “கம்பன் என்றொரு மானிடன்” என்ற பாரதியாரின் வாக்கினை தன்னுடைய நூலுக்குத் தலைப்பாக அவர் வைத்து நாம் மறக்க இயலாதபடி நூலை அமைத்துள்ளார்.
 
நூலில் அமைந்துள்ள எட்டுப் பகுதிகளும் செம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்றவர் நூல்களில் காணக்கிடைக்காத அற்புத நுணுக்கங்கள் நூலில் அழகுற அமைந்துள்ளன. அதனால், “கம்பன் என்றொரு மானிடன்” இந்நூலில் நடையில் நின்றுயிர் நாயகனாகவே காட்டப் பெறுகிறான். முனிவர்களைக் காக்கும் உறுதி; சுக்ரீவனுடன் கொண்ட நட்பு; வீடணனுக்கு அடைக்கலம் அளித்த கருணை;; பரமவைரியை ’இன்று போய் நாளை வா’ என்றுரைத்த பண்பு – இவை அனைத்தும் இராமனிடம் கம்பன் கண்ட மானிடப்பண்புகள் என்று சாமி தியாகராசன் காட்டும் விதம் பொருத்தமாக உள்ளது. 
  
‘சொல்லின் செல்வன்’ என்று இராமன் அனுமனைப் பாராட்டும் காரணத்தை விளக்க ஆசிரியர் எடுத்துகொண்ட பாடல் கருத்தாழம் மிக்கது. உண்மையில் ஆசிரியரே ‘சொல்லின் செல்வன்’ என்கிற பட்டத்திற்கும் உரியவர் தான். 
 
Professor Sami Thiyagarajan
 
'கம்பசித்திரம்’ என்ற பகுதியைக் கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டும். அதில் அசிரியர் எடுத்துக்காட்டியுள்ள சித்திர நயம் – அதன் பின்புலன், இவையெல்லாம் கம்ப சித்திரத்தில் விசித்திரங்கள் என்றே கூறலாம். ஓவியம் வரைபவனுக்கும் காவியம் படைப்பவனுக்கும் இடையேயான திறன்களை நன்கு வெளிப்படுத்துகின்றார். இவற்றைக் கம்பன் எவ்வாறு கையாண்டுள்ளான் என்று அழகாகக் கூறுகிறார். இது பற்றி இங்கு நாம் விவரிப்பதைவிட, ”யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற பொன்மொழிக்கேற்ப வாசகர் அனைவரும் தாமே படித்து இன்புற வேண்டுகின்றேன்.
 
‘நெஞ்சில் நின்ற கேள்வி’ – இன்றும் எல்லோர் நெஞ்சிலும் நிற்கும் கேள்விதான். இரண்டு வரங்களின் தன்மை – அவற்றில் புதைந்து கிடக்கும் நியாயம், இவற்றை நாம் படித்துச் செல்லும்போது – இதுவரை நாம் அறியாத பல தகவல்களையும் திரட்டித் தருகின்றார். வால்மீகி எழுதிய நூலில் சிலவற்றைக் கம்பன் தொட முற்படவில்லை என்பதையும், அதில் கம்பனின் மானுடப்பண்பு நன்கு வெளிப்படுகிறது என்பதையும் கூறுகின்றார். 
 
'தென்றல் எனும் தேவன்’ கம்பன் கையில் படும் பாடு நினைத்து நினைத்து நகைக்கத் தக்கது. 
 
‘ஏன் இந்த முடிவு’ பற்பல ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் பகுதி எனலாம். 
 
‘வாலிவதம்’ ஆண்டாண்டு காலமாகப் பௌராணிகர் வாயிலாகவும், இலக்கிய் ஆய்வாளர் வாயிலாகவும், நுண்மாண் நுழைபுலத்தோடு வாதிடும் பட்டிமண்டபப் பேச்சாளர் மத்தியிலும், சாகாவரம் பெற்று உலாவரும் பகுதியாகும். ஆசிரியரும் இதற்கு விதிவிலக்கல்லர்! பல இடங்களைத் தம் துறைபோகிய தீந்தமிழ்ச் சொற்களால் விளக்கி, நம் மனத்தில் தனி இடம் பிடிக்கிறார். 
 
'கல்லாப் புல்லோர்’ கம்பனின் கொள்கை விளக்கம் என்று எடுத்துக் காட்டுகிறார். 
 
தமிழ்த் தாத்தா உ.வே.சா. பாடங்கேட்ட திரு.சடகோப ஐயங்காரின் “போடாமல் போட்டவை” ஆசிரியரின் கைவண்ணத்தில் மேலும் பொலிந்து நிற்கிறது. 
 
“கம்பன் என்றொரு மானிடன்” என்னும் இந்நூல் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அனைத்து மானிடர்களும் படிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.  
Read 2211 times
Rate this item
(1 Vote)
Last modified on Friday, 20 November 2015 14:15

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment