×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

முடியலடா சாமி....

Tuesday, 23 April 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

கருணாநிதியின் அறிக்கை :

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்
உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார்.திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார். மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, திராவிட நல் திருநாடும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 1912ம் ஆண்டு தோன்றிய, மெட்ராஸ் யுனைடெட் லீக் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

 

டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம் என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. நாயரின் உரையில், திராவிடத் தோழர்களே... நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

 

திராவிட இயக்க வரலாறு என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம் என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. ...

 

சரி... சரி... அந்த உளறலை படித்து விட்டோம் இனி நம் கட்டுரைக்கு வருவோம் !

குறிப்பு: இக்கட்டுரையில் கருணாநிதியின் அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டப்படும் பகுதிகள் இரண்டு கோடுகள் மூலம் ( //......//) அடையாளப் படுத்தப்படுகிறது.

 

1971 பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உதவியோடு கருணாநிதி ஆட்சி பீடம் ஏறினார். அந்தத் தேர்தல் வெற்றியை விவரிக்கையில் வாய்மைக்கு ஒரு புது விளக்கம் தந்தார்.

அது என்ன?

வாய்மையே வெல்லும் – வாயும் மையும் வென்று விட்டது.

இப்படி விளக்கம் கொடுத்தவரிடம் உண்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். இருப்பினும், பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் கூற்றுப்படி, கருணாநிதி என்ற பேயை ஓட்டுவது இன்றியமையாத ஒன்றாக இருப்பதால் இந்த மாந்திரீகம் தேவைப்படுகிறது.

 

23.02.2012 தினமலர் பத்திரிகையில் அறிக்கை வாயிலாக கருணாநிதி கூறுகிறார் -

// திராவிடர் என்ற பெயரை கால்டுவெல் தான் முதன் முதலாக உபயோகித்தார்.//

இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

என் ஒன்று விட்ட பெரியப்பாவின் மகன் சரளமாகப் பொய் சொல்லுவார். என் பெரியப்பா கொஞ்சமாவது உண்மையைக் கலந்து பேசுடா என்பார். கருணாநிதியின் இந்த கால்டுவெல் பேத்தல் என் அண்ணனை நினைவு படுத்துகிறது.

கால்டுவெல் திராவிட மொழி ஒப்பிலக்கணம் எழுதியது 1856ல். ஆனால், மதம் மாற்றம் செய்ய இந்தப் பாதிரியார் காட்டும் ஏசுவுக்கு 172 ஆண்டுகளுக்கு முன்பே, திராவிடம் என்ற சொல்லின் திரிபான த்ரமிர என்ற சொல் த்ரமிர தேச சங்காதம் (தமிழ் தேசங்களின் கூட்டணி) என்று ஹதிகும்பா கல்வெட்டில் இடம் பெற்றுவிட்டது. இங்கு திராவிடம் என்ற சொல் தமிழ் கூறும் நல்லுலகைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

புராணங்களில் குறிப்பிடப்படும் 56 தேசங்களில் தென்னகத்தில் சேர, சோழ, பாண்டிய, திராவிட தேசங்கள் இருப்பதாக குறிப்பு காணப்படுகிறது. இந்தக் குறிப்பின் படி, சேர, சோழ, பாண்டியரல்லாத ஏனைய தமிழகம் திராவிட நாடு என்பது புலனாகிறது. விஷ்ணு புராணத்தில் சத்யவ்ரதன் என்ற திராவிட அரசன் என்கிற குறிப்பும் இந்த திராவிட என்ற சொல்லின் தொன்மையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்தப் புராணங்கள் எழுதப்பட்ட காலம் என்பது குறித்து அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை; இருப்பினும், மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்டது என்று வாதிடும் அறிஞர்கள் கூட இதை கால்டுவெல்லுக்கு சுமார் 1300 ஆண்டுகள் முன்பு என்று கணக்கிட்டுள்ளனர்.

8-9ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆதிசங்கரர், திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று வர்ணிக்கிறார். சங்கர்ரின் சமகாலத்தவரான குமரில பட்டர், ஆந்திர திராவிட பாஷா என்பதில் தமிழை திராவிடம் என்றும், தெலுங்கை ஆந்திரம் என்றும் குறிப்பிடுகிறார். இங்கு திராவிடம் என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை கி.பி.900-950யில் வாழ்ந்த நாதமுனிகள் திராவிட வேத சாகரம் என்று குறிப்பிடுகிறார். இங்கு திராவிடம் என்ற சொல் தமிழ் மொழியைக் குறிக்கிறது.

கி.பி.1705 முதல் கி.பி.1742 வரை வாழ்ந்து அருளிய தாயுமானவ ஸ்வாமிகள் சித்தர் கண பதிகத்தில், வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே, வந்ததா விவகரிப்பேன் என்று அருளுகிறார். இங்கு திராவிடம் என்ற சொல், தமிழ் தேசத்தைக் குறிக்கிறது.

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவரின் சைவசித்தாந்த உரை திராவிட மாபாடியம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு திராவிடம் என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு ஆகியவற்றை திராவிட மொழிகள் என்று 1811ல் வகைப்படுத்தியவர் ஃப்ரான்ஸிஸ் வைட் எல்லிஸ். இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இரண்டு தெலுங்கு பிராமணர்கள். இதை இவர் வகைப்படுத்தும் போது சென்னை ஆட்சியாளராக பணியாற்றினார். மொழிகளை மட்டும் தான் இவர் இனப்படுத்தினாரே தவிர, மனிதர்களை இவர் திராவிடன் என்றும் ஆரியன் என்றும் பிரிக்கவில்லை. காரணம், இவர் ஒரு Indologist, இந்தியவியல் வல்லுனர்.

கால்டுவெல் ஆராதித்த ஏசு நாதர் தோன்றுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன்பே திராவிடம் என்ற சொல் பழக்கத்தில் இருந்துள்ளது. இது தெள்ளிய அறிவுடையவர்களுக்குத் தெரியும். தேவர் சீமையின் கதாநாயகனை வைத்து தென்பாண்டிச் சிங்கம் என்று கதை எழுதிய மேல்-தாவிகளுக்கு திராவிட வரலாறா தெரியப் போகிறது?

பிரிவினை வாத பிரச்சாரத்துக்காக மட்டுமே லண்டன் மிஷன் சொஸைட்டியால் பாரதத்துக்கு அனுப்ப்ப்பட்ட கால்டுவெல், எந்த அடிப்படையுமின்றி, திராவிடத்தைத் தனி இனம் என்று ஊன்றிய நச்சு விதையில் முளைத்த விஷச் செடி தான் இந்த திராவிடர் சங்கம்.

//கடந்த 1856ல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். //

அண்மையில் வெளியான Genome Study, மரபணு ஆய்வு, இந்தியர்கள் அனைவரும் ஒரே மரபணுவிலிருந்து தோன்றியவர்கள் தாம்; ஆரியம்-திராவிடம் என்ற வேறுபாடு இல்லை என்று நிறுவியுள்ளது. எந்த பகுத்தறிவு உள்ளவனாவது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டதை ஏற்கமாட்டேன் என்று சொல்லுவானா?

எந்த தன்மானமுள்ளவனாவது, தன் முன்னோர்களான தாயுமானவ ஸ்வாமிகளையும், சிவஞான முனிவரையும், நாதமுனிகளையும், ஆதி சங்கரரையும், திருஞான சம்பந்தரையும், குமரில பட்டரையும், ஞானிகளையும், புலவர்களையும், அறிஞர்களையும் புறந்தள்ளி விட்டு, நாடு பிடிக்க வந்த நயவஞ்சகக் கூட்டத்தோடு, ஆள் பிடிக்க வந்தவனுடன் கைகோர்த்துக் கொள்வானா? சுதந்திரத்தைக் கொடுத்து விட்டு, நாட்டை விட்டுப் போய் விடாதே என்று வெள்ளையினிடம் மண்டியிட்ட எட்டப்பர்கள் தாமே இந்த திராவிட இயக்கம்?

// டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம் என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன.//

இந்த ஆதி ஆவணத்தின் தமிழை உற்று கவனிக்க வேண்டும். தமிழ் பெயர் வைக்கிறேன், ஆரியம் தமிழைக் கெடுத்து விட்டது என்றெல்லாம் முழங்கியவர்களின் சொற்றொடர்களைப் பாருங்கள்.

//திராவிடத் தோழர்களே... நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து, மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள்.//

பந்து மித்திரர் – இவை தூய தமிழ்ச் சொற்களா ? தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நவரஸங்களோடு கொட்டி முழக்கும் பேராசிரியர் நன்னனிடம் இதற்கு கருணாநிதி விளக்கம் கேட்க வேண்டும். அவரும் இந்தத் துவக்க விழாவுக்கு வருகிறாரே! கருணாநிதி கேட்பாரா? நன்னனும் டி.எம். நாயரை ஆரிய அடிவருடி என்று வருடுவாரா?

//நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்.//

பார்பனர்களை நான் வெறுப்பதில்லை; ஆனால் பார்ப்பனீயத்தை நான் வெறுக்கிறேன். கூட்டணியில் இருக்கும் போது, பார்ப்பன ராஜாஜி மூதறிஞராக அவதாரம் எடுப்பார்; அவரே ஏண்டா கள்ளுக்கடையைத் திறந்தாய்? என்று கேட்டால், குல்லுக பட்டராக குறுகி விடுவார். எப்போது பிராமணர்கள் நடுங்க வேண்டும், எப்போது பிராமணர்கள் நிமிர வேண்டும் என்ற கால அட்டவணையை கருணாநிதியுடனான கூட்டணியே முடிவு செய்யும்.

//நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.//

மத்தியில் ஏதாவது பார்ப்பனர் ஆட்சிக்கு வந்தால் மகனே வருக, மகளே வருக, நிலையான ஆட்சியைத் தருக என்று திரும்பக் கூறுவார் கருணாநிதி.

//உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.//

இது உண்மை தான். பிராமணர்கள் முகத்தில் தோன்றியவர்கள் என்று அடிக்கடி சொல்லி வரும் கருணாநிதி, இந்த ஒரு வாக்கியத்தில் மட்டும் உண்மையை விளம்பி இருக்கிறார். ஆனால், பிராமணர்கள் என்று பொதுப்படையாக அவர் சொல்வது தான், சற்றே நெருடலாக இருக்கிறது. அவர் எந்த பிராமணர் என்று குறிப்பிட்டிருந்தால் நமக்கும் ஐயம் திரிபர விளங்கியிருக்கும்.

யார் அந்த பிராமணர்?

கள்ள ரயிலேறி சென்னைக்கு வந்தார், ஆரஞ்சுப் பழம் திருடித் தின்றார், வேசியிடம் சென்று விட்டு காசு கொடுக்காமல் ஓடி வந்தார். சினிமா துறையில் நுழைந்தார். மூத்த மனைவியின் மகனை நடிகராக்கினார். முதன் முறையாக குளித்தலையிலிருந்து சட்டமன்றத்துக்கு 1957 தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று, ஒரு மகனை துணை முதல்வராக்கினார், மற்றொரு மகனை மத்தியில் அமைச்சராக்கியுள்ளார். மருமகனை மத்திய அமைச்சராக்கினார். மருமகன் காலத்திற்குப் பின், அவர் மகனுக்கு அப்பதவியைப் பெற்றுத் தந்தார். மனைவியையும் துணைவியையும் தொழிலதிபராக்கினார். அனைத்திற்கும் மேலாக, மணி மகுடமாக, துணைவியின் மகளை மாநிலங்களவை உறுப்பினரும் ஆக்கினார்.

யாரிந்த மகள்?

பிறக்கும் போது, மருத்துவமனையில் அநாதை; இந்த பிராமணரின் மகள் என்று ஜவஹரிஸம் என்ற பத்திரிக்கையில் எழுதிய எம்.கே.டி. சுப்பிரமணியம் இவரால் சிறையில் தள்ளப்பட்டார். இன்றோ, அநாதை அன்பு மகளாகி விட்டாள். உண்மையைச் சொன்ன எம்.கே.டி. சுப்பிரமணியம் அநாதையாக்கப் பட்டார்.

இவர் பிராமணர் என்பதை செப்பேடு சொல்கிறது. அப்படி என்ன சொல்கிறது?

நாலு முகத்திலே இருக்கிற நாகபாசத்தாரும் (வரி 9)
......................................................................................
......................................................................................
வட முகம் தென் முகம் கீழ் முகம் மேல் முகம்
நாலு முகத்திலே இருக்கிற நாக பாசத்தாரும் (வரி 46,47)

(தமிழக செப்பேடுகள் தொகுதி 1, தமிழ் நாடு தொல்லியல் துறை, 2005, பக்.182-185)

இந்தச் செப்பேட்டின் படி, நாகபாசத்தார் முகத்தில் தோன்றியவர்கள். இந்த //தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கத்தை// ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்த இந்த உயர்ந்த பிராமணரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்.

இந்த பிராமணர் அவ்வப்போது, நான் காலில் தோன்றியவன், காலில் தோன்றியவன் என்று அங்கலாய்ப்பார். இதைப் பார்க்கும் போது, நாஞ்சிலார் என்று திராவிட இயக்கத்தினரால் அன்போடு அழைக்கப்படும் நாஞ்சில் மனோகரன் அவர்களின் கருவிலே குற்றம் என்ற சொற்றொடரின் பொருள் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது. கேட்பதற்கு அவரில்லை; நாமும் கருணாநிதியில்லை. //இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க, என்னால் மட்டுமே முடியும் என்று ராஜீவ் காந்தி சொன்னார், அப்போது மூப்பனார் உடனிருந்தார்// என்று இறந்தவர்களை கனவிலும் நனவிலும் சாட்சிக்கு அழைக்கும் சர்வ வல்லமை கருணாநிதிக்கு மட்டுமே வாய்க்கப் பெற்றுள்ளது, நம் போன்ற எளியவர்களுக்கு இல்லை.

//இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது.//

எந்த உண்மை? திராவிடத்தின் உண்மையா? தமிழின் உண்மையா? பதவிகளை ஆக்ரமிக்கும் உண்மையா? முகத்தில் தோன்றியவரின் உண்மையா?

பாவம் பிரும்மனுக்கு நான்கு முகம். கருணாநிதிக்கு எத்தனை முகமோ?

'எண்ணிப்பார்க்க' முடியலடா சாமி....

Read 4059 times
Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 06 August 2014 09:57

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment