×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

யாக்கூப் மேமன் தேசத் துரோகி - கருணைக்கு அருகதையற்றவன்

Thursday, 30 July 2015 00:00 Written by  தமிழ்நேசன் font size decrease font size decrease font size increase font size increase font size

1993 மும்பை குண்டு வெடிப்புகளை நாம் இன்னும் மறக்க முடியாது. திட்டமிட்டு தொடர்ச்சியாகப் பல இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்துப் பல உயிர்கள் பலியாகவும், பலர் நிரந்தர ஊனமடையவும் காரணமான இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியவன் தாவூது இப்ராகிம் என்ற சர்வதேச பயங்கரவாதி. தாவூது தன் அடியாளான டைகர் மேமன் என்பவன் மூலம் செய்தான் என்ற குற்றச்சாட்டையும், இந்த குண்டு வெடிப்பு இந்தியக் கள்ளக் கடத்தல்காரர்களான ஹாஜி அகமது, ஹாஜி உமர், தாரி ஜாலியாவாலா ஆகியோரின் நிதி உதவியுடனும் பாகிஸ்தானிய கள்ளக் கடத்தல்காரன் தாவூது ஜட் என்பவனது உதவியுடனும் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

உச்சநீதிமன்றத்தில் வழக்காடி குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பினைப் பெற்ற போதும் மும்பை போலீஸ் தாவூது இப்ராஹிம், டைகர் மேமன் ஆகிய முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்ய இயலவில்லை. அவர்கள் பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ பாதுகாப்பில் உள்ளதாகத் தகவல். சிக்கிவிட்ட யாகூப் மேமன் என்ற குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு அது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் யாகூப் மேமன் அப்பாவி, அவனது அண்ணன் செய்த பாவத்துக்கு அவன் எப்படிப் பொறுப்பாவான், அவன் விரும்பியிருந்தால் பாகிஸ்தானிலோ அரபு நாடுகளிலோ ஒளிந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாமே என்றெல்லாம் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.

yakub

இவர்கள் இப்படித்தான் என்று நமக்குத் தெரியும். நாம் சற்று விவகாரத்தின் விவரம் பார்ப்போம்.

1992 டிசம்பர் 6ஆம் நாள் ராமஜென்ம பூமியில் நடந்த பேரணியின் போது அங்கே கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருந்த கும்மட்டம் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதனால் மாநில அரசு உச்சநீதிமன்றத்துக்கு அளித்த உறுதிமொழியை காப்பாற்ற இயலாது போனதால் சிவசேனைத் தொண்டர்களே கும்மட்டத்தை இடித்தனர் என்ற ஒரு பேச்சு பரப்பப்பட்டது. அப்போதைய சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே ”சிவசேனையினர் இதைச் செய்தார்கள் என்பது உண்மையானால் நான் அது குறித்துப் பெருமைப்படுகிறேன்” என்று சொன்னார். பலரும் இந்நாட்டின் இதிஹாச புருஷன் இராமபிரானுக்குக் கோவில் கட்டுவதற்குத் தடை ஒன்று நீங்கியதாகவே மகிழ்ந்தனர்.

இந்தக் கும்மட்ட இடிப்பின் காரணமாக மும்பை நகரில் ஹிந்துக்களைக் குறிவைத்துத் தாக்கிக் கலவரங்கள் நடைபெற்றன. 1992 டிசம்பர் 6 முதல் 10 வரையிலும் பிறகு 1993 ஜனவரி 6 முதல் 20 அரையிலும் கலவரம் நடந்தது. ஆயுதம் தாங்கிய முஸ்லிம் கும்பல்கள் தாக்குதலுக்குத் தயாராகவே களாமிறங்கினர். முஸ்லிம் பெரும்பான்மைமிக்க பெண்டி பஜார் போன்ற இடங்களில் காவலர்களைக் கொடூரமாகத் தாக்கினர். காவல்நிலையங்களைச் சூறையாடினர். ஹிந்துக்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கியதும் நிலைமை கட்டுமீறிச் செல்வதாகக் கூறி காவல்துறை தன் இரும்புக் கரத்தை நீட்டியது. நிலைமை கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது என்று காவல்துறை அறிவித்துக் கொண்டிருந்த போதே 11 ஹிந்துவீடுகள் அதே பகுதியில் கொளுத்தப்பட்டன. கோவில் ஒன்றும் இடிக்கப்பட்டது. ஹிந்து இளைஞர்கள் பதிலடித் தாக்குதல் தொடுத்தனர். அப்பகுதியில் உள்ள ஒரு மதரசா கட்டிடம் இடிக்கப்பட்டது. முஸ்லிம்களால் பேருந்துகள், இதர வண்டிகள் கொளுத்தப்பட்டன. தேவனர் பகுதியில் இரு காவலர்களை முஸ்லிம்கள் வெட்டிச் சிதைத்துக் கொன்றனர். பைகுல்லாவில் ஒரு காவலர் கொடூரமாகக் கத்தியால் குத்தியே கொல்லப்பட்டார். கலவரத்தைத் தடுக்க களமிறங்கிய போலீஸாரும் அதிகாரிகளும் காயமடைந்தனர்.

மஹிம் பகுதியில் புல்லட்டில் சென்று கொண்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகளை 400 - 500 பேர் கொண்ட முஸ்லிம் கும்பல் வளைத்துத் தாக்கியது. சோடா பாட்டில்கள் எறிந்தும், சரளைக் கற்களை வீசியும் காவல்துறையினரைத் தாக்கியுள்ளனர். எல்ஜே ரோடு பகுதி முழுவதும் உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகள் சாலை மீது போர்த்தப்பட்டது போலக் காட்சியளித்தது. அல்லாகு அக்பர் என்ற கோஷத்துடன் கற்களையும் சோடா பாட்டில்களையும் வீசியபடி சுற்றி வந்த கலவரக்காரர்களை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இரு முஸ்லிம் இளைஞர்கள் காயமடைந்தனர். 7 காவலர்கள் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏழு நாட்களுக்குப் பின் நினைவு திரும்பப் பெற்றனர். ஜோகேஸ்வரி பகுதியில் கலவரக்காரர்களைத் தடுக்க முயன்ற ஒரு காவலர் தலையில் குண்டு பாய்ந்து இறந்தார். அங்கும் அருகிலும் உள்ள முஸ்லிம் பகுதிகளில் இருந்து ஏராளமான கத்திகள், சோடா பாட்டில்கள், அரிவாள்கள், குறுவாட்கள், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.

mumbai riots

மௌலானா சௌகத் அலி ரோடு பகுதியில் காவல்நிலையத்தை ஒரு முஸ்லிம் கும்பல் சூறையாடியது. 4000 - 5000 பேர் அங்குள்ள பெரிய சாலைகள், சிறு தெருக்கள் முட்டுச்சந்துகள் வரை பரவி நின்று வீடுகள், வாகனங்களைத் தாக்கிச் சேதப்படுத்தினர். மல்ஹாரி அஹிரே என்ற காவலர் பல முறைகள் கத்தியால் குத்தப்பட்டும் பல்வேறு வெட்டுக்காயங்களுடனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரோட்டில் கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்களையும் இவர்கள் தாக்கினர். போலீஸ் வேறு வழியின்றி துணை ஆய்வாளர் பவார் என்பவர் தலைமையில் துப்பாக்கிச் சூடு நடத்திக் காவலரை மருத்துவமனை கொண்டு சேர்த்தது. காவலர் அஹிரே உயிர் பிழைத்தது அதிசயமே என்று மருத்துவர்கள் கூறினர்.

மறுநாள் மேலும் 33 பகுதிகளுக்குக் கலவரம் பரவியது. காவல்துறை துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்திக் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றது. இதில் 11 ஹிந்துக்கள், 31 முஸ்லிம்கள் இறந்தனர் என்பது அரசுத் தகவல். இராணுவம் கொடி அணிவகுப்பு நடத்திய போதும் காவல்துறை இராணுவத்தை ஒதுங்கி இருக்குமாறு கூறிவிட்டுத் தானே முன்னின்று கலவரத்தை அடக்கச் செயல்பட்டது. ஆனால் கலவரக்காரர்களில் பலருக்கும் காவலர்கள் மீதான அச்சம் போய்விட்டிருந்தது. இராணுவம் வரவில்லை என்றது கூடுதல் துணிவைக் கொடுத்தது. தாராவி, தேவனர், சாகிநாகா, பார்க் சைட் ஆகிய பகுதிகளில் கோவில்கள் தாக்கி சூறையாடப்பட்டன. பதிலுக்கு தாராவியில் இரண்டு மசூதிகள், மஹிம் பகுதியில் ஒரு மதரசா, தாதரில் ஒரு தர்ஹா ஆகியன தாக்கப்பட்டன. காவல்துறையினர் எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் கடும் நடவடிக்கைகளை எடுத்து 72 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திக் கலவரக்காரர்களைச் சமாளித்தனர்.

சுலைமான் பேக்கரி என்ற கடையின் மொட்டை மாடியில் இருந்து ஒரு 10 பேர் கொண்ட முஸ்லிம் கும்பல் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டது. போலீஸார் உடனடியாக பக்கத்திலிருந்த கட்டிடம் வழியாக மேலேறினர். அங்கே சுலைமான் பேக்கரி கட்டிடத்தின் தண்ணீர்த் தொட்டிக்குப் பின்னால் ஒரு கும்பல் ஒளிந்திருப்பதைக் கண்டனர். காவல்துறையினர் எச்சரிக்கை அளித்து சரணடையச் சொன்னார்கள். ஆனால் தாக்கியவர்கள் மீண்டும் சுடத் தொடங்கவே போலீஸார் அவர்களை நோக்கிச் சுட்டனர். ஆனால் ஏகே47 ரக துப்பாக்கிகள் கொண்டு சுட்ட கும்பலுக்கு முன்னால் தாக்குப் பிடிக்க போலீஸால் முடியவில்லை. மும்பை கமிஷனர் ஆர்.டி. தியாகி சிறப்புக் காவல் படையுடன் வந்து பேக்கரியைத் திறக்கச் சொன்னார். ஆனால் உள்ளிருந்து சோடா பாட்டில்கள், அமிலம் நிரப்பிய பல்புகளை வீசியது கலவரக்கார கும்பல். போலீஸ் சிறப்புப் படை கடையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய 15 பேர் முதலில் கத்திகள், அரிவாள்கள், இரும்புக் கம்பிகளால் தாக்கினர். அடுக்கடுக்காக வந்த கும்பலைக் கண்டு போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த, கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு 78 முஸ்லிம் கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Muslim

மும்பையின் பல பகுதிகளில் முஸ்லிம் கலவரக்காரர்களால் 16 ஹிந்துக்கள் கொல்லப்பட்டு பலர் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். ஒரு ஹிந்துக் குடும்பம் வீட்டுக்குள் வைத்துப் பூட்டப்பட்டு வீடு கொளுத்தப்பட்டது. ஊனமுற்ற பெண் ஒருவர் உட்பட மூவர் எரிந்து சாம்பலாயினர். சிவசேனையினர் ஹிந்துக்களைக் காப்பாற்றக் களமிறங்கினர். ஹிந்துக்கள் பதிலடித் தாக்குதல் தொடுத்து ஒரு மதரசாவில் இருந்த கலவரக்காரர்களைப் பிடித்தனர். மதரசா  கட்டிடம் தாக்கப்பட்டவுடன் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. 6 ஹிந்துக்கள் மாண்டனர். ஆனால் அருகிலே ஒரு மசூதியும், தர்ஹாவும் தாக்கப்பட்டன. முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளில் போலீஸார் சோதனையிட்டு அமிலம்
நிரப்பிய பல்புகள், பெட்ரோல் குண்டுகள், மண்ணெண்ணை நிரம்பிய கேன்கள், கத்திகள், அரிவாள்கள், நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். போலீஸ் கமிஷனரின் கார் மீது முஸ்லிம் கலவரக்காரர்களால் குண்டு வீசப்பட்டது. கமிஷனர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இராணுவம் கலவரத்தை அடக்க அழைக்கப்பட்டது.

மொத்தமாக இந்தக் கலவரங்களில் 300க்கும் அதிகமான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 500 முஸ்லிம்கள் இறந்தனர்.

இந்நிலையில் நிழல் உலகத் தீவிரவாதி தாவூது இப்ராஹிம் முஸ்லிம்கள் துப்பாக்கிகளும் கையெறி குண்டுகளும் வைத்துக் கொள்ளவேண்டும், ஹிந்துக்களைத் தாக்கி ஒடுக்க வேண்டும் என்று சொன்னான். இவனும் இவனது தம்பி அனீசும் டைகர் மேமன், முகமது தோசா, முஸ்தபா தோசா ஆகிய கள்ளக்கடத்தல்காரர்களுடன் திட்டம் தீட்டினர். குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா பகுதிகளில் இருந்து பல முஸ்லிம் இளைஞர்களை துபாய் வழியாக தாவூது பாகிஸ்தானுக்கு ஆயுதப் பயிற்சிக்குக் கொண்டு சென்றான். எத்தனை பேர் என்ற கணக்கு தாவூதிடம் இருக்கும் ஆனால் அரசிடம் ஒரு தோராய எண்ணிக்கை கூட இல்லை. தாவூது இந்தியாவுக்குள் பயங்கர ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வந்தான். குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் தாவூதின் படைவீரர்களாக ஆயுதங்களை விநியோகிக்கவும், வெடிகுண்டுகளைப் பதுக்கவும் செய்தனர்.

தாவூது பாய் எங்களை ஹிந்துக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தித் தாக்க ஆணையிட்டார். காவல்துறையும் ஹிந்துக்களும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களைக் கொன்று பெண்களை அவமதிக்கிறார்கள் என்று சொன்னார் தாவூது பாய். இதற்காக நாங்கள் தயாராக வேண்டும் என்றும் எங்களை ஆயுதப் பயிற்சிக்காக பாகிஸ்தான் அனுப்புவதாகவும் சொன்னார். அங்கே துப்பாக்கி சுடவும், குண்டுகள் வெடிக்க வைக்கவும் எங்களுக்குப் பயிற்சி தரப்படும் என்றார். ஹிந்துஸ்தானத்தின் முக்கியத் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அதிக அளவில் ஹிந்துக்களையும் கொன்று அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று தாவூது பாய் சொன்னார்” என்பது குட்டா என்கிற சலீம் மிரா ஷேக் என்ற அடியாளின் வாக்குமூலம்.

1993 ஜனவரியில் நூற்றுக்கணக்கான ஏகே47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், மூட்டை மூட்டையாக வெடிகுண்டுகள், டன் கணக்கில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகள் 300 வெள்ளிக்கட்டிகள் ஆகியவற்றைக் கடத்தி அனுப்பினான். ஜனவரி 9 1993 அன்று காவல்துறையினரைத் தாக்கி மும்பையில் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஒரு கும்பல் ஈடுபட்டது. அப்போது அரசு எந்திரம் முழுவதுமாக மும்பை கலவரம் வேறு ஊர்களில் பரவாமல் தடுக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்க ஆளில்லாத ராய்கட் மாவட்டக் கடற்கரைகளில் சத்தமின்றி மீன்பிடிப் படகுகளில் ஆயுதங்களை இறக்கினார்கள். பல லாஞ்சுகளில் ஆயுதங்கள் வந்து இறங்கின. நாங்கள் பலர் அதை இரண்டு லாரிகளில்
ஏற்றினோம். அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றோம். வழியில் போலீஸ் மடக்கியது. வெள்ளிக்கட்டிகள் கொண்டு போகிறோம் என்று சொல்லி 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள 7 வெள்ளிக்கட்டிகள் கொடுத்தோம். அதன்பிறகு போலீஸ் எங்களைப் போகவிட்டது. அங்கே ஆயுதங்களை ஒரு லாரியில் ஏற்றி அப்தில் கயூம் சஜ்ஜனி, மோட்டா என்கிற அமீர் ஜாடியா, பாபு மதராசி ஆகியோர் குஜராத்துக்குக் கொண்டு போனார்கள். மீதமிருந்த குண்டுகள், துப்பாக்கிகள், வெள்ளிக்கட்டிகளை நாங்கள் அகர்வாட் கிராமத்தில் ஷபிர் குரேஷி என்ற அடியாளின் வீட்டில் பதுக்கினோம்” என்பதும் சலீம் மிரா ஷேக் போலீசிடம் சொன்னது.

ammunition dawood

குஜராத்துக்குக் கொண்டு போன வண்டி அங்கே பரூச் பகுதியில் சன்ஸ்ரோட் கிராமத்தில் முஸ்தஃபா தோசாவின் அடியாள் ஹாஜி ரஃபீக் கபாடியாவின் குடோனில் இறக்கப்பட்டது. அங்கே ஆயுதங்கள் அனைத்தும் முப்பது தனித்தனிப் பைகளில் பிரித்துக் கட்டப்பட்டன. மறுநாள் முஸ்தஃபா தோசா துபாயில் இருந்து ரஃபீக்குக்கை அழைத்து ஒரு நூறு ரூபாய் நோட்டின் எண்ணைக் கொடுத்துள்ளான். ரஃபீக் அங்கலேஸ்வர் என்ற ஊருக்குச் சென்றதும் அங்கே ஒரு கும்பல் அவனிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் காட்டியிருக்கிறது. எண்கள் ஒத்துப் போனதும் அவர்களது ஸ்வராஜ் மாஸ்டா வண்டியை எடுத்துக் கொண்டு கிராமத்துக்கு வந்த ரஃபீக் 46 ஏகே 56 துப்பாக்கிகள், 100 கையெறி குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை அதில் ஏற்றிக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டான்.

சில நாட்கள் கழித்து தோசா மீண்டும் ரஃபீக்கை அழைத்து பரூச்சில் ஒரு தொலைபேசி எண்ணை அழைக்கச் சொல்லியிருக்கிறான். ஒரு ஓட்டலுக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். அங்கே சலீம்பாய் என்பவன் ரஃபீக்குடன் வந்து தன் மாருதி ஓம்னியில் 9 ஏகே56 துப்பாக்கிகள், 100க்கும் அதிகமான கையெறி குண்டுகள், ஜெலட்டின், மற்றும் பல வெடிமருந்துகளை ஏற்றிக் கொண்டு போயிருக்கிறான். அங்கே பலருக்கும் இந்த ஆயுதங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. சஞ்சய் தத்துக்கும் இவர்களே தாவூதின் தம்பி அனீஸ் இப்ராகிமின் உத்தரவின் பேரில் ஏகே56 துப்பாக்கி, குண்டுகள், மற்றும் வெடி பொருட்களை அளித்துள்ளனர்.

இதில் யாக்கூப் மேமனின் பங்கு என்ன?

 • இந்த ஆயுதக் கடத்தலுக்கான நிதி விவகாரங்களை முழுமையாக கவனித்துக் கொண்டது யாக்கூப் மேமன்.
 • தன் அண்ணன் அயூப் மேமனின் தேஜாரத் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் சந்தேகம் வராதவாறு பணப்பட்டுவாடா செய்தான்.
 • ஆயுதப் பயிற்சிக்குப் பாகிஸ்தான் அனுப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து, பயண ஏற்பாடுகளைச் செய்தான். துபாயிலும் பாகிஸ்தானிலும் அவர்கள் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்தான்.
 • ஆயுதங்கள் இந்தியாவுக்குள் வந்தது, அவற்றைப் பிரித்துக் கொண்ட கணக்குகள், பதுக்கிய இடங்களுக்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை யாக்கூப் தான் ஒருங்கிணைத்தான்.
 • குண்டு வைப்பதற்கான மோட்டார் பைக்குகளையும், அடியாட்கள் தப்பிச் செல்வதற்கான வண்டிகளையும் வாங்கித் தந்தான்.
 • அல்டாஃப் அலி சையது, அம்ஜதலி மெஹர்பக்ஷ் ஆகியோரிடம் ஆயுதங்களைப் பதுக்கி வைக்கச் சொல்லிப் பிறகு அதை வேறிடம் மாற்ற ஏற்பாடு செய்தான்.

12 மார்ச் 1993 வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் 13 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்தக் குண்டு வெடிப்பில் 300க்கும் அதிகமானோர் உடனடியாக இறந்து போனார்கள், 1400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றிச் சிலர் இறந்தனர். பலருக்கு நிரந்தர ஊனங்கள் ஏற்பட்டு வாழ்வில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தனர். பலரால் முன் போலப் பணிக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றவோ, தொழில் இலட்சியங்களை எட்டவோ உழைக்க முடியவில்லை. பொருளாதார ரீதியிலும் மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனார்கள்.

இதில் முன்னாள் மஹாராஷ்டிர முதல்வர் ஷரத் பவார் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்லி சில முஸ்லிம் பகுதிகளின் பெயரைச் சேர்த்து குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று பொய் சொன்னதையும், தமிழர் மராட்டியர் பிரச்சினையால் விடுதலைப்புலிகள் குண்டு வைத்தனர் என்று புளுகியதையும் ஒப்புக் கொண்டார். அமைதியை ஏற்படுத்தவே அப்படிச் சொன்னாராம் பவார். ("To keep the peace, I misled people on '93 blasts: Pawar". The Indian Express (India). 12 August 2006.)

இந்நிலையில் நூற்றுக்கணக்கானோர் சாவுக்குக் காரணமான மேமன் குடும்பம் துபாய் வழியாக பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றது. அங்கே ஐஎஸ்ஐ அமைப்பின் பாதுகாப்பில் இருந்தனர். ஐஎஸ்ஐ அமைப்பிடம் கைதி போலிருப்பதை விரும்பாத யாக்கூப் இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் தனக்கு பெரிய அளவில் தண்டனை இல்லாமல் போக வழி உண்டா என்று விவாதிக்க தன் வக்கீல் நண்பர் ஒருவரைப் பார்க்க நேபாளத் தலைநகர் காட்மாண்டு வந்தான். இதை அறிந்த ’ரா’அமைப்பு அவனைக் காட்மாண்டுவில் பிடித்தது. பிரதமர் அலுவலகத்தில் உளவுத்துறை விவகாரங்களை ஒருங்கிணைத்த மூத்த அதிகாரி பகுகுடும்பி ராமன் என்பவர் தலைமையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராமன் யாக்கூபிடம் பேசி அவனது குடும்பத்தினர் பிறரையும் இந்தியா வந்து சரணடையச் செய்யச் சொன்னார். அப்படிச் செய்தால் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் சொல்லப்பட்டது. தில்லியில் போலீஸ் முறைப்படி யாக்கூபைக் கைது செய்தது. ராமன் போட்ட ஒப்பந்தம் யாகூப் தன் குடும்பத்தினரிடம் பேசி அவர்களையும் நம் அரசிடம் சரணடையச் செய்யவேண்டும் என்பதே. யாகூப் பிடிக்கப்பட்டு 10 நாட்களில் ராமன் ரிடையர் ஆகிவிட்டார்.

raw logo1

யாக்கூப் தூக்கில் போடப்படக் கூடாது என்று ராமன் சொன்னதாக அவர் இறந்த பிறகு சில பத்திரிக்கையாளார்கள் கூறுகின்றனர். ஆதாரமாக ராமன் எழுதிய கட்டுரை ஒன்றையும் வைக்கின்றனர். யாக்கூப் தூக்கில் போடப்படக்கூடாது என்பது ராமனின் வாதமல்ல. நாம் குடும்பத்தைச் சரணடைய வை உன்னைப் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னோமே....அதனால் நானாக இருந்திருந்தால் யாக்கூபை தூக்குக்கு அனுப்ப ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றிருக்கிறார் ராமன். ஆனால் இதைச் சொல்லி மற்ற குற்றவாளிகளும் தப்பிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் இதைச் சொல்ல விரும்பாமல் பேசாமல் இருந்துவிட்டார் அந்த நல்ல போலீஸ்காரர். அவர் இறந்த பிறகு அவரிடம் பேசியது ஈமெயில் வாங்கியது என்று ஊடகத்தார் கட்டுரை வரைகிறார்கள்.

தூக்குத் தண்டனையை எப்படியாவது தாமதப்படுத்த வேண்டும் என்று பல நடுநிலை, செக்யூலர், மற்றும் தேசவிரோத சக்திகள் அறிவுஜீவிகள் போர்வையில் கடும் முயற்சியை மேற்கொண்டன. 

இந்த விவகாரத்தில் அறிவு ஜீவிக்கும்பல் பேசியவற்றைக் கேட்டால் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கோபம் கொள்வார்கள் அல்லது நொந்து போய்விடுவார்கள். அறிவு ஜீவிகளின் வாதங்களையும் நமது பதில்களையும் பார்ப்போம்.

யாக்கூப் போலீசுடன் விசாரணைக்கு ஒத்துழைத்தான், அதனால் அவனைத் தூக்கில் போடக்கூடாது.

போலீசிடம் வசமாகச் சிக்கிக் கொண்ட யாக்கூப் விசாரணைக்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் ஒத்துழைத்தான். தானாக முன்வந்தா செய்தான்?

யாக்கூப் பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால் இந்தியப் போலீசிடம் சரணடைந்தான். அதனால் மன்னிக்கப்படவேண்டும்.

யாக்கூப் சரணடையவில்லை. நேபாளத்தில் உளவுத்துறையினரால் பிடித்துக் கொண்டு வரப்பட்டுக் கைது செய்யப்பட்டான்.

யாக்கூபின் அண்ணன் இப்ராகின் என்ற டைகர் மேமன் தானே முக்கியக் குற்றாவாளி? யாக்கூப் சும்மா கூட இருந்தான். அவ்வளவுதான்.

257 பேரின் சாவுக்கும் 1000க்கும் அதிகமானோரின் வாழ்வாதாரம் அழிந்ததற்கும் துணை நின்றதோடு உதவிகளும் செய்தான் யாக்கூப். இது மன்னிக்கத்தக்க குற்றமல்ல.

யாக்கூப்பின் கருணை மனு மீது ஜனாதிபதி ஒரே நாளில் முடிவெடுத்துவிட்டார். 

ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கருணை மனுவை மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டிருந்தால் வேறென்ன செய்வார் ஜனாதிபதி?

சட்ட நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததால் யாக்கூப் தூக்கில் போடப்படக்கூடாது.

உச்சநீதிமன்றம் சட்ட நடைமுறைகள் மிகச் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளன என்று சொல்லிவிட்டது.

யாக்கூபின் பிறந்தநாளன்று அவனைத் தூக்கில் போடுகிறார்களே! இது நியாயமா?

இவர்கள் வைத்த குண்டு வெடித்ததில் இறந்தவர்கள் எத்தனை பேருக்கு அன்றே பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட தினங்கள் இருந்திருக்கும்? இதையெல்லாம் பார்த்தா குண்டு வைத்துக் கொன்றார்கள்?

200 பேர் அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், நடிகர்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர் யாக்கூபுக்குக் கருணை காட்டவேண்டும் என்று ஒரு மனு கொடுத்துள்ளனர்.

துஷார் தேஷ்முக் என்பவரது தாயார் 1993 குண்டு வெடிப்பில் மரணமடைந்தார். இவர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டும் கையெழுத்து வாங்கி குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று ஒரு மனு கொடுத்துள்ளார். 1600 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதை ஏன் அறிவு ஜீவிகள் யாருமே பேசவில்லை?

யாக்கூப் மேமனைத் தூக்கில் போட்டால் அரசு தன் உளவு அமைப்பு கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத குற்றத்துக்கு ஆளாகும்.

நாட்டில் அனைவருக்கும் நல்வாழ்வு என்ற அரசியல் சாசன வாக்குறுதியைக் குண்டு வெடிப்பில் இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் விஷயத்தில் காப்பாற்றத் தவறியதால் தான் பரிகாரமாக நல்வாழ்வைச் சிதைத்த கொடூரர்களுக்கு அரசு தண்டனை அளிக்கிறது. இதில் குற்றவாளிகளுக்குக் கருணை காட்ட எள்ளளவும் இடமில்லை.

இதற்கும் மேலாக நீதிமன்றத்தில் நேற்றிரவு ஒரு மனு தாக்கல் செய்து அதை நள்ளிரவில் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். யாக்கூப் மேமனின் வக்கீல் ஆனந்த் க்ரோவர் யாக்கூப் ஏன் தூக்கில் தொங்கக்கூடாது என்பதைப் பேசாமல் மோடி அரசு யாக்கூபைத் தூக்கில் போடுவதற்குத் துடிக்கிறது அதை நிறுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதிலேயே தெரிகிறது இவர்களது அரசியல் உள்நோக்கம். அனைத்துச் சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றவேண்டும் என்று ஒரு மேல் முறையீடு. அதுவும் தள்ளுபடியானதும் அதற்கு மற்றொரு முறையீடு. கருணை மனு தள்ளுபடியானால் ஜனாதிபதி சரியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று அவருக்கு நீதிமன்றம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று ஒரு மனு. 

இந்தக் கூத்துக்கள் போதாதென்று இறந்து போன அதிகாரியின் திரிக்கப்பட்ட கருத்து முதல், காந்தியச் சிந்தனை நூல்கள் வரை மேற்கோள் காட்டிப் பேசும் அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள், வழக்காடாத வக்கீல்கள், பலத்த பாதுகாவல்களோடு வாழ்ந்து கொண்டு கொலைகாரர்களை மன்னிக்கச் சொல்லும் பெரிய மனசுக்காரர்கள் இவர்கள் அனைவருக்கும் நாம் சொல்ல விழைவது ஒரே ஒரு கருத்து.

குற்றம் செய்பவர்களை விடவும் மோசமானவர்கள் குற்றத்தை ஆதரிப்பவர்கள்; அவர்களிலும் மோசமானவர்கள் குற்றத்தைக் கண்டிக்காது நிற்கும் கற்றறிந்தோர். 

ஆனால் இங்கே கற்றறிந்தோர் என்ற போர்வையில் 300 பேரைக் கொன்று 1000 பேருக்கு மேல் இயல்பு வாழ்வை இழந்து நிற்கக் காரணமான கொடுங்குற்றவாளிகளை ஆதரித்துப் பேசுவோரை மனிதகுலத் துரோகிகள் என்று சொல்வதே தகும்

நீதிமன்றம் ஆயுதக்கடத்தல், சட்டவிரோத பணப்பட்டுவாடா, ஆயுதப் பட்டுவாடா, தேசத்துக்கு எதிராக ஆயுதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது, குண்டு வைக்க ஏற்பாடு செய்தது ஆகிய குற்றங்களுக்காக யாக்கூப் மேமனைத் தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது. இவ்வளவையும் செய்தவன் அப்பாவி என்பது சூரியன் உதிக்கும் திசை மேற்கு என்று சொல்வது போன்றது. யாக்கூப் தூக்கில் போடப்பட்டது ஒரு நல்ல முன்னுதாரணம். கருணை என்பது எள் முனையளவும் இல்லாமல் குண்டு வைத்துக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மாக்கள் அமைதி காணவேண்டும். இனியும் நம் நாட்டின் மீது இப்படி ஒரு குற்றத்தை இழைக்க எவனும் அஞ்சி நடுங்க வேண்டும்.

வந்தே மாதரம்.

The man who knew too much – The Telegraph, 1 October 2006. Retrieved 2009-08-21. Archived 4 September 2009.

"1993 blasts: 98 punished, big fish still free". Hindustan Times. 22 March 2013. Retrieved 23 March 2013.

James S. Robbins (12 July 2006). "The Mumbai Blasts". National Review. Archived from the original on 24 June 2007. Retrieved 15 March 2007.

http://archive.tehelka.com/story_main28.asp?filename=Ne240307How_the_CS.asp&id=3

http://www.ndtv.com/cheat-sheet/hang-yakub-memon-demand-1993-blasts-victims-10-developments-1201660?utm_source=ndtv&utm_medium=top-stories-widget&utm_campaign=story-2-http%3a%2f%2fwww.ndtv.com%2fcheat-sheet%2fhang-yakub-memon-demand-1993-blasts-victims-10-developments-1201660

Read 2680 times
Rate this item
(5 votes)
Last modified on Thursday, 30 July 2015 14:13

1 comment

 • Comment Link venkataraman Saturday, 01 August 2015 11:58 posted by venkataraman

  I fully agree that all those who do the wrong to be punished. I also insist that those who are the root cause are still not punished. (The root cause happened on 6th Dec. 1992 and the head of the rioters are occupying ministerial posts. Shame, Shame.

  Where are our friends M/s Vaiko, Thollu, & Sri MK. Why they have not raised their voice against hanging of this fellow when they are shouting at their maximum when the LTTEs case are taken up

Leave a comment