×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
Print this page

ஷஹீத் பகத் சிங்

 jallainwallabhag

ஒரு பூங்கா, அதன் வழியே பள்ளி மாணவர்கள் ஆடிப் பாடிக் கொண்டு வந்து போகிறார்கள். ஒரு 14 வயது மதிக்கத்தக்க சிறுவன். அவன் முகத்தில் கோபமும் சோகமும் ஒரு சேரக் கொப்பளிக்கின்றன, தரையில் அமர்கிறான், பூங்கா மண்ணை அள்ளி எடுத்துத் தன் டிஃபன் பாக்ஸில் நிரப்பிக் கொள்கிறான், டிஃபன் பாக்ஸை கண்ணில் ஒற்றிக் கொண்டு பையில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். அந்தப் பூங்காவின் மண் புனிதமானது என்று அந்தச் சிறுவன் நம்புகிறான். காரணம், அந்த மண்ணில் இந்திய நாட்டின் விடுதலைப் போரில் சுடப்பட்டு இறந்த வீரர்களின் உதிரம் கலந்திருக்கிறது; 3 ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் வீழ்ந்து உயிர் துறந்த மண் அது. சுதந்திர யுத்தம் முடிவடையவில்லை, அது நடந்து கொண்டு தான் இருந்தது. அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியும், அவர்களின் அரக்கத்தனமான கொடுமைகளும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்தன.

 

bhagathsigh martryshall jalinwalabhagjallainwallabhag deaths

அமிர்தசரஸின் ஜலியான்வாலா பூங்கா - 1919ம் ஆண்டு - சுதந்திரம் கோரிய நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை ஆங்கிலேய போலீஸார் சுட்டுத் தள்ளிய அதே ஜலியான்வாலா பாக். அங்கிருந்த மண்ணைத் தன் டிஃபன் பாக்ஸில் நிரப்பிய சிறுவன் தான் நம் கதையின் நாயகன் பகத் சிங். பிளவு படாத பாரதத்தின் பஞ்சாப் மாகாணத்தின் லயல்புர் மாவட்டத்தில் உள்ள பங்கா என்ற ஊரில் - இது இன்று பாகிஸ்தானத்தில் இருக்கிறது - விவசாயிகள் குடும்பத்தில் 1907ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அன்று பிறந்தார் பகத் சிங். சீக்கியர்கள் குடும்பம். பகத்சிங்கின் பாட்டனார் அர்ஜுன் சிங், சீர்திருத்த இயக்கமான “ஆர்ய சமாஜ்” கொள்கையில் ஆர்வம் கொண்டவர், இந்திய தேசிய காங்கிரஸின் போக்கை ஊன்றிக் கவனித்து வந்தார். பகத் சிங்கின் தந்தையாரான கிஷன் சிங் :”கதர் பார்ட்டி” என்ற அமைப்பில் உறுப்பினர். பாரத நாட்டிலிருந்து ஆங்கிலேயர்கள் ஆட்சியை அப்புறப்படுத்த அமெரிக்காவில் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலை தூக்கிய புரட்சி இயக்கம் தான் இந்த “கதர் பார்ட்டி”

 bhagat-singh small

பகத் சிங்கிற்கு சிறு வயது முதலே தேசபக்திச் சுடர் கொழுந்து விட்டெரிந்ததை நாம் முன்பே பார்த்தோம். தேச பக்தி, சீர்திருத்தம், தேச விடுதலை ஆர்வம் ஆகியன அவரது பரம்பரைச் சொத்தாக வாய்த்திருந்தன.

 

லாஹோரில் DAV கல்லூரியில் படித்தார் பகத் சிங். அப்போதே பாய் பரமானந்த் என்ற தீவிர தேச பக்தரின் நட்பு பகத் சிங்கிற்குக் கிடைத்தது. ஜலியான்வாலாபாக்கின் கொடுமை அவர் உள்ளத்திலிருந்து மறைய மறுத்தது. மாணவர் சங்கம் அமைத்து இளைஞர்களை ஈர்த்தார். காங்கிரசிலும் சேர்ந்தார்; ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி பிரகடனம் செய்த போது, பகத்சிங் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு விடுதலைப் போரில் இறங்கினார். காங்கிரசின் வேகம் பகத் சிங்கிற்குப் போதவில்லை. லாலா லஜபத்ராய் நிறுவியிருந்த தேசியக் கல்லூரியில் சேர்ந்து 1923ம் ஆண்டு படிப்பை முடித்தார். 1923 முதல் அவர் தூக்கிலிடப்பட்டு உயிர் துறந்த 1931 வரை, பகத் சிங்கின் வாழ்நாள் முழுக்க முழுக்க தாய் நாட்டின் பணியிலேயே அர்ப்பணமாயிற்று.

 

படிப்பை முடித்த பகத் சிங், தேசம் அன்று எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள நாலாபுறமும் பார்வையை செலுத்தினார். 1905ம் ஆண்டு வங்காளத்தை மத அடிப்படையில் பிளந்தது ஆங்கிலேய அரசு. அதை வங்காளப் பிரச்சினை என்று ஒதுக்காமல் இமயம் முதல் குமரி வரை தேசம் ஒரே குரலில் வங்கப் பிரிவினையை எதிர்த்தது. வங்கப் பிரிவினை 1912ல் ஒழிந்தது. இதற்காக நாடு தழுவிய அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்த காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சி பகத் சிங்கிற்குப் பிடித்தது. பின்னர் 1919ல் நிகழ்ந்த ஜலியான்வாலாபாக் படுகொலை பகத் சிங்கின் ஆவேசத்தைத் தட்டி எழுப்பியது. சந்திரசேகர ஆஸாத் போன்ற புரட்சியாளர்களின் சாகஸ செயல்கள் அவரைக் கவர்ந்தன.

 

லாஹோரில் “நவ்ஜவான் பாரத் சபா” என்ற அமைப்பை 1925ம் ஆண்டு தொடங்கினார். இளைஞர்களிடையே ஆவேசப் புரட்சி எண்ணம் ஏற்படுத்த இந்த சபா உழைத்தது. அவர் தன்னைப் போலவே நடவடிக்கைகளில் ஈடுபட்ட புரட்சியாளர் சுக்தேவ் போன்றோரையும் நண்பர்களாக்கிக் கொண்டார். புரட்சியாளர்கள் தங்கள் புரட்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதிக்காக ககோரி என்ற இடத்தில் அரசு கஜானா பணம் கொண்டு வந்த ரயிலைக் கொள்ளையடித்தார்கள். அதில் பலர் பிடிபட்டார்கள். அவர்களை சிறையிலிருந்து அதிரடியாக விடுவிக்க பகத் சிங்கும், சந்திரசேகர ஆஸாதும் முயற்சி செய்தார்கள். இது 1926ல் நடந்தது. அதே ஆண்டு தஸரா பண்டிகையின் போது லாஹோரில் குண்டு வெடித்தது. பகத் சிங் கைது செய்யப்பட்டார். ஆனால் போதிய சாட்சியம் இல்லாத நிலையில் விடுவிக்கப்பட்டார்.

 

அதே நேரம், “ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிப்பளிக்கன் அஸோஸியேஷன்” என்ற அமைப்பு பஞ்சாபில் பகத்சிங் தலைமையில் கிளை தொடங்கி ஊர் ஊராகக் கிளை பரப்ப முடிவு செய்தது. பிரச்சாரப் பணி பகத் சிங்கிடமும், படை திரட்டும் பணி ஆஸாத்திடமும் ஒப்படைக்கப்பட்டது. ஆக்ராவில் இந்த அமைப்பின் அலுவலகம் ஒன்று அமைந்தது. பகத் சிங் அங்கே பல நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளை விவரிக்கும் நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றை உருவாக்கினார். சுதந்திர பாரதம் சமதர்மக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று பகத் சிங் விரும்பினார். அரசியலில் வெளிப்படையாக ஈடுபட முடியாத நிலையில், எழுத்துப் பணியில் ஆர்வம் காட்டினார். பஞ்சாபில் வெளியான “கீர்த்தி”, “அகாலி” பத்திரிகைகளில் அவர் பல கட்டுரைகளை எழுதினார். எந்தச் சூழலையும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பயன்படுத்த முடியும் என்று அவர் நிரூபித்தார்.

 

நாடு கொந்தளிப்பில் இருந்தது; இந்த சூழலைக் கண்ட ஆங்கிலேய அரசு, “சைமன் கமிஷன்” என்ற ஒரு ஆணையத்தை விசாரிக்க அமைத்தது. அதில் பாரத நாட்டவர் ஒருவர் கூட அங்கம் வகிக்கவில்லை. எனவே காங்கிரஸ் அந்தக் கமிஷனை பகிஷ்காரம் செய்தது. ”சைமனே திரும்பிப் போ” என்று கருப்புக் கொடி காட்டி ஊர் ஊராக எதிர்ப்புத் தெரிவித்தார்கள். லாஹோரிலும் இது போல எதிர்ப்புப் பேரணி நடந்த்து. “பஞ்சாப் சிங்கம்” என்று போற்றப்பட்ட லாலா லஜ்பத் ராய் தலைமையில் மௌன ஊர்வலம் நடந்தது. ஸ்காட் என்ற போலீஸ் அதிகாரி ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தினார். ஆத்திரத்துடன் லாலா லஜ்பத் ராய் தலையிலும் பல முறை தடியால் தாக்கினான். மயங்கி விழுந்த லாலா, பின்னர் காயங்களின் தீவிரத்தினால் மரணத்தைத் தழுவினார். இதையெல்லாம் தன் கண் கொண்டு பார்த்தார் பகத் சிங்.

 

பகத் சிங்கும், ராஜ்குருவும், ஆஸாதும் சேர்ந்து ஸ்காட்டுக்கு குறிவைத்தார்கள். ஆனால் தவறுதலாக ஸாண்டர்ஸ் என்ற காவலர் கொல்லப்பட்டார். உடனடியாக பகத் சிங் லாஹோரிலிருந்து தலை மறைவாகி கோல்கத்தா சென்றார். அங்கு தனது அமைப்பின் கிளையைத் தொடங்கினார். அடக்குமுறைக் கொடுங்கோலாட்சிக்கு பாடம் புகட்ட தில்லியின் மத்திய சட்டசபையில் குண்டு வீச முடிவு செய்தார்கள் புரட்சியாளர்கள். பகத் சிங்கும், படுகேஷ்வர் தத்தும் தில்லி சென்றார்கள். 1929, ஏப்ரல் 8ம் தேதி மத்திய சட்டசபையின் தாழ்வாரத்தில் குண்டு வெடிக்கச் செய்தார்கள். புரட்சி விடுதலை முழக்கம் செய்தார்கள். பிரசுரங்களை வீசினார்கள்.

 

பகத் சிங், படுகேஷ்வர் தத் இருவரும் கைதானார்கள். இதற்கிடையில் சிலரது துரோகத்தால், சாண்டர்ஸ் கொலைக் குற்றச் சாட்டும் பகத் சிங் மீது சுமத்தப்பட்டது. பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் விசாரிக்கப்பட்டு, கொடுங்கோல் அரசு அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்த்து. இந்த்த் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியது. பகத் சிங் குழுவினரைத் தூக்கிலிடக் கூடாது என்று நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இங்கிலாந்திலுள்ள ப்ரிவி கவுன்சிலிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் புரட்சியாளர்களை தூக்கிலிட்டே ஆக வேண்டும் என்று அரசு துடித்த்து.

 

லாஹோர் மத்திய சிறையில் 1931 மார்ச் மாதம் 29ம் தேதி இரவு 7.30 மணிக்கு மூவரும் அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களது சடலங்கள் கூட உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை இரவோடு இரவாக ஃபெரோஸ்பூர் அருகே ஸட்லஜ் நதிக்கரையில் தகனம் செய்யப் பட்டன. பகத் சிங் போன்ற புரட்சி இளைஞர்கள் செய்த உயிர்த் தியாகம் தேசத்தில் ஆவேசம் ஊட்டியது. ‘’பகத் சிங்கும் அவரது நண்பர்களும் களபலி ஆனது, சுதந்திரப் போரில் வெற்றி பெற நம் ஆற்றலைக் கூட்டியது” என்று காந்தி ஒப்புக் கொள்கிறார். ‘’தேசம் வாழ்வதற்காக அவர்கள் மரணத்தைத் தழுவினார்கள்’’ என்று அஞ்சலி செலுத்தினார் அன்றைய காங்கிரஸ் தலைவர் ஜவாஹர்லால் நேரு. பகத் சிங்கின் காலகட்டத்தில் புரட்சியாளர்களின் விடுதலைப் போராட்டத்தில் பெரிய அபாயமாக இருந்தது, சில துரோகிகளின் காட்டிக் கொடுக்கும் செயல். பல புரட்சியாளர்கள் இதனால் ஆங்கிலேய போலீஸாரிடம் சிக்கி உயிர் இழந்திருக்கிறார்கள். சில துரோகிகள் ஆங்கிலேயரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி காட்டிக் கொடுத்ததும் உண்டு.

 

ஆனால் ஒரு முறை பகத் சிங்கை கைது செய்த போலீஸார் புரட்சியாளர் ஆஸாத் பற்றி பகத் சிங்கிடம் தகவல் கறக்க முயற்சி செய்தார்கள். ஆஸாத் எங்கிருக்கிறார் என்று அவர்களிடமிருந்தே சாதுர்யமாகத் தகவல் தெரிந்து கொண்டார் பகத் சிங். இதையடுத்து லக்னோவில் ஆஸாத் தலைமையில் புரட்சியாளர்களை ஒன்று திரட்ட முடிந்தது. அடுத்த கட்டப் போராட்டத்துக்கான ஆயுதங்களையும் சேகரித்து வழங்க முடிந்தது. பகத் சிங்கின் தேசபக்தி அதி தீவிரமானது தான். ஆனால் அவர் அழுவு வேலைகளை ஆதரித்ததில்லை. “வெடி குண்டுகளோ, பிஸ்டல்களோ தேசத்துக்கு நன்மை செய்யப் போவதில்லை என்பது என் திடமான நம்பிக்கை. அது விரயம் மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட. சில சூழ்நிலைகளில் அது தேவைப்படலாம், அவ்வளவு தான்” இது தான் பகத் சிங் அளித்துள்ள சேதி.

 

இளம் வயதிலேயே பொது வாழ்வில் மும்முரமாகி விட்ட பகத் சிங் தன் குடும்பத்தார் தனக்குத் திருமணம் செய்து வைத்து விடப் போகிறார்களே என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேறியதும் உண்டு. வீரத் தியாகி பகத் சிங்கின் ஆளுமை எத்தனை வியாபகமானது என்பதைக் காணும் இந்த வாசகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 

“மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது பற்றிப் பேசுகிறார்கள்; வாழ்வின் நோக்கம், இணக்கமான விதத்தில் வளர்ச்சி பெறுவது தான். மறு உலக மோட்சமல்ல வாழ்வின் லட்சியம்; மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்வதே சரி; சத்தியத்தை, சௌந்தர்யத்தை, நல்லதை தியானம் காண்பதல்ல நோக்கம்; கண்கூடாக அன்றாட வாழ்வில் நிஜமாக அனுபவிப்பதே சரி; உலக வாய்ப்பு மூலம் தான் சாத்தியம். சமுதாயத்தில் அரசியலில், தனிப்பட்ட வாழ்வில் சம வாய்ப்பு. அதுவே வேண்டும்”..

 

தூக்கிலிடப்படுவதற்கு முன் தனது தம்பி குல்தார் சிங்குக்கு சிறையில் இருந்து பகத் சிங் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இது:

 

“.... நாளை காலையில் மெழுகுவர்த்தியின் ஜோதி மங்குவதைப் போல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் ஆகியன மின்னல் கீற்றுப் போல உலகத்தையே பிரகாசிக்கச் செய்யும்....”

Read 9205 times
Rate this item
(1 Vote)
Last modified on Thursday, 09 October 2014 19:31

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Latest from சக்கரத்தாழ்வார்