ஒரு மதச்சார்பற்ற அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் கையகப்படுத்தி நிர்வாகம் செய்வது அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்கிற உண்மையை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 45-வது பிரிவின் கீழ் ஒரு கோவில் நிர்வாகத்தைச் சரி செய்து முறைப்படுத்த குறிப்பிட்ட கால அளவிற்குத்தான் செயல் அலுவலரை நியமிக்க முடியும். நிர்வாகத்தை முறைப்படுத்திய பின் சம்பந்தப்பட்டவர்களிடம் அதை மீண்டும் கொடுத்துவிடவேண்டும். ஆகவே, எந்தக் காரணத்தைக்கொண்டும் நிரந்தரமாக ஒரு செயல் அலுவலரை அரசு நியமிக்க முடியாது” என்று தெளிவாகவும் உறுதியாகவும் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் நடைமுறையில் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தைக் காணும்போது, அது மிகவும் மோசமாகவும் ஊழல் நிறைந்ததாகவும் இருப்பதை சுலபமாக உணர முடிகின்றது. ஹிந்துக் கோவில்களின் நிர்வாகத்தை அரசின் கீழ் கொண்டுவந்தது ஆங்கிலேய ஆட்சியிலேயே தொடங்கிவிட்டாலும், சுதந்திர இந்தியாவில், குறிப்பாக 1967லிருந்து திராவிட அரசுகள் பொறுப்பேற்ற பிறகுதான் ஆலய நிர்வாகம் மிகவும் சீரழியத் தொடங்கியது. கடவுள் நம்பிக்கையற்றவர்களும், இனவாதமும் நாத்திகவாதமும் புரிபவர்களும் ஆன்மீகத் தலங்களை நிர்வாகம் செய்தால் அந்நிர்வாகம் எவ்வாறு நல்லபடியாக இருக்கும்?
1967லிருந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சி புரிந்து வரும் தி.மு.க அரசும் அ.தி.மு.க அரசும், ஒருவர் மீது மற்றொருவர் ஊழல் புகார்களை அள்ளி வீசி விசாரணைக் கமிஷன்களை அமைக்கத் தவறுவதில்லை. அனைத்துத் துறைகளிலும் நடந்துள்ள ஊழல்களைப் பற்றி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வீசினாலும், அறநிலையத்துறை ஊழல்கள் பற்றி மட்டும் இரு கட்சிகளும் பேசுவதில்லை. இந்த உண்மையைச் சற்றே ஆழ்ந்து சிந்தித்தோமானால், இந்தத் துறையில் இரு கழகங்களுமே சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்து வருவது விளங்கும். கிட்டத்தட்ட 40,000 கோவில்களின் நிர்வாகத்தைத் தன் வசம் வைத்திருக்கும் அறநிலையத்துறை, இரு அரசுகளுக்கும் ஒரு காமதேனுவாக, ஒரு கற்பக விருக்ஷமாக, ஒரு அமுத சுரபியாகப் பயன்படுகிறது.
ஒவ்வொரு கோவிலிலிருந்தும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்தாலும், அவ்வருமானத்தை முறையாகக் கோவில் பணிகளுக்கோ, ஹிந்து கலாச்சார பண்பாட்டு விஷயங்களுக்கோ செலவு செய்யாமல், பொதுப்பணிகளுக்குப் பயன்படுத்துகிறது அரசு. ஆனால் கோவில் சம்பந்தமான பணிகளுக்கு, பொது மக்களிடமிருந்து நன்கொடைகள் பெறுகிறது. கோவில் சொத்துக்களையும் சரியாகப் பராமரித்து முறையாகக் குத்தகையும் வாடகையும் வசூல் செய்வதில்லை. கோவில் சொத்துக்களைப் பிற மதத்தவருக்கு குத்தகைக்கும் வாடகைக்கும் விடுகிறது. மேலும் கோவில் பணிகளை பிறமதத்தவருக்குக் காண்டிராக்ட் விடும் வழக்கமும் இருந்து வருகிறது.
கோசாலைகள், வேத ஆகம பாடசாலைகள், அன்னதானத் திட்டம், கும்பாபிஷேகம், தங்க விமானத்திட்டம், தங்கத் தேர் திட்டம், புனரமைப்புத் திட்டம் என்று எந்தத் திட்டமானாலும் அதில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. பெரும்பாலும் அனைத்துக் கோவில்களிலும் ஊழல் பெருகி வரும் நிலையில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஊழலையும் நிர்வாகச் சீர்கேட்டையும் பார்ப்போம்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று. திண்டுக்கல்லிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழனி மலைக்கு அருகே இடும்பன் மலை இருக்கிறது. பழனி மலையின் அடிவாரத்தில் படைவீடான திரு ஆவிநன்குடி கோவில் இருக்கிறது.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமாக 1021 ஏக்கர் 17 செண்ட் நிலமும், 14150.76 சதுர அடி மனையும், 62,109.00 சதுர அடி கட்டிடமும் இருக்கிறது. மேலும், ஒரு கோசாலை, ஒரு வேத ஆகம பாடசாலை, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, நாதஸ்வரம் மற்றும் தவில் கல்லூரிகள், காது கேளாதோர் பள்ளி, அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவையும் உள்ளன.
கோவிலின் நிர்வாகமும் சரி, மேற்கூறப்பட்டுள்ளவற்றின் நிர்வாகமும் சரி, முறையாக சரியாக நடக்கவில்லை என்று பொது மக்கள் மத்தியிலும் ஆன்மீக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. நிர்வாகச் சீர்கேடு இருப்பது உண்மைதான் என்பது, இது சம்பந்தமாகச் சில சமூக நல அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையிலும், தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலமும் நமக்குத் தெரிகின்றது.
மதுபானத் தலமாகிப் போன பஞ்சாமிருதத் தலம்
புராணப் பெருமை மிக்க ஒரு புனிதத் தலத்தை அதன் ஆன்மீகப் பாரம்பரியம் கெடாதவாறு பராமரிக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. அதன் அடிப்படையில் எந்த ஆன்மீகத்தலத்திலும் ஒழுக்கக்கேடான விஷயங்கள் நடப்பதை அனுமதிக்கக் கூடாது. கேளிக்கை சம்பந்தப்பட்ட சாதனங்களின் விற்பனையைத் தடை செய்ய வேண்டும். இதற்குச் சிறந்த உதாரணமாக திருப்பதி திருமலையை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் மதுபான வகைகளின் மொத்த வியாபாரம் மட்டுமல்லாது சில்லறை வியாபரத்தையும் தானே முன்னின்று நடத்தும் தமிழக அரசு, பழனி மலை இருக்கும் பகுதியில் 9 டாஸ்மாக் மதுபானக் கடைகளை வைத்திருக்கிறது. பழனி ஊரைச் சுற்றி 16 கடைகளும், அவற்றைச் சேர்த்து பழனி தாலுக்காவில் மொத்தம் 39 கடைகள் வைத்திருக்கிறது.
இதில் மலையைச் சுற்றி இருக்கும் 9 கடைகளில் ஒரு கடை பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கும் இடையே இடும்பன் மலைப் பாதைக்கு அருகிலேயே இருக்கிறது. இது பழனி மலைக்கோவிலுக்குச் சென்று விட்டு இடும்பன் மலைக்கோவிலுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இக்கடையில் மதுபானம் குடிப்பவர்கள் பக்தர்களுக்கு இடையூறுகள் செய்கிறார்கள்.
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து குறைந்த பக்ஷம் 200 மீட்டர் தொலைவில்தான் மதுபானக் கடை இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்தக் கடை இடும்பன் மலைப் பாதையிலிருந்து 50 மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது. இந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வெண்டும் என்று சொல்லி பழனி மலைக்கோவில் பாதுகாப்புப் பேரவையினர் பலமுறைப் புகார்கள் கொடுத்தும் அரசு நிர்வாகம் கேட்கவில்லை. எனவே பேரவை உறுப்பினர் திரு.செந்தில்குமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும், திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு (Writ Petition (MD) No: 402 of 2014 and M.P. (MD) No: 1 of 2014) தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்ற ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று, மனுதாரரின் விண்ணப்பத்தை ஏற்று கடையை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மாவட்ட நிர்வகம் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சொல்லப்போனால் பழனி மலையைச் சுற்றியிருக்கும் 9 கடைகளையும் அப்புறப்படுத்துவது அரசின் கடமையாகும். ஆனால் மதுபான வகைகளின் சில்லறை விற்பனையைக் கூட தானே முன்னின்று நடத்தும் ஒரு அரசு எப்படி இந்த நல்ல காரியத்தைச் செய்யும் என்று ஆன்மீகப் பெருமக்கள் மனம் நொந்துகொள்கிறார்கள்.
கோசாலை மர்மங்கள்
பொதுவாகக் கால்நடைகளைச் செல்வங்களாகவும் தெய்வங்களாகவும் மதிக்கும் பண்பாடு நம்முடையது. பசுவைத் தாய்க்கு இணையாக வைத்து கோமாதா என்று துதித்துப் போற்றுவதும், மற்ற கால்நடைகள் நமது விவசாயத்திற்கு உதவும் காரணத்தால் அவைகளைக் கொண்டாடுவதும் பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வரப்படும் பாரம்பரியமாகும். நமது கோவில்களெல்லாம் நந்தவனங்களையும் கோசாலைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தன. ஆனால் நாளடைவில் முறையான பராமரிப்பு இல்லாததாலும், அரசு இயந்திரங்களின் தலையீடுகளினாலும் ஊழல் ஆட்சிகளாலும் இன்று கோவில்கள் நந்தவனங்கள் மற்றும் கோசாலைகள் எதுவுமின்றி சீரழிந்து வருகின்றன. கோசாலைகள் இருக்கும் ஒரு சில கோவில்களிலும் அவை சரியாகப் பராமரிக்கப்படாமல் அறநிலையத்துறை அதிகாரிகளின் ஊழல் நிறைந்த நிர்வாகத்தினால் குட்டிச்சுவராகி இருக்கின்றன. அதற்குச் சிறந்த உதாரணமாக பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோவிலின் கோசாலையைக் கூறலாம்.
பழனியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீமனாம்பட்டி என்னும் ஊரில் இருக்கிறது பழனி கோவிலிற்குச் சொந்தமான கோசாலை. கோசாலை இருக்கும் கோவிலுக்குச் சொந்தமான நிலம் 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
தற்போது (மார்ச்சு 4, 2014) அங்கே ஒன்பதே ஒன்பது (9) மாடுகள் தான் உள்ளன. அந்த 9 மாடுகளில் 3 காளைகள் 6 பசுக்கன்றுகள். 3 காளை மாடுகளில் ஒரு காளை (காங்கேயம் காளை) மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டது.
இந்தக் கோசாலையைப் பராமரிக்க மட்டும் 20 பேர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆனால் கடந்த 4-ம் தேதி சென்ற போது ஒரே ஒருவர் மட்டும்தான் இருந்தார். கால்நடை அலுவலர் (Cattle Officer) திரு.திருப்பதி அவர்கள் வெளியே சென்றிருந்தார். நமது குழுவினர் கிட்டத்தட்ட 3 மணிநேரங்களுக்கு மேல் அங்கே இருந்த போதும் அவர் வரவில்லை.
அந்த இடம் மிகவும் வறட்சியாக இருந்தது. பனைமரங்கள் கூட காய்ந்திருந்தன. அவ்வூரில் குடியிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியூருக்குச் சென்று விட்டதாகத் தெரிகிறது. இருக்கும் சில குடும்பங்களும் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். 1200 அடிக்கு ஆழ்குழாய்கள் வெட்டியும் நீர் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். ஒரு இடத்தில் பாழடைந்த கிணற்றில் அடியில் சாக்கடை போல இருக்கும் ஊற்றிலிருந்து ஒரு பெண்மணி நீர் எடுத்துக்கொண்டிருந்தார். மற்றொரு இடத்தில் பஞ்சாயத்து செலவு செய்து வெளியூரிலிருந்து தண்ணீர் (சற்றே உப்பாகவும் இருக்கிறது) கொண்டு வந்து ஊரில் உள்ள சிண்டெக்ஸ் தொட்டிகளில் நிரப்ப, அதிலிருந்து ஊர் மக்கள் பிடித்துச் செல்கிறார்கள். இப்படித் தண்ணீர் கஷ்டம் மிகுந்த வறட்சியான இடத்தில் கோசாலையை வைத்திருக்கும் அறநிலையத்துறையின் அறிவை என்னவென்பது!
கோசாலையில் நமது குழுவினர் பார்த்தபோது இரண்டு தொட்டிகளில் மட்டும் தண்ணீர் இருந்தது. மாடுகளைக் குளிப்பாட்டுவீர்களா என்று கேட்டபோது, கட்டியிருக்கும் மாடுகளை மட்டும் குளிப்பாட்டுவோம் என்று ஏதோ பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காகப் பதில் சொன்னார் அந்தப் பணியாளர். அங்கேயிருந்த 9 மாடுகளும் குளிப்பாட்டப்பட்ட மாடுகளாய்த் தெரியவில்லை.
ஒரு இடத்தில் வைக்கோல் மட்டும் குவிக்கப்பட்டிருந்தது. மற்ற மாட்டு தீவனங்கள் எதுவும் காணோம். பணியில் இருந்தவரிடம் கேட்ட பொழுது, பஞ்சாமிர்தத்திற்குப் பயன்படுத்தும் பழங்களின் தோல்களும், புற்கட்டுகளும் பழனியிலிருந்து கொண்டுவரப்படுகின்றன என்றார். ஆனால் அந்த மாதிரி எதுவும் வந்திருப்பதாகத் தெரியவில்லை. காங்கேயம் காளை இருமிக்கொண்டெ இருந்தது. அதை ஏன் கவனிக்கவில்லை என்றதற்கு, அது புதியவர்களைப், பார்த்தால் அப்படித்தான் முரட்டுத்தனமாகச் செய்யும் என்று நமது காதில் பூ சுற்றினார் அந்தப் பணியாளர். சரி, பிராணிகள் நல மருத்துவர்கள் முறையாக வந்து மாடுகளைக் கவனிக்கின்றார்களா என்று கேட்டதற்கு, பக்கத்தில் உள்ள பொருளூர் என்கிற ஊரிலிருந்து வந்து கவனிப்பதாகச் சொன்னார். அவ்வாறு கவனிக்கப்பட்டிருந்தால் அந்தக் காளை ஏன் அப்படி இழுத்து இழுத்து இருமவேண்டும் என்று தெரியவில்லை. அவர் சொன்னதில் நமது குழுவினருக்கு நம்பிக்கையும் ஏற்படவில்லை.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தானமாகப் பசுக்களை கொடுப்பது வழக்கம். அந்தப் பசுக்களைப் பெற்றுக்கொள்ளும் கோவில் நிர்வாகம் அவற்றைப் பராமரிக்க பக்தர்களிடம் ஒவ்வொரு பசுவிற்கும் ரூ.1000/- கட்டணம் வசூலிக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து விட்டன என்று பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையினர் தெரிவித்தனர். அதையும் விசாரிக்க எண்ணிய நமது குழுவினர், இவ்வளவு பெரிய இடத்தில் ஏன் ஒன்பது மாடுகள் மட்டுமே இருக்கின்றன என்று கேட்டதற்கு, தெரியவில்லை சார், நான் வந்து ஒன்றரை வருடம் தான் ஆகிறது; சில மாதங்களுக்கு முன்னால் 300 பசுக்களை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அளித்தனர் என்று கூறினார் அந்தப் பணியாளர்.
இது விதி முறைகளுக்குப் புறம்பானது என்பதோடு மட்டுமல்லாமல், இவ்வாறு சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால் முறையான அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி தானமாக வருகின்ற பசுக்களை சுய உதவிக்குழுவினரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்ட பக்ஷத்தில் பக்தர்களிடம் ஏன் ரூ.1000/- பராமரிப்புக் கட்டணம் வாங்க வேண்டும்? அவ்வாறு வாங்கியுள்ள கட்டணப் பணத்திற்கு முறையான கணக்குகள் உண்டா? அந்தப் பணம் வேறு எதற்காகச் செலவிடப்பட்டுள்ளது? சுய உதவிக் குழுவினரிடம் கொடுத்த பிறகு அவர்கள் அப்பசுக்களை என்ன செய்கிறார்கள்? விற்கிறார்களா அல்லது பராமரிக்கிறார்களா? விற்கிறார்கள் என்றால் ஏன்? அவ்வாறு விற்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? அப்படி விற்பவர்களுக்கு ஏன் வழங்க வேண்டும்? இல்லை பராமரிக்கிறார்கள் என்றால் எப்படிப் பராமரிக்கின்றனர்? அவர்கள் பராமரிப்பதைக் கண்காணித்து முறைப்படுத்துவதற்கு என்ன விதமான வழிமுறைகள் உள்ளன? போன்ற கேள்விகளும் எழுகின்றன.
உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு
கோவில்களுக்குத் தானமாகப் பக்தர்களால் வழங்கப்படும் பசுக்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றும், அவைகள் வெளிச் சந்தைகளில் இறைச்சிக் கூடங்கள் நடத்துபவர்களுக்கு விற்கப்படுகின்றன என்றும் பல குற்றச்சாட்டுகள் அறநிலையத்துறை மீது பல வருடங்களாகச் சுமத்தப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர் கோவிலில் ஆயிரக்கணக்கான மாடுகள் காணாமல் போன சம்பவங்களும், உண்மையில் இல்லாத ஆனால் பதிவேட்டுகளில் மட்டுமே இருக்கும் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஸ்ரீரங்கம் கோவிலில் பசுக்கள் வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டதும் உண்டு. எனவே, பழனி கோவிலிலும் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளதை மறுக்க முடியாது. மேலும் 40 கிலோமீட்டர் தொலைவில் ஜனநடமாட்டம் இல்லாத வறட்சி மிகுந்த வனாந்திரத்தில் நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் கோசாலையில் என்ன நடந்தாலும் வெளியில் தெரிய வாய்ப்பில்லை. போவதற்குச் சரியான பாதை இல்லை; போகும் வழியில் கோசாலை இருக்கும் இடத்தை குறிக்கும் தகவல் பலகைகள் இல்லை; கோசாலை வாசலிலும் பெயர் பலகைக் கூட வைக்கப்படவில்லை. கோவிலின் நிர்வாக அலுவலருக்கும் அறநிலையத்துறையின் துணை ஆணையருக்கும் கூட அந்தக் கோசாலைக்குச் செல்லும் வழி தெரியுமா என்பது சந்தேகம்தான். அவர்கள் ஒரு முறையாவது அங்கே சென்று பார்த்திருப்பார்களா என்றும் தெரியவில்லை. ஒருவேளை, வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த மாதிரியான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கோசாலையை வைத்திருக்கிறார்களா என்றும் சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.
இதே மாதிரி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் கோசாலையில் பல பசுக்கள் சரியான உணவின்றி இறந்து போனபோது, பிராணிகள் நலவிரும்பியும் சமூக ஆர்வலருமான திருமதி ராதாராஜன் அவர்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கோசாலைகளின் நிலை என்ன, கால்நடைகள் அக்கோசாலைகளில் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன, மாட்டுத் தீவனங்கள் எப்படி கொள்முதல் செய்யப்படுகின்றன, அவைகள் முறையாகக் கோசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு மாடுகளுக்கு உணவளிக்கப்படுகிறதா, என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை அளித்து உத்தரவிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் (WP 28793 & 28794 of 2013) தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை அனுமதித்து விசாரித்த உயர் நீதிமன்றம், அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்களின் கோசாலைகளின் தற்போதைய நிலைமை பற்றி முழுமையான அறிக்கை தயார் செய்து தருமாறு அறநிலையத்துறைக்கும் அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கை வழங்கப்பட்ட பிறகு விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது, அரசு வழக்குரைஞர், பழனியில் இருப்பது “ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலை” (Integrated Gaushala) அதாவது பல கோவில்களிலிருந்தும் மாடுகள் கொண்டுவரப்பட்டுப் பராமரிக்கப்படும் இடம் என்று சொன்னதாகத் தெரிகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலையின் லக்ஷணம் எப்படி?
மாடுகள் இல்லை! ஆனால் செலவு கோடிக்கணக்கில்!
இந்த லக்ஷணத்தில், 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கோசாலையில், 2011 வரை கோசாலைக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் ஒரு கோடியே நாற்பது லக்ஷம் (ரூ. 1, 39, 27, 176/-) ரூபாய்கள்! கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உடைய கோவில்களில் பக்தர்கள் தானமாகக் கொடுக்கும் பசுக்களையும் கால்நடைகளையும் பராமரிக்க முறையாக கோசாலைகள் அமைத்து நடத்த முடியாத அறநிலையத்துறை ஒன்று இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன?
(தொடரும்)