×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

வந்தே மாதரம் பிறந்த கதை

வந்தே மாதரம், சுஜலாம், சுஃபலாம், மலயஜசீதலாம்
சஸ்ய ச்யாமலாம், மாதரம்.

Bankim chandra sattobhaya

இந்த தேசிய பாடலை அறியாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? அகில இந்திய வானொலியைக் காலையில் கேட்பவர்களுக்கு இது பழகிப் போன மந்திரம். இதை நமக்கு அளித்தவர் தாம் பங்கிம் சந்திர சாட்டர்ஜி. அவர் பல புதினங்களைப் படைத்திருக்கிறார்; அவற்றில் ஒன்று தான் ஆனந்த மடம். இந்தப் புதினம் விடுதலைப் போராட்டம் பற்றிய விறுவிறுப்பான தகவல்கள் அடங்கியது; வந்தே மாதரம் இந்தப் புதினத்தின் ஒரு பகுதியாக இடம் பெறுவது.


1838ம் ஆண்டு 27ம் தேதி ஜீன் மாதம் வங்காளத்தின் 24 பர்காணாக்கள் மாவட்டத்தின் கந்தல்பரா கிராமத்தில் பிறந்தார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி. வேதம் ஓதும் குடும்பத்தில் பிறந்த இவரது குடும்பம் யாகங்கள் நடத்துவிப்பதில் பெயர் போனது. அவரது தந்தையார் யாதவ சந்திர சட்டோப்பாத்யாயா அரசுத் துறையில் பணி புரிந்தார். மகன் பிறந்த அதே ஆண்டு அவர் மிட்னாபூருக்கு துணை ஆட்சியராகப் பதவி ஏற்றார். பங்கிம் சந்திரரின் தாயார் பாசமும், பக்தியும், இனிமையும் நிறைந்த பெண்மணி. வங்காள மொழியில் பங்கிம் சந்திரர் என்பதன் பொருள் வளர்பிறையின் 2ம் நாள் சந்திரன் என்பதாகும். அவரது கல்வி மிட்னாபூரில் தொடங்கியது. அவர் எத்தனை சூட்டிகையாக இருந்தார் என்றால், மொத்த எழுத்துக்களையும் ஒரே நாளில் கற்றுத் தேர்ந்தார். அவரது புத்திக் கூர்மை தான் ஊரின் பேச்சாக இருந்தது. யாராவது புத்திசாலித்தனமான மாணவர் இருந்தால் இதோ இன்னொரு பங்கிம் சந்திரர் உருவாகிறார் என்ற அளவுக்கு அவர் ஆசிரியர்கள் மனங்களில் இடம் பிடித்திருந்தார்.


தனது ஆரம்ப கட்டக் கல்வியை மிட்னாபூரில் முடித்த பங்கிம் சந்திரர் ஹூக்லியில் இருக்கும் மோஹ்ஸின் கல்லூரியில் தொடக்கினார். அங்கே கூட அவரது புத்தி கூர்மை மெச்சப்பட்டது. 6 ஆண்டுகள் கல்விக்குப் பிறகு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவருக்கு விளையாட்டுக்களில் அத்தனை நாட்டம் இருக்கவில்லை. எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருந்த பங்கிம் சந்திர்ருக்கு சம்ஸ்க்ருதத்தின் மீது தனி ஆர்வம் இருந்த்து. அவர் தாமே சம்ஸ்க்ருத புத்தகங்களைப் படித்துத் தேர்ந்தார். இந்த புலமை தான் அவருக்கு பின்னாளில் வங்காளப் புத்தகங்கள் எழுதும் போது கை கொடுத்தது.


அவர் கல்கத்தா (தற்போது கோல்காத்தா) மாகாணக் கல்லூரியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு 1857 முதல் சுதந்திரப் போர் தொடங்கியது, கல்கத்தாவில் குழப்பம் நிலவியது; ஆனால் பங்கிம் சந்திரரின் கல்வியில் எந்த இடையூறும் ஏற்படவில்லை. அவர் இளங்கலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர், கல்கத்தாவின் லெஃப்டின்ட் கவர்னர் அவரை உதவி ஆட்சியராக நியமித்தார். தந்தையின் ஆணைப்படி அதனை ஏற்ற பங்கிம் சந்திரர் ஆர்வம் காரணமாக சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.


பங்கிம் சந்திரர் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 32 ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்த பின்னர் 1891ம் ஆண்டு ஓய்வு பெற்றார். மனசாட்சிப்படி செயல்பட்ட பங்கிம் சந்திரரின் பெரும்பாலான அதிகாரிகள் ஆங்கிலேயர்களாக இருந்தாலும், தாங்கள் ஆட்சியாளர்கள் என்ற கர்வமான அவர்களின் போக்குக்கு தலை வணங்காதவராக பங்கிம் சந்திரர் இருந்தார். வந்தே மாதரத்தின் படைப்பாளி அல்லவா? இந்த மனப் போக்கு அவருக்கு எதிரிகளை ஏற்படுத்தி, அவர் அடைந்திருக்க வேண்டிய பெரிய பதவி அவருக்கு கிடைக்காமலேயே போனது. தனது சுயமரியாதையையோ, நீதி வழுவாத் தன்மையையோ அவர் என்றும் விட்டுக் கொடுத்ததில்லை, ஆங்கிலேயர்களின் ஆணவமும் அவரை அச்சுறுத்தியதில்லை.


ஒரு முறை, மாகாண ஆணையராக இருந்த மன்ரோ என்ற மேலதிகாரியை ஈடன் கார்டனுக்கு அருகே சந்திக்க நேர்ந்த போது, வாடிக்கையாக ஆங்கிலேய அதிகாரியை சந்திக்கும் போது தலை தாழ்த்தும் வழக்கத்தை பங்கிம் சந்திரர் செய்யாமல் கடந்து போனார்; இது மன்ரோவின் கோபத்தைக் கிளறி பங்கிம் சந்திரருக்கு இட மாற்றலில் வந்து விடிந்தது. சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத இந்தப் போக்கு அவருடைய அரசுத் துறைச் சேவையில் அவருக்கு பல சங்கடங்களையும் பிரச்சனைகளையும் தோற்றுவித்தது.

 

தனிப்பட்ட வாழ்விலும் சோகங்கள் மலிந்த நிலை; துணை ஆட்சியராகப் பதவியேற்ற சில காலத்திலேயே மனைவி இறந்து விடுகிறார். 2வது மனைவியாக ராஜலக்ஷ்மி தேவியை மணமுடிக்கிறார். 3 மகள்கள் பிறக்கின்றன, மகன் ஏதும் இல்லை. அவரது கடைசி மகள் உத்பலா குமாரி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. ஜெஸ்ஸோரில் இருந்த போது அவர் புகழ் பெற்ற வங்காள மொழி நாடக ஆசிரியர் தீனபந்து மித்ரரை சந்திக்க நேர்கிறது; அவர்களின் நட்பின் ஆழத்தின் அத்தாட்சி, ஆனந்த மடம் புதினம் இறந்த தனது நண்பரின் நினைவுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

 

காலப் போக்கில் பங்கிம் சந்திரர் வங்காள மொழியில் பெரிய எழுத்தாளராக மலர்கிறார்; அவரது எழுத்துக்கள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. ஆனால் எப்படி அவர் ஒரு எழுத்தாளராக பரிமளித்தார்? அதற்குப் பல காரணங்கள் உண்டு - பெற்றோர்களை விடச் சிறந்த தெய்வங்கள் இல்லை என்ற கூற்றுப் படி அவர் தனது பெற்றோரை தெய்வமாகவே போற்றி வணங்கினார். ஆசாரமான குடும்பத்தில் பிறந்தபடியால், ராமாயணமும் மஹாபாரதமும் அவரது ரத்தத்தில் ஊறியிருந்தன. இந்த இதிகாசங்கள் அவரது வாழ்வில் மாறாத பாதிப்பை ஏற்படுத்தின. தொழில் காரணமாக பல இடங்கள், பல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு, அளவில்லாத புத்தகப் படிப்பு, சொந்த வாழ்வின் பல வகையான அனுபவங்கள் ஆகியன அவரது எழுத்துக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தன.

 

பங்கிம் சந்திரர் எழுதத் தொடங்கிய போது வங்காளத்தில் ஒரு புதிய உத்வேகம், ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டிருந்த்து. புதிய கோணத்தில் மக்கள் சிந்திக்கத் தொடங்கி இருந்தார்கள். நம் குறைகளைக் களைந்து நிறைவு நோக்கி நாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனை துளிர்க்கத் தொடங்கியிருந்த்து. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்றோர் எல்லாம் அந்த சிந்தனையின் வெளிப்பாடுகள் தாம். மொத்த சூழலுமே ஊக்கம் தரும் எழுச்சியாக இருந்தது.


முதலில் பங்கிம் சந்திரர் கவிதைகளைத் தாம் எழுதினார். பிறகு ஆங்கிலத்தில் ஒரு புதினம். ஆனால் இதன் பிறகு வங்காள மொழியில் புதினங்கள் எழுத ஆரம்பித்தார். அவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே எழுத்துப் பணியைச் செய்தார். அரசுப் பணி தனது சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துகிறது என்று அறிந்து தனது 53 வயதுக் காலத்திலேயே விருப்ப ஓய்வு எடுத்துக் கொள்ள விண்ணப்பித்தார்; ஆனால் அவரது மேலதிகாரிகளுக்கு அவர் மீது கசப்பு இருந்த காரணத்தால், அவருக்கு ஓய்வு கொடுக்கக் கூட அனுமதி அளிக்கவில்லை. ஆனால் புதிய லெஃப்டினண்ட் கவர்னராக பதவியேற்ற சார்லஸ் எல்லியட் ஓய்வளிக்க ஒப்புக் கொண்ட பின்னர் பங்கிம் சந்திரர் மாதம் 400 ரூபாய்கள் ஓய்வூதியத்தோடு ஓய்வு பெற்றார்.


பல புத்தகங்கள் எழுத அவர் விழைந்தாலும், பல ஆண்டுகள் இதற்கு ஒதுக்க முடியவில்லை. அவரது உடல் நலம் கெடத் தொடங்கி அவருக்கு வெறும் 56 வயதான நிலையில் 1894ல் அவர் இயற்கை எய்தினார். தனது இறுதிக் காலத்தில் அவர் மிகவும் தத்துவ ரீதியான மனப்பாங்கு அடைந்திருந்தார், உலக இன்பங்கள் மீது அவரது நாட்டம் ஒழிந்திருந்தது, நோய்க்கான மருந்தை உட்கொள்ள சில சமயங்களில் மறுத்தார். இப்படி மருந்துகளை உட்கொள்ள மறுத்தால், மரணம் நிச்சயம் என்று மருத்துவர் கூறிய போது, நான் எங்கே மருந்துகளை நிராகரிக்கிறேன், அதைத் தானே இத்தனை காலம் பயன்படுத்தி வந்திருக்கிறேன் என்று தனது பக்கத்தில் இருந்த பகவத் கீதையை தனது மருந்து என்று கூறினாராம் பங்கிம் சந்திரர்.

 

பகவத் கீதை பங்கிம் சந்திரரை முழுமையாக மாற்றியிருந்தது. அவர் புதினங்கள் எழுதுவதை விட்டிருந்தார். தத்துவமும், கடவுள் பற்றிய சிந்தனைகளும் அவரது எழுத்துக்களையும் எண்ணங்களையும் ஆக்ரமித்திருந்தது. அவர் க்ருஷ்ண சரிதையும், சமயம் பற்றிய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். கீதை மற்றும் வேதம் ஆகியவற்றின் மொழியாக்கம் செய்து முடிக்கும் முன்பாக அவர் இயற்கை எய்தினார். மஹான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் பங்கிம் சந்திரரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தனர். பங்கிம் என்ற சொல்லுக்கு வளைந்தது என்றும் பொருளாதலால், ராமகிருஷ்ணர் அவரைப் பார்த்து, உன்னை எது வளைத்தது என்று கேட்டாராம். பங்கிம் சந்திரரும் விடாமல், ஆங்கிலேயர்களின் காலணிகள் தாம் என்றாராம். பங்கிம் சந்திரரின் வரலாற்றுப் புதினங்கள் பற்றி நன்று அறிந்திருந்த ராமகிருஷ்ணர் நரேந்திரநாத்தாக இருந்த விவேகானந்தரை பங்கிம் சந்திரரை சந்திக்க ஒரு முறை அனுப்பி வைத்திருக்கிறார்.


பங்கிம் சந்திரரின் மொழி, மக்களின் மொழியாக இருந்தது. வங்க தர்ஷன் என்ற மாத இதழை பங்கிம் சந்திரர் தொடக்கினார், அதில் தான் ஆனந்த மடம் தொடராக வந்தது. 1882ல் தான் அது முழு வடிவப் புத்தகமாக வந்த போது, உடனடியாக விற்றுத் தீர்ந்தது. இதன் பின்னர் பல பதிப்புக்களை சந்தித்தது ஆனந்த மடம். பங்கிம் சந்திரர் மொத்தம் 15 புதினங்களை எழுதியிருக்கிறார். துர்கேசந்ந்தினி, கபாலகுண்டலா, ம்ரிணாலினி, சந்திரசேகர், ராஜஸிம்ஹன் ஆகியவை சுவாரசியமான கதைகளுக்குப் பெயர் போனவை; ஆனந்த மடம், தேவி சௌதாரிணி, சீதாராம் ஆகியன நம் நாட்டின் சரித்திரத்தைச் சுற்றி வரையப்பட்டவை. விஷவ்ருக்ஷம், இந்திரா, யுகலங்குரியா, ராதாராணி, ரஜனி, க்ருஷ்ண காந்தர் வில் ஆகியன சமுதாயத்தின் நல்லது கெட்டவைகளை பிரதிபலிப்பவை.


வங்கதர்சனம் மாத இதழில் ஆனந்த மடம் வெளியான போது, மக்கள் எப்போது அடுத்த இதழ் வரும் என்று வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பர்களாம். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிது புதிதான விஷயங்கள். இருளில், முழு அமைதியில் ஒரு மனிதக் குரல் கேட்கிறது. மொத்த விளக்கமும் குறியீடுகளாக இருக்கிறது. 1773ம் ஆண்டு வங்காளத்தில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை விளக்கும் வகையில் அமைந்திருப்பது ஆனந்தமடம். அது பெரும்பஞ்சம் தலைவிரித்து ஆடிய ஆண்டு; ஆங்கிலேயர்கள் மக்களின் துயரம் பற்றிக் கவலைப்படவில்லை; மக்களும் ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சினார்கள். சோகமும் பெரும் அவலமும் மலிந்து கிடந்த அந்த நிலையில் ஒரு கனவான் சத்யானந்தர் தனது தாய் நாட்டின் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வர துடிக்கிறார். நாடு, காடாக, இருளும், மயான அமைதியும் சூழ்ந்த அந்த பயங்கரமான நிலையில் ஒரே ஒரு மனிதக் குரல் கேட்கிறது - என் ஆசை நிறைவேறுமா? இது தான் சத்தியானந்தரின் குரல் - தனது நாட்டுக்கு சுதந்திரமும் மகிழ்ச்சியும் கூட்ட விழையும் குரல். எத்தனை அற்புதமாக இருக்கிறது பாருங்கள்


ஆனந்த மடம் வங்காளத்தின் பயங்கரமான பஞ்சத்தின் விவரங்களோடு தொடங்குகிறது. பதச்சின்னம் என்ற ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு சீமான் பெயர் மஹேந்திரன்; அவரது மனைவி கல்யாணீ. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது; ஆனால் பஞ்சம் அவர்களை கிராமத்தைத் துறக்கச் செய்கிறது. காட்டில் தொலைந்து போகிறார்கள்; கல்யாணியையும் அவளது குழந்தையும் பஞ்சத்தில் அடிபட்ட மக்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவள் குழந்தையோடு தப்பி விடுகிறாள். சத்தியானந்தர் தான் சன்னியாஸிகள் குழுவின் தலைவர், இவர்கள் பெயர் சந்தானர்கள். கல்யாணி அவரிடம் அடைக்கலம் புகுகிறாள். அவர் பவானந்தர் என்ற சன்னியாஸியை கல்யாணியின் கணவரைத் தேடி அனுப்புகிறார்; மஹேந்திரனைக் கண்டுபிடித்த பவானந்தரையும் மஹேந்திரனையும் ப்ரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீர்ர்கள் கைப்பற்றி, பணம் கொண்டு சென்ற மாட்டு வண்டிகளோடு கட்டிப் போடப்படுகிறார்கள்; ஆனால் எப்படியோ இவர்கள் இருவரும் தப்புகிறார்கள்; பணப் பெட்டிகளை சன்னியாஸிகள் சூறையாடுகிறார்கள். மஹேந்திரர் மீண்டும் தன் மனைவியோடு இணைகிறார். அவர் தன் மனைவியின் ஒப்புதலோடு சந்தானர்கள் குழுவில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கு எடுத்துக் கொள்ள விழைகிறார்; இதற்கிடையில் கல்யாணி நீரில் மூழ்கிய போது அவரை இன்னொரு சன்னியாஸி ஜீவானந்தர் காப்பாற்றி அவளை தனது மனைவி மற்றும் சகோதரியின் பாதுகாப்பில் விடுகிறார். பஞ்சம் மேலும் வலுவடைகிறது; காட்டு விலங்குகளும், நாட்டு விலங்குகளும் திரிகின்றன. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்க்ஸ் சந்தானர்களை அடக்க தாமஸ் என்பவனை நியமிக்கிறார்; அவன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்படுகிறான். சந்தானர்கள் தரப்பில் தீரமான போருக்குப் பிறகு பவானந்தர் தனது மரணத் தறுவாயில் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலை பாடிக் கொண்டே உயிர் துறக்கிறார்.


வெற்றி வாகை சூடிய சத்தியானந்தர் ஆனந்த மடத்துக்கு மீண்டும் வருகிறார். அங்கே ஒரு மகானை சந்திக்கிறார்; அவர் தனது தீர்க்க தரிசனத்தில் - ‘’இஸ்லாமிய ஆட்சிக் காலம் முடிவடைந்தது; இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வா; போதுமான இறப்புக்கள் ஏற்பட்டு விட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருப்பார்கள்; அவர்களை இந்த கட்டத்தில் வெல்வது இயலாத காரியம். ஹிந்துக்கள் அறியாமை, பலவீனம் மற்றும் சீரழிந்த நிலையில் இருக்கும் வரையில் அவர்கள் ஆட்சி நடைபெறும்’’. சத்தியானந்தர் கோபத்தில், பெரும் சோகத்தில் தலை மீது கை வைத்திருந்தாலும், ப்ரிட்டிஷார் ஆட்சி செலுத்துவதை விரும்பவில்லை. புதினம் முடிவடைகிறது.


முடிவு வரை ஆர்வம் கொப்பளிக்கிறது. சுகம் துக்கம், பாத்திரங்களின் வெற்றி தோல்விகள் ஆகியவற்றை சந்திக்கும் வாசகர் அடுத்து என்ன ஆகும் என்பதை அறிய துடியாய் துடிக்கிறான். தவிர பாத்திரங்கள் ஏதோ தெய்வங்கள் அல்ல, நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் தாம். சந்தானர்களும் கூட எளிமையான மனிதர்கள், மண்ணின் மைந்தர்கள், தங்களை தாய் நாட்டின் சேவையில் அர்ப்பணித்த மாணிக்கங்கள். ஆனந்த மடம் தேசபக்தி பற்றிய ஒரு புதினம். தங்கள் நாட்டுக்காக வாழ்ந்து மடியும் மக்கள் பற்றிய கதை. இங்கே சன்னியாசிகள் சுதந்திரப் போராட்டத்திற்கான அற்புதமான பங்கு பணி ஆற்றுகிறார்கள். அத்தகைய ஒரு சாகஸம் நிறைந்த சன்னியாஸினி தான் ஜீவானந்தரின் மனைவி சாந்தி.


சந்தானராக அன்னைக்கு முன்பாக சபதம் ஏற்க வேண்டும். சத்யானந்தர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களின் பதில். இன்றைய கால கட்டத்தில் கூட இது மக்களின் மனங்களிலிருந்து மலினங்களைப் போக்கக் கூடியது.

 

தாய்நாடு விடுதலை அடையும் வரை உங்கள் இல்லங்களைத் துறக்கத் தயாரா?
தயார்.

 

உங்கள் தாய், செழிப்பு நிறைந்த சகோதர சகோதரிகளை துறக்கிறீர்களா?
துறக்கிறோம்.

 

உங்கள் மனைவி மக்களை?
ஆம்.

செல்வம், சுகம் அனைத்தையும்

அனைத்தையும் துறக்கிறோம்.

 

சமர்க்களத்திலிருந்து பின் வாங்கக் கூடாது.

பின் வாங்க மாட்டோம்.

 

சாதியைத் துறப்பீர்களா? அனைத்து சந்தானர்களும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். அந்தணர், கடையன் என்ற வேறுபாடு இல்லை. நீங்கள் தயாரா?

எங்களுக்கு சாதி என்பது இல்லை. நாம் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகள் தாம்.

 

அப்படியென்றால் உங்களுக்கு தீட்சை அளிக்கப்படுகிறது.

 

புனைவையும், உண்மை சரிதத்தையும் கலந்து பிசைந்து பின்னப்பட்ட புதினமான ஆனந்த மடம் சல்லித்தனமான சுயநல எண்ணங்களிலிருந்து தப்ப உதவுவதோடு, நாட்டுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஆண் பெண்களிடம் ஏற்படுத்துகிறது. அனைத்துக்கும் மேலாக இந்த புதினம் நாம் அனைவருக்கும் ‘’வந்தே மாதரம்’’ என்ற தாரக மந்திரத்தை அளிக்கிறது. சற்றேரக் குறைய அரை நூற்றாண்டுக் காலம் ஹிந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பரங்கியனுக்கு எதிரான போராட்டத்தில் இணைத்த மந்திரச் சொல் ஒன்று உண்டென்றால், அது ‘’வந்தே மாதரம்’’ தான். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இரட்டைக் குழல் துப்பாக்கிகள் இந்த 2 சொற்கள். முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு வீழ்ந்து கிடந்த பாரத சமுதாயத்துக்கு வீறு கொடுத்து, விடுதலை பற்றிய வித்து விதைத்து, ரணங்களை ஆற்றுப் படுத்தி, நம்மால் முடியும் என்ற உணர்வு பெருக்கியது இந்த இரட்டைச் சொற்களான ‘’வந்தே மாதரம்”.

 

தலைசிறந்த எழுத்தாளர்கள் என்ற ஒரு பட்டியல் இட்டால், அதில் தலையாய இடங்களில் ஒன்று பங்கிம் சந்திரருக்கு உண்டு. பெரும்பாலான அவரது எழுத்துக்கள் வங்காள மொழியில் இருந்தாலும், அவரது எண்ணங்கள் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்புக்களாக விளங்கின. அவர் ஹிந்து சமயம் பற்றிய மிகச் சிறந்த புத்தகங்களை எழுதி இருக்கிறார். சமூக சீர்திருத்தங்கள் பற்றிய தனது ஆணித் தரமான கருத்துக்களை மொழிந்திருக்கிறார்.; மாற வேண்டிய மனோபாவங்கள், நாட்டின் முன்னேற்றம் பற்றிய தெளிவான கருத்துக்களை அவரது எழுத்துக்களில் நாம் பார்க்கலாம். ஆங்கில மொழி, ஆங்கிலத்தன்மையால் பலர் கவரப் பட்டாலும், தாய் மொழி கண்டு சிறுமை கொள்ள வேண்டியதில்லை, தாய் மொழி மூலம் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும் என்பதில் ஆழமாக நம்பியவர். சுதந்திரத் தாகத்தை ஊக்கப்படுத்தியவர்களில் அவரும் ஒருவர். தேசியத்தின் பொருளை அவரது புதினங்கள் விடியற் போது போல வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனந்த மடம் உன்னதமான தேசபக்தியின் அற்புதமான புதினம். அதில் அவரும் பவானந்தர், சாந்தி போன்றோர் நம் இதயங்களில் என்றும் கொலு வீற்றிருப்பார்கள். அப்படிப்பட்ட மாறாத பாத்திரங்களைப் படைத்தவர் பங்கிம் சந்திரர்.

 

வந்தே மாதரம்!

Read 1826 times
Rate this item
(1 Vote)
Last modified on Thursday, 09 October 2014 19:26

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment