×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

சநாதன தர்மத்தின் அடிநாதம் - வாழு வாழவிடு

Sunday, 04 May 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

சதாசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -  என்பது ஆதிகாலம் தொடங்கி இன்று வரை தொடரும் குரு பரம்பரை வணக்கம்.

 

ஸ்ரீ குரு அல்லது ஆதி குரு என்று அறியப்படுபவர் சிவபெருமான். இவர் மௌனத்தால் தம் சீடர்களுக்குப் பாடம் போதித்தவர். உன்னுள்ளே எழும் கேள்விகளுக்கு பதிலை உனக்குள்ளே தேடு என்று சனத் குமாரர்களுக்கு தக்ஷிணாமூர்த்தியாக இருந்து வழிகாட்டியவர், இவரது வழிகாட்டலில் வந்த குரு பரம்பரையில் மகரிஷி வியாசர் வேத மந்திரங்களையும் புராணங்களையும் தொகுத்து வைத்தவர்.

 

adi-sankara1

அவருக்குப் பிறகு நமக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் சநாதன தர்மம் பல சவால்களைப் பல திசைகளிலும் சந்தித்த போது தோன்றியவர் ஆதிசங்கர பகவத்பாதர். மக்கள் சடங்குகள், செயல்முறைகளை காரணம் அறியாது கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்ததைக் கண்டு வருந்தி உபநிஷதங்களுக்கும் பிரம்மசூத்திரத்திற்கும், பகவத் கீதைக்கும் விளக்கவுரைகளை எழுதினார். வாழ்வியல் முறைக்குத் தெளிவான வழிகாட்டும் நெறிகளாக அவை இன்றும் விளங்குகின்றன.

 

இன்றைய காலகட்டத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கர பகவத் பாதர் கூறியவை எப்படிப் பொருந்திவரும் என்ற கேள்வி எழலாம்? இதற்கான விடையைச் சற்றே விரிவாகப் பார்த்தால் நம் தர்மம் குறித்தும் வாழ்வியல் பிரச்சினைகளுக்கான தெளிவான அணுகுமுறையும் கிடைக்கும்.

 

அத்வைத வேதாந்தம் உபநிஷதங்களின் சாராம்சமாக இருந்து வந்திருக்கிறது. வாழ்வியல் குறித்த பல உண்மைகளை அது எளிமையாகக் கற்றுத் தரும். ஆனால் சரியாகப் புரிந்து கொள்ள தெளிந்த மனதும், சிறந்த குருவும் தேவை. உப என்றால் அருகே என்பது பொருள். நிஷத் என்றால் இருத்தல், அடங்கல், மூழ்குதல் என்று பொருள். உண்மைக்கு அருகே இருப்பதும், உண்மையில் மூழ்கித் திளைப்பதும் உண்மையை உணர்ந்து மனம் அடங்கி இருப்பதுமே உபநிஷத்துகள் காட்டும் வழி.

 

ஆதிசங்கரர் மாயை, அஞ்ஞானம் என்ற இரு விஷயங்களைத் தெளிவுபடுத்தினார். அதோடு ப்ரம்மன் எனப்படும் சத்தியம் சுயம்பிரகாசமானது என்றும் சொன்னார். மாயாவாதம் என்று சங்கரரை மறுப்போர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதில்லை. சங்கரர் உலகே மாயம், எல்லாம் மாயம் என்று எதிர்மறைக் கோட்பாட்டைப் பேசவில்லை. சத்தியத்தைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டது இந்த உலகில் நாம் காணும் பல விஷயங்கள். இவற்றில் மனதைச் செலுத்தி சத்தியத்தை கவனிக்காது விட்டுவிடுவதே மாயையில் உழல்வது என்றார் பகவத்பாதர்.

 

ஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும் இன்றைய காலகட்டத்தில் உலக வாழ்வுக்கு எப்படி உதவிகரமாக இருக்கும்? தெளிவாகத் தெரியாததே வேதாந்தம் என்று ஒரு கருத்து வேறு நிலவுகிறதே? இதெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முயலாதவர்கள் சொன்ன கருத்து. அத்வைத வேதாந்தமும் ஆதிசங்கரரின் வாழ்வும் இன்றும் பயன் தரக்கூடியவையே.

 

அவருடைய வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தது. ஒருமுறை ஆதிசங்கரர் காசி நகரத்தில் விஸ்வநாதர் ஆலயத்தில் இறைவனைத் தரிசித்துவிட்டு வருகையில் எதிரே ஒரு சண்டாளன் நான்கு நாய்களுடன் வந்து கொண்டிருந்தான். அவனைச் சற்றே விலகிக் கொள்ளுமாறு சைகை செய்தார் சங்கரர். அவன் கேட்டான் “விலகிக் கொள்ள வேண்டியது உணவினாலான இந்த உடலா? இதற்கு உமது உடலுக்கு என்ன வித்தியாசம்? அதுவும் உணவினால் ஆனது தானே?”

 

விலகிக் கொள்ளச் சொன்னது என் ஆத்மாவையா? உமது ஆத்மாவுக்கு எனது ஆத்மாவுக்கு வேறுபாடு உள்ளதோ? பொங்கி ஓடும் கங்கையிலும் தேங்கி நிற்கும் குட்டையிலும் ஒரே மாதிரி பிரதிபலிக்கும் சூரியனைப் போலவே உம்மிலும் என்னிலும் உள்ள ஆத்மா பரம்பொருளின் பிரதிபலிப்பு தானே? மண்குடத்தில் வைத்தாலும் தங்கக்குடத்தில் வைத்தாலும் தண்ணீர் தாகம் தணிக்கும் தானே?


இது கேட்ட சங்கரர் வந்திருப்பது ஈசனே என்றும் தமக்கு இறுதியாக ஆத்மா குறித்துக் கற்பிக்க இப்படி ஒரு திருவிளையாடலை நடத்தியிருக்கிறார் என்றும் புரிந்து கொண்டார்.

 

அதன் பிறகு அவர் பாடிய பாடல்கள் மனீஷா பஞ்சகம் என்று வழங்கப்படுகிறது. மனீஷா என்றால் உறுதி, நம்பிக்கை என்று பொருள். ஆத்மா குறித்த உறுதியான தெளிவு கிடைத்த பின் பாடிய பாடல் என்று பொருள்.

 

இது இக்காலத்துக்கு எப்படி ஏற்புடையது? இன்று உலகில் அமைதியின்மைக்குக் காரணம் என் வழிமட்டுமே சிறந்தது பிறர் தவறானவர்கள் என்ற எண்ணம். என் வழிக்கு வராதவர்களைக் கொல்லவும் தயங்கமாட்டேன் என்று கொடுமைக்காரர்களாக மனிதர்கள் மாறிவருவதும், அத்தகைய கொடூர மாற்றங்களை இறைவனின் பெயரால் சிலர் செய்வதுமே கவலைக்குரியது. என்னுள் இருக்கும் இறைசக்தியே எல்லோருக்குள்ளும் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் யார் சிறந்தவர் என்ற கேள்வி எழாது. யார் வழி சிறந்தது என்று கேள்வி வர வாய்ப்பில்லை. இதன் காரணமாக சண்டைகளுக்கு இடமில்லை.

 

தன்னுள் இருக்கும் இறைத் தன்மையை உணர்ந்தவன் யாராக இருந்தாலும் உயர்ந்தவன் என்கிறார் பகவத்பாதர். நாம் இறைத்தன்மை என்பதை விடுத்து உலகியல் வாழ்வுக்கு ஏற்ப மனிதத் தன்மையுடன் இக்கருத்தைப் பொருத்திப் பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனைப் போலவே மனதின் ஆழத்தில் மனிதத் தன்மை கொண்டவனாகவே இருக்கிறான். ஆனால் சில தவறான கருத்துக்கள் எண்ணங்களின் காரணமாக அவனுக்கு பிறர் மீது கோபம், பொறாமை போன்ற தீய உணர்ச்சிகள் வருகின்றன. இந்தத் தவறான தீய உணர்ச்சிகள் மனிதத்தன்மை என்ற மறைந்திருக்கும் உண்மையை மறைக்கின்றன. இது மாயை. இந்தத் தீய உணர்ச்சிகள் ஏற்படுவதற்குக் காரணம் மனிதன் தெளிவற்ற சிந்தனை. இந்தத் தெளிவின்மை என்பது அஞ்ஞானம்.

 

தெளிவின்மையை அகற்றி தீய உணர்ச்சிகளின் நிலையையும் அதனால் விளையும் தீமைகளையும் புரிந்து கொள்ளும் போது வருவது ஞானம். இதுவே சநாதன தர்மத்தின் வாழ்வியல் சார்ந்த அடிநாதமான தத்துவம். தன் வழிபாட்டு முறைகளைத் தவிர வேறு முறைகள் வந்தாலும் ஏற்பதே சநாதன தர்மத்தின் சிறப்பு. எந்த வழிமுறையும் அது மனிதத்தன்மை, இறைத்தன்மை இவற்றை உணரச் செய்யும் வரை நல்வழி என்பதே சநாதன தர்மத்தின் கருதுகோள். ஆனால் உலகில் வேறெந்த வாழ்வியல் முறையும் இவ்விதம் செய்வதில்லை. பிற வாழ்வியல் முறைகளை அழித்து தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே நோக்கமாகச் செயல்படுவதே அடிப்படைக் கொள்கை என்று சநாதனம் தவிர்த்த பிற முறைகள் செயல்படுகின்றன. இதனால் உலக வாழ்வின் அமைதி கெடுகிறது. மகிழ்ச்சி தொலைகிறது..


இதைத் தவிர்த்து அனைவரின் அமைதியான வாழ்வுக்கும் தெளிவான சிந்தை பெற்று தன்னை உணர்ந்து பிறரும் தன்னைப் போன்றோரே என்ற உயரிய சிந்தனையை மக்கள் மனதில் விதைத்து விருட்சமாக வளரச் செய்ய வேண்டும் என்பது சநாதன தர்மத்தின் அடியொற்றி வாழும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

 

ஆயுதமுனைகளில் ஆள் பிடிப்பது போன்ற செயல்கள் இல்லை இது. தன்னை உணர்ந்தவனால் மட்டுமே பிறருக்கு சுயத்தை உணர உதவ முடியும். சநாதன தர்மத்தின் வழி வாழும் அனைவரும் தன்னை உணர்ந்து தன்னால் இயன்ற வரை பிறரும் தம் சுயத்தை உணர உதவி செய்யவேண்டும்.

 

எப்பொருள் யாரார் வாய் கேட்பினும் அதிலே மெய்ப்பொருள் தேடி உணரும் அறிஞனாக ஒவ்வொரு மனிதனும் ஆனாலே போதும் உலகம் அமைதிப் பூங்காவாகும். மக்கள் நல்வாழ்வு சிறக்கும், வளங்கள் பெருகும்.

 

ஆதிசங்கரரின் வாக்குகளில் இருந்து நாம் கற்கவேண்டியதும், அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டியதும் இதுவே “எது குறித்தும் அஞ்சவேண்டாம். குருட்டு நம்பிக்கைகள் வேண்டாம். லட்சியத்தை அடைவதற்கு லட்சியம் குறித்த தெளிவும் பயணிக்கும் பாதை குறித்த சரியான அறிவும், சிதறாத கவனமும் வேண்டும்.”

 

மனம் சிதறாது கவனம் கொள்ள மனத்தினைக் கட்டுப்படுத்த வேண்டும். அது மிகக் கடினமானது. அதற்கான பயிற்சியே இறைவழிபாடு, ஜபம் போன்றவை. ஒரு நிலையில் நிற்க ஜபம் மனதைப் பழக்கி வைக்கும். ஒரு நிலையில் நிற்கப்பழக்கப்பட்ட மனத்தைக் கொண்டு லட்சியத்தை அடைவது மிகச் சுலபம்.

 

ஆதி சங்கரரின் ஜெயந்தி தினமான இன்று (04-05-2014) உலக அமைதிக்காக்க நல்வழியை நல்லபடியாக ஒவ்வொருவரும் நான்கு பேருக்காவது உணர்த்த சபதமேற்போம். 

Read 1536 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 19:23

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment