×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

"தேசபந்து" சித்தரஞ்ஜன் தாஸ்

siddharanjandas

கல்கத்தாவில் நவம்பர் மாதம் 5ம் தேதி 1870ம் ஆண்டு பிறந்தார் சித்தரஞ்ஜன் தாஸ். மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ‘மருத்துவர்கள்’ குடும்பத்தைச் சேர்ந்தவர் தாஸ். அவரது தந்தையார் Bhuben Mohan Das ஒரு வழக்குரைஞர் மட்டுமல்ல, பத்திரிக்கையாளரும் கூட. அவரது தாயார் நிஸ்தாரிணி தேவி. அவரது தந்தையார் காரணமாக தாஸ் தர்க்க ரீதியான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார், தாயாரின் பாதிப்பு காரணமாக பரந்த மனப்பான்மையும், ஆழ்ந்த விருந்தோம்பல் பண்பையும் பெற்றிருந்தார். ஒரு குழந்தையாக, தாஸ் மனதில் தேச பக்தி ஊறிப் போயிருந்தது, அவர் தேசபக்தி கவிதைகளை ஒப்பித்தார்.

 

பள்ளிப் படிப்பு முடித்த பிறகு, தாஸ் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, ஆங்கிலத்தில் சிறப்பாக செயல்பட்டார்; ஆனால் கணிதம் அவருக்கு வேப்பங்காயாக இருந்த்து. தாஸ் வங்காள இலக்கியத்தில் ஆழமான ஆர்வம் காட்டி, பங்கிக் சந்திர சட்டர்ஜி, ரவீந்திரநாத் டகோர் ஆகியோரின் படைப்புக்களைப் படித்தார். அவரது தந்தையாரின் ஆலோசனையின் பேரில் தாஸ் சட்டப்படிப்பிலும், லண்டனில் இருந்த Inner Templeலும் சேர்ந்தார். 1893ம் ஆண்டு அவர் பாரிஸ்டர் ஆனார்.

 

தாஸ் கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் சட்டத் தொழிலை மேற்கொண்டார், தேச பக்தர்களான பிபின் சந்திர பால், அரோபிந்த கோஷ் போன்றோருக்காக வாதாடும் வாய்ப்பு பெற்றார். அரோபிந்த கோஷுக்கு எதிரான வழக்கு அலிப்பூர் குண்டு வெடிப்பு சதி என்று அறியப்பட்டது. கல்கத்தாவின் தலைமை மாகாண நீதிபதியான Mr. kingsford தண்டனைகள் வழங்குவதில் சற்றும் கருணை காட்டவில்லை என்பதன் காரணமாக, அவரது உயிரின் மீது 2 கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் முயற்சி ஒரு தபால் குண்டு ரூபத்தில் வந்தது, தோல்வியில் முடிந்தது. 2வதுமுயற்சியை குதிராம் போஸும், ப்ரஃபுல்ல சக்கியும் மேற்கொண்டார்கள். இந்த முயற்சியின் விளைவாக அப்பாவி ஆங்கிலப் பெண்கள் இருவர் இறக்க நேர்ந்தது, ஆனால் kingsford பிரபு தப்ப முடிந்தது. ப்ரஃபுல்லா தற்கொலை செய்து கொண்டார், குதிராம் பிடிபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. தேடுதல் வேட்டை தொடர்ந்தது, அரோபிந்த கோஷ் தான் இந்த குண்டு வெடிப்புக்களின் பின்னணியில் இருந்த மூளை என்று ஆங்கிலேய அரசு கருதியது. சித்தரஞ்ஜன் தாஸைத் தவிர வேறு யாருமே கோஷுக்காக வாதாட தயாராக இல்லாத நிலை. மொத்த வழக்கும் 126 நாட்கள் நீடித்தது, 200 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இந்தவழக்கில் 4000 காகித ஆவணங்களும், 500 குண்டுகள், வெடிப் பொருள்கள் என விசாரணையின் போது, சாட்சிக்கு வைக்கப்பட்டன. தாஸின் நிறைவு உரை மட்டுமே 9 நாள்கள் நீடித்தது. அரோபிந்த கோஷ் விடுதலை ஆனார். கோஷிடமிருந்து வழக்குச் செலவாக தாஸ் ஒரு தம்பிடி கூட வாங்கவில்லை; இதற்கு மாறாக, வழக்கு நிறைவடையும் நேரத்தில் 15000 ரூபாய்கள் வரை அவர் இழக்க நேர்ந்தது.

 

ஒரு கூர்மையான வழக்குரைஞர் என்பதைத் தாண்டி தாஸ் ஒரு இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார். அவர் மாலா, அந்தர்யாமி (சமய உணர்வையும், பக்தியையும் வெளிப்படுத்தும் கவிதைகள்), கிஷோர் கிஷோரி (க்ருஷ்ணனுக்கும் ராதைக்கும் இடையிலான தெய்வீக காதலை வெளிப்படுத்தும் கவிதை) ஆகிய படைப்புக்களை அளித்திருக்கிறார். அரோபிந்த கோஷுடன் இணைந்து அவர் பந்தே மாதரம் என்ற மிக பிரபலமான பத்திரிக்கையை நிறுவினார். அவர் தான் Forward என்ற பத்திரிக்கைக்கு தலைமை ஆசிரியராக இருந்தார், இது தான் ஸ்வராஜ் கட்சியின் பத்திரிக்கையாக இருந்தது.

 

ப்ரிட்டிஷ் சர்க்காருக்கு எதிரான அகிம்ஸா போராட்டத்துக்கு காந்தியடிகள் விடுத்த அழைப்பு தாஸ் மனதில் எழுச்சியூட்டியது. Montford Reforms என்று அழைக்கப்படும் இந்திய சீர்திருத்தச் சட்டம் 1919ல் ப்ரிட்டனில் நிறைவேற்றப்பட்டது. இந்த சீர்திருத்தங்கள், இந்தியாவில் பொறுப்புள்ள ஒரு அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் ஏற்படுத்தப்பட்டது. தாஸ் இந்த சீர்திருத்தங்கள் ‘’போதுமானவையாகவோ, திருப்தி அளிப்பதாகவோ இல்லை என்றும், அது ஏமாற்றமளிப்பதாக இருப்பதாகவும்” தீர்மானம் நிறைவேற்றினார். ஒரு பொறுப்புள்ள அரசை இந்தியாவில் நிறுவ மனச்சாட்சிக்கு உட்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அவர் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். சில திருத்தங்களோடு, காங்கிரஸ் தாஸின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. ஒரு துணைக் குழு கல்வி நிலையங்கள், நீதி மன்றங்கள், சட்டப் பேரவைகள் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்தது. சுதந்திரம் பெறுவதற்கான சிறந்த வழி ப்ரிட்டிஷாரை உள்ளும் வெளியிலும் எதிர்கொள்ள வேண்டும் என்று கருதினார். அவர் பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் புறக்கணிப்பை ஏற்றார், ஆனால் சட்டப் பேரவை புறக்கணிப்பை ஏற்கவில்லை.

 

தனது மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க தாஸ் தனது வழக்குரைஞர் தொழிலையே விடுவதாக முழங்கினார். நவம்பர் மாதம் 17ம் தேதி 1920ம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் வருகையின் போது, நடந்த புறக்கணிப்பில் முக்கியமான பணியாற்றினார். இளவரசர் நகரில் நுழைந்த போது, அது ஆளரவமற்று இருந்தது. புறக்கணிப்பை தன்னல் முடிந்த வரை முழுமையாகவும், அமைதியானதாகவும் வைத்திருக்க தாஸ் முயற்சி செய்தார். காங்கிரஸ் திட்டங்களை அமலபடுத்த அவர் காங்கிரஸ் தன்னார்வலர் குழுவை ஏற்படுத்தினார். திலக் ஸ்வராஜ் நினைவிட நிதிக்காக அவர் ஒரு கோடி தன்னார்வலர்களை சேர்த்து, ஒரு கோடி ரூபாய்களை திரட்டினார். இந்த தன்னார்வலர்கள் அரசு அலுவலகங்கள், அந்நியப் பொருட்கள் விற்கும் கடைகள், மதுபானக் கடைகள் ஆகியவை முன்பாக போராட்டம் நடத்தின. அவர்கள் கதர் விற்பனையில் ஈடுபட்டார்கள். இதன் மூலம் அதுவரை காணாத மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டது.

 

கல்லூரிகள் புறக்கணிப்பின் விளைவாக பல மாணவர்களால் எந்த ஒரு கல்வி நிறுவனத்துக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் தாஸ் Bengal National Collegeஐ அமைத்தார். டிஸம்பர் மாதம் 1921ம் ஆண்டு தாஸ் கைது செய்யப்பட்டார். போலீஸ் காருக்குள் நுழையும் போது தாஸ் கூட்டத்தினரிடம், ‘’இந்தியாவின் ஆண்களே, பெண்களே, இது தான் நான் உங்களுக்கு விடுக்கும் சேதி. நீங்கள் துயரஙக்ளை சகித்துக் கொண்டு வெல்லத் தயாராக இருந்தால், வெற்றி தென்படுகிறது’’ என்று கூறினார். சங்குகள் முழங்கின, தேசபந்து மீது மலர்கள் தூவப்பட்டன, போலீஸ் கார் கிளம்பிய போது சுதந்திரத்துக்காக, சுதந்திரப் போராட்டத்துக்காக தியாகங்கள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேசபந்துவை மாகாண சிறையில் அடைத்த பின்னர், அவரையும், அவரது தொண்டர்களையும் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பினர். தாஸ் அடுத்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

 

தேசபந்துவும் மோதிலால் நேருவும், 1923ம் ஆண்டு ஸ்வராஜ் கட்சியை நிறுவி, சட்டப்பேரவைகளில் தொடர்ந்து பங்களிப்பை உறுதி செய்தார்கள். அந்தக் கட்சி விரைவிலேயே காங்கிரஸின் பாராளுமன்ற பிரிவாக செயல்பட்டது. வங்காளத்தில், ஸ்வராஜ் கட்சி நிறுத்திய பல வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆளுனர் தேசபந்துவை ஆட்சி அமைக்க அழைத்த போது, அவர் மறுத்து விட்டார். இந்தக் கட்சி வங்காள சட்டப்பேரவையில் பலமான ஒரு எதிர்க்கட்சியாக செயல்பட்டு, 3 அரசுகளை தோல்வியை தழுவச் செய்தது.

 

1923ம் ஆண்டு கல்கத்தா நகராட்சி சட்டம் தான் இந்தியாவிலேயே உள்ளாட்சி அரசின் வரலாற்றில் மிகப் பெரிய மைல்கல்லாக இருந்தது. ஸ்வராஜ் கட்சிக் காரர்கள் 1924ம் ஆண்டு கல்கத்தா மாநகராட்சிக்கு பெரும்பான்மை பலத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேசபந்து மேயராகவும், சுபாஷ் சந்திர போஸ் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனார்கள். நிர்வாகத்தில் சிறப்பான செயல் திறன் புகுத்தப்பட்டது, பல நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

 

தனது சட்டத் தொழிலைத் துறந்த பின்னர் தேசபந்து, கல்கத்தாவின் மிக செல்வந்தர்களில் ஒருவர் என்ற நிலையில் இருந்து மிகவும் வறியவர்களில் ஒருவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது கடன் சுமைகள் ஒரு லட்சம் ரூபாய்கள் என்ற அளவைத் தொட்டன. அவரிடம் இருந்த ஒரே சொத்து, கல்கத்தாவில் இருந்த மிகப் பெரிய கட்டிடம், இதையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்க நினைத்தார். தேசபந்து ஒரு நிதிக்கு ஏற்பாடு செய்ய நினைத்தார், இது பின்னர் காந்தியடிகளின் தலையீட்டால் கடன் செலுத்தப்பட்டு, இதன் மூலம் ஒரு கோயில் கட்டப்பட்டு, அநாதை இல்லம் ஏற்படுத்தப்பட்டு, வெகு ஜனங்களுக்கு கல்வி அளிக்கும் வகையில் தேசபந்து நினைவு நிதியாக மாற்றப்பட்டது. இந்த நிதியில் சேர்ந்த மொத்த தொகை 8 லட்சம் ரூபாய்கள். தேசபந்துவின் இல்லமே கூட பெண்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டு, சித்தரஞ்ஜன் சேவா சதன் என்ற பெயர் பெற்றது.

 

அரசுடனான போராட்டம், அடக்குமுறையான வங்காள கட்டளைச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் காரணமாக மேலும் தீவிரமடைந்தது. இதன்படி, எந்த ஒரு காரண காரியமும் இல்லாமல் தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்ய இது அதிகாரம் அளித்தது. 1925ம் ஆண்டு பெல்காமில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கு எடுத்துக் கொண்ட பின்னர் தாஸ் அதிக சுரத்தால் பாதிக்கப்பட்டு திரும்பினார். இந்த கட்டளைச் சட்டத்துக்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்பட இருக்கிறது என்று படுத்த படுக்கையாக இருக்கும் போது கேள்விப்பட்ட போது, ஜனவரி மாதம் 7ம் தேதி 1925ம் ஆண்டு, ‘’இந்தக் கருப்புச் சட்டம் விவாதத்துக்கு வருகிறது. நான் எப்பாடு பட்டேனும் இதில் கலந்து கொண்டு எதிர்க்க வேண்டும்’’ என்றாராம். அவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, 2 மருத்துவர்கள் மேற்பார்வையில் பேரவைக்கு கொண்டு சென்றார்கள். மசோதா தோற்றது.

 

ஜூன் மாதம் 16ம் தேதி 1925ம் ஆண்டு தேசபந்துவின் நிலை மேலும் மோசமாகியது. அவர் டார்ஜீலிங்கில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது இறந்தார். தேசபந்துவின் மரணம் பற்றிக் கேள்விப் பட்டவுடன் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ‘’தேசபந்துவின் மரணம், தேசத்துக்கே ஏற்பட்ட ஒரு பெரும் துன்பம்’’ என்று வருத்தப்பட்டாராம்.

Read 15205 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 18:27

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment