×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஷரியா என்பது சட்டமல்ல - ஃபத்வா என்பது தீர்ப்பல்ல

Tuesday, 05 August 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தளபதி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். கலெக்டரும் எஸ்பியும் அமர்ந்து கொண்டு லோக்கல் தாதாவையும் அவனது கைத்தடியையும் கண்டிப்பார்கள். நீங்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்கிறீர்கள் என்பார் எஸ்.பி. உடனே தாதாவின் கைத்தடி ஒரு வசனம் சொல்வார். ”கலெக்டர் சார்! நீங்க எப்பவாவது ஏழையா இருந்திருக்கீங்களா? பட்டினியா இருந்திருக்கீங்களா? பைல நாலணா காசில்லாம அலைஞ்சிருக்கீங்களா? வயிறு காலியா இருக்கும் போது கோர்ட்டு செலவு வக்கீல் செலவு கொடுக்க முடியாது சார். நூறு தடவை கோர்ட்டு ஏறி இறங்க முடியாது. என்ன செய்வாங்க. அவங்களுக்கு வேண்டியது நியாயம். அது எங்க கிடைக்குதோ அங்க போவாங்க.”

04.09.21.SwordInjustice-X

இதே போன்ற ஒரு வாதத்தை வைத்து விஸ்வலோசன் மதன் என்பவர் 2005ல் தொடர்ந்த வழக்கில் (WRIT PETITION (CIVIL) NO. 386 OF 2005) உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு முன் அளித்த தீர்ப்பை எதிர்த்து பல செக்கூலரிச புத்திஜீவிகள் வாதாடுகிறார்கள். சில முஸ்லிம் அறிஞர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் வஹாபியச் சிந்தனையில் ஊறிப்போன பலரும் இப்படித்தான் பேசுகிறார்கள். ”நீதிபதி சார்! நீங்க எப்பவாவது வஹாபி முஸ்லிமா இருந்திருக்கீங்களா? 4 பொண்டாட்டி கட்டி ஒருத்திக்கு நாலுங்கிற கணக்கில 16 புள்ள பெத்திருக்கீங்களா? வேற ஒருத்தி மேல ஆசை வந்துட்டா இருக்கிற நாலுல ஒருத்திய காரணமே சொல்லாம தலாக் தலாக் தலாக் அப்படின்னு மூணு வாட்டி சொல்லிட்டு வீட்டவிட்டு பத்திவிட்ருக்கீங்களா? மருமகளை பலாத்காரம் செஞ்சு அவள் மகனுக்கு இனி மனைவியில்லை அப்படின்னு ஃபத்வா வாங்கிருக்கீங்களா? இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கும் போது கோர்ட்டு செலவு வக்கீல் செலவு கொடுக்க முடியாது சார். நூறு தடவை கோர்ட்டு ஏறி இறங்க முடியாது. என்ன செய்வாங்க? அவங்களுக்கு வேண்டியது அவங்களுக்கான நியாயம். அது எங்க கிடைக்குதோ அங்க போவாங்க.”

இந்த ரீதியில் நீதிமன்றத்தால் வழக்குகளில் ஆஜராகத் தடை செய்யப்பட்ட வக்கீல் ராஜீவ் தவன் லண்டன் பத்திரிகை ஒன்றில் பொறுமுகிறார். இந்தத் தீர்ப்பைக் கேட்டு ஒரு வேளை உணவைத் தவிர்த்ததாகச் சொல்கிறார் இவர். உலமாக்கள் வருந்துகிறார்கள். நமது ஆங்கிலேயச் சட்ட அமைப்பில் முஸ்லிம்களை திணிப்பது தகாது என்கிறார் தவன். அதே சட்ட அமைப்பில் ஹிந்துக்களைத் திணித்திருப்பது பற்றி வாய்திறந்தால் மதசார்பின்மை மாசுபடும் என்பதால் அது பற்றிப் பேசவில்லை அவர். ஆனால் நீதிபதி ஹிந்துத்வ அமைப்புகளுக்கு அனுசரணையாகத் தீர்ப்பளித்திருப்பதாகப் புலம்புகிறார்.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2690781/Supreme-Courts-ruling-fatwas-faulty.html

மேற்கத்திய நாடுகளில் ஷரியா சட்டப்படியான நீதிமன்றங்களே உள்ளன. பிரிட்டனில் 5 ஷரியா நீதிமன்றங்கள் 2008ல் தொடங்கப்பட்டன. ஆனால் நம் நாட்டில் இருக்கும் இந்த தாருல் உலூம்கள் சட்ட அங்கீகாரம் பெற்றவை அல்ல. ஆகவே இவற்றைப் புறக்கணித்து ஷரியாவைச் சட்டபூர்வமானதாக ஆக்கினால் மட்டுமே முஸ்லிம்களுக்குப் பிரச்சினை இருக்காது என்கிறார் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் ஆலோசகர் சைஃப் மகமுது.

சிவில் வழக்கு என்பதால் நடுரோட்டில் போக்குவரத்தை பாதிக்கும் படியாக கும்பல் கூடித்தொழுவது, அயல்நாட்டுத் தூதரகத்தில் கல்லெறிவது, எங்கோ நடந்த விவகாரங்களுக்கு எங்கேயோ கலவரம் செய்வது போன்ற சம்பவங்களை இங்கே பேச இடமில்லை. உரிமையியல் சிக்கல்கள் என்று அறியப்படும் நிலத்தகராறு, கணவன் மனைவி பிரச்சினை, கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள், விவாகரத்து, அனைத்துவிதமான காதல்கள், இப்படி பலவற்றில் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் மத அறிஞர்கள் தீர்ப்புச் சொல்கிறார்களே! இதெல்லாம் நம் நாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் இல்லையே. நியாயம் என்பது எள்முனையளவும் இல்லாத தீர்ப்புகளாக இவை இருக்கின்றன. இதை எப்படி ஒரு பன்முகச் சமுதாயம் ஏற்கமுடியும் என்ற கேள்வியுடன் தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வலோசன் மதன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் இஸ்லாமிய நீதி என்று நடத்திவரும் கட்டப்பஞ்சாயத்துக்களைத் தடை செய்யவேண்டும் என்று கோரினார். மத்திய மாநில அரசுகளுக்கு தாருல் காஜா எனும் இஸ்லாமிய கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளை உடனடியாகக் கலைத்துவிடவும் இவர்கள் ஃபத்வா என்ற பெயரில் வழங்கிவரும் தீர்ப்புகள் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பளிக்கவும் உத்தரவிடக் கோரினார். அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தையும், இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனங்களையும் இதுபோன்ற மதம் சார்ந்த தீர்ப்புகளை அளிக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களைப் பயிற்றுவிப்பதைத் தடை செய்யவும் வழக்கில் கோரப்பட்டது. அரசு அளித்த பதில் மனுவில் முஸ்லிம் உலமாக்கள் அளிக்கும் தீர்ப்புகள் அவர்களின் கருத்துக்கள்தானே தவிர சட்டப்பூர்வமான தீர்ப்புகள் அல்ல என்று தெரிவித்தது. இந்திய அரசியல் சாசனம் தவிர்த்து வேறு எந்த அடிப்படையில் வழக்கில் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அத்தகைய முடிவுகளுக்குச் சட்ட அங்கீகாரம் இல்லை என்றும் தன் நிலைப்பாட்டைச் சொன்னது அரசு.

வாதப் பிரதிவாதங்கள் நடந்து முடிந்தபிறகு நீதிபதிகள் பிநாகி சந்திர கோஷ், சந்திரமௌலி குமார் பிரசாத் ஆகியோர் கடந்த 2014 ஜூலை மாதம் 7ஆம் நாள் தங்கள் தீர்ப்பை வழங்கினர். தீர்ப்பின் சாரம் ஃபத்வாக்கள் தீர்ப்புகள் அல்ல, ஷரியா சட்டம் அல்ல என்பதே. தீர்ப்பின் விவரங்களைப் பார்ப்போம்.
http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=41747

அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் என்பது உலமாக்களைக் கொண்ட ஒரு அமைப்பு. உலமாக்கள் இஸ்லாமிய மதச் சட்டம், இறையியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள். மனுதாரர் தெரிவித்தபடி இந்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்திய அரசியல் சாசனப்படியான நீதிபரிபாலன முறையில் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைப்பது கடினமாக இருப்பதாகச் சொல்லி ஒரு தனிப்பட்ட நீதித்துறை அமைப்பை நம் நாட்டில் உருவாக்க முனைகிறது. மேலும் நீதித்துறையில் வழக்கு நடத்துவதில் ஏற்படும் காலதாமதங்கள் ஏழ்மையில் வாழும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்துகிறது என்றும் இந்த வாரியம் சொல்கிறது. இதனால் முஸ்லிம்களுக்கு நீதி வழங்க ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றங்களை அமைக்கவேண்டியதானது என்றும் இந்த வாரியம் கூறுகிறது.

நாட்டில் தாரும் காஜா என்ற பெயரில் இது போன்ற இணை நீதித்துறையை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு மட்டுமான தனிச்சட்டம், தனி நீதி என்று அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளாக இந்த ஷரியா நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுச் செயலாற்றி வருகின்றன. இது போன்ற இஸ்லாமிய மத அடிப்படையில் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நபர்களைப் பயிற்றுவிக்க பயிற்சிவகுப்புகள் நாடு முழுவதும் இந்த வாரியத்தால் நடத்தப்படுகின்றன. இதில் பயிற்சி பெற்ற உலமாக்கள் எனும் இஸ்லாமிய மத அறிஞர்கள் நாடுமுழுவதிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கும் நீதிபதிகளாக சட்டவிரோதமான இணை நீதிமன்றங்களை நடத்தி வருகிறார்கள். இந்த கட்டப்பஞ்சாயத்துக்களில் நீதி முறையாக வழங்கப்படுவதில்லை என்பது மனுதாரரின் வாதம். பல ஃபத்வாக்களில் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது இந்த வாதத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

இம்ரானா என்ற 28 வயதுப் பெண், 5 குழந்தைகளுக்குத் தாய், தன் கணவனின் தந்தையால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகிறார், அவரது மணவாழ்வின் நிலை குறித்தும் ஐந்து குழந்தைகளின் நிலை குறித்தும் கேள்வி எழுந்தது. இதில் தாருல் உலூம் அளித்த ஃபத்வா “அந்தப் பெண் தன் கணவனின் தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்பது சாட்சிகளால் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது பலாத்காரம் செய்த ஆண் ஒப்புக்கொண்டாலோ ஹராம் முஷஹரத் நிரூபிக்கப்படுகிறது. அவள் தன் கணவனுக்கு சட்டப்பூர்வமான மனைவியாக வாழத் தகுதியற்றவள் ஆகிறாள். தன் தந்தை பலாத்காரமாகவோ அல்லது சம்மதத்துடனோ உறவுகொண்ட ஒரு பெண்ணை மகன் மனைவியாகக் கொண்டு வாழமுடியாது. ஏனெனில் ‘உன் தந்தை புணர்ந்த பெண்ணை நீ மணந்து கொள்ளாதே’ என்று குரான் சொல்கிறது.” இந்தக் கருத்தைச் சொல்லி மணவாழ்வை முறித்து கணவன் மனைவி சேர்ந்து வாழக்கூடாது என்று தீர்ப்பளித்தது ஷரியா கட்டப்பஞ்சாயத்து.

(மகன் மணந்த பெண்ணைப் புணராதே என்று குரான் சொல்லவில்லையா என்று கேட்டால் நீங்கள் சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் மதவாத நச்சுப்பாம்பாக அறியப்படுவீர்கள்.)

இதே போல அசூபி என்ற பெண்ணை அவளது மாமனார் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அந்தக் குற்றத்துக்கு காவல்துறையில் புகார் தரக்கூடாது என்று ஷரியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாமனார் மீது குற்றத்தை நிரூபிக்க சாட்சி இருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் புகாரை பரிந்துரைத்தாலோ மட்டுமே குற்றம் நிரூபிக்கப்படும் என்றது ஷரியா கட்டப்பஞ்சாயத்து.

இன்னொரு ஃபத்வா 19 வயது ஜட்சொனாராவை கணவனை விவாகரத்து செய்துவிட்டு பலாத்காரம் செய்த மாமனாரைக் கணவனாக ஏற்கச் சொன்னது. இதுவரை கணவனாக இருந்தவனை மகனாகப் பார்க்கச் சொன்னது. இதுவரை தந்தை நிலையில் இருந்தவனைக் கணவனாக ஏற்கச் சொன்னது.

இத்தகைய ஃபத்வாக்கள் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது. இந்த வாரியம் நாடு முழுவதும் இத்தகைய கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளை முஸ்லிம் சட்டப்படி அமைக்க விழைகிறது. இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. நீதிநிர்வாகம் என்பது அரசாங்கத்தின் கடமை அது தனியார் வசம் போவது மக்கள் நல்வாழ்வுக்கும் சட்டப்பூர்வமான வாழ்வு முறைக்கும் உகந்ததல்ல. மேற்கண்ட சம்பவங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் விஸ்வலோசன் மதன் வழக்கினைத் தொடர்ந்தார். இதில் ஃபத்வாக்களையும் ஷரியாவையும் சட்டவிரோதம் என்று அறிவிப்பதோடு இதுவரை அளிக்கப்பட்ட ஃபத்வாக்கள் அனைத்தும் செல்லாது என்றும் அவை சட்டவிரோதமானவை என்றும் அறிவுறுத்தக் கோரினார் மதன்.

மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஃபத்வாக்கள் வெறும் கருத்துக்களே தீர்ப்புகள் அல்ல என்று சொன்ன போதும், இந்த தாருல் காஜா எனப்படும் அமைப்பு ஒரு பிணக்குத் தீர்வுக்கான மாற்று முறையாகக் கொள்ளலாம் என்றும் இந்த தாருல் காஜாக்கள் உரிமையியல் பிரச்சினைகளையே கையாள்வதால் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள் வராது என்றும், செலவு குறைந்த முறையில் நீதிமன்றத்துக்கு வெளியிலான தீர்வுகளைத் தர இவ்வமைப்பு உதவக்கூடும் என்றும் சொன்னது. இதற்கு சட்டப்பூர்வமான தீர்ப்பாய அங்கீகாரம், தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், ஆகியவை இல்லை என்பதால் இணை நீதிமன்றங்களாக இந்தக் கட்டப்பஞ்சாயத்துக்களைக் கருத முடியாது என்றும் சொன்னது.

அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தனது மனுவில் தாருல் காஜாக்களை ஏற்படுத்துவதையோ, காஜிக்களைப் பயிற்றுவித்து ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ஃபத்வா வழங்குவதையோ மறுக்கவில்லை. அது ஒரு இணக்கமான பிணக்குத் தீர்வு முறை என்றும் சட்டத்தின் பாற்பட்ட நீதித்துறைக்குப் போட்டியாகவோ, இணையாகவோ செயல்படாது என்றும் கூறியது.

தாருல் உலூம் என்ற இஸ்லாமிய மத அறிஞர்களைப் பயிற்றுவிக்கும் அமைப்பு தன் மனுவில் இம்ரானா வழக்கின் ஃபத்வா ஹனாஃபி சட்டமுறையின்படி (ஃபிக் எ ஹனாஃபி) சரியானது என்றும் ஹனாஃபி முறை குரான், ஹதிஸ் இவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியது. ஆனால் ஃபத்வாக்களை நடைமுறைப்படுத்தும் சட்டப்பூர்வ அதிகாரம் தனக்கில்லை என்றும் அது ஒத்துக் கொண்டது. ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள ஈமான்களான முஸ்லிம்கள் ஃபத்வாக்களைப் பின்பற்றுவார்கள் என்றும் அதை மீறுவோர் இறைவனின் சட்டத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றும் அவ்வமைப்பு கூறியது.

மத்தியப்பிரதேச அரசு ஃபத்வாக்கள் சட்டத்தின் முன் எந்தவித மதிப்பும் கொண்டவையல்ல என்று தெளிவுறக் கூறியது. உத்திரப்பிரதேச அரசு ஃபத்வாக்கள் ஆலோசனைகள் மட்டுமே தீர்ப்புகள் அல்ல என்றது. ஆனால் முஸ்லிம்கள் நீதிமன்றங்களை அணுகுவதை தாருல் காஜாக்கள் தடுக்க முடியாது என்றும் ஆகவே அவை இணை நீதிமன்றங்கள் அல்ல என்றும் உ.பி அரசு கூறியது.

காஜி அல்லது முஃப்தி எனப்படும் மத அறிஞர்கள் தங்கள் கருத்துக்களான ஃபத்வாக்களை யார் மீதும் எந்த வகையிலும் திணிக்க முடியாது. தங்கள் ஃபத்வாவுக்கு மிரட்டிப் பணிய வைப்பதும் கூடாது. மொகலாயர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஃபத்வாவுக்கு இருந்த அங்கீகாரமோ மதிப்போ சுதந்திர பாரதத்தில் கிடையாது. யாருக்கு எதிராக ஃபத்வா பிறப்பிக்கப்பட்டாலும் அவர்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும். ஃபத்வாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அவசியமில்லை. ஃபத்வாவை ஏற்கத் தேவையில்லை. புறக்கணிப்பது சட்டபூர்வமானதே.

அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் “முஸ்லிம்களுக்கான ஒரு தனிப்பட்ட நீதி நிர்வாக அமைப்பு நாடு முழுதும் அமைக்கப்படவேண்டும் என்றும், முஸ்லிம்கள் தங்களுக்கான ஒரு நீதி நிர்வாக அமைப்பு நாடு முழுதும் இருக்கிறது என்றும் தங்கள் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மத அறிஞர்கள் உள்ளார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் விழைகிறது. வாரியத்தின் சொற்களில் “அல்லாவின் புத்தகத்தையும் ரசூலின் சுன்னத்தையும் கைகளில் ஏந்திக் கொண்டு இவ்விரண்டின் அடிப்படையில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு சிக்கல் தீர்க்கப்படவேண்டும். இந்த முறை முஸ்லிம்களை முஸ்லிம் நீதிமன்றங்களுக்குக் கொண்டுவரும். அவர்களுக்கு நீதி கிடைக்கும்.” நீதி கிடைக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் இந்த அமைப்புக்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

தாருல் காஜாக்களின் அமைப்போ, அவர்களது ஃபத்வா கருத்துக்களோ இருக்கவேகூடாது என்பதோ இருப்பது சட்டவிரோதம் என்பதோ இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் கிடையாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. இந்த அமைப்பு நீதிமன்றத்துக்கு வெளியே சிக்கல்களை சுமுகமாகத் தீர்த்துவைக்க முயற்சி செய்யலாம். ஆனால் இவர்களது முடிவுகளில் திருப்தி இல்லாதோர் நீதிமன்றங்களை அணுகி சட்டப்பூர்வமான தீர்வுகளைப் பெறமுடியும். ஃபத்வாக்களை ஏற்பதோ மறுப்பதோ தனிநபர் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் மதத்தின் அதிகாரம் கொண்டு ஃபத்வாக்கள் தரப்படுவதால் அவற்றால் நீதி மறுக்கப்படுவோர் மாற்று வழி தேடுவதற்குள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று சொன்னது நீதிமன்றம்.

தாருல் உலூம் “கடவுளுக்கு அஞ்சும் யாரும் ஃபத்வாக்களை ஏற்பார்கள்” என்கிறது. ஃபத்வாக்களை ஏற்பதும் புறக்கணிப்பதும் சம்பந்தப்பட்ட நபர்களின் உரிமை என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தாருல் உலூம் அதே பத்திரத்தில் “கடவுளுக்கு அஞ்சி வாழ்வோர், தாங்கள் கடவுளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்று நம்புவோர், தங்கள் செயல்களுக்கான பின்விளைவுகளைக் கடவுளின் ஆணைப்படிச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று உணர்வோர் ஃபத்வாக்களை மதித்து ஏற்பார்கள்” என்று சொல்கிறது. இது அப்பட்டமான மதரீதியான மிரட்டல்.

இம்ரானா விவகாரத்தில் மாமனாரின் காம வெறிக்குப் பலியான அந்த அப்பாவிப் பெண் தண்டிக்கப்பட்டாள். அவளோ அவளது கணவனோ கருத்துக் கேட்டு ஷரியா நீதிமன்றத்தை அணுகவில்லை. யாரோ சம்பந்தமில்லாத நபரான ஒரு பத்திரிகையாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவளது திருமணம் முறிக்கப்பட்டு அவள் கணவனுடன் வாழ தடை விதிக்கப்பட்டது. வன்கொடுமைக்கார மாமனாருக்கு எந்த தண்டனையும் இல்லை. இது நீதியே அல்ல.

சட்டத்தின்பாற்பட்ட ஆட்சி நடைபெறும் நாட்டில் இப்படி ஒரு சிக்கல் தீர்வு முறைகள் ஏற்கப்பட முடியாதது. மதம் சார்ந்த விவகாரங்களில் ஃபத்வா வெளியிடுவது அந்த மதத்தைப் பின்பற்றுவோருக்கான தனிப்பட்ட விவகாரம். ஆனால், ஒரு தனிநபரின் விவகாரத்தில் சம்பந்தமில்லாத ஒருவரின் வேண்டுகோளின்படி பாதிக்கப்பட்டவருக்குத் தண்டனையும், குற்றவாளிக்கு விடுதலையும் வழங்கும் ஒரு முறைமையை நீதி நிர்வாகம் என்று ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட நபரோ அல்லது விவகாரத்தில் நேரடியான ஈடுபாடு உடையவரோ கேட்டால் மட்டுமே அந்த விஷயங்களில் ஃபத்வா வழங்கப்படலாம்.

ஆனால் இரு தரப்பாரில் ஒருவர் ஃபத்வாவை ஏற்கவில்லை என்றாலோ அல்லது இந்த பிணக்கு தீர்ப்பு முறைக்கு உடன்படவில்லை என்றாலோ அவர்களைக் கட்டுப்படுத்தி தங்கள் கருத்தை ஏற்கச்செய்யும் அதிகாரம் இந்த காஜி, முஃப்தி ஆகியோருக்கோ அல்லது தாருல் உலூம் அமைப்புக்கோ இல்லை.

முஸ்லிம் தனிநபரின் உரிமை, தனிநபர் நிலை, கடமைகள் ஆகியவற்றில் அந்த நபர் கேட்டுக் கொண்டால் மட்டுமே ஃபத்வா வழங்கவேண்டும். சம்பந்தமில்லாத நபர்களின் வற்புறுத்தலில் வழங்கப்படும் ஃபத்வாவை ஏற்கத் தேவையில்லை. மதத்தின் பெயரால் பாதிக்கப்பட்டோரைத் தண்டிப்பதோ, அப்பாவிகளை துன்பத்துக்கு ஆளாக்குவதோ, இரக்கமின்றி நடந்து கொள்வதோ அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும். மனிதாபிமானமற்ற செயல்களுக்கு மத நம்பிக்கை பயன்படுத்தப்படக் கூடாது. சட்ட அங்கீகாரமற்ற எந்த ஒரு அமைப்பும் யாரையும் கட்டுப்படுத்தி எந்த ஒரு கருத்தையும் மதத்தின் பெயராலோ வெறெந்த நம்பிக்கையின் பெயராலோ திணிக்கமுடியாது.

சட்ட அங்கீகாரம் இல்லாத எந்த ஒரு அமைப்பும் எந்த ஒரு பிரச்சினையிலும் தீர்ப்புக்கூற உரிமையில்லை. அப்படித் திணிக்கப்படும் கருத்துக்கு சட்டப்படியான வலு இல்லை. சட்ட அங்கீகாரமில்லாத ஃபத்வாக்களை எவ்வித
மிரட்டலின் மூலமாகவும் நடைமுறைப்படுத்த முடியாது. அப்படி நடைமுறைப்படுத்த முயலும் யார் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பினை சரியான முறையில் அமலாக்கினால் நாட்டில் சட்டப்படியான ஆட்சி நிலவும். ஹிந்துக்களுக்கு மட்டும் மதம் சாராத சட்டத்தின்படியான ஆட்சி முஸ்லிம்களுக்கு மதம் சார்ந்த சட்டத்தின்படி நீதி என்ற அநீதி இந்தத் தீர்ப்பின் மூலமாக தகர்க்கப்பட்டிருக்கிறது. குரான், ஷரியா என்று நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்படாமல் தனித் தர்பார் நடத்திவந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அவர்களை ஊக்குவிக்கும் மதத் தலைவர்களும் இந்தத் தீர்ப்பின் மூலமாகச் சட்ட அங்கீகாரம் அற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஷாபானு வழக்குப் போல நீதிமன்றத்தின் நீதியைக் கேலிக்கூத்தாக்கி ஓட்டுக்கு மாரடிக்கும் அரசு மத்தியில் இல்லை என்ற நம்பிக்கையுடன் நாட்டின் அரசியல் சாசனத்தை அனைத்திலும் மேலானது என்று உயர்த்திப் பிடித்த இந்தத் தீர்ப்பை வரவேற்போம். வந்தே மாதரம்!

Read 2040 times
Rate this item
(3 votes)
Last modified on Tuesday, 05 August 2014 18:00

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link ஆர்யத்தமிழன் Friday, 08 August 2014 15:08 posted by ஆர்யத்தமிழன்

    சபாஷ்

Leave a comment