மத்திய அரசின் சுற்றறிக்கை
ஆங்கிலேய கலாச்சார கிளப்புகளில் தமிழ் உடையான வேட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகப் பொங்கிய திராவிட இனவெறியாளர்களுக்கு, தமிழ் கலாச்சாரத்தைப் “பாதுகாக்க” மற்றொரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது மத்திய அரசு. மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் (CBSE Schools) ஆகஸ்டு 7 முதல் 13 வரை “சம்ஸ்க்ருத வாரம்” கொண்டாட வேண்டுமென்றும், அச்சமயத்தில் மாணாக்கர்களுக்குக் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் ஒப்பித்தல் போன்ற போட்டிகளை நடத்துவது, சம்ஸ்க்ருத இலக்கியங்களைப் போதிப்பது போன்ற சம்ஸ்க்ருத வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்களை நடத்தவேண்டும் என்றும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்களில் உள்ள மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது. பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமஸ்கிருத மொழி கற்றல்-கற்பித்தல் ஆகியவற்றை பயிற்றுவித்து, சமஸ்கிருதத்தை வளர்க்கவும், சமஸ்கிருத மொழி கற்கும் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் உருவாக்கவும், சமஸ்கிருத மொழியில் படைப்புத் திறனை ஊக்குவிக்கவும் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் சி.பி.எஸ்.இ. இயக்குநர் தெரிவித்துள்ளார். அது மாதிரியான விஷயங்களை மாநில அரசும் நடத்தி சம்ஸ்க்ருத மொழி வளர்ச்சிக்கு உதவலாம் என்று ஒரு ஆலோசனையும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திராவிட இனவெறியாளர்களின் எதிர்ப்பு
இதைப் பற்றிய அறிவிப்பு ஊடகங்களில் வந்ததும் நமது திராவிடக் கட்சிகளின் தலைவர்களுக்கெல்லாம் “தமிழ் பற்று” பொங்கி எழுந்தது. மத்திய அரசின் பள்ளிகளில் சம்ஸ்க்ருத வாரம் கொண்டாடிவிட்டால் தமிழ் அழிந்து போய்விடும் என்கிற மாபெரும் கவலை அவர்கள் மனத்தை ஆட்கொள்ள, தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வீருகொண்டு எழுந்தனர்.
முதன் முதலில் பொங்கியவர் ம.தி.மு.க தலைவர் வைகோ அவர்கள்தான். அவரைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாசும் எதிர்ப்பு தெரிவித்தார். இருவரும், சி.பி.எஸ்.இ. இயக்குநர் சுற்றறிக்கையின் முதல் வரியிலேயே 'சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாய்' என்று குறிப்பிட்டிருந்ததைக் கண்டித்தனர்.
சி.பி.எஸ்.இ. இயக்குநரின் சமஸ்கிருத வார கொண்டாட்டம் குறித்த சுற்றறிக்கையானது, பல்வேறு தேசிய இனங்கள், பல மொழிகள், கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்நாட்டு மாணவர்களின் உள்ளங்களில் நச்சு கருத்தை விதைத்திடும் திட்டமிட்ட சதியாகும்; ஏனைய தேசிய இனங்களின் தாய் மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமஸ்கிருத மொழியைத் திணிக்கும் முயற்சியாகும்; ஆகவே இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரான இந்த சுற்றறிக்கையை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும், என்பதே இவர்கள் எதிர்ப்பின் சாராம்சம்.
அவர்களைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடிக்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், “பழம்பெரும் மொழியான தமிழ் மொழியின் அடிப்படையில், தமிழகம் பாரம்பரிய கலாசாரங்களைக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு சமூகநீதி மற்றும் மொழி ஆகியவை வலிமையான இயக்கமாக உள்ளன. எனவே சமஸ்கிருத வாரம் என்ற ஒரு கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக அரசு சார்பில் தமிழகத்தில் கொண்டாடுவது மிகவும் பொருத்தமற்றது. அந்தந்த மாநிலத்தின் மொழிவாரியான பாரம்பரியத்தின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் செம்மொழி வாரம் என்ற ஒரு நிகழ்வை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமாக அமையலாம். எனவே அந்தந்த மாநிலங்கள் மற்றும் அங்குள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஆகியவை, அந்த மாநிலத்தில் உள்ள கலாசாரம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டாட்ட விழாக்களை நடத்துவதற்கு ஏதுவான வகையில் கடிதத்தில் மாற்றங்களைச் செய்யும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீங்கள் அறிவுறுத்த வேண்டும். இந்தியா போன்ற பல பிரிவுகளைக் கொண்ட நாட்டில், இதுபோன்ற விழாக்களை நடத்துவதுதான் கலாசார மற்றும் மொழி உணர்வுகளுக்கு பொருத்தமாக இருக்கும்” என்று எழுதியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரான தி.மு.க தலைவர் கருணாநிதியும், “சமஸ்கிருதத்தைவிட தமிழ்மொழி சிறந்தது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அம்மொழியைத் திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்கிறோம். சரஸ்வதி, சமஸ்கிருதம் என்ற அடிப்படை வாதத்தை கைவிட்டு, மக்களின் பிரச்னைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவரான தொல்.திருமாவளவன், மத்திய அரசின் சம்ஸ்க்ருத வாரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெயலலிதாவுக்குப் பாராட்டு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், “சம்ஸ்க்ருதம் ஒரு செத்துப்போன மொழி; மத்திய பா.ஜ அரசு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை மக்களின் மீது திணிக்கிறது” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பேர் எதிர்ப்புத் தெரிவித்த பிறகு தாங்கள் சும்மாயிருப்பது தவறு என்று நினைத்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தேச விரோத கும்பல்களின் எதிர்ப்பு
நமது நாட்டில் எந்த விதமான நல்ல விஷயங்கள் நடந்தாலும் அவற்றை எதிர்ப்பதற்கெனவே சில தேச விரோத கும்பல்கள் உள்ளன. பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம், ஆன்மீகப் பாரம்பரியம், தேச ஒற்றுமை, பாரத மொழிகள் வளர்ப்பு என்று எந்தவிதமான பயனுள்ள விஷயமானாலும் அதை எதிர்த்துப் போராட்டங்கள் என்கிற பெயரில் துவேஷத்தையும் பிரிவினைவாதத்தையும் பரப்ப முயலும் கும்பல்கள் இவை. அனைத்து நல்ல விஷயங்களையும் பார்ப்பன சதியாகவும் ஆர்.எஸ்.எஸ் பாசிசமாகவும் பார்க்கும் இந்த தேச விரோத கும்பல்கள், சம்ஸ்க்ருத வார கொண்டாட்டத்தையும் அதே கண்ணோடு நோக்கி, போராட்டங்களில் இறங்கின.
திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், அம்பேத்கார் மக்கள் இயக்கம் ஆகிய தேச விரோத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை போன்ற நகரங்களில் கூடி தேச விரோத கோஷங்களைப் போட்டு போராட்டங்கள் நடத்தினர்.
பழம்பெருமை வாய்ந்த சம்ஸ்க்ருதத்தை வளர்ப்பது மத்திய அரசின் கடமை
இவ்விஷயத்தைச் சற்று உள்ளார்ந்து கவனித்தோமானால், மேற்கூறப்பட்ட தலைவர்கள் அனைவரும் வெற்று மொழி அரசியலைச் செய்துள்ளனர் என்பது விளங்கும். பாரத தேசத்தின் அனைத்து மொழிகளிலும் சம்ஸ்க்ருத்ததின் கலப்பைக் காணலாம். இது மொழி அறிஞர்கள் அனைவரும் ஒத்துக்கொண்ட ஒரு உண்மை. சம்ஸ்க்ருதம் பாரதத்தின் முதன்மையான மொழி என்றால் அது மிகையாகாது. நமது தேசத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மொழியாக சம்ஸ்க்ருதம் விளங்குகிறது. வேதங்கள், இராமாயண மஹாபாரத இதிஹாசங்கள், புராணங்கள், பகவத் கீதை, பாகவதம், தேவி பாகவதம், மற்றும் மஹாகவி காளிதாஸர் போன்ற மாபெரும் கவிஞர்களின் இலக்கியங்கள் என அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டவைதான். ஆகவே, சம்ஸ்க்ருத மொழியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதை வளர்ப்பதும் மத்திய அரசின் கடமையாகும். எண்பது சதவிகிதம் ஹிந்துக்கள் உள்ள இந்நாட்டின் அரசு, ஹிந்து கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பறைச் சாற்றும் சம்ஸ்க்ருத மொழியைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவதைக் குற்றம் கூற முயல்வது அன்னிய சக்திகளின் தீய செயல்களுக்குத் துணை போவது போலாகும். பாரதத்தில் உள்ள பல மொழிகள் பேசும் பலதரப்பட்ட மக்கள் அனைவரையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாகத் திகழ்வது சம்ஸ்க்ருத மொழிதான்.
மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சுற்றறிக்கை மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை மட்டும்தான் சம்ஸ்க்ருத வாரம் கொண்டாடச் சொல்கிறது. எனவே மாநில அரசுகள் அதை எதிர்க்க முடியாது. மொழித்திணிப்பு என்கிற பெயரிலும், கலாச்சாரத் தாக்குதல் என்கிற பெயரிலும் அவ்வாறு எதிர்ப்பது அபத்தம் என்பதோடு மட்டுமல்லாமல், மக்களிடையே மொழிப்பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் தேச விரோத செயலுமாகும்.
பிரிக்க முடியாத தமிழ்-சம்ஸ்க்ருத இணைப்பு
பாரதத்தின் இரு பழம்பெரும் மொழிகள், செம்மொழிகள், தமிழும் சம்ஸ்க்ருதமும். இவ்விரண்டையுமே இறைவனின் இரு கண்களாகப் போற்றுவது நமது பண்பாடு. இரண்டும் இரண்டறக்கலந்தமொழிகள். சங்ககாலத் தமிழ் மன்னர்கள் யாராவது சம்ஸ்க்ருதத்தை எதிர்த்துள்ளதாக நமது வரலாற்றில் கண்டிருக்கிறோமா? இரண்டு மொழிகளையும் அரவணைத்து பாதுகாத்து வளர்க்கத்தானே செய்தனர்? அவர்கள் அவ்வாறு செயல்பட்டதால் தமிழ் மொழி அழிந்துவிட்டதா? அல்லது தமிழ் கலாச்சாரம் தான் மங்கிவிட்டதா?
சொல்லப்போனால், இன்று நமது பேச்சு வழக்கில் இருக்கும் தமிழில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் சம்ஸ்க்ருத வார்த்தைகள் கொண்டது. சம்ஸ்க்ருதத்தை எதிர்த்துக் கொடி பிடிக்கும் இந்தத் திராவிட இனவெறியாளர்கள் முன்னிறுத்தும் தமிழ்தாய் வாழ்த்தில்கூட 40 சதவிகித வார்த்தைகள் சம்ஸ்க்ருத வார்த்தைகளே! இரண்டுமே நமது பெருமைமிகு கலாச்சாரப் பாரம்பரியத்தின் செழுமையைப் பகிர்ந்துகொள்கின்றன. தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் பிரிப்பதென்பது இயலாத காரியம்.
எதிர்ப்பு இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழகம் மட்டுமே. வேறு எந்த மாநிலத்தவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் சம்ஸ்க்ருதத்தின் முக்கியத்துவத்தையும் பெருமையையும் மனமார உணர்ந்திருக்கிறார்கள். தமிழ் ஹிந்துக்களுக்கு அவமானம் தேடித்தருவதற்காகவே திராவிட இனவெறிக் கட்சித் தலைவர்கள் இந்த மொழி வெறி அரசியலைக் கையாளுகிறார்கள். ஆனால் இவர்கள் தோல்வி அடையப்போவது என்னமோ உறுதி. இன்றைய தலைமுறையினர் பல மொழிகளைக் கற்க விரும்புகிறார்கள். தமிழகத்திற்கு அப்பால் உள்ள மாநிலங்களுக்கும் மற்ற உலக தேசங்களுக்கும் சென்று அங்கேயுள்ள இளைய தலைமுறையினருடன் நட்பு பாராட்ட விரும்புகிறார்கள். சம்ஸ்க்ருதம், ஹிந்தி போன்ற மற்ற இந்திய மொழிகள் மட்டுமல்லாமல், ஜெர்மன், ஃபிரெஞ்சு போன்ற வெளிநாட்டு மொழிகளையும் கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். சம்ஸ்க்ருத பாரதி போன்ற அமைப்பினர் சம்ஸ்க்ருதம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். மக்களிடையே அவ்வகுப்புகளுக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது. இவ்வுண்மையை உணராமல் திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையிலும், மக்களிடையே மொழி வெறியைத் தூண்டிவிடும் வகையிலும் அரசியல் நடத்துவது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
உருது அகாடமி என்கிற அமைப்பு இருக்கிறது. இது, தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் கிளைகள் கொண்டது. உருது மொழியைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் பல்வேறு வகையில் செயல்பட்டு வருகின்றது. இதற்கு மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்குகின்றன. உருது வளர்ந்தால் மட்டும் தமிழ் அழிந்து போகாதா? உருது வளர்வதால் அழியாத தமிழ் சம்ஸ்க்ருதம் வளர்ந்தால் அழிந்து போகுமா? சம்ஸ்க்ருதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் திராவிட இனவெறியாளர்கள் உருதுவிற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? தமிழும் சம்ஸ்க்ருதமும் வளர்க்கும் கலாச்சாரம் ஒரே பாரதிய கலாச்சாரம். ஆனால் உருது வளர்ப்பது இஸ்லாமிய கலாச்சாரம். உருதுவினால் பாதிக்கப்படாத தமிழ் கலாச்சாரம் சம்ஸ்க்ருதத்தினால் பாதிக்கப்படுமா?
மத்திய அரசின் சம்ஸ்க்ருத வாரத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் தங்களுடைய அறிவின்மையையும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள் இன்னாள் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள்.
45 வருட சம்பிரதாயம்
மூத்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசன் அவர்கள், “சம்ஸ்க்ருத வாரம் என்னும் சம்பிரதாயமானது 2001லிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. அதற்கு முன்பாக 1969லிருந்து சம்ஸ்க்ருத தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. 1969-ல் சம்ஸ்க்ருத தினம் கொண்டாட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு தொடங்கியது. ஆடி மாதத்து பௌர்ணமி (ஸ்ரவண பூர்ணிமா) தினத்தைத் தேர்ந்தெடுத்து அதை சம்ஸ்க்ருத தினமாக அறிவித்தது காங்கிரஸ் அரசு. அனைத்து மாநில அரசுகள், பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்திலும் சம்ஸ்க்ருத தினம் கொண்டாடப்படவேண்டும் என்றும், அப்போது சம்ஸ்க்ருத நாடகங்கள், சம்ஸ்க்ருத பண்டிதர்களைக் கொண்ட கூட்டங்கள், சொற்பொழிவுகள், ஆகியவற்றை நடத்த வேண்டும் என்றும், அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்தது. அது தொடர்ந்து கொண்டாடப்பட்டும் வந்தது.
பின்னர் 2001-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (அப்போது அவ்வரசில் தி,மு.கவும் அங்கம் வகித்தது) அதை “சம்ஸ்க்ருத வாரம்” கொண்டாட்டமாக மாற்றியது. அதாவது ஆடி பௌர்ணமி தினத்துக்கு முன்பு வரும் 3 நாட்களையும் அத்தினத்தைத் தொடர்ந்து பின்வரும் 3 நாட்களையும் சேர்த்து மொத்தம் 7 நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று வாஜ்பாய் அரசு உத்தரவிட்டது” என்று தெளிவாக விளக்கியுள்ளார்.
“கடந்த 10 ஆண்டுகளாக மன்மோகன் சிங் தலைமையிலான தி.மு.கவை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் சம்ஸ்க்ருத வாரத்தைக் கொண்டாடவே செய்தது. தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசு அதைத் தொடர்கிறது, அவ்வளவுதான்” என்று கூறிய பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசன், “தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குதிக்கிறார்கள்? தமிழகப் பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் கூட ஏன் பூமிக்கும் வானத்திற்குமாக குதிக்கிறார்கள்? இப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க தலைவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் சாதித்தார்கள்? கடந்த 40 ஆண்டுகளாக அனைத்து அரசு நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், ஹிந்தி தினம் கூட கொண்டாடப்படுகின்றது என்கிற உண்மை இந்தத் தலைவர்களுக்கும் ஊடகத்தினருக்கும் தெரியுமா?” என்று கேள்விகளை எடுத்து வைக்கிறார்.
சம்ஸ்க்ருத வாரத்திற்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னையைச் சேர்ந்த புகழேந்தி என்கிற வக்கீல், “மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் சுற்றறிக்கையில் சம்ஸ்க்ருதத்தை இந்திய மொழிகளின் அன்னை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சம்ஸ்க்ருத வாரம் கொண்டாடுவது மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் சம்ஸ்க்ருத மொழியைத் திணிக்கும் செயலாகும் என்றும் கூறி அக்கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் மற்றும் நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “சம்ஸ்க்ருத வாரம் கொண்டாட்டமானது அம்மொழியின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் ஒரு பரீட்சார்த்தமான முடிவு; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறி அம்மனுவை தள்ளுபடி செய்தது.
கலாச்சாரத்தை அழித்து வரும் திராவிட இனவெறியாளர்கள்
சம்ஸ்க்ருத வாரம் கொண்டாடப்படுவது சம்ஸ்க்ருத மொழியை தமிழ் மாநிலத்தில் திணிக்கும் செயல் என்றும், அதனால் தமிழ் கலாச்சாரம் கெட்டுப்போகும் என்றும் பொங்கிக் குமுறும் இந்தத் தமிழ் பாதுகாவலர்கள் இதுவரை தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்கவும் வளர்க்கவும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் வெறும் “பூஜ்யம்” தான் நம் முன் தெரியும். தமிழகத்துப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தமிழ் படுகின்ற பாட்டைப் பார்த்தாலே தெரியும் இவர்கள் தமிழ் மொழியை வளர்த்திருக்கின்ற லட்சணம். இத்தனைக்கும் இந்தத் தலைவர்களின் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கென்று சொந்தமாகப் பத்திரிகையும் தொலைக்காட்சி சானலும் நடத்துகின்றன.
அதோடு மட்டுமல்லாமல், 1967லிருந்து தி.மு.கவும் அ.தி.மு.கவும் மாற்றி மாற்றி அரசாண்டு வருகின்றன. இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதே தமிழ் மொழியை அரசியல் வியாபாரத்திற்குப் பயன்படுத்தித்தானே! திரைப்படத்தின் மூலமாகத்தானே தங்களுடைய தமிழ் வியாபாரத்தை செய்து ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்தார்கள். தற்போது திரைப்படங்களில் தமிழ் எவ்வாறு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டுமா?
இவ்விரண்டு அரசாங்கங்களும் இதுவரை தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளன? இன்று அரசு பள்ளிகளில் தமிழ் கல்வியின் தரம் எப்படி உள்ளது? தமிழ் கற்றுத்தரும் ஆசிரியர்களின் தரம் எப்படி உள்ளது? இங்கே பயிலும் மாணாக்கர்கள் எப்படி இருக்கிறார்கள்? பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் பேசும் தமிழ் எப்படி இருக்கிறது? எத்தனை பேருக்குப் பிழையில்லாமல் தமிழ் படிக்கவோ பேசவோ எழுதவோ வருகிறது?
சட்டமன்றத்தில் சம்ஸ்க்ருதத்திற்கு எதிராக முழங்கிய உறுப்பினர்கள் எத்தனை பேர் தமிழ் எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கின்றனர்? ’ல’வுக்கும் ‘ள’வுக்கும் வேறுபாடு தெரியாத, ‘ழ’வை உச்சரிக்க முடியாத இவர்கள் தமிழை வளர்க்க இதுவரை என்ன செய்துள்ளார்கள்? இவர்களுடைய வீடுகளில் தமிழ் கலாச்சாரம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?
அரசு நிறுவனங்கள் தமிழ் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியில் ஏதாவது உருப்படியாக செய்திருக்கின்றனவா? இதுவரை என்ன சாதனை நிகழ்த்தியிடுக்கிறார்கள்? இதுவரை இவர்கள் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து நடத்திய உலகத் தமிழ் மாநாடுகளால் ஏதாவது பயன் ஏற்பட்டுள்ளதா?
இவர்களின் தமிழ் கலாச்சரப் பாதுகாப்பின் லக்ஷணத்திற்கு நமது ஆலயங்களே சிறந்த உதாரணம். ஆலயங்கள் கலாச்சாரத்தின் சின்னங்களாகப் போற்றப்படுபவை. மாபெரும் ஆலயங்களை நிர்மாணித்த தமிழ் மன்னர்கள், அவ்வாலயங்களில் பல கல்வெட்டுக்களையும் பதித்தார்கள். அவற்றில் பிராம்மி வடிவிலான தமிழ் மட்டுமல்லாமல் கிரந்த வடிவிலான சம்ஸ்க்ருதத்தையும் பயன்படுத்தியுள்ளனர். கல்வெட்டுக்கள் மட்டுமல்லாமல் தமிழ் மன்னர்களின் செப்பேடுகளிலும் தமிழினூடே ஆங்காங்கே சம்ஸ்க்ருத வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழ் கலாச்சாரத்தைக் காப்பதாகப் பீற்றிக்கொள்ளும் திராவிட இனவெறியாளர்கள் ஆலயங்களைப் பாதுகாக்கிறார்களா? இவர்கள் ஆட்சியில் இந்து அறநிலையத்துறை ஆலயங்களை எவ்வாறு நிர்வாகம் செய்கின்றது? தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான ஆலயங்கள் பல நூற்றாண்டுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானவை. அவற்றில் உள்ள சிற்பங்களும், ஓவியங்களும், கல்வெட்டுக்களும் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் 2008-ல் தன்னுடைய ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடியது. அப்போது அக்கோவிலை புனர் நிர்மாணம் செய்வதாகக் கூறி அதன் சிற்பங்களையும், ஓவியங்களையும், கல்வெட்டுக்களையும் மிகவும் அஜாக்கிரதையாகக் கையாண்டு அவற்றில் சிலவற்றை அழிக்கவும் செய்தனர்.
சமீபத்தில் (2011-12) புகழ்பெற்ற பழம்பெருமை வாய்ந்த திருவொற்றியூர் வடிவுடை அம்மன் திருக்கோவிலிலும் புனர் நிர்மாணம் என்கிற பெயரில் பல கல்வெட்டுக்களை நாசம் செய்துள்ளனர். பழவேற்காட்டில் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு கோவிலை முற்றிலுமாக அழித்து விட்டனர். வெகு சமீபத்தில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலை, கோபுரம் முதற்கொண்டு அனைத்தையும் அழித்துவிட்டு, சிமெண்டும் கான்கிரீட்டும் வைத்து புதியதாகக் கட்டியுள்ளனர். அக்கோவிலின் தல விருக்ஷத்தையும் வெட்டிச் சாய்த்துள்ளனர். இதுதான் இந்தத் திராவிட இனவெறியாளர்கள் தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாத்து வளர்க்கும் லட்சணம்.
சம்ஸ்க்ருதம் உலகளாவிய ஒரு மொழி. அனைத்து மொழிகளுடனும் தொடர்பு கொண்டது. சம்ஸ்க்ருதம் நமது பாரத தேசத்தின் கலாச்சார, தத்துவ, ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பழம்பெருமை வாய்ந்த மொழியாகும். சம்ஸ்க்ருத மொழியின் அழிவு பாரதத்தின் அழிவில்தான் முடியும். எனவே சம்ஸ்க்ருத மொழியைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
தமிழ், தமிழ் என்று தமிழ் மொழியையும் தமிழர் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதாகக் கூறி, மக்களிடையே மொழி வெறியையும், பிரிவினைவாதத்தையும் தூண்டி, அரசியல் வியாபாரம் செய்யும் திராவிட இனவெறியாளர்களுக்குத் தமிழ் ஹிந்துக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.