×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

சதாபிஷேகம் கண்ட சேக்கிழார் அடிப்பொடி

Tuesday, 23 September 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தமிழகத்தின் மிகச் சிறந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவர் முதுமுனைவர் டாக்டர் டி.என்.ராமச்சந்திரன் அவர்கள். தமிழ் கூறும் நல்லுலகில் “சேக்கிழார் அடிப்பொடி” என்றால் தெரியாதவர்கள் யாரும் இலர். 1934-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ம் தேதி தஞ்சை மாவட்டம் திருநல்லம் என்கிற ஊரில் பிறந்த திரு.டி.என்.ராமச்சந்திரன் அவர்கள் சட்டப்படிப்பு முடித்து 1956-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு தன்னுடைய வக்கீல் தொழிலைத் தொடர்ந்தார்.

அதே சமயத்தில் தமிழ் இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டு, அப்போதைய மிகப்பெரும் தமிழ் பண்டிதர்களில் ஒருவரான பண்டித வித்வான் டி.வி.கோபால ஐயர் அவர்களைக் குருவாக ஏற்றுக்கொண்டு, அவரிடம் சங்ககால இலக்கியங்களிலிருந்து நிகழ்கால இலக்கியங்கள் வரை கற்றார். திரு.டி.என்.ஆர் அவர்கள் ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டு அதையும் கற்றுத் தேர்ந்தார்.

1960-ம் ஆண்டு, சுகப்பிரம்மம் ராமஸ்வாமி சாஸ்திரிகள் அவர்களின் பெரிய புராணம் சொற்பொழிவை 40 நாட்கள் தொடர்ந்து கேட்டு, அதன் மூலம் தெய்வப்புலவர் சேக்கிழார் மீது பெரிதும் ஈடுபாடு கொண்டு அவரையே தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து தேவாரம், திருவாசகம் போன்ற சைவத்திருமுறைகளின் ஆழத்தை அறியும் விதமாக ஆராய்ச்சிகள் செய்து சைவ சித்தாந்தத்தில் சிறந்த பண்டிதராக விளங்கி வருகிறார்.

மேலும் 1961-ம் ஆண்டு மற்றொரு தமிழ் கவிஞரான திரிலோக சீதாராம் அவர்களையும் நண்பராகப் பெற்றார். திரிலோக சீதாராமன் அவர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நண்பர் திரிலோக சீதாராமன் அவர்களின் திடீர் மறைவினால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட திரு.டி.என்.ஆர் அவர்கள், மனதிற்கு ஆறுதல் வேண்டி சைவத் திருமுறைகளை நாடி அவற்றில் மூழ்கினார்.

திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம், பெரியபுராணம், காரைக்கால் அம்மையாரின் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருயிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவற்றை ஆங்கிலத்தில் அற்புதமாக மொழிபெயர்த்து வெளியிட்டார். சேக்கிழாரை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய புகழையும், சைவத்திருமுறைகளின் புகழையும் பரப்புவதையே பணியாகக் கொண்டதால் “சேக்கிழார் அடிப்பொடி” என்ற பட்டத்தையும் பெற்றார்.

கல்வி கற்கும் காலத்திலிருந்தே மஹாகவி பாரதியின்பால் பெரிதும் காதல் கொண்டவர் திரு.டி.என்.ஆர். பாரதியாரின் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார் திரு.டி.என்.ஆர்.

மேலும், சைவப் பெரியார் உமாபதி சிவம் அவர்களின் திருவருட்பயன், வினா வெண்பா, கொடிக் கவி, உண்மை நெறி விளக்கம் போன்ற சைவ சித்தாந்த இலக்கியங்களையும் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

இப்பேர்பட்ட சிறந்த தமிழ்/ஆங்கில அறிஞரான சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என்.ராமச்சந்திரன் அவர்களின் சதாபிஷேகத் திருவிழா இம்மாதம் 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சையில் விமரிசையாக நடைபெற்றது. முதல் நாளான திங்கட் கிழமை ஒன்றாம் தேதியன்று மாலை, வேதகீதன் குடந்தை வி.லக்ஷ்மணன் மற்றும் கலைமாமணி சீர்காழி எஸ்.திருஞான சம்பந்தன் ஆகியோரின் திருமுறை விண்ணப்பமும், சிரஞ்சீவி விக்ரம் பிரபு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் டாக்டர்.பாலசுப்பிரமணியன் அவர்களின் ”கம்போடியா” பற்றிய ஒளி-ஒலி சிறப்புரையும் இடம்பெற்றது.

Sekkizhar-Adippodi-Sri-TN-Ramchandran---Sathabishekam-3

அடுத்த நாள் காலை வேத கோஷங்கள் முழங்க வைதீக முறைப்படி டி.என்.ஆர் அவர்களின் சதாபிஷேக விழா இனிதே நடைபெற்றது. சிதம்பரம் நடராஜர் கோவில் போன்ற பல கோவில்களிலிருந்து இறைவனின் அருளாசிகளுடன் பிரசாதங்கள் டி.எனார் தம்பதியினருக்கு வழங்கப்பட்டன. கூடியிருந்தோர் அனைவரும் சதாபிஷேகம் கண்ட தம்பதியரை நமஸ்கரித்து ஆசி பெற்றனர்.

அன்று மாலை டி.என்.ஆர் அவர்களுடைய மொழியாக்கங்களான விநாயகர் நான்மணி மாலை, குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், திரிலோக சீதராமின் கவிதைகள், 6வது சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் (உமாபதி சிவம்), ஆங்கிலக் கட்டுரைகள் தொகுப்பு, தமிழ் கட்டுரைகள் தொகுப்பு, ஆகிய நூல்களும், புலவர் ம.கோபாலன் அவர்களின் ‘வள்ளுவர் நேரிசை’ மற்றும் டாக்டர்.சுப்பராயலு அவர்கள் டி.என்.ஆர் பற்றி எழுதிய ‘பலர்புகழ் ஞாயிறு’ ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன. டாக்டர் உஷா மகாதேவன், டாக்டர்.யா.மணிகண்டன், டாக்டர்.த.ரா.சுரேஷ், டாக்டர் தியாகராஜ சர்மா, டாக்டர்.சொர்ணமால்யா, டாக்டர்.இராம கௌசல்யா, டாக்டர்.சுப்பராயலு, திரு.வி.எஸ்.ராமலிங்கம், டாக்டர்.அ.தக்ஷிணாமூர்த்தி, சந்தக்கவி திரு.இரா.இராமசாமி, டாக்டர் பி.எம்.சுந்தரம் ஆகியோர் மேற்கூறப்பட்ட நூல்களை வெளியிட்டு திறனாய்வுப் பாராட்டுரைகள் வழங்கினார்கள்.

Sekkizhar-Adippodi-Sri-TN-Ramchandran---Sathabishekam-11

சதாபிஷேகத் திருவிழாவில் கூடியிருந்தவர்களைப் பொறுத்தவரை, “நாங்கள் சைவக் குரவர்கள் நால்வரையும், நாயன்மார்களையும், சேக்கிழாரையும் பார்த்ததில்லை. ஆனால் சேக்கிழார் அடிப்பொடி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமை மிகுந்ததாகவும் புண்ணியம் அளிப்பதாகவும் இருக்கிறது” என்பதே ஒருமித்த கருத்தாக இருந்தது.

Read 1867 times
Rate this item
(1 Vote)
Last modified on Tuesday, 23 September 2014 15:29

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment