×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

அண்ணாமலையார் சொத்துக்கள் காப்பாற்றப்படுமா?

Wednesday, 24 September 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

Annamalaiyar-Sothu-Kaappaatrappadumaa---1

புகழ்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகத்தில் நிறைய சொத்துக்கள் உள்ளன. அவற்றில் சென்னை அடையாறு பகுதியில் ஆயிரக்கணக்கான சதுர அடிகள் நிலம் உள்ளது. இந்த நிலங்களும் மனைகளும் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பாளர்களின் பயனில் இருக்கின்றன. இந்த நிலங்களுக்கும் மனைகளுக்கும் சந்தை நிலவரப்படி வாடகைப் பணம் தீர்மானித்திருந்தால் கடந்த பலவருடங்களாக கோடிக்கணக்கான ரூபாய்கள் கோவிலுக்கு வருமானமாகக் கிடைத்திருக்கும். ஆனால் அறநிலையத்துறை மிகக் குறைவான கட்டணமே நிர்ணயித்து அதை “நியாய வாடகை” என்றும் பெயரிட்டுள்ளனர். சொத்துக்களின் பயனாளர்கள் கோவிலுக்குத் தரவேண்டிய நியாய வாடகையையும் பலவருடங்களாகத் தராமல் இருக்கின்றனர். பலர் தங்கள் வசம் உள்ள மனைகளை உள்வாடகைக்கு விட்டுப் பெரும்பணம் சம்பாதிக்கின்றனர்.

அறநிலையத்துறையின் விளம்பரம்
இந்நிலையில், அறநிலையத்துறை தினத்தந்தி நாளிதழில் செப்டம்பர் 14-ம் தேதியன்று பின்வருமாறு ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது:

“அடையாறு ஊருர் கிராமத்தில் அமைந்துள்ள பழைய சர்வே எண் 41-ல் கீழ்காணும் விவரப்படியான சொத்துக்களில் கீழ்வரும் நபர்கள் வாடகைதாரர்களாக அனுபவித்து வருகிறார்கள். திருக்கோயில் அனுமதியின்றி வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை தங்கள் விருப்பம் போல் கட்டிக்கொண்டு மாதம் ஒன்றுக்கு பல இலட்சக்கணக்கான ரூபாய் உள்வாடகைக்கு விட்டு சட்ட விரோதமாக இலாபம் சம்பாதித்து வருகிறார்கள். அரசு நியாய வாடகை நிர்ணயம் செய்தபடி திருக்கோயிலுக்குச் செலுத்தவேண்டிய வாடகையை செலுத்தாமல் ‘அக்னி சொரூபமான அண்ணாமலையாரை’ ஏமாற்றி வருகிறார்கள். கீழ்வரும் திருக்கோயில் கேட்பு, வசூல், நிலுவை பதிவேட்டில் இடம்பெற்றுள்ள வாடகைதாரர்கள் தங்கள் நிலுவை வாடகையை இந்த அறிவிப்பு கண்ட 7 தினங்களுக்குள் செலுத்த அறிவிக்கப்படுகிறது. தவறினால் வாடகைதாரர்களின் வாடகை உரிமம் மறு அறிவிப்பின்றி ரத்து செய்ததாகக் கருதப்படும். இந்து சமய அறநிலைய சட்டம் 1959 சட்டப்பிரிவு 78-ன் கீழ் வாடகை செலுத்தாதவர்கள் ஆக்கிரமிப்பாளராகக் கருதப்பட்டு சுவாதீனத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது இதன் மூலம் இறுதியாக அறிவிக்கப்படுகிறது” என்று கூறி, 88 நபர்களின் பெயர்கள், மற்ற விவரங்களுடன் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது அறநிலையத்துறை. இந்த விளம்பரத்திற்கு “சிவன் சொத்து குல நாசம்” என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

Annamalaiyar Sothu Kaappaatrappadumaa - 2

இந்த விளம்பரத்தின்படி, அறநிலையத்துறைக்கு வரவேண்டிய பணம் ரூ.5,25,31,906/-. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் இரண்டாவது பட்டியலையும் தினத்தந்தி நாளிதழில் வெளியிட்டுள்ளது அறநிலையத்துறை. அதன்படி நிலுவையில் உள்ள தொகை ரூ.8,92,65,344/-. ஆக மொத்தம் அண்ணாமலையாரின் அடையாறு பகுதி சொத்துக்களின் பயனீட்டாளர்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டிய பணம் ரூபாய் பதினாலு கோடியே, பதினேழு லக்ஷத்து, தொண்ணூற்று ஆயிரத்து இருநூற்றி ஐம்பது (ரூ.14,17,97,250) ஆகும்.

மேலோட்டமாகப் பார்க்கையில் அறநிலையத்துறை வாடகை பாக்கியை வசூலிப்பதில் தீவிரமான நடவடிக்கை எடுத்துள்ளது போலத் தோன்றினாலும், அறநிலையத்துறையின் கடந்தகால நிர்வாக லட்சணத்தை நோக்கும்போதும், எந்த அளவுக்குத் தீவிரமாக இந்த நடவடிக்கையில் இறங்குவார்கள் என்பதை யோசிக்கும்போதும், நமக்குத் துறையின் மீது நம்பிக்கை எழவில்லை. நம் மனதில் எழும் நம்பிக்கையின்மைக்குக் காரணமாக இந்த மேற்கண்ட அறிவிப்பு விளம்பரத்திலிருந்தே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

அரசு விதிகளுக்குப் புறம்பான செயல்
ஜே.தாமஸ் என்பவரின் சுவாதீனத்தில் 83,602 சதுர அடி நிலம் உள்ளது. இதற்கு நியாய வாடகையாக மாதத்திற்கு ரூ.590 நிர்ணயம் செய்துள்ளது அரசு. இதில் இரண்டு விஷயங்கள் கவனத்திற்கு உரியவை.

முதலாவதாக, பயனாளியான தாமஸ் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். ஹிந்துக் கோவிலின் சொத்துக்களை மாற்று மதத்தவருக்கு வாடகைக்கோ குத்தகைக்கோ விடக்கூடாது என்பது விதி. அரசு ஆணை (G.O. Ms. No. 689, Home dated 18th February 1958) படி, கோவில் சொத்துக்களை ஹிந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று உள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரத்தின்படி, தாமஸ் மட்டுமல்லாது, எட்வர்ட், அப்துல் கரீம் போன்ற மேலும் சில மாற்று மதத்தவர்களும் அண்ணாமலையர் சொத்தை அனுபவித்து வருகின்றனர். அரசு ஆணைப்படி அவர்களை வெளியேற்றாதது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து மிகக் குறைந்த வாடகையையும் இத்தனை வருடங்களாக வசூலிக்காமல் இருந்ததும் அறநிலையத்துறையின் குற்றமாகும்.

இரண்டாவதாக, D.Dis.No.2599/58, dated 1st February 1958 - D.Dis.No.2311/58, dated 7th April 1958 படி, கோவில் நிலங்களையும், மனைகளையும், கட்டிடங்களையும் வாடகைக்கு விடும்போது, அவற்றை உள்வாடகைக்கு விடக்கூடாது என்றும், அந்நிலங்களில் வாடகைதாரர்கள் எந்தவிதமான கட்டிடங்களையும் கட்டக்கூடாது என்றும் விதிகள் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்தக் குறிப்பிட்ட தேதியில் வாடகை ஒப்பந்தம் தானாகவே ரத்தாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏல அறிவிப்பிலும், வாடகை அறிவிப்பிலும் இந்த விதிகளைக் கட்டாயமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அடையாறு பகுதியில் உள்ள அண்ணாமலையாரின் சொத்துக்கள் வாடகைக்கு விடப்பட்டபோது இந்த விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பது தெளிவாக இல்லை. அவ்வாறு பின்பற்றப்பட்டிருந்தால் மேற்கண்ட நிலைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இத்தனை வருடங்களாக கோவில் நிர்வாகத்தினரும் சென்னை அறநிலையத்துறை தலைமை அலுவலர்களும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.

Annamalaiyar-Sothu-Kaappaatrappadumaa-2

மூன்றாவதாக, சந்தை நிலவரப்படி அடையாறு பகுதியில் 83,602 சதுர அடிக்கு மாத வாடகை பல லட்சங்கள் இருக்கும் என்றாலும், அரசின் பார்வையில் ரூ.590 தான் “நியாயமாக”த் தெரிந்துள்ளது. சாதாரணமாக இந்த மாதிரி மிகக் குறைந்த வாடகை, தோப்பு அல்லது விவசாய நிலம் ஆகியவற்றிற்குத்தான் நிர்ணயம் செய்யப்படும். ஒரு மாநகரில் பெரும் மதிப்புள்ள பகுதியில் உள்ள நிலத்திற்கு இவ்வளவு குறைந்த வாடகை நிர்ணயித்திருப்பது வியப்பையும் சந்தேகத்தையும் அளிக்கிறது.

தனியார் நிறுவனங்கள் இப்பகுதியில் சதுர அடிக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை என்கிற கணக்கில் வாடகை வசூல் செய்கிறார்கள். ஆகவே, சந்தை நிலவரப்படி, தாமஸ் என்பவரின் சுவாதீனத்தில் இருக்கும் 83,602 சதுர அடி நிலத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் வாடகை வரவேண்டும். இதே நிலத்தில் இரண்டு அடுக்கு தளமாக இருந்தால் ஒரு கோடி ரூபாய்க்குக் குறையாமல் வாடகை பெறலாம். அதே இடத்தை ஒரு சிறந்த வணிக நிறுவனத்திற்கு வாடகைக்கு கொடுத்தால் ஒன்றரை கோடியிலிருந்து இரண்டு கோடி ரூபாய் வரை கூட வாடகை பெறலாம். ஆக, சுமார் 5 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் வரவேண்டிய இடத்திலிருந்து வெறும் 7080 ரூபாய் தான் பெறுகிறது அறநிலையத்துறை.

அறநிலையத்துறையின் விளம்பரத்தின்படி, அடையாறின் அந்தப் பகுதியில் அண்ண்ணாமலையாரின் சொத்தானது கிட்டத்தட்ட 13 லட்சம் சதுர அடிகள் (13, 14, 640) இருக்கிறது. எனவே, மொத்தத்தில் குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் அண்ணாமலைக்கு வருமானம் பெற்றுத் தரவேண்டிய வேண்டிய அறநிலையத்துறை வெறும் சில லட்சங்கள் தான் பெற்றுத் தருகிறது. அந்த சொல்பத் தொகையிலிருந்தும் கோவிலை நிர்வாகம் செய்வதற்காக 14% தொகையைத் தான் எடுத்துக்கொள்கிறது அறநிலையத்துறை. மேலும் கடந்த 30 வருடங்களாக சந்தை நிலவரத்தின்படி வாடகை வசூலித்திருந்தால் குறைந்த பட்சமாக 500 கோடி ரூபாய்கள் கிடைத்திருக்கும். அந்த 500 கோடி ரூபாய் வருமானத்தில் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள் துவக்கியிருக்கலாம்! எத்தனை கோசாலைகள் திறந்து லட்சக்கணக்கான கால்நடைகளைக் காப்பாற்றியிருக்கலாம்! எத்தனை ஆயுர்வேத மருத்துவ மனைகள் கட்டியிருக்கலாம்! எத்தனை நலிவடைந்த கோவில்களைப் புனர்நிர்மாணம் செய்திருக்கலாம்! எத்தனை சிற்பக்கல்லூரிகள் திறந்திருக்கலாம்! எத்தனை வேத ஆகம பாடசாலைகள் கட்டியிருக்கலாம்! எத்தனை திருமுறை திவ்யப்பிரபந்தப் பள்ளிகள் ஆரம்பித்திருக்கலாம்!

ஒரு கோவிலின் சொத்துக்கே இவ்வளவு செய்ய முடியும் என்றால், அனைத்துக் கோவில்களின் சொத்துக்களுக்கும் சந்தை விலையில் வாடகையும் குத்தகையும் வசூல் செய்திருந்திருந்தால் இத்தனை ஆண்டுகளில் பொது மக்களுக்கு எவ்வளவு சேவைகள் செய்திருக்க முடியும்! தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறியிருக்கும்!

விடையில்லா கேள்விகள்
அறநிலையத்துறையின் மேற்கண்ட அந்த விளம்பரத்தில் தாமஸ் என்பவர் மூன்று வருடங்களாகத் தரவேண்டிய நிலுவையில் உள்ள வாடகைத்தொகை 23,350 ரூபாய். மாதாமாதம் பல்லாயிரம் ரூபாய்கள் சம்பளம் பெறும் நிர்வாக அதிகாரி மூன்று வருடங்களாக வாடகை வசூலிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? வாடகை தராமல் இருக்கும் தாமஸ் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் படி நடவடிக்கையெடுத்து அவரை வெளியேற்றிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?

ஒரு புறம் வாடகைகளை வசூலிக்காமல் இருக்கும் அறநிலையத்துறை, மறுபக்கம் தன்னுடைய நிர்வாகச் செலவுக்காக, கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக இக்கோவிலிலிருந்து கட்டணமாக எடுத்துக்கொண்டுள்ளது.

எந்த ஒரு நிறுவனமும் தனது கணக்குகளைத் வெளித்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். தனக்குத் தானே ஒரு தணிக்கையை செய்துகொள்ள முடியாது. ஆனால் அறநிலையத்துறை தன் கணக்குகளை வெளித்தணிக்கைக்கு உட்படுத்துவது கிடையாது. தானேதான் சரிபார்த்துக்கொள்கிறது. இவ்வாறு ஒரு முறையை “அறிவியல்” பூர்வமாக வகுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். கடந்த 30 ஆண்டுகளாக தன்னுடைய கணக்கு வழக்கைத் தானே தணிக்கை செய்துகொண்டு வரும் அறநிலையத்துறையின் நிர்வாக லட்சணத்திற்கு இந்த ஒரு கோவில் உதாரணம் போதாதா? இதன் மூலமே அறநிலையத்துறையின் நிர்வாகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டதே!

அரைகுறை ஆவணங்கள்
ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு ஆண்டும் “கேட்பு, வசூல், நிலுவை பதிவேடு” என்கிற ஆவணத்தைத் தயார் செய்ய வேண்டியது அறநிலையத்துறையின் கடமை. அனால் அதில், தற்பொழுது இந்தச் சொத்தின் பயனாளிகள் யார் என்கிற விவரம்தான் இருக்கின்றதே தவிர, வாடகை ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. அறநிலையத்துறை “கேட்பு வசூல் நிலுவைப் பதிவேட்டில் உள்ளவர்” என்றுதான் குறிப்பிடுகிறது. அதாவது, குடியிருக்க ஒப்பந்தம் செய்துகொண்ட ஒருவர் அவ்விடத்தில் வணிக நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தால் அது அறநிலையத்துறையின் ஆவணத்தில் தெரியாது. ஆனால் சட்டப்படி, குடியிருக்க ஒப்பந்தம் செய்த ஒருவர் அவ்விடத்தை வணிகம் செய்வதற்குப் பயன்படுத்தத் தொடங்கிய அன்றே ஒப்பந்தம் காலாவதி ஆகிவிடும்.

அதன்படி, அண்ணாமலையார் கோவில் சம்பந்தமாக முதன் முதலில் தயாரிக்கப்பட்ட கேட்பு வசூல் நிலுவைப் பதிவேட்டில், வாடகை ஒப்பந்தங்கள் முதலான விவரமான ஆவணங்கள் இருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டபோது, அந்த ஆவணங்கள் தன் அலுவலகத்தில் இல்லை என்று கூறிவிட்டது அறநிலையத்துறை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இக்கோயிலுக்கு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட கேட்பு வசூல் நிலுவை பதிவேட்டின் நகல்களை வழங்கச் சொல்லியும், சம்மந்தப்பட்ட பதிவேட்டில் உள்ள அசையா சொத்துகள் ஏதேனும் தற்பொழுது கோயில் வசம் இல்லாமல் இருக்கிறதா? அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்தச்சொத்து உள்ள கிராமம், சர்வே எண், மொத்த அளவு, அந்தச் சொத்து கோயிலிடம் இருந்து யாருக்கு கிடைக்க பெற்றது? அந்தச் சொத்தைப் பெற்ற நபரின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவலையும் வழங்கச் சொல்லியும் கேட்கப்பட்டது. மேலும், மேற்படி சொத்து விற்கப்பட்டது தொடர்பான அரசின் உத்தரவு, ஆணையரின் உத்தரவு, கோயில் தக்கார் மற்றும் அறங்காவலர் அனுமதி தொடர்பான ஆவண நகல், இது தொடர்பாக கொடுக்கப்பட்ட விளம்பர நகல்களை வழங்கவும் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம், “முதன் முதலில் தயாரிக்கப்பட்ட கேட்பு வசூல் நிலுவைப் பதிவேடு ஆவணங்கள் தன்வசம் இல்லை; திருக்கோவில் சொத்துப்பதிவேட்டில் பதியப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் திருக்கோவில் வசம் உள்ளது என்ற விவரம் தகவலாகத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று பதிலளித்திருக்கிறது.

அதாவது, பல நூறுகோடி ரூபாய் முறைகேட்டை வெளிக்கொண்டு வர உதவும் முக்கிய ஆவணங்களைத் தன்னிடம் இல்லையென்று, கோவிலிலிருந்து “நிர்வாகத்திற்காக” ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் கட்டணம் எடுத்துக்கொள்ளும் அறநிலையத்துறை கூறுகிறது. அறநிலையத்துறையின் இந்தப் போக்குதான் அதன் மீதான நம்பிக்கையின்மையை அதிகரிக்கிறது.

மேற்கண்ட விளம்பரத்தின் கூறப்பட்டுள்ள அடையாறு பகுதியில் உள்ள பயனாளர்கள் அனைவருக்கும் மின்சார இணைப்பு உள்ளது; அவர்களுக்கு வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆகியவைகளும் உண்டு. ஆகவே மின்சார அலுவலகம், ரேஷன் அலுவலகம், தேர்தல் அலுவலகம் ஆகியவற்றின் மூலம் இந்தப் பகுதியில் இருப்பவர்களின் தகவல்களைத் திரட்டுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. மேலும், அந்தப் பகுதியில் இருக்கும் வங்கிகளிடமும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் கணக்குகள் இருக்கும்; சாலைப் போக்குவரத்து அலுவலகத்திலும் (RTO) அந்தப் பகுதியில் வாகனப் பதிவுகள் செய்தவர்களின் விவரங்கள் இருக்கும்; அந்தப் பகுதியில் வாணிபம் செய்பவர்களின் தகவல்கள் பதிவுத்துறை அலுவலகங்களிலும் இருக்கும். ஆகவே, மேற்கண்ட தினத்தந்தி விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 88 பேர் அவர்கள் சுவாதீனத்தில் உள்ள இடங்களை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரங்களைச் சேகரிப்பது ஒன்றும் கடினமான காரியம் இல்லையே! எத்தனை பேர் ஆரம்ப காலத்திலிருந்து குடியிருப்போர், எத்தனை பேர் புதியதாகக் குடியேறியவர்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் போன்ற தகவல்களைச் சுலபமாகச் சேகரிக்கலாமே! முறைகேடு செய்துள்ளவர்களை சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுத்து வெளியேற்றலாமே!

கோவிலுக்குப் பயன்படாத வாகனங்கள்
தினத்தந்தி விளம்பரத்தில், குறிப்பிட்ட பயனாளிகள் பல கட்டடங்களைக் கட்டியுள்ளனர் என்றும், உள்வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிக்கின்றனர் என்றும் கூறியுள்ள அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் உதவியுடன் அந்த சட்டத்திற்குப் புறம்பான கட்டிடங்களை இடித்திருக்கலாமே! புறம்போக்கு நிலத்தைக்கூட வருடத்திற்கு இரண்டு முறை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதிகள் உள்ள நிலையில், கோவில் சொத்துக்களை வருடத்திற்கு ஒருமுறை கூட பார்வையிட வேண்டும் என்கிற சட்ட விதிமுறை எதுவும் இல்லையா என்ன? ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் பெறும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதைவிட வேறு என்ன வேலை?

கோவில் பயன்பாட்டிற்கு என்று சொல்லி லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து வாகனங்களை வாங்கிக் குவிக்கும் அறநிலையத்துறை, அந்த வாகனங்களை வைத்துக்கொண்டு என்ன செய்கிறது? இந்த கோவில் சொத்துக்களை முறையாகப் பார்வையிடுவதற்கு அந்த வாகனங்களை பயன்படுத்தாமல் வேறு எந்த காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அனுப்பிய மனு ஒன்றிற்கு, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் கடந்த 2004ம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பிறகு, கோவில் பயன்பாட்டிற்காக, 1 டிராக்டர், 3 பொலீரோ ஜீப்புகள், 1 மினி டிப்பர் லாரி, 1 டாடா ஏஸ் ஆகிய வாகனங்களை வாங்கியிருப்பதாகவும், இதில், ஒரு பொலீரோ ஜீப்பு மட்டும் 18-04-2012 முதல் அறநிலையத்துறை அமைச்சர் அலுவலகப் பயன்பாட்டில் உள்ளதெனவும், அதற்கு 17-06-2013 முதல் ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டுனராக மாதம் ரூ.12,000/- சம்பளத்தில் பணியில் இருப்பதாகவும் பதில் அளித்திருக்கிறது. மற்ற இரண்டு பொலீரோ ஜீப்புகளும் ஒரு டாடா ஏஸும் எந்த்த் துறையின் பயன்பாட்டில் இருக்கின்றன, எந்த அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர், ஓட்டுனர்கள் யார், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் போன்ற கேள்விகளுக்கு கோவில் நிர்வாகம் பதிலளிக்கவில்லை.

கோவில் நிர்வாகத்திற்கு என்று வாகனங்கள் வாங்கிவிட்டு அவற்றைக் கோவில் நிர்வாகத்திற்குப் பயன்படுத்தாமல், அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டிற்கும் மற்ற துறைகளின் பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்தி வருகிறது அரசு. அதாவது கோவில்களிலிருந்து கிடைக்கும் வருமானம் மற்ற துறைகளின் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

நிர்வாக லட்சணம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அனுப்பிய மனுவுக்குப் பதிலாக, அண்ணமலையார் கோவில் 1934ம் வருடம் மே மாதம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் மற்றொரு மனுவிற்குப் பதிலளிக்கையில் 1964-ம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் வந்த்தாகக் கூறப்பட்டுள்ளது. .

இந்து அறநிலையத்துறை சட்டம் 29ம் பிரிவின்படி கோவிலைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அடங்கிய பதிவேடு (Ledger 29) ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். சட்டப்பிரிவு 30ன் படி, அப்பதிவேடும் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டின் கூட்டல்கள், கழித்தல்கள் கணக்கில் கொண்டு (Updating) சரி செய்யப்படவேண்டும். சட்டப்பிரிவு 31ன் படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பதிவேடு (Ledger 29) முழுமையாகத் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் அண்ணாமலையார் கோவிலில் இந்தப் பதிவேடுகள் முறையாகத் தயாரிக்கப்பட்டு பராமரிக்கப்படவில்லை. முதல் சொத்துப் பதிவேடு 1954-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டப்பதிவேடும் மரப்பதிவேடும் 1998ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தும் பதிவேடுகள் முறையாகத் தயாரிக்கப்படவில்லை.

கோவிலுக்குச் சொந்தமாக 390 ஏக்கர் 56 செண்ட் நிலமும், 28,885 சதுர அடி மனையும், 34, 590 சதுர அடி கட்டிடமும் உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை அடையாறு பகுதியில் மட்டுமே லட்சக்கணக்கான சதுர அடிகள் உள்ளதைப் பார்த்தோம். ஒரு எளிய கேள்விக்குப் பதிலளிப்பதில் கூட நிர்வாகம் அலட்சியமாக நடந்துகொள்வது இதன் மூலம் தெரிகிறது.

மற்றொரு மனுவிற்கு அளித்துள்ள பதிலில் சென்னையில் அடையாறு ஊருர் கிராமத்தில் 30 ஏக்கர் 18 செண்டில் வீட்டு மனைகள், சென்னை மீர்சாகிப் பேட்டை பகுதியில் 7 ஏக்கர் வீட்டு மனைகள், சென்னை தண்டையார்பேட்டை தனபால் நகரில் 23 கிரவுண்டுகள் வீட்டு மனைகள் இருப்பதாகச் சொல்லியிருந்தது கோவில் நிர்வாகம். ஆனால் தற்போது தண்டையார்பேட்டை தனபால் நகரில் இருக்கும் 23 கிரவுண்டுகளும் கோவில் வசம் இல்லை. ஏனென்றால் மற்றொரு கேள்விக்கு ஊருர் கிராமம் மற்றும் மீர்சாகிப் பேட்டை சொத்துக்களை மட்டும்தான் தெரிவித்திருக்கிறார்கள். தண்டையார்பேட்டை சொத்தை மீட்கப்போகிறார்களா என்பது விடையில்லா கேள்வி!

கோவிலின் கோசாலையில் பசுக்கள் இறந்துபோய், அதன் பிறகு தொடரப்பட்ட வழக்கில் தற்போது உயர்நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட மூவர் குழு தமிழகமெங்கும் உள்ள பசு மடங்களை ஆய்வு செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தக் கோவிலில் கோசாலை எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, அது சம்பந்தமான விவரம் அலுவலகத்தில் இல்லை என்று பதில் கூறியுள்ளது. ஆனால், மற்றொரு மனுவுக்குப் பதில் அளிக்கையில் கோசாலை 1991-ம் ஆண்டு துவங்கப்பட்டதாகச் சொல்லியுள்ளது. அந்தக் கோசாலைக்கு 2007 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை ரூ.49,59,151/- செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது கோவில் நிர்வாகம். அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் கோசாலை பராமரிப்புக்குச் செலவு செய்துள்ளது! ஆயினும் பசுக்கள் தொடர்ந்து இறந்து வந்துள்ளன. பசுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்துள்ளது; பசுமடத்திலும் பசுக்கள் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்குவதற்கான ஏற்பாடுகளும் இல்லை; தீவனங்களும் அவ்வளவாகக் கொள்முதல் செய்யப்படுவதில்லை; செலவு மட்டும் லட்சக்கணக்கில் காண்பிக்கப்படுகிறது.

கோவிலின் சொத்துக்களுக்கும் பசுக்களுக்கும் தான் பாதுகாப்பு இல்லையென்றால் அனுதினமும் இறைவனைப் போற்றித் திருப்பணி செய்து வரும் குருக்கள்களுக்கும் சரியான பொருளதாரப் பாதுகாப்பு இல்லை. இக்கோவிலின் பணியாளர்களுக்கு 01-07-1997 முதல் 10-06-98 தேதியிட்ட அரசு ஆணை நிலை எண் 257ன் படியும், 17-06-98 தேதியிட்ட ஆணையரின் உத்தரவுப் (எண் 2534097 ஐ 1) படியும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 11 குருக்கள்களுக்கு அந்த உத்தரவின்படியான ஊதியம் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஐந்து பேருக்கு ரூ.800ம் ஒருவருக்கு ரூ.785ம் மற்றும் ஐந்து பேருக்கு முறையே வெறும் ரூ.94, ரூ.72, ரூ.67, ரூ.66, ரூ.65, மாதச் சம்பளமாகத் தரப்படுகிறது (பட்டியல் புகைப்படத்தைப் பார்க்கவும்). இந்த பதினோரு பேருக்கும் அரசு ஆணையின் படி ஊதிய நிர்ணயம் செய்யாதது மட்டுமல்லாமல், அதற்கான காரணமும் விளக்கப்படவில்லை.

Annamalaiyar Sothu Kaappaatrappadumaa-3

கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உள்ள ஒரு பெரிய கோவிலிலேயே குருக்கள்களின் நிலை இதுவென்றால், வருமானம் இல்லாத நூற்றுக்கணக்கான கோவில்களில் இறைப்பணி செய்யும் குருக்கள்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் வேதனையும் வருத்தமும்தான் மிஞ்சுகிறது. அறநிலையத்துறையின் அலுவலர்கள் யாராவது ஒருவராவது இந்த மாதிரி 60 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்ப்பாரா? அல்லது துறை அதிகாரிகள்தான் இந்த மாதிரியான ஊதியத்தைத் தங்கள் அலுவலர்களுக்கு நிர்ணயம் செய்வரா? அடுக்குமா இந்த அராஜகம்?

 

 இந்த நிர்வாக லட்சணத்திற்குக் கோவிலிலிருந்து நிதி

கோவிலின் சொத்து மற்ற விவரங்கள் பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு ஆண்டும் முறையாகத் தயாரித்துப் பராமரிப்பதில்லை என்பதைப் பார்த்தோம். மேலும் கோவிலின் கணக்கு வழக்குகளை வெளித்தணிக்கைக்கு விடாமல் இவர்களே பெயருக்கு ஒரு தணிக்கை செய்கிறார்கள் என்பதையும் பார்த்தோம். இவர்களின் இந்தத் தணிக்கை நாடகத்திற்கு ”தணிக்கைக் கட்டணம்” என்கிற பெயரில் கோவிலிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக கடந்த 2001ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரைக்கும் 11 ஆண்டுகளுக்கு தணிக்கக் கட்டணமாக மொத்தம் இரண்டு கோடியே ஐம்பத்தியேழு லட்சத்து தொண்ணூற்றி எட்டாயிரத்து அறநூற்று இருபத்தி ஐந்து (ரூ.2,57,98,625/-) எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூபாய் 23 லட்சத்திற்குக் குறையாமல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதே போல கோவில் சொத்துக்களையும் பசுமடங்களையும் இவர்கள் எவ்வாறு நிர்வாகம் செய்கிறார்கள் என்பதையும் விரிவாகப் பார்த்தோம். இந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்வதற்கு, ”சகாயத்தொகை” என்கிற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய்கள் ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக மேற்கண்ட அதே 2001ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரையிலான 11 வருடங்களுக்கு மொத்தமாக ஆறு கோடியே எண்பத்திநாலு லட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து இருபத்தி ஏழு ரூபாய் (ரூ.6,84,98,027/-) நிர்வாகக் கட்டணமாக கோவிலிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது சராசரியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூபாய் 62 லட்சத்திற்குக் குறையாமல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதோடு மட்டுமல்லாமல், ”ஆணையர் பொதுநல நிதி” என்கிற பெயரில் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள். இதற்காகவும் கணிசமான தொகையை கோவிலிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள். 2001ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டுவரையிலான 11 ஆண்டுகளுக்கு ஒரு கோடியே ஐம்பத்தி மூன்று லட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபாய் (ரூ.1,53,90,000/-) எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொதுநல நிதியிலிருந்து, திருக்கோவில்கள் திருப்பணிகளுக்குச் செலவு செய்வதாக அறநிலையத்துறை சொல்கிறது.

கனன்று கொண்டிருக்கும் எரிமலை
ஆயினும் முறையாகக் கணக்கு வழக்குகளும் தணிக்கைகளும், நிர்வாகமும் இல்லாத நிலையில், இந்த மாதிரியான தணிக்கைக்கட்டணம், சகாயத்தொகை மற்றும் பொதுநல நிதி ஆகிய பெயர்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள் எடுத்துக்கொள்ளப்படுவது பலவித கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பத்தான் செய்கிறது. இந்த மாதிரி எடுத்துக்கொள்ளப்படும் நிதி, திருக்கோவில் காரியங்களுக்குத்தான் செலவு செய்யப்படுகிறதா? அல்லது அரசாங்கத்தின் பொது விஷயங்களுக்கும் (Civic Issues), மற்ற துறைகளின் செலவுக்கும் (Issues concerning other departments) மற்ற மதத்தவரின் விஷயங்களுக்கும் (Minority Issues) செலவு செய்யப்படுகிறதா? இந்த அண்ணாமலையார் கோவிலின் நிர்வாகமே குறைகளுடனும் குளறுபடிகளுடன் இருக்கும்போது, அவற்றையெல்லாம் நீக்கிச் சரி செய்யாமல், மற்ற செலவீனங்களுக்கு இங்கேயிருந்து நிதி எடுக்க வேண்டுமா, என்கிற கேள்வியும் எழுகிறது.

கோவிலுக்குச் சொந்தமான கணக்கும் நிலையும் தெரியவில்லை; அவற்றிற்கு வரவேண்டிய வாடகை மற்றும் குத்தகைத் தொகைகளை முறையாக வசூல் செய்வதில்லை; பசுமடங்களைச் சரியாக நிர்வாகம் செய்து பசுக்களைப் பாதுகாப்பதில்லை; இறைப்பணி செய்யும் குருக்கள்களுக்கும் நியாயமான சம்பளம் கொடுப்பதில்லை; அனைத்து வரவு செலவுகளுக்கும் கணக்கு வைத்துக்கொண்டு முறையாகத் தணிக்கை செய்வதில்லை; நிலங்களுக்கும் பசுக்களுக்கும் பாதுகப்பு இல்லாத சூழலில், கோவிலில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள பஞ்சலோக மூர்த்தங்களுக்கும் வெள்ளி, தங்க, வைர நகைகளுக்கும் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது, பதிவேடுகள் முறையாகத் தயார் செய்யாத நிலையில் அவைகள் பத்திரமாக இருக்கின்றனவா, போன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

இந்த ஒரு கோவிலின் நிர்வாகமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, தமிழகமெங்கும் உள்ள அனைத்து கோவில்களின் நிர்வாகமும் கழக அரசுகளின் கரங்களில் சிக்கிக்கொண்டிருப்பதை தமிழ் ஹிந்துக்கள் எவ்வாறு சகித்துக்கொண்டிருக்க முடியும்? கனன்று கொண்டிருக்கும் இப்பிரச்சினை எரிமலையென வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Read 2856 times
Rate this item
(2 votes)
Last modified on Thursday, 25 September 2014 17:59

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link Sethumadhavan Friday, 03 October 2014 08:37 posted by Sethumadhavan

    Shocking news. First rate corruption. Somebody should file an RTI and also P I L in the court.

Leave a comment