சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக உள்ள ஒரு மீனவர் கிராமத்தில், ஒவ்வொரு வாரமும் சமய வகுப்பு நடத்தி வருகிறது வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம். அக்கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழாக்களைத் தொடர்ந்து, சரஸ்வதி பூஜை/விஜயதசமி விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (5 அக்டோபர் 2014) அன்று காலை 6 மணியளவில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம், மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம், சண்டி ஹோமம் ஆகிய ஹோமங்களை வைதீக முறைப்படி சிறப்பாக வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர் திரு. சங்கர நாராயணன் தலைமையில் திரு. சிவக்குமார் மற்றும் வேத பண்டிதர்கள் நடத்தினர். இந்த ஹோமத்தில் கிராமத்தில் உள்ள பெரியவர்களும், குழந்தைகளும் சங்கல்பம் செய்து கொண்டு பக்தி பரவசத்துடன் நாம ஜெபம் ஜெபித்துக் கொண்டிருந்தனர்.
ஹோமங்களைத் தொடர்ந்து, பஜனைகள், கோ பூஜை, ஆகியவை நடந்தன.
இந்த விழாவின் சிறப்பம்சமாக பாரதத்தின் பாரம்பரிய விளையாட்டான வில் வித்தை பயிற்சி குழந்தைகளுக்காக நடத்தப்பட்டது. இந்த பயிற்சியினை "Vill Academy" வில்வித்தை மையத்தின் பயிற்சியாளர்களான திரு.மணிவாசகம் அவர்களும், திரு. ஸ்ரீனிவாசன் அவர்களும் பயிற்றுவித்தனர்.
வில்வித்தையை தொடர்ந்து குழந்தைகளின் கோலாட்டம் சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், பேனாக்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியினால் ஈஞ்சம்பாக்கம் கெளரி அம்மன் கோவில் விழாக் கோலம் பூண்டிருந்தது. எங்கள் குழந்தைகள் மைக்கில் தைரியமாக பாடுகிறார்கள், நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டுள்ளனர். இது ஆச்சரியமாக உள்ளது என்று ஊர் பெரியவர்களுடன் வியந்து பேசிக்கொண்டிருந்தார் ஈஞ்சம்பாக்கம் தலைவர் திரு. மதியழகன்.