20.09.2014 அன்று தமிழக அரசியலில் தோழர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் ‘குரு தமிழ் பெயர் தான்’ என்ற 13-09-2014 தேதியிட்ட கட்டுரைக்கு, ’குரு உத்ஸவ் ஒரு விளக்கம்’ என்ற தலைப்பில் ஒரு மறுப்புக் கட்டுரை எழுதியிருந்தார். இந்த தோழர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் கட்டுரைக்கு நாம் எழுதிய மறுப்பை தமிழக அரசியல் வெளியிடவில்லை. எனவே, அந்த மறுப்புக் கட்டுரையை இன்று வெளியிடுகிறோம்.
’குரு’ என்பது தமிழ்ச் சொல் தான் என்பதை உறுதி செய்துவிட்டு ’உத்ஸவ்’ என்பதற்கு விளக்கம் எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
‘குரு உத்ஸவ்’ என்பதை ’குரு உற்சவம்’ என்று தமிழ்நாட்டில் கொண்டாட தொல்காப்பியர் அனுமதி கொடுத்துள்ளார்.
”இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே" தொல்காப்பியம் சொல் அதிகாரம், 397
அதாவது ... "இயற்சொல்" "திரிசொல்" "திசைச்சொல்" "வடசொல்" என்ற குறியீடு பெற்ற சொற்கள் எல்லாமே ... தமிழ்ச்செய்யுளை உருவாக்கும் சொற்கள்.
இந்தத் தொல்காப்பிய சூத்திரத்தின்படி, உத்சவ் என்ற சொல்லை உற்சவம் என்று ஏற்க விதியுள்ளது. ஆனால் ’Teacher’s day’ என்பதற்கு தொல்காப்பியர் அனுமதி கொடுக்கவில்லை.. ’தமிழ் கெட்ட மொழி’ ’ஆங்கிலமே உயர்ந்தது!’ ’ஆங்கிலத்திற்காகத்தான் இந்தியை எதிர்க்கிறேன்’ என்று சொன்ன தமிழ் தந்தை ’Teacher’s day’ ஐ அங்கீகரித்திருப்பார் போலும்! அந்த தமிழ் தந்தையின் இந்தப் பொன்மொழியைப் பின்பற்றுபவரோ நம் தோழர் இலக்குவனார் திருவள்ளுவன்!
நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்றல்ல இனிமேல் கெட தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால் இந்தியை எதிர்க்கிறேன். ஈ.வே.ரா. (விடுதலை, 1.3.1965)
தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரை பின்பற்றும் தமிழர்களுக்கு ‘குரு உத்ஸவ்’ ஏற்புடையதாக இருக்கும். தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்பவர்களை முதன்மையாக கொண்டவர்களுக்கு ’Teacher’s day' என்ற தமிழ் ஏற்புடையதாகும். அது போகட்டும் ’ஆசிரியர்’ என்பது ‘ஆச்சாரிய’ என்ற வட மொழிச் சொல்லை வேர் சொல்லாக கொண்டது. ஆக ஆசிரியர் வட மொழிச் சொல். ஆசிரியர் தினத்தில் வரும் ‘தினம்’ என்பதும் வடமொழிச் சொல்லே. ’உத்ஸவ்’ என்ற ஒரு வடமொழி சொல்லினால் தமிழ் அழிந்து வடமொழி ஆதிக்கம் ஏற்படும் என்றால் இரண்டு வடமொழிச் சொற்களால் வடமொழி ஆதிக்கம் ஏற்படாதா?
’குரு’ என்ற சொல்லுக்கு தொல்காப்பியத்திலிருந்தே மேற்கோள் காட்டுபவர்கள் ‘குரு உத்ஸவ்’ என்று மத்திய அரசு அறிவித்தவுடன் வடமொழியை ஆதிக்கம் செலுத்துவது தமிழ் என்று மார்தட்டிக்கொண்டு தமிழின் உயர்வை ஏன் உலகுக்கு எடுத்துரைக்கவில்லை? இது யாரைத் தாக்க? யாரைத் தாங்க?
இந்த தவற்றை ஜெயலலிதா செய்திருந்தாலும் அவரும் கண்டனத்துக்குரியவரே! பேதமைக்கு, கருணாநிதி ,ஜெயலலிதா என்ற பேதமில்லை.
//ஆரியத்தில் குரு என்பவர் சுருதி (வேதம்) எனப்படும் வேத மந்திரங்கள், வேதாந்தம், ஸ்மிருதி எனப்படும் பிரம்ம சூத்திரம், சமயச் சடங்குகள், கருமப்பயன் முதலானவற்றை கற்பிக்கும் மதத்தலைவர் தான்// என்கிறார் கட்டுரையாளர்.
பிரம்ம சூத்திரம் என்பது எந்த ஸ்மிருதியில் இடம்பெறுகிறது? ஸ்மிருதியில் பிரம்ம சூத்திரம் இடம் பெறாது என்கிற அடிப்படை கூட தெரியாமல் விளக்கம் கொடுக்கும் துணிவு திராவிட சிந்தாந்தை தாங்குபவர்களுக்கு மட்டுமே இருக்கும்.
இதே கட்டுரையில் வில்வித்தை படிக்கச் சென்ற ஏகலைவன் விரலைக் கேட்டார் துரோணாசாரியார் என்று வருகிறது. வில்வித்தை ’ஸ்ருதியா’, ’ஸ்மிருதியா’, ’சமயசடங்கா’?.
//ஏகலைவன் வேடர் குலத்தலைவனாக இருந்தும் ப்ராம்ணர் அல்லன் என்பதனால் குரு தட்சிணையாக வில்வித்தைக்கு தேவையான கட்டை விரலைக் கேட்டார்.// என்கிறார் கட்டுரை ஆசிரியர். ஆனால் மகாபாரதத்தில் அர்ஜுனன் என்ற சத்ரியனுக்கு போட்டியாளனாகவே ஏகலைவன் காணப்படுகிறார். இதில் ப்ராம்ணன் எங்கிருந்து வந்தான்?
தமிழ்நாட்டில் குருவின் விளக்கம் வேறு. வடநாட்டில் வேறு என்று சொல்லும் கட்டுரை ஆசிரியர் அது எப்படி வேறுப்பட்டிருந்தது என்பதை விளக்கமுடியுமா? துரோணரும், துருபதனும், குசேலனும், கிருஷ்ணனும் சமமாக படித்ததாகதான் நாம் காண்கிறோம்,குருகுலக் கல்வியில் அனைவரும் பிச்சை எடுத்து உண்டார்கள் என்பதைக் காண்கிறோம். தமிழகத்திலும் குருகுல வாசம் அவ்வண்ணமே இருந்தது. பாரதத்தில் மாணவர்கள் சமமாக குருகுலத்தில் பிச்சையெடுத்து பயின்று வந்தார்கள். இந்த மரபை குறுந்தொகை பாடல் வெளிக்காட்டியுள்ளது.
அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனேகுறுந்தொகை - 033
இப்பாடலில் ஒரு மாணவன் பிச்சைக்கேட்டு உண்ணும் பழக்கத்தை தலைவி கிண்டலாக தன் தோழியிடம் வெளிப்படுத்துவதை காண்கிறோம். ஆக, குருகுல வாசம் என்பது மகாபாரதத்திலும், இராமயணத்திலும், பாகவதத்திலும் குறுந்தொகையிலும் ஒரே முறையில் தான் விளக்கப்பட்டிருக்கிறது.
’பிச்சைப் புகினும் கற்கை நன்றே’
என்ற வாக்கியம் இந்த குருகுல வாசத்தின் தன்மையைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
இதே குறுந்தொகையில் 252 ஆம் பாடலை எழுதியவர் கிடங்கிற் குலபதி நக்கண்ணனார். கிடங்கு என்பது தற்போதுள்ள திண்டிவனம் பகுதியில் உள்ளது. ’குலபதி’ என்ற சொல் 1000 மாணவர்களைக் கொண்ட குருகுலத்தின் ஆசிரியர் என்பதைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த இலக்கியங்களுக்கு முன்னரோ அல்லது ஆங்கில கல்விக்கு முற்பட்ட காலத்திலோ தமிழகத்தில் குருகுல வாசம், வடநாட்டிலிருந்து வேறுபட்டு காணப்பட்டது என்று தோழர் நிறுவினால் சிரமேற்கொண்டு ஏற்றுக்கொள்கிறேன்.
‘குரு உத்ஸவ்’ என்று மத்திய அரசு அறிவித்தவுடன் ‘கிடங்கிற் குலபதி நக்கண்ணனார்’ அவர்களுக்கும், குமரி மாவட்டத்தில் ’அதங்கோட்டு ஆசானு’க்கும் சிலை வைத்து ’குரு’ என்ற பாரம்பரியத்தை உலகுக்கு உணர்த்தியவர்கள் தமிழர்கள் என்று சொல்லி உற்சாகமாக ‘குரு உற்சவ’த்தைக் கொண்டாடியிருந்தால் தமிழ் தான் உலகுக்கு வழிகாட்டியது என்பதை பறைசாற்றியிருக்கலாம்.
//கல்வி என்பது மாநில அரசுகளின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் மத்திய அரசு கல்விதுறையில் தலையிடுவதனால் தான் தேசிய மொழிகள் அழிவு பாதைக்கு தள்ளப்படுகின்றன//
’குரு உத்ஸவ்’ தமிழ்நாட்டுக் கல்வித் திட்டத்தை மாற்ற அறிவுறுத்தியதா? மத்திய அரசின் தலையீட்டை இங்கே கொண்டு வருவது உள்நோக்கம் தானே? ’இந்தி போராட்டம் மொழி சிக்கல் அல்ல அரசியல் சிக்கல்’ (01-03-1965,விடுதலை) என்று சொன்ன ஈ.வே.ராவின் கொள்கையைத்தானே இது நினைவு படுத்துகிறது?
நரேந்திர மோடி இந்தியில் தானே பேசினார் என்று குற்றம் சுமத்துவர்களுக்கு, அவர் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். தமிழில் அறிவியலும், ஒழுக்கமும்மில்லை, அவை ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிறது என்ற அடிப்படையில் மொழிக் கொள்கை அமைத்தவர்களுக்கு பிரதமர் ஆங்கிலத்தில் பேசாதது குற்றமே?
//வேதம் என்று வரும் போது வருணாசிரம கொள்கையும் தீண்டாமையும் வந்துவிடுகிறது.// அப்படி என்றால் சங்க இலக்கியங்கள் தொல்காப்பியம் என்ற அனைத்தையுமே நாம் ஆரியம் என்று தள்ளிவிடலாமா? தொல்காப்பியத்தில் வியாபாரம் செய்யும் தொழிலை முன்னிறுத்தி வணிகன் குறிப்பிடப்படுகிறான்.
''வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” தொல்காப்பியம் (மரபியல் 78)
இந்தப்பாடலில் வணிகத் தொழிலின் அடிப்படையில் வைசிகன் அடையாளம் காணப்படுகிறான்.
புறநானூற்றில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், கல்வியின் சிறப்பை உணர்த்திய பாடலில் வேற்றுமை தெரிந்த நாற்பால் என்று வருண படிநிலைகளை குறிப்பிடுகிறார். கீழ்படிநிலையிலுள்ள ஒருவன் கல்வியினால் அவன் மேல் குலத்தினரால் மதிக்கப்படுகிறான் என்கிறது இந்த 183வது பாடல்.
வேற்றுமை தெரிந்த நாற் பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே புறநானூறு, 183 பாடல்
கீழ்ப்பால், மேற்பால் என்பதற்கு கடலில் உள்ளவன், மலையில் உள்ளவன் என்று புதுப்புது விளக்கங்கள் நம் அறிஞர் பெருமக்கள் கொடுக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக. ‘பிரம்ம சூத்திரம்’ ஸ்மிருதியில் சேர்ந்ததுபோல், அர்சுணன் என்ற ஷத்திரியன் ப்ராமணனானதைப் போல் தமிழ்நாட்டில் இதுவும் நடக்கலாம்.
’குரு உத்ஸவ்’ என்பதற்கு மூன்றாவது கோணம் என்ற தலைப்பில் தோழர் ’தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது’ கல்வி விலைச்சரக்காகி விட்டது என்று முழங்கியுள்ளார். பாரத மரபுப்படி கல்வி, மருந்து, உணவு ஆகியவை வியாபாரம் ஆக்கப்படக்கூடாது. இந்த அடிப்படையில் தான் திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரம் பொருட்பாலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரபுகளை மேடை தோறும் கொச்சைப்படுத்தி விட்டு கல்வி வியாபாரமயமாகி விட்டது என்று கூரைமீது ஏறி தமிழ் முழக்கமிடுவது நியாயமா?
உள்நோக்கத்துடன் முடிவை எழுதிவிட்டு ஆய்வைத் தொடங்கும் பழக்கத்தை விட்டொழித்து ஆழமாக ஆராய்ந்து முடிவு கூறும் பழக்கத்தை அறிஞர் பெருமக்கள் ஏற்படுத்திக்கொண்டால் துவேஷங்கள் நீங்கி தமிழ் உயர்வு பெறும்.