×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஆட்சிப் பணியும் மதச் சுதந்திரமும் – உமாசங்கர் தவறான முன்னுதாரணம்

Friday, 13 February 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

umashankar

 

தமிழக அரசின் உயர் அதிகாரியான உமாசங்கர் IAS கடந்த ஐந்து வருடங்களாக கிறிஸ்தவப் பிரச்சாரகராக தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், அவர் அந்தப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், தவறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைமைச் செயலர் அறிவுறுத்திக் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு உமாசங்கர், மாலை 6 மணிக்குப் பிறகும், விடுமுறை நாட்களிலும் மதப்பிரச்சாரங்கள் செய்வது தன்னுடைய தனிப்பட்ட உரிமை என்றும், மதப் பிரச்சாரம் செய்வதை அரசியல் அமைப்புச் சட்டம் தடை செய்யவில்லை, அனுமதிக்கிறது என்றும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேட்டியளித்து வருகிறார்.

பின்னர், சற்றே தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க மதப் பிரச்சாரங்களை நிறுத்தி வைப்பதாகவும், ஆனால் தன்னுடைய உரிமையையும் மதச் சுதந்திரத்தையும் நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் கூறியுள்ளார்.

தமிழக அரசின் முன்னாள் இன்னாள் உயர் அதிகாரிகள் அனைவரும் உமாசங்கர் செய்வது அரசு விதிமுறைகள், குறிப்பாக ஐ.ஏ.எஸ் விதிமுறைகளை மீறிய செயல் என்று தெளிவாகவே கருத்துச் சொல்கின்றனர். இதையே தலைமைச் செயலர் அவருக்கு அனுப்பியுள்ள நோட்டீசும் உறுதி செய்கிறது.

உமாசங்கர் நடத்தையின் பின்னணி
உமாசங்கரின் நடத்தைக்கு ஒரு பின்னணி உண்டு. இவருடைய தந்தையார் சடையாண்டி செல்லகிரி ஒரு இந்து. தாயார் சுகந்தி கிறிஸ்தவர். உமாசங்கர் தான் "சட்டப்படி"  இந்து என்று கூறிக்கொண்டாலும், வீட்டிற்குள் தாயாரின் விருப்பப்படி கிறிஸ்தவராகவே வளர்ந்து வந்துள்ளார். தனது தாயார் தனக்கு அஷோக் என்று பெயரிட்டு, பள்ளிச் சான்றிதழ்களில் கிறிஸ்தவ பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இவர் தன்னை 'சட்டப்படி' இந்து என்று சொல்லிக்கொள்ளவும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது தன்னுடைய தந்தையார் இந்து என்பதைச் சாதகமாகக் கொண்டு, தன்னுடைய தந்தையாரின் ஆதி திராவிட சமூக அந்தஸ்தைப் பயன்படுத்தி அரசு சலுகைகளைப் பெற்று வந்துள்ளார். இவருடைய தந்தையார், இவர் இந்திய ஆட்சிப் பணியில் (IAS) சேரும்போதும் இவருக்கு உமாசங்கர் என்கிற பெயரில் ஆதி திராவிட ஜாதி சான்றிதழ் பெற்றுத் தந்ததாகவும் கூறியுள்ளார்.

1996ல் தி.மு.க ஆட்சி அமைந்ததும், முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் நடந்திருந்த ஊழல்களை வெளியே கொண்டுவருவதில் உமாசங்கர் முக்கிய பங்காற்றினார். பிறகு 2001ல் அ.தி.மு.க ஆட்சி மீண்டும் வந்தபோது இவருடைய முக்கியத்துவம் குறைந்து போனது. தொடர்ந்து ஐந்து வருடங்கள் முக்கியத்துவமில்லத பதவிகளிலிருந்தார். அதன் பிறகு மீண்டும் 2006ல் தி.மு.க ஆட்சி வந்ததும், எல்காட்(ELCOT) நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டர். அதன் பிறகு கேபிள் டிவி கார்பரேஷன் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அச்சமயத்தில் தி.மு.கவிற்கு நெருக்கமான மாறன் சகோதரர்களுடன், சன் டிவி மற்றும் சுமங்கலி கேபிள் விஷன் சம்பந்தமாக, உரசல் ஏற்பட்டது. அதனால் கோபம் கொண்ட தி.மு.க அரசு, போலி ஜாதி சான்றிதழ், வருமானத்துக்கு மேல் சொத்து என்றெல்லாம் குற்றம் சாட்டி, அவரைப் பணி இடைநீக்கம் செய்தது. ஆனால் தாழ்த்தப்பட்ட சமுதாய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், எதிர் கட்சிகள் ஆகியவை அரசுக்கு எதிராகக் கிளம்பவே, அரசும் அவருடைய பணி இடைநீக்கத்தை ரத்து செய்து, டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமித்தது.

அதன் பிறகு, 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்து அ.தி.மு.க் ஆட்சி மீண்டும் அமைந்த போது, ''இயேசு கைவிடார் என்பது பைபிள் வார்த்தை. எனது வாழ்க்கையில் இக்கட்டான நேரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முதலிலேயே இயேசு என்னிடம் சொல்லிவிடுவார். என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டிய தி.மு.க ஆட்சியைப்பற்றி இயேசு என்னிடம், 'உன்னைத் தொடுகிறவன், என் கண்மணியைத் தொடுவதற்குச் சமம். உன் தலையில் இருந்து முடியைக்கூட விழ நான் அனுமதிக்க மாட்டேன்'னு சொன்னார். அப்படித்தான் நடந்தது. கடந்த ஜூலை மாதத்தில், தி.மு.க. மோசமான தோல்வியைச் சந்திக்கும்னு இயேசு என்னிடம் தெரிவித்தார். மூணு என்கிற எண்ணையும் சைகையால் காட்டினார். அதை நான் மூணு ஸீட் என்று நினைத்தேன். ஆனால், தேர்தல் முடிவில் மூன்றாம் இடத்துக்குத் தி.மு.க. தள்ளப்படும் என்பதைத்தான் ஜனவரி முதல் வாரத்தில் சொன்னார். நான் சஸ்பெண்டு ஆன சில நாட்களில், எனக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கைவிட்டார். அப்போதே, அடுத்த சி.எம். ஆக அவரை கர்த்தர் நியமிச்சிட்டார்னு எனக்குத் தெரியும். ஜெயலலிதா மீது கர்த்தரின் கரம் இருக்கு. அதனால், அவரது ஆட்சிக்கும் ஆசீர்வாதங்கள் உண்டு'' என்று அவர் அளித்த பேட்டி மே 25-2011 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வந்துள்ளது.

தொடர்ந்து கிறிஸ்தவ மதப்பிரச்சாரங்களில் பங்கேற்றுக் கொண்டு உரையாற்றும்போது, தலித் மக்களைக் கிறிஸ்தவ மத்த்திற்கு மாறும்படியும், அவ்வாறு ஞானஸ்நானம் செய்து மாறிய பிறகு சர்ச்சின் பதிவேடுகளில் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம் என்றும், ஹிந்து தலித்தாகவே வெளியில் காட்டிக்கொண்டு அரசு சலுகைகளை அனுபவிக்கச் சொல்லியும், பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். இவர் இப்படி பிரச்சாரம் செய்வது நாளிதழ்களிலும் வந்துள்ளது (Deccan Chronicle dated 22 September 2010.). தான் கிறிஸ்தவராக வாழ்ந்து வந்தாலும், 'சட்டப்படி' இந்துதான் என்றும் பகிரங்கமாகச் சொல்கிறார்.

கிறிஸ்தவ வெறியராக உமாசங்கர்
இவர் தமிழக அரசை ஏமாற்றி சட்டத்தை மீறி நடந்துகொள்வது மட்டுமல்லாமல், இந்து மதத்தையும் இந்துக்கடவுளரையும் கொச்சைப் படுத்தி அவமதித்து துவேஷத்துடனும் நடந்துகொண்டுள்ளார். தான் செய்யும் கிறிஸ்தவ மதப்பிரச்சாரங்களில் இந்து மதத்தில் தீண்டாமை உண்டென்றும், இந்துக்கடவுள்கள் பொய்யானவர்கள், சக்தியற்றவர்கள் என்றும் கூறிவருகிறார்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குனராக இருந்தபோது அலுவலகத்திலிருந்த இந்துக் கடவுள்களின் படங்களை அப்புறப்படுத்தியுள்ளார். கோ-ஆப்டெக்ஸ் கடைகளிலிருந்தும் இந்து கடவுள் படங்களை அவர் அப்புறப்படுத்த முயன்றபோது, ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பவே, அரசு அவரை வேறு துறைக்கு மாற்றியது. இவர், அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் மரபையும் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார்.

2013ல் உத்தர்கண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் பொங்கிப் பேரழிவு ஏற்பட்டபோது, நக்கீரன் வார இதழுக்குப் பேட்டியளித்த உமாசங்கர், "இந்தியக் கடவுள்கள் பொய்யானவை என்பதை நிரூபிக்கவே ஏசு இந்த மாதிரியான அழிவுகளை ஏற்படுத்துகிறார். அவர் தன்னுடைய தீர்க்கதரிசனத்தினால் எனக்கும் இந்தத் தகவல்களை அனுப்பினார். அதைத்தான் நன் 2012 செப்டம்பர் 26-28 நக்கீரன் இதழிலேயே சொல்லியிருந்தேன்" என்று கூறியுள்ளார்.

அரசியல் சாஸனத்தில் மதச் சுதந்திரம்.
மதப் பிரச்சாரத்தில் ஈடுபடும் உமாசங்கர், தான் செய்வது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதே என்று கூறுகிறார். ஆனால் அது தவறானது.

அரசியல் சாஸனம் அளிக்கும் மதச் சுதந்திரமானது முழுமையானது அல்ல. அது சில நிபந்தனைகளுக்கு உடப்பட்டதே. அதாவது, மதச் சுதந்திரமானது சட்ட ஒழுங்கிற்கோ, பொது நலனிற்கோ, பொது ஆரோக்கியத்திற்கோ கேடு விளைவிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளைத் தெளிவாகக் கூறியுள்ளது அரசிய அமைப்புச் சட்டம். மேலும் பிரச்சார உரிமை அளித்திருந்தாலும், மற்ற மதத்தை அவதூறு செய்யும் உரிமையை அளிக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் பிரச்சார உரிமையை மதமாற்றம் செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமையாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

கடுமையான நடவடிக்கை தேவை
மேற்கண்டவாறு அரசியல் சாஸனத்தின் 25வது க்ஷரத்து தெளிவாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உமாசங்கர் ஒரு மதப்பிரச்சாரகரோ, தனி மனிதரோ அல்ல; அவர் ஒரு அரசு உயர் அதிகாரி; இவ்வாறு கிறிஸ்தவ சார்புடனும் இந்து விரோதியாகவும் உள்ள ஒரு அரசு அதிகாரி எவ்வாறு பாரபக்ஷமின்றி செயல்படுவார்? அவர் துறையில் அவரின்ன் கீழ் செயல்படும் அலுவலர்களையும் ஊழியர்களையும் பாரபக்ஷமின்றி நடத்துவார் என்பது என்ன நிச்சயம்? அவருடைய துறையின் கீழ் இருக்கும் மக்களுக்கு அத்துறையின் பயன்கள் பாரபக்ஷமின்றி அடையும் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர் நடத்தும் மதப் பிரச்சாரக் கூட்டங்களினால் சட்ட ஒழுங்கு பாதிக்காது என்றும், மத மோதல்கள் உருவாகாது என்றும் உறுதியாக எப்படிச் சொல்ல முடியும்?

உமாசங்கரின் நடத்தையைத் தொடர்ந்து கவனித்து வரும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அரசியல் சாஸனத்தையும், அரசு விதிமுறைகளையும் மீறியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்போனால் தமிழக அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கையே மிகவும் கால தாமதமானது. இப்போது கூட தந்தி டிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தன் கை பட்டாலே ஏசுவின் அருளால் இறந்தவன் உயிரோடு எழுந்து வந்துவிடுவான் என்று கூறியுள்ளார். ஆகவே, இப்பேர்பட்ட மதவெறி பிடித்த, சட்டத்தை மீறிச் செயல்படும் ஒருவரை உயர் அதிகாரியாக வைத்திருப்பது தவறான முன்னுதாரணம். அவரைப் பதவியை விட்டு நீக்குவதே சரியான செயல். அதுவே அவருடைய குற்றங்களுக்கான சரியான தண்டனை. இந்த்த் தண்டனையானது மற்ற அரசு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் முறையான சரியான தகவலை அனுப்பும்.

Read 1219 times
Rate this item
(3 votes)
Last modified on Friday, 13 February 2015 14:02

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link senthiladhi Tuesday, 03 March 2015 20:23 posted by senthiladhi

    Uma shankar oru mental

Leave a comment