×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

கிறிஸ்தவ மதமாற்ற வியாபாரத்திற்கு அரசு பொறுப்பேற்கலாமா?

Monday, 23 February 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து திரு.நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவ்வமயம் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் ஹேரத் என்னும் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தை தாலிபான் தீவிரவாதிகள் கடுமையாகத் தாக்கினர். அப்போது இந்திய-திபேத்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும், ஆஃப்கானிஸ்தான் காவல்துறையினரும் அந்த தாலிபான் தீவிரவாதிகளில் இருவரை சுட்டு வீழ்த்தி மற்றவரை விரட்டி அடித்தனர்.

Father Aleksis Prem Kumar

அந்தத் தாக்குதல் முடிந்து இரண்டு வாரத்திற்குள், “ஜேசு அகதிகள் சேவை” (Jesuit Refugee Service – JRS) என்னும் அமைப்பைச் சேர்ந்த இந்தியக் குடிமகனான அலெக்ஸிஸ் பிரேம் குமார் என்கிற பாதிரியார் கடத்தப்பட்டார். அவரைக் கடத்தியது தாலிபான் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் அப்போது எழுந்தது. ஹேரத் நகரிலிருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சொஹதத் என்னுமிடத்தில் உள்ள அகதிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளி ஒன்றிற்கு கல்வி கற்பிக்கும் பெயரில் கிறிஸ்தவ ஊழியம் செய்யச்சென்றபோது அவர் கடத்தப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் குடியிருக்கும் அலெக்ஸிஸ் பிரேம் குமாரின் தந்தையார் அந்தோணியும் சகோதரர் மனோகரனும், அவரை விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கவேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பித்தனர். அதே போல சிவகங்கை அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் அவர்களும் அலெக்ஸிஸ் பிரேம் குமாரை மீட்கவேண்டும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலிதாவுக்கு ஒரு விண்ணப்ப மனுவை அனுப்பினார். ஜெயலலிதாவும் பிரதமர் மோடிக்கு இது சம்பந்தமாகக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

வெளியுறவுத்துறை அமைச்சகம், ஆஃப்கானிஸ்தான் ஹேரத் நகரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அரசு ஆகியவை பிரேம் குமாரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கின. அவரைக் கடத்தியவர்களில் ஒருவரைக் கைப்பற்றிக் கைது செய்த ஆஃப்கானிஸ்தான் காவல்துறை, அலெக்ஸிஸ் பிரேம் குமார் உயிரோடு இருப்பதாகவும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து இந்திய அரசு ஆஃப்கானிஸ்தான் அரசு உதவியுடன் தொடர்ந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த்து.

Fr.Alexis Premkumar - Return from Afghanistan

தற்போது, கடத்தல் சம்பவம் நடந்து எட்டு மாதங்கள் கழித்து, இந்திய அரசின் தொடர் முயற்சியால் அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டு தில்லி வந்து சேர்ந்துள்ளார். அவருடைய விடுதலை உறுதியான பிறகு பிரதமர் மோடியே தனிப்பட்ட முறையில் பாதிரியார் அலெக்ஸின் தந்தையார் அந்தோணியிடம் தொலைபேசியில் உரையாடி அலெக்ஸ் விடுதலையான செய்தியைத் தெரிவித்துள்ளார். பாதிரியார் அலெக்ஸும் தில்லி வந்திறங்கிய கையோடு பிரதமருக்கும் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Jesuit Refugee Service Madurai Province

பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் 2011இல் ஆஃப்கானிஸ்தானுக்குச் செல்வதற்கு முன்னர் மதுரை ஜேசு பிராந்தியத்தின் (Madurai Jesuit Province) கீழ் வரும் திண்டுக்கல் ஜேசு அகதிகள் சேவை அமைப்பின் (JRS-Dindukkal) தலைவராக இருந்துள்ளார். அப்போது, கொடைக்கானலில் ஷென்பகனூர் என்னுமிடத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளிடத்தில் ஆறு வருடங்கள் கிறிஸ்தவ ஊழியம் புரிந்துள்ளார். அதற்கும் முன்னர் அவர் திண்டுக்கலில் உள்ள பெஸ்கி கல்லூரியின் இறையியல் துறையில், இறையியல் சம்பந்தப்பட்டக் கல்வியைப் பெற்றுள்ளார்.

Jesuit Refugee Service 1

ஜேசு அகதிகள் சேவை (Jesuit Refugee Service – JRS) என்பது, கல்வி, அவசரகால உதவி, சுகாதாரம் மற்றும் மருத்துவம், ஊதியம் பெற்றுத்தரும் நடவடிக்கைகள், சமூக சேவை ஆகிய தளங்களில் “அகதிகள், அடைக்கலம் தேவைப்படுவோர் மற்றும் உள்நாட்டில் புலம்பெயர்ந்த நபர்கள்” ஆகியோருக்கு ஊழியம் செய்யும் சர்வதேச கத்தோலிக்க அமைப்பாகும். இந்த அமைப்பானது, வியட்னாம் போரின் அகதிகளுக்காக, இயேசு சமூகத்தின் தலைமைப் பாதிரியார் பெட்ரோ அர்ருபே (Fr Pedro Arrupe, Superior General of Society of Jesus) அவர்களால் 1980-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.

பின்னர் இவ்வமைப்பு 2000-ம் ஆண்டில் வாடிகன் நாட்டில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. 78 ஜேசு பாதிரியார்களும், 66 சமய நோன்பிகளும் உட்பட்ட 1400 ஊழியர்கள் 50 நாடுகளில் ஊழியம் செய்து, 600,000 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்று இவ்வமைப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், இயேசு சமூகத்திற்குள் எத்தனை பேரைச் சேர்த்துள்ளது என்பதையும், மேற்சொன்ன 50 நாடுகளில் ஊழியம் செய்ததன் மூலம் இயேசு சமூகம் எவ்வாறெல்லாம் பயனடைந்துள்ளது என்பதையும் இவ்வமைப்பு தெரிவிக்கவில்லை.

ஜேசு அகதிகள் சேவையானது தன்னுடைய குறிக்கோளைப் பற்றி பின்வருமாறு விளக்குகிறது: “ஜேசு அகதிகள் சேவை, இயேசு சமூகத்தின் திருத்தூத ஊழியமாகும். 460 ஆண்டுகளுக்கும் மேலாக ஜேசு பாதிரியார்களும் சகோதரர்களும், புதிய மற்றும் எதிர்பாராத வகைகளில் கிறிஸ்தவ ஊழியம் புரிந்துள்ளனர். இயேசுவின் நற்செய்திகளைப் பரப்பவும், கிறிஸ்தவ சபையின் குறிக்கோளை முன்னேற்றவும், அணுகுமுறை, செய்யும் பணி, இருக்கும் இடம் ஆகிய எதையும் மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கும் நபர்களாக, மத நம்பிக்கையோ அந்த மத நம்பிக்கை தரும் நீதிகளையோ சற்றும் மதிக்காத உலகில் தீவிரவாத ஊழியர்களாக இருக்கின்றனர்”.

ஜேசு அகதிகள் சேவையானது, மற்ற மதங்களுடனும் கலாச்சாரங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அமைப்பாகவும் இருக்கிறது. பல்வேறு மதங்களுடனான புரிதல், அவை சந்திக்கும் புள்ளிகள், குறிப்பாக ஹிந்து மதத்துடனான கொள்கைவாதங்கள், கிறிஸ்தவ வேதாந்தம், கலாச்சாரக் களவு, மதநல்லிணக்கம் போன்ற விஷயங்களில் “கல்வியியல் ஆராய்ச்சி” (Academic Research) செய்வதிலும் இவ்வமைப்பு ஈடுபடுவதுண்டு.

மேற்கண்ட ‘குறிக்கோள்’ மற்றும் ‘கல்வியியல் ஆராய்ச்சி’ ஆகியவற்றைக் காணும்போது, ஜேசு அகதிகள் சேவையின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது. பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமாரும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி என்கிற பெயரில் மாணவருக்கான விசாவில் (Student Visa to pursue his Doctoral Research) தான் ஆஃப்கானிஸ்தான் சென்றுள்ளார்.

கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்கள் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் ஆஃப்கானிஸ்தானில் புதிய விஷயம் அல்ல. அடிக்கடி நடப்பதுதான். 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் தென்கொரியாவைச் சேர்ந்த சயீம்மல் சர்ச்சின் (Saemmul Presbyterian Church) 23 மதப்பிரச்சாரகர்கள் மதமாற்ற ஊழியத்திற்காக ஆஃப்கானிஸ்தான் சென்ற போது, தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்கள். 42 நாட்கள் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தாலிபான் இருவரைக் கொன்றுவிட்டு மற்றவர்களை விடுதலை செய்தது. அதைப்போலவே “மெடேர்” (Medair) என்கிற சர்வதேச மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த 4 மதப்பிரச்சாரகர்களைக் கடத்தியது தாலிபான். ‘கல்வி’, ‘சுகாதாரம்’, ‘மருத்துவம்’ போன்று ‘மனிதாபிமான சேவை’ என்பதும் மதமாற்றத்தில் ஈடுபடுவதற்கான மார்க்கம் தான். அவசரகால உதவி, சத்துணவு உதவி போன்றவற்றில் ஈடுபடும் ‘மெடேர்’ அமைப்பும் ஒரு கிறிஸ்தவ நிறுவனமே. கடத்தப்பட்ட நான்கு பேரும் பதக்‌ஷான் என்கிற இடத்தில் பணியில் இருந்துள்ளார்கள்.

South Korean Victims of Taliban attack

2010-ம் ஆண்டிலும் சர்வதேச சேவை சமயக்குழு (International Assistance Mission) என்கிற கிறிஸ்தவ நிறுவனத்தைச் சேர்ந்த 10 மதப்பிரச்சாரகர்கள் தாலிபானால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்கள் நலிவடைந்த ஆஃப்கானிஸ்தானியர்களுக்காக கண் மருத்துவ முகாம் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கண் மருத்துவத்தோடு கூடவே மதப் பிரச்சாரத்திலும் மதமாற்றத்திலும் ஈடுபட்டதால்தான் அவர்களைக் கொன்றோம் என்று தாலிபான் அறிக்கை வெளியிட்டது.

கிறிஸ்தவ நிறுவனங்களின் தலையாய கொள்கையானது உலகம் முழுவதையும் கிறிஸ்தவ மயமாக்க வேண்டும் என்பதே. அதன் அடிப்படையில்தான் அவை உலகின் பல்வேறு நாடுகளிலும் கல்வி, சுகாதாரம், மருத்துவம், மனிதநேயம், மனித உரிமை, மதச்சார்பின்மை போன்ற தளங்களில் சேவை அமைப்புகளை நிறுவி மதப்பிரச்சாரத்திலும் மதமாற்றத்திலும் ஈடுபடுகின்றன. குறிப்பாக, இயற்கைச் சீற்றம், போர், பயங்கரவாதம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பல்வேறு உதவிகள் புரிகின்ற சாக்கில், துன்பத்தில் உழலும் பாதிக்கப்பட்ட மக்களை மதமாற்றம் செய்வதும் இவர்களின் குறிக்கோள். அவ்வாறு தங்களால் மதப்பிரச்சார மதமாற்றப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நபர்களை “உதவிப் பணியாளர்கள்” என்று அடையாளப்படுத்துகின்றன கிறிஸ்தவ நிறுவனங்கள். இவ்வாறு ‘உதவிப் பணியாளர்’ என்ற போர்வையில் ஜேசு அகதிகள் சேவை அமைப்பால் அனுப்பப்பட்டவர்தான் பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமாரும்.

அலெக்ஸிஸ் பிரேம் குமார் விடுதலை ஆகி மீண்டும் தாய்நாடு திரும்பியதில் சந்தோஷம் ஏற்படும் அதே சமயத்தில், அவர் போன்ற நபர்கள் அரசுக்கும் தூதரகத்துக்கும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுத்துவதையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தின் ஊழியர்; அவர் அந்த நிறுவனத்தால் பணிக்கப்பட்டுத் தானாகவேதான் ஆஃப்கானிஸ்தான் சென்றுள்ளார். அவர் அரசு அலுவலர் அல்ல; அரசின் சார்பாக அரசின் ஊழியராகச் செல்லவில்லை. ஆகவே, ஜேசு அகதிகள் சேவை அமைப்பும் அது சார்ந்துள்ள கத்தோலிக்க நிறுவனமும்தான் அவருடைய உயிருக்கும் பதுகாப்புக்கும் பொறுப்பே தவிர, மாநில மத்திய அரசுகளோ அல்லது இந்தியத் தூதரகமோ அல்ல.

மேலும், ஜேசு அகதிகள் சேவை அமைப்பு அலெக்ஸிஸ் பிரேம் குமாரை ”உதவிப் பணி” என்று சொல்லக்கூடிய கிறிஸ்தவ ஊழியத்திற்காக ஆஃப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்கு இந்திய அரசின் அனுமதியைப் பெறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அவ்வமைப்பு ஆஃப்கானிஸ்தான் அரசுடன் ஏதாவது உடன்படிக்கை கொண்டுள்ள பக்ஷத்தில், வாடிகனிலிருந்தோ அல்லது ரோமிலிருந்தோ ஊழியர்களை அனுப்பியிருக்க வேண்டும்; அல்லது ஆஃப்கானிஸ்தானில் உள்ள உள்நாட்டுப் பணியாளர்களைக் கொண்டு நலத்திட்டங்களையும் உதவிகளையும் மட்டும் செய்துகொண்டு மதமாற்றத்திலும் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் இருந்திருக்க வேண்டும்.

ஆஃப்கானிஸ்தான் போன்ற பயங்கரவாதம் மலிந்து கிடக்கும் நாடுகளில் அரசுப் பணியாளர்களும் அரசு அலுவலர்களுமே பல ஆபத்துக்களைச் சந்திக்கும் போது, அரசுக்குத் தெரியாமல் தாங்களாகவே அம்மாதிரியான நாடுகளுக்குச் செல்பவர்களின் நிலை என்னவென்று சொல்லவேண்டிய அவசியமில்லை. தங்களுடைய முட்டாள்தனமான முடிவுகளால் அரசுக்கும் தூதரகத்துக்கும் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாவதை அலெக்ஸிஸ் பிரேம் குமார் போன்ற ஊழியர்களும் அவர்களை ஊழியத்திற்கு அனுப்பும் கிறிஸ்தவ நிறுவனங்களும் உணர வேண்டும். உணராமலும், அரசின் அனுமதியில்லாமலும் அவர்கள் செய்யும் காரியங்களினால் அரசின் நேரமும் பொதுமக்களின் பணமும் விரயமாகின்றன.

பாதிரியார் அலெக்ஸிஸ் ப்ரேம் குமார் விடுதலை செய்யப்பட்டார் என்று மட்டும் தான் செய்தி வந்துள்ளது. ஆனால் மற்ற தகவல்கள் எதுவும் வராத்தால் சில கேள்விகள் எழுகின்றன.

  • மதுரை ஜேசு பிராந்தியத்தின் கீழ் ஊழியம் செய்துகொண்டிருந்த அலெக்ஸிஸ் உண்மையிலேயே கல்விப் பணிக்காகத்தான் ஆஃப்கானிஸ்தான் சென்றாரா?
  • மதுரை ஜேசு பிராந்தியத்திற்கு அன்னிய நாடுகளிலிருந்து நிதியுதவி கிடைக்கிறது; ஆகவே, அலெக்ஸிஸ் பிரேம் குமார் ஆஃப்கானிஸ்தான் செல்ல நிதியுதவி எங்கிருந்து வந்துள்ளது?
  • ஆஃப்கானிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதம் நிரம்பிய ஒரு நாடு. அம்மாதிரியான ஆபத்து மிகுந்த நாடடிற்குச் செல்வதற்கு அலெக்ஸிஸ் பிரேம் குமார் இந்திய அரசின் அனுமதியைப் பெற்றாரா? மதுரை ஜேசு பிராந்தியம் அவரை ஆஃப்கானிஸ்தான் அனுப்ப இந்திய அரசின் அனுமதியைக் கோரியதா?
  • அவரைக் கடத்தி எட்டு மாதங்கள் சிறை வைத்திருந்தவர்கள் யார்? தாலிபான்களா அல்லது வேறு அமைப்பினரா?
  • அவரை விடுவிப்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்திப் பின்பு பணம் கொடுக்கப்பட்டுள்ளதா? அப்படிக் கொடுக்கப்பட்டிருந்தால் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது? அந்தப் பணத்தைக்கொடுத்தது இந்திய அரசா அல்லது மதுரை ஜேசு பிராந்தியமா? மக்கள் வரிப்பணத்திலிருந்து இந்திய அரசு கொடுத்திருக்கும் பட்சத்தில் அப்பணத்தை மதுரை ஜேசு பிராந்தியத்திடமிருந்து திரும்பிப் பெறுமா?

“ஆஃப்கானிஸ்தானில் கல்வி கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவந்த பிரேம் குமார், அதோடு கூட அங்குள்ள இளைஞர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். அதனால் ஈர்க்கப்பட்ட சிலர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். இதைக் கவனித்து வந்த ஆஃப்கான் இளைஞர்கள் சிலர், மதப்பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என்று அவரைப் பலமுறை எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு ஆஃப்கனில் இயங்கிவரும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளும் பிரேம் குமாருக்கு கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளன. அதைப் பொருட்படுத்தாமல் பிரேம் குமார் தொடர்ந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால்தான் அவரை அங்குள்ள தீவிரவாத கும்பல் கடத்தியுள்ளது” என்று பிரேம் குமாருடன் தொடர்பிலும் நட்பிலும் இருந்த பாதிரியார்கள் கூறியதாக 11-06-2014 தேதியிட்ட ‘தமிழக அரசியல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே, வாடிகன் சார்பாக மதமாற்ற வியபாரத்தில் ஈடுபடுபவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அரசு பொறுப்பேற்க முடியாது. ஆகவே, இம்மாதிரி சந்தேகப்படும் விதத்தில் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு பணியாற்றும் அமைப்புகளை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்; அந்த மாதிரியான அமைப்புகளுக்கு அன்னிய நிதியுதவி வருவதையும் நிறுத்த வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அம்மாதிரியான அமைப்புகளின் சார்பாகவும் சொந்த வேலைகளுக்காகவும் ஆஃப்கானிஸ்தான் போன்ற ஆபத்துக்கள் நிறைந்த நாடுகளுக்குத் தாங்களாகவே தனி நபர்கள் செல்வதற்கும் அரசு தடை விதிக்க வேண்டும்.

ஆதாரம்: -


http://www.thehindu.com/news/national/catholic-priest-prem-kumar-freed-from-taliban-captors/article6922145.ece?homepage=true
http://en.jrs.net/about
http://www.jrsusa.org/news_detail.cfm?TN=NEWS-20140603071439
http://en.wikipedia.org/wiki/Jesuit_Refugee_Service
http://atimes.com/atimes/Korea/MD12Dg01.html
http://relief.medair.org/en/mission/
http://www.nytimes.com/2010/08/08/world/asia/08afghan.html?_r=1&
http://www.newindianexpress.com/nation/One-Held-for-Jesuit-Priest%E2%80%99s-Abduction-in-Afghanistan/2014/06/05/article2263716.ece
“தமிழக அரசியல்” – 11-06-2014

 

Read 1294 times
Rate this item
(1 Vote)
Last modified on Monday, 23 February 2015 10:17

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment