×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

கோவில் கோசாலைகள் பராமரிப்பு : அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - 2

Friday, 03 April 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

இக்கட்டுரையின் முதல் பகுதியில் கண்டவாறு 21 கோவில்களின் கோசாலைகளைக் கண்டு ஆய்வு செய்து அறிக்கை அளித்த குழுவினர், கீழ்காணும் பரிந்துரைகளையும் அளித்தனர்.

பரிந்துரைகள்

தமிழகத்துக் கோவில்களில் உள்ள கோசாலைகளின் நிர்வாகத்திற்கென்று தனிப்பட்ட ஒரு இணை ஆணையர் (Joint Commissioner) நியமனம் செய்யப்பட வேண்டும். அவர் கால்நடைத்துறையின் பிராந்திய இணை இயக்குனர்களுடன் (Regional Joint Director) ஒருங்கிணைந்து பணி புரிய வேண்டும். அதாவது, இணை ஆணையர் கோசாலைகள் நிர்வாகத்திற்கும், இணை இயக்குனர் கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கும் பொறுப்பாக இருக்க வேண்டும். கோசாலைகளின் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். போதிய சூரிய வெளிச்சமும், தேவைப்பட்ட நிழலும், காற்றோட்டமும் உள்ளதாக அமைய வேண்டும். கழிவுநீர் சீராக வெளியேறும் விதத்தில் இருக்க வேண்டும். தேவைப்பட்ட அளவு தண்ணீர் வசதி இருக்க வேண்டும். கோசாலைக்கு அருகிலேயே பசுந்தீவனங்களும் பசும்புற்களும் வளர்க்க ஏதுவாக இடமிருக்க வேண்டும்.

7 goshala 1

கோசாலைகள் நல்ல முறையில் செயல்பட கீழ்காணும் யோசனைகளைப் பரிந்துரைக்கிறோம்.

  1. கோவில் கோசாலைகள் அறநிலையத்துறை மற்றும் கால்நடைத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பில் இருக்க வேண்டும்.
  2. பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960, பிரிவு 4ன் கீழ் நிறுவப்பட்ட பிராணிகள் நலவாரியத்திற்கு, கோவில் கோசாலைகளைப் பற்றிய நிலை அறிக்கையை ஒவ்வொரு அரையாண்டிலும் அறநிலையத்துறை வழங்க வேண்டும்.
  3. கோசாலை உள்ள கோவில்களுக்கு பசுந்தீவனங்கள் வளர்க்க ஆலோசனை அளிக்கும் பொறுப்பை கால்நடைத் துறை ஏற்றுக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை நிபுணத்துவம் பெற்ற விலங்கு நல மருத்துவர் ஒருவரையும் (Veterinary Assistant Surgeon - VAS), உதவி இயக்குனர் படிநிலையில் கண்காணிப்பு அலுவலர் (Monitoring Officer – MO) ஒருவரையும் கால்நடைத்துறை நியமிக்க வேண்டும். அந்த விலங்குநல மருத்துவர் கால்நடைகளுக்குப் பத்து நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை அளித்து அவற்றின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும்.
  4. கால்நடைகளுக்கான கணக்கெடுப்பு: ஒவ்வொரு கோவிலின் நிர்வாக அலுவலரும் கால்நடைத்துறைக்கும், இந்திய பிராணிகள் நல வாரியத்துக்கும் ஒவ்வொரு அரையாண்டும் கால்நடைக் கணக்கு அறிக்கையைச் சமர்பிக்க வேண்டும். தானங்கள் அல்லது கொள்முதல் ஆகியவற்றால் அதிகரித்த கால்நடை எண்ணிக்கையையும், இறப்பினால் குறைந்த எண்ணிக்கையையும் சரியாகப் பதிவு செய்திருத்தல் வேண்டும். பசு, காளை, கன்று என்று மாடுகளின் வகைகளையும் சரியாக பதிவு செய்திருக்க வேண்டும். ஒரு கோவிலிலிருந்து மற்ற கோவில்களுக்கு கால்நடைத்துறைக்கோ பிராணிகள் நலவாரியத்திற்கோ தெரிவிக்காமல் அனுப்பக்கூடாது.
  5. ஒரு மாடு இறந்துபோனால், அதைப் பிரேதப் பரிசோதனை செய்து அந்த அறிக்கையுடன் இறப்புக்கான காரணம், இறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும். மாடு இறந்த அன்றே பிரேதப்பரிசோதனை செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். இறப்புச் சான்றிதழை இறந்த அன்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை 15 தினங்களுக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். நோயுற்ற மாடுகளைத் தனிமைப்படுத்திப் பராமரிக்க, கோசாலைக்குச் சற்று தூரத்தில் தனி இடம் அமைக்கப்பட வேண்டும். புதிய மாடுகள் வரும் சமயத்தில் அவை அன்றே கால்நடை மருத்துவரால் சோதனை செய்யப்பட்டு, தனி இடத்தில் குறைந்த பக்ஷம் 21 நாட்கள் வைக்கப்பட்டு, முடிவில் மீண்டும் சோதனை செய்யப்பட்டு அதன் ஆரோக்கியம் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் மற்ற மாடுகளுடன் சேர்ந்து இருக்க அனுமதிக்கப்பட வேண்டும். புதிய மாடுகளின் ஆரோக்கியச் சான்றிதழும் கால்நடைத் துறைக்கும், பிராணிகள் நலவாரியத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஏதாவது ஒரு மாடுக்கு நோய் தாக்கினாலோ, அல்லது அதன் அறிகுறி தென்பட்டாலோ, அதைத் தனி இடத்தில் வைத்து சிகிச்சை அளிப்பதா அல்லது கால்நடை மருத்துவமனையில் அனுமதிப்பதா என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவரே தீர்மானிக்க வேண்டும். மாவட்ட கால்நடை மருத்துவமனையில், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை வைக்கத் தனியிடம் அமைக்கப்பட வேண்டும். கோவில் கோசாலையில் உள்ள தனியிடத்தை பராமரிக்கவென்றே ஒரு ஊழியர் நியமிக்கப்பட வேண்டும். தனியிடத்தில் பாதிகப்பட்ட மாடு இருக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட ஊழியருக்குக் கோவிலில் வேறு பணிகள் எதுவும் கொடுக்கப்படக் கூடாது.
  6. தனியிடத்து பிராணிகளும் ஊழியர்களும் மற்ற இடங்களுக்குச் செல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
  7. ஒவ்வொரு கோவிலும் இறந்த பிராணிகளைப் புதைக்கக் கொஞ்சம் நிலம் ஒதுக்கித்தர வேண்டும்.
  8. கோசாலைகளில் சுத்தமான சூழ்நிலையை ஒவ்வொரு கோவில் நிர்வாகமும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். கோசாலைகள் தினமும் ஓடும் நீரினால் சுத்தம் செய்யப்பட வேண்டும்; சிறுநீரும் சாணமும் அவ்வப்போது நீக்கப்பட்டு சுத்தமாகப் பரமரிக்கப்பட வேண்டும். கழிவு நீர் கோசாலையில் தங்காமல் வெளியேறிப் பாதாளச் சாக்கடையில் சென்று கலக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கோசாலை நுழைவு வாயிலிலும் கழிவு நீர் பாதையிலும் வெளுப்புக்காரம் (Bleaching Powder) தினமும் போட வேண்டும். வாரம் ஒரு முறை கோசாலையை சலவை சோடா போட்டுக் கழுவ வேண்டும். கோசாலையில் போதிய அளவு சூரிய வெளிச்சமும் நல்ல காற்றோட்டமும் வேண்டும். மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் ஈக்கள், ஈசல்கள், கொசுக்களைப் பிடிக்கும் விதமாக புற ஒளிக்கதிர் விளக்குகள் (Ultra Violet Lights) அமைக்கப்பட வேண்டும். மாடுகளுக்கு வேண்டுமளவு குடி நீரும், கோசாலையையும் மாடுகளையும் பராமரிக்கத் தண்ணீரும் குறைவில்லாமல் வழங்கப்பட வேண்டும். அனைத்து கோசாலைகளுக்கும் இரவுக் காவல்காரர் (Night Watchman) வசதியும் செய்து தரவேண்டும். அவசர காலங்களில் அவர் தகவல் கொடுத்தவுடன் கால்நடை மருத்துவர் உடனடியாக வந்து சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  9. கால்நடை மருத்துவர் ஆலோசனைகளின் படி கோவில் நிர்வாகம் மாடுகளுக்குப் பசுந்தீவனமும் காய்ந்த தீவனங்களும் மற்ற உணவுகளும் முறையாகக் கொடுக்க வேண்டும். தினமும் காலை 10 மணிக்கு ஒருமுறையும் மாலை 3 மணிக்கு ஒருமுறையும் மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும். மழை மற்றும் பனிக் காலங்களில் தினமும் ஒரு முறை குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டிய பின், கோவில் பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் தெய்வீகத்தன்மை அளிக்குமாறு, மாடுகளுக்கு முன்னும் பின்னும் மஞ்சள் குங்குமம் இடவேண்டும்.
  10. கோவில்களில் நந்தவனம் அமைக்க நிலம் ஒதுக்குவது போல மாட்டுத்தீவனங்கள் பயிர் செய்யவும் நிலம் ஒதுக்கப்பட வேண்டும்.
  11. பசுக்களிடம் ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் கரந்து, கரக்கப்பட்ட பால் அளவை பால் பதிவேட்டில் குறிக்க வேண்டும். கரந்த பால் எவ்விதம் பயன்படுத்தப்பட்டது என்பதையும் அந்தப் பதிவேட்டில் குறித்து வைக்க வேண்டும்.
  12. ஒவ்வொரு கோசாலையும் பின்வரும் பதிவேடுகளை வைத்திருக்க வேண்டும். கோசாலை சம்பந்தப்பட்ட விஷயங்களை முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.

பிராணிகள் பதிவேடு: பசுக்கள், காளைகள், ஆண் கன்றுகள், பெண் கன்றுகள் என்று அனைத்து வகையான மாடுகளின் எண்ணிக்கை (வருகை, இறப்பு உட்பட) தினசரி குறித்து வைக்கப்பட வேண்டும்.

தீவனங்கள் பதிவேடு: மாடுகளுக்குக் கொடுக்கப்படும் வெவ்வேறு வகையான தீவனங்கள் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும். எப்போதும் கோசாலையில் 15 நாட்களுக்குத் தேவையான தீவனங்கள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

கால்நடை மருத்துவர் பதிவேடு: கால்நடை மருத்துவர் வந்து மாடுகளை சோதனை செய்த நாள், என்ன மாதிரியான சோதனைகள் செய்யப்பட்டது, தடுப்பூசி போடப்பட்ட விவரங்கள், அடுத்து தடுப்பூசி போடவேண்டிய தினங்கள், எத்தனை மாடுகள் சோதனை செய்யப்பட்டன, என்ன விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற அனைத்து விவரங்களும் குறிக்கப்பட வேண்டும்.

  1. கோசாலைகளுக்குச் சோதனை செய்ய வரும் கால்நடை மருத்துவர் இந்திய பிராணிகள் நலவாரியம் நியமனம் செய்தவராக இருக்க வேண்டும். கோவில் நிர்வாகம் ஒவ்வொரு பத்து மாடுகளுக்கும் ஒரு பணியாளரை நியமனம் செய்ய வேண்டும். அவருக்கு கோசாலைப் பணிகள் தவிர வேறு வேலைகள் எதுவும் கொடுக்கப்படக் கூடாது. அந்த கோசாலை பணியாளர்கள் நிரந்தர கோவில் ஊழியர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும்.
  2. அனைத்து கோவில் கோசாலைகளில் உள்ள பிராணிகளுக்கும் தனிப்பட்ட அடையாள அட்டை (Unique Identification Tag) கொடுக்கப்பட வேண்டும். இந்து அறநிலையத்துறையும், கால்நடைத்துறையும் சுலபமாக அந்தப் பிராணிகளை அடையாளம் கண்டு பரமரிக்கும் வகையில் அந்த அடையாள அட்டைகள் கொடுக்கப்பட வேண்டும்.
  3. ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். மாடுகளை மகளிர் சுய உவிக்குழுவிற்கு அளிக்கும் படியான மாவட்ட ஆட்சியரின் உரிமையை ரத்து செய்ய வேண்டும். கோவில் பிராணிகள் அவற்றின் இறுதிக்காலம் வரை கோவில் கோசாலைகளில்தான் இருக்க வேண்டும். ஒரு கோவில் கோசலையிலிருந்து மற்றொரு கோவில் கோசாலைக்கு வேண்டுமானால் மாடுகளைக் கொண்டுபோவது அனுமதிக்கப்படலாம். முதல் படியாக அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் 38000 கோவில்களுக்கும் அவற்றின் வருமானம் மற்றும் பரப்பளவைக் கணக்கில் கொண்டு மாடுகளை அளித்துப் பராமரிக்கலாம்.
  4. கரவை நின்று போன பசுக்களை எந்தக் காரணம் கொண்டும் அதன் கோவிலிலிருந்து அப்புறப்படுத்தக் கூடாது. அவை எந்தக்காரணத்தால் கரவை நின்று போனவை என்பதை பதிவேட்டில் குறிக்க வேண்டும்.
  5. பத்து மாடுகளுக்கு மேல் உள்ள கோவில்கள் தங்களுக்குத் தேவையான விபூதியைத் தாங்களாகவே பசு சாணத்திலிருந்து தயாரித்துக்கொள்ள வேண்டும். எரிவாயு சக்தியையும் உற்பத்தி செய்யும் வழிமுறையையும் கையாள வேண்டும்.
  6. சென்னை உயர் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளைச் செயல்படுத்த ஏதுவாக மாநில அளவிலான ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழு மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைக்கும். அதில், அறநிலையத்துறை அலுவலர், கால்நடைத்துறை அலுவலர், இந்திய பிராணிகள் நலவாரிய அலுவலர், பிராணிகள் நல அமைப்புகளிலிருந்து ஒருவர், அந்தக் குறிப்பிட்ட மாவட்டத்தின் கோவில்களில் சம்பந்தப்பட்ட உண்மையான பிரபலமான பக்தர் ஒருவர் ஆகியோர் இடம்பெறவேண்டும்.

8 goshala 1

கோவில் நிர்வாகம் என்பது வெரும் அரசுப்பணி மட்டுமல்ல; அது ஒரு சமூகப் பொறுப்பு மிகுந்த புனிதமான ஆன்மீகப் பணியும் கூட. கோசாலைகளையும் ஆவினங்களையும் பராமரிப்பது என்பது, கோவில் வருமனத்தையும் சொத்துக்களையும் கடைசி நயாபைசா வரையில் எண்ணிப்பார்த்து நிர்வகிப்பது போன்றே முக்கியத்துவம் வாய்ந்தது. புண்ணியம் மிகுந்த பணியான ஆவினப் பராமரிப்பை அரசும் அறநிலையத்துறையும் அலட்சியப்படுத்தவோ புறக்கணிக்கவோ கூடது. தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கோதானம், ஆவின வழிபாடு போன்ற ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை அனைத்துக் கோவில்களிலும் கடைப்பிடிக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் அறநிலையத்துறைக்கும் அரசுக்கும் இருக்கிறது. எனவே ஆவின வழிபாட்டில் தலையிட்டு அந்தப் புண்ணியம் மிகுந்த பாரம்பரியம் நீர்த்துப் போகுமாறு அரசு செயல்படக்கூடாது.

உயர் நீதிமன்ற உத்தரவு
மூவர் குழுவின் மேற்கண்ட அறிக்கை அறநிலையத்துறைக்கும் அரசுக்கும் அனுப்பப்பட்டு அவர்களின் பதிலும் பெறப்பட்டு அவற்றின் மீதான விவாதங்களும் நடத்தப்பட்டது. மூவர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளுக்கு அறநிலையத்துறையால் சரியான காரணங்களுடன் கூடிய விளக்கங்கள் அளிக்க முடியவில்லை. அறநிலையத்துறையின் அலட்சியம் மிகுந்த நிர்வாகம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆகவே, மூவர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மாநில அளவிலான கண்காணிப்புக்குழுவிற்கு தகுதி வாய்ந்த பத்து நபர்களை பரிந்துரைக்குமாறு மூவர் குழுவினரிடமே கேட்டுக்கொண்டது. அதற்கிணங்க மூவர் குழு பத்து நபர்களைப் பரிந்துரைத்தனர். அதையும் ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அந்தப் பத்து நபர்களும் இந்திய பிராணிகள் நலவாரியத்துக்குக் கட்டுப்பட்டு கோவில் கோசாலைகள் பராமரிப்பை மேற்பார்வை செய்ய உதவ வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்திய பிராணிகள் நலவாரியத்திற்கும், குறிப்பிட்ட பத்து நபர்களுக்கும், அறநிலையத்துறையும் கால்நடைத்துறையும் முழு ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும் என்றும், மூவர் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அறநிலையத்துறையும் அரசும் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு.

radharajan

 

 

நமது தேசத்தின் மிக முக்கியமான ஆன்மீகப் பாரம்பரியமான கால்நடைப் பாதுகாப்பையும் பசுத்தாய் வழிபாட்டையும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், இருக்கும் கோவில்களில் முறைப்படுத்தும் விதமாக, வழக்கைத் தாக்கல் செய்து வெற்றி பெற்ற பிராணிகள் நல ஆர்வலர் திருமதி ராதாராஜன் அவர்கள் ஹிந்துக்களின் பாராட்டிற்கும் வணக்கத்திற்கும் உரியவர் ஆகிறார். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்.

Read 1230 times
Rate this item
(1 Vote)
Last modified on Friday, 03 April 2015 14:30

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link சுதர்ஸன் Monday, 13 April 2015 03:12 posted by சுதர்ஸன்

    திருமதி ராதா ராஜன் அவர்கள் பசுக்களுக்கு ஆற்றி வரும் இந்த பெரும் பணி, பெரும்பேர் அளிக்க கூடியது. இது அவர் பசுக்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும், ஸனாதன தர்மத்துக்கும் செய்திருக்கும் பெரும்பணி. பசு என்பது ஏதோ ஒரு விலங்கு அல்ல, அது நமது தாய், நமது கலாச்சாரம், நமது பண்பாடு,நமது தர்மம் என நாமனைவருக்குமே ஆணி வேர் என்பதை இந்த சொணையற்ற சமுதாயம் என்று நன்றியோடு திரும்பிப் பார்க்கிறதோ, அன்று தான் இந்த நாட்டுக்கு விடிமோட்சம் கிடைக்கும். அது வரை பெருமதிப்பிற்கும் உரிய, நம் வணக்குத்துக்கு உகந்த திருமதி ராதா ராஜன் அவர்களைப் போன்றோர் போராடித் தான் நல்லவற்றைப் பெற்றுத் தர வேண்டிய அவல நிலை தொடரும். இவரது இது போன்ற முயற்சிகளுக்கு ஸ்னாதன தர்மத்தை காக்க வேண்டும் என்று கருதுபவர்களும், அதற்கு ஒரு வழி பிறக்காதா எனத் தவிப்பவர்களும் ஓரணி திரண்டு பக்க பலமாய் இருக்க வேண்டும். நாடு வாழ பசு வாழ வேண்டும். நாம் வாழ பசு காக்கப்பட வேண்டும். மேன்மைமிகு அம்மையாரின் பணி மேலும் மேலும் சிறக்க, எல்லாம் வல்ல இறையடி இறைஞ்சுகிறோம்.

Leave a comment