×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

மங்கலம் மறுக்கும் மடமையைக் கொளுத்துவோம்

Wednesday, 08 April 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

பாரத நாட்டின் கலாச்சாரத்தில் பெண்களுக்கு மிக உன்னத இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களைப் போற்றி வழிபடும் பண்பாடு மிக்கது ஹிந்து தர்மம். மேலும், நமது ஆன்மீகப் பாரம்பரியத்தில் பெண் தெய்வங்களுக்கும் ஆண் தெய்வங்களுக்குச் சமமான போற்றுதலும் வழிபாடுகளும் உள்ளன. முப்பத்து முக்கோடி தெய்வங்களையும் தன்னுள் அடக்கியவளாக தேவி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வழிபடுகிறோம். அம்மையும் அப்பனும் ஒன்றெனக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராகவும் வழிபடுகிறோம். கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று பண்புகளுக்கும் முறையே சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என்று பெண் தெய்வங்களையே போற்றுகிறோம்.

HM April 1 14 Mangalam Marukkum Madamaiyai Koluththuvom 1

பெண்களைத் தாயாகப் போற்றும் நம் கலாச்சாரத்தில் தாய்க்குத்தான் முதன்மையான இடம் தருகிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கொண்டு தெய்வத்துக்கும், குருவுக்கும், தந்தைக்கும் முன்னதாகத் தாயையே போற்றுகிறோம். தாயைப் போலவே, சகோதரி என்கிற உறவுக்கும், மகள் என்கிற உறவுக்கும் கூட பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பது நமது பண்பாடு. சகோதரியும் மகளும் கூட திருமணத்திற்குப் பிறகு தாயாகவே மதிக்கப்படுகிறார்கள்.

குடும்பம் என்கிற நிறுவனத்தில், நமது உறவு முறைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அனைத்து உறவு முறைகளும் தங்களுக்கென்று சொல்லப்பட்டுள்ள கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து தவறாமல் நடந்துகொள்ளும் பக்ஷத்தில், அதுவே கூட்டுக்குடும்பமாக மலர்ந்து மணம் பரப்புகின்றது. இத்தகைய ஒரு மகோன்னதமான கலாச்சாரம் வேறு எந்த மதத்திலும், வேறு எந்த தேசத்திலும் இல்லை.

பல நூற்றாண்டுகளாக, ஏறக்குறைய ஆயிரம் வருடங்கள், அந்நியரின் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தபோது கூட, நம் கலாசாரத்திற்கு ஆபத்து வரவில்லை. ஆனால் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு ஆவதற்குள், குறிப்பாகக் கடந்த நாற்பது ஆண்டுகளில், எப்பேர்பட்ட மாற்றங்கள்! மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கமும், இந்து விரோத சக்திகளின் தாக்குதலும், பாதகம் மிகுந்த கல்வித் திட்டங்களும், சுயநலம் மிகுந்த ஆட்சியாளர்களும், அந்நிய சக்திகளின் கைகளில் அகப்பட்டுக் கிடக்கும் பொறுப்பற்ற ஊடகங்களும், சேர்ந்து நம் கலாசாரத்தை அழிவு நோக்கிக் கொண்டு செல்கின்றன.

பொறுப்பற்ற ஊடகங்கள்
அத்தகைய அழிவுப்பாதையில் முனைந்து செயல்படுபவை ஊடகங்கள். நமது நாட்டில் உள்ள முன்னணி ஊடகங்களில் பெரும்பான்மையானவை அன்னிய சக்திகளின் ஆதிக்கத்தில் உள்ளன. எனவே அவை நமது பாரத தேசத்தின் கலாச்சாரத்துக்கும், பெருமைமிகு வரலாற்றுக்கும், ஆன்மீகப் பாரம்பரியத்துக்கும் விரோதமாகவே செயல்படுகின்றன. இந்த ஊடகங்களின் பின்னணியில் செயல்படும் அன்னிய சக்திகள் நமது தேசத்தின் ஆன்மீக, கலாச்சார, வரலாற்று அடையாளங்களை அழிக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவை. ஆகவே தான், முன்னணிப் பத்திரிகைகளில் வரும் தலையங்கங்களும், கட்டுரைகளும், செய்திகளும், மின் ஊடகங்களில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிகளும், தொடர்களும், விவாதங்களும் ஹிந்து விரோதத் தன்மையுடன் இருக்கின்றன. மதச்சார்பின்மை, மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்கிற போலித்தனம் மிகுந்த மேற்கத்தியக் கோட்பாடுகளின் பெயரில் அவை ஹிந்து விரோதச் செயல்பாடுகளை நியாயப்படுத்த முயற்சிக்கின்றன.

புதிய தலைமுறை

puthiyathalamurai logo

இந்த மாதிரியான ஒரு செயல்பாட்டைக் கொண்டதுதான் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட “புதிய தலைமுறை” தொலைக்காட்சி நிறுவனமும். இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து ஹிந்து விரோதப் போக்கையே கடைப்பிடிக்கின்றது. இந்திய ஜனநாயக் கட்சி என்கிற அரசியல் கட்சிக்குச் சொந்தமான இந்த நிறுவனம், கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் கூட பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராகவே செயல்பட்டது. இத்தனைக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இன்றுவரை இருக்கின்றது. பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பின்னும் இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் இந்த நிறுவனத்தில் முக்கிய பணிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும், கம்யூனிச, திராவிட சிந்தனையாளர்களாகவும், அன்னிய கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதுதான்.

இந்த நிறுவனம் தன்னுடைய ஹிந்து விரோதப் போக்கின் தொடர்ச்சியாக, கடந்த மார்ச்சு மாதம் 8ம் தேதி ‘உலக மகளிர் தினம்’ அன்று, “தாலி தேவையா” என்ற தலைப்பில் ஒரு விவாத நிகழ்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஒரு பெண், “பெண்களுக்கு தாலி என்பது நாய் கழுத்தில் கட்டப்படும் சங்கிலி போன்றது” என்று சொல்வது போல இருந்த ஒரு காட்சியை, நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாகக் காண்பித்துக் கொண்டிருந்தது அந்நிறுவனம். இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற பொது மக்கள் ஹிந்து முன்னணி போன்ற ஹிந்து அமைப்புகளின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தங்களின் வருத்தங்களையும் அதிர்ச்சியையும் பகிர்ந்துகொண்டுள்ளனர். சமூக வலைதளங்களிலும் பலர் அந்நிகழ்ச்சிக்கு எதிரான கருத்துக்களைப் பதிவு செய்தனர். பலர் புதிய தலைமுறை நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் ஆட்சேபங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஹிந்து முன்னணி போராட்டம்
ஹிந்து முன்னணியின் மாநிலப் பொறுப்பாளர்கள் அத்தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்துத் தங்கள் எதிர்ப்பைச் சொல்லி அந்நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டுள்ளனர். ஆனால் தொலைக்காட்சி நிறுவனம் மறுக்கவே, அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலும் ஹிந்து முன்னணி சார்பில், அந்நிறுவனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையிடம் புகார்கள் கொடுக்கப்பட்டன. காவல்துறை அதிகாரிகள், “நிகழ்ச்சிக்குப் பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது, ஆகவே, நிகழ்ச்சியை ரத்து செய்துவிடுங்கள்” என்று அறிவுறுத்தியும் அதைத் தொலைக்காட்சி நிறுவனம் அலக்ஷியம் செய்துள்ளது.

HM April 1 14 Mangalam Marukkum Madamaiyai Koluththuvom 3

எனவே, 8ம் தேதி ஞாயிறு அன்று ஹிந்து முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பு ஆர்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்தது. மாநிலப் பொறுப்பாளர் பரமேஸ்வரன் தலைமையில் காலை 10 மணியளவில் ஆர்பாட்டம் செய்யச் சென்ற போது, ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதோடு மட்டுமல்லாமல் அவர்களைக் கைது செய்யவும் காவல்துறை முயன்றது. பதட்டமான சூழ்நிலையில் தடியடியும் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் அதைத் திட்டமிட்டு வேண்டுமென்றே படம்பிடிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிருபர் முயன்றபோது அவருடைய காமிரா கீழே விழுந்தது.

ஹிந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட பிறகு, தொலைக்காட்சி நிறுவனம், “சமூக விரோதிகள் தொலைக்காட்சி நிருபரைத் தாக்கினர்; காமிராவை உடைத்தனர்; காவல்துறை வேடிக்கை பார்த்தது” என்று பொய்ச் செய்தியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது. ஹிந்து முன்னணியினர் மாநிலம் முழுவதும் பல இடங்களில் புகார் மனுக்கள் அளித்தும், அப்புகார்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தங்கள் மாநிலப் பொறுப்பாளர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்ததைக் கண்டித்து திரு.ராமகோபாலன் ஜி அறிக்கை வெளியிட்டார். கடைசியில், கைது செய்யப்பட்டவர்கள் 10 தினங்கள் கழித்துத்தான் ஜாமீனில் வெளிவர முடிந்தது.

சோரம் போகும் சில்லறை அமைப்புகள்
ஹிந்து முன்னணியிணர் கைது செய்யப்பட்ட மூன்று தினங்கள் கழித்து “ஹிந்து இளைஞர் சேனா” என்கிற சில்லறை அமைப்பினர் விடியற்காலை 3 மணியளவில் புதிய தலைமுறை நிறுவனத்தின் அலுவலக வளாகத்திற்குள் இரண்டு டிஃபன் பாக்ஸ் குண்டுகள் வீசிச் சென்றதாகவும், அவ்வமைப்பின் தலைவர் ஜெயம்பாண்டியன் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் காலை 10 மணிக்குச் சரணடைந்ததாகவும் செய்தி வந்தது. அதனைத் தொடர்ந்து விசாரித்த காவல்துறை, டிஃபன் பாக்ஸுகளில் இருந்தது வெறும் பட்டாசுகள் என்று அறிவித்தது. அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் 5 பேரைக் கைதும் செய்தது. இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுச் சில மாதங்களே ஆகியுள்ளன. மேலும் இதன் தலைவராகச் சொல்லிக்கொள்ளும் ஜெயம்பாண்டியன் என்பவர் தமிழ் பிரிவினைவாதக் கட்சியான நாம் தமிழர் கட்சியில் இருந்துள்ளவர். எனவே இவரின் இந்த திடீர் நடவடிக்கை சிறையில் இருந்த ஹிந்து முன்னணியினருக்கு பிணைவிடுப்பு விரைவில் கிடைக்கக்கூடாது என்கிற நோக்கத்க்தில் எடுக்கப்பட்டதாகச் சந்தேகம் எழுகிறது.

இது சம்பந்தமாக ஹர்ஷ் தமிழ் (Harsh Thamizh) என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இதைப் போல சில “இந்து” அமைப்புகள் இருக்கின்றன. இவையெல்லாம் சில்லறை விளம்பரத்திற்காகவும், பணத்துக்காகவும் இயங்கக் கூடியவை. சில அன்னிய நிறுவனங்களாலும், சில திராவிடக் கட்சிகளாலும் வளர்க்கப்படுபவை.

தமிழகத்தில் உண்மையான ஹிந்துத்துவம் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவும், பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தங்களைச் சோறு போட்டு வளர்க்கும் நிறுவனங்களும் திராவிடக் கட்சிகளும் என்ன செய்யச் சொல்லி உத்தரவு போடுகிறார்களோ அவற்றை சிரமேற்கொண்டு செய்யக்கூடியவை இந்த சில்லறை அமைப்புகள்.

ஆர்.எஸ்.எஸ், வி.ஹி.ப மற்றும் இந்து முன்னணி போன்ற நேர்மையான, பண்பாடு மிக்க, உண்மையான தேசபக்தி கொண்ட ஹிந்து அமைப்புகள் ஜனநாயக முறையில் கையிலெடுக்கும் போராட்டங்களை, இடையில் புகுந்து கெடுத்து நீர்த்துப்போகச் செய்வது; தேர்தல் சமயங்களில் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் தாங்களும் திராவிடக் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்தி ஹிந்து வாக்குகளைப் பிரிப்பது; பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராகத் தேர்தல் களத்தில் வேலை செய்வது; ஆகிய துரோகச் செயல்களில் ஈடுபடுவது இந்தச் சில்லறை அமைப்புகளின் வழக்கம்.

“இந்து கலாச்சாரத்தைக் காப்பாறுகிறோம்” என்று கூறிக்கொண்டு மட்ட ரகமான தரம் குறைந்த போராட்டங்களை அறிவிப்பது; உதாரணத்திற்கு சமீபத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பு மஹாராஷ்டிர பாஜக-சிவசேனா அரசுக்கு எதிராக சென்னை ராஜ்பவன் கவர்னர் மாளிகை முன்பு மாடு அறுக்கும் போராட்டம் அறிவித்தபோது, அதற்கு எதிராக பன்றி அறுக்கும் போராட்டம் அறிவித்ததைச் சொல்லலாம்.

இவர்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.கவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் வி.ஹி.பவுக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட ஹிந்து விரோத சக்திகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றன இந்தச் சில்லறை அமைப்புகள்.

இந்தப் பின்னணியில்தான் ஹிந்து விரோத தொலைக்காட்சி நிறுவனத்தில் குண்டு வீசியதாகக்கூறி சரணடைந்தவரின் அமைப்பையும் நாம் பார்க்க வேண்டும். ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகள் இந்தியாவைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய காங்கிரஸ் அரசு, “காவி பயங்கரவாதம்”, “இந்து பயங்கரவாதம்” என்று இல்லாத ஒன்றை, தேச விரோத ஊடகங்களின் உதவியுடன் கட்டமைத்துள்ளது. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த சோரம் போன சில்லறை அமைப்புகள் நடந்துகொள்கின்றன.

தற்போது மத்தியில் வலிமையான பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. எனவே அதற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றிவிடாமல் செய்யவும், இந்த சில்லறை அமைப்புகளை ஹிந்து விரோத சக்திகள் பயன்படுத்துகின்றன.

ஹிந்து கலாச்சாரம் விவாதத்திற்கு உட்பட்டதா?
”மாங்கல்ய தாரணம்” அல்லது “தாலி கட்டுதல்” என்பது திருமணத்தில் இன்றியமையாத முக்கியமான சடங்கு. மணமகன், மணமகளின் கழுத்தில் அணிவிக்கும் தாலிக்கு, மங்கல மணி, மங்கல நாண் என்று பல பெயர்கள் உண்டு. மஞ்சள் கிழங்கு கட்டப்பட்ட மஞ்சள் கயிறு கூட ‘தாலி’ என்கிற புனிதத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம் மஞ்சள் ஒரு மங்கலமான பொருளாக நம் பாரத கலாசாரத்தில் கருதப்படுவதால்தான். பாரத தேசத்தில் வாழும் அனைத்து ஹிந்து சமுதாயத்தினரின் திருமண வைபவத்திலும், தாலி ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது. தாலி ஏற்றுள்ள பெண்ணைத் தாயாகப் பாவிப்பது நம் கலாசாரம். தாலி ஒரு அலங்காரப் பொருளல்ல; அது ஒரு கலாசாரச் சின்னம்; தெய்வீகச் சின்னம்; கற்பின் சின்னம்; திருமண வாழ்வின் புனிதத்தை விளம்பும் சின்னம்; பார் புகழும் பாரதப் பண்பாட்டின் பழம்பெருமை பகரும் சின்னம்.

1 South Indian Wedding Tradition

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மங்கலப் பொருளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம்தான் என்ன? இதைப் போன்றே ஹிந்து கலாச்சாரத்தொடர்பு கொண்ட பல விஷயங்கள் மின் ஊடகங்களில் விவாதப் பொருட்களாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குல தெய்வ வழிபாடு தேவையா?; பிறந்த குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி ஆகியோர்களின் பெயர்களை வைப்பது அவசியமா?; அழகு மிகுந்தவர்கள் தென்னிந்தியப் பெண்களா, வட இந்தியப் பெண்களா?; மதம் மாறித் திருமணம் செய்து கொண்டவர்கள் — கணவர்கள் vs மனைவிகள்; அண்ணிக்குப் பிரச்சனை கொடுப்பவர்கள் நாத்தனார்களா கொழுந்தன்மார்களா? தீபாவளிப் பண்டிகை தமிழர் பண்டிகையா? அமாவாசையில் நீத்தார் வழிபாடு தேவையா?; போன்ற பல விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பல தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.

நாட்டில் விவாதிக்கப் படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போதும், இந்நிறுவனங்கள் பல முறை ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்து பண்பாட்டின் பழக்க வழக்கங்கள் என்று ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கருப்பொருள்களையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, விவாதத்தினிடையே அவற்றை கேலி செய்து, நிந்தனை செய்து, அவமதித்து, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிந்துப் பெரும்பான்மையின மக்களின் (குறிப்பாக இளைய தலைமுறையினரின்) மனங்களில் சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விஷவித்துக்களை விதைத்து, அவர்களே தங்கள் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறன.

 

ஏற்கனவே நடத்தப்பட்ட நிகழ்ச்சி

அன்னிய கிறிஸ்தவ நிறுவனமான ஸ்டார் டிவி குழுமத்தின் அங்கமான விஜய் டிவி, கடந்த 2009ம் ஆண்டு, இதே தலைப்பில், அதாவது “பெண்கள் தாலி அணிவது அவசியமா?” என்கிற தலைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தியது. தாலி தேவையில்லை என்கிற கருத்தை மக்கள் மனத்தில் விதைப்பதுவே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நோக்கம். ஏனென்றால் அதற்கு முன்னர் அந்நிகழ்சியில் அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் பெரும்பாலானவை ஹிந்து விரோதக் கருப்பொருட்கள் கொண்டவைதான். அவ்விவாதத்தில் பின்வரும் கண்டிக்கத்தக்க கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன:

  • தாலி அணிவது வெறும் மூடநம்பிக்கையே. அதில் தெய்வீகமோ, புனிதத்துவமோ ஒன்றும் இல்லை. அது ஒரு சாதாரண பொருள் தான்.
  • பெரும்பான்மையான பெண்கள் இப்போது தாலி அணிவதில்லை.
  • வேலைக்குச் செல்லும் பெண்கள் மணமானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. எனவே, தாலியை தங்கள் ரவிக்கைக்குள் மறைத்துச் செல்கிறார்கள்.
  • பல பெண்கள் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது தாலியை வீட்டிலேயே கழற்றி வைத்து விடுகிறார்கள்.
  • பெரும்பான்மையான பெண்கள் இரவில் படுக்கும்போது தாலியைக் கழற்றி வைத்து விடுகிறார்கள்.
  • தாலி என்பது நாய்களின் உரிமம் போன்றது தான். நாயின் உரிமத்தை அதன் கழுத்தில் தொங்க விடுவதைப்போல் பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குகிறது. அவ்வளவு தான்.

HM April 1 14 Mangalam Marukkum Madamaiyai Koluththuvom 5

நிகழ்ச்சியினிடையே நிகழ்ச்சி நடத்துனர் ஒரு பெண்மணியிடம், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, அறுவை சிகிச்சை சமயங்களில் மருத்துவர் தாலியைக் கழற்றச்சொன்னால் கழற்றுவீர்களா?” என்று கேட்க “கழற்றிவிட்டு சிகிச்சை முடிந்த பின்னர் அணிந்துகொள்வேன்” என்று கூறிய பெண்மணியிடம், “மருத்துவர் என்ன செய்யச் சொன்னாலும் செய்வீர்களா?” என்று கேவலமாக ஒரு கேள்வியைக் கேட்டு அந்தப் பெண்மணியை அவமானம் செய்தார்.

நிகழ்ச்சியில், ”தாலி தேவையில்லை” என்ற அணியில் பல பெண்கள் தாலியைக் கழற்றத் தயாராக இருந்தார்கள். ஒரு 65 வயது மதிக்கத்தக்க முற்போக்கான பெண், ‘இங்கேயே இப்போதே தாலியை கழற்றுவீர்களா?’ என்று நடத்துனர் கேட்டவுடன் தாலியைக் கழற்றி அவர் கையில் கொடுத்தார். நிகழ்ச்சியின் இறுதியில், ’தலைமை’ தாங்கியவர்களில் ஒருவரான ”பகுத்தறிவுவாதி” அந்தப் பெண்ணின் ஆணித்தரமான முடிவைப் பாராட்டி, “சிறந்த பங்கேற்பாளர்” என்ற பரிசை வழங்கி கௌரவித்தார். அப்போது அந்தப் பெண்ணின் ’தைரியத்தையும்’ ‘பகுத்தறிவையும்’ பாராட்டி கையொலி எழுப்புமாறு அனைவரையும் வற்புறுத்தினார் நடத்துனர். திருமணம் ஆகாத இளம்பெண்கள் மனதிலும் மற்றும் கிராமப்புற பெண்கள் மனதிலும் இந்த நிகழ்ச்சி எந்த மாதிரியான எண்ணங்களை விதைத்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.

அப்போதும் எதிர்ப்புகள்
விஜய் டிவி 2009ல் நடத்திய இந்நிகழ்ச்சிக்கும் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஹிந்துத்துவத்தின் மீது பற்றுகொண்ட தனிமனிதர்கள் பலர் தொலைபேசி மூலமாகவும், நேரிடையாகவும் நிகழ்ச்சித்தயாரிப்பாளரான மெர்குரி கிரியேஷன்ஸ் நிறுவனத்திடமும், விஜய் டிவி நிறுவனத்திடமும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஹிந்து முன்னணி நிறுவனர் தலைவர் ராமகோபாலன் அவர்களும் விஜய் டிவியிடம் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். இப்போது புதிய தலைமுறை நிறுவனம் செய்தது போலவே அப்போது விஜய் டிவியும் எதிர்ப்புகளை நிராகரித்தது. நிகழ்ச்சியையும் ஒளிபரப்பியது.

இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்து வழக்குரைஞர் திரு. ஆர்.சுப்பிரமணியம் அவர்கள் விஜய் டிவிக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், காவல்துறை ஆணையரிடமும் புகார் சமர்ப்பித்தார்.

விஜய் டிவியைத் தொடர்ந்து கலைஞர் டிவி நிறுவனத்தாரும், “தாலி ஒரு சமுதாய அவசியமா அல்லது அடையாளச் சின்னமா” என்ற தலைப்பின் கீழ் ஒரு விவாதத்தை “கருத்து யுத்தம்” நிகழ்ச்சிக்காகப் படப்பிடிப்பு செய்தனர். வழக்குரைஞர் சுப்ரமணியம் கலைஞர் டிவி நிறுவனத்தாரிடமும் தன் எதிர்ப்பைத் தெரிவித்து அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால், கலைஞர் டிவி நிறுவனத்தாருக்கும் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

விஜய் டிவி பதில் அளிக்காததாலும், காவல்துறையிடமிருந்து நடவடிக்கை எதுவும் இல்லாததாலும், கலைஞர் டிவியிலும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாலும், அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தான் விஜய் டிவி மேல் அளித்த மனுவின் மீதான விசாரணையைக் காவல்துறை உடனடியாக மேற்கொள்ளவும், கலைஞர் டிவி தாலி பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் இருக்கவும், மேன்மைமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.

அவரின் மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், “நிகழ்ச்சியில் பங்குகொள்கின்றவர்கள் தங்கள் அபிப்பிராயத்தைத்தான் சொல்லுகிறார்கள். மேலும் தொலைக்காட்சி நிறுவத்தினர் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை இந்நிகழ்ச்சி மூலம் புண்படுத்தியுள்ளனர் என்கிற குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே இம்மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கின்றது” என்று தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து கலைஞர் டிவியிலும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

அன்றைய நிலையில், ஓரிரண்டு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள், குறிப்பிட்ட சில தனிமனிதர்கள், ஒரே ஒரு வழக்குரைஞர் ஆகியோரைத் தவிர்த்து இவ்விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பெருமளவில் போராட்டங்கள் நடத்த எந்த இயக்கங்களும் முன்வராதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றே சொல்லவேண்டும்.

விவாதமும் விவாதிப்பதற்கான தகுதியும்
விஜய் டிவி மற்றும் கலைஞர் டிவி ஆகியவை ஐந்து வருடங்களுக்கு முன்பு எதிர்ப்புகளுக்கு இடையே நடத்திய நிகழ்ச்சியின் அதே விவாதப் பொருளை மீண்டும் எதற்கு புதிய தலைமுறை எடுத்து நடத்த முயன்றது? அப்படி ஒரு விவாதத்தை உலக மகளிர் தினத்தன்று ஒளிபரப்ப வேண்டிய காரணம் என்ன? அதுவும் ஹிந்து மத நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட, ஹிந்துப் பெண்களின் வாழ்வோடு பல நூற்றாண்டுகளாக ஒன்றியிருக்கும் ஒரு வழகத்தைப் பற்றிய விவாதத்தை ஏன் நடத்த வேண்டும்? அதற்கான அவசியம்தான் என்ன? தாலி தேவையில்லை என்று எந்த மகளிர் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தவிலையே! எந்த மகளிர் அமைப்புகளும் ஊடகங்களை அழைத்து பத்திரிகை அறிக்கைகள் கொடுக்கவில்லையே! அப்படியிருக்கும்போது அதைப் பற்றிய விவாதத்திற்கான அவசியம் என்ன? இதிலிருந்தே அந்நிறுவனத்தின் நோக்கம் ஹிந்து கலாச்சாரத்தை எதிர்ப்பதும், அதில் ஹிந்துப் பெண்கள் கொண்டிருக்கும் ஈடுபாட்டைக் குலைப்பதும், இளைய தலைமுறையினர் மனங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் என்பது தெளிவாகிறதே!

ஹிந்து எதிர்ப்பாளர்கள், ஹிந்துத் திருமணங்களில் தாலி அணியும் வழக்கம் வேத நாகரீகத்தில் சொல்லப்படவில்லை; இதிஹாசங்களில் காட்சிப்படுத்தப்படவில்லை; சங்க இலக்கியங்களில் இல்லை; பத்தாம் நூற்றாண்டில்தான் அப்பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் வாதங்களை முன்வைக்கிறார்கள். அதனால் என்ன? பழங்காலத்தில் இல்லாவிட்டாலும் கடந்த பத்து நூற்றாண்டுகளாக, அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்ற ஒரு பண்பாடு தானே? ஆயிரம் ஆண்டுகளாக ஹிந்துக்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துள்ள ஒரு கலாச்சார நம்பிக்கை தானே?

வேத காலத்திலும், சங்க காலத்திலும் இருந்துள்ள சில வழக்கங்கள் இன்று இல்லை; காலப்போக்கில் பல பழக்க வழக்கங்களை ஹிந்துக்கள் தாங்களாகவே துறந்துள்ளனர். சில இடையிலே வந்து இடையிலேயே நின்றும் போயுள்ளன. சதி, பால்ய விவாகம் போன்ற வழக்கங்கள் நின்றுபோயுள்ளன. ஆனால் தாலி அணிதல் போன்று இடையிலே ஏற்பட்ட சில வழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. விதவைகள் திருமணம் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்றுக்கொள்வதும், துறப்பதும் ஹிந்துக்களாகவே செய்து கொள்வது. எந்த ஒரு சாஸ்திரத்தைப் பற்றியும் சம்பிரதாயத்தைப் பற்றியும் தனக்குள்ளேயே ஒரு விவாதத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்கான தெளிவான முடிவையும் எடுக்கும் ஜனநாயகம் மிகுந்த ஒரே மதம் ஹிந்து தர்மம் தான். எல்லாம் வல்ல இறையைப் பரிபூரணமாக உலகுக்குக் காட்டும் ஹிந்து தர்மம் தான், அதே இறையை இல்லை என்று கூறும் நாத்திகத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஹிந்து தர்மத்தின் பல கொள்கைகளையும், கோட்பாடுகளையும் விவாதிப்பதற்கோ, விவாதித்து முடிவுகள் எடுப்பதற்கோ ஹிந்து குருமார்களுக்கும், சாஸ்திர வல்லுனர்களுக்கும் தான் உரிமையும் தகுதியும் உண்டு. அவர்கள் பொதுமக்களின் விருப்பங்களையும் கவனத்தில்கொண்டே அதைச் செய்கிறார்கள். பலவிதமான கட்டுப்பாடுகளுடன் சாஸ்திரங்கள் காட்டும் வழியில் இயங்கும் சன்யாசிகளும் குருமார்களும் கூட, சமூக இயக்கங்கள் ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை அமைதியாக ஏற்றுக்கொள்கின்றனர்.

அதாவது ஒரு சமூகத்தின் பண்பாட்டை அந்தச் சமூகம் தான் தீர்மானிக்க வேண்டும். எது வேண்டும், எது வேண்டாம் என்பதை அந்தச் சமூகத்தினர் முடிவு செய்துகொள்வர். இதில் அடுத்தவருக்கு, குறிப்பாக அந்தச் சமுக்கத்துடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாதவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் இவை மத நம்பிக்கை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியம் சார்ந்த விஷயங்கள். இவற்றைக் கேள்வி கேட்கவோ, விவாதம் செய்யவோ, ஏன் இவற்றில் தலையிடவோ இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்குக் கூட உரிமையில்லை. அப்படியிருக்க்க் கேவலம் இவற்றைப் பற்றிய எந்த அறிவும் இல்லாத, எந்தத் தகுதியும் இல்லாத ஊடக வியாபாரிகளும், அரசியல் வியாபாரிகளும், முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தற்குறிகளுமா விவாதம் புரிவது?

இன்று நகரங்களில் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீது மோகம் கொண்டு வாழும் சில பெண்களும், தங்களை முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்ள விரும்பும் சில பெண்களும் வேண்டுமானால் தாலி தேவையில்லை என்று கருதலாம். அவ்வாறு வாழவும் செய்யலாம். அது அவர்கள் இஷ்டம். மற்றபடி பெரும்பான்மையான பெண்கள் தாலியை புனிதமாகக் கருதித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தாலியை அணிந்துகொள்வதும், கொள்ளாததும் தனிப்பட்ட பெண்ணின் இஷ்டம். இதில் பொதுவில் ஊடகங்கள் வாயிலாக விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. அதை மீறி ஒரு ஊடக நிறுவனம் விவாதத்தை ஏற்படுத்துகிறது என்றால் அதன் நோக்கம் தீயது என்றே அர்த்தம்.

இன்றைக்குப் பெண்களின் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள உதவும் அணிகலனான தாலியை அவசியமா என்று விவாதம் ஏற்பாடு செய்பவர்கள், நாளைக்குப் பெண்களுக்குக் கற்பு என்பதே அவசியமா என்று கூட விவாதம் நடத்துவார்கள். இன்றைக்கு மௌனமாக இருக்கும் சமுதாயம் நாளைக்கும் மௌனமாகவே இருக்குமா?

(தொடரும்)

Read 1720 times
Rate this item
(2 votes)
Last modified on Thursday, 18 June 2015 17:52

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment