சங்க இலக்கியங்களில் தாலி
ஹிந்து எதிர்ப்பாளர்கள், ஹிந்துத் திருமணங்களில் தாலி அணியும் வழக்கம் பற்றிச் சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை; பத்தாம் நூற்றாண்டில்தான் அப்பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் வாதங்களை முன்வைக்கிறார்கள். இவர்கள் சங்க இலக்கியங்களை ஒழுங்காக முறையாகப் படித்தவர்களாக இருந்தால் இவ்வாறு கூற முற்பட்டிருக்க மாட்டார்கள். சங்க இலக்கியங்களில், ‘தாலி’ என்கிற பதம் காணப்படாவிட்டாலும், ‘மங்கலம்’, ’மங்கல அணி’ ‘மங்கல நாண்’ போன்ற சொற்கள் காணக்கிடைக்கின்றன.
தமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்கள் சிலப்பதிகாரம், அகநானூறு, கலிங்கத்துப்பரணி மற்றும் திருக்குறள் நூல்களிலிருந்து மங்கல நாண் பற்றிய பயன்பாட்டுக்களை எடுத்துக்காட்டுகிறார்.
சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்துப் பாடலில் “மங்கல அணி” என்ற பதம் இன்றையத் தாலியைத்தான் குறிக்கிறது; ’மங்கல அணி எழுந்தது’ என்பதற்கு ‘மாங்கல்ய சூத்திரம் வலம் செய்தது’ என்று உ.வே.சா. குறிப்பு வரைந்திருக்கிறார். சிலப்பதிகாரத்தில் அந்திமலை சிறப்புச் செய்காதையிலும் கண்ணகி “மங்கல அணி” மட்டும் அணிந்திருந்தாள் என்று சொல்லப்படுகிறது. அதாவது எந்த ஆபரணத்தின் மீதும் பற்றில்லாத சூழ்நிலையிலும், மங்கல நாணை அவள் அணிந்திருந்ததன் மூலம் அணிகலன்ளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த தாலியைத் தான் அது குறிக்கிறது என்பது தெளிவு.
திருக்குறள் நூலில் வாழ்க்கைத் துணை நலம் என்கிற அதிகாரத்தின் பத்தாவது குறளான
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”-
என்கிற குறளில், மனை என்பது மனைக்குரிய மனைவியின் அகு பெயராய் வர, மனைமாட்சி (மனைவியின் சிறப்பு) மங்கலம் (மங்கல அணி) என்கிற சிறப்பு மிகுந்த அணிகலன் ஆகின்றது. அந்த மனை வாழ்க்கை மூலமாக அவள் பெறுகின்ற பிள்ளைகள் நன்கலம் (நல்ல ஆபரணங்கள்) ஆவர். அதாவது அவளுடைய மனைமாட்சி சிறந்த அணிகலனான மங்கல அணியைப் போலும், அவள் பெறும் பிள்ளைகள் அவள் அணிகின்ற மற்ற ஆபரணங்களைப் போலும் என்று கொள்ள வேண்டும் என்கிறார் பேராசிரியர் சாமி தியாகராஜன்.
கலிங்கத்துப்பரணியில்,
‘திருமார்பின் மலர் மடந்தை திருக்கழுத்தின்
மங்கலநாண் என்ன முந்நூல்’
என்று வரும் பாடலில், இலக்குமியின் மார்பில் தவழும் “மங்கல நாண்” பேசப்படுகிறது.
அதே போல, அகநானூற்றின் 86வது பாடலில்
“புதல்வர் பயந்த திதலை அவ்வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூட”
என்று வருமிடத்தில், வாலிழை என்பது சிறந்த அணிகலனாகிய மங்கல அணியையே குறிக்கிறது.
விவாதத்திற்கு ஆதரவளித்த ஹிந்து எதிர்ப்பாளர்கள்
புதிய தலைமுறை தொலக்காட்சி அலுவலத்திற்குள் பட்டாசு குண்டுகளை வீசியதை எதிர்த்தும், தாலி பற்றிய விவாதத்திற்கு ‘கருத்துச் சுதந்திரம்’ என்கிற பெயரில் ஆதரவு தெரிவித்தும், திராவிடர் கழகம் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மார்ச்சு 18ம் தேதியன்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்டு கம்யூனிசக் கட்சித்தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.பீட்டர் அல்ஃபோன்ஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, பத்திரிகையாளர்கள் என்.ராம் (தி ஹிந்து), மாலன் (புதிய தலைமுறை) ஆர்.எஸ்.மணி, ஞாநி, வக்கீல் ஆர்.வைகை, பேராசிரியர் அருணன், பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகிய ஹிந்து எதிர்ப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். திராவிட, கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ சக்திகள் அனைத்தும் இந்த ஹிந்து விரோத ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைந்திருப்பது தெளிவு.
அரசியல் கட்சிகளும் கருத்துச் சுதந்திரமும்
இந்த ஆர்பாட்டக் கூட்டத்தில் பேசிய அனைவரும் பாஜக அரசுக்கு எதிராகவும், ஹிந்து தர்மத்துக்கு எதிராகவும் பேசினர். இதில் கலந்துகொண்டு கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக ஆவேசமாகப் பேசிய அரசியல் தலைவர்களின் கட்சிகள் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்க்க வேண்டியது அவசியம். (இவற்றை இணையதளக் கட்டுரையாளர் திருமலை பட்டியல் இட்டுள்ளார்)
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த வரதராஜன் என்பவர் சில வருடங்களுகு முன்னால் சந்தேகத்திற்கு இடமான நிலையில் இறந்துபோனார். அதைப் பற்றிய செய்தியை விவரமாக வெளியிட்ட மக்கள் டிவி அலுவலகத்தின் முன்னால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு மக்கள் டிவி அலுவலகத்தைத் தாக்கினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தலைவர் தாவீது பாண்டியன் ஊழல் செய்ததாகச் செய்தி வெளியிட்ட குமுதம் பத்திரிகையின் அலுவலகத்தின் மீது வலது கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
தி.மு.க. குடும்பப் பிரச்சனையில், தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகத்தில் பணியிலிருந்த மூன்று அப்பாவி ஊழியர்கள் தி.மு.கவினரால் கொல்லப்பட்டனர்; அலுவலகமும் தீக்கிரையானது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பற்றிய ஒரு கட்டுரைக்காக நக்கீரன் பத்திரிகை அலுவலகம் அதிமுக தொண்டர்களால் தாக்கப்பட்டது.
முகம்மது நபி பற்றிய ஒரு ஹாலிவுட் திரைப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தும், மேற்கு நாடுகளில் வெளியிடப்பட்டதற்காகப் போராட்டம் என்கிற பெயரில் சென்னையில் ஐந்து நாட்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டன மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள். இதே அமைப்புகள் கமலஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராகவும், வன்முறையில் இறங்கின. வேலூர் தினமலர் அலுவலகத்தையும் தாக்கியுள்ளனர்.
விடுதலை சிறுத்தை கட்சியினரும் தங்கள் தலைவர் பற்றிய செய்திகள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகங்களைத் தாக்கியுள்ளனர்.
ராகுல் காந்தி பற்றி அமெரிக்க பத்திரிகையான “டைம்ஸ்” வெளியிட்ட செய்திக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிகையை தீயிட்டுக் கொளுத்தினர். அமெரிக்க “டைம்ஸ்” பத்திரிகைக்கும் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிகைக்கும் வித்யாசம் தெரியாத அளவுக்கு அறிவாளிகளாக இருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு கருத்துச் சுதந்திரம் மீது அவ்வளவு பற்று!
இவ்வாறு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட இந்த அரசியல் கட்சியினருக்கு, ஹிந்து அமைப்புகளைக் குறை கூற என்ன தகுதி இருக்கிறது? கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பேசத்தான் என்ன யோக்கியதை இருக்கிறது?
பகுத்தறிவும் சுயமரியாதையும் தாலியும்
வள்ளுவர் கோட்டப் போராட்டத்தில் தலைமை தாங்கிக் கலந்துகொண்ட திரவிடர் கழகத் தலைவர் வீரமணி, வருகின்ற தமிழ் வருடப் பிறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் தேதியன்று, பெரியார் திடலில் “தாலி அறுக்கும் போராட்டம்” நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சென்னை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. திராவிடக்கட்சிகளின் கொள்கைப் பற்று எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ’தமிழர் இந்துக்கள் அல்ல’ என்கிற பிரசாரத்தை, தொடர்ந்து செய்து வருகின்றன. ஹிந்து கலாசாரம் வேறு, தமிழ் கலாசாரம் வேறு என்று எப்படியெல்லாமோ தமிழ் ஹிந்துக்களை ஏமாற்ற முயற்சி செய்தும் வருகின்றன. இம்மாதிரியான முயற்சிகள் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஹிந்து கலாசாரத்தைக் கொச்சை படுத்தும் நோக்கத்துடன் இவர்கள் ஆரம்பித்த வழக்கம்தான்“சுயமரியாதைத் திருமணம்” என்பது. சுயமரியாதைத் திருமண இயக்கம் படுதோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம். நடக்கும் ஒரு சில சுயமரியாதைத் திருமணங்களில் கூட, திருமண மந்திரங்களையும், திருமணத்தை நடத்தும் பிராம்மண புரோகிதரையும், தெய்வ வழிபாடுகளையும்தான் இவர்களால் நிறுத்த முடிந்ததே தவிர “மாங்கல்ய தாரணம்” என்னும் தாலி கட்டும் புனிதச் சடங்கை நிறுத்த முடியவில்லை. திராவிடத் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களில் நடத்தப் படும் சுயமரியாதைத் திருமணங்களில் கூட, பெரியார் பள்ளி, அண்ணா கல்லூரி என்கிற பகுத்தறிவுப் பாசறைகளில் பயின்று வந்த அத்தலைவர்கள் தங்கள் கையாலேயே தாலிகளை எடுத்துக் கொடுத்து திருமண வைபவத்தை நடத்துகிறார்கள்.
திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரின் இல்லத்துப் பெண்களும் தாலி அணிந்துதான் இருக்கிறார்கள். ஆகவே ஏப்ரல் 14 அன்று நடத்தவிருக்கும் தாலி அறுக்கும் போராட்டத்தில், தங்கள் வீட்டுப் பெண்களையும் கலந்துகொள்ளச் செய்து அவர்கள் தாலியையும் அறுப்பார்களா?
ஊடகங்களுக்கு கூடுதல் சமூகப் பொறுப்பு உண்டு
முதல்நாள் தங்களை வந்து சந்தித்த ஹிந்து முன்னணி பிரதிநிதிகளிடம் நிகழ்ச்சி ஒளிபரப்பை ரத்து செய்ய முடியாது என்று கூறிய புதிய தலைமுறை, காவல்துறையிடம் புகார் செய்து அவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்ட பின்னால் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் ஏன் செய்யவில்லை என்கிற கேள்வி எழுகிறது.
தாம் மிகவும் பொறுப்புடனும் நடுநிலையுடனும் அந்த நிகழ்ச்சியைத் தயாரித்திருந்ததாகச் சொல்லும் புதிய தலைமுறை ஏன் அதை ஒளிபரப்பாமல் நிறுத்தவேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது.
ஒளிபரப்பப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கும் பக்ஷத்தில் போராட வந்தவர்களிடம் அதைச் சொல்லியிருந்தால் போராட்டத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பிச் சென்றிருப்பார்களே!
அவ்வாறு செய்யாமல், போலித்தனமான ஒரு “தாக்குதல்” நாடகத்தை நடத்தி, ஜனநாயக முறையில் போராட்டம் நட்த்தியவர்களைக் கைது செய்யுமாறு செய்த்துதான் சமூகப் பொறுப்பா என்கிற கேள்வியும் எழுகிறது.
ஊடகம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது, மற்ற மூன்று தூண்களுக்கும் இருக்கும் சமூகப்பொறுப்பு ஊடகங்களுக்கும் உண்டு. சொல்லப்போனால், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஊடகங்களுக்கு அவற்றைவிட கூடுதல் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. எனவே, ஊடகங்கள் பொதுமக்களின் பல்லாண்டுகால பண்பாட்டையும் நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் கேள்விக்குள்ளாக்க முனைவது பொறுப்பற்ற செயலாகும். இத்தகைய பொறுப்பற்ற செயல்பாட்டிலிருந்து ஊடகங்கள் விலகினால்தான் சமூகத்தில் அமைதி நிலவும்.
முற்றும்.
-----------------------------------------------------------------------------
தெய்வமாக மனைவியும் பக்தனாகக் கணவனும்
“மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள், வாழ்த்துகள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது. சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, நம் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது! மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை. திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒரு மூலையில் யாரோ, எவரோ, அமங்கலமான வார்த்தைகள் சொல்லிக்கொண்டிருக்க, அவ்வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே, பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது.
ஒரு பெண்ணும் ஆணும் சந்தித்து ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம்;துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ, காவியமாகவோ ஆகலாம்.திருமணத்தின் போது அக்கினி வளர்க்கிறார்களே, ஏன்?அவர்களது எதிர்கால ஒழுக்கத்திற்கு ‘அக்கினி’ சாட்சியாகிறான். அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினியே அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான். அதனால்தான் கற்பு நிறைந்த பெண்ணை ‘கற்புக்கனல்’ என்கிறார்கள்.
பெண்ணிற்குத் ‘தற்காப்பு’ வேண்டும்; தாய்-தந்தை ’காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் ‘காப்பு’ வேண்டும். இந்தக் காப்புகளுக்காகவே கையில் ’காப்பு’ அணியப்படுகிறது. அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் ’காப்பு’க் கட்டப்படுகிறது.
பெண்ணைத் தெய்வமாக்கி, கணவனை பக்தனாக்கி வாழ்க்கையைச் சந்தோஷமாக்க, இந்து மதம் எடுத்துக்கொண்ட முயற்சி போல வேறு எந்த மதமும் எடுத்துக் கொண்டதில்லை.
- கவிஞர் கண்ணதாசன் – “அர்த்தமுள்ள இந்து மதம்” முதல் பகுதி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹரிச்சந்திரன்- சந்திரமதி வாழ்வில்
மனைவியைப் பிரிந்து போன மன்னன் ஹரிச்சந்திரனுக்கு, அவன் மயான பூமியில் அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கு அவன் மனைவி சந்திரமதியை அடையாளம் காட்டியது அவள் அணிந்திருந்த மாங்கலயமே. ஏனென்றால் சந்திரமதியின் கழுத்தில் இருக்கும் மங்கல நாண் அவளுடைய கணவனான ஹரிச்சந்திரன் கண்களுக்கு மட்டுமே புலப்படும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------