2500 ஆண்டுகால வரலாற்றுச்சிறப்பு மிக்க பழம்பெருமை வாய்ந்த காஞ்சி காமகோடி பீடத்தின் மீது 2004ம் ஆண்டு அசுரத்தமான தாக்குதல் நடந்தது. உலகெங்கும் உள்ள ஹிந்துக்களால் பெரிதும் பக்தியுடன் மதித்துப் போற்றப்படும் காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது தமிழக அரசு இரண்டு வழக்குகள் தொடர்ந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்ரராமனைக் கொலை செய்ததாகவும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இரண்டு வழக்குகள் போடப்பட்டன.
இதில் சங்கரராமன் கொலை வழக்கில் ஆச்சாரியார்கள் சிறைவைக்கப்பட்டனர். காஞ்சி மடத்து காரியகர்த்தர்களும் சிறை வைக்கப்பட்டனர். ஜாமின் பெறுவதற்கு ஊச்ச நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. அரசு இயந்திரங்களும், ஊடகங்களும், அவர்களுடன் சேர்ந்து நாத்திகவாத, மதமாற்ற, பிரிவினைவாத, போலி மதச் சார்பின்மைவாத சக்திகளும் இணைந்து ஹிந்து தர்மத்தை அடியோடு குலைக்கும் எண்ணத்துடன் காஞ்சி பீடம் மீதும் பீடாதிபதிகள் மீதும் கடுமையான அவதூறுகளைப் பரப்பி துவேஷப் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நியாயம் கிடைக்காது என்பதால் உச்ச நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்து வழக்கு விசாரணையை பாண்டிச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் வழக்கைச் சந்தித்த பிறகு 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது புதுவை நீதிமன்றம்.
புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்ற தலைமை நீதிபதி சி.எஸ்.முருகன் அவர்கள் தன்னுடைய தீர்ப்பில் பல உண்மைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாரே அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்தது; அவர்கள் நீதிமன்றத்தில் கொலையாளிகளை அடையாளம் காட்ட முன்வராதது; சம்பவத்தைப் பார்த்ததாகச் சொல்லிய சாட்சிகள் அனைவரும் பிறழ்சாட்சியம் அளித்தது; அடையாள அணிவகுப்பில் கொலையாளிகளை அடையாளம் காட்டியவர்கள் நீதிமன்றத்தில் சரியாக அடையாளம் காட்டாதது; கொலைக்கான மூல காரணமும் கொலையாளிகளுக்குப் பணம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டதும் நிரூபிக்கப்படாதது; காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் புலன் விசாரணையில் தேவையற்ற தலையீடும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளும் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது; போன்ற பல உண்மைகளைச் சுட்டிக்காட்டினார்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ரவி சுப்பிரமணியம் முதலில் ஆசாரியார்களுக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் எதிர்சாட்சியாக மாறினார். காவல்துறை மிரட்டிப் பணிய வைத்தது என்று அதற்குக் காரணம் கூறினார். பிறகு மீண்டும் அப்ரூவராக மாறினார். இவ்வாறு ஒரு நிலையாக இல்லாமல் தன் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும் அவர், 9 வருட சிறைவாசம் கழிந்து கடந்த 2013ம் வருடம் டிசம்பர் மாதம் ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கிய வழக்கில் ஜாமின் பெற்று வெளியில் வந்தார். வெளியில் வந்தவர் ஒன்றரை ஆண்டுகாலம் அமைதியாக இருந்துவிட்டு தற்போது திடீரென்று காஞ்சி சங்கராச்சாரியார் மீது மீண்டும் கொலைப்பழி சுமத்தி வருகிறார். முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு செய்துள் ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும், ஜூனியர் விகடன் இதழிலும் பேட்டிகள் கொடுத்துள்ளார். அவருடைய அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் பொதுத்தளத்தில் தற்போது பேசப்படுகின்றன.
காஞ்சி மடத் தரப்பு எப்போதும்போல் எந்தப் பிரச்சனையையும் சட்டத்தின் வழியாகச் சந்திக்கத் தயாராய் இருந்தாலும், மடத்தின் பக்தர்கள் கொதித்துப்போயுள்ளனர். அவர்கள் தங்களுடைய மறுப்பையும் இவ்வழக்கு சம்பந்தமான கருத்துக்களையும் தெரிவிக்க விரும்பி வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் சார்பாக, காஞ்சி காமகோடி பக்த ஜன சபாவின் பொறுப்பாளர் திரு. வளசை ஜெயராமன் அவர்களுடைய பேட்டியை இத்துடன் வெளியிடுகிறோம். இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும், ஜூனியர் விகடனுக்கும், மற்றும் சில ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்துள்ளார்.
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; தர்மம் இறுதியில் வெல்லும் என்பது சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அதர்ம சக்திகள் தலையைத் தூக்க முயல்கின்றன. தர்மம் வெல்லும் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.