×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

சகிப்புத்தன்மையற்ற பிரபலங்கள் தேசத்தின் அவமானம்

Thursday, 31 December 2015 11:43 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
கடந்த சில மாதங்களாக எதிர்கட்சிகளும் போலி மதச்சார்பின்மைவாதிகளும் இந்தியாவில் சகிப்புத்தனமை குறைந்துவருவதாக ஒரு பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகுதான் நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துபோய்விட்டது என்றும் இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இந்தப் பிரசாரத்திற்கு ஆதரவு அளித்து வரும் அறிவு ஜீவிகளும் பிரபலங்களும், தங்களின் எதிர்ப்பைக் காட்டும் விதமாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விருதுகளை அரசிடமே திருப்பிக்கொடுத்தும் வருகிறார்கள்.  இடது சாரி சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள், சினிமா நடிகர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரே இவ்வாறு விருதைத் திருப்பிக்கொடுக்கும் செயலைச் செய்து வருகிறார்கள். இவர்களுக்குப் பின்னே கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் இதர போலி மதச்சார்பின்மைக் கட்சிகள் இருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. 
 
 
நரேந்திர மோடி அரசுக்கு எதிரான சதி
 
 
 Intolerance 1
 
 
இந்தப் பொய் பிரசாரம் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசைக் குறிவைத்து நடத்தப்படுகின்றது. சென்ற 2014 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை அடைந்துள்ளது. இருப்பினும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்கு கொடுத்து ஆட்சி புரிந்து வருகின்றது. இதைப் பொறுக்கமாட்டாத போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகள், தங்களுக்கு ஆதரவாக இருக்கும் அறிவு ஜீவிகளையும் பிரபலங்களையும் வைத்துக்கொண்டு இந்த பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. 
 
 
பாராளுமன்ற வெற்றியைத் தொடர்ந்து, ஜார்கண்ட், ஹரியானா, மஹராஷ்டிரா என்று தொடர்ந்து பாஜக வெற்றிபெறுவதைப் பொறுக்க மாட்டாத எதிர்கட்சிகள், பீகார் தேர்தலில் பாஜகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் இந்தப் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டதாகத் தெரிகின்றது. இந்த நோக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக பீகார் தேர்தல் முடிந்தவுடன், அதாவது பா.ஜ.க. கூட்டணி தேர்தலில் தோற்றவுடன், இந்தப் பொய் பிரச்சாரம் அப்படியே நின்று போனது. 
 
 
 
இந்தச் சதியானது பீகார் தேர்தலோடு நின்றுவிடப்போவதில்லை. இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கப்போகிறது. இந்தச் சதியின் பின்னணியில் அன்னிய சக்திகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவை ஒரு ஹிந்து அரசியல் கட்சி ஆள்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவின் ஹிந்துத்தன்மையை அழிப்பதே அவைகளின் முதன்மையான குறிக்கோளாகும். ஆதலால்தான் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு ஏராளமாகப் பணம் அனுப்புகின்றன. இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகள் பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து நடத்துவதற்கும் சௌதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளும், பாகிஸ்தானும் பேருதவிகள் செய்து வருகின்றன.  
 
 
 
மேற்கத்திய நாடுகள் கல்விச் சேவை, மருத்துவச் சேவை, சமூக மேம்பாடு என்கிற போர்வையில் பல கிறிஸ்தவ என்.ஜி.ஓக்களை அனுப்புகின்றன. அவைகளுக்கும், இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓக்களுக்கும் கோடிக்கணக்கான டாலர்கள் பணம் அனுப்புகின்றன. அவ்வாறு தேச விரோத செயல்களில் ஈடுபடும் கிறிஸ்தவ என்.ஜி.ஓக்களை மோடி அரசு கண்காணிப்பு வலையில் கொண்டு வந்துள்ளது. ஆயிரக்கணக்கான என்.ஜி.ஓக்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கையினால் வெறுப்புற்றிருக்கும் அன்னிய சக்திகள் மோடி அரசைக் கவிழ்க்கப் பலவிதமான சதிகளைச் செய்து வருகின்றன. அதற்கு, இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளையும், போலி மதச்சார்பின்மை பேசும் இடதுசாரி அறிவு ஜீவிகளையும், கலை ஜீவிகளையும், ஊடகங்களையும் பயன்படுத்திக்கொள்கின்றன. எழுத்தாளர்களும் அறிவு ஜீவிகளும் வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் மோடி அரசைக் குறை கூறியும், அதன் மீது சேற்றை வாரியிறைத்தும் கட்டுரைகள் எழுதுகின்றனர்.
 
 
 
ஆகவே மோடி அரசு (பா.ஜ.க) அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெறக்கூடாது என்கிற நோக்கத்துடன் இந்தச் சதிச்செயல்கள் தொடர்ந்துகொண்டிருக்கும்.
   
 
 
பொய் பிரச்சாரத்தின் பின்னணி சம்பவங்களும் உண்மையும்
 
 
 
உத்திர பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடந்த இரு சம்பவங்களைக் கொண்டு, அவற்றை ஊதிப் பெரிதாக்கி, ஹிந்து அமைப்புகளின் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்தி, நாட்டில் ஹிந்துக்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்றும், மோடி அரசு பதவி ஏற்ற பிறகு இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகமாகிவிட்டன என்றும் ஒரு அப்பட்டமான பொய் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துள்ளனர் எதிர்கட்சி அரசியல்வாதிகளும் போலி மதச்சார்பின்மைவாதிகளும். 
 
 
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவர் ஹம்பி கன்னட பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்தவர். கடுமையான நாத்திகவாதி. மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்ற பெயரில், மக்களின், குறிப்பாக ஹிந்துக்களின் மத கலாச்சார நம்பிக்கைகளை அவமதித்துப் பேசி வந்தவர். மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியும் வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 30ம் தேதி கொலை செய்யப்பட்டு இறந்துபோனார்.
 
 
 
அவரின் குடும்பத்தாரும், மற்றும்  சில எழுத்தாளர்களும் கல்புர்கிக்கு ஹிந்துத்துவ அமைப்புகளிடமிருந்து மிரட்டல் வந்துகொண்டிருந்தது என்று சொல்லி, அவ்வமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான் அவரைக் கொன்றிருக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் இன்றுவரை கர்நாடக போலீசாரால் எந்த உண்மையையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவருக்கு அவர் சார்ந்த தொழில் மற்றும் துறையிலும் பகை இருந்ததாக செய்திகள் வந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல் உண்மையான குற்றவாளிகளைக் கர்நாடக போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கச்சொல்லி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது. உண்மை நிலவரம் இப்படி இருந்தும், ஹிந்துத்துவ அமைப்புகளின் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்திப் பிரச்சாரம் செய்கின்றனர் போலி மதச்சார்பின்மைவாதிகள். 
 
 
 
இதே போல உத்திரப் பிரதேச மாநிலத்தில் தாத்ரி என்கிற கிராமத்தில் அக்லக் என்கிற இஸ்லாமியர் அக்கிராமத்தில் நடந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்டார். அவருடைய இறப்புக்குப் பின்னணியான உண்மைகளை மறைத்து, அவர் மாட்டுக்கறி சாப்பிட்டதால் ஹிந்துக்கள் அவரைக் கொன்று விட்டனர் என்று ஒரு பொய்பிரச்சாரம் போலி மதச்சார்பின்மைவாதிகளாலும் போலி மதச்சார்பின்மை ஊடகங்களாலும் செய்யப்பட்டது. 
 
 
உண்மையில் நடந்தது என்னவென்றால், தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த ராகுல் யாதவ் என்பவரது கன்றுக்குட்டி காணாமல் போயுள்ளது. அதைத் தேடிச் சென்றபோது, அதன் எலும்புக்கூட்டை அக்லக்கின் வீட்டின் பின்புறம் பார்த்துள்ளார் அவர். உடனே அக்லக்கின் வீட்டாரிடம் அவர் விசாரித்து நியாயம் கேட்டபோது, அக்லக்கின் மகன் அவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராகுல் யாதவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த கிராமத்தினர் ஆத்திரம் அடைந்து அக்லக் மற்றும் அவர் மகனின் மீது தாக்குதல் நடத்த, அக்லக் இறந்துபோயுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு மதச்சாயம் பூசி, மத்தியில் பாஜக அரசு ஆள்வதால்தான் ஹிந்துக்கள் நாடெங்கும் இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்று ஒரு அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை எதிர்கட்சிகளும் போலி மதச்சார்பின்மைவாதிகளும் கட்டவிழ்த்துள்ளனர். 
 
 
 
இதில் கவனிக்கப்பட வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன. அக்லக்கின் மகனால் துப்பாக்கியால் சுடப்பட்ட ராகுல் யாதவ் உயிருக்குப் போராடிகொண்டிருப்பதைப் பற்றி எந்த போலி மதச்சார்பின்மைவாதியும், எதிர்கட்சியும், ஊடகங்களும் பேசவேயில்லை. மேலும் அக்லக் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்ததையும், அவர் திடீரென்று கார் வாங்கியுள்ளதையும், அவருக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவதையும் இவர்கள் மறைத்துள்ளனர். 
 
 
 
கர்நாடகத்தை ஆள்வது கங்கிரஸ் அரசு. கல்புர்கி கொலை அம்மாநிலத்தின் சட்ட ஒழுங்குப் பிரச்சனை. ஆனால் பொய் பிரச்சாரம் செய்பவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யாமல், மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர். 
 
 
அதே போல தாத்ரி சம்பவம் உத்திரப் பிரதேச மாநிலத்தை ஆளும் சம்ஜவாதி கட்சி அரசின் சட்ட ஒழுங்குப் பிரச்சனை. இதிலும், பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மாநில அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யாமல், மத்தியில் ஆளும் மோடி அரசை எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்றனர். 
 
 
 
இந்தச் சம்பவங்களுக்கு மோடியும் அவர் அரசுமே காரணம் என்றும், இந்த இரண்டே சம்பவங்களை வைத்துக்கொண்டு நாட்டில் சகிப்புத்தன்மை அடியோடு போய்விட்டது, அதற்கு மோடி அரசே காரணம் என்றும், ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள், மோடி அரசு வந்த பிறகு ஹிந்துத்துவ அமைப்புகள் கட்டுமீறி செயல்படுகின்றன என்றும், அயோக்கியத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர் எதிர்கட்சிகளும் போலி மதச்சார்பின்மை பேசும் ஊடகங்களும் அறிவு ஜீவிகளும். 
 
 
 
 
 
 
 
 
 
Intolerance 3
 
 
 
 
 
சில எழுத்தாளர்களும் சில விஞ்ஞானிகளும், சில கலைஞர்களும் தங்களுக்கு இந்திய அரசு கொடுத்த விருதுகளைத் திருப்பிக் கொடுக்கின்றனர். இவர்கள் எப்பேர்பட்ட தேச விரோதிகள் என்பதை இரு உதாரணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். 
 
 
முதலாவதாக நயந்தாரா சேகல் என்கிற எழுத்தாளர் என்ன செய்தார் என்று பார்ப்போம். இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட்டின் மகள். இவர் கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்டதைக் கண்டித்துத் தன்னுடைய சாகித்ய அகாதமி விருதைத் திருப்பிக்கொடுத்தார். ஆனால் இவர் விருது பெற்றுக்கொண்டது எப்போது தெரியுமா? காங்கிரஸ் குண்டர்கள் 2800 சீக்கியர்களைக் கொன்று குவித்த இரண்டு ஆண்டுகளுக்குள், அதே காங்கிரஸ் அரசிடமிருந்து விருதை பெற்றுக்கொண்டார். சீக்கியர்கள் படுகொலையை நியாயப்படுத்திய ராஜிவ் காந்தி அரசிடமிருந்து விருதைப் பெற்றார். 2800 சீக்கியர்களின் உயிரை துச்சமாக மதித்த இந்த அம்மையார், இப்போது ஒரே ஒரு எழுத்தாளர் கொல்லப்பட்டதை எதிர்த்து தன் விருதைத் திருப்பிக்கொடுக்கிறார். நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டது என்று புலம்புகிறார். 
 
 
 
இரன்டாவதாக ஹிந்தி கவிஞர் அஷோக் வாஜ்பேயி. இவர் 1984ல் போபாலில் விஷவாயு தாக்கி ஆயிரக்கணக்கானோர் இறந்துபோன சமயம், அந்நகரில் ஒரு ஹிந்தி கவிதை மாநாடு ஏற்பாடு செய்தார். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறந்திருக்கும் இந்தச் சமயத்தில் இப்படி ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்கிறீர்களே, என்று கேட்டதற்கு இந்த அறிவு ஜீவி என்ன பதில் சொன்னார் தெரியுமா? “இறந்தவர்களுடன் எழுத்தாளர்களும் சேர்ந்து இறந்துபோக மாட்டார்கள்” என்று திமிருடன், கொஞ்சமும் ஈவு இரக்கமின்றிப் பேசினார். இவர்தான் இன்று நாட்டில் சகிப்பின்மை அதிகமாகிவிட்டது என்று சொல்லி விருதைத் திருப்பியளிக்கிறார். 
 
 
 
மேற்கண்ட இரண்டு உதாரணங்களின் மூலமே இந்த அறிவுஜீவிகளின் யோக்கியதையை நாம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு விருது பெற்றவர்கள் அனைவருமே காங்கிரஸ்காரர்களகவும், கம்ய்ன்னிஸ்டுகளாகவும் அல்லது அந்த இரு கட்சிகளின் ஆதரவாளர்களாகவும்தான் இருக்கின்றனர். ஆகவே, இவர்கள் ஹிந்து விரோதிகளாகவும், தேச விரோதிகளாகவும் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லையே!   
 
 
 
ஆமீர் கானின்  பேச்சும் அவருடைய உண்மை சொரூபமும்
 
 
 
 
கன்னட எழுத்தாளர் கல்புர்கி இறந்து போனது ஆகஸ்டு மாதக் கடைசியில். அப்போது எந்த எழுத்தாளரும் அறிவுஜீவியும் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து விருதைத் திருப்பிக் கொடுக்கவில்லை. ஆனால் தாத்ரி சம்பவம் நடந்த பிறகு தான் இவர்கள் தங்களுடைய எதிர்ப்பையும் காட்டி, மோடி அரசுக்கு எதிரான பொய் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளனர். தாத்ரி சம்பவத்துடன், கல்புர்கி கொலையையும், அதற்கு முன்பு நடந்த மேலும் இரு கொலைகளையும் காரணமாகக் காட்டி நாட்டில் சகிப்புத்தன்மை போய்விட்டது, மதச்சார்பின்மை அழிந்துவிட்டது, என்றெல்லாம் கூறி மோடி அரசுக்கு எதிராகக் கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டனர். 
 
 
 
இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் இவர்கள் சுட்டிக்காட்டும் சம்பவம் எதுவுமே பா.ஜ.க அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடக்கவில்லை. கொலை போன்ற சம்பவங்கள் மாநில அரசுகளின் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் தானே தவிர, அவற்றுக்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பீகார் மாநிலத் தேர்தல் சமயத்தில் மோடி அரசுக்கு எதிராக இந்த மாதிரியான பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டது திட்டமிட்ட சதி என்கிற உண்மை, தேர்தல் முடிந்து பா.ஜ.க தோற்றவுடன், இந்தப் பிரச்சாரம் நிறுத்தப்பட்டதிலிருந்தே வெட்டவெளிச்சமாகிவிட்டது. 
 
 
 
பீகார் தேர்தலில் பா.ஜ.க தோற்றாலும் வாக்கு சதவிகிதத்தில் மிகவும் அதிகமான (25%) வாக்குகள் பெற்ற கட்சியாக விளங்கியது பிரதமர் மோடியின் செல்வாக்குத் துளியும் குறையவில்லை என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. ஆகவே, அடுத்து வரவிருக்கும் மாநில தேர்தல்களிலும் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்த “சகிப்புத்தன்மை” பிரச்ச்னையை மீண்டும் கையில் எடுத்திருக்கின்றன போலி மதச்சார்பின்மை சக்திகள். அதற்கு இம்முறை உதவியுள்ளவர் பாலிவுட் நடிகர் ஆமீர் கான். 
 
 
 
மோடிக்கும் அவர் அரசுக்கும் எதிராக நடக்கும் பொய் பிரச்சாரத்தை ஆதரிக்கும் விதமாகப் பேசியுள்ளார் ஆமீர் கான். சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேட்டி கொடுத்துப் பேசிய ஆமீர் கான், “இந்த நாட்டில் நடக்கும் சம்பவங்களை தினசரிகளில் பார்க்கிறோம். சகிப்பின்மை பெருகிவரும் விதத்தில் பல சம்பவங்கள் நடக்கின்றன. என் மனைவி தினசரிகளைப் பிரித்துப் பார்க்கக்கூட பயப்படுகிறார். நாட்டின் தற்போதைய சூழலைக்கண்டு அஞ்சுகிறார். இந்தியாவை விட்டுச் சென்றுவிடலாமா என்று கேட்கிறார். அந்த அளவுக்கு நாட்டில் சகிப்பின்மை வளர்ந்துவிட்டது” என்று கூறியுள்ளார். 
 
 
 
 
ஆமீர் கானின் இந்தப் பேச்சிற்கு ஆதரவாக எதிர்கட்சிகளும், எதிராக ஆளும்கட்சியும் கருத்துத் தெரிவித்திருக்கின்றன. ஏற்கனவே மோடி அரசுக்கு எதிராகப் பொய் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் போலி மதச்சார்பின்மைவாதிகள் ஆமீர் கானுக்கு ஆதரவாகப் பேசுவதோடு மட்டுமல்லாமல் தங்களது பிரச்சாரத்தை மேலும் முடுக்கிவிட்டுள்ளார்கள். இருப்பினும், பாலிவுட் நடிகர்கள் பலரும், பொது மக்களில் பெரும்பான்மையினரும் ஆமீர் கானின் கருத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளனர். அவரை நாட்டை விட்டுப் போகச் சொல்லும் குரல்களும் ஏராளமாக ஒலிக்கத்தொடங்கியுள்ளன. சமூக வலைதளங்களில் அவருக்குப் பலவிதங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடெங்கும் கடுமையான கண்டனங்கள் எழுந்து தன்னை நாட்டை விட்டுப் போகச் சொன்னதும், “நான் ஒரு இந்தியன். இந்த நாட்டை நேசிக்கிறேன். இந்த நாட்டை விட்டுப் போகும் எண்ணம் எனக்கில்லை. ஆனால் நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துபோய்விட்டது என்கிற என்னுடைய கருத்தில் மாற்றமில்லை” என்று கூறியுள்ளார். 
 
 
 
இந்த ஆமீர் கான் ஆரம்பத்திலிருந்தே மோடிக்கு எதிரானவர். நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதே அவருக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்தவர். 2002ல் நடந்த குஜராத் கலவரத்திற்கு மோடி தான் காரணமானவர் என்றும், அவர் ஒரு கொலைகாரர் என்றும் பேட்டி கொடுத்தவர். குஜராத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக வேலை செய்த பல என்.ஜி.ஓக்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டவர். நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா அனுமதி வழங்கக் கூடாது என்று மோடியின் எதிர்ப்பாளர்கள் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் அதற்கு ஆதரவாகத் தன்னுடைய கையொப்பத்தையும் அளித்தவர். இப்பேர்பட்டவர் மோடி பிரதமராக இருக்கும்போது இப்படி அவதூறு பேசாமல் பின் எப்படிப் பேசுவார்? 
 
 
 
பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்குச் சில கேள்விகள்
 
 
 
 
Intolerance 2
 
 
 
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது, சிறுபான்மையினருக்கு இந்நாட்டில் வாழ அச்சம் ஏற்பட்டுள்ளது, என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்து, தங்களுடைய விருதுகளைத் திருப்பிக்கொடுத்து, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரும் அவமானமும் ஏற்படுத்த முயலும் போலி மதச்சார்பின்மைவாதிகளும், எதிர்கட்சி அரசியல்வாதிகளும், இடதுசாரி சிந்தனை கொண்ட அறிவு ஜீவிகளும், கலை ஜீவிகளும், போலி மதச்சார்பின்மை பேசும் ஊடகங்களும் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டுத் தங்களுடைய தேச விரோதப் பிரச்சாரத்தைத் தொடரலாம்: 
 
 
வாங்கிய விருதுகளைத் திருப்பிக்கொடுப்பவர்கள் பெரும்பான்மையினர் காங்கிரஸ் அரசிடம் தான் அவ்விருதுகளைப் பெற்றார்கள். கடந்த காங்கிரஸ் ஆட்சிகளில் நாட்டில் சகிப்பின்மை இல்லையா? அப்போதெல்லாம் கொலைகள் நடக்கவில்லையா? அப்போதெல்லாம் இல்லாத சகிப்பின்மை பாஜக அரசு வந்த சில மாதங்களில் நாடெங்கும் பரவிவிட்டதா? காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தங்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுக்காமல் இப்போது பாஜக ஆட்சி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது ஏன்? 
 
 
 
இந்திரா காந்தி அரசு 1975ல் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்தது சகிப்புத்தன்மை மிக்க செயலா? அப்போது எங்கே போயிருந்தீர்கள் அறிவு ஜீவிகளும், கலை ஜீவிகளும், போலி மதச்சார்பின்மைவாதிகளும்? அப்போது இந்திரா காந்தி அரசிடம் இருந்து நீங்கள் யாரும் விருது வாங்கவில்லையா? ஏன் அப்போது வாங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை? சகிப்பின்மை அதிகரித்து விட்டது என்று இப்போது ஓலமிடும் ஊடகங்கள் பெரும்பான்மையானவை அப்போது வாய்மூடி மௌனம் சாதித்தது ஏன்?
 
 
ராஜிவ் காந்தி அரசு ஆட்சியில் இருந்தபோது இந்திரா காந்தி கொலை சம்பந்தமாக 2800க்கும் அதிகமான சீக்கியர்கள் (தில்லியில் மட்டும் 2100 பேர்) நாடெங்கும் கொலை செய்யப்பட்டார்கள். அப்போது ”ஒரு பெரிய மரம் விழும்போது நிலம் அதிரத்தான் செய்யும்” என்றார் ராஜிவ் காந்தி. இது சகிப்புத்தன்மையா? அந்தப் படுகொலைகள் நடந்த பிறகும் ராஜிவ் காந்தி அரசு கொடுத்த விருதைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு சகிப்புத்தன்மை ஞாபகம் வரவில்லையா? 2800 பேர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டுகொள்ளாமல் வெட்கமின்றி விருது பெற்ற உங்களில் சிலர் அந்த விருதை இப்போது ஒரே ஒரு கொலையைக் காரணம் காட்டித் திருப்பித்தருவது நியாயமான நேர்மையான செயலா?    
 
 
1990களில் ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். லக்ஷக்கணக்கானோர் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களுடைய சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அவர்களுடைய கோவில்கள் அழிக்கப்பட்டன. அப்போது காஷ்மீர் பண்டிட்டுகளின்  நிலை உங்கள் கண்களில் படவேயில்லையா? இன்று ஓரிரு கொலைக்கு ஓலமிடும் நீங்கள் அப்போது ஏன் வாய் மூடி இருந்தீர்கள்? அப்போது ஏன் முஸ்லிம்களின் சகிப்பின்மை பற்றி வாய் திறக்கவில்லை? அப்போது ஏன் நீங்கள் வாங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை?   
 
 
மன்மோகன் சிங் (சோனியா காந்தி) தலைமையிலான ஆட்சியில் 2004லிருந்து 2009 வரை 20க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டன. அவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அப்போதெல்லாம் நீங்கள் யாரும் இஸ்லாமியர்களின் சகிப்புத்தன்மை பற்றிப் பேசவில்லையே, ஏன்? நீங்களும் விருதுகளை வாங்கிகொண்டுதானே இருந்தீர்கள்? எத்தனை பேர் அந்தச் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்து உங்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுத்தீர்கள்?  
 
 
 
இப்பொழுது சகிப்புத்தன்மை பற்றி வாய்கிழியப் பேசி, பெற்ற விருதைத் திருப்பிக்கொடுக்கும் உங்களில் பெரும்பான்மையானவர்கள், மோடிக்கு விசா அனுமதி வழங்கக் கூடாது என்று அமெரிக்க அரசுக்குக் கடிதம் எழுதியவர்கள் தானே? அதுதான் சகிப்புத்தன்மையின் வெளிப்பாடா?  
 
 
மோடி குஜராத் முதல்வராக இருந்த 12 ஆண்டுகளும், அம்மாநிலத்தில் ஒரு எறும்பு இறந்தால் கூட அவரைத்தானே குற்றம் சாட்டினீர்கள்? ஷொராபுத்தீன், இஷ்ரத் ஜஹான் போன்ற பயங்கரவாதிகள் தப்பிக்க முயன்றபோது காவல்துறை சுட்டுக்கொன்ற சமயத்தில் மோடியையும் அவர் அரசையும் குற்றம் சுமத்தி குய்யோ முறையோ என்று ஓலமிட்டுப் போராட்டங்கள் நடத்தினீர்களே? இப்போது கல்புர்கி கொலைக்கு கர்நாடக அரசையும், தாத்ரி சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச அரசையும் ஏன் குற்றம் சொல்லவில்லை? அப்போதைய மத்திய அரசான மன்மோகன் சிங் அரசைக் கேள்வி கேட்காத நீங்கள் இப்போது மட்டும் மத்திய அரசை ஏன் மாநில சட்ட ஒழுங்குப் பிரச்சனைக்கு பொறுப்பாக்குகிறீர்கள்? 
 
 
இந்தியாவிற்குச் சகிப்புத்தன்மையை யாரும் சொல்லித்தரத் தேவையில்லை
 
 
இஸ்லாமியர்களின் படையெடுப்பையும், ஆக்கிரமிப்பையும், அழிப்பையும், 700 ஆண்டுகள் சகித்துக்கொண்ட தேசம் இந்தியா; கிறிஸ்தவர்களின் படையெடுப்பையும், ஆக்கிரமிப்பையும், அழிப்பையும் 200 ஆண்டுகள் சகித்துக்கொண்ட தேசம் இந்தியா; அன்னியர்களால் லக்ஷக்கணக்கான கோவில்கள் மற்றும் ஆன்மீகக் கலாச்சாரச் சின்னங்கள் அழிக்கப்பட்டதைச் சகித்துக்கொண்ட தேசம் இந்தியா; தன்னை அடிமைப்படுத்திய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும், அவர்களுடைய விரோதச் செயல்களைச் சகித்துக்கொண்டு, அவர்கள் வாழவும் அவர்களுடைய மதங்களைப் பின்பற்றவும் இடமும் அனுமதியும் அளித்திருக்கும் தேசம் இந்தியா; தன்னை இரண்டாகப் பிளந்து இஸ்லாமியர்கள் தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொண்டதையும் சகித்துக்கொண்ட தேசம் இந்தியா; இன்றும் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களைச் சகித்துக்கொண்டு உடன் வாழும் இஸ்லாமியர்களுடன் நட்புறவு பாராட்டி வரும் தேசம் இந்தியா; இன்றும் கிறிஸ்தவ மதமாற்றங்களைச் சகித்துக்கொண்டு உடன் வாழும் கிறிஸ்தவர்களுடன் நட்புறவு கொண்டிருக்கும் தேசம் இந்தியா; போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் கருத்துச் சுதந்திரமும், மனித உரிமையும் அளித்து, அவர்களின் அன்றாட அராஜகங்களை இன்றுவரைச் சகித்துக்கொண்டிருக்கும் தேசம் இந்தியா. 
 
 
இப்பேர்பட்ட இந்தியாவா சகிப்புத்தன்மை அற்ற நாடு? 
 
 
 
ஆனால் ஒன்று; இத்தனையையும் சகித்துக்கொள்வது தான் நாம் செய்கின்ற மாபெரும் தவறு. தேச விரோத சக்திகளை சகித்துக்கொள்வதும், வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாதிருப்பதும், ஒரு தேசத்திற்கு நல்லதல்ல. அவ்வாறு இருந்தால் வரலாறு மீண்டும் திரும்பும். இந்த உண்மையை உணர்ந்து நாம் செயல்படவேண்டும்.    
 
 
 
 
(நன்றி: ஹிந்து மித்திரன் - டிசம்பர் 1-14)  
                          
Read 1338 times
Rate this item
(1 Vote)
Last modified on Thursday, 31 December 2015 12:29

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link soundararajandesikan Thursday, 07 January 2016 00:36 posted by soundararajandesikan

    It's excellent Politicians are interfering in each and every phase of ordinary citizen---Even Britishers were reluctant to interfere. Unless there is some unity among all Madathipathis and if they voice against all these atrocities of politicians, there is no solvation

Leave a comment