×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

அரசியலால் சீரழியும் உயர்கல்வி மாணவர்கள்

Thursday, 28 January 2016 15:10 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
இம்மாதம் 17-ம் தேதி ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட ரோஹித் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்கிற பெயரில், அந்தப் பல்கலைக் கழகத்தில் இயங்கும் அம்பேத்கர் மாணவர் சங்கம் (ASA – Ambedkar Students Association), இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் (DYFI – Democratic Youth Federation of India) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI - Students Federation of India) ஆகிய பல அமைப்புகள், அவரின் தற்கொலைக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும், மத்திய பாஜக அரசும் தான் காரணம் என்று கூறிப் போராட்டம் நடத்தி வருகின்றன. 
 
 
மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்வதற்காகக் காத்திருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ஆம் ஆத்மி கட்சி மற்றும் இதர போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகள் அனைத்தும் இவ்விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, பல்கலைக்கழகத் துணை வேந்தர் நீக்கப்பட வேண்டும் என்றும், பாஜக மத்திய மந்திரிகளான பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஸ்ம்ருதி இரானி ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும் என்றும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. 
 
 
கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலையையும், உத்தரப்பிரதேச தாத்ரியில் அக்லக் என்னும் முஸ்லிமின் கொலையையும் எப்படி பிகார் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்தனவோ, அதே போல, ரோஹித் தற்கொலையைக் கையில் எடுத்துக்கொண்டு, எதிர் வருகின்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்குப் பின்னடவை விளைவிக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளன அக்கட்சிகள். எப்போதும்போல அக்கட்சிகளுக்கு ஒத்து ஊதுகின்றன முன்னணி ஊடகங்கள். இந்த அரசியல் காட்சிகளைப் பார்ப்பதற்கு முன்பாக, ரோஹித் வெமுலா பற்றியும் அவருடைய தற்கொலையின் பின்னணி பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம். 
 
ரோஹித் வெமுலா 
 
 
தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக நம்பப்படும் ரோஹித் வெமுலா, தன்னுடைய தாயின் பராமரிப்பில் வளர்ந்தவராகச் சொல்லப்படுகிறது. அவருடைய சிறிய வயதிலேயே அவருடைய தந்தையார் குடும்பத்தை விட்டுப் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு வளர்ந்த ரோஹித் வெமுலா, 2010-ம் ஆண்டு மத்திய ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்துள்ளார். 
 
 
ஆரம்பத்தில் சுவாமி விவேகானந்தர் மீது மரியாதை கொண்டவராகவும், இந்தியத் தாய்நாட்டின் மீது பக்தி கொண்டவராகவும், அப்போதைய குஜராத் முதல்வராக மோடி அவர்கள் செய்த சாதனைகளைப் பாராட்டுபவராகவும் இருந்துள்ளார் ரோஹித். இந்திய ராணுவத்தைப் புகழ்பவராகவும், சுதந்திர, குடியரசு தினங்களைக் கொண்டாடுபவராகவும் இருந்துள்ளார். 2010-ம் ஆண்டு அவர் தான் தொடங்கிய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள பதிவுகளைப் பார்க்கும்போது மேற்கண்ட விவரங்கள் தெரியவருகின்றன. 
 
 
இவ்வாறு தன்னுடைய முகநூலில் பதிவுகளைப் பதிவு செய்யத் தொடங்கிய ரோஹித் வெமுலா, 2012-ல் அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாகவும், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு ஆதரவாகவும், தில்லியில் நிர்பயா என்கிற பெண்ணைக் கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை கோரியும் பதிவுகளைப் பதிந்துள்ளார். இவை மட்டுமல்லாமல் பல அறிவியில் உண்மைகளையும் கருத்துக்களையும் கூடப் பதிவு செய்துள்ள ரோஹித், எதிர்காலத்தில் கார்ல் சாகன் போன்று ஒரு அறிவியல் எழுத்தாளராக தான் விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். 
 
 
இவ்வாறு ஒரு நாட்டுப்பற்று மிக்கவராகத் தன்னைத் தன் முகநூலில் காட்டிக்கொண்டிருந்த ரோஹித், 2013 நெருக்கத்தில், ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் பக்கம் கவர்ந்திழுக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவர்களின் அதரவாளராகவும் மாறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருடைய மனப்போக்கு எதிர்மாறாக மாறியுள்ளது. அவருடைய கொள்கைகள் மாற்றம் கண்டுள்ளன; அவருடைய நண்பர்கள் மாறியுள்ளனர். சமூகப் பிரச்சனைகளுக்கெல்லாம் அராஜகமும் புரட்சியும் தான் தீர்வுகள் என்கிற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார். 
 
 
அதன் பிறகு, அதாவது 2013-ம் ஆண்டிலிருந்து, அவருடைய முகநூல் பக்கத்தில், இந்திய தேசியம், அறிவியல் வளர்ச்சி, விஞ்ஞானம் பற்றிய கருத்துக்களுக்குப் பதிலாக அரசியலும், அராஜகமும் பற்றிய கருத்துக்கள் இடம் பிடிக்கின்றன. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் இறப்புக்குக் காரணமான பயங்கரவாதி யாகூப் மேமனுக்கு ஆதரவாக, அவனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனைக்கு எதிரான கருத்தைப் பதிவு செய்துள்ளார். அஸாதுதீன் ஓவைஸி போன்ற இஸ்லாமிய தீவிரவாத அரசியல்வாதிகளைத் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளார். அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் சேர்ந்து, தான் ஆரம்பத்தில் போற்றிய சுவாமி விவேகானந்தரைத் தூற்றத் தொடங்குகிறார். சுவாமி விவேகானந்தர், டாக்டர் அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைப் பற்றியும் பாரதத்தின் பாரம்பரிய யோகக் கலை, பரம்பரிய உடைகள் ஆகியவை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இந்து இயக்கங்களின் செயல்பாடுகளைக் காவி பயங்கரவாதம் என்று விமர்சனம் செய்துள்ளார். 
 
 
 
 
Rohith Vemula 2
 
 
 
 
 
 
இவ்வாறு மற்றவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ள ரோஹித், தன்னை விமர்சனம் செய்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது குண்டர்கள் வைத்துத் தாக்குதல் நடத்தி அவர்களிடம் எழுத்துமூலம் மன்னிப்பும் வாங்கியுள்ளார். இவ்வாறாக, சராசரி இளைஞனாக எதிர்காலக் கனவுகளுடன் தன் பல்கலைக்கழக வாழ்க்கையைத் தொடங்கிய ரோஹித் வெமுலா, இரண்டே ஆண்டுகளில் இடது சாரி சிந்தனைகளுடன் கூடிய, அராஜகத்தை விரும்புகிற, தேச விரோத கொள்கைகளை உடைய இளைஞனாக மாறியுள்ளார். 
 
 
 
ரோஹித் தற்கொலையின் பின்னணியில் நடந்த சம்பவங்கள். 
 
 
2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ம் தேதி, ரோஹித் வெமுலா சார்ந்திருக்கும் அம்பேத்கர் மாணவர் இயக்கம் என்கிற அமைப்பு மத்திய ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், பயங்கரவாதி யாகூப் மேமனின் தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. அதில் பல்கலைக்கழகத்திற்குச் சம்பந்தமில்லாதவர்களும் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. அந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு யாகூப் மேமன் புறப்படுவான் என்கிற கோஷம் எழுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. 
 
 
 
 
 
 
 
Rohith Vemula 5
 
 
 
 
 
 
 
யாகுப் மேமன், நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்களைக் குண்டு வைத்துக் கொன்றதற்காக, இந்தியச் சட்டங்களின் படி வழக்குத் தொடரப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பயங்கரவாதி. அவனுடைய தண்டனைக்கு எதிராகப் போராடுவது இந்திய தேசநலனுக்கு விரோதமான போராட்டம் ஆகும். ஆகவே, இந்த தேசவிரோதப் போராட்டத்தை பாரதிய வித்யார்த்தி பரிஷத் கடுமையாக எதிர்த்தது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறைக் குழுவிடம் புகார் அளித்தது. ஆனால் அந்தக் குழுவோ, போராட்டம் நடத்தி அதில் கலந்துகொண்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.   
 
 
 
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சுஷில் குமார் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இந்தப் பயங்கரவாத ஆதரவுப் போராட்டத்தை விமர்சனம் செய்து தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார். அதில் யாகுப் மேமனுக்கு ஆதரவாகவும் தேச விரோதமாகவும் நடந்துகொண்டவர்களைக் “குண்டர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் அவ்வமைப்பினர் அடுத்த நாள், அதாவது ஆகஸ்டு 4-ம் தேதி யாகூப் மேமனுக்கு ஆதரவானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி, போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்ததனர். 
 
 
 
அன்றைய நடு இரவில், சுமார் 30 பேர்கள் கொண்ட ஒரு கும்பல் அவருடைய ஹாஸ்டல் அறையில் இருந்து அவரை வெளியேற்றி அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும் ஒன்றும் செய்யவில்லை. அந்தக் கும்பல் ஹாஸ்டல் பாதுகாப்பாளர் கண்முன்பாக சுஷில் குமாரை அடித்துத் துன்புறுத்தி மன்னிப்புக் கடிதமும் எழுதிப் பெற்றுகொண்டுள்ளது. பின்னர் சுஷில் குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 
 
 
 
அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தெரிவித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை நிர்வாகக் குழுவிடம் புகார் அளித்தபோதும், அக்குழுவினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு சுஷில் குமாரின் தாயார் பல்கலைக்க்ழக துணைவேந்தரைச் சந்திக்க வந்தபோது, அம்பேத்கார் மாணவர் சங்கத்தினர் அவரைச் சந்திக்க விடாமல் கேரோ செய்து திரும்பிப்போகச் செய்துள்ளனர். அவர் உடனடியாக, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நீதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
 
 
 
இதனிடையே. பல்கலைக்கழக நிர்வாகம் பலகலையின் மருத்துவ அலுவலரிடம் அறிக்கைத்தரச் சொல்லிப் பணித்தது. சுஷில் குமாரின் மருத்துவ அறிக்கைகளைப் பார்த்த அவர், சுஷில் குமார் தாக்கப்பட்டிருந்தாலும் பெரிதாகக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஆனால் அவர் அறிக்கை பொய் என்பதை நிரூபிக்கும் விதமாக, சுஷில் குமாரின் நிலை மோசமாகி, 7-ம் தேதி அவருக்குக் குடல் பகுதியில் அவசர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
அந்த அறுவை சிகிச்சை ஆவணங்களையும் இதர அறிக்கைகளையும் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் சுஷில் குமாரின் தாயார். உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார், சுஷில் குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கும், ஒழுங்குமுறை நிர்வாகக் குழுத் தலைவருக்கும் உத்தரவிட்டார்.
 
 
 
இதனிடையே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தினர் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் விஷயத்தை எடுத்துச் சென்றவுடன், அவர் அந்தப் புகாரை மத்திய உயர்கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ருதி இரானியிடம் அனுப்பி வைத்தார். ஸ்ம்ருதி இரானி அந்தப் புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பல்கலை நிர்வாகத்திற்கு அந்தப் புகாரை அனுப்பிவைத்தார்.  
 
 
 
 
 
 
Rohith Vemula 3
 
 
 
 
 
 
வேறு வழியில்லாததாலும், மத்திய அமைச்சகம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் அழுத்தத்தினாலும், பல்கலைக்கழக நிர்வாகம், சுஷில் குமார் மீது தாக்குதல் நடத்தியதற்காக, ரோஹித் வெமுலா உள்ளிட்ட ஐந்து ஆராய்ச்சி மாணவர்களைத் தற்காலிகமாக ஒரு பருவத்திற்கு (Semester) நீக்கி, விடுதி, நூலகம் மற்றும் உணவகம் ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கும் தடை விதித்தது. 
 
 
 
 
இந்தத் தடையை எதிர்த்து அம்பேத்கர் மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியபோது, பல்கலை நிர்வாகம், பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளதால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது. அதனைத் தொடர்ந்து ரோஹித் வெமுலா உள்ளிட்ட ஐவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசரித்த நீதிபதி ராமச்சந்திர ராவ் அவர்கள் தண்டனையை ரத்து செய்ய மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மனுவை சுஷில் குமாரின் தாயார் மனுவுடன் சேர்த்து வைத்தார். வழக்கு ஜனவரி 25-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. 
 
 
 
இதனிடையே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்பா ராவ் விடுப்பில் செல்ல, புதிய தற்காலிக துணை வேந்தராக விபின் ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்றுக்கொண்டார். தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் திறந்தவெளியில் தங்க ஆரம்பித்தனர். பல்கலையில் உள்ள பல மாணவர் சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தன. விவகாரம் பெரியதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும், ஐந்து மாணவர்களில் ஒருவர் தன்னுடைய எதிர்காலத்தை நினைவில் கொண்டு போராட்டத்திலிருந்து விலகிக்கொண்டார். ஆனால் ரோஹித் வெமுலா ஜனவரி 17 அன்று தற்கொலை செய்துகொண்டார். 
 
 
 
தற்கொலைக்கான காரணமும் சில கேள்விகளும்
 
 
 
ரோஹித் வெமுலா தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை அவருடைய தந்தையாரே மறுத்துள்ளார். தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள வத்தேரா ஜாதியைச் சேர்ந்தவன் என்று கூறியுள்ளார். அது உண்மையாக இருந்தாலும், அவரின் மனைவியான ரோஹித்தின் தாயார் தாழ்த்தப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், ரோஹித் அவரால் வளர்க்கப்பட்டதால் அந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளார் என்றும் தெரியவருகிறது.
 
 
 
 
 
 
 
Rohith Vemula 4
 
 
 
 
 
 
 
ஆயினும், அவர் ஆராய்ச்சி மாணவராகச் செர்ந்தது தன்னுடைய கல்வித்தகுதியை வைத்துத்தான் என்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பிற்கான இட ஒதுக்கீட்டின் மூலம் அல்ல என்றும் தெரிய வந்துள்ளது. 
 
 
 
ரோஹித் நல்ல படிப்பாளியாகவும் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவராகவும் இருந்துள்ளார். அவருடைய முகநூல் பதிவுகளும் அவருடைய மொழியறிவுக்குச் சான்று பகர்கின்றன. ஏன், அவருடைய தற்கொலைக்கடிதமும் கூட அதை நிரூபிக்கின்றது. 
 
 
 
அவர், தான் கடைசியாக எழுதிய கடிதத்தில் தன் தற்கொலைக்குத் தன்னையே, தன் முடிவையே காரணமாகச் சொல்லியிருந்தாலும், வேறு எவருக்கும் பொறுப்பில்லை என்று கூறியிருந்தாலும், அவருடைய கடிதத்தை முழுமையாகப் படிக்கும்போது, தான் தன்னுடைய தனிப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட அடையாளத்தை, தான் சேர்ந்த அமைப்புகளினால் இழந்துவிட்டதை எண்ணிக் குமைந்து போயிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தன்னுடைய மனநிலையும், குணாதிசயமும், எண்ணவோட்டங்களும் தான் சேர்ந்த அமைப்பினாலும், அரசியல் காரணங்களாலும், மாறிவிட்டதைப் புரிந்துகொண்டு நொந்துபோயிருக்கிறார் என்பதும் தெரிகிறது. 
 
 
 
நல்ல படிப்பாளியாகவும் நாட்டுப்பற்று உடையவராகவும் இருந்து, கல்வித் தகுதியின் அடிப்படையில் பல்கலையில் சேர்ந்தவர், இரண்டே வருடங்களில் குணாதிசயத்திலும், மனவோட்டத்திலும், எண்ணத்திலும், கொள்கைரீதியாகவும், தலைகீழாக எப்படி மாறிப்போனார்? அதற்குக் காரணம் எது? அவரை அப்படி மாற்றியவர்கள் யார்? 
 
 
 
அராஜகத்துக்கும், பயங்கரவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும், ஆதரவானவராக எப்படி மாறிப்போனார்? வன்முறை மீது நம்பிக்கை உடையவராக எப்படி மாறிப்போனார்? அறிவியல் மீதிருந்த பற்றை விடுத்து அரசியல் மீது விருப்பம் கொண்டவராக எப்படி மாறினார்? அவரை மாற்றியது எது? அவரை மாற்றியவர்கள் யார்? 
 
 
 
அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல அவருடைய தற்கொலைக்கு அவரே தான் காரணமா? இல்லை அவரை அந்த நிலைக்குத் தள்ளிய தீய சக்திகள் காரணமா?
 
 
 
மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காண்பது அரசின் கடமை.  
 
 
 
  
ரோஹித் தற்கொலையை அரசியலாக்கும் கட்சிகளும் ஊடகங்களும்
 
 
 
 
நாடெங்கும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதும், மரணிப்பதும், தற்கொலை செய்துகொள்வதும் சமீப காலங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன. சென்னை ஐ.ஐ.டியில் நரேந்திரகுமார் ரெட்டி என்கிற மாணவர் கடந்த செப்டம்பர் 22-ம் தேதியும், ராஹுல் பிரசாத் என்கிற மாணவர் கடந்த அக்டோபர் 18-ம் தேதியும் (30 நாட்களுக்குள் இருவர்) தற்கொலை செய்துகொண்டனர். அப்போது எந்தவிதமான கூச்சலும் கூப்பாடும் போடாத அரசியல் கட்சிகளும், முன்னணி ஊடகங்களும் இப்போது மட்டும் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏனென்றால், அவர்கள் இருவரும் ரோஹித் வெமுலா போன்று தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்லது DYFI, SFI போன்ற கம்யூனிச மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ அல்ல. 
 
 
 
 
ரோஹித் வெமுலாவின் மேல் அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் அக்கறை காட்டுவதற்கான ஒரே காரணம், அவருடைய மரணத்தில் மத்திய அரசுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவது மட்டும்தான். கூடிய விரைவில் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருப்பதால், இந்தத் தற்கொலைக்கு பல்கலை நிர்வாகத்தின் மீதும், அந்தப் பல்கலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அரசின் மீதும் பழியைச் சுமத்தி, அரசியல் லாபங்களைச் சம்பாதிப்பது ஒன்றே மற்ற அரசியல் கட்சிகளின் நோக்கமாகும். ஆந்தக் கட்சிகளுக்கு உதவும் நோக்கில் செயல்படுவதே முன்னணி ஊடகங்களின் நோக்கம். அந்த நோக்கங்கள் வெற்றியடைய அவர்கள் பயன்படுத்துவது ரோஹித்தின் தலித் அடையாளம் மட்டுமே! மத்திய அரசை தலித் சமுதாயத்தின் விரோதியாகக் காட்டுவதன் மூலம், தாங்கள் அரசியல் லாபம் அடையலாம் எனத் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. 
 
 
 
கடந்த வருடம் நடந்த பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, உத்திரப் பிரதேச மாநிலத்தில் தாத்ரி என்கிற இடத்தில் 2015-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி, அக்லக் என்கிற முஸ்லிம் அவ்வூர் மக்கள் சிலரால் கொல்லப்பட்டபோது, அதை ஹிந்து முஸ்லிம் பிரச்சனையாக்கி, மத்தியில் பாஜக அரசு ஆட்சியில் இருப்பதால்தான் முஸ்லிம் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது என்றும், ஹிந்துத்துவ சக்திகள் வன்முறையிலும் கொலையிலும் ஈடுபடுகின்றன என்றும் பொய் பிரச்சாரம் செய்தன மற்ற அரசியல் கட்சிகளும், போலி மதச்சார்பின்மை பேசும் முன்னணி ஊடகங்களும். சட்டம் ஒழுங்கு மாநில அரசின் பிரச்சனையாக இருந்தாலும், அக்லக் கொலைக்கு மத்திய அரசையே குற்றம் சாட்டினர். நரேந்திர மோடி பிரதமராக இருப்பதால் தான் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லாமல் இருக்கிறது என்கிற ரீதியில் கேவலமான பொய் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர்.   
 
 
 
அதே போல கர்நாடக மாநிலத்தில் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த கல்புர்கி என்கிற எழுத்தாளர் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி கொல்லப்பட்டதற்கும், ஹிந்துத்துவ அமைப்புகளையும், மத்திய அரசையும் குற்றம் சாட்டின மற்ற அரசியல் கட்சிகளும் முன்னணி ஊடகங்களும். அவர் சாஹித்ய அகாதமி விருது பெற்றவர் என்பதால், அவர் கொலைக்கு அகாதமி கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், அதற்கும் மத்திய அரசே காரணம் என்றும் சொல்லி, பல எழுத்தாளர்களும், விஞ்ஞானிகளும், கலைஞர்களும் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பியளித்தனர். 
 
 
 
மேலும், மேற்கண்ட இரண்டு கொலைகளையும் காரணமாகக் காட்டி, பாஜக ஆட்சியில் இந்தியாவில் சகிப்புத்தன்மை முழுவதுமாகக் குறைந்து போய்விட்டது என்றும் ஒரு பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டனர். இந்த மாதிரியான பொய்பிரச்சாரங்களின் மூலம் பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்படுத்தின. 
 
 
 
ஆனால், இதே அரசியல் கட்சிகளும் முன்னணி ஊடகங்களும், தாத்ரி சம்பவத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன்னால், அக்டோபர் 5-ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் பசுவதைக்கு எதிராகவும், சட்ட விரோதமான கால்நடைக் கடத்தலுக்கு எதிராகவும் இயங்கி வந்த பிரஷாந்த் பூஜாரி என்பவர் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டபோது வாய்மூடி மௌனம் சாதித்தன. அதாவது போலி மதச்சர்பின்மை பேசும் அரசியல் கட்சிகளுக்கும், முன்னணி ஊடகங்களுக்கும் ஹிந்து உயிர்கள் என்றால் கிள்ளுக்கீரை போன்றது தான். ஹிந்து உயிர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. சிறுபான்மையினருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஹிந்துக்களுக்கு அவர்கள் கொடுப்பதேயில்லை. ஹிந்து உயிர்களிலும் தலித் உயிர்களாக இருந்தால் மட்டும் தான் அவர்கள் கவனம் செலுத்துவர். அப்போதுதான் தலித் மக்களை ஹிந்துக்களிடமிருந்து பிரிக்க முடியும் என்கிற நோக்கத்துடன் செயல்படுபவர்கள். இதுதான் இந்தியாவில் பின்பறப்படும் மதச்சார்பின்மையின், ஜாதி ஒழிப்பின் லக்ஷணம். 
 
 
 
இந்த லக்ஷணத்தின்படி தான் சென்னை ஐ.ஐ.டியில் தற்கொலை செய்துகொண்ட இரண்டு மாணவர்களின் உயிர்கள் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருந்தன அரசியல் கட்சிகளும், ஊடகங்களும். அதே போலத்தான் சென்ற வாரம் விழுப்புரத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டபோதும் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 
 
 
 
ரோஹித் வெமுலா தலித் என்கிற ஒரே காரணத்திற்காக அவருடைய சாவை அரசியல் ஆக்கி, அந்தச் சாவிற்கு மத்திய பா.ஜ.க அரசைப் பொறுப்பாக்கி, கேவலமான வாக்கு வங்கி அரசியல் நடத்தி, வருகின்ற சட்டமன்றத் தேர்தல்களில் லாபம் அடைய நினைக்கின்றன. இந்த நிகழ்முறையில் ரோஹித் வெமுலா தன்னுடைய அனைத்து பன்முக அடையாளங்களையும் இழந்து “தலித்” என்கிற ஒற்றை அடையாளத்தை அடைந்துள்ளார். நல்லவேளையாக இந்த இழப்பை அனுபவிக்க அவர் உயிரோடு இல்லை. அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இவ்வாறு செய்வது தங்களுக்கு பேரவமானம் என்பதை தலித் சமுதாயத்தினர் விரைவில் உணர்வது அவர்களுக்கு நன்மை பயக்கும். 
 
 
 
பல்கலைக்கழகங்களைப் பாழாக்கும் அரசியல்
 
 
 
என்று கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அரசியல் புகுந்ததோ அன்றிலிருந்து நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் பாழாகிப்போக ஆரம்பித்தன; மாணவர்களும் தங்கள் எதிர்காலத்தைத் தொலைக்க ஆரம்பித்தனர். இந்த உண்மையை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது மத்திய ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட சம்பவம். 
 
 
 
ஹைதராபாத் பல்கலையில் அம்பேத்கர் மாணவர் சங்கம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தலித் மாணவர்களின் நலனுக்காகப் பாடுபடும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஆனால் தலித் மாணவர்களின் “ஒற்றுமையை” பறைசாற்றும் விதமாக, தற்போது மூன்று தலித் மாணவர் அமைப்புகள் அங்கே செயல்படுகின்றன. தலித் மாணவர் சங்கம் (DSU – Dalit Students Union), பஹுஜன் மாணவர் முன்னணி (BSF – Bahujan Students Front) ஆகியவை மற்ற இரண்டு அமைப்புகள். ஆயினும் அம்பேத்கர் மாணவர் சங்கம் தான் அரசியல் சார்ந்த செயல்பாடுகளை மாணவர்களிடையே தோற்றுவித்தது. இதற்குத் தூண்டுகோலாகச் சில ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இருந்தனர். தங்களுடைய அரசியல் சார்புக் கொள்கைகளுக்காக மாணவர்களையும் தூண்டிவிட்டு பல்கலை வளாகத்தில் மாணவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதில் பெரும்பங்கு அவர்களுக்கு உண்டு. 
 
 
 
அவர்களில் சிலர்: - 
 
1.பேராசிரியர் ஹரிபாபு, பேராசிரியர் ஹரகோபால் – அரசியல் அறிவியல் துறை
2.பேராசிரியர் லக்ஷ்மி நாராயணா – பொருளாதாரத்துறை 
3.உதவி பேராசிரியர் வம்ஸி கிருஷ்ணா (பேராசிரியர் ஹரகோபாலின் மகன்) – பொருளாதாரத்துறை
4.பேராசிரியர் கே.ஒய்.ரத்தினம் (பேராசிரியர் ஹரகோபாலின் மாணவர்) – அரசியல் அறிவியல் துறை
5.பேராசிரியர் பி.நாகராஜு (பேராசிரியர் ஹரிபாபுவின் மாணவர் – தலைமை வார்டன்) – வரலாற்றுத்துறை   
6.பேராசிரியர் பிரகாஷ் பாபு – மாணவர் நலத்துறை டீன் – உயிரி தொழில்நுட்பத்துறை 
7.மூத்த உதவி பேராசிரியர் சௌம்யா தேசம்மா – மானுடவியல் துறை – இவர் பல்கலை வளாகத்திலேயே “அன்பு
   முத்தம்” போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்; யாகூப் மேமனின்  தூக்குத்தண்டனைக்கு எதிராக 31 ஜூலை 2015
   அன்று நடத்தப்பட்ட போராட்டத்திலும் இரங்கல் கூட்டத்திலும் உரையாற்றியவர். 
 
 
 
நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் மேற்கண்ட மாதிரியான பேராசிரியர்கள் பணியில் இருந்துகொண்டு மாணவர்களைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்லுவது நிதர்சனமான உண்மை. 
 
 
 
சென்னை ஐ.ஐ.டி.யிலும் இப்படி ஒரு மாணவர் அமைப்பு உண்டு. அதன் பெயர் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம். இந்த வாசிப்பு வட்டத்தின் பின்னணியில் ஐ.ஐ.டியில் பணிபுரியும் பேராசிரியர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் தங்களுடைய அரசியல் கொள்கைகள் சார்ந்து, மாணவர்களைத் தூண்டிவிட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்கின்றனர். மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற துறைகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் பெரும்பாலும் இடது சாரி மற்றும் போலி மதச்சார்பின்மை சிந்தனை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். 
 
 
 
2012-ம் ஆண்டு மார்ச்சு, ஏப்ரல் மாதங்களில் பேராசிரியர் செல்லா ராஜன் மற்றும் பேராசிரியர் எல்.எஸ்,கணேஷ் ஆகியோர், பல்கலை விடுதிகளில் சுதந்திரமாக பாலின உறவுகளை வைத்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தை மாணவர்கள் மனத்திலே விதைத்து அதற்கு ஆதரவாகவும் செயல்பட்டுள்ளனர். அதைக் கண்டித்த பேராசிரியர் கணேஷ் என்பவரை தாலிபான் மனநிலையில் உள்ளவர் என்று எகத்தாளம் செய்துள்ளனர். 
 
 
 
 
இதே போல 2014-ம் ஆண்டு ஐ.ஐ.டி வளாகத்தில் “அன்பு முத்தம்” போராட்டம் நடத்தப்பட்டபோது, மிலிண்ட் பிராமே என்கிற பேராசிரியர் அதற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களைத் தூண்டுவிட்டுள்ளார். சுதந்திர பாலின உறவுகளை ஆதரித்துப் போராடிய அதே கும்பல் தான் அன்பு முத்தம் போராட்டத்திலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளது.   
 
 
 
EML (Extra Mural Lectures), Chinta Bar, IIT for Society, Colloquium,  Ambedkar-Periyar Study Circle, and IIT Christian Fellowships போன்ற பல மாணவர் அமைப்புகள் சென்னை ஐ.ஐ.டியில் உள்ளன. இவை அனைத்துமே ஹிந்து விரோத, பா.ஜ.க விரோத, பிரதமர் மோடி விரோத கருத்தரங்குகளையும், போராட்டங்களையும் நடத்தியுள்ளன. அவற்றில் தேசத்தின் ஹிந்துத்தன்மைக்கு எதிராகவும், போலி மதச்சர்பின்மைக்கு ஆதரவாகவும் உள்ள பிரபலங்களை உரையாற்றச் சொல்லி அழைத்துள்ளன. இந்த அமைப்புகள் பெரும்பாலும், கிறிஸ்தவ, இடதுசாரி, தலித் அமைப்புகளாக இருந்துகொண்டு தேச ஒற்றுமைக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. 
 
 
 
இதே போல தில்லியில் உள்ள புனித ஸ்டீஃபன் கல்லூரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைகளிலும் பல தேச விரோத அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிலையத்தில் (Film and Television Institute of India) நடிகர் கஜேந்திர சௌஹான் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டமும் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டது தான். பல பேராசிரியர்கள் தங்களின் அரசியல் சார்பு கொள்கைகளை மாணவர்களிடம் கொண்டு சென்று அவர்களைத் தூண்டிவிட்டு தவறான வழிகளில் நடத்திச் செல்கின்றனர். 
 
 
 
இது தான் மத்திய ஹைதராபாத் பல்கலையிலும் நடந்து ரோஹித் வெமுலாவின் தற்கொலையில் முடிந்துள்ளது. 
 
 
 
அரசியலைத் தடை செய்வதே ஒரே வழி
 
 
 
நாடெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் நடக்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும், கொலை மற்றும் தற்கொலைகளையும் கவனித்து நோக்கினால், பின்வரும் விஷயங்கள் தெளிவாக விளங்கும்:
 
 
 
1.அரசியல் கட்சிகள் சார்ந்த மாணவர் அமைப்புகள் கட்சி அரசியலிலும் ஜாதி அரசியலிலும் ஈடுபடுவது மிகவும்
   அதிகரித்துள்ளது
2.பல பேராசிரியர்கள் தங்களுடைய அரசியல் சார்புக் கொள்கைகளை மாணவர்கள் மனதில் ஏற்றி அவர்களைத்
   தூண்டிவிட்டு அரசியல் மற்றும் மதச்சார்பு, ஜாதி சார்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது
3.ஆராய்ச்சி மாணவர்களாக சேர்பவர்கள் தங்களுடைய நான்காண்டு அல்லது ஐந்தாண்டு பருவம் முடிந்த பின்னும்,
   விடுதிகளில் மேலும் தொடர்ந்து தங்கிக்கொண்டு இளநிலை மாணவர்களை மூளைச் சலவை செய்து அவர்களையும்
   அரசியலில் ஈடுபடச் செய்வது. 
4.மதச்சார்பின்மை, சிறுபான்மை ஆதரவு, இடது சாரி அரசியல், தலித் அரசியல் ஆகியவற்றில் ஈடுபடும் அரசியல்
   தலைவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசு சாரா அமைப்புகளை நடத்துபவர்கள் ஆகிய பிரபலங்கள்
   மாணவர் கருத்தரங்குகளில் உரையாற்றி அவர்களை மேலும் தூண்டிவிட்டு அராஜகத்திலும், அரசியலிலும் ஈடுபடச்
   செய்வது. 
 
 
அரசியல் சார்பு நிலை கொண்ட பேராசிரியர்கள் மற்றும் அவர்களால் தூண்டப்படும் மாணவர் அமைப்புகள் ஆகியோரின் செயல்பாடுகளினால், பல்கலைக்கழகங்களின் தரம் தாழ்ந்துபோகின்றது; அங்கே படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் வீணாகி இருளில் மூழ்கிப்போகிறது; நாட்டில் கல்வித்தரம் தாழ்ந்து போய் சர்வதேச அளவில் இந்தியப் பல்கலைகளின் பெயர் கெட்டுப்போகின்றது. இவற்றையெல்லாம் தடுத்து நம் பல்கலைகளின் தரத்தைக் கூட்டி மாணவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால், கீழ்காணும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்:
 
 
 
1.கல்லூரிகளிலும் பல்கலைகளிலும் மாணவர்கள் சங்கங்களுக்கான தேர்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். மாணவர்
   சங்கங்களும் தடை செய்யப்படவேண்டும். 
2.மாணவர்களை அரசியல் சார்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
  வேண்டும். அரசியல் சார்புடன் நடந்துகொள்ளும் பேராசிரியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.
3.கல்லூரி மற்றும் பல்கலைகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்களிலும், விழாக்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள்
  கலந்துகொண்டு உரையாற்றுவதைத் தடை செய்ய வேண்டும்.
4.ஜாதி அரசியலில் ஈடுபடும் மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
5.இந்தியாவின் பாரம்பரிய கலச்சாரத்திற்கு விரோதமான நிகழ்ச்சிகளை கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் நடத்த
  அனுமதிக்கக்கூடாது. 
6.மனித உரிமை என்கிற பெயரில் பல்கலையின் விதிகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை அனுமதிக்கக்
  கூடாது. 
7.பல்கலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேலாக தங்கிக்கொண்டிருப்பவர்களை வெளியேற்ற வேண்டும்.
  மாணவர்கள் அல்லாதவர்களை பார்வையாளர் நேரம் தவிர மற்ற நேரங்களில் விடுதிகளில் நுழைய விடக்கூடாது
 
 
உயர் கல்வி நிலையங்களில் அரசியல் நுழைவதை முழுவதுமாக தடுத்தால் மாணவர் நலனும் கல்வி நிலையங்களின் நலனும் பாதுகாக்கப்படும்.   
   
 
 
 
குறிப்புகள்:
 
 
http://www.vigilonline.com/index.php?option=com_content&view=article&id=2196:rohith-vemulas-suicide-imposing-the-burden-of-guilt-to-bury-the-truth&catid=55:plainspeak&Itemid=71
http://indiafacts.org/something-awry-in-iit-madras-the-full-story/
http://www.opindia.com/2016/01/rohiths-father-blows-the-lid-over-his-caste-says-his-son-was-murdered-attacks-vulture-politics/
http://www.indianexponent.com/2016/01/the-real-truth-of-rohith-vemula-suicide.html
http://www.opindia.com/2016/01/rohiths-suicide-note-what-the-leftists-dont-want-to-read/
http://indianexpress.com/article/india/india-news-india/dalit-student-suicide-full-text-of-suicide-letter-hyderabad/
Read 1188 times
Rate this item
(4 votes)
Last modified on Thursday, 28 January 2016 15:38

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link M.Narayanan Friday, 29 January 2016 05:38 posted by M.Narayanan

    Ban the Students" Unions from all educational institutions. Professors with political affiliations of any sort should resign fortwith. If they will not resign, they should be sacked. A good communication link must be established among Students, Management, Teaching Faculty and Parents and they should meet periodically and sort out all issues.

Leave a comment