×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

சபரிமலையின் பாரம்பரியம் பாதுகாக்கப்படவேண்டும்

Sunday, 28 February 2016 13:09 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

“ஒரு பெண் ஏன் சபரிமலை கோவிலுக்குள் நுழையக்கூடாது? எதன் அடிப்படையில் அவள் அனுமதி மறுக்கப்படுகிறாள்? அதற்கான காரணம் என்ன? ஒரு பெண் சபரி மலைக்குப் போகலாம்; போகாமல் இருக்கலாம்; அது அவளுடைய தனிப்பட்ட விருப்பம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திடம் கேட்டுள்ளார்.

 

 

கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த சம்பிரதாயம் பின்பற்றப்பட்டு வருகின்றது என்று தேவஸ்தானம் பதிலளித்தபோது, ”கடந்த 1500 ஆண்டுகளாக சபரி மலையின் கர்ப்பக்கிருகத்தில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? காட்டுங்கள்” என்று கேட்டுள்ளார் நீதிபதி.

 

 

“வயது, பாலினம், ஜாதி ஆகிய காரணங்களைக் கொண்டு வேற்றுமைகள் காண்பதை அரசியல் சாஸனம் நிராகரிக்கின்றது” என்று கூறிய நீதிபதி மிஸ்ரா, “அரசியல் சாஸனம் வழங்கிய உரிமை இருந்தாலொழிய நீங்கள் சபரி மலை வழிபாட்டிற்குப் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது. பொதுமக்கள் வழிபடும் கோவிலுக்கும் மடத்துக்கும் வித்தியாசம் உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

 

 

இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கமும், ஐந்து பெண் வழக்குரைஞர்களும், சபரி மலையில் பெண்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படவேண்டும் என்று தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தான், மூவரில் ஒருவரான நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் மேற்கண்ட கேள்விகளை எழுப்பினார்.

 

 

 

Supreme Court

 

 

 

இந்த வழக்கு 2006-ம் ஆண்டிலேயே தொடரப்பட்டது. அப்போதே உச்ச நீதிமன்றம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும், கேரள மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்தச் சமயத்தில் கன்னட நடிகை ஜெயமாலா, தான் சபரிமலை சென்றதாகவும், அங்கே சன்னிதிக்கு அருகே நடந்த தள்ளுமுள்ளுவில் தான் சுவாமி ஐயப்பன் விக்ரகத்தைத் தொட்டதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது சபரி மலையில் 10 வயதிலிருந்து 50 வயது வரையுள்ள பெண்கள், அதாவது மாதவிடாய் காலங்கள் இருக்கக்கூடிய பெண்கள், சபரி மலைக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்தான விவாதம் நாடு முழுவதும் எழுந்தது. அந்தச் சமயத்தில் தொடரப்பட்ட வழக்காகும் இது. 

 

 

கேரள மாநில இந்து பொது வழிபாட்டுத்தலங்கள் (நுழைவு அனுமதி) விதிகள் 1965-ன் கீழ் 3(b)-வது விதியின் படி {Rule 3 (b) of the Kerala Hindu Places of Public Worship (Authorisation of Entry) Rules, 1965} இந்தத் தடையானது அமலாக்கப்பட்டது. 19991-ல் கேரள உயர் நீதிமன்றம் இந்தத் தடையை அங்கீகரித்து அதை அமல்படுத்துமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது.

 

 

வழக்குத் தொடர்ந்தவர்கள் அளித்துள்ள மனுவில், “ஆலய நுழைவில் பாகுபாடு பார்ப்பது என்பது ஹிந்து மதத்தின் படி எந்தவிதமான சாஸ்திரமோ சம்பிரதாயமோ கிடையாது. அவ்வாறு பாகுபாடு பார்ப்பது ஹிந்து விரோதமாகும். ஒரு மதக்குழுவுக்கு கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது; கோவிலுக்குள் நுழைய பாலினப் பாகுப்பாட்டின் படி அனுமதி மறுக்கும் அதிகாரம் கிடையாது, அவ்வாறு அனுமதி மறுப்பது, அரசியல் சாஸனத்தின் க்ஷரத்து 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம் – Equality before Law), க்ஷரத்து 25, 26 (மதச்சுதந்திரம் – Freedom of Religion) ஆகியவற்றை மீறுவதாகும். எனவே, குறிப்பிட்ட விதியை ரத்து செய்து, வழிபாட்டுத்தலங்களில் பாலின அடிப்படையில் பாகுபாடுகள் இல்லாமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

 

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, கேரள அரசைப் புதியதாக ஒரு அறிக்கைமனுவை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்துள்ளது.

 

 

இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஹிந்து மதத்தின் சுதந்திரம், ஹிந்துப் பண்பாடு, பாரம்பரிய வழிபாட்டு முறைகள், ஆகியவைக் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இது சரியா? இவற்றை நீதிமன்றங்கள் கேள்விக்குள்ளாக்கலாமா? இந்த வழக்கைத் தொடுத்தவர்களின் நோக்கம் என்ன? இப்படி ஒரு வழக்கைத் தொடுப்பதற்கு அவர்களுக்கு வழக்கீட்டு உரிமை இருக்கிறதா? போன்ற கேள்விகளும் எழுகின்றன.

 

 

சபரிமலை வரலாறு

 

 

 

Sabarimala 2

 

 

 

கோடிக்கணக்கான இந்துக்கள் ஒவ்வொரு வருடமும் நேர்த்தியாக ஒரு மண்டலம் விரதம் இருந்து கடுமையான பாதையில் ஏறி சபரிமலைக்குச் சென்று பகவான் ஐயப்பனைத் தரிசனம் செய்து வருகின்றனர். வருடாவருடம் சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது.

 

 

 

Sabarimala 4

 

 

 

சபரிமலையின் வரலாறு பழம்பெருமை வாய்ந்தது. கலியுகத் தெய்வமாகப் போற்றப்படும் ஐயப்பன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மக்களுக்கும், தொல்லைகளும் துன்பங்களும் கொடுத்துக்கொண்டிருந்த மகிஷி என்னும் அரக்கியை அழிப்பதற்காக, சிவனுக்கும் மோஹினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர். மகிக்ஷி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவரால் தான் தனக்கு மரணம் ஏற்படவேண்டும் என்று பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தவள். அதனால்தான் விஷ்ணு மோகினி அவதாரம் கொண்டு அவருக்கும் சிவனுக்கும் ஐயப்பன் பிறந்தார். அவ்வாறு பிறந்து பின்னர் பந்தள ராஜாவின் மகனாக வளர்ந்து மகிஷியை அழித்தார். தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறிய பிறகு தெய்வமாக மாறி, நைஷ்டிக பிரம்மச்சாரியாக யோக நிலையில் சின் முத்திரையுடன் சபரிமலையில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

 

 

மகிஷி சாபவிமோசனம் அடைந்து ஐயப்பனை மணம்புரியும் விருப்பத்தைக் கூற, தான் பிரம்மச்சரிய நிஷ்டையில் இருப்பதால் தன்னால் மணமுடிக்க இயலாது என்றும், என்னுடைய யோக நிஷ்டைக் கலையும்போது நான் உன்னை ஏற்றுகொள்வேன் என்றும் கூறி, தனக்கு அருகே மாளிகைபுரத்து அம்மனாக இருந்து மக்களுக்கு அருள்புரியலாம் என்று அனுக்கிரகம் செய்தார். மேலும், எந்த ஆண்டு கன்னிச்சாமி (முதல்வருடம் மாலை அணிந்து சபரிமலை வருபவர்கள்) யாரும் என்னைத் தரிசிக்க வரவில்லையோ, அந்த வருடம் உன்னை மணந்துகொள்கிறேன் என்று அவர் அம்மனுக்கு வாக்குக் கொடுத்ததாக ஐதீகம். அவ்வாறு முதல் வருடம் கன்னிச்சாமியாக வருபவர்கள் கையில் சரம் (மரத்தினால் ஆன குச்சி) எடுத்து வந்து “சரம் குத்தி” என்கிற இடத்தில் குத்திவிட்டு மலைக் கோவிலுக்குச் செல்வர். மாளிகைபுரத்து அம்மன் சரங்குத்தி வந்து கன்னிச்சாமி யாரும் வராமல் இருக்கிறார்களா என்று பார்த்துப் போவதாக நம்பப்படுகிறது. இது கோவிலின் வரலாறு.

 

 

சபரிமலையின் பாரம்பரியம்

 

 

மேற்கண்ட வரலாற்றின் பின்னணியில், கோவில் கட்டப்பட்டதிலிருந்து, சபரிமலை யாத்திரைக்குப் பெண்களை அனுமதிக்காத ஒரு வழக்கம் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை மட்டும் அனுமதிப்பதில்லை. சிறுமிகளும், வயதான பெண்மணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.

 

 

 

Sabarimala 5

 

 

 

 

ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல், சபரிமலை யாத்திரைக்கு ஒரு மண்டலம், அதாவது ஆறு வாரங்கள், விரதம் இருக்க வேண்டியது சம்பிரதாயமாக இருப்பதால், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு 42 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்கிற காரணத்தாலும், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

 

 

பலவிதமான ஆகமங்கள், ஆச்சாரங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் ஹிந்து மதத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தில், இப்படி ஒரு விதி இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை. மேலும், இந்தக் கோவிலில் சிறுமிகளும், வயதான பெண்மணிகளும் அனுமதிக்கப்படுவதால், இதைப் பாலின அடிப்படையிலான பாகுபாடு என்றும் கூற முடியாது.

 

 

 

Sabarimala 6

 

 

 

இதில் மற்றொரு முக்கியமான விஷயம் கவனிக்கப்படவேண்டும். நாடெங்கும் உள்ள மற்ற ஐயப்பன் கோவில்களில் எல்லா வயதுப் பெண்மணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் அவருடைய வரலாற்றுடன் ஒன்றியிருப்பதாலும், அவர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக விரதம் பூண்டு யோக நிலையில் இருப்பதாலும், அங்கே இந்தக் கட்டுப்பாடு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது.

 

 

 

Sabarimala 7

 

 

 

 

மேலும் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் முறையாக விரதம் இருந்து வந்து வழிபடலாம். இப்படி ஜாதி, மத மற்றும் எந்தவிதமான அடிப்படையிலும் வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் அனுமதிக்கும் ஒரு புண்ணியத்தலத்தில் பாலின அடிப்படையில் வேறுபாடு பார்க்கப்படுவதாகச் சொல்வது விஷமிகளின் சதிப்பிரச்சாரம் அன்றி வேறில்லை. அப்படியே அவர்கள் சொல்வது போல், பாலின அடிப்படையில் வேண்டுமென்றே அனுமதி மறுக்கிறார்கள் என்றால் சிறுமிகளையும் வயதான பெண்மணிகளையும் ஏன் அனுமதிக்க வேண்டும்?

 

 

பாரம்பரிய வழிபாட்டு விதிகள்

 

 

இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆன்மீகத்தலங்கள், அதாவது வரலாற்றுப் பின்னணி கொண்ட அனைத்துத் தலங்களிலும், அந்த வரலாற்றை ஒட்டிய விதிகள் பின்பற்றப்படுவது பாரம்பரியமாக நடந்துவருவது தான். உதாரணத்திற்கு, கேரள மாநிலத்தில் ஆட்டுக்கல் என்கிற இடத்தில் இருக்கின்ற பகவதி அம்மன் கோவிலில் வருடாந்திரப் பொங்கல் விழாவில், ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

 

 

 

Sabarimala 8

 

 

 

இந்த அம்மன் சிலப்பதிகார நாயகியான கண்ணகி என்று நம்பப்படுகிறாள். மதுரையை எரித்தப் பிறகு, சேர நாட்டில் உள்ள இந்த ஆட்டுக்கல் என்கிற இடத்திற்குச் சென்று கோயில் கொண்டாள் என்பது வரலாறு. அந்தக் கோவிலின் கோபுரத்தில் கண்ணகியின் வாழ்க்கை வரலாறு செதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருவிழாவில் அவள் வரலாறு பாடப்படுகின்றது. இது இந்தக் கோவிலின் பாரம்பரியம். உடனே இந்தக் கோவிலின் வழக்கம் ஆண்களுக்கு எதிரானது; ஆண்களைப் பாலின அடிப்படையில் பாகுபடுத்தி அவமானப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியுமா? சபரிமலையில் பெண்கள் பாலின அடிப்படையில் வேறுபடுத்தி அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று பொங்கி எழுந்த அறிவுஜீவிகளும் முற்போக்காளர்களும் ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோவிலில் ஆண்கள் அனுமதிக்கப்படாததற்குப் பொங்கி எழவில்லையே, ஏன்?

 

 

சிதம்பரம் நடராஜர் கோவில் அதன் வரலாற்றுப்படி, தீக்ஷிதர்களுக்குச் சொந்தமானது. பல நூற்றாண்டுகளாக விளங்கிவரும் பாரம்பரியத்தின்படி, அங்கே தீக்ஷிதர்கள் மட்டுமே பூஜைகள் செய்ய உரிமை பெற்றவர்கள். அவர்களின் உரிமையை அரசியல் சாஸனத்தின் படி உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே போல ஆகம விதிகளின் படி கட்டப்பட்டுள்ள ஆலயங்களில் ஆகம விதிகளில் சொல்லியுள்ளபடி, சிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜை செய்வது பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்டது. அவர்களுடைய பாரம்பரிய உரிமையையும் அரசியல் சாஸனத்தின் படி உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். அதாவது அரசியல் சாஸனம் மதச்சுதந்திரத்தை உறுதி செய்கிறது என்பது திண்ணம்.

 

 

 

இது சம்பந்தமாக விவேகானந்தா கேந்திர நடத்தும் “யுவ பாரதி” என்கிற ஆங்கில மாதப் பத்திரிகையில் சுதர்ஷன் என்பவர் எழுதியுள்ள தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிக்காத ஒரு சமூகத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்; அவர்களுடைய மதப் பழக்க வழக்கங்களைத் தங்கள் இல்லத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நினைத்துக்கொள்ளுங்கள்; தங்களுடைய கணவர்களுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் சேவை செய்வதாகும் என அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப் பட்டுள்ளதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்; அந்தக் கடவுள் உருவமற்றவர் என்பதையும் நினைத்துக்கொள்ளுங்கள். ஆயினும் அந்தக் கடவுள் “அவன்” என்றே அழைக்கப்படுகிறாரே தவிர “அவள்” என்று அழைக்கப்படுவது இல்லை; இவ்வாறான கற்பனையிலிருந்து விடுபட்டு நிதர்சனத்துக்கு வாருங்கள். நிஜமாகவே அப்படி ஒரு சமூகம் இப்படியான ஒரு அச்சுறுத்தும் கனவை வாழ்ந்துகொண்டிருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளி மட்டுமல்ல, நமது சுதந்திரம் மிகுந்த ஜனநாயக இதியாவிலும் தான். அந்தச் சமூகத்திற்கு மதச் சுதந்திரத்தையும், அதற்கான அடிப்படை உரிமைகளையும் நமது அரசியல் சாஸனம் அளிக்கிறது.

 

 

 

 

அந்தச் சமூகம் எது என்பது நமக்கு சொல்லாமலேயே விளங்குகிறது, இல்லையா? சபரிமலைக் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று வழக்குத் தொடுத்திருக்கும் இந்திய இளைய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் நௌஷத் அகமது கான் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் தான். இவர் கவலைப்பட வேண்டியது தன் சமுகத்துப் பெண்களின் நிலையைப் பற்றித்தானே தவிர, இந்து சமூகத்துப் பெண்களைப்பற்றி அல்ல. இந்து சமூகத்தின்  ஆன்மீகப் பாரம்பரியத்தைக் கேள்வி கேட்கும் தகுதியோ, உரிமையோ இவருக்கு என்ன இருக்கிறது? மேலும், இவர் சார்ந்தச் சமூகத்தின் பெண் வர்க்கமே இப்பேர்பட்ட நிலையில் இருப்பதை அரசியல் சாஸனம் பாதுகாக்கின்றது எனும்போது, பரந்து விரிந்த இந்து சமூகத்தின் ஒரேயொரு கோவிலில், அதுவும் குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள பெண்களுக்கு மட்டும் அனுமதி வழங்காமல் இருக்கும் ஒரு பாரம்பரியத்தை அரசியல் சாஸனம் பாதுகாக்காமல் இருக்குமா என்ன? எனவே, “அரசியல் சாஸனம் வழங்கிய உரிமை இருந்தாலொழிய நீங்கள் சபரி மலை வழிபாட்டிற்குப் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறியுள்ளது விசித்திரமாக உள்ளது.           

 

 

 

Thiruchendur Temple

 

 

 

 

அதே போல ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு பாரம்பரிய வழக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. உதாரணமாக, குருவாயூர் கிருஷ்ணர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் போன்ற சில கோவில்களில் ஆண்கள் மேலாடையின்றித்தான் ஆண்டவனைத் தரிசனம் செய்ய முடியும். இது அந்தக் கோவில்களில் பின்பற்றப்படும் விதி. தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் அன்னிய மதத்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை; ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது அந்தக்கோவிலின் பாரம்பரியம்.

 

 

மஹாராஷ்டிராவில் உள்ள ஷிங்னாபூர் சனீஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேற்கூரை இல்லாத கோவில். ஒரு பெரிய கல் ஒன்று தான் சனீஸ்வரனாக வழிபடப்படுகின்றது. இது ஸ்வயம்புவாகத் தோன்றியதாக ஐதீகம். இந்த ஊரில் திருட்டு நடப்பதில்லை. எந்த வீட்டுக்கும் கதவுகள் கிடையாது. சனீஸ்வர பகவான் இந்த ஊரையும் ஊரின் செல்வத்தையும் பாதுகாப்பதாக நம்பப்படுகின்றது. இந்த பகவானைச்சுற்றி ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேடையில் இருந்துதான் பூஜாரி பூஜைகள் செய்வார். மற்றவர் அனுமதிக்கப்படுவதில்லை. மேடைக்கு வெளியே மற்றவருக்கு அனுமதி உண்டு. அங்கிருந்து சனீஸ்வரனை வழிபடலாம். பெண்களுக்கும் அதுவரை அனுமதி உண்டு.

 

 

 

Shingnapur Shani Temple

 

 

 

சில மாதங்களுக்கு முன்னால் யாரும் எதிர்பாராத சமயத்தில் ஒரு பெண் மேடையைத்தாண்டிச் சென்று சனீஸ்வரனை வழிபட்டார். உடனே அவர் அங்கிருந்து அகற்றப்பட்டார். அவரை யாரும் கண்டிக்கவிலை; தண்டிக்கவும் இல்லை. மன்னிக்கப்பட்டார். ஆனால் கோவில் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையினால் அந்தக் கோவிலின் பொறுப்பாளர் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. அதன் பிறகு அந்தச் சிலைக்கு சுத்தி செய்யப்பட்டது. ஆனால், சில முற்போக்குப் பெண்கள் அமைப்பினர் அந்தக் கோவிலில் பெண்களே அனுமதிகப்படுவதில்லை என்பதாக ஒரு தவறான தோற்றத்தை உருவாக்கிப் போராட்டங்கள் செய்தனர். இருப்பினும், அந்த ஊர் பெண்களும், சனாதன் சன்ஸ்தா, ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களும், கோவிலின் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்று சொல்லி, முற்போக்குப் பெண்களுக்கு எதிராகக் களம் இறங்கினர். இவ்வாறாக முற்போக்குகளின் சதி முறியடிக்கப்பட்டது.

 

 

 

இதே போலத்தான் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தபடி, சபரிமலைக்கும் இழுக்கு ஏற்படுத்த கன்ண்ட நடிகை ஜெயமாலாவின் உதவியுடன் சதி செய்தனர் சில ஹிந்து விரோத தீய சக்திகள். சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக, 2006ம் ஆண்டு கன்னட நடிகை ஜெயமாலா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்,  1987-ல் தன்னுடைய 27-வது வயதில் தான் சபரி மலைக்குச் சென்றதாகவும் அப்போது சன்னிதானத்தின் அருகே ஏற்பட்ட தள்ளு முள்ளுவில், தான் சுவாமி ஐயப்பன் விக்ரகத்தைத் தொட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறியிருந்தார். இது கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு அதிர்ச்சியையும், பொதுவில் பெரும்பரபரப்பையும் உண்டாக்கியது. இந்தச் சதிக்குத் துணைபோன உன்னி கிருஷ்ண பணிக்கர் என்னும் பிரபல ஜோதிடரும் தன் பங்கிற்கு ஒரு காரியம் செய்தார். அதாவது தான் தேவப் பிரச்சனம் பார்த்ததாகவும், அதில் ஒரு பெண் ஐயப்பன் விக்ரகத்தைத் தீண்டியதாகவும் தெரிய வந்தது என்று கூறினார். அவரின் தேவப் பிரச்சன அறிக்கைக்குப்பின்னர் தான் ஜெயமாலா அவ்வாறு கூறியிருந்தார்.  

 

 

 

Sabarimala 9

 

 

 

 

இது வடிகட்டிய பொய் என்பது சபரிமலைக்குச் சென்றிருக்கும், சென்றுகொண்டிருக்கும் அனைவருக்கும் தெரியும். சபரிமலை கோவில் சன்னிதானத்தில் பொதுமக்கள் தரிசனம் செய்யும் இடத்திலிருந்து கர்ப்பக்கிருகம் குறைந்த பட்சம் 10 அடிக்கு மேல் இருக்கும்; மேலும் இடையே ஒரு பெரிய உண்டியல் உண்டு; அதோடு மட்டுமல்லாமல் கர்ப்பக்கிருகத்தின் வாயில் சிறியது; அதில் ஒருவர் தன்னுடைய உடலை வளைத்துக் குனிந்துதான் உள்ளே செல்ல முடியும். மேலும் கர்ப்பக்கிருகத்தின் வாயிலுக்கு கீழிருந்து ஐந்தாறு படிகளும் உண்டு; அந்தப் படிகளில் ஏறி, உடலை வளைத்துக்குனிந்து உள்ளே சென்ற பிறகுதான் ஐயப்பனின் விக்ரகத்தைப் பூஜாரிகளான தந்த்ரிகளால் தொட்டு அபிஷேகம், அலங்காரம் முதலியவற்றைச் செய்ய முடியும். உண்மைகள் இவ்வாறு இருக்க, கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் நான் தள்ளப்பட்டு சுவாமி ஐயப்பனின் விக்ரகத்தைத் தொட்டேன் என்று நடிகை ஜெயமாலா சொன்னது பொய் என்பது மட்டுமல்லாமல், அயோக்கியத்தனம் என்றும் சொல்லலாம். அப்போதே மக்கள் நடுவே அதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன.

 

 

 

அதன் பிறகு கேரள அரசின் உத்தரவின் பேரில் கேரள போலிஸ் விசாரணை செய்து உன்னிகிருஷ்ண பணிக்கர், அவருடைய கர்நாடக உதவியாளர் ரகுபதி, நடிகை ஜெயமாலா ஆகியோர் மீது சபரிமலைப் பாரம்பரியத்திற்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியதாக 2010-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தப் பிரச்சனை பரபரப்பாகப் பொதுவில் பேசப்பட்டுகொண்டிருந்தபோதும், பெண்களை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்க வேண்டும் என்கிற கோஷமும் எழுப்பப்பட்டு பொதுவில் விவாதங்களும் நடத்தப்பட்டன. ஹிந்து ஆன்மீகப் பாரம்பரியத்துக்கு எதிராக, அதற்கு இழுக்கு தேடித்தரும் நோக்கத்துடன் அன்னிய சக்திகள் செய்துவரும் சதிவேலைகளில் ஒன்றாகத்தான் இந்தவகையான போராட்டங்கள் பாற்க்கப்படுகின்றன.      

 

   

கலாச்சாரப் பாதுகாப்பில் பெண்களின் பங்கு

 

 

பெரும்பான்மையான இந்துப் பெண்கள் எப்படி ஷிங்னாபூர் சனீஸ்வரன் கோவிலின் பாரம்பரியம் காப்பாற்றப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ, அதே போலத்தான் மிகப்பெரும்பான்மையான இந்துப் பெண்களும் சபரிமலையின் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஹிந்து கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை காப்பாற்றப்படவேண்டும் என்று வருகின்ற போது, அதில் பெண்களின் பங்கு மகத்தானது என்பது வரலாற்று ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், அன்றாட வாழ்வியலிலும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆகவே, உண்மையான பக்தியும், கலாச்சார நம்பிக்கையும், ஹிந்துப் பண்பாட்டில் ஈடுபாடும் கொண்ட பெண்கள் சபரிமலை,ஷிங்னாபூர் சனீஸ்வரன் போன்ற கோவில்களின் பாரம்பரியத்தை மதிக்கவே செய்வர்.

 

 

மேலும், சபரிமலை ஐயப்பன் வரலாற்றில் மாளிகைப்புரத்தம்மனுக்கு இருக்கும் சிறப்பு போல, பூரணை, புஷ்கலை என்கிற இரு பெண்டிருக்கும் அவரின் மனைவிகள் என்கிற சிறப்பு உள்ளது. ஆரியங்காவு என்கிற தலத்தில் புஷ்கலை சமேதராகக் காட்சி தருகிறார் சாஸ்தா. அதே போல அச்சங்கோவில் என்கிற தலத்தில் பூரணை, புஷ்கலை ஆகிய இருவருடனும் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

 

 

 

 

Sabarimala 10

 

 

 

சைவத்தலமாக இருந்தாலும் சரி, வைணவத்தலமாக இருந்தாலும் சரி, அத்தலங்களில் ஸ்வாமி சன்னிதி இருப்பது போல, தேவியர் சன்னிதிகளும் சிறப்புடன் இருக்கின்றன. துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்று பெண் தெய்வங்களுக்குச் சிறப்பிடம் தருவது ஹிந்து மதத்தின் ஆன்மீகப் பாரம்பரியம். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் உட்பட முப்பத்து முக்கொடி தெய்வங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தஸ்வரூபியாகக் காட்சி தருபவள் தேவி ராஜராஜேஸ்வரி ஆவாள்.

 

 

ஆகவே, ஹிந்து மதத்தில் பெண்களுக்குத் தரப்படும் சிறப்பான இடத்தை உணர்ந்தவர்கள் சபரிமலை போன்ற தலங்களில் பாரம்பரியத்தை மதித்தே நடந்துகொள்வர்.

 

 

கேரள அரசின் கடமை

 

 

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவது சம்பந்தமான வழக்கைத் தொடர்ந்த இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் பெயர் நௌஷத் அகமது கான் என்று பார்த்தோம். ஒரு முஸ்லிமாக இருக்கும் இவருக்கு, ஒரு ஹிந்துக்கோவிலின் பாரம்பரியத்தைக் கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? மேலும் இந்தச் சங்கத்தைப் போலவே வழக்கைத் தொடர்ந்துள்ள மற்ற ஐந்து பெண் வழக்குரைஞர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தானா? இந்த நாட்டில் உள்ள ஹிந்துப் பெண்களின் பிரதிநிதிகளா? அல்லது இந்த நாட்டில் உள்ள பெண்களின் பிரதினிதிகளாக இருக்கும் தகுதி படைத்தவர்களா? இந்த மாதிரியான ஒரு வழக்கைத் தொடர்வதற்கான வழக்குரிமை (Locus Standi) இவர்களுக்கு உள்ளதா? மேற்கண்ட கேள்விகளை உச்ச நீதிமன்றம் பரீசிலிக்க வேண்டும்.

 

 

இதனிடையே தினமலர் நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள அஜிதா என்கிற மூத்த பெண் வழக்கறிஞர், “ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு நம்பிக்கை உள்ளது. முன்னோர்கள் சில காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகளை கோவில்களில் உருவாக்கி உள்ளனர். அவற்றுக்கு மதிப்பு அளிக்கவேண்டும். பெண் உரிமை என்பது சபரிமலைக்குச் செல்வதில் இல்லை. அவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய வேறு தளங்கள் பல இருக்கின்றன" என்று கூறியுள்ளார். நாட்டில் உள்ள பெரும்பான்மையான பெண்கள் இதே நிலைப்பாடு உள்ளவர்கள் தாம்.

 

 

இந்நிலையில் தேவஸ்தானத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன், “இங்கு பெண்களை முழுமையாகத் தடை செய்யவில்லை. பத்துவயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் செல்ல அனுமதி உள்ளது. இது சபரிமலை கோவிலின் ஆச்சாரம். இந்த நடைமுறையைப் பாதுகாக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கும். தேவஸ்தானம் சார்பில் வழக்கறிஞர்களை நியமித்து உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Sabarimala 11

 

 

 

சபரிமலையின் மூத்த தந்திரிகளில் ஒருவரான கண்டரரு ராஜீவரரு, “இந்தச் சபரி மலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லத்தடை என்பது தேவபிரச்சனத்தில் முடிவான ஒன்று. இதை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

 

 

மேலும், கேரள அரசு தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதற்கு, அரசு பின்வருமாறு தன்னுடைய பதில் மனுவை சமர்ப்பித்துள்ளது:

 

 

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்குத் தடை என்பது மதரீதியான பிரச்சினை. பக்தர்களின் வழிபாட்டு உரிமையைக் காப்பாற்றுவது ஒரு அரசின் கடமையாகும். 2007 ஆம் ஆண்டு முந்தைய கம்யூனிஸ்ட் அரசு, பெண்களும் சபரிமலை கோவிலுக்குச் சென்று வழிபடலாம் என்று அளித்திருந்த மனுவையும் திரும்பப் பெறுகிறோம். சபரிமலை ஐய்யப்பன் கோவிலை நிர்வகிப்பது திருவிதாங்கூர் தேவஸ்தானம். இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இந்த தேவஸ்தானம் 1949ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மஹாராஜா இந்திய அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நிர்வகிக்கப்படுகிறது. இதன்படி கோவில் வழிபாட்டு முறைகளை நிர்ணயிக்கும் உரிமை தேவஸ்தானத்திற்கு உள்ளது. இது பல கோடி பக்தர்களின் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயமாக இருப்பதால் இந்த பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

கேரள அரசின் இந்த நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியதாகும். திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு ஆகியோரின் பதில் மனுக்களை ஏற்றுக்கொண்டு, சபரிமலையின் பல நூற்றாண்டுகாலப் பாரம்பரியம் காப்பாற்றப்படுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்பதே ஹிந்துக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.

 

 

சிதம்பரம் கோவில் வழக்கில் தீக்ஷிதர்களின் உரிமையையும், ஆகமக் கோவில்கள் பூஜைகளின் சிவாச்சாரியார்களின் உரிமையையும் அரசியல் சாஸனத்தின் துணைக்கொண்டு உறுதி செய்த உச்ச நீதிமன்றம், சபரிமலைக்கோவில் வழக்கிலும், தன்னாட்சி பெற்ற அமைப்பான தேவஸ்தானத்தின் உரிமையை நிலைநாட்டி உறுதி செய்ய வேண்டும். அதுவே நீதியும் நியாயமும் ஆகும்.

 

Read 4400 times
Rate this item
(3 votes)
Last modified on Wednesday, 16 March 2016 17:15

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment