×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்

Tuesday, 08 March 2016 17:23 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தமிழகத்தில் 2006ஆம் வருடத்திலிருந்து நிகழும் ஆண்டுவரை 21 மாவட்டங்களில் நிகழ்ந்துள்ள 300க்கும் அதிகமான பயங்கரவாத நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ள இந்து முன்னணி, அந்த ஆவணங்களை “தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்” என்கிற தலைப்பில், 3 DVDக்களில் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்பட வெளியீடு, கடந்த ஃபிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை தி.நகரில் நடந்தது. இந்து முன்னணி நிறுவனர் திரு.இராம கோபாலன் அவர்கள் வெளியிட, பா.ஜ.கவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர்.சுப்ரமணியன் ஸ்வாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். “காஷ்மீரில் வேர்கள்” (Roots in Kashmir) என்கிற அமைப்பின் நிறுவனரும் காஷ்மீர் பண்டிட் சமுதாயத் தலைவர்களுள் ஒருவருமான திரு.சுஷில் பண்டிட் அவர்களும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த ஆவணப்படத்தில், ஜிகாதி கொலைகள், ஜிகாதி தாக்குதல்கள் ஆகியவை மட்டுமல்லாமல், கோவில் இடிப்பு, திட்டமிட்டு இந்துப் பெண்களை ஏமாற்றிக் காதலித்துத் திருமணம் செய்யும் ‘லவ் ஜிகாத்’, பெண்களுக்கு எதிரான வன்முறை, இந்துக்களின் வியாபாரத்தை அழிப்பது, திருவிழாக்களைத் தடை செய்வது, பாரம்பரிய ஊர்வலப் பாதைகளுக்குத் தடை ஏற்படுத்துவது, பசுவதை, தேசியச் சின்னங்களை அவமதிப்பது, பாகிஸ்தான் ஆதரவுப் பிரச்சாரம், சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களை வேரூன்றச் செய்வது, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல், ஆயுதக் கடத்தல், கள்ள நோட்டுப் புழக்கம், வெளிநாட்டினரைக் குடியமர்த்தல், காவல் நிலையங்கள் மீதும் போலீசார் மீதும் தாக்குதல்கள் புரிதல் போன்ற பல சம்பவங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனலாம். “இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்” நம் நாட்டில் பல மாநிலங்களில் பல பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்த இயக்கமாகும். அவ்வியக்கம் நாடெங்கும் அடிப்படைவாத இஸ்லாமியத்தை பிரச்சாரம் செய்து வளர்த்து வந்தபோது, தமிழகத்தில் பழனி பாபா என்பவர் “ஜிகாத் கமிட்டி” என்ற இயக்கத்தையும், எஸ். எ. பாஷா என்பவர் “அல் உம்மா” என்ற இயக்கத்தையும் தொடங்கி, மாநிலத்தில் ஆங்காங்கே மதக்கலவரங்களை நிகழ்த்தி வந்தனர். அவ்வமைப்பினர் கொலைகளிலும், கொலைவெறித் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

1980களிலேயே ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் ராமகோபாலன் அவர்களும் தாக்கப்பட்டனர். தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவந்த தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் இவ்வியக்கங்களின் வளர்ச்சியையும், அவைகளின் அடிப்படைவாதச் செயல்களையும் கட்டுப்படுத்தத் தவறியதால், அவைகள் தொடர்ந்து சிறிய அளவிலான பல மதக்கலவரங்களில் ஈடுபட்டு வந்தன. திராவிட அரசுகளின் கையாலாகாத்தனத்தினால், துணிவு பெற்ற இவ்வமைப்புகள், ஒரு பெரிய பயங்கரவாதச் செயலாக 1993 நவம்பரில், சென்னை ஆர். எஸ். எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி, 11 ஸ்வயம் சேவகர்களின் உயிர்களைக் காவு வாங்கின. அதனைத் தொடர்ந்து தனிப்பட்ட நபர்களைக் கொலை செய்வதிலும் ஈடுபட ஆரம்பித்தன. கோவைத் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்திய பாஷாவும் அவன் ஆட்களும், கோவையில் “கோட்டைமேடு” என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள். இப்பகுதியை மையமாகக் கொண்டே தமிழகத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளர்ந்தது என்று சொல்லலாம்.

இதனிடையே, பழி தீர்க்கும் படலத்தில் பழனி பாபா கொலை செய்யப்பட்ட பிறகு, ஜிகாத் கமிட்டி சிதறுண்டு போனது. பின்னர் 1995-ல், பாஷாவுடன் ஏற்பட்ட மனமுறிவின் காரணமாக அல் உம்மாவிலிருந்து வெளிவந்த ஹைதர் அலி என்பவரால், “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” தொடங்கப்பட்டது. ஜிகாத் கமிட்டியில் பழனி பாபாவுடன் இயங்கியதாகச் சொல்லப்பட்ட ஹைதர் அலி த.மு.மு.கவின் பொதுச் செயலாளராக இப்போது இயங்கி வருகிறார். இவரைப் போலவே, இவருடன் சேர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த ஜவஹிருல்லாவும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர் தான்.

கோவை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கம், ‘மனித நீதிப் பாசறை’ என்கிற அவதாரத்தை எடுத்தது. இவ்வியக்கம் கோவை, தேனி போன்ற கேரள மாநிலத்துடன் எல்லைகளைப் பகிரும் மாவட்டங்களில் தீவிரமாக இயங்கி வந்ததால், கேரளத்தைச் சேர்ந்த நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரெண்ட் (NDF – National Development Front) என்கிற தீவிரவாதஅமைப்புடனும் தொடர்பு கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த இயக்கம் “அறிவகம்” என்கிற பெயரில் தமிழகத்தில் சில இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தி, ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவர்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி, அவர்களை ஜிகாதிகளாகப் பயன்படுத்தி வருவதாக ஜூலை 2006-ல் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழில் ஜெயா மேனன் என்கிற பத்திரிகையாளர் விவரமாக எழுதியிருந்தார்.

2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் “கர்னாடகா ஃபார் டிக்னிடி” (KFD – Karnataka For Dignity), “மனித நீதி பாசறை” (MNP – Manitha Nithi Paasarai), “நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரெண்ட்” (NDF – National Development Front) ஆகிய இயக்கங்களின் தலைவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடில் சந்தித்து, தங்கள் இயக்கங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல் படுவதற்காக, “பாபுலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா” (PFI – Popular Front of India) என்கிற புதிய அமைப்பை தோற்றுவிப்பதென முடிவு செய்தனர். புதிய இயக்கத்தின் தலைவர்களாக KFD-ஐ சேர்ந்த ஷெரீஃப், MNP-ஐ சேர்ந்த குலாம் மொஹம்மது, NDF-ஐ சேர்ந்த அப்துர் ரஹமான் பகாரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தங்கள் செயல்பாடுகளை தென்னிந்தியா அளவில் மட்டுமே நிறுத்திக் கொள்ள முடிவு செய்தனர். இந்தத் தலைவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் (SIMI) சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ், KFD, MNP, NDF ஆகிய மூன்று இயக்கங்களும் இணைந்து செயல்படுவதற்காக PFI இயக்கத்தை ஃபிப்ரவரி 16 அன்று தொடங்கியதாக ஃபிப்ரவரி 2007-ல் செய்தி வெளியிட்டது.

இவ்வாறாகத் தொடங்கிய இஸ்லாமிய பயங்கரவாதம், சௌதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளின் ஊக்குவிப்பால் பெருமளவில் வளர்ந்து, இன்று தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் தோன்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இது வரை தமிழகத்தில் 134 இந்துக்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கடுமையாகத் தாக்கப்பட்டும் உள்ளனர். 1993 ஆர்.எஸ்.எஸ்.அலுவலகக் குண்டு வெடிப்பு, 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு ஆகியவற்றுக்குப் பிறகு, பெரிய அளவில் குண்டு வெடிப்பு எதுவும் நிகழ்த்தப்படாவிட்டாலும், வேறு பல விதங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருமளவில் வேரூன்றி பயங்கரவாதம் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாத ஆவணங்களுடன் இந்து முன்னணி வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் விவரங்களை இனி வரும் நாட்களில் தொடர்ந்து ஆராய்வோம்.

இந்து முன்னணி இந்த ஆவணப்படங்களை தன்னுடைய “இந்து குரல்” என்கிற

இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கான இணைப்பு:

www.hindukural.com

Read 949 times
Rate this item
(4 votes)
Last modified on Tuesday, 08 March 2016 18:02

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment