×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

யாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீதரன் மறுப்பு!

Tuesday, 18 April 2017 07:13 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
திரு வேதா ஸ்ரீதரன் அவர்கள் தனது நண்பர் மூலமாக திரு. அ. கிருஷ்ணமாசார்யர் அவர்களுக்கு எழுதிய மறுப்பு கடிதம்..

ப்ரிய க்ருஷ்ணகுமார்,
வணக்கம்.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு....

உனது ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறேன். திரு. கிருஷ்ணமாசார்யரின் கருத்துகளுக்கு உரிய மறுப்புரையை ஒரு கடிதக் கட்டுரையாக எழுதி அனுப்பி இருக்கிறேன்.

உனது ஆசைப்படி, நீ இதை ஃபேஸ்புக்கில் வெளியிடலாம்.

***
முன்னோட்டம்
எனது ‘காரேய் கருணை இராமாநுஜா!’ நூலில் ‘யாதவப் பிரகாசர் ஓர் அத்வைதி அல்ல’ என்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது. அது தவறு என்று திரு. அ. கிருஷ்ணமாசார்யர் தனது பத்திரிகையில் (பாஞ்சஜன்யம் - மார்ச் 2017) எழுதியிருந்தார். அவர் தெரிவித்துள்ள தகவல்கள்குறித்த எனது கருத்துகள் இங்கே தரப்படுகின்றன.
***

திரு. கிருஷ்ணமாசார்யரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிப்பதில் எனக்குத் தயக்கம் ஏற்பட்டது. அதற்கான காரணங்களை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்:
எனது தயக்கத்துக்குக் காரணங்கள்
1. முறையற்ற செயல்
தற்காலத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம் என்ற நிலை காணப்படுகிறது.

இது முறையற்ற செயல் என்று நான் கருதுகிறேன். அதே தவறை நானும் செய்ய வேண்டாமே!

அதிலும், சமூக வலைத்தளங்களோ, கேட்கவே வேண்டாம். மீதி இடங்களில் காணப்படும் குறைந்தபட்சக் கூச்சநாச்சம் கூட இவற்றில் நிலவுவதில்லை. மேலும், இவற்றில் எதிர்க்கருத்துப் போடுவதற்கென்றே ஒரு பெரிய கூட்டம் அலைகிறது. பிராமணர்கள் அல்லது ஆஸ்திகவிஷயங்கள் பற்றி மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் கருத்துத் தெரிவிப்பது இந்தக் கும்பலின் முழு நேர வியாபாரம்.

இவர்கள் வாய்க்கு அவல் போடுவது என் வேலையல்ல.

2. எனது தகுதியின்மை
நான் ஒரு சாமானியன். பிறப்பால் மட்டுமே பிராமணன், வைணவன். மற்றபடி நான் பிராமணத்தன்மையோ வைணவ குணங்களோ சிறிதும் இல்லாதவன். சொல்லிக்கொள்ளும் அளவு அறிவோ, படிப்போ இல்லாதவன்.

3. திரு. கிருஷ்ணமாசார்யர் மீது எனக்கு மரியாதை உண்டு
எனக்குக் கிருஷ்ணமாசார்யர் பற்றி எதுவும் தெரியாது. இருப்பினும், அவர் தொகுத்துள்ள கோயிலொழுகு நூல்களைப் பார்த்திருக்கிறேன். ஓரளவு படித்தும் இருக்கிறேன். என்னைப் போன்ற ஒரு பதிப்பாளனின் பார்வையில், நிச்சயமாக, அது ஒரு பகீரதப் பிரயத்தனம். மேலும், உளறல் திலகம் அக்னிஹோத்திரம் ராமாநுஜாசாரி குறித்துக் கிருஷ்ணமாசார்யர் முன்வைத்த கருத்துகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. வேதத்தைப் பற்றியும் யாகங்களைப் பற்றியும் மிகக் கேவலமாக - அதுவும், ஒரு நாலாந்தரப் பத்திரிகையில் - எழுதிவந்த அந்தஐயங்கார் ஸ்வாமியைப் பற்றி, திரு கிருஷ்ணமாசார்யர் தவிர வேறு எந்த ஐயங்காரும் வாய்திறந்து கண்டித்ததாகத் தெரியவில்லை.

இந்த இரண்டு காரணங்களால் எனக்குக் கிருஷ்ணமாசார்யர் மீது மரியாதை உண்டு.

4. எனக்குச் சம்பந்தம் இல்லாத வேலை
கிருஷ்ணமாசார்யரின் பத்திரிகையான பாஞ்சஜன்யம் ஏதோ ஒருசில வைணவப் பெரியவர்களுக்கானது.
எனது நூல்கள் உன்னைப் போன்ற, என்னைப் போன்ற சாமானிய மனிதர்களுக்கானவை.
இரண்டு வாசகர் வட்டங்களும் ஒன்றுடன் ஒன்று அதிக சம்பந்தம் இல்லாதவை.

***
இதுபோன்ற காரணங்களால் அவரது கருத்துக்கான மறுப்பு வெளியிட வேண்டிய தேவை இல்லை என்று நான் கருதினேன். அதேநேரத்தில் இந்த விஷயம் குறித்த எனது சிந்தனைகள் சமூக வலைத்தளம் மூலம் பல வாசகர்களைச் சென்றடைவது நல்லது என்று நீ வலியுறுத்தியதும்சரியானதே. எனவே, எனது கருத்துகளை இந்தக் கட்டுரையில் தருகிறேன்.
***

திரு. கிருஷ்ணமாசார்யர் முன்வைக்கும் கருத்து ஏற்புடையதே அல்ல
காரணம் 1:
‘பிழைகள் இல்லாமல் நூல் வெளியிடுவது என்பது மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது’ என்பது எனது இரண்டு மாமாங்க கால அனுபவ பாடம். எனவே, அச்சுப் பிழைகளையோ இதர தவறுகளையோ நான் குற்றமாகக் கருதுவது இல்லை. ஆனால், திரு. கிருஷ்ணமாசார்யரின் கட்டுரையில் உள்ள பிழைகள் இந்த வகையைச் சேர்ந்தவை அல்ல. அவற்றைப் பார்க்கும்போது எனக்கு யுனிவர்சிடி ஸ்டடி மெடீரியல்ஸ் நினைவுதான் வருகிறது. பிறரது நூலில் இருக்கும் தவறைச் சுட்டிக் காட்டுவது தனது முக்கியமான வேலை என்று நினைக்கும் ஒரு மனிதர், தனது எழுத்தில் காணப்படும் அபத்தமான பிழைகளைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா?

காரணம் 2:
எனது நூலைத் திரு. கிருஷ்ணமாசார்யர் பார்க்கவே இல்லை என்பது எனது அனுமானம். காரணம், எனது நூலில் இருப்பதாக அவர் குறிப்பிடும் வரிகளில் ‘திருப்புட்குழி’, ‘யாதவப் பிரகாச மதம்’ - ஆகிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டுமே எனது நூலில் இடம்பெறவில்லை. மேலும், எனது நூலின் தலைப்பு ‘காரேய் கருணை இராமாநுஜா!’ என்பது. இதில் உள்ள இராமாநுஜா என்ற ஸ்பெல்லிங்- க்கான காரணமும் நூலின் இம்ப்ரின்ட் பகுதியில் தரப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணமாசார்யர் எனது நூலின் பெயரைக் ‘காரேய் கருணை ராமாநுசர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றை வைத்துப் பார்க்கும்போது, யாரோ கூறிய தகவல் அடிப்படையில் எனது நூலைப் பற்றி அவர் எழுதி இருக்கிறார் என்றே அனுமானிக்க முடிகிறது. அப்படி இருந்திருந்தால், அவர் எனது நூலில் உள்ள விஷயம் என்னவென்றே தெரியாமல் அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்ட முனைந்திருக்கிறார் என்று பொருள். இது பொறுப்பற்ற செயல். அல்லது, அவர் எனது நூலை முழுமையாகப் படித்திருக்கலாம். அவ்வாறு படித்திருந்தால், ‘உடையவரைச் சரணடைந்து சன்னியாசம் ஏற்ற யாதவப் பிரகாசரை சன்னியாசப் பெயரில் குறிப்பிடாமல் பூர்வாசிரமப் பெயரில் குறிப்பிடுவதும், விசிஷ்டாத்வைத தத்துவத்தைஏற்றுக்கொண்ட அவரை அத்வைதி என்று குறிப்பிடுவதும், அவன் இவன் என்று பேசுவதும் எழுதுவதும் மாபெரும் பாகவத அபசாரம்’ என்பதை நான் சுட்டிக் காட்டி இருப்பதையும் அவர் படித்திருக்க வேண்டும். (இதற்குத் திருமங்கை ஆழ்வார் உதாரணமும் கொடுக்கப்பட்டுள்ளது.) இந்தப் பகுதியை அவர் படித்துவிட்டு, அதன் பிறகும் யாதவப் பிரகாசர் ஓர் அத்வைதி என்றும், அவரை மரியாதை இல்லாமல் அவன், இவன் என்றும் கீறல் விழுந்த பிளேட் பாணியில் எழுதி இருக்கிறார் என்றால், அவரது எழுத்தில் நேர்மை மிஸ்ஸிங் என்றே நினைக்கத்தோன்றுகிறது.

காரணம் 3:
‘வைஜயந்தி கோசம் நூலை எழுதிய யாதவப் பிரகாசரும் (ஸ்ரீராமாநுஜரின் குரு) யாதவப் பிரகாச சித்தாந்தத்தைப் பரப்பி வந்த யாதவப் பிரகாசரும் ஒருவரே’ என்ற அடிப்படையில் நான் எழுதியிருக்கிறேன். ‘அது தவறு. இருவரும் வேறு வேறு’ என்று சொல்கிறார்கிருஷ்ணமாசார்யர். யாதவப் பிரகாச சித்தாந்தத்தைப் பரப்பிய யாதவப் பிரகாசர், ராமாநுஜர் காலத்துக்கு முற்பட்டவர் என்றும், மணவாள மாமுனிகள் அதைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். அதற்கு மணவாள மாமுனிகளின் ஆர்த்தி ப்ரபந்த வரிகளைஆதாரமாகக் காட்டுகிறார். அந்த வரிகளில் யாதவப் பிரகாசரின் கருத்துகளை ஸ்ரீராமாநுஜர் நிராகரித்த விஷயம் மட்டுமே காணப்படுகிறது. ஸ்ரீராமாநுஜரின் காலமும் இவரது காலமும் வேறு வேறு என்பதை உணர்த்தும் எத்தகைய கருத்தும் அந்த வரிகளில் இல்லை. இல்லவேஇல்லை. எனவே, திரு. கிருஷ்ணமாசார்யர் காட்டும் ஆதாரம் பொருத்தமற்றது.

காரணம் 4:
தனது கட்டுரையின் இரண்டாம் பாதியில் அவர் பேதவாதம், அபேதவாதம், பேத-அபேதவாதம் ஆகிய கருத்துகளை விளக்கியுள்ளார். அது இந்த இடத்தில் தேவையே இல்லாத ஒன்று. என்னைப் பொறுத்தவரை, அது வெறுமனே பக்கத்தை நிரப்பும் வேலை.

காரணம் 5:
இவ்வாறு மூன்று தத்துவ விளக்கங்களையும் கூறிய பின்னர் திரு. கிருஷ்ணமாசார்யர் ‘....என்பதை திரு. வேதா ஸ்ரீதரன் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று சொல்லி நிறைவு செய்கிறார்.

என்மீது அவர் காட்டியுள்ள அக்கறைக்கு நன்றி என்பதற்கு மேல் சொல்வதற்கு வேறு விஷயம் எதுவும் இல்லை.

***
மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, திரு. கிருஷ்ணமாசார்யரின் கருத்துக்குப் பதில் சொல்லவே முடியாது என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், அவரது இரண்டு பக்கக் கட்டுரையில் எந்த விஷயமுமே உருப்படியானதாக இல்லை. அதேநேரத்தில், ‘எனதுநூலில் இருக்கும் பிழைகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவற்றைத் திருத்திக் கொள்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது. இதுவரை ‘காரேய் கருணை இராமாநுஜா!’நூலில் ஒருசில பிழைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மறு பதிப்பில் இவை திருத்தப்படும்’ என்பதையும்தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் எனக்கு எந்த விதமான ப்ரிஸ்டீஜ் இஷ்யூவும் கிடையாது. எனது நூல்களின் தரம் கூடுவதற்கு உதவி செய்பவர்களை நான் நன்றியுடன் நினைத்திருப்பேனே தவிர, ஃபேஸ்புக்கில் மறுப்புரை எழுத மாட்டேன். நிலைமை இவ்வாறு இருக்க, உனது வேண்டுகோளை ஏற்று இந்தக் கடிதக் கட்டுரையை எழுதுகிறேன், இதை ஃபேஸ்புக்கில் வெளியிடச் சம்மதிக்கிறேன். இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு:

காரணம் 1: யாதவப் பிரகாசர் விஷயத்தில் எனது தரப்பு நியாயம்
யாதவப் பிரகாசர் ஓர் அத்வைதி அல்ல என்பது எனது நூலில் நான் முன்வைத்திருக்கும் வாதம். இந்த விஷயத்தைப் பற்றி நான் எழுதியதற்கு ஒரு நீண்ட பின்னணி உண்டு. அதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.

ஸ்ரீராமாநுஜரின் குருவாகிய யாதவப் பிரகாசர் ஓர் அத்வைதி அல்ல என்ற கருத்தை பூஜ்ய ராஜாஜி அவர்கள், அந்தக் காலத்தில் கல்கியில் பணிபுரிந்துவந்த ஸ்ரீ ரா. கணபதி (அண்ணா) அவர்களிடம் தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக ராமகிருஷ்ணா மடத்து வெளியீடான ஒரு புத்தகத்தையும் அண்ணாவிடம் கொடுத்தார். அந்த நூல் இந்தியாவில் மலர்ந்த பல்றுவே சம்பிரதாயங்கள், ஆசார்ய பரம்பரைகள் ஆகியவற்றைப் பற்றியது.

தனது கடைசி காலத்தின்போது அண்ணா இந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார். மேலும் அவர், “ராமாநுஜரை ஓர் அத்வைதி கொலை செய்ய விரும்பினார் என்பது போன்ற கருத்து வைணவர்களால் முன்வைக்கப்படுகிறது. இது உண்மைக்குப் புறம்பான செய்தி. மேலும், இது அத்வைத சம்பிரதாயத்தைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. “வரும் 2016-17 இல் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஜயந்தி வருகிறது. அதை வைணவர்கள் பெரிய அளவில் கொண்டாட இருக்கிறார்கள். நிறைய வெளியீடுகள் வரும். நிறைய கூட்டங்கள் போடுவார்கள். அவை அனைத்திலும் யாதவப் பிரகாசர் என்னும் அத்வைதி ராமாநுஜரைக் கொல்ல முயன்றதாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்படும். இதைத் தடுப்பதற்கு நீ ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்” என்று என்னைக் கேட்டுக்கொண்டார். மேலும், எனக்குத் தெரிந்த சில பத்திரிகை உலக நண்பர்களிடமும் வைணவப் பெரிவர்களிடமும் நான் இந்தத்தகவலைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார்.

ஆனால், அண்ணா சித்தி அடையும்வரை நான் எதுவும் செய்யவில்லை. அவர் மறைந்த சில நாட்களுக்குப் பின்னர் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. ‘எனக்குத் தெரிந்த சில நபர்களைப் பார்த்துப் பேசுமாறு அண்ணா சொன்னார். அது கடினமான காரியம் அல்ல. ஆனாலும்,ஏதேதோ அல்ப காரணங்களால் நான் அதைப் புறக்கணித்து விட்டேன்’ என்ற மனசாட்சி உறுத்தல்தான் எனது மன உளைச்சலுக்கான காரணம்.

இதைத்தொடர்ந்து சில பத்திரிகை-நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்களுக்கு இந்த விஷயத்தில் என்ன செய்வது என்பது புரியவில்லை. அடுத்ததாக, ஒரு வைணவப் பெரியவரைப் பார்த்தேன். அவர், ‘யாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல என்பதற்கு ராமாநுஜரே சாட்சிதருகிறார். அவர் அத்வைதி என்று வைணவர்கள் பேசிவருவது தவறு’ என்று தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக அவர் ஸ்ரீபாஷ்யத்தில் உள்ள கருத்துகளைக் குறிப்பிட்டார்.

எனினும், மேற்கொண்டு யாரைப் பார்ப்பது, என்ன செய்வது என்பது புரியாமல் அப்படியே விட்டுவிட்டேன். இதற்குப் பல மாதங்களுக்குப் பின்னர் ‘காரேய் கருணை இராமாநுஜா!’ நூல் எழுதும் பாக்கியம் கிடைத்தது. அதில் யாதவப் பிரகாசரைப் பற்றி மிகவும் விரிவாகவே எழுதி இருந்தேன். இந்த நூல் முழுவதையும் இரண்டு வைணவப் பெரியவர்களிடம் வாசித்துக் காட்டினேன். இருவருமே யாதவப் பிரகாசர் குறித்து நான் எழுதி இருந்த பகுதியை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.
காரேய் கருணை இராமாநுஜா! நூலுக்கு ஒருசில வைஷ்ணவப் பெரியவர்கள் தரப்பில் இருந்து விமர்சனம் கிளம்பலாம் என்று நான் நினைத்தேன். (அதற்கான காரணங்களைச் சொன்னால் இந்தக் கடிதம் இன்னும் நீளும். எனவே, அவற்றைத் தவிர்க்கிறேன்.) அட்சதை போடுபவர்கள்என் தலையில் மட்டும் போடட்டும், எனக்கு உதவி செய்த பெரியவர்களை இந்த வம்பில் இழுத்துவிட வேண்டாம் என்று நினைத்தேன். எனவே, இந்த மூவர் பெயர்களையும் வெளியிட விரும்பவில்லை.

‘ராஜாஜி, அண்ணா, இம்மூன்று பெரியவர்கள் ஆகிய ஐவரது கருத்தும் தவறு’, ‘யாதவப் பிரகாச சித்தாந்தத்தை முன்மொழிந்த யாதவப் பிரகாசர் வேறு, ராமாநுஜரின் குருவாகிய யாதவப் பிரகாசர் வேறு’ என்பதே உண்மையாக இருந்தாலும், இந்த யாதவப் பிரகாசர் ராமாநுஜரைச்சரணடைந்து சன்னியாசம் மேற்கொண்டதை யாருமே மறுப்பதற்கில்லை. சன்னியாசி ஒருவரின் பூர்வாசிரமக் கொள்கையைப் பற்றிப் பேசுவதே தவறு. அதிலும், அவரது பூர்வாசிரமத்தைக் காரணம் காட்டி அவரை இழிவாகப் பேசுவது மாபெரும் தவறு. இது வைணவத்துக்குமட்டுமல்ல, இந்தியாவின் எந்த மரபுக்கும் ஏற்புடையதல்ல.

இந்தக் கருத்தை எவ்வளவு உரத்த குரலில் முடியுமோ, அவ்வளவு உரத்த குரலில் சொல்ல விரும்புகிறேன். காரணம், இது அண்ணா எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக நான் செய்யும் முயற்சி என நம்புகிறேன். அதனால்தான் இந்தக் கடிதக் கட்டுரையைஃபேஸ்புக்கில் வெளியிடலாம் என்று நான் முடிவு செய்தேன். கிருஷ்ணமாசார்யரையோ, இதர பெரியவர்களையோ விமர்சிப்பது எனது நோக்கம் அல்ல.

காரணம் 2: நாம் எத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்?

இரண்டாவதாக, எனது ‘அரங்கமா நகருளானே’ நூலைப் பற்றிய ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:
‘அரங்கமா நகருளானே’ நூலில் நான் அரங்கனின் அஞ்ஞாதவாசம் பற்றி விரிவாக எழுத விரும்பவில்லை. காரணம், ஸ்ரீரங்கம் என்றால் பதிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ‘திருவரங்கன் உலா’ புஸ்தகம்தான் நினைவுக்கு வரும். அந்த நூல் அவ்வளவு பிரபலமானது.ஆயிரக்கணக்கானோர் படித்திருக்கிறார்கள். அது அரங்கனின் அஞ்ஞாதவாசம் பற்றியது. எனவே, அந்த விஷயம் பற்றி அதிகம் பிரஸ்தாபிக்க வேண்டாமே என்று தோன்றியது. அதேநேரத்தில், பெருமாளின் வைரம் திருடுபோனதும், தற்போது அது மாஸ்கோவில் இருப்பதும் அதிகம் அறியப்படாத தகவல்கள். எனவே, அதைப் பற்றி மிகவும் விரிவாக எழுதி இருந்ததே. பெருமாளின் வைரம் குறித்து அரங்கமாநகருளானே நூலில் தரப்பட்டுள்ள பல்வேறு செய்திகளும் கருத்துகளும் இதுவரை இந்திய ஊடகங்களில் யாராலும் பேசப்படாதவை. பெருமாள் வைரம் பயணித்த பாதை, வைரத்தை விற்றவன் வாங்கிய சொத்துகள், வைரம் திருடப்பட்டது குறித்து 1883 ஆம் ஆண்டு ‘த நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வந்துள்ள செய்தி, ரெம்ளின் மியூசியத்தில் பெருமாள் வைரம் வைக்கப்பட்டிருக்கும் இடம், மியூசிய அதிகாரி கூறியுள்ள கருத்து முதலிய பல்வேறு தகவல்களையும் அரிய புகைப்படங்களையும் உள்ளடக்கிய அந்தக் கட்டுரை, கோஹினூர் வைரத்துக்கும் பெருமாள் வைரத்துக்கும் உள்ள ஒற்றுமைகுறித்த தகவல்களுடன் நிறைவு செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தகவல்கள் வைணவப் பெரியவர்களும்கூட இதுவரை அறிந்திராதவை. எனவே, வைரம் குறித்த கட்டுரைதான் வாசகர்களின் மனங்களில் கோலோச்சும் என்று நான் கருதினேன். ஆனால், யதார்த்தம் வேறு மாதிரி இருந்தது. எனது நூலைப் பற்றிக் கருத்துச் சொன்ன அனைவருமே பெருமாளின் அஞ்ஞாதவாசம் குறித்த தகவல்களைத்தான் முதலில் குறிப்பிட்டார்கள். அதிலும், தேவதாசி வெள்ளையம்மாளைப் போற்றாதவர்கள் ஒருவருமே இல்லை. புத்தக விமர்னசங்களும் இந்தக் கட்டுரையைத்தான் முதன்மைப்படுத்தி இருந்தன.

இந்தப் பின்னூட்டங்கள் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தன.
தற்காலத்தில் நமது தேசத்தில் தனிமனித வாழ்க்கையும் சமுதாய வாழ்க்கையும் எவ்வளவோ நலிவடைந்துவிட்டன. ஆனால், இன்றைய காலத்திலும்கூட பெருமாளுக்காகத் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், பிறருக்காகத் தங்கள் உயிரைத் துறந்தவர்கள் முதலியோர்தான் பெரிதும் போற்றப்படுகிறார்கள் என்பதை இந்தப் பின்னூட்டங்கள் எனக்குப் புரியவைத்தன. 

இந்தப் பின்னூட்டங்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். ஒரு நடுவயதுப் பெண்மணி, “ஸ்ரீதர் சார், கீழ் ஜாதிப் பெண்களை மேல் ஜாதியினர் பயன்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடு தான் தேவதாசி முறை என்று நான் இதுவரை நினைத்து வந்தேன்.உண்மையில் தேவதாசி முறை என்பது என்ன, அந்தப் பெண்கள் எவ்வளவு தூய்மையான தவ வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது” என்று குறிப்பிட்டார்.

ஒரு மகத்தான பாரம்பரியம் நம் மக்களின் மனங்களில் எவ்வளவு இழிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது புரிகிறதா?

இந்த இடத்தில் ஆண்டாள் பற்றிய அவதூறுப் பிரசாரங்களைக் கொஞ்சம் நினைவூட்ட விரும்புகிறேன். ஆண்டாளைப் பற்றி மிகக் கேவலமாக ஒரு பொறுக்கி எழுதினான். அதைச் சில திருடர்கள் (இத்தகைய பேர்வழிகளை, கமிஷன் பெறுபவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள் என்று டீசன்டாகக் குறிப்பிடுவதும் உண்டு.) பல்கலைக்கழகப் பாடநூலாக வைக்க முயற்சி செய்தார்கள். இதை நாம் அனைவரும் அறிவோம்.

அந்தச் சமயத்தில் எனது மனம் எவ்வளவு துடித்தது என்பது உனக்குத் தெரியும்; உனது வேதனையின் ஆழம் எனக்கும் புரிந்தது. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கே இவ்வளவு வேதனை ஏற்பட்டது எனில், நம் நாட்டுப் பெரியவர்கள் - குறிப்பாக, தாய்மார்கள், வைணவப்பெரியவர்கள் முதலியோர் - எவ்வளவு தூரம் மனம் புழுங்கி இருப்பார்கள், அனலில் இட்ட புழுவாகத் துடித்திருப்பார்கள் என்பதற்கு விளக்கம் தேவையில்லை.

வேதனை ஒருபுறம் இருக்கட்டும். நீயோ நானோ அல்லது நம் சமுதாயப் பெரியவர்களோ அப்போது என்ன செய்ய முடிந்தது - நெட்டை மரங்களாக நிற்பதைத் தவிர?
ஆனால் இந்த விவகாரத்தின்போது, ‘வில்லினை எடடா கையில் வில்லினை எடடா அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா’ என்று சில மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள். அதனால்தான் அந்தப் பாடப்பகுதி நீக்கப்பட்டது. இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்?அரங்கராஜன் பாதங்களின் அடியில் நித்திய வாசம் செய்யும் ஆண்டாளை ‘சோழராஜன் அந்தப்புரத்தில் வசித்தவள்’ என்றும், அரங்கனது மாமனார் உறவு வகித்த பெரியாழ்வாரை ‘சோழராஜாவுக்கு மாமா வேலை பார்த்தவர்’ என்றும் நமது வருங்காலத் தலைமுறை நம்பத்தலைப்பட்டிருக்கும்.

இந்தப் புத்தகத்தை எழுதியவன், அவனைப் போன்ற அறிவு‘சீவி’கள், இந்தக் கும்பல்களுக்கு ரொட்டித் துண்டு வீசும் ‘டமில்க் காவலர்கள்’ ஆகியோரின் நோக்கமும் அதுதானே!

(மேலே உள்ள இரண்டு பத்திகளும் படிப்பதற்கு மிகவும் அருவருப்பாக உள்ளன என்பதை நான் நன்கு அறிவேன். எனினும், நடக்க இருந்தது எவ்வளவு பெரிய இழிசெயல் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, எனது தயக்கத்தை ஓவர்கம் பண்ணி இதை எழுதி இருக்கிறேன். மன்னிக்கவும்.)
இவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தைத் தடுத்து நிறுத்திய அந்த இளைஞர்கள் என்ன ஜாதியோ, என்ன சம்பிரதாயமோ நமக்குத் தெரியாது. எனினும், அந்த இளைஞர்களுக்கும் நமக்கும் ஒரு பொதுமை இருக்கிறது. அதுதான் இந்த நாட்டின் மகோன்னதமான பாரம்பரியம். இந்தப்பாரம்பரியத்தைத் தேவர் திருமகனார் ‘தேசியம், தெய்விகம்’ என்ற இரண்டே வார்த்தைகளில் அடக்கி விடுகிறார். ஆண்டாளும் மீராவும் அந்தப் பாரம்பரியத்தின் தனிப்பெரும் சின்னங்களாகத் திகழ்பவர்கள்.

இத்தகைய மகத்தான பாரம்பரியத்தின் பெரும் பகுதி ஏற்கெனவே மறைந்து விட்டது. எஞ்சி நிற்கும் அம்சங்களையும் சிறுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. இந்நிலையில் நாமனைவரும், நமக்குள்ளே இருக்கும் அல்ப வேறுபாடுகளைக் களைந்து, அந்த இளைஞர்களைப் போலவே, ‘நாங்கள் இந்த தேசத்தின் ஒப்புயர்வற்ற பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர்கள்’ என்ற உணர்வுடன் செயல்பட்டால், எஞ்சி நிற்கும் விஷயங்களையாவது நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும்.

இத்தகைய சூழலில் ‘யாதவப் பிரகாசர் என்ன சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்? சங்கரர் விபூதி இட்டுக்கொண்டிருந்தாரா அல்லது கோபி சந்தனம் தரித்திருந்தாரா? அந்தக் கால அத்வைதிகள் ருத்திராட்சம் போட்டிருந்தார்களா, இல்லையா?’ முதலான ஆராய்ச்சிகள் எதற்காக? இவற்றால் தனிமனிதர்களுக்கோ சமுதாயத்துக்கோ என்ன நன்மை?

பேதத்தை வளர்க்கும் இதுபோன்ற அபஸ்வரங்கள் தேவையில்லை என்பது இந்த எளியோனின் அபிப்பிராயம்.

ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஜயந்தியை ஒட்டி தற்போது பெருமளவு ஆன்மிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. வைணவர்கள் மட்டுமல்ல, பல்வேறு சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களும் உடையவர், இதர ஆசார்யர்கள், ஆழ்வார்கள் முதலியோரின் பெருமைகளைப் பற்றிப்புரிந்துகொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது
இந்த நிலை தொடரட்டுமே!

ச்ரேயோ பூயாத் ஸகல ஜனானாம்!!

அன்பன்,
வேதா டி. ஸ்ரீதரன்

Read 1003 times
Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 18 April 2017 07:50

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment