×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஆண்டாள் அருளிய ஹிந்து ஒற்றுமை நிலைக்கவேண்டும் Featured

Thursday, 08 February 2018 14:10 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தமிழ்நாட்டில் வெகுநாட்களாகத் திராவிட, கம்யூனிஸ, அன்னிய மத சக்திகள் ஹிந்துக்களுக்கு எதிராக ஹிந்துப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் குலைக்கும் விதமாகப் பலவிதமான முறையில் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. அவைகளைக் கண்டும் காணாமல் நாம் சென்று கொண்டு இருப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது.

kanchi vckசமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காஞ்சிபுரம் இரயில் நிலையத்தில் வரையபட்டிருந்த ஹிந்துக் கடவுளர் உருவங்களையும், ஆச்சார்யார்கள் படங்களையும் கருப்புச்சாயம் கொண்டு அழிக்க முற்பட்டனர். திருமாவளவன் கோயில்களை இடித்து விட்டுப் புத்த விஹாரங்கள் கட்டவேண்டும் என்று பேசியுள்ளார். லட்சக்கணக்கானோர் நம்பிக்கையுடன் வணங்கும் தெய்வமான ஏழுமலையானை அவமதித்து பேசியுள்ளார் தி.மு.கட்சியின் கனிமொழி. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் என்கிற செபஸ்டியன் சைமன் அவர் பங்குக்கு ஹிந்து கடவுளர்களை இழித்துப் பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் வைரமுத்து ஆண்டாளை அவதூறாகப் பேசி அது ‘தினமணி’ பத்திரிகையில் வெளிவந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்தும் அதன்பின் நடந்த ஹிந்து எழுச்சி குறித்தும் இக்கட்டுரையில் நாம் விரிவாகப் பார்ப்போம்.

ராம்கோ நிறுவனத்தார் ஆண்டாளின் புகழ் உலகெங்கும் பரவவேண்டும் என்பதற்காக தினமணி பத்திரிக்கையுடன் சேர்ந்து, ஆண்டாள் அரங்கனைப் போற்றிக் கொண்டாடிய மார்கழி மாதத்தில், ராஜபாளையத்தில் 7.1.2018 மாலை ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந்நிகழ்விற்கு வைரமுத்துவை அழைத்திருந்தார்கள். அங்கு வைரமுத்து “தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் ஆண்டாளைப் பற்றி உரையாற்றினார். அந்தக் கட்டுரை மறுநாள் 8.1.2018 அன்று தினமணியில் வெளியானது. அந்தக் கட்டுரை தான் சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கட்டுரையில் வைரமுத்து எழுதியிருந்த மிகவும் கண்டனத்துகுரிய சில வரிகள் பின்வருமாறு:

//பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி?

கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?

ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள். //

.ஆண்டாள், தன்னுடைய நாச்சியார் மொழி மற்றும் திருப்பாவையின் கடைசிப் பாடலிலும் தன்னைப் பெரியாழ்வாரின் மகள் என்றே குறிப்பிடுகிறாள். அதே போல் பெரியாழ்வாரும் தன் மகளை எப்படி வளர்த்தார் என்பதைப் பிரபந்தத்தில் கூறி இருக்கிறார்.

திருப்பாவையில் 30வது பாசுரத்தில் ஆண்டாள்,

”பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன” என்று தெளிவாக விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வாரின் மகள் என்பதைக் கூறுகிறாள்.

நாச்சியார் திருமொழியில் ஒவ்வொரு பத்து பாசுரங்களின் முடிவிலும் வரும் பத்தாவது பாசுரத்தில் தன்னை விஷ்ணு சித்தனின் மகள், பட்டர்பிரான் மகள் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறாள். அதே போல் விஷ்ணு சித்தரும்,

“ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்”

என்று தன் மகளை மகாலட்சுமி போல் வளர்த்தேன் திருமாலிடம் கொடுத்து விட்டேன் என்று தன் மகளின் பிரிவைப் பிரபந்தத்தில் கூறுகிறார்.

உண்மை இப்படி இருக்க, அவமதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆண்டாளைக் குலமறியாதவள் என்று வைரமுத்து எழுதி இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகிறது. அதே போல், அக்காலம் பெண்ணடிமைக் காலம் என்கிறார். அப்படி இருந்திருந்தால், திருப்பாவை நோன்பை ஆண்டாள் மட்டும் தனியாக அல்லவா மேற்கொண்டிருக்க வேண்டும்? ஆனால் அவள் அவ்வூரில் இருக்கும் அனைத்துப் பெண்களையும் அழைத்துக்கொண்டு அல்லவா செல்கிறாள்?. அப்படிப் பெண்ணடிமைக் காலமாக இருந்தால் எப்படி எல்லாப் பெண்களும் சுதந்திரமாக வெளிவந்திருப்பார்கள்? மேலும், பெரியாழ்வார் தன் பெண்ணைப் பார் போற்ற மகாலக்ஷ்மி போல் வளர்த்தேன் என்கிறார். ஒரு பெண்ணடிமைச் சமுதாயம் எப்படிப் பெண்ணை போற்றி இருக்கும்? இதிலிருந்தே வேண்டுமென்றே ஒரு கட்டுக்கதையைப் புனைந்திருக்கிறார் வைரமுத்து என்பதை அறிய முடிகிறது.

இத்தோடு அவர் முடிக்கவில்லை.

மேலும்,

“அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாள் குறித்து, ‘Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple’ என்று இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

dc Cover 0lnsu71pu5aig6clj5b3okt7b5 20180116061937.Medi

 

 

இவையெல்லாம் பக்தர்களையும், ஹிந்து மதத் தலைவர்களையும் மிகப்பெரிய அதிர்ச்சிகுள்ளாக்கியது. இந்தக் கட்டுரை வெளியானவுடன், சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஹிந்துக்கள் கொதித்தெழுந்தனர். ஆன்மிகப் பெரியோர்கள், பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, வைஷ்ணவ பெரியோர்கள், சைவமட ஆதீனங்கள், நாட்டுப்புறப் பாடல்கள் கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் அம்மையார் மற்றும் அனைத்துத்தரப்பு ஹிந்து மக்களும் தங்கள் கண்டனத்தை வைரமுத்துவிற்கும், தினமணி பத்திரிக்கை ஆசிரியர் வைத்தியநாதனுக்கும் கடுமையாக தெரிவித்தனர்.

 

 

 

அதன் எதிரொலியாக, வைரமுத்து 11.1.2018 அன்று யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டார். அதே ரீதியில் தினமணியும் தன் வருத்ததைத் தெரிவித்து தினமணி இனையதளத்தில் வெளியாகிருந்த வைரமுத்துவின் கட்டுரையை நீக்கியது. ஆனால், வேண்டுமென்றே ஒரு களங்கத்தைக் கற்பித்துவிட்டு மன்னிப்புக் கோராமல் வருத்ததை மட்டும் தெரிவித்த வைரமுத்துவிற்கும் வைத்தியநாதனிற்கும் எதிராகப் போராட்டங்கள் வலுத்தன. இருவரும் ஆண்டாளின் சன்னதியில் மன்னிப்புக் கோரும் வரை போராட்டம் தொடரும் என்று அனைத்துத் தரப்பு ஹிந்து மக்களும் போராட்டத்தில் இணைந்தனர். 

இந்நிலையில், அமெரிக்கா இண்டியானா பல்கலைகழகத்திலிருந்து வெளியான புத்தகத்திலிருந்த குறிப்பு என்று குறிப்பிட்டு வைரமுத்து கூறியிருந்ததே ஒரு மோசடி வேலை என்பது ஆதாரப்பூர்வமாக வெளியானது. அப்படி ஒரு புத்தகத்தை இண்டியானா பல்கலைகழகம் வெளியிடவேயில்லை என்ற உண்மை வெளியாகியது.. இந்தப் புத்தகம் சிம்லாவில் உள்ள Indian Institute of Advanced Study என்கிற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புத்தகம். இந்தப் புத்தகத்தை சுபாஷ் சந்திர மாலிக் என்பவர் எழுதவில்லை அவர் தொகுப்பாசிரியர் மட்டுமே. இந்தப் புத்தகம் பல கட்டுரைகளின் தொகுப்பு. இவர் குறிப்பிட்டிருக்கும் வரிகள், Bhakthi Movement in South India, என்ற தலைப்பில் MGS நாராயணன் மற்றும் வேலு தத் கேசவன் என்பவர்களால் எழுதப்பட்ட கட்டுரை. அந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple. என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதாவது ஆண்டாள் ஒரு தேவதாசி அவள் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து மறைந்தாள் என்று பொருள்படும்படி எழுதி இருக்கிறார்கள். இந்த வரிகளுக்கு அவர்கள் வேறு ஒரு புத்தகத்திலிருந்து குறிப்பாக எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அது, T.A. கோபிநாத் ராவ் என்பவரின் The History of Sri Vaishnavas, 1923, Madras என்ற கட்டுரையின் 5ஆம் பக்கதிலிருந்து என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அந்தக் கட்டுரையின் 5ஆம் பக்கத்தில் குறிப்பிட்டபட்டுள்ள வரிகள் பின்வருமாறு:

//’when she reached marriageable age, she refused to marry anyone except the God Ranganatha of the Srirangam Temple. The God appear to a alvar in a dream to declare before him his acceptance of girl in marriage and ordered her to be brought to his residence at Srirangam. Periyalvar took her there with great éclat and left her in her Lord’s house and returned to his quiet residence at Srivilliputhur. //

அதாவது திருமண வயது வந்தவுடன் ஆண்டாள் திருமணம் செய்தால் ஸ்ரீரங்கம் பெருமாளைத் தவிர வேற யாரையும் மணக்கமாட்டேன் என்று கூறிவிட்டாள். பெருமாளும் பெரியாழ்வார் கனவில் தோன்றி ஆண்டாளை மணக்கச் சம்மதித்துத் தான் வாசம் செய்யும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வந்து விடச்சொல்லி உத்தரவிடுகிறார். அதன்படி பெரியாழ்வாரும் ஆண்டாளைப் பெருமாளிடம் சேர்பித்துவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பிச் செல்கிறார்.

இவைகள் தான் அந்த புத்தகத்தில் இருக்கும் வரிகள். MGS நாராயணன் எழுதிய வரிகள் அதில் இல்லை. இந்த உண்மையை மிகவும் சிரமப்பட்டு வெளிக்கொணர்ந்தவர் ‘குமுதம் ஜோதிடம்’ பத்திரிகையில் ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு. ஏ.எம்.இராஜகோபால் அவர்களின் கடைசி மகனும், சரித்திர ஆராய்ச்சி நிபுணருமான டாக்டர். ஏ.எம்.ஆர் கண்ணன், பி.ஹெச்.டி. இவர் இதை WhatsApp மூலம் வெளிபடுத்த இந்த உண்மை அனைவருக்கும் தெரியவந்தது.

இந்த உண்மை வெளியானவுடன் தந்தி டிவி, MGS நாராயணனைத் தொடர்பு கொண்டு பேட்டி கண்டபோது அவர், தான் எந்த ஆய்வும் செய்யவில்லையென்றும் ஒரு அனுமானத்தின் பேரிலேயே எழுதியதாகவும் ஒத்துக்கொண்டார்.

இவைகளிலிருந்து வைரமுத்து பொய்யான ஒரு கருத்தை வேண்டுமென்றே சொல்லி இருக்கிறார் என்பது புலனாகிறது.

இந்த உண்மை வெளியான பின் போராட்டங்கள் மேலும் வலுவடைந்தன.

10.1.2018 அன்று போராட்டம் தொடங்கிய உடன், வருந்துகிறேன் என்றார் வைரமுத்து. அறிந்தே ஒரு தவறைச் செய்து விட்டு, லட்சகணக்கான பக்தர்களின் மனதைப் புண்படுத்திய, ஆண்டாளையும் அவள் தமிழையும் கொச்சைபடுத்திய, வைரமுத்துவும் வைத்தியநாதனும் மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டத்தைக் கைவிடுவதில்லை என்று அனைத்துதரப்பு ஹிந்துக்களும், பெரியோர்களும் அறிவித்தனர். அதன்படி, இந்தப் போரட்டமானது தமிழகமெங்கும் பரவியது. சென்னையில் பல இடங்களிலும், கோவை, சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, புதுச்சேரி,காரைக்கால், கடலூர், திருநெல்வேலி, சுசீந்தரம், ராஜபாளையம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ராமநாதபுரம், மதுரை, மயிலாடுதுறை, கும்பகோணம், புவனகிரி, கன்னியாகுமரி போன்ற பல நகரங்களிலும் கண்டன ஆர்பாட்டம், ஊர்வலங்கள் முதலியவை அறவழியில் நடத்தபட்டன.

DTlGe6cVwAAoo6Hதமிழகம் மட்டுமல்லாமல், பெங்களூர், மும்பை மற்றும் டெல்லியிலும் ஆர்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடந்துள்ளன. ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், UAE போன்ற வெளிநாடுகளில் உள்ள ஹிந்து பக்தர்களும் கண்டனக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த எல்லா போராட்டங்களுக்கும் முத்தாய்ப்பாக 15.1.2018 அன்று சென்னை சேப்பாக்கத்தில் ஹிந்து இயக்கங்கள் மற்றும் வைஷ்ணவ மற்றும் சைவப் பெரியோர்கள், ஆன்மிகவாதிகள், பிரபலங்கள், ஹிந்து இயக்கங்களின் தலைவர்கள் ஆகியோர் தலைமையில் 5000க்கும் மேற்பட்ட அனைத்து தரப்பு ஹிந்துக்களும் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

அன்றைய போராட்டத்தில் 17.1.2018க்குள் வைரமுத்துவும், வைத்தியநாதனும் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஜீயர் மடத்தின் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜுயர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் 17.1.2018 அன்று இருவருமே மன்னிப்பு கேட்காத நிலையில் ஜீயர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஆனால், அனைத்து பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜீயர் தன் உண்ணாவிரததை அடுத்த நாள் கைவிட்டார். ஆனால் போராட்டம் தொடரும் என்றும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கெடு விதித்துத் தன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தார்.

 

 

 

 

இதற்கிடையில், சிந்தாதரிப்பேட்டை, கொளத்தூர், மதுரை போன்ற இடங்களில் வைரமுத்து மீதும், வைத்தியநாதன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிந்துக்களின் எழுச்சியும் திரட்சியும் சகியாத திராவிட இனவெறிக் கும்பல், மற்றும் கம்யூனிச, தமிழ் பிரிவினைவாத கும்பல்கள் இந்தப் போராட்டத்தைத் தடுக்க பிராம்மணர் மற்றும் பிராம்மணர் அல்லாதவர் என்று பிரிவினை செய்யவும் மற்றும் வைஷ்ணவர்கள் சைவர்கள் இடையே பிரிவினைகளை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்தன.

பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுத்ததன் விளைவாகத் தினமணி பத்திரிக்கை ஆசிரியர் வைத்தியநாதன் 23.1.2018 அன்று காலை ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஜீயர் மடத்தின் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயரை சந்தித்து மன்னிப்பு கேட்கச் சென்றார். ஆனால் அவர் ஆண்டாளின் சன்னதியில் ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்கும்படிச் சொல்லவே அவரும் அவ்வாறே மன்னிப்பு கேட்டார்.

ஆனால், வைரமுத்துவோ சிறிதும் தன்நிலையில் இருந்து மாறாமல், இவை அத்தனைக்குப் பிறகும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் வைரமுத்து, தான் எதுவுமே தவறு செய்யாதது போலும் அவர் மேல் வீணாகப் பழி சுமத்துகிறார்கள் என்றும் அதனால் தான் மிகவும் மனம் நொந்து இருப்பதாகவும் இம்மாதிரியான மக்களின் இடத்தில் எப்படித் தன்னால் தமிழை வளர்க்க முடியும் என்றும் பேசி இருக்கிறார். அவர் ஆண்டாளின் புகழ்பாடவே இந்தக் கட்டுரையை எழுதியதாகவும் ஆண்டாளைத் தன் தாய் அங்கமுத்து போலவே பார்ப்பதாகவும், ஆண்டாளைப் பற்றி எழுதும் முன் மூன்று மாதங்கள் ஆய்வு செய்ததாகவும், ஆண்டாளைப் போலவே தமிழ் உலகுக்குத் தொண்டாற்றியுள்ள அனைத்துப் படைப்பாளிகளையும் இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்த ஆசைப்பட்டுக் கட்டுரைகள் எழுதி வருவதாகவும் பேசி இருக்கிறார்.

இப்படி எல்லாம் கூறிவிட்டு, தான் தேவதாசி என்ற பதத்தை உயர்வாகத் தான் குறிப்பிட்டதாகவும், ஆனால் வேண்டுமென்றே யாரோ சிலர் மதத்திற்காகவோ, மதம் கலந்த அரசியலுக்காகவோ, தான் உயர்ந்த அர்த்தத்தில் கூறிய தேவதாசி என்ற பதத்தைத் தாசி என்றாக்கி பின் அதையே வேசி என்று திரித்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார். தன் மேல் தவறு இல்லாது இருந்த போதும், தான் மிகவும் பெருந்தன்மையுடன் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இவருடைய மேற்கண்ட பேச்சு எவ்வளவு அகம்பாவமானது என்பதைப் பார்ப்போம்.

முதலில் இண்டியானா பல்கலைக்கழக புத்தகக் குறிப்பு என்றவர் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டவுடன், “நான் நாராயணன் என்பவரின் கட்டுரையை தான் குறிப்பிட்டேன்” என்று இந்த வீடியோவில் கூறியிருக்கிறார். அப்படியானால் மூன்று மாத ஆராய்ச்சியில் இவருக்கு இந்த கட்டுரையை யார் எழுதியது என்று தெரியவில்லையா? இது தான் ஆராய்ச்சியின் லட்சணமா? இதிலிருந்து இவர் கூறிவந்த ஆராய்ச்சி என்பது பொய் என்று நிரூபணமாகிறது.

MGS நாராயணன் அவர்களும், "இது ஆராய்ச்சி முடிவில்லை; இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை; ஊகத்தின் அடிப்படையில் எழுதியிருக்கிறேன்" என்று தந்தி டிவி பேட்டியில் கூறியுள்ளார். ஊகத்தின் அடிப்படையில் சொன்ன ஒரு கருத்தை, ஆண்டாளைத் தாயாகப் போற்றுவதாக இப்போது சொல்லுபவர் எடுத்துக் கையாள வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஊகத்தின் அடிப்படையில் ஒருவர் சொன்ன கருத்தை இது வரை ஆராய்ச்சிக் கட்டுரை என்று சொல்லி வருவது இவரின் அடுத்த பொய்.

தேவதாசி என நான் கூறிய வார்த்தைத் திரிக்கப்பட்டு விட்டது என்று கூறியிருக்கிறார். அதை வைத்து அரசியலாக்கி விட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அந்த கட்டுரையில் இருக்கும் இது போன்ற வரிகளுக்கு

”கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?;
ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சித் தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளவற்றுக்கு வைரமுத்து என்ன பதில் சொல்ல போகிறார்? ஆகவே, நான் ஆய்வு கட்டுரையின் வாசகத்தை குறிப்பிட்டதை தவிர வேறு எதையும் தவறாக பேசவில்லை என்று அவர் கூறியது அடுத்த பொய் என்பது தெளிவாகிறது.

மேலும், கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது. என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கு தமிழ் அறிஞர் திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் தான் எழுதியுள்ள “வைரமுத்துவும், முடித்து வைக்கப்பட வேண்டிய ஆண்டாள் ஆராய்ச்சியும்” என்ற கட்டுரையில்,

“ஆண்டாள் மறைந்தது எப்படி என்று ஆராயப்புகில், அவளைப் போலவே மறைந்த சம்பவங்களுடன் தான் ஒப்பீடு செய்ய வேண்டும் –

அவளைப் போலவே மறைந்த சம்பவம், ஆண்டாள் காலத்திற்குச் சில நூற்றாண்டுகள் முன் கண்ணகியின் காலத்தில் நடந்தது என்று அனைத்துத் தமிழ் மக்களும் போற்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. அதில் கணவனை இழந்த 14-ஆம் நாள் கண்ணகியின் கண் முன், இறந்த அவள் கணவன் (கோவலன்) தோன்றுகிறான். அப்பொழுது ஒரு வானவூர்தி வருகிறது. பூமாரிப் பொழிய அவள் தன் கணவனுடன் அந்த வானவூர்தியில் ஏறிச் சென்று மறைகிறாள். இதை அங்கு வாழ்ந்த மலைவாணர்கள் எனப்படும் வேட்டுவரும், வேட்டுவத்தியரும் தங்கள் கண்களால் பார்க்கின்றனர். இதை வைரமுத்துவும், அவர் நம்பும் ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா?

ஏற்றுக் கொண்டால், ஆண்டாள் இறைவன் பக்கலில் மறைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு கண், காது, மூக்கு வைத்து, நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லக் கூடாது.

கண்ணகி சம்பவத்தை ஏற்றுக் கொள்ளாவிடில், தமிழ் நூல் எதனையுமே இவரும், இவரைப் போன்ற ஆய்வாளர்களும் தொட்டுக் கூடப் பார்க்க வேண்டாம். ஏனென்றால் அந்தச் சம்பவங்கள் காட்டும் உண்மைகள், கருத்துக்கள், தொல்காப்பியச் சான்றுகள் எவையுமே இவர்களுக்குப் புரியாது. இதுவரைப் புரிந்திருக்கவும் இல்லை” என்று குறிப்பிடுகிறார்.

வைரமுத்து ஆராய்ச்சி செய்திருப்பதாகச் சொல்லும் நபர்களில் இளங்கோவடிகளையும் குறிப்பிடுகிறார். இளங்கோவடிகளைச் சரியான கோணத்தில் ஆராய்ச்சி செய்திருந்தால் இவர் இப்படிப் பேசியிருக்கமாட்டார் என்பதை இதிலிருந்து தெளிவாக அறியமுடிகிறது.

இப்படி அனைத்துத் தவறுகளையும் செய்துவிட்டு இதை அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று கூறி வருவது அகம்பாவம் மிக்கதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.. இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாதாரண ஹிந்து மக்களுக்கும், ஆன்மிகப் பெரியோர்களுக்கும் இவரிடத்தில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது?

வைரமுத்து ஆண்டாளை மட்டும் தான் இழிவுபடுத்தி இருக்கிறாரா என்று பார்த்தால், இல்லையென்பதும், இதற்கு முன்பே இவர் இந்த நாட்டின் இதிகாச நாயகனாக போற்றப்படும் ராமனை சம்பந்தமில்லாமல் வேண்டுமென்றே முஸ்லீம் மக்கள் சபையில் இழிவுபடுத்தி மகிழ்ந்திருக்கிறார் என்பதும் உண்மைகள்.

இவர் தமிழக்குப் பங்களித்தவர்கள் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதற்காகக் கட்டுரை எழுதிவருகிறேன் என்றும் கூறியுள்ளார். அந்தவகையில் இவர் உ.வே.சாமிநாத ஐயர் குறித்து எழுதியுள்ள ஆராய்ச்சி கட்டுரையின் லட்சணத்தைத் தினசரி.காம் (dhinasari.com) வெளியிட்டுள்ளது. தமிழ்த்தாத்தா என்று போற்றபடும் உ.வே.சாமிநாத ஐயரையும் இவர் அவமதித்தே எழுதியுள்ளார். உ.வே.சாமிநாத ஐயர் ”பாரதியாரை மதிக்காதவர்” என்று இண்டியானா பல்கலைகழகக் குறிப்பு போல் இங்கு வையாபுரி பிள்ளையின் குறிப்பு என்று கூறியிருக்கிறார். ஆனால், உ.வே.சா பாரதியின் மேல் பெருமதிப்புக் கொண்டு அவருக்கு மறைமுகமாக உதவிகள் செய்திருக்கிறார் என்பதே உண்மை.

http://dhinasari.com/scoopnews/23995-vairamuthu-writes-about-uvesa-in-article.html

ஆக இவைகளிலிருந்து நாத்திகவாதியான வைரமுத்துவிற்குத் தமிழை வளர்க்கவோ, இல்லை தமிழையும் ஆன்மிகத்தையும் ஒருசேர வளர்த்த பெரியவர்களைப் போற்றுவதற்காகவோ ஆராய்ச்சி செய்யும் நோக்கமில்லை, மாறாக அவர்களை இழிவுபடுத்தும் கருத்துகள் எங்கு இருக்கிறது என்பதையே ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பது தெளிவாக விளங்குகிறது.

ஆதலால், நாத்திகவாதியான வைரமுத்து மன்னிப்புக் கோரும் வரை ஹிந்துக்கள் போராட்டத்தைக் கைவிடக்கூடாது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் நடத்தப்படும் சூழ்ச்சிகளில் ஹிந்துக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.

IMG 20180126 WA0098இதனிடையே, 26.1.2018 அன்று ஹிந்து தர்ம இயக்கத்தின் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. அதில் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்பு கேட்கா விட்டால் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் தொடங்குவார் என்றும் அதே சமயத்தில் அனைத்துத் தமிழக மாவட்ட தலைநகரங்களிலும் ஹிந்துகளும், சந்தியாசிகளும் உண்ணாவிரதம் இருப்பர் என்றும், உண்ணாவிரததிற்குப் பிறகும் வைரமுத்து மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருக்கோஷ்டியூர் வழியாக ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் பேரணி நடைபெறும் என்றும் கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மற்றும் ராஜபாளையத்து அனைத்து சமுதாய மக்கள் ராஜபாளையத்திலிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டனர்.

 

 

 

 

 

ஆண்டாளுக்காக நடந்த எந்தப் போராட்டங்களையும் ஊடகங்கள் பெரிய அளவில் கண்டுக்கொள்ளவே இல்லை. இன்று வரை தொடர்ந்து ஏதாவது ஒரு ஊரில் கண்டன ஆர்பாட்டம் நடந்து கொண்டு இருப்பதை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன.

இவ்வளவு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு மெளனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது அரசின் கையலாகாத்தனத்தையும், ஹிந்துக்களின் மத மற்றும் மனவுணர்வுகளுக்கு அரசு கிஞ்சித்தும் மதிப்பளிக்க விரும்பவில்லை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காண்பிப்பது போல் உள்ளது.

26903675 1559584384079074 5538669286245006595 n

இந்தச் சூழ்நிலையில், ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மீண்டும் தன் உண்ணாவிரதப் போராட்டதை இன்று காலை (08.02.2018) தொடங்கியுள்ளார். அன்னை ஆண்டாளை அவமதித்தவுடன் எழுந்துள்ள இந்த ஹிந்து எழுச்சி தொடரவேண்டும். ஜீயர் தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் வெற்றி பெற இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

இனி வரும் காலங்களில் ஹிந்துக் கடவுள்களையும், ஆன்மிகப் பெரியோர்களையும் அவமதிக்க யாருக்கும் துணிவு வரக்கூடாது. இந்தப் போராட்டம் இதுபோன்ற நயவஞ்சகர்களுக்குப் பாடமாக அமையவேண்டும்.

 

 

 

 

 

 

வைரமுத்துவின் கட்டுரைக்கு திரு.பால.கௌதமன் அவர்களால் கொடுக்கப்பட்ட விளக்கமான மறுமொழி வீடியோ இணைப்புகள்: 

 

வைரமுத்துவிற்கு மறுமொழி - ஆண்டாளை கொச்சைப்படுத்துவதே நோக்கம்

 

http://shreetv.tv/index.php/component/joomtv/video/171-_?Itemid=195

வைரமுத்துவிற்கு மறுமொழி - தமிழ்ப் பண்பாட்டு மோசடி

 

http://shreetv.tv/index.php/component/joomtv/video/171-_?Itemid=195

 

வைரமுத்துவிற்கு மறுமொழி - பெண்ணிய வரலாற்று மோசடி

http://shreetv.tv/index.php/component/joomtv/video/172-_?Itemid=195

 

வைரமுத்து மறுமொழி - தேவதாசி அரசியல் மோசடி

http://shreetv.tv/index.php/component/joomtv/video/173-_?Itemid=195

 

வைரமுத்துவிற்கு மறுமொழி - அம்மா செண்டிமெண்ட் மோசடி

http://shreetv.tv/index.php/component/joomtv/video/174-_?Itemid=195

 

வைரமுத்துவிற்கு அரசியல் - மதவாத அரசியல்

http://shreetv.tv/index.php/component/joomtv/video/175-_?Itemid=195

 

வைரமுத்துவிற்கு மறுமொழி - மன்னிப்பு மோசடி

http://shreetv.tv/index.php/component/joomtv/video/176-_?Itemid=195

Read 901 times
Rate this item
(1 Vote)
Last modified on Thursday, 08 February 2018 15:31

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment