×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஹரன் அண்ணா! Featured

Friday, 06 July 2018 09:16 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

BRH Feb 2018 127என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பர் பெருமான் வாக்கை அடியொற்றி வாழ்ந்த ஹரன் அண்ணா இன்று நம்முடன் இல்லை! வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் அறங்காவலர்களுள் ஒருவரை இன்று நாம் இழந்துள்ளோம்! எங்கள் பேராசிரியர் சாமி.தியாகராசன் ஐயா விழுக்காடு அறிஞர் என்று ஒரு பதத்தைக் கையாள்வார். அதாவது சிலரின் கருத்தை இத்தனை விழுக்கடு சரி என்று ஏற்றுக் கொள்ளலாம் என்று சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அறிஞர்களை அவர் இவ்வாறு குறிப்பிடுவார். இந்த விழுக்காட்டு அறிஞர் லட்சணம் துளியும் இல்லாத ஒரு நேர்மையான அறிஞர் ஹரன் அண்ணா. எந்தச் சூழ்நிலையிலும் தனக்கு சரி என்று எது படுகிறதோ அதைச் சொல்வார். இந்த அடிப்படை குணம் தான் இவரை ஒரு ஹிந்துத்துவ சிந்தனையாளராக்கியது.

பள்ளி நாட்களிலிருந்தே தேசப் பற்று மிக்கவராக இருந்ததால், தேசத்தை மையப்படுத்தி சிந்திக்கும் இயல்பு அவரிடம் காணப்பட்டது. என்.சி.சி யில் பல சாதனைகளைப் புரிந்தவர், இராணுவத்தில் சேர ஆசைப்பட்டார். குடும்ப வற்புறுத்தலால் அந்தக் கனவைக் கைவிட்டார். நல்ல தேசியவாதியான ஹரன் அண்ணா ஹிந்துத்துவ இயக்கங்களை கடுமையாக விமர்சிப்பவராகத்தான் அவர் தொடக்க காலங்களில் இருந்தார். தனியார் நிறுவனத்தில் விளம்பரப் பிரிவு மேலாளராகப் பணியாற்றினார்.

இந்நிலையில், தமிழக அரசு, ஹிந்து சமுதாயத்தைக் கொச்சைப் படுத்தும் நோக்கத்துடன் காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கைப் புனைந்து அவர்களைக் கைது செய்தது. இந்த நிகழ்வு ஹரன் அண்ணாவை பாதித்தது. அதுவே, சமுதாயத்தைப் பற்றி அவரைப் படிக்கவும், சிந்திக்கவும் தூண்டியது. ஹிந்துக்கள் மீது தொடுக்கப்படும் பல்முனைத் தாக்குதல்களை உணர்ந்தர். அவர் விமர்சித்து வந்த ஹிந்துத்துவக் கொள்கையின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு, அந்தச் சிந்தனையாளர்களில் தலைசிறந்த நபர்களில் ஒருவராக மாறினார். குறுகிய கால கட்டத்தில், ஒரு ஆழ்ந்த ஹிந்து சாதனையாளராக ஹரன் அண்ணா உருவாக வேண்டுமெனில், அவரது கொள்கை உறுதி எவ்வளவு வலிமையானதாக இருந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் தான் நியூஸ் டுடே பத்திரிகையில், தன் ஊடகப் பயணத்தை ஹரன் அண்ணா தொடங்கினார். வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் வலைத்தளமான vsrc.in , தமிழ் ஹிந்து, திண்ணை டாட் காம், விஜயவாணி போன்ற வலைத்தளங்களில் அவர் எழுதிய எண்ணற்ற கட்டுரைகள் தேசியம், மற்றும் ஹிந்து சமயத்தின் பொக்கிஷங்களாகப் போற்றப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இது தவிர, விஸ்வ ஹிந்துப் பரிஷத் அமைப்பின் ஹிந்து மித்திரன், பூசாரி முரசு, வலம் போன்ற பத்திரிகைகளிலும் ஹரன் அண்ணா எழுதி வந்த கட்டுரைகள், ஹிந்துத்துவ எழுத்தியலின் மைல் கல்லாக விளங்குகிறது. Uday India ஆங்கில இணையதளப் பதிப்பின் Political Editor ஆகப் பகுதி நேரப் பணியாற்றி தமிழகத்தைச் சூழ்ந்த தேசவிரோத அபாயங்களை ஆங்கிலக் கட்டுரைகள் வாயிலாக வெளிக்கொணர்ந்தார்.

எழுத்துலகத்திற்கப்பால் ஹரன் என்ற மாமனிதனை நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன். அவுரங்கசீப் பற்றிய ஒரு வரலாற்றுக் கண்காட்சி, சென்னையில் 9-மார்ச்-2008 ஆம் தேதி அன்று லலித் கலா அகாதமியில்……என்ற ஆய்வாளர் நடத்தினார். அதை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தௌஹித் ஜமாத் அமைப்பினர் , கண்காட்சி அரங்கத்தில் வந்து பிரச்சினை செய்தனர். முஸ்லீம்களுக்கு பயந்து, காவல்துறையினரே அந்தக் கண்காட்சியை அகற்றினர். இதை எதிர்த்து ஓங்கி ஒலித்தது ஹரன் அண்ணாவின் குரல். அந்தக் கண்காட்சியில் தன்னார்வத் தொண்டர்களாக இருந்த மூன்று பெண்களை காவல் நிலையத்திற்கு காவல் துறையினர் கூட்டிச்சென்றனர். ஹரன் அண்ணா, அவர்களை மட்டும் ஏன் கைது செய்கிறீர்கள், என்னையும் கைது செய்யுங்கள் என்று தாமாக முன்வந்தார். அந்தப் பெண்களுக்குப் பாதுகாப்பாகவும் இருந்தார். இந்த இஸ்லாமிய வன்முறை மற்றும் காவல்துறையின் அடக்குமுறைகளைத் தெரியப்படுத்திய பின்னரும், சில ஹிந்து அமைப்புக்களில் பொறுப்பாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், தாமாகவே முன்வந்து ஹிந்து சமுதாயத்திற்கு ஏற்பட்ட பிரச்சினையை ஏற்றெடுத்த ஹரன் அண்ணாவின் பண்பு, சிறு வயது முதல் நான் பாடி வரும் ஆர்.எஸ்.எஸ் பிரார்த்தனையின் வரிகளை நினைவூட்டியது.

ஷ்ருதம் சைவ யத்கண்ட காகிர்ண மார்கம்

ஸ்வயம் ஸ்வீக்ரதன்ன சுகம் கார்யேத்

செல்லும் பாதைகள் முற்கள் நிறைந்து என்று தெரிந்து அதை நான் சுகமாக ஏற்றுக் கொள்கிறேன் என்ற அந்த வரிகளின் ஹரன் அண்ணாவின் ஸ்வயம் சேவகத் தன்மையை நமக்கு உணர்த்துகிறது.

சில தேசியவாதிகள், தமிழ் நாட்டில் நடக்கும் ஜிகாதி சம்பவங்களை ஆவணப்படுத்துவதுடன், அதை ஒரு படமாகவும் வெளியிட முடிவு செய்தனர். இந்த வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்டார் ஹரன் அண்ணா. ஹிந்து முன்னணிப் பேரியக்கத்தால் வெளியிடப்பட்ட தமிழ் நாடு ஜிஹாதி பயங்கரவாத ஆவணப்படத்தில் ஹரன் அண்ணாவின் பங்கு, அதிலும் குறிப்பாக ஆங்கில மொழியாக்கத்தில் அவரது பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பிப்ரவரி 21 2016 ல் தமிழகத்தில் ஜிகாதி பயங்கரவாதம் என்ற இந்த ஆவணப்படத்தை ஹிந்து முன்னணி நிறுவனர் வீரத் துறவி . இராம.கோபாலன் அவர்கள் வெளியிட, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர்.சுப்ரமண்யன் சுவாமி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியை கம்பீரமாகத் தொகுத்து வழங்கியவர் ஹரன் அண்ணா.

இந்த ஆவணப்பட வெளியீட்டிற்குப்பின் போலீஸார், இந்த ஆவணப்படத்தைத் தயாரித்தவர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களைக் கைது செய்யத் தொடங்கினர். இந்தச் சூழ்நிலையில், இந்த ஆவணப் படத்தின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வடிவங்களை ஏப்ரல் மாதம் தில்லியில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்தச் சிக்கலான சூழ்நிலையில், பாதுகாப்பாக, இந்த ஆவணப் படம் வெளிவர ஹரன் அண்ணாவின் முயற்சி தலையானது. இந்த ஆவணப்படத்தைத் தயாரிக்கும் தருவாயிலும், இந்தப் படம் வெளி வந்தபின்னும், தமிழகத்தில் நடத்தப்படும் ஜிகாதை மையப் படுத்தி பல தொடர் கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியவர் ஹரன் அண்ணா மட்டுமே. இந்த ஆவணப்படத்தில் அடிப்படையில், ஜிகாதி பயங்கரவாதத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது, ஹரன் அண்ணா ஒரு சாதனையாளராகத் தான் மறைந்துள்ளார் என்பதை உரக்கக் கூறமுடியும் .

14-5-2013 அன்று, தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா, ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுக்கு திண்டுக்கல்லில் மணிமண்டபம் அமைக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இதை எதிர்க்க பலர் தயங்கிய நேரத்தில், இந்தப் போராட்டத்தில் அறிவுத்தளத்திலும் களப்பணியிலும் பங்கெடுத்தவர் ஹரன் அண்ணா.இன்று வரை திப்பு-ஹைதர் மணிமண்டபம் திண்டுக்கல்லில் அரசு நிலத்தில், அரசு செலவில் அமையவில்லை. இதே திண்டுக்கல் நகரில் ஹைதர்- திப்புவால் உடைக்கப்பட்ட அபிராமி உடனுரை பத்மகிரீஸ்வரர் ஆலயம் மலை மீது அமைய, ஆதீனங்களும், காஞ்சி சங்கராச்சாரியாரும், சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களும் எடுத்த முயற்சியை முன்னெடுத்துச் சென்றதில் ஹரன் அண்ணா முக்கியப் பங்கு வகித்தார்.

ஓராசிரியர் பள்ளிகள் இயக்கத்தின் மூலம் கல்விச் சேவை, தேசியத்தைப் பரப்ப இசைக்கவி ரமணனுடன் பாரதி நாடகம், ஹிந்து ஆலயங்களைப் பாதுகாக்க ஆலய வழிபடுவோர் சங்கம், தெய்வீகத் தமிழைப் போற்றிப் பாதுகாக்க திருவள்ளுவர் திருநாட் கழகம், திராவிட சான்றோர் பேரவை என்று தர்மம் தழைக்க தனக்கு இறைவன் கொடுத்த ஆற்றல் அனைத்தையும் சமூகத்திற்காக, எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அர்ப்பணித்த ஹரன் அண்ணாவைவிட, இன்றைய காலகட்டத்தில் தொண்டுக்கு உதாரணமாக யாரைக் கூற முடியும் ?

பல பொருளாதரப் பிரச்சினைகளுக்கிடையிலும், சமுதாயப் பணியை இடைவிடாமல் ஈடுபட்டார். பாரம்பரியம், பண்பாடு போன்ற விஷயங்களை எந்தக் காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் தாங்கிப்பிடிக்கும் துணிவும், நேர்மையும் ஹரன் அண்ணாவின் தனித்தன்மை அல்லது அடையாளம் என்றே சொல்லலாம். சாஸ்திரங்கள் மீதும் பாரம்பரியத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்களை முறியடிக்க ஹரன் அண்ணா பல இழப்புக்களைச் சந்தித்தார். இப்படிப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட ஒரு சிந்தனையாளரை, செயல்வீரரை, மாமனிதரை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் மற்றும் ஹிந்து சமுதாயம் இழந்துள்ளது. எந்த லட்சியத்திற்காக ஹரன் அண்ணாவுடன் இணைந்து பயணித்தோமோ, அதை அடையப் பாடுபடுவோம். அதுவே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை பழமொழியாகப் படித்தேன் பள்ளியிலே. ஆனால் நேற்று முதல் அதை உணர்கிறேன் வாழ்க்கையிலே.

Read 721 times
Rate this item
(4 votes)
Last modified on Friday, 06 July 2018 09:36

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment