×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

அந்த வெள்ளி மின்னலின் பின்னே....

mahaperiyava

மஹா ஸ்வாமிகள்” என்றும் “மஹா பெரியவா” என்றும் “காஞ்சி முனிவர்” என்றும் ”பரமாச்சாரியார்” என்றும் பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் அபிமானத்துடனும் அழைக்கப்பட்ட காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் 121வது ஜெயந்தி இன்று (12.06.2014) உலகெங்கும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

 

இருக்கும்போது மட்டுமல்லாமல், தன் பூதவுடலை நீக்கிச் சென்ற பின்பும் கோடிக்கணக்கான பக்தர்களை வழிநடத்தும் மஹானாக விளங்கும் ஜகத்குருவை நமஸ்கரித்து, பரிபூரண அனுக்ரஹம் வேண்டுகிறது வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்.

 

இந்த நன்னாளில் எங்களுடைய அன்பான கோரிக்கைக்கு இணங்கி, அம்மஹான் பற்றிய அருமையான கட்டுரையை அளித்துள்ள எங்கள் மதிப்பிற்குரிய நண்பர் திரு இசைக்கவி ரமணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, அக்கட்டுரையை பிரசுரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்..

- ஆசிரியர் குழு

அந்த வெள்ளி மின்னலின் பின்னே....

மனமுமென் வசமாக மாறிவிட் டாலுலகில்
மாயைகள் ஏதுமில்லை
மடுவினைப் போல்சலன மில்லா அசங்கனாய்
மாறிடத் தடைகளில்லை
கனவிலே வரும்குரல் காற்றோடு போகாமல்
கணநேரம் நிற்கவேண்டும்
கைகளுக் கெட்டுமுன் காததூ ரம்செல்லும்
கடவுளுணர் வோங்க வேண்டும்
கயிலையில் காஞ்சியில் காண்போர் மனங்களில்
கண்சிமிட்டு ம்தீபமே!

 

சிவனை ஆதி பிக்‌ஷு என்று கொண்டாடுகிறோம். அத்தனை உலகங்களும் அவன் சொந்தமே. ஆனால், அவற்றைத் தவத்தால் துறந்து நடந்தான். எல்லா உலகங்களும் அவனைப் பின் தொடர்ந்து, “நீயே சொந்தம் நீயே சொந்தம்” என்று அவன் காலடியில் விழுந்தன.

ஒரு சாதாரணக் குடும்பத்தில், ஒரு மனிதனாகத்தான் பிறந்தார். பெற்றோர்க்கு மகனாய்ப் பிறந்தவர், எவ்வுயிர்க்கும் பேறு வழங்கும் மகானாய் உயர்ந்ததெப்படி? துறவும் தவமும்.

சந்நியாசம் இரண்டு வகைப்படும். தவத்தால் துறவு மேற்கொள்வது ஒருவகை. துறவால் தவத்தை மேற்கொள்வது இன்னொரு வகை. ஸ்வாமிநாதன் துறவு மேற்கொண்டது, தவம் புரியவே! துறவறம் பூண்டவர்கள் எல்லோரும் தவம் செய்வோர்களாக இருப்பதில்லை. திருவள்ளுவர், தவமும் தவமுடையார்க்கேயாம்: அவம் அதனை அஃதிலார் மேற்கொள்வது என்று சற்றுக் காரமாகவே கூறுகிறார்.

கலியுகத்தின் நவீன சகாப்தத்தில், மக்கள் நடுவே இருந்தபடி, ஒரு மனிதன் தவக்கனலாகத் திகழ முடியும் என்பதை நிரூபித்தவர் மஹா பெரியவா என்று பக்தியுடன் அழைக்கப்படும் காஞ்சி மாமுனி. எப்போதும் மக்கள் அணுகும்படி இருந்தார். இடைவிடாமல் பயணம் செய்தார். எல்லோருடைய கேள்விகளுக்கும் விடைகூறினார். எப்போதும், அணுக முடியாத தவத்தில் இடைவிடாது ஆழ்ந்திருந்தார். இதுவே, மனிதர்கள் நடுவே அவரை அதிசய மனிதராக, அவதார புருஷராக, ஆன்மிகச் செம்மலாக, அறம் என்னும் கலங்கரை விளக்காகக் காட்டியது.

எதற்காகத் தவம் செய்தார்? நமக்காக! அந்தத் தவம் என்ன ஆயிற்று? இங்கேதான் அதை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். அது, நமக்காகச் செய்யப்பட்ட தவம். அது அவருக்குத் தேவைப்படவில்லை. இந்த விஷயத்தில் தமக்கு முன்பிருந்த மஹரிஷிகள் போலவே, இவரும் உடலை விட்டு நீங்கும்போது, உயிருக்குயிரான தவத்தை. உலக நன்மைக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.

இந்த உண்மையில் நம்பிக்கை வைத்து அவரை இன்று அணுகுவோர்க்கு அவருடைய தவம் என்னும் சேமிப்பு, திறக்கும்! “Tapas is resultless dynamism” என்பார் என் குருநாதர். ஆம், அது விளைவற்ற விசைப்புதான். அதனால்தான் அது இன்றும் நமக்குப் பயன்படுகிறது. இன்றைக்கும், காஞ்சி மாமுனியை நம்பி வணங்குவோருக்கு நன்மைகள் ஏற்படக் காரணம் அவருடைய தவமே. அதுவேதான் அவருடைய சாந்நித்யமாகும்.

இன்னொன்று. அவர் எத்தனை பேசியிருந்தாலும், பயணம் செய்திருந்தாலும், எழுதியிருந்தாலும், அவர் மெளனிதான். எப்போதும் தவத்தில் இருப்பவர்களே மெளனிகளாவர். அவர் எங்கே பதில் சொன்னார்? எந்தக் கேள்விக்கும் அவருடைய மெளனம்தான் முரசறைந்தது!!

ஒரு பீடாதிபதியாக அவர் தனக்குத் தானே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளும், விரதங்களும் மிகவும் கடுமையானவைதான். தன்னுடைய ஆச்ரம விதியை அவர்போல் கடைபிடித்தவர்கள் யாரேனும் இருப்பார்களா, இனி அப்படி எவராலும் இருக்க முடியுமா என்பது ஐயம்தான். அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக அவர் கொண்டிருந்த சில கொள்கைகள் விமர்சனங்களுக்கும் உள்ளாயின. அதுபற்றியெல்லாம் கவலைப்பட அவருக்கு நேரமோ தேவையோ இருந்ததில்லை. புகழையே பொருட்படுத்தாதவர் விமர்சனங்களையா கேட்டுக்கொண்டிருப்பார்??!!

தன்னளவில் அவர் தவக்கனல், மெளனி, ஞானி, ஆன்மிகக் கனி. அவருடைய வாழ்க்கையே நமக்கு வேதமாகிவிட்டது. அதுதான் தனது வாழ்வின் மூலம் அவர் வழங்கியிருக்கும் பங்களிப்பு.

இளைய தலைமுறையினர், நிர்வாக இயல் வல்லுனர்கள் போன்றவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை பல உள. உதாரணமாக:

 1. கட்டுப்பாடு என்பது ஒருவர் சொல்லி வருவதல்ல. நமக்கு நாமே விதித்துக்கொண்டு, சற்றும் அதிலிருந்து பிறழாமல் இருப்பது
 2. எடுத்த காரியத்தை முடிக்காமல் அடுத்த காரியத்தை எடுக்காமல் இருப்பது
 3. இறுதிவரை, முதல்நிலை மாணவன் போல, எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமுடன் இருப்பது
 4. சிரித்தால் மற்றவர்களுக்கு அந்த மகிழ்ச்சி பற்றிக்கொள்ளும் வண்ணம், ஒரு குழந்தைபோல் மனம்திறந்து சிரிப்பது
 5. பல மொழிகளைக் கற்றுக்கொள்வது
 6. தேசத்தை தெய்வம்போல் நேசிப்பது
 7. தர்மமே நமது தேசத்தின் உயிர்நாடி என்று கண்டு, தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை சிரத்தையுடன் கடைபிடிப்பது. அவரவர்க்கு அவ்வவருடைய தர்மத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது
 8. ஓயாமல் உழைப்பது
 9. மறைநூல்கள், சாத்திரங்கள் இவை மட்டுமல்லாமல், இலக்கியம், தினசரிச் செய்திகள் என்று ஒன்று விடாமல் படிப்பது
 10. காலையிலே எழுவதால் எதற்கும் நேரம் இருக்கும் என்று உணர்த்தியது
 11. குறைவாகவே உண்ணுவதன் மூலமே, எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பது.
 12. வாழ்ந்து காட்டி, பிறகே வாயைத் திறந்து உபதேசிப்பது
 13. மற்றவர் நலமே தனது நலம் என்று வாழ்வது
 14. தன்னை ஒரு பொருட்டாகவே கருதாதது


என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு காலைப் பொழுதில், முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தால், இவர், மிகச் சிலருடன், ஒரு ரிக்‌ஷாவின் பின்னே, சற்றே அதைப் பிடித்தபடி, வேகமாக நடந்துசென்று கொண்டிருந்தார்.

வீதியிலே நடந்துசென்ற அந்த வெள்ளி மின்னல், என் விதியைத் தாக்கியதென்றே நான் கருதுகிறேன். அந்தரங்கத்தின் அம்ருத சுகமாக அவர் கூடவே ஒரு நண்பனாக, தோழமையுடன் தொடர்வதை நெகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

அந்த வீதியில் அவர்பின்னே நடக்கத்தான் யத்தனிக்கிறேன்.

 

 

Read 3633 times
Rate this item
(1 Vote)
Last modified on Thursday, 09 October 2014 18:33

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment