×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

சிவராத்திரி தரிசனத்தில் சிவத்தலங்களும் சில வருத்தங்களும்

Wednesday, 25 February 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

கடந்த ஃபிப்ரவரி 17 செவ்வாய்க்கிழமை சிவராத்திரியன்று, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சிறு குழுவினர், பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்களுடன் சில சிவத்தலங்களுக்குச் சென்று சிவபெருமானைத் தரிசித்து வரலாம் என்று இரவு ஒன்பது மணியளவில் கிளம்பினோம். சென்னை நகரச் சந்தடியிலிருந்து விலகி திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட எல்லைகளுக்குள் இருக்கும் ஐந்து சிவத்தலங்களைத் தேர்ந்தெடுத்துத் தரிசனம் செய்தோம்.

thiruvirkolam

பின்பனிக் காலம் முடியும் தருவாயில் இருப்பதால், மிதமான குளிருடனும் குளிர்ந்த காற்றுடனும், ஐந்து ஆலயங்களிலும் சிவமயம் நிலவ, அற்புத தரிசனம் கண்டோம். பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்கள் தலைமையில் வீடுபேறு அளிக்கும் திருவாசகத்தை ஐந்து பாகங்களாகப் பிரித்து ஐந்து ஆலயங்களிலும் முற்றோதலும் செய்தோம். ஆங்காங்கே திருவாசகப் பதிகங்களுக்கு பேராசிரியரின் விளக்கங்களும் எங்கள் நெஞ்சங்களில் தெய்வீக மணம் பரப்பின. வாழ்நாளில் மறக்கமுடியாத சிவராத்திரியாக அன்றிரவு திகழ்ந்தது.

மப்பேடு (மெய்ப்பேடு):

Singeeswarar Temple Mappedu

சென்னை கோயம்பேடிலிருந்து அரக்கோணம் மாவட்டம் தக்கோலம் செல்லும் வழியில் திருவள்ளூர் மாவட்டப் பகுதியில் இருக்கிறது மப்பேடு என்னும் சிவத்தலம். திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆனந்த நர்த்தனம் புரிந்தபோது சிங்கி என்கிற நந்தி பகவான் மிருதங்கம் வாசிப்பதிலேயே தன் கவனம் முழுவதையும் செலுத்தியதால், அவரால் சிவனின் நடனத்தைக் காணமுடியாமல் போனது. ஆயினும் சிவபெருமானின் ஆனந்த நர்த்தனத்தைக் காண விரும்பி தவம் மேற்கொண்டு, மெய்ப்பேடு என்கிற இவ்விடத்தில் சிவனைப் பூஜை செய்து வந்தார். சிங்கி என்கிற அந்த நந்தியின் பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் அவ்விடத்தில் தோன்றி ஆனந்த நர்த்தனத்தை மீண்டும் ஆடிக்காட்டியதால் இத்தலத்தின் இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என்று பெயர். அம்பாள் மணம் மிகுந்த மலர்களை விரும்புபவள் ஆதலால் புஷ்ப குஜாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்.

Singeeswarar Temple Mappedu. Veenai Aanjaneyarjpg

மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவரான ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு அதே மூல நக்ஷத்திர தினத்தன்று சரஸ்வதி அவருடைய நாவில் சிங்கநாத பீஜாக்ஷர மந்திரங்களைப் பொறித்தார். மேலும், ஆஞ்சனேயரும் அதே மூல நக்ஷத்திர தினத்தன்று இத்தலத்தில் சிங்கநாதம் இசைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றார். இத்தலத்தில் ஆஞ்சநேயர் வீணையுடன் இசைக்கலைஞராகக் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். அவர் இத்தலத்தில் அமிர்தவர்ஷணி ராகத்தை இசைத்ததாகவும் தலபுராணம் சொல்கிறது. எனவே மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது. மூல நக்ஷத்திரத் தினத்தன்று இங்கே வந்து ஆஞ்சனேயரை வழிபடுவது நலமளிக்கும்.

ராஜராஜ சோழனின் மூத்த சகோதரனான ஆதித்த கரிகாலன் பொ.ஆ.976ல் இந்தக் கோவிலைக் கட்டியுள்ளான். பின்னாட்களில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ராஜகோபுரம், 16 கால்மண்டபம், மதில் சுவர் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு இங்கே பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. பிரம்மோத்ஸவத்தின் கடைசி நாள் சிவராத்திரி. ஆகவே பிரம்மோத்ஸவத்தில் கலந்து கொண்டு உற்சவ மூர்த்திகளின் தரிசனம் காணும் பாக்கியமும் எங்களுக்கு வாய்த்தது.

திருவிற்கோலம் (கூவம்)

அசசறதத வநயகர தரவறகலம

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே திருவிற்கோலம் என்கிற இத்தலம் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் கூவம் ஆறு உற்பத்தியாகிறது. ஆகவே இத்தலம் தற்போது கூவம் என்று அழைக்கப்படுகிறது.

திரிபுரங்களை எரிக்கக் கையில் வில் ஏந்தி சிவபெருமான் கிளம்பி வரும்போது, விநாயகரை வழிபடாமல் கிளம்பியதால் தேரின் அச்சு முறிந்துவிடுகிறது. பிறகு விநாயகரை வழிபட்டு கிளம்பினார் சிவபெருமான் என்பது ஐதீகம். ஆகவே, இத்தலம் திருவிற்கோலம் (வில்லேந்திய திருக்கோலம்) என்று அழைக்கப்படுகிறது. இறைவனின் பெயர் திரிபுராந்தகர். இங்கே குடிகொண்டிருக்கும் விநாயகரும் அச்சிறுத்த விநாயகர் என்று வழங்கப்படுகிறார்.

இறைவி திரிபுரசுந்தரி. இங்கே திரிபுரசுந்தரியை வழிபட்டுவிட்டுத்தான் இறைவனை வழிபடவேண்டும் என்பது வழக்கத்தில் இருக்கிறது. இறைவிக்குத் தனியே கொடிமரமும் பலிபீடமும் இருக்கின்றன. இருவர் சன்னிதிகளையும் சேர்த்து வலம் வரும் விதத்திலும் பிராகாரம் அமைந்துள்ளது.

இறைவன் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறான். மழைக்காலங்களில் வெண்மையாகவும் யுத்த காலங்களில் சிவப்பு நிறத்திலும் இறைவன் காட்சி தந்ததாகத் தலவரலாறு கூறுகிறது. உத்தராயண காலத்தில் சிவப்பாகவும் தக்ஷிணாயன காலத்தில் வெண்மையாகவும் காட்சி தந்தார் என்றும் கூறப்படுகிறது. இறைவனின் லிங்கத் திருமேனியை அர்ச்சகர்கள் தொடுவதில்லை. ஆகவே தீண்டாத திருமேனி நாதர் என்றும் வழங்கப்படுகிறார். அபிஷேகம் செய்யும்போதும் மலர்கள் சூட்டும்போதும் இறைவனைத் தொடாமலேயே பூஜிக்கின்றனர். வஸ்திரம் ஆவுடையாருக்கு மட்டுமே சார்த்துகின்றனர். அபிஷேகத்தினால் இறைவன் திருமேனியில் ஏற்படும் கரைகள் தானாகவே உதிர்ந்து நீங்கிவிடுகின்றன.

இது திருஞானசம்பந்தர் பெருமானால் பாடப்பெற்ற தலமாகும்.

திரு ஊறல் (தக்கோலம்)

thiruvirkolam1

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் அருகே உள்ளது இத்திருத்தலம். ஒரு முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க நந்தி தன் வாயிலிருந்து கங்கையை வருவித்ததாலும், இறைவைனின் திருவடிகளுக்கு அடியிலிருந்து நீர் சுரப்பதாலும் இத்தலம் திரு ஊறல் என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஆகவே இறைவன் ஜலநாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். உமாபதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

மேலும், சிவபெருமானை அழைக்காமல் தக்ஷன் (தக்கன்) நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையைக் கொய்ய வீரபத்திரர் முயலும்போது, தனக்கு வந்த ஆபத்தை எண்ணிப் பயந்து ’ஓ’வென்று ஓலமிட்டு தக்கன் கதறியதால் தக்கோலம் என்று பெயர் பெற்றது இத்தலம் என்றும் ஒரு வரலாறு இருக்கிகிறது.

இறைவன் மணலினால் ஆன லிங்கத் திருமேனி. ஆதலால் ஆவுடையாருக்கு மட்டுமே இங்கு அபிஷேக அலங்காரங்கள். இங்கேயும் இறைவன் தீண்டாத் திருமேனியாகத்தான் இருக்கிறார். அம்பாளின் பெயர் கிரிராஜ கன்னிகாம்பாள். அம்பாளின் சன்னிதி தனிக்கோவிலாக மண்டபத்துடன் காட்சியளிக்கிறது.

தகஷணமரதத தககலம


தக்ஷ்ணாமூர்த்தி வேறெங்கும் இல்லாத கோலத்தில் இங்கே காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பு. வலது காலைத் தொங்கவிட்டு இடது கால் குத்திட்ட நிலையில் அபூர்வமாகக் காட்சி தருகிறார். லிங்கோத்பவருக்குப் பதிலாக இருக்கும் மஹாவிஷ்ணுவும் வலது காலை மடித்து வைத்தபடியும் இடது காலைத் தொங்கவிட்டபடியும் காட்சி தருகிறார்.

குசஸ்தலை ஆற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. ஆற்றில் நீர்பெருக்கு வெள்ளமாக அதிகரிக்கும் காலத்தில் நந்தியின் வாயில் நீர் வரும் என்று சொல்லப்படுகிறது. தலத்தின் தீர்த்தம் சத்ய கங்கை தீர்த்தம். இது திருஞானசம்பந்தர் பெருமானால் பாடப்பெற்றது.

முதலாம் பராந்தகச் சோழன் படைகளும் இராட்டிரகூட மன்னன் படைகளும் மோதிக்கொண்டு பெரும்போரில் ஈடுபட்டதும் இங்கேதான். இந்தத் தக்கோலப் போரில் தான் சோழ இளவரசர் ராஜாதித்யர் கொல்லப்பட்டார். இந்தத் தோல்வியே சோழர்களுக்குத் தங்கள் ராஜ்ஜியத்தைப் பெரிதாக ஸ்தாபிக்கவேண்டும் என்கிற உத்வேகத்தை அளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.


திருவாலங்காடு

thiruvalankadu

திருவள்ளூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாலங்காடு மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம். சென்னை திருப்பதி சாலையில் திருவள்ளூர் தாண்டியவுடன், திருத்தணிக்கு முன்பாகவே இடதுபுறம் அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ளது.

சிவ பெருமானுக்கான ஐந்து சபைகளில் இது ரத்தினசபை ஆகும். காரைக்காலம்மையாருக்கு நடராஜப் பெருமான் காட்சி தந்து ஆட்கொண்ட தலமாகும் இது. இத்தலத்தில் இறைவனின் காலடியில் காரைக்கால் அம்மையார் இன்றும் வாழ்வதாக ஐதீகம். காளிக்கும் சிவபெருமானுக்கும் இடையே நர்த்தனப் போட்டி ஏற்பட்டபோது, ஊர்த்வ தாண்டவத்தை ஆடி சிவபெருமான் காளியை அடக்கியது இத்தலத்தில்தான். இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றும் ஊர்த்வ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வண்டார்குழலியம்மை. இறைவன் சுயம்பு லிங்கமாகவும், இறைவி நின்ற திருக்கோலத்திலும் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர்.

வெளியே ஐந்து நிலை ராஜகோபுரமும் உள்ளே மூன்று நிலையுள்ள இரண்டாவது கோபுரமும் கொண்ட ஆலயம் இது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் இருக்கும் மண்டபத்தில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. கோபுரங்களிலும் கோவில் உட்புறங்கள்லும் அழகான சுதைச்சிற்பங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. காரைக்கால் அம்மையார் வரலாறு, மீனாக்ஷி திருக்கல்யாணம், இறைவனின் ஐந்து சபைகள் ஆகியவை சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.

உற்சவ மூர்த்திகளாக சிவபெருமானின் ஊர்த்வ தாண்டவ கோலமும், சிவகாமி அம்மையாரும், காரைக்கால் அம்மையாரும் நம்மைக் கவர்கின்றனர். இத்தலத்தில் பைரவர் வாகனமின்றி காட்சி தருகிறார். ஸ்படிக லிங்கமும், மரகத லிங்கமும் இங்கே விமரிசையாகப் பூஜிக்கப்படுகின்றன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது.

இத்திருத்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் (திருவாலங்காடு செப்பேடுகள்) சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்ட சாசனங்களில் சோழ வரலாற்றைக் கூறுகின்றன.

திருப்பாசூர்

thirupasur1

திருவள்ளூரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில், சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில், கடம்பத்தூருக்குப் பிரிந்து செல்லும் சாலையில் உள்ளது இத்தலம்.

அசுரர்களான மது கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு, அவர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட தோஷங்களை நீக்க மூங்கில்கள் அடங்கிய வனத்தில் சிவபெருமானைப் பூஜிக்கிறார். அவருக்கு அருள் பாலிக்க மூங்கில்களுக்கிடையே சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளுகிறார். பாசூர் என்றால் மூங்கில். மூங்கில்களுக்கு இடையே தோன்றியதால் பாசூர் நாதர் என்று போற்றப்படுகிறார். இந்தத் தலமும் திருப்பாசூர் என்று வழங்கப்படுகிறது. இறைவனுக்கு வாசீஸ்வரர் என்கிற பெயரும் உண்டு. இவ்வழியே செல்லும்போது, மூங்கில்களுக்கிடையே இருக்கும் சிவலிங்கத்தைக் கண்ட கரிகாலச் சோழன் இக்கோவிலை எழுப்பினான் என்று சொல்லப்படுகிறது.

சோழன் கரிகால் பெருவளத்தானின் சிற்றரசராக இருந்த குறும்பன் என்பவர் கப்பம் கட்ட மறுக்க, இறைவன் நந்தீஸ்வரரை அனுப்பி குறும்பனுக்கு உதவியாக இருந்த காளிக்குப் பொன் விலங்கிட்டு அழைத்து வந்து கப்பம் கட்டச் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்த தலம் என்று தலபுராணம் கூருகிறது. சோழர் கால கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணக்கிடைக்கின்றன.

சுவாமி சன்னிதியின் வலப்புறம் அம்மன் சன்னிதி இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இவ்வாறு இருப்பது ஆக்கும் சக்தியை அளிக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. இங்கேயும் அர்ச்சகர்கள் இறைவனைத் தீண்டுவதில்லை. எனவே சுவாமி தீண்டாத் திருமேனி என்றும் அழைகப்படுகிறார். இறைவி தங்காதளி அம்மன். இரு சன்னிதிகளும் தனித்தனி விமானங்களுடன் அமைந்துள்ளன. சொர்ணகாளிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அம்பாளே இங்கு இறைவனைப் பூஜை செய்துள்ளதால், முதல் பூஜை அம்பாளுக்கு நடைபெறுகிறது.

கருவறை வாயிலில் இடப்புறம் 11 விநாயகர் மூர்த்தங்களுடன் ஏகாதச விநாயகர் சபை நம்கண்களைக் கவர்ந்திழுக்கிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் திருத்தலமாகும் இது.

நாங்கள் சென்ற ஐந்து ஆலயங்களிலும் சிவன் கோவில்களில் காணப்படும் பிராகாரத் தெய்வங்களும், கோஷ்ட மூர்த்தங்களும் அவைகளுக்கு உண்டான இடங்களில் இருந்தன. திருவாலங்காடு கோவிலில் மட்டும் சற்றே கூட்டம் இருந்தது. மற்ற நான்கு கோவில்களிலும் அவ்வளவாகப் பக்தர் கூட்டம் காணப்படவில்லை. சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான தினமாக இருந்தும், கோவில்களுக்குள் அமர்ந்து திருவாசகம் முற்றோதலைச் செய்வதற்கு ஏதுவாக ஏகாந்தமான இடங்கள் எங்களுக்கு அமைந்தது இறைவன் அருளன்றி வேறில்லை.

சில வருத்தங்கள்

கண்குளிர தரிசனம் கண்டோம்; மனம் நெகிழத் திருவாசகம் பாராயணம் செய்தோம்;

thirupasur

ஆயினும் எங்கள் ஆலய தரிசனப் பயணத்தில் நாங்கள் கண்ட சில காட்சிகள் மனதைச் சற்றே வருத்தமுறச் செய்ததும் உண்மைதான்.

ஐந்து கோவில்களிலும் சில பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற மற்ற பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கிக்கொண்டிருந்தனர். அவற்றைக் கோவில்களுக்குள்ளேயே எச்சில் செய்து சாப்பிடுவதும், சாப்பிட்ட இலைகளையும் காகிதத் தட்டுகளையும், பிளாஸ்டிக் டம்ளர்களையும் கோவில் வளாகத்திலேயே வீசி அசுத்தப்படுத்துவதும் அருவருப்பாக இருந்தது. அது கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பொறுப்பற்ற மனப்பாங்கைக் காட்டுவதாக இருந்தது. பக்தர்களே இவ்வாறு பொறுப்பின்றி இருக்கும்போது, அன்னதானம் என்கிற பெயரில் கோவில்களை ஹோட்டல்களாக ஆகிக்கொண்டிருக்கும் தமிழக அரசின் செயலை எப்படி கண்டிப்பது? ஆகவே பிரசாதம் வழங்குபவர்கள் கோவிலுக்கு வெளியே அவற்றை வழங்கவேண்டும்; சாப்பிட்ட மிச்சங்களையும் சேகரிக்க குப்பைத் தோட்டிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்கு மட்டுமே கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.

ஐந்து கோவில்களிலுமே மக்கள் பலர் கிடைத்த இடங்களில் போர்வையைப் போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தனர். மண்டபங்கள், பிராகாரங்கள், சன்னிதியின் வாசல்கள் என்று பல இடங்களில் உறங்கிகொண்டிருந்தனர். சிவராத்திரி அன்று கண்விழித்து சிவபெருமான் நாமத்தைத் தியானிப்பதுதான் புண்ணியம் தரும். இல்லையென்றால் காலை வரை விழித்திருந்து எத்தனை கோவில்கள் முடியுமோ அத்தனை கோவில்களுக்குச் சென்று இறைவனைத் தரிசனம் செய்வது புண்ணியம் தரும். ஆனால் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவதற்கு எதற்காகக் கோவில்களுக்கு வரவேண்டும்? அதை வீட்டிலேயே செய்திருக்கலாமே! இவ்வாறு ஆங்காங்கே பலர் படுத்துக்கிடந்தது நமக்குச் சங்கடத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

கோவில்களில் உள்ள சிற்பங்கள் மீதும் கல்வெட்டுகள் மீதும் “மணல் வீச்சு” (Sand Blasting) செய்திருப்பது நமது கண்களை மிகவும் உறுத்தியது. மணல் வீச்சு தொல்லியல்துறையால் தடை செய்யப்பட்ட முறையாகும். அதைத் தடை செய்து தமிழக அரசும் ஆணை பிறப்பித்துள்ளது. ஆயினும் அம்முறையை அறநிலையத்துறை இன்னும் கடைப்பிடிப்பது அதனுடைய அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

இரண்டு கோவில்களில் மட்டும் ஓரிரண்டு பசுக்கள் காணப்பட்டன. அவை வெளிப்பிராகாரத்தில் ஒரு மூலையில் கட்டப்பட்டிருந்தன. மிகவும் மெலிந்து காணப்பட்டன. அவற்றிற்கு அருகே தீவனங்கள் எதுவும் காணப்படவில்லை. தனியான கோசாலைகள் எதுவும்காணப்படவில்லை. ஆவினங்களைக் காப்பதிலும் அறநிலையத்துறையின் அலட்சியம் தொடர்வதையே இது காட்டுகிறது.

சிவ ராத்திரி அன்று இரவு முழுவதும் பொதுமக்கள் சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவர் என்பது தெரிந்த விஷயமே. ஆகவே பொதுமக்களுக்காக அரசு பேருந்து வசதிகள் செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்ததாகத் தெரியவில்லை. இக்காரணத்தினால் கூட மக்கள் கோவிலிலேயே படுத்து உறங்கியிருக்கலாம். வரும் ஆண்டுகளில் அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

கோவில்களில் காணப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து வந்தவர்கள்தான். உள்ளூர் வாசிகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டனர்.

kuvam1

ஐந்து கோவில்களுமே மிகவும் பழமையானவையாகவும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தனவாகவும் இருந்தாலும், உள்ளூர் வாசிகள் காணப்படாதது மிகவும் மனவருத்தத்தை அளித்தது. இதற்கு முக்கிய காரணம் மதமாற்றம் என்பது தெளிவாகத் தெரிந்தது. தமிழகத்தில் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்து வரும் இடங்களில் திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களும் உண்டு. அதன் விளைவே இவ்வாறு கோவில்களில் விசேஷ தினங்களில் கூட மக்கள் இல்லாமல் இருப்பது என்கிற உண்மை அதிர்ச்சி அளிக்கிறது.

kuvam

முதலில் சென்ற மப்பேடு என்கிற தலத்தில் பிரம்மோத்ஸவம் நடைபெற்ற போதும் மிகமிகக் குறைவாக மக்களைக் கண்டது எங்களுக்குப் பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது.

மதமாற்றத்திலிருந்து மக்களுக்கும், அறநிலையத்துறையிடமிருந்து ஆலயங்களுக்கும் விடுதலை கிடைக்க வேண்டும்; பொதுமக்களுக்குப் பொறுப்புணர்வும் விழிப்புணர்ச்சியும் ஏற்படவேண்டும்; என்பதையும் எங்கள் பிரார்த்தனைகளாக இறைவன் திருவடிகளில் சமர்ப்பித்தோம்.

 

 

Read 1583 times
Rate this item
(1 Vote)
Last modified on Wednesday, 25 February 2015 15:16

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment