×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

முழுமையான இறையனுபவம் – 1 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை - பயணத் தொடர்)

Wednesday, 10 June 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் வளர்ந்த வேத நாகரீகத்தின் அசைக்க முடியாத சாட்சியாகத் திகழ்கிறது பழம்பெருமை வாய்ந்த கலாச்சார, ஆன்மீகப் பாரம்பரியம் மிகுந்த புண்ணிய பூமியான நமது பாரத தேசம். பல பிராந்தியங்களில் பலவிதமான மொழிகள் பேசிக்கொண்டு, தங்களுக்கென்று குறிப்பிட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டு மக்கள் வாழ்ந்து வந்தாலும், இந்த தேசத்திற்கென்றே உரிய ஆன்மீகக் கலாச்சாரப் பாரம்பரியம் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கின்றது.

வடக்கே இருக்கும் மக்கள் தெற்கே உள்ள புண்ணியத்தலங்களைத் தரிசிக்க வருவதும், தெற்கே உள்ள மக்கள் வடக்கில் உள்ள புண்ணியத் தலங்களைத் தரிசிக்கச் செல்வதும், ஹிமாலய யாத்திரை, காசி யாத்திரை, ராமேஸ்வரம் யாத்திரை போன்ற யாத்திரைகளும் நமது ஆன்மீகக் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும் அதனால் ஏற்படும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சான்று பகர்கின்றன.

haridwar

கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வது நடைமுறையில் இருந்துவரும் வழக்கம். ஒரு சில புண்ணியத் தலங்களைத் திட்டமிட்டுப் பயணம் மேற்கொண்டு தரிசிக்கலாம். ஆனால் சில புண்ணியத் தலங்களின் தரிசனம் இறைவனின் அழைப்பு கிட்டும் போது தான் நமக்கு ஏற்படும். இது என்னுடைய முதல் சபரிமலை தரிசனத்திலும், ஒவ்வொரு முறையும் திருப்பதி தரிசனத்திலும் நான் அனுபவித்தறிந்த உண்மை.

பல வருடங்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்கிற அவா என் மனத்தில் இருந்துவந்தாலும், ஸ்வாமி ஐயப்பனின் அழைப்பு கிட்டிய பிறகுதான் என்னுடைய முதல் வருட சபரி மலைப் பயணம் நடந்தது. அதன் பிறகு என் தந்தையார் காலம் முடிந்த வருடம் வரை 12 வருடங்கள் தொடர்ந்து சபரி மலைத் தரிசனம் செய்தேன்.

அதே போல, பல முறைகள் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்திருந்தாலும், ஒரு முறை கூடத் திட்டமிட்டுச் சென்றதில்லை. ஒவ்வொரு முறையும் நான் எதிர்பாராத சமயங்களில்தான் வாய்ப்பு கிட்டிச் சென்றிருக்கிறேன்.

2015ம் வருடம் மே மாதம் ஏற்பட்ட ஹிமாலய தரிசனமும் சிவபெருமானின் அழைப்பினாலும் அனுமதியாலும்தான் என்று பரிபூரணமாக நம்புகிறேன். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தந்தையாரிடம் ”ருத்ரம்” கற்றுக்கொண்டவன் என்கிற முறையிலும், பல வருடங்கள் பிரதோஷ கால பூஜைகள் முறையாகச் செய்தவன் என்கிற முறையிலும், கைலாய தரிசனம் என்பது என்னுடைய நெடுநாள் கனவுகளில் ஒன்று. கேதார்நாத், அமர்நாத், மானசரோவர் ஆகிய மூன்று தலங்களையும் வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்கிற அவா எப்போதும் என் மனத்தில் இருந்துவருகின்ற ஒன்று.

அதில் கேதார்நாத் தரிசனம் இப்படித் திடீரென்று ஏற்படும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் சார்பில், ரிஷிகேஷில் கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முடிவு எடுக்கப்பட்டவுடன், ரிஷிகேஷ் பயணத்துடன் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணியத் தலங்களையும் (Char Dham) சேர்த்து தரிசனம் செய்து வரலாம் என்று சரியான முடிவை எடுத்த தம்பி பால கௌதமனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.

”தாம்” என்றால் ”வாஸ ஸ்தானம்” என்று பொருள். “சார் தாம்” என்பது இறைவன் வசிக்கும் நான்கு தலங்களைக் குறிப்பிடுவதாகும். பொதுவாக வடக்கே பத்ரிநாத், மேற்கே ஸோம்நாத், கிழக்கே புரி ஜகன்னாத், தெற்கே ராம்நாத் (ராமேஸ்வரம்) ஆகியவற்றையே “சார் தாம்” என்று சொல்வது வழக்கம். மற்றபடி ஹிமாலயத்தில் உள்ள நான்கு தலங்களான யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகியவற்றை ”சோட்டா சார் தாம்” என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.

ஹிமாலய தரிசனத்துடன், பஞ்சப்ரயாகை, ரிஷிகேஷ், ஹரித்வார், நைமிசாரண்யம், அயோத்தியா, பிரயாகை, காசி, கயா, புரி ஆகிய தலங்களையும் இணைத்து மிகப்பெரிய தீர்த்த யாத்திரையாக அமைத்துக்கொண்டோம். ரிஷிகேஷில் திருவள்ளுவர் சிலை நிறுவும் திட்டம் சற்றே தள்ளிப்போனாலும், எங்களுடைய பயணத்தை நாங்கள் தள்ளிப்போட விரும்பவில்லை. எங்களுடைய வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சிலர் அவரவர் குடும்பத்தினருடனும் சேர்ந்து மொத்தம் 29 பேர் இந்த யாத்திரையை மேற்கொண்டு வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தோம்.

nagpur vsrc

ஹிமாலய தரிசனத்திற்காக மேற்கொண்ட உத்தராகண்ட் யாத்திரையில் கடும் குளிரையும், பித்ரு காரியங்களுக்காக மேற்கொண்ட பிரயாகை-காசி-கயா யாத்திரையில் கடும் வெப்பத்தையும் அனுபவித்தோம். உத்தராகண்டத்தில் 2014ம் ஆண்டுதான் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுப் பல பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், சாலைகள் பல இடங்களில் சரி செய்யப்படாமல் இருந்தது. ஆங்காங்கே சாலைகள் செப்பனிடும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. மலைப்பாதைகளில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுச் சாலைகள் மிகவும் குறுகிப்போயிருந்தன. எனவே பல நூறு அடிகள் பள்ளத்தாக்குகள் கொண்ட மலைப் பாதையில் பேருந்தில் செல்லும்போது, கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையே இருந்தது. மிகவும் அனுபவமும் திறமையும் வாய்ந்த ஓட்டுனர்களே அந்தப் பாதையில் மோட்டார் வாகனங்களைச் செலுத்த முடியும்.

yamunothri path

மேலும், யமுனோத்ரி செல்ல அடிவாரத்தில் உள்ள ஜானகிபாய் சட்டி என்கிற இடம் வரைதான் பேருந்து செல்லும். பிறகு அங்கிருந்து 5 கிலோமீட்டர்கள் மலைப்பாதையில் நடந்து ஏற வேண்டும். அதே போல கேதார்நாத் செல்ல ஹெலிகாப்டர் வசதி இருந்தாலும், அதில் செல்லும் அளவுக்குப் பொருளாதார வசதி இல்லாதவர்கள் 14 கிலோமீட்டர் நடைபாதையில்தான் ஏறிச் செல்லவேண்டும். ஹெலிகாப்டரில் செல்பவர்களும் கோவிலை அடைய ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும். அதே போல கங்கோத்ரியிலும் கோவிலை அடைய ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும். பத்ரிநாத்திலும் பஸ் நிலையத்திலிருந்து கோவிலை அடையவும், அதைத்தாண்டி சீன எல்லையில் உள்ள வியாசர் குகை, பிள்ளையார் குகை, சரஸ்வதி நதியின் தோற்றுவாய் ஆகிய இடங்களைக் காண மலைப்பாதையில் ஏறிச் செல்ல வேண்டும். மேற்சொன்ன இடங்களில் வயதானவர்களும், ஏற முடியாதவர்களும் குதிரைகள் அல்லது தண்டி எனப்படும் டோலி (நான்கு பேர் சுமந்து செல்லும் பல்லக்கு) மூலம் செல்லலாம். இது தவிர ஒரு ஆள் முதுகில் சுமந்து செல்லும் கண்டி எனப்படும் வசதியும் உண்டு. இது குழந்தைகளுக்குத்தான் வசதியே தவிர பெரியவர்களுக்கு உதவாது.

 yamunothri

 

நான்கு தலங்களுமே கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் முதல் 4000 மீட்டர் வரை உயரத்தில் இருப்பதால், வயதானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆகவே அவர்கள் தங்களை மிகவும் பிரயத்தனம் செய்து கஷ்டப்படுத்திக்கொள்ளாமல், ஆங்காங்கே தேவையான அளவு ஓய்வு எடுத்துக்கொண்டு, இறைவனை மனதில் தியானித்தபடியே செல்வது நன்மை பயக்கும்.

gangothri

இவ்விடங்களிலும் உள்ள நதிகள் பனிப்பொழிவினால் மிகவும் ஜில்லென்று (Ice Cold) இருப்பதால், சிலருக்குக் குளிர் ஜுரம் போன்ற தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆகவே, வயதானவர்களும், முடியாதவர்களும் நதிகளில் இறங்கிக் குளிக்காமல் பிரோக்ஷணம் செய்துகொள்வது நல்லது.

கடும் குளிரினாலும், குளிர்ச்சி மிகுந்த நதிகளில் குளிப்பதாலும், பல இடங்களில் நடந்து மலையேறிச் செல்வதாலும் குதிகால்களில் பனி வெடிப்பு (பித்த வெடிப்புகள்) ஏற்பட்டு கீழே ஊன்றி நடக்க முடியாதவாறு வலி ஏற்படும். எனவே அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள எண்ணை, தைலம் மற்றும் வெடிப்பு மருந்துகள் (Anti-Crack Cream) எடுத்துச் செல்வது நல்லது.

உணவைப் பொருத்தவரை மிகவும் கஷ்டம் என்று சொல்ல முடியாது. தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்காதே ஒழிய, வட இந்திய உணவான ரொட்டி, சப்பாத்தி, சப்ஜி (கூட்டு), தால் (பருப்பு), சாவல் (அரிசிச் சோறு) குறைவின்றிக் கிடைக்கின்றன. தயிரும் வேண்டுமளவு கிடைக்கிறது. டீ, காபி கிடைக்கின்றன. ஊறுகாயும் கிடைக்கிறது. இங்கேயிருந்து கருவேப்பிலை பொடி, பருப்புப்பொடி, கொத்தமல்லிப் பொடி போன்றவை எடுத்துச் சென்றால் அரிசிச் சோறு வாங்கிக் கலந்து சாப்பிடலாம்.

குளிர் தாங்க முடியாதவர்களுக்கு ஜலதோஷம், சளி, நெஞ்சுக்கட்டு, ஜுரம் போன்ற உபாதைகள் ஏற்படலாம். பல இடங்களில் கிடைக்கும் குடிநீர்களைக் குடிப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். உணவுகள் சிலருக்கு ஒத்துவராமல் போகலாம். ஆகவே, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற உபாதைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு பேருந்தில் மலைப்பாதையில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளாது. தலைவலி, வயிற்றுப்பிரட்டல், வாந்தி ஆகிய தொல்லைகள் ஏற்படும். எனவே, முன்னேற்பாடாக மேற்கூறப்பட்ட தொல்லைகளிலிருந்து விடுபெறத் தேவையான மருந்து மாத்திரைகளையும் எடுத்துச் செல்வது நல்லது.

உத்தராகண்ட் மாநிலத்தில் தங்கும் வசதிக்குச் சத்திரங்களும், ஹோட்டல்களும் உள்ளன. வசதியானவையாகவும், மலிவான வாடகையிலும் அறைகள் கிடைக்கின்றன. சதாரணமாகக் கிடைக்கும் 2 படுக்கைகள் கொண்ட அறைகள் மட்டுமல்லாமல், 4 படுக்கைகள் கொண்ட அறை, 6 படுக்கைகள் கொண்ட அறை, 10 படுக்கைகள் கொண்ட அறை போன்றவையும் இருக்கின்றன. 20 பேர் 30 பேர் என்று குழுவினராகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அவை மிகவும் வசதியாக இருக்கும். ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதங்கள் மட்டுமே இங்கு சீஸன் காலம். இடையில் ஜூலை ஆகஸ்டு இரு மாதங்கள் மழைக்காலம் ஆதலால், மக்கள் போக்குவரத்து குறைவாகவே இருக்கும். ஆகவே நான்கு மாதங்கள் தான் சீஸன் காலம். ஒரு வருடத்திற்கான சம்பாத்தியத்தை இந்த நான்கு மாதங்களில் அவர்கள் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். ஆயினும் அவர்கள் பேராசை கொண்டு நம்மிடம் பணம் பிடுங்குவது கிடையாது. மிகவும் மலிவாகவே தருகிறார்கள். சில நூறு ருபாய்களே அறைவாடகைக்கு வசூலிக்கிறார்கள். போதும் என்ற மனம் கொண்டு வாழ்கிறார்கள். மிகவும் நல்லவர்களகவும் இருக்கிறார்கள். நமது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசத் தலங்களில் சீஸன் காலங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் நம்மிடமிருந்து வசூலிக்கப்படுவதை ஒப்பிட்டால், உத்தராகண்டத்தின் அருமையையும் பெருமையையும் உணரலாம்.

rishikesh

இந்த யாத்திரையின் இரண்டாவது கட்டமான பிரயாகை (அலஹாபாத்), காசி, கயா மற்றும் புரி ஆகிய இடங்களில் கடுமையான வெயிலையும் வெப்பத்தையும் அனுபவித்தோம். இவ்விடங்களுக்குச் செல்வது ஆகஸ்டு முதல் நவம்பர் வரை சரியான காலம் என்றாலும், மீண்டும் ஒரு முறை 30 பேரை அழைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்வது சிரமம் என்கிற காரணத்தால் உத்தராகண்ட யாத்திரையுடன் காசி யாத்திரையையும் சேர்த்துவிட்டோம்.

 triveni sangamam

கோடை காலம் ஆதலால், கங்கை மிகவும் வற்றியிருந்தது. பிரயாகை திரிவேணி சங்கமத்தில் கூட கால்முட்டி வரைதான் நீர் மட்டம் இருந்தது. காசியில் கங்கைக் கட்டங்களிலும் 50 முதல் 70 படிகள் வரை இறங்கிச் சென்று குளிக்க வேண்டியிருந்தது. காஞ்சி சங்கர மடம் மூலமாகப் பயணம் மேற்கொண்டதால் பிரயாகை, காசி, கயா மூன்று இடங்களிலும் தங்குவதற்கோ, நமது பாரம்பரிய உணவிற்கோ எந்த ஒரு குறையும் இல்லாமல் இருந்தது. ஒடிஸா மாநிலம் புரியிலும் தென்னிந்திய உணவு கிடைத்தது.

உத்தராகண்ட யாத்திரை முடித்தவுடன் ஹரித்வாரிலிருந்து விடியற்காலை 4 மணிக்குக் கிளம்பி நைமிசாரண்யம் பார்த்துவிட்டு அயோத்தி சென்று ராமபிரானை தரிசித்துப் பின்னர் பிரயாகை சென்றடைவதாகத் திட்டம். ஆனால் விடியற்காலை 4 மணிக்கு வரவேண்டிய பேருந்து 3 மணிநேரம் காலதாமதமாக 7 மணிக்கு வந்ததால், அயோத்தி எங்கள் பயணத்திட்டத்திலிருந்து விடுபட்டுப் போனது. தவிர்க்க முடியாத காரணத்தால் அயோத்தி தரிசனம் மட்டும் விடுபட்டுப் போனது ஒன்றுதான் குறை. மற்றபடி இந்த யாத்திரை எங்கள் அனைவரின் வாழ்விலும் சிறந்த முழுமையான ஆன்மீக அனுபவமாகத் திகழ்ந்துள்ளது என்பதோடு மட்டுமல்லாமல், ஏதோ ஒரு விதத்தில் திருப்பு முனையாகவும் மாறக்கூடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

இந்த யாத்திரையின் அனுபவங்களையும் மற்ற குறிப்புகளையும் சேர்த்து ஒரு பயணத் தொடராக எழுதி உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன். வரும் காலத்தில் ஹிமாலய தரிசன யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு இந்தத் தொடர் சிறிதளவேனும் பயன்பட்டால், கேதார்நாத்தில் வீற்றிருக்கும் மஹாதேவரின் அருள் கிடைத்த பேறு பெற்றவனாவேன்.

kedarnath

 

தொடரும்....

Read 3298 times
Rate this item
(5 votes)
Last modified on Saturday, 13 June 2015 16:34

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

2 comments

  • Comment Link Shanti Saturday, 24 September 2016 18:24 posted by Shanti

    Dear Haran,
    I have read onlly this first chapter. would like to read all 9.. Will give you feedback after reading all 9...

  • Comment Link Kulendiran Friday, 17 July 2015 08:07 posted by Kulendiran

    Good Job!"நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?
    தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்
    தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
    ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!"-வாதவூரான்

    மிக நன்றி !
    அருமையான பதிவுகள் !
    உங்கள் பதிவு எங்கள் பாக்கியம் !
    ஒம் நமசிவாய !

Leave a comment