×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

முழுமையான இறையனுபவம் – 2 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

Wednesday, 17 June 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

நமது பாரத தேசத்தைப் புண்ணிய பூமியாகக் கருதுகிறோம். கடவுள்கள் அவதரித்த தேசம்; ரிஷிகளும் முனிவர்களும் பிறந்து, கடுந்தவம் புரிந்து, பிரபஞ்சத்தின் ஒலிகளைக் கிரகித்து அவற்றை மந்திரங்களாக வெளிக்கொணர்ந்த தேசம்; வேதங்களும் உபநிடதங்களும் புராணங்களும் படைக்கப்பட்ட தேசம்; இதிஹாசங்கள் நிகழ்ந்த தேசம்; தர்மம் தழைத்தோங்கி வளர்ந்த மகோன்னதமான தேசம்; உலகமே பொறாமைப் படும் அளவுக்கு, உலகில் வேறெந்தப் பகுதியிலுமே இல்லாத அளவுக்கு ஆன்மீகக் கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட அற்புத தேசம். எனவே தான் இதைப் புண்ணிய பூமி என்று கூறிப் பெருமை கொள்கிறோம்.

kailayam

இப்பேர்பட்ட தேசத்தில் கடவுள்களின் நிரந்தர வாசஸ்தலங்களாகச் சில முக்கியமான இடங்களைப் போற்றி வழிபட்டு வருகிறோம். அவற்றுள் தலையாயது சிவபெருமான் சக்தியுடனும், கணநாதனுடனும், முருகப்பெருமானுடனும் குடியிருக்கும் திருக்கயிலாயம். திருக்கயிலாயம் இருப்பதோ இமயமலையில். இமயம் பல மலைத்தொடர்களைக் கொண்டது. எனவே இமயம் முழுவதுமே சிவபெருமானின் வாசஸ்தலமாகக் கருதப்படுகின்றது. கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் என்று எத்தனையோ புண்ணியத் தலங்கள் இமயத்தில் நிறைந்திருக்கின்றன. பல நமக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றன. இமயத்தின் பனிச்சிகரங்கள் இயற்கையின் உன்னத அழகை மட்டும் காட்டவில்லை; இறைவனின் ஒப்பில்லா ஆளுமையையும் காட்டுகின்றன.

இமயத்திலிருந்து கங்கையும் யமுனையும் மட்டுமல்லாமல் மேலும் பல புண்ணிய நதிகள் உற்பத்தியாகின்றன. கங்கை என்கிற பெயரைப் பெறுவதற்கு முன்னால் அவள் பாகீரதியாக ஆக்ரோஷமாக உருவெடுக்கிறாள். அவளுடன் உறவு கொள்வதற்காக அலக்நந்தா மற்றொரு புறத்திலிருந்து நீல நிறமாக, நீலமேக ஸ்யாமளனான கண்ணபெருமானை நினைவு படுத்தும் வகையில் பாய்ந்தோடி வருகிறாள். இன்னொரு பக்கம் மந்தாகினி மந்தகாசத்துடன் புறப்பட்டு வருகிறாள். நந்தாகினியோ நளினமாக வெட்கத்துடன் நடைபயின்று வருகிறாள். பீறிட்டு வருகிறாள் பிண்டா நதி. அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, வேதங்களில் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ள சரஸ்வதி நதியின் தோற்றமும் இமயத்தில்தானே! அலக்நந்தாவுடன் கலந்த பிறகு அந்தர்யாமியாகி பிரயாகை வரை வந்து கங்கையுடனும் யமுனையுடனும் கலந்து திரிவேணி சங்கமத்தில் நமது பாவங்கள் அனைத்தையும் கழுவி நம்மை சுத்தப்படுத்துகிறாளே! இப்படி எத்தனை எத்தனை நதிகள் இமயமெங்கும் அங்குமிங்கும் ஓடி வந்து தங்களுக்குள் கலந்து பிரயாகைகளாக உருவெடுக்கின்றன.

himayala river

ஒவ்வொரு நதி தோன்றுமிடமும், ஒவ்வொரு பிரயாகை (இரண்டு அல்லது மூன்று நதிகள் கலக்கும் இடம்) ஏற்படும் இடமும் நமது பாவங்களைப் போக்கும் புண்ணிய தீர்த்தத் தலங்களாக நிலைத்திருக்கின்றன. அவ்விடங்களில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு எழுப்பப்படிருக்கும் ஆலயங்கள் நமக்கு அமைதியையும் ஆறுதலையும் அளித்து அருள் புரிகின்றன.

himayala beauty

இயற்கை அரசியின் மணிமகுடமாகத் திகழும் இமயத்தின் அழகை என்னவென்று சொல்வது? எப்படி வர்ணிப்பது? வானுயர்ந்து நிற்கும் இமயமலைச்சாரல்களின் அழகைச் சொல்வதா! பனிபொழிந்துகொண்டிருக்கும் அம்மலைகளின் சிகரங்களை அழகென்று சொல்வதா! அப்பனிச் சிகரங்களைத் தழுவியும் நழுவியும் செல்லும் மேகக்கூட்டங்களின் அழகைச் சொல்வதா! அப்பனியாறுகள் உருகி புண்ணிய நதிகளாக உருவெடுத்து மலையெங்கும் உள்ள காடுகளின் ஊடாகவும், பாறைகளின் இடையாகவும், நீர்வீழ்ச்சிகளாகவும், நீரூற்றுகளாகவும், நீரோடைகளாகவும் பாய்ந்து ஓடி வரும் அழகைச் சொல்வதா! மலைகளுக்குப் போட்டியாகத் தாங்களும் உயர்ந்து நிற்கும் மரங்களின் அழகைச் சொல்வதா! செடிகளும், கொடிகளும், புற்களும், புதர்களும் தரும் பசுமையழகைச் சொல்வதா! வெவ்வேறு நிறங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களின் அழகையும் அவை தரும் நறுமணத்தையும் சொல்வதா! இமயம் முழுவதும் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான பறவையினங்களின் உருவ அழகையும் அவைகளின் இனிய குரல் அழகையும் சொல்வதா! இமயமலைகளினூடே வளைந்தும், நெளிந்தும், ஏறியும், இறங்கியும் செல்லும் சாலைகளின் அழகைச் சொல்வதா! இமயத்தின் அழகை வருணிக்க வார்த்தைகள் ஏது! இயற்கையைத் தெய்வமாகத் தொழும் புண்ணிய தேசத்தில் தான் இப்பேர்பட்ட அழகு மிளிரும். இப்பேர்பட்ட அழகு மிளிரும் புண்ணிய பூமியில் பிறக்க நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்!

இத்தனை அழகுகளுக்கும் மேலாக ஒரு அழகு இருக்கின்றதே! இமயத்தில் இருக்கும் ஒவ்வொரு தலத்தையும் தரிசிக்க வேண்டுமென்று ஹிமாச்சல யாத்திரை மேற்கொண்டு, மனமொன்றி இறைவனைத் தியானித்தபடியே, அவனுடைய நாமத்தைச் சொல்லியபடியே மலையேறி வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தியைவிட சிறந்த அழகு வேறென்ன இருக்க முடியும்?

athisankar

இப்படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடெங்கிலிருந்தும் இமயத்தை நோக்கி வருவதற்குக் காரணகர்த்தா யார்? அதே இறைவனே அவதாரம் எடுத்து வந்த ஆதி சங்கரர் அல்லவா! அத்வைத வேதாந்தத்தை நிலைநாட்டி வெற்றி பெற்ற அந்த மஹானின் கால் சுவடுகள் படாத இடமே இமயத்தில் இல்லையே! அப்பேர்பட்ட மஹான், இறைவனின் திரு அவதாரம், ஆதிசங்கரரின் கால்கள் பட்ட இடங்களில் நமது கால்களும் படுவதென்றால் எப்பேர்பட்ட பாக்யம் நாம் செய்திருக்க வேண்டும்! இதைவிடவும் ஒரு பிறவிப்பயன் உண்டா?

இந்த ஹிமாச்சல யாத்திரை சைவர்களுக்கு மட்டும் தானா என்றால், இல்லை என்பதே பதில். இங்கேதானே பத்ரியும் இருக்கிறார். புண்ணியத் தலமான பத்ரிநாத்தில் நாராயணன் யோக நிஷ்டையில் தவக்கோலத்தில் காட்சி தருகிறானே! அவனைப் பார்த்த மாத்திரத்தில், பத்ரியைத் தரிசித்த மாத்திரத்தில், நமது பாவங்கள் நீங்கப்பெற்று மோக்ஷம் கிட்டுகிறதென்றால், இது எப்பேர்பட்ட தலம்!

அதோடு மட்டுமல்ல! பஞ்ச பாண்டவர்கள் இமயம் வந்து தானே முக்தி அடைந்தார்கள்! அந்தப் பஞ்ச பாண்டவர்கள் நடந்த அதே பாதைகளில் தானே நாமும் நடந்து செல்லவிருக்கிறோம்! அது எப்பேர்பட்ட பாக்யம்!

இயற்கையின் அழகைப் பருகியபடியே இமயம் முழுவதையும் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பு தானாகக் கிடைத்ததா? இல்லை; இல்லவே இல்லை! இது இறைவன் அருளிய வாய்ப்பு! இறைவனின் அழைப்பு! இறைவனுக்கு நன்றி சொல்லி யாத்திரையைத் தொடர்வோம்.

ரயில் பயணம்

durento exp

தில்லி வழியாக ரிஷிகேஷ் அல்லது ஹரித்வாருக்கு விமானம் மூலமோ அல்லது ரயில் மூலமோ சென்று ஹிமாச்சல யாத்திரையை மேற்கொள்ளலாம். நாங்கள் ரயில் மூலம் சென்றோம். சென்னையிலிருந்து மே மாதம் 15ம் தேதியன்று காலை ரயிலில் (Duranto Express) தில்லி புறப்பட்டோம். அனைவரும் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தித்தோம். குழுவினரில் சிலரை முதன்முறையாகச் சந்திப்பதால், ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு, அடுத்த பதினெட்டு தினங்கள் ஒன்றாகக் கழிக்கப்போகிறோம் என்கிற சந்தோஷத்துடன் கலகலப்பானோம். எங்கள் பெட்டியில் சாமான்களை ஏற்றிவிட்டு நாங்களும் ஏறி அமர்ந்துகொண்டோம்.

ரயில் புறப்படுவதற்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்தபோது நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் வரவில்லை என்பதைக் கவனித்தோம். அந்தத் தருணமே அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தன்னுடைய கைப்பேசி அடித்த அலாரம் மணி தனக்குக் கேட்காதபடியால் உறங்கிப்போய்விட்டதாகவும், தாமதமாக எழுந்ததால் நேரத்திற்கு ரயில் நிலையம் வரமுடியவில்லை என்றும் சொன்னார். சரி விமானம் மூலம் வந்து எங்களுடன் தில்லியில் இணைந்துகொள்ளுங்கள்; விமான டிக்கட் பதிவு செய்துவிட்டு எங்களை அழைத்துச் சொல்லுங்கள் என்று சொன்னோம்.

அதன்படியே அவரும் அடுத்த நாள் விடியற்காலை விமானத்தில் டிக்கட் பதிவு செய்துவிட்டதை உறுதி செய்தார். சென்னையைக் கடந்து ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு நண்பரான ஹிந்து முன்ன்ணியைச் சேர்ந்த பசுத்தாய் கணேசன் தொலைபேசியில் அழைத்தார். நண்பர் ராஜேஷ் ராவ் ரயிலில் நாங்கள் கிளம்புவதை புகைப்படங்களாக முகநூலில் பதிவு செய்திருப்பதைப் பார்த்துவிட்டுத்தான் அவர் அழைத்தார்.

“நீங்கள் நாளைதான் கிளம்புகிறீர்கள் என்று நினைத்தேன்; இன்றே கிளம்பிவிட்டீர்களே!” என்று கேட்டுவிட்டு, “நானும் உங்களுடன் இணைந்துகொள்ள நினைத்தேன்; என்ன செய்யட்டும்?” என்று கேட்டார். பிரயாணத்துக்கான முன்பதிவுகள் செய்தபோதே அவர் வரவேண்டும் என்கிற ஆசையுடன் இருந்தார். ஆனால் உறுதியாகச் சொல்லாததால் முன்பதிவில் அவருடைய பெயரைச் சேர்க்க முடியவில்லை. இருப்பினும், “செங்கோட்டை ஸ்ரீராம் நாளை காலை விமானத்தில் தில்லி வருகிறார். நீங்களும் அவருடன் சேர்ந்துகொள்ளுங்கள்” என்று அவரையும் ஸ்ரீராமுடன் கோர்த்துவிட்டோம்.

நிஜாமுதீனிலிருந்து (தில்லியின் புறநகர் பகுதி) ஹரித்வாருக்கு அடுத்த நாள் மதியம் 3 மணிக்குத்தான் ரயில். ஆனால் நாங்கள் நிஜாமுதீனுக்குக் காலை 11 மணிக்கே சென்று விடுவோம். ஆகவே இவர்கள் இருவரும் விமானம் மூலம் தில்லி வந்து எங்களுடன் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இணைந்து கொள்வதற்குத் தேவைக்கு அதிகமான கால அவகாசம் இருந்தது.

railjourney

ரயிலில் கலகலப்பாக அரட்டை அடித்துக்கொண்டே சென்றோம். அரசியல், ஆன்மீகம், நாட்டு நடப்பு என்று அனைத்தையும் விவாதித்துக்கொண்டு சென்றோம். துராந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் தேநீர், சிற்றுண்டி மற்றும் உணவுகளுக்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்துவிடுவதால் வேளா வேளைக்குத் தவறாமல் எங்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். சிற்றுண்டி உணவுகளின் தரமும் சுவையும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது ஆச்சரியம். புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றமாக இருக்கலாம் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

vijayawada station

ரயில் விஜயவாடா நிலையத்தில் நின்றபோது சற்றே உடலையும் கால்களையும் தளர்த்திக்கொள்ளலாம் என்று கீழே இறங்கினோம். ரயிலில் பழங்கள் மட்டும் தருவதில்லையாதலால், பழங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொய்யாப்பழங்களையும் வாழைப்பழங்களையும் வாங்கினோம். ரயில் புறப்பட்டவுடன் மீண்டும் எங்கள் அரட்டைக் கச்சேரி தொடர்ந்தது. சிலர் ஓய்வெடுக்க முடிவு செய்து நித்ராதேவியை அழைத்தனர்.

ரயில் நாக்பூர் வந்தடைந்தவுடன் பலர் மனத்திலும் பாரதத்தின் சரித்திரத்தில் முக்கியமான ஒரு ஊருக்கு வந்துள்ளோம் என்கிற எண்ணம் தோன்றியது. இந்தத் தேசத்திற்காகப் பல தியாகங்களையும் சேவைகளையும் செய்துள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக ஸங்கத்தின் தலைமை அலுவலகம் உள்ள ஊர் அல்லவா! டாக்டர்ஜி ஹெட்கேவாரும், குருஜி கோல்வல்கரும், ஏனைய பெரும் தலைவர்களும் கால்பதித்த மண் அல்லவா! ஆகவே அந்த மண்ணிற்கு வணக்கம் செலுத்துவது நம் கடமை என்று முடிவு செய்து நண்பர் பால கௌதமன் குடும்பத்தினரும், மற்றும் சிலரும் சேர்ந்து, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தினைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்கிற பெருமையுடன் “பிரணாம்” செய்தனர். நாக்பூரில் ஆரஞ்சுப் பழங்களையும் வாங்கிக் கொண்டோம்.

அடுத்த நாள் (மே 16ம் தேதி) காலை 11 மணியளவில் நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்றடைந்தோம். அங்கிருந்து மற்றொரு ரயிலில் மதியம் மூன்று மணிக்கு ஹரித்வாருக்குப் பயணம். இடையே ரயில் நிலையத்தின் காத்திருப்போர் கூடத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டோம். மதிய உணவிற்கு ரயில் நிலையம் அருகே ஒரு விடுதியில் மிகவும் சுமாரான தயிர் சாதம் கிடைத்தது. நல்ல வேளையாக நண்பர் தம்பி அருண்பிரபு ஹரிஹரனின் தாயார் மோர்க்குழம்பு எடுத்து வந்திருந்ததால், அதைத் தொட்டுக் கொண்டுச் சாப்பிட அந்தத் தயிர்சாதம் வயிற்றில் பிரச்சனையில்லாமல் இறங்கியது.

இதனிடையே சென்னையிலிருந்து விமானம் மூலம் தில்லி வந்திருந்த செங்கோட்டை ஸ்ரீராமும் பசுத்தாய் கணேசனும் நிஜாமுதீன் ரயில் நிலையம் வந்து எங்களுடன் இணைந்துகொண்டார்கள். பசுத்தாய் கணேசன் அவர்களுக்கு மட்டும் ஹரித்வாருக்கான டிக்கட் எடுத்துக்கொண்டோம். ஹரித்வாருக்கான ரயில் சரியாக மூன்றரை மணிக்கு வந்தது. அதில் சாமான்களையும் ஏற்றிவிட்டு நாங்களும் ஏறி அமர்ந்தபின்னர் மீண்டும் எங்களுடைய அரட்டைக் கச்சேரி ஆரம்பம். செங்கோட்டை ஸ்ரீராமும், பசுத்தாய் கணேசனும் சேர்ந்துகொள்ளவே சபை மேலும் கலகலப்பானது.

ரயில் சுமார் 45 நிமிடங்கள் காலதாமதமாக இரவு 9.45க்கு ஹரித்வார் வந்தடைந்தது. ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள பவித்ரா வைஷ்ணோ போஜனாலயா என்கிற ஹோட்டலில் இரவு உணவு உட்கொண்டோம். இங்கே ஆரம்பித்தது ரொட்டி-சப்பாத்தியுடனான எங்களுடைய உறவு. அடுத்த ஏழெட்டு நாட்களுக்கு ரொட்டியும் சப்பாத்தியும் தான் எங்களுடைய வாழ்வாதாரம். பவித்ரா வைஷ்ணோ போஜனாலயாவில் ரொட்டியும் சப்பாத்தியும் நன்றாகவே இருந்தது. சிலர் துணிந்து தோசையும் சாப்பிட்டனர். உணவு முடிந்த பின்னர் பால கௌதமனின் நண்பர் திரு.கமல் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் 16ம் தேதி இரவு ரிஷிகேஷ் சென்றடைந்தோம். ரிஷிகேஷில் கங்கைக் கரையில் உள்ள ஸ்ரீ ஜெய்ராம் அன்னக்ஷேத்திர ஆஸ்ரமத்தில் நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைவரும் தங்குவதற்கு ஏற்றவாறு அறைகள் கிடைத்தன.

அடுத்த நாள் (17ம் தேதி) காலை அமாவாசை புண்ணிய தினம். எனவே கங்கை நதியில் ஸ்நான சங்கல்பம் செய்து குளித்துவிட்டுத் தர்ப்பணமும் செய்தோம். இந்த யாத்திரையில் பல தீர்த்தங்களிலும் புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அனைத்து நதிகளுக்கும், பிரயாகைகளுக்கும் (இரண்டு அல்லது மூன்று நதிகள் சங்கமிக்கும் இடங்கள்) ஸ்நான சங்கல்ப மந்திரங்கள் அச்சிட்ட பிரதிகளையும், தர்ப்பணங்கள் செய்யத் தேவைப்படும் தர்ப்பைகள், கூர்ச்சங்கள், பவித்ரங்கள் முதலியவற்றையும் முன்னேற்பாட்டுடன் எடுத்து வந்திருந்த தம்பி பால கௌதமனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அருமையான சில்லென்ற காற்று வீச கங்கையில் குளித்தது உடலுக்கும் மனதுக்கும் மிகவும் உற்சாகத்தை அளித்தது. கங்கைக் கரையில் அரசும் வேம்பும் இணைந்து வளர்ந்திருந்த காட்சி அருமையாக இருந்தது. அதன் கீழ் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அம்மரங்களையும், லிங்கத்தையும் வலம் வந்து நமஸ்கரித்தோம்.

எங்களுடைய திட்டப்படி, “சார் தாம்” யாத்திரை முடித்துத் திரும்பும் வழியில்தான் ரிஷிகேஷ், ஹரித்வார் சுற்றிப்பார்த்தல். ஆகவே உடனேயே யமுனோத்ரி கிளம்பத் தயாரானோம்.

(தொடரும்)

 

Read 1559 times
Rate this item
(1 Vote)
Last modified on Wednesday, 17 June 2015 18:23

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment