×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

முழுமையான இறையனுபவம் – 3 - (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

Wednesday, 24 June 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

”சார்தாம்” என்று சொல்லப்படுகிற ஹிமாலய யாத்திரைக்கு அரசு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். ரிஷிகேஷில் உள்ள அரசு அலுவலகத்தில் நம்முடைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, மேலும் நமது பெயர் முதலிய தகவல்களை வாங்கிக்கொண்டு பயண அட்டை வழங்குகிறார்கள். யாத்திரை முடியும் வரை இதைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். கேதார்நாத் செல்ல ஹெலிகாப்டரில் பதிவு செய்யும்போதும் இது தேவைப்படும். அனைவரும் வரிசையில் நின்று பதிவு செய்துகொண்டு பயண அட்டையைப் பெற்றுக்கொண்டோம். இதற்கே இரண்டு மணிநேரம் ஆனது.

chardham reg counter

ரிஷிகேஷிலிருந்து காலை ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி பயண அட்டையைப் பெற்றுக்கொண்டு யமுனோத்ரிக்குப் புறப்பட்டுவிட்டோம். டேராடூன் தாண்டிய பிறகு ஒரு சிறிய உணவு விடுதியில் காலை உணவு எடுத்துக்கொண்டோம். அங்கே இட்லியும், தோசையும் கிடைத்தன. தோசை பற்றிய விக்கிபீடியாவின் விவரங்களை ஒரு தகவல் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள். ரிஷிகேஷைத் தாண்டிவிட்டால் தென்னிந்திய உணவு கிடைப்பது கடினம்தான் என்பது தெரிந்திருந்ததால், முடிந்தவர்கள் மேலும் இரண்டு இட்லிகள் சாம்பாருடன் கூடுதலாகச் சாப்பிட்டார்கள்.

dosacafe

dosacafe wikipedia

போகும் வழியெல்லாம் அற்புதமான இயற்கைக் காட்சிகள். நரேந்திர நகர், சம்பா முதலிய இடங்கள் வழியாகச் சென்று நைன்பாக் என்கிற பகுதியில் மதிய உணவிற்காகப் பேருந்தை நிறுத்தினோம். அங்கேயிருந்த ஒரு சிறிய ஹோட்டலில் ரொட்டி, சப்பாத்தியும், சாதமும், பருப்பும், தயிரும் கிடைத்தன. நிம்மதியாக உணவருந்தினோம். அந்த ஹோட்டலின் முதலாளி அந்தப் பகுதியின் விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர் என்றார். எங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார். ஒரு ஹிந்துத்துவரைச் சந்தித்ததில் நமக்கும் மகிழ்ச்சி தானே! அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பிறகு மேலும் பயணத்தைத் தொடர்ந்து தாராசு, பிரம்மகால் வழியாக பார்கோட் என்கிற இடத்தை அடைந்து அங்கே ஒரு விடுதியில் இரவு தங்கினோம்.

 nainpak

அடுத்த நாள் காலை 7 மணிக்கெல்லாம் யமுனோத்ரி கிளம்பிவிட்டோம். யமுனோத்ரியிலிருந்து புறப்பட்டு வரும் யமுனை, இமயமலைச் சாரலில் பல இடங்களைத் தன் மென்மையான கரங்களால் தழுவியபடியே நிதானமாக, அமைதியாக, ஆரவாரமின்றிச் சென்றுகொண்டிருக்கிறாள்.

yamuna yamnunothri

சில இடங்களில் யமுனைக் கரையிலேயே மலைவாழ் பழங்குடியினர் பயிர் சாகுபடிகள் செய்துள்ளதைப் பார்க்க முடிந்தது. சில இடங்களில் கால்நடைகள் மேய்க்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. அழகிய சிறிய மலைக் கிராமங்களும் ஆங்காங்கே தென்பட்டன. அக்கிராமங்களில் உள்ள சிறார்கள் ஆற்றங்கரையிலேயே கிரிக்கெட் விளையாடுவதையும் பார்க்க முடிந்தது.

yamuna yamnunothri agri

யமுனை நதியின் பிறப்பிடமான யமுனோத்ரி இமயலமலைப் பகுதியில் கார்வால் பிரதேசத்தில் கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3300 மீட்டர் (10800 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. அவ்விடத்திற்கும் மேல் சுமார் 4400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சம்பஸார் பனியாற்றிலிருந்துதான் (Champasar Glacier) யமுனை தன் நீண்ட நெடிய பயணத்தைத் தொடங்குகிறாள்.

yamunothri temple

அசீத முனிவர் நாள்தோறும் கங்கையிலும் யமுனையிலும் குளித்துத் தவம் செய்யும் வாழ்வை மேற்கொண்டவர். அவருடைய முதுமைக் காலத்தில் அவரால் கங்கோத்ரி செல்ல முடியாததால் கங்கை நதியே அவருக்காக யமுனோத்ரி வந்ததாக நம்பப்படுகிறது.

இலங்கையை எரித்த ஹனுமான் தன் வாலை இங்கேதான் அணைத்தார். ஆகவே இந்த இடம் “பந்தர் பூஞ்ச் பர்வதம்” (Bandar Poonch Parvath) என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும், ஸ்கந்த முனிவர் என்பவர் நாரதரிடம் இதன் சிறப்பைப் பற்றிக் கூறுகையில், “யமுனை நதியில் குளிப்பதால் மட்டுமே மனிதனுக்கு மோக்ஷம் கிட்டுவதில்லை. குளித்து தரிசனம் செய்து பின்னர் இங்கேயே ஒரு நாள் தங்குபவனுக்கு அவனுடைய பாபங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறது” என்று இங்கே தங்குவதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

இப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலமான யமுனோத்ரி, ரிஷிகேஷிலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் இருக்கிறது. டேராடூன், முசோரி, பார்கோட் வழியாக ஜானகிபாய் சட்டி என்ற இடம் வரையில் தான் பேருந்து செல்லும். பின்னர் அங்கிருந்து 6 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் ஏறிச்சென்றால் யமுனோத்ரி அடையலாம். அல்லது முசோரி வழியாக ஹனுமான் சட்டி என்கிற இடத்திற்குப் போய் அங்கிருந்து 13 கிலோமீட்டர் நடந்தும் யமுனோத்ரி அடையலாம்.

janakibaisati yamunothri

ஜானகிபாய் சட்டி பேருந்துகளும் மற்ற மோட்டார் வாகனங்களும் நிறுத்தப்பட்டு மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. அங்கிருந்து பார்க்கும்போது பனி சூழ்ந்த இமயமலைச் சிகரங்கள் இளம் வெயிலில் பளபளத்துக்கொண்டிருந்தது கண்களைப் பறிப்பதாக இருந்தது. “ஆஹா...! உடனடியாக அங்கே செல்ல வேண்டுமே!” என்கிற உத்வேகம் ஏற்பட்டது. அந்த உத்வேகமும், சுற்றுப்புறச் சூழ்நிலையும் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தின.

ஜானகிபாய் சட்டியிலிருந்து, மேலே செல்வதற்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு மலைப்பாதையில் ஏறத் தொடங்கினோம். வயதானவர்களையும், இயலாதவர்களையும், குதிரையிலும், டோலியிலும் (டோலிக்கு இங்கே “தண்டி” என்று பெயர்) ஏற்றிவிட்டு, மற்றவர் கால்நடையாகவே ஏறத் தொடங்கினோம்.

போகும் வழியெல்லாம் இயற்கை அழகு கொஞ்சும் காட்சிகள் ஏராளமாகத் தென்பட்டன. பனியாறுகள் கொண்ட பிரம்மாண்ட பனிமலையாக இமயத்தின் தரிசனம். மனிதனின் அசுரக்கரங்கள் இன்னும் எட்டாத இடத்தில் இருப்பதால், அவனிடமிருந்து தப்பிப்பிழைத்த, மரங்களும், செடிகொடிகளும் கொண்ட பசுமையான பிரதேசம் கண்களுக்கு இதத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. பல வண்ணங்களில் பறவைகளும் ஆங்காங்கே தென்பட்டன.

himayala yamunothri

நடைபாதையில் ஆங்காங்கே சிறிய கடைகள் தேநீர் மற்றும் தின்பண்டங்கள் விற்றுக்கொண்டிருந்தன. அந்தக் கடைகளுக்கு முன்னால் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கு இருக்கைகளும் போட்டிருந்தார்கள்.

நடுவே ஓரிடத்தில் சிறிய ராமர் கோவில் (நடைபாதைக் கோவில்) ஒன்று இருந்தது. சில சாதுக்கள் உட்கார்ந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள். அங்கே ஸ்ரீ ராமரைத் தரிசனம் செய்து சாதுக்களுக்கு எங்களாலான தக்ஷணைகள் கொடுத்தோம். தக்ஷணைகள் பெற்றுக்கொண்டு ஆசிர்வாதம் செய்த சாதுக்கள், பிரசாதமாக தேநீர் தந்து உபசரித்தார்கள். பின்னர் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நடையைத் தொடர்ந்தோம்.

ramarkovil yamunothri

நடந்து செல்பவர்கள் குதிரைகளுக்கும், டோலிகளுக்கும் வழிவிட்டுச் செல்லவேண்டும். சிவபெருமான் நாமத்தைக் கூறியபடியும், யமுனையைப் போற்றியபடியும், இயற்கைக் காட்சிகளை ரசித்தப்படியும், யமுனோத்ரி சென்றடைந்தோம்.

yamunothri path

அங்கிருந்து யமுனை நதி தெளிவாகப் பளிங்குபோலும், சற்றே இளம்பச்சை நிறத்தோடும் அழகாக வளைந்து நெளிந்து ஒடிவருகிறது. அருகிலேயே யமுனைக்கான ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் “சூரிய குண்டம்” (Surya Kund) என்கிற வெந்நீர் ஊற்றுக்குளம் இருக்கிறது. இந்த சூரிய குண்டத்தில் ஸ்நானம் செய்வது புண்ணிய காரியம். வெந்நீர் ஊற்று கிளம்பும் இடத்தில் ஆவி பறக்க, கொதிக்க கொதிக்க நீர் ஊற்று கிளம்புகிறது.

yamunothri temple1

ஆலயத்திற்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் யமுனை நதியில் கையை வைத்தால் ஓரிரு நிமிடங்களிலேயே மரத்துவிடும் அளவுக்கு சில்லென்று பனியின் தாக்கம் உள்ளது. அருகிலேயே கொதிக்கும் நீர் ஊற்று கிளம்புவது இயற்கையின் மேலான நமது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் அதிகரிக்கிறது. பனிபோல் குளிர்ந்துள்ள அந்நதியில் தலைமுங்கிக் குளிப்பது தனி சுகம். அதில் குளித்துப் பின்னர் கொதிக்கும் சூரிய குண்டத்தில் குளிப்பது மேலும் சுகம். அற்புத அனுபவம்.

அரிசியையும் உருளைக்கிழங்கையும் யமுனைக்கு நிவேதனம் செய்கிறார்கள். அவற்றைச் சமைத்த பின்பு அதையே பிரசாதமாகத் தருகிறார்கள். சூரிய குண்டத்தின் அருகில் கொதிக்கும் நீரூற்று ஆரம்பிக்கும் இடத்தை “யமுனாபாய் குண்டம்” என்று அழைக்கிறார்கள். அங்கே “திவ்ய சிலா” பூஜிக்கப்படுகிறது. அங்கே தான் நாம் வாங்கிக்கொடுக்கும் அரிசியையும், உருளைக்கிழங்கையும் போடச் சொல்லி நிவேதனம் செய்கிறார்கள் “பண்டா” என்று கூறப்படுகிற புரோகிதர்கள்.

yamunothri temple2

கோவிலைச் சுற்றிக் கடைகள் இருக்கின்றன. அவற்றில் அரிசியும் மற்ற பொருட்களும் கிடைக்கின்றன. கோவிலிலேயே பண்டாக்களும் (புரோகிதர்களும்), வருகின்ற பக்தர்களையும் யாத்ரிகர்களையும் அணுகியப்டி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்நான சங்கல்பம் செய்த பிறகு பனியில் குளிர்ந்த யமுனை நதியிலும், பின்னர் சூடான சூரிய குண்டத்திலும் குளித்து யமுனாவின் அருள் பெற்றோம். எமனின் சகோதரியான யமுனையைக் கருமை நிறப் பளிங்குக் கல்லிலும், கங்கையை வெள்ளை நிறப் பளிங்குக் கல்லிலும் விக்கிரகங்களாக வடித்துள்ளார்கள். அரிசி உருளைக்கிழங்கு நிவேதனம் செய்து, யமுனையைத் தரிசித்து அவள் அருள் பெற்றுத் திரும்பினோம்.

yamunothri temple4

கூடுதலான யாத்திரை தினங்களைக் கொண்டவர்களுக்கு யமுனோத்ரி பாதையில் மேலும் சில பார்க்கவேண்டிய இடங்கள் உள்ளன. ரிஷிகேஷிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் நரேந்திர நகர் என்கிற இடம் இருக்கிறது. இங்கிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஞ்சபுரி என்கிற இடத்தில் கர்வால் மன்னர் நரேந்திர ஷாவின் அரண்மனை இருக்கிறது.

ரிஷிகேஷிலிருந்து யமுனோத்ரி பாதையில் சுமார் 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பா என்கிற இடத்திலிருந்து முசோரி செல்லும் பாதையில் மேலும் 21 கிலோமீட்டர்கள் சென்றால், சூர்காந்த தேவி கோயில் உள்ளது.

பாகீரதி நதியும் பிலன்கங்கா நதியும் சங்கமமாகும் தெஹ்ரி என்னும் இடமும் பார்க்க வேண்டிய இடமாகும். தேவப் பிரயாகை, உத்தரகாசி, ஸ்ரீநகர், தில்வாரா ஆகிய நான்கு முக்கியமான இடங்களுக்குச் செல்லும் பாதைகள் இங்கேதான் சந்திக்கின்றன.

உத்தரகாசி மாவட்டத்தின் எல்லையில் உள்ள தாராசு என்கிற இடத்தில் பாகீரதி நதியும் கூர்மேலா நதியும் கூடுகின்றன. இங்கேயிருந்து பாகீரதி நதியின் கரையோரமாக ஒரு பாதைப் பிரிந்து கங்கோத்ரி செல்லுகின்றது.

ரிஷிகேஷிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில், இதே பாதையில், பார்கோட் என்கிற இடம் இருக்கிறது. ஏறியும் இறங்கியும் செல்லும் பாதை, மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் கண்கவரும் காட்சிகளாகத் தருகிறது. இங்கேயிருந்து பந்தர் பூஞ்ச் பர்வதம் அழகாகத் தெரிகிறது. இங்கிருந்து ஒரு பாதை தனியே பிரிந்து யமுனை நதிக்கரை ஓரமாகவே யமுனோத்ரி செல்லுகின்றது. இந்த பார்கோட் யாத்ரிகர்கள் தங்குவதற்கு வசதியான இடமாக இருக்கிறது. இதனருகே ஹனுமான் சட்டி, சயானா சட்டி மற்றும் ஜானகிபாய் சட்டி ஆகிய இடங்களும் உள்ளன.

ஜானகிபாய் சட்டி தான் யமுனோத்ரி பாதையில் உள்ள கடைசி இடம். இங்கே குதிரைகளும் டோலிகளும் கிடைக்கின்றன. காவல்துறை மற்றும் அஞ்சல்துறை போன்ற அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. யாத்திரை காலங்கள் மட்டுமே திறந்திருக்கும் கடைகளும் உள்ளன. ஜானகிபாய் சட்டி சென்று அங்கிருந்து கால்நடையாக ஆறு கிலோமீட்டர் மேலே பயணித்து யமுனோத்ரி சென்று யமுனையைத் தரிசிக்கப் பாபங்கள் நீங்கப்பெற்று பயனடையலாம்.

(தொடரும்...)

Read 1736 times
Rate this item
(1 Vote)
Last modified on Wednesday, 24 June 2015 15:30

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment