×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

முழுமையான இறையனுபவம் – 4 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

Saturday, 04 July 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

கங்கோத்ரி

gangothri temple

கங்கை நதியின் பிறப்பிடமான கங்கோத்ரி கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3400 மீட்டர் (11,200 அடிகள்) உயரத்தில் அமைந்திருக்கிறது. பகீரதனின் தவத்தால் பூவுலகிற்குள் நுழைந்தவள் ஆதலால் கங்கை இங்கே பாகீரதியாகவே தோன்றுகிறாள். பின்னர் தேவ பிரயாகையில் அலக்நந்தா நதியுடன் சங்கமித்த பிறகுதான் கங்கை என்கிற பெயரைப் பெறுகிறாள்.

கங்கோத்ரிக்கும் மேலே 4255 மீட்டர் உயரத்தில் இருக்கும் “கௌமுக்” (கோ முகம்) என்கிற இடத்திலிருந்துதான் கங்கோத்ரி என்னும் பனியாற்றிலிருந்து உற்பத்தியாகிறது பாகீரதி. மிகவும் ஆக்ரோஷமாக நுரைத்துக் கீழிறங்கி, கற்கள் மணல் என்று அனைத்தையும் வாரிச்சுருட்டிக்கொண்டு மணலின் வண்ணத்திலேயே ஓடுகிறது பாகீரதி. தேவப்பிரயாகையில் அலக்நந்தாவுடன் சங்கமிக்கும் வரை வழிநெடுக அதே மாதிரியான குணத்துடனும் வண்ணத்துடனும் இருக்கிறது பாகீரதி.

gaumukh

கங்கை (பாகீரதி) பிறக்குமிடமான கௌமுக்கை அடைவது மிகவும் கடினம். ஒற்றையடிப்பாதை கூடக் கிடையாது. கௌரி குண்டம் மற்றும் தேவ்காட்டிலிருந்து உயர்ந்து செல்லும் பாதை மிகவும் கடினமானது. கௌமுக்கையும் கடந்து மூன்று கிலோமீட்டர் சென்றால் மேரு-கங்கோத்ரி

மலைகளுக்கு இடையே நந்தவனத்துடன் கூடிய ஒரு அற்புதமான சமவெளி அமைந்துள்ளது. இது “தபோவனம்” என்று அழைக்கப்படுகிறது. அங்கெல்லாம் வயதானவர்களுடனும் குழந்தைகளுடனும் ஒரு குழுவாகச் செல்வது இயலாத காரியம். ஆகவே, நம்முடைய பயணம் கங்கோத்ரி ஆலயத்துடன் முடிவடைகிறது.

லங்கா சட்டி என்கிற இடத்தைத் தாண்டி பைரான் சட்டி என்கிற இடம் வரை வாகனங்கள் செல்லுகின்றன. பிறகு 2 கிலோமீட்டர்கள் நடந்து கங்கோத்ரி ஆலயத்தை அடையவேண்டும்.

யமுனோத்ரி தரிசனம் முடித்த அன்று பார்கோட் என்கிற இடத்தில் தனியார் விடுதியில் தங்கினோம். அடுத்த நாள் விடியற்காலை கிளம்பி உத்தர காசி (இது ஐந்து காசிகளில் ஒன்று) வழியாகக் கிட்டத்தட்ட 180 கிலோமீட்டர்கள் பயணித்து பைரான் சட்டி அடைந்தோம்.

போகும் வழியெல்லாம் பாகீரதியின் ஆக்ரோஷமான ஓட்டத்தை ரசித்தபடியே சென்றோம். வழியெங்கும் இயற்கை பசுமை பூத்திருந்தது. மலைச்சாரல்கள், பள்ளத்தாக்குகள் என்று பார்க்குமிடமெல்லாம் பச்சைப் பசேல் என்று பசுமையின் அழகு.

gangothri hill

பசுமைப் புரட்சி செய்து பகட்டாக வலம் வந்த இயற்கை அன்னை இடையே, வெண்மையன கூழாங்கற்களை அள்ளிக்கொண்டு நுரைத்துக்கொண்டு வரும் பாகீரதியின் ஆக்ரோஷ ஓட்டத்தின் மூலம் வெண்மைப் புரட்சியையும் காண்பித்தாள். வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளின் வழியாகக் கங்கோத்ரி செல்லும்போது மலைச்சாரல்களின் ஊடாக இமயத்தின் பனிச்சிகரங்கள் தெரிந்து நமது மனதைக் கொள்ளை கொண்டன.

gangothri hills

ஆங்காங்கே குன்றுகளின் மேல் மஹாதேவரின் புகழ்பாடும் சிறு கோவில்கள். ஆங்காங்கே மலைக்கிராமங்களும் காட்சி தந்தன.

வளைந்து வளைந்து செல்லும் சாலைகளுக்குச் சமமாக அதே போல வளைந்து நெளிந்து உடன் வரும் பாகீரதி.

bhagirathi

இடையே சிறிய நீர்வீழ்ச்சிகள், சிறு நீரூற்றுகள், பாலங்கள், மணசரிவு ஏற்பட்ட பாதைகள் என்று பயணம் சில இடங்களில் ஆனந்தமாகவும், சில இடங்களில் சவாலாகவும் இருந்தது.

gangothri road

சவாலாக இருந்த இடங்களில் செல்லும்போதுதான் எங்கள் பேருந்து ஓட்டுனரின் முழுமையான திறமையும் விளங்கியது. இப்படி ஒரு திறமையான ஓட்டுனர் அமைந்ததற்கு சிவபெருமானுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்துப் பிரார்த்தனை செய்தோம்.

பைரான் சட்டியிலிருந்து 2 கிலோமீட்டர்கள் நடந்து கங்கோத்ரி ஆலயத்தை அடைந்தோம். இந்தக் கோவிலை கர்வாலின் கூர்க்கா பிரிவைச் சேர்ந்த ஜெனரல் அமர்சிங் தாப்பா என்பவர் 18ம் நூற்றாண்டில் கட்டியுள்ளார். கோவில் நிற்கும் கல் தான் பகீரதன் தவம் செய்யக் காலை ஊன்றி நின்ற இடமாகக் கருதப்படுகின்றது. அதன் காரணமாகவே ‘பகீரதசிலா’ என்ற பெயரைப் பெற்றுள்ளது.

gangothri temple2

இங்கே பஞ்ச பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் செய்ததாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. இங்கே கங்கை, யமுனை, லக்ஷ்மி மூவருக்கும் ஆதி சங்கரர் கோவில்கள் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சார்தாம் யாத்திரையில் உள்ள மற்ற இடங்களைப் போலவே கங்கோத்ரி கோவிலும் பனிக்காலங்களில் மூடப்படுகின்றது. ஏப்ரல் மாத இறுதியிலிருந்து தீபாவளி வரை திறந்திருக்கும். இடையே ஜூலை ஆகஸ்டு மழைக்காலம் யாத்ரீகர்கள் சிறிது சிரமப்படவேண்டி வரும். இக்கோவில் பூஜாரிகள் (பண்டாக்கள்) அருகில் உள்ள முக்வா என்கிற கிராமத்தில் வசிக்கிறார்கள்.

கோவிலின் அருகிலேயே பாகீரதி மிகவும் சில்லென்று குளிர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஸ்நான சங்கல்பம் செய்து குளித்து மாலை சந்தியாவந்தனம் செய்துமுடித்தோம்.

bhagirathi gangothri

ஆலயத்தில் உள்ள பண்டாக்களில் ஒருவர் எங்கள் அனைவருக்கும் சரடு கட்டி க்ஷேத்ர சங்கல்பமும் செய்து வைத்தார். பிறகு பாகீரதி நதி நீரை எடுத்துச் சென்று ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு ருத்ரம் சொல்லியபடி அபிஷேகம் செய்து கங்கா மாதாவையும் தரிசித்து அருள்பெற்றோம்.

மேலும் அதிக யாத்திரை தினங்கள் கொண்டவர்கள் அருகில் உள்ள வேறு சில இடங்களையும் பார்க்கலாம். உத்தர காசியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் கங்கோரி என்னும் இடம் உள்ளது. இங்கிருந்து வெகு அருகில் டோடிட்டால் ஏரி அமைந்துள்ளது. மனேரி என்ற இடத்தில் பாகீரதியின் குறுக்கே மனேரி-பாலி என்கிற 39 மீட்டர் உயரம் கொண்ட அணை கட்டப்பட்டுள்ளது. பல வெந்நீர் ஊற்றுகளைக் கொண்ட கங்நானி என்கிற அமைதியான சூழலுடன் கூடிய இடமும் உள்ளது.

 

உத்தர காசி

கங்கோத்ரி தரிசனம் முடித்துவிட்டு அன்று இரவு ஹர்சில் என்கிற இடத்தில் தங்கியிருந்தோம். நல்ல குளிர். லேசாக மழை வேறு பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் தங்கியிருந்த விடுதியில் முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில் உள்ள அறைகள் மூங்கில் மரங்களினால் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தந்த படுக்கை வசதிகளும் குளிருக்குக் கதகதப்பாகவும் இருந்தன.

அடுத்த நாள் விடியற்காலை உத்தர காசி, குப்த காசி வழியாகக் கேதார்நாத் பயணம் என்பது திட்டம். தங்கியிருந்த விடுதிக்கு எதிரேயே பாகீரதி நதி, அழகிய பள்ளத்தாக்கு, இமயமலைச்சாரல் ஆகியவற்றின் தரிசனம் கிடைத்தது.

உத்தர காசி (வடதிசைக் காசி) பாகீரதி நதிக்கரையில் கடல்மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. பல சிறிய பெரிய ஆறுகள் கொண்ட இம்மாவட்டத்தில், பாகீரதியும் யமுனையும் பெரிய ஆறுகள். உத்திரப்பிரதேச காசியில் (வாராணசி) உள்ளது போலவே இங்கேயும் ஒரு “அசி” நதி இருக்கிறது. ஸ்கந்த புராணத்தில் “கலியுகத்தின் காசி” என்று சொல்லப்பட்டுள்ளது உத்தர காசி.

உத்தர காசி அடைந்தவுடன், பாகீரதியில் ஸ்நான சங்கல்பம் செய்து குளித்தோம். பின்னர் அங்கே கரையிலேயே உள்ள சிறிய கோவிலில் சிவபெருமானைத் தரிசனம் செய்துவிட்டு, சற்றுத் தொலைவில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் சென்றோம்.

kasiviswanathar temple uthrakasi

இந்தக் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவபெருமான் தவத்தில் வீற்றிருப்பதாக ஐதீகம். கர்ப்பக்கிருகத்தில் இருக்கும் சிவலிங்கம் தென்திசை நோக்கி லேசாக சாய்ந்திருக்கிறது. எமன் மார்கண்டேயரின் உயிரைக் கவர முயன்றபோது, மார்கண்டேயர் சிவபெருமானைக் கட்டி அணைத்துக்கொண்டதால், அவரை எமனிடமிருந்து சிவபெருமான் காப்பாற்றினார்; அதன் காரணமாகத்தான் சிவலிங்கம் தென்திசை பக்கம் சாய்ந்திருக்கிறது என்று கூறுகிறது ஸ்தல புராணம். இந்தத் தலம் மார்கண்டேய மஹரிஷிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பக்கிருகத்தின் உள்ளேயே விநாயகர் விக்ரகமும் பார்வதி தேவி விக்ரகமும் உள்ளன. தற்போது உள்ள கோவில் தேஹ்ரி மன்னர் சுதர்ஷன் ஷாவின் மனைவி கனேதி தேவி 1857ல் கட்டியது.

கோவில் வளாகத்திற்குள்ளேயே, காசி விஸ்வநாதர் சன்னிதிக்கு எதிரே சக்தி தேவிக்கும் கோவில் உள்ளது. சக்தி தேவி 19.5 அடி உயரம் கொண்ட திரிசூலமாகக் காட்சி தருகிறாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தத்தில் இந்த திரிசூலத்தைக் கடவுள்கள் பயன்படுத்தி அசுரர்களை அழித்ததாக ஐதீகம். இந்தத் திரிசூலத்தில், விஷ்ணுவின் சுதர்சன சக்கிரமும் பரசுராமரின் கோடரியும் சேர்ந்துள்ளதாகவும் ஐதீகம்.

இங்கே பாரத திபேத்திய கலாச்சாரப் பிணைப்பைக் காட்டும் விதத்தில் கல்வெட்டுக்களும் அழகிய சிற்பங்களும் உள்ளன. வேதம் பயிலும் பாடசாலை மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் வேதம் அத்யயனம் செய்கிறார்கள்.

காசி விஸ்வநாதரைத் தரிசனம் செய்துவிட்டு உத்தர காசியில் உள்ள ஒரு உணவு விடுதியில் மதிய உணவு உட்கொண்டோம். பின்னர் தேஹ்ரி வழியாகப் பயணம் தொடர்ந்தது.

பிரம்மாண்டமான தேஹ்ரி அணை கண்கொள்ளாக்காட்சி. உலகின் உயரமான அணைகளில் ஒன்றாகவும், இந்தியாவின் அதிக உயரமான அணையாகவும் திகழ்கிறது தேஹ்ரி அணை. 260.5 மீட்டர் (885 அடிகள்) உயரமானது. அணையின் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

tehri dam

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அன்று இரவு ஸ்ரீநகர் என்கிற இடத்தில் ஒரு தனியார் விடுதியில் தங்கினோம். அடுத்த நாள் குப்த காசி வழியாகக் கேதார்நாத் பயணம்.

 

குப்த காசி

மகாராஜா அஜய்பால் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நகரம் ஸ்ரீநகர். இது தேஹ்ரி கர்வாலின் தலைநகராக 1803ம் ஆண்டு வரை இருந்துள்ளது. இங்கே அலக்நந்தாவின் கரையில் உள்ள கோவிலில் சிவபெருமான் கம்லேஷ்வர் மஹாதேவ் என்று அழைக்கப்படுகிறார். இந்நகரில்தான் உத்தரகாசி தரிசனத்தை முடித்த அன்று இரவு தங்கியிருந்தோம். தேஹ்ரியிலிருந்து ஸ்ரீநகர் வரும் வழியில் அகஸ்திய முனி என்கிற இடம் இருக்கிறது. இவ்விடத்தில் அகஸ்திய முனிவர் தவம் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ரீநகரிலிருந்து விடியற்காலைக் கிளம்பி கேதார்நாத்திற்குப் பயணத்தைத் துவங்கினோம். ருத்ரப் பிரயாகை சென்றோம். கேதார்நாத், மத்யமஹேஷ்வர், மஹாதேவ், காளிமத் போன்ற இடங்களுக்கு யாத்திரை செல்வதற்கு ருத்ரப்பிரயாகை வழியாகத்தான் செல்லவேண்டும். யாத்திரைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் இந்த ருத்ரப் பிரயாகை தான் முக்கியமான ஊர். இந்தச் சிறிய ஆனால் விசேஷமான ஊரைப் பற்றிப் பிறகு காண்போம்.

ருத்ரப் பிரயாகையைத் தாண்டி உள்ளது குப்த காசி என்கிற இடம். இந்த குப்தகாசிக்கு எதிரே உள்ள மலைச்சாரல்களின் மடியில் ‘ஊகிமட்’ என்கிற கிராமம் உள்ளது. மணிகர்ணிகா என்கிற சிறிய நீரூற்று இங்கே உள்ளது. இந்த ஊகிமட் கௌரிகுண்டத்தின் வாயில் என்று அழைக்கப்படுகின்றது. கால்நடையாகச் செல்லும் கேதார்நாத் யாத்ரீகர்கள் இங்கேயுள்ள காவல்துறைச் சாவடியில் தங்களுடைய தகவல்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஊகிமட் அருகிலேயே அர்த்தநாரீஸ்வரர் கோவில், சந்திரசேகர மஹாதேவர் கோவில் ஆகிய பழமையான கோவில்கள் இருக்கின்றன.

இந்த குப்த காசியில் தான் முக்கியமான ஒரு நபரைச் சந்தித்தோம். இவர் “கேதார்நாத் சேவா சமிதி” என்கிற அமைப்பின் “திட்ட ஒருங்கிணைப்பாளர்” என்கிற பதவியில் இருந்து சேவை புரிந்து வருகிறார்.

kedarnath seva samithi

கேதார்நாத் யாத்திரையின் போது குப்த காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலைத் தரிசிக்க வரும் யாத்ரீகர்களுக்கும், அங்கேயே தங்கி ஆன்மீக சாதனை செய்துவரும் சாது சன்யாசிகளுக்கும், அவர்கள் தான தருமங்கள் மற்றும் பல்வேறு புண்ணிய காரியங்களைச் செய்வதற்கும் தேவையான சேவைகளைப் புரிந்து வருகிறது இந்த சமிதி. அதோடு மட்டுமல்லாமல் கேதார்நாத் யாத்திரைக்குத் தேவையான உதவிகளையும் செய்து யாத்திரையை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. இந்த சமிதியின் முக்கியமான பொறுப்பில் திட்ட ஒருங்கிணைப்பாளறாக இயங்கிவரும் இவரும் ஒரு சன்யாசியே. சென்ற ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டபோது, அந்தத் தலத்தின் பெருமைகளைப் பற்றியும், கேதார்நாத் யாத்திரை பற்றியும், சேவா சமிதியின் செயல்பாடுகளைப் பற்றியும் ”தினமணி” பத்திரிகையின் இணைய இதழில் இவர் தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

அவ்வமயம், தினமணி இணையதளத்தின் ஆசிரியராக இருந்த நமது நண்பர் செங்கோட்டை ஸ்ரீராமின் தொடர்பில் இருந்துள்ளார். ஆகவே, நாங்கள் குப்த காசியைச் சேருவதற்குச் சில நிமிடங்கள் முன்னால் ஸ்ரீராம் கைப்பேசியில் தொடர்பு கொண்டவுடன், எங்களைச் சந்திக்க ஆவலுடன் வந்தார். அதன் பிறகு எங்களுடைய கேதார்நாத் தரிசனத்திற்குப் பல உதவிகள் புரிந்து தொடர்ந்து எங்களுடன் மூன்று தினங்கள் கூடவே இருந்து ரிஷிகேஷ் வரை பயணம் செய்தார். அவர்தான் ஸ்வாமி சுஷாந்தா. இவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

ஸ்வாமி சுஷாந்தாவைச் சந்தித்தவுடன், உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் செல்லவேண்டியதற்கான ஆலோசனைகளைச் சொன்னார். பிறகு அருகேயே இருந்த முக்கியமான காசி விஸ்வநாதர் ஆலயத்தைப் பற்றிச் சொல்லி அதைத் தரிசனம் செய்யவேண்டும் என்பதையும் சொன்னார். அவரின் ஆலோசனைப்படி நாங்கள் சுமார் 150 படிகள் ஏறி அந்த ஆலயத்தை அடைந்தோம். இந்தக் கோவில் கேதார்நாத், நேபாளம் பசுபதிநாத் ஆகிய ஆலயங்களுடன் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றது. எனவே இங்கு செய்யப்படும் பூஜைகளும், புண்ணிய காரியங்களும், தான தருமங்களும் அந்தத் தலங்களில் செய்த பலனைத் தருவதாக ஐதீகம்.

gupthakasi kasiviswanathar temple1

கோவில் மிகவும் அழகாக அமைந்துள்ளது. அமைப்பில் கிட்டத்தட்ட கேதார்நாத் போலவே உள்ளது. கோவிலுக்கு முன்புறம் அழகிய சிறிய குளம் உள்ளது. அதில் ஒரு பக்கம் ‘கோ’ முகத்திலிருந்தும் மறுபுறம் ‘கஜ’ முகத்திலிருந்தும் நீர் ஊற்றிக்கொண்டிருக்கிறது. அந்த நீரை எடுத்து குளத்திலேயே அர்க்யம் விட்டுப் பின்னர் அந்த நீரையே எடுத்துச் சென்று சிவலிங்கத்திற்கும் அபிஷேகம் செய்யலாம்.

travelogue gangothri

காசி விஸ்வநாதரை முழு மனதோடு தரிசனம் செய்துவிட்டுக் கீழே இறங்கி ஸ்வாமி சுஷாந்தா சுட்டிய ஒரு உணவு விடுதியில் மதிய உணவை உட்கொண்டோம். பின்னர் கேதார் நாத் யாத்திரைக்குத் தேவையான ஸ்வெட்டர் முதலிய குளிர்கால உடைகளை வாங்கிக்கொண்டோம். என்னையும் ஸ்ரீராமையும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்ற ஸ்வாமி சுஷாந்தா தன்னிடம் இருந்த ஐந்து ஜெர்கின்களையும் கொடுத்து உதவினார்.

பின்னர் குப்த காசியிலேயே இருக்கும் ஹெலிகாப்டர் தளத்திற்குச் சென்றோம்.

(தொடரும்...)

 

Read 1618 times
Rate this item
(1 Vote)
Last modified on Saturday, 04 July 2015 16:05

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link premier v prabhaakaran Wednesday, 08 July 2015 05:04 posted by premier v prabhaakaran

    really super very very useful information thanks ji

Leave a comment