×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

முழுமையான இறையனுபவம் – 5 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

Monday, 13 July 2015 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
கேதார்நாத்
 
உத்தர்கண்ட் மாநிலத்தில் ருத்ரப் பிரயாகை மாவட்டத்தில் உள்ளது கேதார்நாத். கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3500 மீட்டர்கள் (11,700 அடிகள்) உயரத்தில் இமயமலைச்சாரலில் அமைந்துள்ளது இத்தலம். 22,850 அடி உயரத்தில் “மஹாபந்த்” எனப்படும் பனிச்சிகரத்தின் வாயிலில் இருக்கிறது கேதார்நாத். கேதார்நாத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் “கௌரி குண்ட்” (கௌரி குண்டம்) என்கிற இடம் இருக்கிறது. இது அம்பிகை தவம் செய்த இடம். இங்கேயும் அற்புதமான வெந்நீர் ஊற்று இருக்கிறது. இதில் அவசியம் நீராட வேண்டும். இது சூரிய சந்திரர்கள் வழிபட்ட தலமாகும். 
 
 
Kedarnath Temple
 
 
உத்தர காசி, தாராசு வழியாக தெஹ்ரி வந்துதான் கேதார்நாத் செல்ல முடியும். தெஹ்ரியிலிருந்து கேதார்நாத்துக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கன்காலிச்சிர்  பாத்ரி, தில்வாரா வழியாக சுமார் 183 கிலோமீட்டர் பாதை. மற்றொன்று, ஸ்ரீநகர், ருத்ரபிரயாகை, தில்வாரா வழியாக சுமார் 178 கிலோமீட்டர் பாதை. இரண்டு பாதைகளும் அழகான இயற்கைக் காட்சிகள் நிரம்பிய பாதைகள். கௌரி குண்டம் வரையில்தான் பேருந்தில் செல்ல முடியும். பிறகு அங்கிருந்து 14 கிலோ மீட்டர் மலைப்பாதையில் ஏறிச் செல்ல வேண்டும். இங்கும் குதிரை மற்றும் டோலி வசதிகள் உண்டு. குப்த காசியிலிருந்து ஹெலிகாப்டரில் செல்பவர்களுக்கு கௌரி குண்டம் செல்ல வாய்ப்பில்லை. இல்லாவிட்டால் கௌரி குண்டம் சென்று வெந்நீரில் ஸ்நானம் செய்து அம்பிகை அருள் பெற்றுத் திரும்பவும் குப்த காசி வந்து ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும். எங்களுடைய பயணத்திட்டப்படி அவகாசம் இல்லாததால் நாங்கள் கௌரி குண்டம் செல்லவில்லை.  
 
நர-நாராயணர்கள் பத்ரிகாஸ்ரமத்தில் தவமிருந்து, மண்ணால் ஆன லிங்கத்தை வைத்துப் பூஜை செய்தபோது பிரசன்னமான சிவபெருமான், அவர்கள் விருப்பத்திற்கிணங்க ஜோதிர் லிங்கமாகk, கேதாரநாதராக அங்கேயே தங்கிவிட்டதாகச் சிவபுராணம் கூறுகிறது.
 
மகாபாரதப் போர் முடிந்ததும் பஞ்ச பாண்டவர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபடும் நோக்கத்துடன் கட்டப்பட்ட கோயில் இது என்று கருதப்படுகிறது. போர் முடிந்தவுடன் பஞ்சபாண்டவர்கள் அமைதி (ஷாந்தி) வேண்டி இங்கே வந்ததாகவும், யுதிஷ்ட்ரன் தவிர திரௌபதி உட்பட மற்ற ஐவரும் இங்கேயிருந்துதான் சுவர்க்க லோகம் புகுந்தார்கள் என்றும் கூறப்படுகின்றது. பஞ்சபாண்டவர்கள் வந்த சமயத்தில் சிவபெருமான் எருமைக்கடா உருவெடுத்து ஓடியதாகவும், சிவனைப் பிடிக்க அவர்கள் பின் தொடர்ந்து சென்றபோது அவர் பூமிக்குள் மறைய ஆரம்பிக்க, எருமையின் பின்பக்கம் கேதாரத்திலும், மற்ற நான்கு பாகங்களும் வேறு நான்கு இடங்களிலும் தங்கியதாக ஐதீகம். அவருடைய புஜம் துங்கநாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், வயிறு மத்யமஹேஷ்வரத்திலும், ஜடை கல்பேஷ்வரத்திலும் தங்கிவிட்டதாகக் கருதப்படுகிறது
 
துங்கநாத் ஊகி மட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், சோப்டாவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இவ்விடத்திலிருந்து கேதார்நாம், பஞ்சசூவி, நந்ததேவி, தூனகிரி, பந்தர்பூஞ்ச் ஆகிய இடங்களைக் காண முடியும். 
 
ருத்ரநாத் கோபேஷ்வரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குதான் ’வைதாரிணி’ நதி பாய்கிறது. இந்தத் தலத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் நீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார்.  
 
மத்யமஹேஷ்வர் குப்த காசியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. 
 
கல்பேஷ்வர் ஜோஷி மட்டிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு குகைக்கோவில். 
 
கேதார்நாத்தில் தான் இறுதியில் சிவபெருமான் வாராணசியிலிருந்து நந்தி உருவெடுத்து வந்து பாண்டவர்களுக்குத் தரிசனம் கொடுத்தார் என்பது ஐதீகம். இந்த ஐந்து இடங்களும் “பஞ்ச கேதாரம்” என்று வழங்கப்படுகின்றன. இந்தத் தலத்தை “ஸுமேரு” அல்லது “பஞ்ச பர்வதம்” என்றும் அழைக்கிறார்கள்.
 
 
Kedarnath Temple Rear View
 
 
சிவபெருமானின் அவதாரமாகவே கருதப்படும் ஆதி சங்கரர் வழிபட்ட அற்புதத்தலம் கேதாரம். இறைவனிடம் அவர் ஸ்படிக லிங்கங்கள் பெற்ற பின் முக்தி லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த புண்ணியத் தலமல்லவா! 
 
அதோடு மட்டுமல்ல, திருஞான சம்பந்தரும் சுந்தரரும் பாடிய தலம் கேதாரம். இருவரும் தென்கயிலாயமான திருக்காளத்தியைத் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்தே கேதாரத்தையும் தரிசனம் செய்து பாடியுள்ளனர். 

ஹெலிகாப்டர் பயணம்

இவ்வளவு சிறப்பு மிக்க கேதாரத்தைத் தரிசனம் செய்ய எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்! முக்கியமானவற்றையும் ஒரு இரவு மட்டும் தங்கக்கூடிய அளவுக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை பேருந்திலேயே விட்டு விட்டு ஹெலிகாப்டர் தளத்திற்குச் சென்றோம்

 குப்த காசி ஹெலிகாப்டர் தளத்திற்குச் சென்ற சிறிது நேரத்தில் எங்களுக்கும் நாங்கள் உடன் வைத்திருந்த பைகள் மற்றும் சாமான்கள் ஆகியவற்றுக்கும் எடை பார்த்து ஹெலிகாப்டர் தாங்கக்கூடிய அளவுக்கு ஏற்றவாறு நால்வர் / ஐவர் / அறுவர் என்று சிறு குழுவினராகப் பிரித்து ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்தனர்.

 

Guptha Kasi Helicopter

 

ஹெலிகாப்டர்கள் வருவதும் போவதுமாக பறந்துகொண்டே இருந்தன. யார் பைலட் அருகே முன்பக்கம் உட்கார வேண்டும், யார் பின்பக்கம் உட்கார வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டு அறிவுறுத்தினார்கள் அலுவலர்கள். எங்களுடைய பொருட்களையும் பைகளையும் அலுவலர்களே ஹெலிகாப்டரின் பின்பக்கம் உள்ள பகுதியில் வைத்தனர். அலுவலர் அறிவுறுத்தலின் படியே நாங்களும் அமர்ந்தோம்.

குப்த காசி ஹெலிகாப்டர் தளத்திற்குச் சென்றதிலிருந்தே உள்ளத்தில் இனம் புரியாத ஒரு பரபரப்பு. ஹெலிகாப்டரில் அமர்ந்ததும் ஏழே நிமிடங்களில் கேதார்நாத் சென்றடைந்துவிடுவோம் என்கிற எதிர்பார்ப்பு. எப்பேர்பட்ட பாக்யம்! கேதார தரிசனம் கிடைக்க வேண்டும் என்கிற ஆசை வெகு காலமாக இருந்தாலும் எதிர்பார்ப்பு இல்லாத நேரத்தில் திடீரென்று கிடைத்த வாய்ப்பு! மனதிலே பரவசம்! ஹெலிகாப்டரில் ஏறி பைலட் அருகில் அமர்ந்ததுமே சிவபெருமான் உள்ளத்தில் ஏறி அமர்ந்துவிட்டார்.

மஹாமேரு தரிசனம் மனமெங்கும் பரவசம்

ஓம்! நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய,
மஹாதேவாய, த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய,
த்ரிகாலாக்கினி காலாய, காலாக்னிருத்ராய,
நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, ஸர்வேஸ்வராய,
ஸதாசிவாய, ஸங்கராய, ஸ்ரீமன் மஹாதேவாய நம!

மனதிற்குள் மந்திரம் ஓட, கண் எதிரே இமயமலைச் சாரல்கள் எழுந்து நின்றன. ஹெலிகாப்டர் மேலும் உயர்ந்த பிறகு கீழே குனிந்து மலைசாரல்களைப் பார்க்கையில்... மஹேஸ்வரனின் விஸ்வரூப தரிசனம்... மஹாமேருவாக! மஹேஸ்வரனே மஹாமேருவாக! மஹாதேவனே மஹாமேருவாக!

மஹாமேரு! மஹேஸ்வரனின் இருப்பிடம் மட்டுமா? தேவி ஆதிபராசக்தியின் இருப்பிடமும் அல்லவா? தேவி ராஜராஜேஸ்வரியின் இருப்பிடம் மஹாமேருவின் மத்தியில் ஸ்வர்ணமயமான நகரமாக அல்லவா இருக்கிறது! ஒன்பது பிராகாரங்களைக் கொண்ட நகரமல்லவா அது! அங்கேதானே பரமேஸ்வரனுடன் பராசக்தி குடியிருக்கிறாள்! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும், இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னகத்தே கொண்டு ஸ்யாமளியாக, சாந்தஸ்வரூபியாக, அந்த ஸ்வர்ணமயமான நகரத்தில் காட்சி தருகிறாளே!

அப்பனும் அம்மையும் நினைவில் ஏற, கூடவே சக்தியிடமிருந்து தோன்றிய மூலக் கடவுள் மஹா கணபதியும் சக்தியையே வேலாயுதமாகக் கொண்ட ஸ்கந்தனும் நெஞ்சில் குடிகொண்டனர்!

கூடவே பொற்கோலம் பூண்ட மஹாமேருவாக விளங்கும், சிவபெருமானின் அம்ஸமான ஆஞ்சனேயரின் நினைவு!

தொடர்ந்து உள்ளத்தில் குடியேறியவர் ஆதி சங்கரர்! அத்தனை சிறு வயதில் கால்நடையாகவே எப்பேர்பட்ட இடத்திற்கு வந்திருக்கிறார்! இப்பேர்பட்ட இடத்திற்கு வருவதென்றால் சிவபெருமானின் அருளின்றி எப்படி சாத்தியமாகும்? மஹாமேருவே ஸ்ரீ சக்கிரம் என்கிற யந்திரம் அல்லவா! கமாக்ஷியாகவும், லலிதாவாகவும், ராஜேஸ்வரியாகவும் காட்சி தரும் பராசக்தி யந்திர ரூபத்திலும் அருள் பாலிக்கிறாளே! திருவானைக்காவலிலும், காஞ்சிபுரத்திலும் தேவியினுடைய உக்ரத்தை யந்திரம் ஸ்தாபித்து அடக்கி அவளை ஸாந்தஸ்வரூபியாகச் செய்த மஹான் அலவா ஆதி சங்கரர்! அப்பேர்பட்ட மஹான் சிவபெருமானின் அவதாரமாகத்தானே இருக்க முடியும்!

மின்னலென எண்ணங்கள் மனதிலே மாறி மாறித் தோன்ற, கண்களின் முன்னே மஹாமேருவின் விஸ்வரூப தரிசனம்! ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ஓடத்தொடங்குகிறது...

த்ரயம்பகம் யஜா மஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்;
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!

பரவசத்தின் உச்சத்தில் கண்கள் பனிக்க நீர் பெருகுகின்றது.

ஹெலிகாப்டர் கேதார்நாத் தளத்தில் இறங்கும்போது கண்ணீரை அடக்கிக்கொண்டாலும், தளத்திற்கு வெளியே வந்த பிறகு விம்மல் வெடித்துக் கிளம்புகிறது. நண்பர்கள் தம்பி ராஜேஷ் ராவும், தம்பி அருண் பிரபுவும் “அண்ணா! அண்ணா!” என்று ஆசுவாசப்படுத்துகின்றனர். வாழ்வில் கடந்த முப்பது வருடங்களாக அனுபவித்து வரும் அத்தனை சோகங்களும் துக்கங்களும் ஒரு முறை மனதிலே ஓடிச் செல்கின்றன. “இந்த தரிசனம் ஒன்று போதும். இனி வாழ்வில் எனக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை” என்று நண்பர்கள் இருவரிடமும் கூறினேன்.

இதற்குள் அடுத்த ஹெலிகப்டரில் தம்பி பால கௌதமன் இறங்கி வருவதைப் பார்த்தவுடன், என்னையறியாமல் ஓடிச்சென்று அவனைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன்.

“என்ன அண்ணா?” என்ற கௌதமனிடம், “இப்படி ஒரு தரிசனம் கிடைக்கக் காரணம் நீ தான் கௌதமா. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு!” என்று சொன்னேன்.

ஆலய தரிசனம்

அனைவரும் கேதார்நாத் வந்தாயிற்று. குளிருக்கு இதமாக சூடான தேநீரும் அருந்தியாயிற்று. கேதார்நாத் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் நடந்து சென்றால் கேதார்நாத் ஆலயம். இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கேதாரேஸ்வர லிங்கம் கருங்கல்லால் ஆனது. ஆலயத்திற்கு வெளியே பெரிய நந்தி இருக்கின்றது. கர்ப்பக்கிரஹத்தின் அருகே உள்ள மண்டபத்திலும் ஒரு நந்தி இருக்கின்றது. சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான ‘சிவபிண்டா’ இங்கே இருக்கின்றது. ஆலயத்தில் அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களும் இருந்தன.

கோவில் வாசல் விசாலமாக இருக்கின்றது. ஆங்காங்கே சாதுக்களும் சன்யாசிகளும் அமர்ந்து பிரார்த்தனையும் பூஜைகளும் செய்துகொண்டிருக்கின்றனர். சில சாதுக்கள் புகை பிடித்துக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. சிலர் உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டிருந்தனர். சில சாதுக்கள் நீண்ட ஜடாமுடி வைத்திருந்தனர்.

 

Sadhus infrontof temple

 

சார் தாம் தலங்கள் ஏப்ரல் மாதம் கடைசியிலிருந்து தீபாவளி வரை சுமார் 6 மாதங்கள் தான் திறந்திருக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். கேதார்நாத் ஆலயமும் ஏப்ரல் கடைசியில் திறக்கப்பட்டு தீபாவளி முடிந்ததும் மூடப்படுகின்றது. சூரியன் வைகாசி மாதம் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது திறக்கப்பட்டு, விருச்சிக ராசியில் புகும்போது மூடப்படுகிறது. குளிர்காலத்தில் கடுமையாகப் பனி பொழியும் என்பதால் இங்கே மனிதர் இருப்பது சாத்தியமில்லை. பண்டாக்கள் எனப்படும் ஆலயத்தின் பூஜாரிகள் சம்ஸ்க்ருத பண்டிதர்கள். இவர்கள் குளிர்காலத்தில் ஊகிமட், குப்த காசி, மத்யமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று விடுவார்கள். பனிக்காலத்தில் கேதரேஸ்வரருக்கு ஊகிமட்டில் பூஜைகள் நடக்கின்றன.

காலையில் நிகழ்த்தப்படும் பூஜை ’நிர்வாண தரிசனம்’ என்றும் மாலையில் நிகழ்த்தப்படும் பூஜை ‘சிங்கார தரிசனம்’ என்றும் சொல்லப்படுகிறது. இவை தவிர காலை வேளைகளில் பால்போக், மஹாபிஷேகம், ருத்ராபிஷேகம், அஷ்டோபசார பூஜை, சம்பூரண ஆரத்தி போன்ற பலவிதமான பூஜைகளும் செய்யப்படுகின்றன. மாலை வேளைகளில் சிவ சஹஸ்ரநாம்ம், சிவ அஷ்டோத்ரம், சிவ மகிமை ஸ்தோத்ரம், ஏகாந்த சேவை போன்ற பலவகையான பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

அற்புத ஆரத்தி

நாங்கள் மாலை நேரத்தில் சென்ற படியால் ஏகாந்த சேவையில் கலந்துகொண்டோம். அன்றைய தினம் சிறப்பு ஆரத்தியும் இருந்தது எங்கள் பாக்கியம். சிறப்பு ஆரத்திக்குக் கட்டணச் சீட்டுக்கள் பெற்றுக்கொண்டு முடிந்த அளவு கர்பக்கிருகத்திற்கு அருகில் சிவலிங்கம் நன்கு தெரியுமாறு இடங்களைத் தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டோம். அமர்ந்துகொண்டவர்களைச் சுற்றி சிலர் நின்றுகொண்டு தரிசனம் செய்தோம்.

தலைமை அர்ச்சகர்தான் பலவித ஆரத்திகளைச் செய்கிறார். மற்றவர்கள் அமர்ந்துகொண்டு ஸ்தோத்திரங்கள் சொல்லுகின்றனர். பெரிய மணிகள் கணீர் கணீர் என்று ஓசை எழுப்ப, தலைமை அர்ச்சகர் சிவலிங்கத்தைப் பிரதிக்ஷணம் வந்து லேசாக நடனம் ஆடியபடியே பலவிதமான ஆரத்திகளை இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அற்புதமான சிறப்பு ஆரத்தி கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடந்தேறியது.

ஆரத்தியில் அனைவரும் ஒன்றிப்போனோம். நண்பர் தம்பி ராஜேஷ் ராவ் இருந்த இடத்தில் ஆடாமல் அசையாமல் கண்களில் நீர் பெருக பக்திப்பரவசத்தில் திளைத்திருந்தார். ஆரத்தி முடிந்ததும், தலைமை அர்ச்சகரே அனைவருக்கும் விபூதியை நெற்றியில் இட்டார். விபூதியைப் பிரசாதமாக அவர்கள் நம் கைகளில் கொடுப்பதில்லை. மலர்களை மட்டும்தான் தருகிறார்கள். மலர்களுடன் சேர்ந்து விபூதி கிடைத்தால் அது இறைவன் திருவருள் என்றே சொல்லவேண்டும். இறைவனின் அருள் அன்புத்தோழி பத்மப்ரியா வெங்கடாத்ரிக்குக் கிடைத்தது. மலருடன் சேர்ந்து விபூதியும் அவருக்குக் கிடைத்தது. மற்றபடி விபூதிப் பிரசாதம் வேண்டுபவர்கள் வெளியே அலுவலகத்தில் வாங்கிக்கொள்ளலாம்.

ஏகாந்தம்.... ஆனந்தம்... அமைதி

அடுத்த நாள் விடியற்காலை மீண்டும் தரிசனம் செய்து பூஜையும் செய்யவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான சீட்டுக்களையும் பெற்றுக்கொண்டோம். பிறகு தங்குமிடத்திற்குச் சென்று இரவு உணவு உட்கொண்டோம். யாத்ரிகர்கள் தங்குவதற்கு ராணுவத்தினர் கூடாரங்கள் போட்டு வைத்துள்ளனர். சமையல் மற்றும் உணவருந்தும் இடங்களிலும் அவற்றுக்கென பிரத்தியேகக் கூடாரங்கள் போடப்பட்டுள்ளன.

 

Tents by Army

 

சற்றுத் தொலைவில் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இவை மட்டுமல்லாமல் பையோமெட்ரிக் பதிவு அலுவலகம், மருத்துவ வசதி மற்றும் மருந்துகள் விற்பனை அலுவலகம், போன்றவையும் உள்ளன. பூஜாரிகளுக்கென்று தனியாகத் தங்கும் விடுதிகளும் உள்ளன.

 

Registration Dispensary Guesthouse

 

ஒவ்வொரு கூடாரத்திலும் Dormitory வகையிலான பத்து கட்டில்கள் (மேலே ஒருவர்; கீழே ஒருவர் படுத்துக்கொள்ளலாம்) போடப்பட்டுள்ளன. மெத்தை போட்டு அதன் மேல் Sleeping Bag என்று சொல்லக்கூடிய உறங்கும் பை படுக்கை வசதியும் வைத்துள்ளனர். அந்த உறங்கும் பைக்குள் முழுவதுமாகப் புகுந்துகொண்டு கதகதப்பாக உறங்கலாம். இரவில் தட்பவெட்ப நிலை -3* C; -4* C என்கிற அளவிற்கு இருந்தது. எல்லோரும் குளிர் உடைகள், குல்லாய்கள், மஃப்ளர்கள் என்று அணிந்துகொண்டு உறங்கும் பைக்குள் புகுந்துகொண்டு உறங்கிப்போனார்கள்.

 

Birth Facilities inside Tents

 

நண்பர் தம்பி ராஜேஷ் ராவ் சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு உறங்கச் சென்றார். அந்த அமைதியான நேரத்தில் படுக்கை மேல் அமர்ந்துகொண்டு சில நிமிடங்கள் சிவபெருமானைத் தியானம் செய்துவிட்டு உறங்கிப்போனேன்.

தங்கச் சிகர தரிசனமும் அற்புதமான அபிஷேக பூஜையும்.

கேதார்நாத் தரிசனம் தந்திருந்த பரவசம் மனமெங்கும் வியாபித்திருப்பதை அந்த அமைதியிலும் உணர முடிந்தது. 4 மணிக்கு வைத்திருந்த அலாரம் அடிக்கும்போதும் விழித்தபடியே இருந்ததைப் போன்ற உணர்வு. நானும் ராஜேஷ் ராவும் எழுந்து சென்று பனிப்பொழிவில் நடுங்கியபடியே ஜில்லென்ற நீரில் பல்துலக்கி முகம் கை கால்கள் கழுவி வந்தோம்.

லேசாக விடியும் நேரம். மனி நான்கரை தான் ஆகியிருந்தது. கூடாரத்தின் வாசலில் நின்று அண்ணாந்து இமயமலைச் சிகரங்களைப் பார்த்தோம். கருநீல வானில் கருமையாக இமயம் தெரிய கீழே எங்கள் கூடாரங்களிலிருந்து லேசாக மின் விளக்கின் வெளிச்சம் எட்டிப்பார்த்தது. இன்னும் சற்று நேரத்தில் கதிரவன் கிளம்பிவிடுவான். தன் கதிர்களால் அவன் நீலகண்ட பர்வதத்தை அபிஷேகம் செய்து வழிபடும் தருணத்திற்காகத்தான் காமிராவைக் கையில் வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தோம்.

 

Snow Peaks behind Tents

 

கதிரவனின் ஒளிக்கிரணங்கள் வெளியே தெரிவதற்கு முன்னால் மேலும் சற்று விடிந்த தருணத்தில் வெள்ளிப்பனி மலையின் அழகு கம்பீரமாக இருந்தது. அதையும் காமிராவில் பிடித்துக்கொண்டோம். அதன் பின்னணியில் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம்.

மனதில் பஞ்சாக்ஷர மந்திரம் ஓடிக்கொண்டிருக்க, கண்கள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க, கதிரவனின் கீற்றுக்கள் தழுவியதால் சிகரங்களின் உச்சியில் பொன்னிறம் வெளிப்பட்டது.

 ஆஹா... இந்த அற்புத தரிசனத்தைத்தானே வேண்டி நின்றிருந்தோம்! ஒவ்வொரு சிகரத்திலும் கதிரவன் கதிர்கள் தாக்கிய இடங்கள் பொன்னிறத்தில் மாறத்தொடங்கின.

 

Golden Peak Neelkhand Parvath

 

இதோ நீலகண்ட பர்வதம்.... கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறுகிறது. ஆஹா.... முழுவதுமாகப் பொன் நிறத்தில் ஜொலிக்கின்றது! மனம் சிலிர்த்துப்போனது! மீண்டும் பரவசம் சூழ்ந்துகொண்டது. எப்பேர்பட்ட தரிசனம்! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!

இதற்குள் அனைவரும் எழுந்து தயாராகவே, காலைப் பூஜைக்குத் தேவையான பொருட்களுடன் கோவிலுக்கு நடக்க ஆரம்பித்தோம். கோவிலிருந்து ஒலி பெருக்கியில் தென்னிந்திய முறைப்படி ஸ்பஷ்டமாக ருத்ரம் ஒலித்துக்கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து சொல்லியபடியே நடந்தோம்.

கோவிலை அடைந்ததுடன், வாசலில் சுத்தமான இடமாகப் பார்த்து அமர்ந்தோம். நாங்கள் கொண்டு சென்ற கலசத்தில் நீர் பிடித்து அதற்கு முறையான பூஜை செய்தோம். ஹோமம் வளர்த்து சமிதாதானம் செய்தோம். அனைத்து பூஜைகளையும் முறையாகச் செய்தார் நண்பர் தம்பி பாலகௌதமன். பிறகு கலச நீருடன், நாங்கள் கொண்டு சென்ற மற்ற அபிஷேகப் பதார்த்தங்களுடன் கோவில் உள்ளே சென்றோம்.

பலர் அங்கே கர்ப்பக்கிருகத்தில் சிவ லிங்கத்திற்குப் பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். நாங்களும் ஒரு பக்கமாக அமர்ந்து, அபிஷேகங்கள் செய்து, வஸ்திரம் சார்த்தி, தீப ஆராதனையும் செய்தோம். எப்பேர்பட்ட பாக்யம். எங்கள் கரங்களால் சிவ லிங்கத்தைத் தழுவி கண்களில் ஒற்றிக்கொண்டோம். கோவிலைச் சேர்ந்த பண்டா ஒருவர் அனைவருக்கும் லிங்கத்திலிருந்து வழித்தெடுத்த விபூதி பூசி முதுகில் அறைந்து ஆசிர்வாதம் செய்தார். வெளியே வந்ததும் அனைவருக்கும் மந்திரித்த சரடுகளைக் கட்டிவிட்டார்.

அவருக்கு தக்ஷிணை கொடுத்த பிறகு, கோவிலை வலம் வந்து வழிபட்டோம். அப்போது கோவிலின் பின்பக்கம் ஒரு பெரிய பாறைக்கு விபூதியும் செந்தூரமும் இட்டு மலர் மாலையும் போடப்பட்டிருந்ததைக் கண்டோம். 2013ல் வெள்ளம் வந்தபோது அந்தப் பாறை இருந்ததால்தான் வெள்ளம் தடுக்கப்பட்டு கோவிலைத் தாக்காதவாறு கோவிலைச் சுற்றி இரண்டு பக்கமாகச் சென்றதாம். எனவே கோவிலை வெள்ளத்தின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய அந்தப் பாறையையும் வழிபடுகின்றனர் தற்போது. நாங்களும் அந்தப் பாறையை வழிபட்டோம்.

 

Rock that saved Temple

 

முதல் நாள் மாலையில் மஹாமேரு தரிசனம்; அற்புதமான பூஜை; ஆரத்தி; சிவபெருமானின் தரிசனம்; அடுத்த நாள் காலை பொன்னிறமாக நீலகண்ட பர்வத தரிசனம்; மீண்டும் கோவிலில் நாங்களே செய்த பூஜை, என்று கேதார்நாத்தை விட்டுக் கிளம்பும் வரை மனம் பரவசத்தின் உச்சத்திலேயே இருந்தது.

 

Yatra group infrontof temple

 

பின்னர் குழுவைச் சேர்ந்த அனைவரும் கோவில் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கேதாரநாதனின் அற்புத தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் ஹெலிகாப்டர் ஏறி மீண்டும் குப்த காசி வந்தடைந்தோம்.

 

தொடரும்...

 
 
Read 1362 times
Rate this item
(1 Vote)
Last modified on Tuesday, 14 July 2015 11:24

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment