×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

முழுமையான இறையனுபவம் – 6 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

Saturday, 08 August 2015 13:22 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
கேதாரநாதரைத் தரிசனம் செய்துவிட்டு குப்த காசி வழியாகத் திரும்பி வந்து பத்ரிநாத் செல்லும் வழியில் சமோலி என்கிற ஊரில் ஒரு விடுதியில் இரவு தங்கினோம். அந்த விடுதியின் அருகே “வித்யபாரதி அகில பாரதிய சிக்ஷான் சங்கம்” என்கிற அமைப்பு ஸ்வாமி திருக்ஞானந்தா என்கிற துறவியின் ஆதரவுடன் நடத்தி வரும் பள்ளிக்கூடம் இருக்கிறது.
 
 
Saraswathi Sishu Vidya Mandhir
 
 
அந்தப் பள்ளியின் கட்டிடம் ஒன்றிலே குறிப்பிடப்பட்டிருந்த வாசகம் எங்கள் அனைவரையும் கவர்ந்தது.  “Mother and the Motherland are Superior to Heaven” என்று எழுதப்பட்டிருந்தது. 
 
 
Bharathis Verse
 
அதைப் பார்த்தவுடன், “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்கிற மஹாகவி பாரதியின் மஹா வாக்கியத்தை நினைவு கூர்ந்தார் அன்பு நண்பர் தம்பி பாலகௌதமன். இமயமலைச் சாரலில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மஹாகவியை நினைவூட்டும் ஒரு வாசகம் பொறிக்கப்படிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மஹாகவி பாரதியின் நினைவோடு, காலை சீக்கிரமாகவே பத்ரிநாத் செல்லத் தயாரானோம். 
வசிஷ்டர் வாயால் பத்ரியின் பெருமை
 
 
Himalayas from Badrinath
 
பத்ரிநாத் தலத்தின் சிறப்பு சொல்லி மாளாது. வசிஷ்ட மஹரிஷி கூறியுள்ளதை நினைவில் கொண்டாலே போதுமானது. வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி, “ஸ்வாமி! ஸ்ரீ பத்ரி நாதரின் பெருமையையும் அவருடைய முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறுங்கள். பத்ரியைத் தரிசிப்பதனால் ஏற்படும் பயன்களையும் கூறுங்கள்” என்று கேட்கிறார். அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக, “ஹிமாலயத்தில் இருக்கும் பத்ரிநாத்தைத் தரிசிப்பவன் தன்னுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று மோக்ஷம் அடைகிறான்; அவரின் தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. எவனொருவன் சதா சர்வகாலமும் இறைவனைப் பிரார்த்திக்கிறானோ, அவனுக்கே பத்ரியைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கிறது. வேறு எந்த க்ஷேத்திரங்களிலும் தன்னுடைய பாவங்களிலிருந்து விடுதலை பெற முடியாதவன்கூட, பத்ரிநாத் வந்து பக்தியுடன் சரணடைந்தால், பத்ரிநாதர் அவனுடைய பாவங்களைப் போக்கி மோக்ஷம் தருகிறார். ஸ்நான சங்கல்பம் செய்து கங்கையில் நீராடி, பின்னர் தப்த குண்டம் என்று சொல்லப்படுகிற வெந்நீர் ஊற்றிலும் நீராடிவிட்டு, பத்ரிநாதரை வலம் வந்து தரிசிப்பது ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தருகிறது. அகண்ட தீபம் ஏற்றி, கோவிலை வலம் வந்து, பத்ரிநாதாரின் பாதார விந்தத்தைப் பற்றிக்கொண்டு பிரார்த்தனை செய்கிறவனிடம், ‘நீ ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைகிறாய்’ என்று பத்ரி நாதரே வாழ்த்துகிறார்.”   என்று வசிஷ்ட முனிவர் பத்ரிநாத்தின் பெருமையைத் தன்னுடைய மனைவியான அருந்ததியிடம் தெரிவிக்கிறார். 
 
பத்ரிநாத்
 
இப்பேர்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பத்ரிநாத், உத்தர்கண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ஒரு நகரப் பஞ்சாயத்தாக இருக்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 3100 மீட்டர் உயரத்தில் அருமையான இயற்கைச் சூழலில் அமைந்திருக்கிறது. அங்கிருந்து மேலும் 400 அடி உயர ‘வஸுதரா’ என்கிற அருவியிலிருந்து இறங்கி வரும் அலக்நந்தா நதி  பத்ரிநாதர் ஆலயத்தின் அருகே ஓடிக்கொண்டிருக்கிறது. கங்கை மேலிருந்து ஆக்ரோஷமாகப் பூமிக்கு இறங்கியபோது, பூமி அதைத் தாங்கும் பொருட்டு அலக்நந்தாவுடன், தௌலி, மந்தாகினி, பிண்டார் முதலிய 12 கிளை நதிகளாக உருவெடுக்கிறது. 
 
 
 
Alaknandha River
 
 
பத்ரிநாத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திபேத்திய எல்லையில் உள்ள ‘மனா’ என்கிற இந்தியாவின் கடைசிக் கிராமத்தில் ஒரு இயற்கை அழகு மிகுந்த இடத்தில் சரஸ்வதி நதியின் தோற்றுவாய் உள்ளது. சம்ஸ்க்ருதத்தில் ‘பத்ரி’ என்றால் ‘இலந்தை’ என்று பொருள். ஆகவே இந்தத் தலம் இலந்தை வனமாகவும் திகழ்கிறது. 
 
 
இந்த இலந்தை வனத்தில் மஹாவிஷ்ணு தவக்கோலத்தில் இருக்கும்போது, அவரை சூரியனின் வெப்பத்திலிருந்து காப்பதற்காக அவர் அருகே மஹாலக்ஷ்மி தானே பத்ரியாக நின்றிருப்பதால்,  நந்தப் பிரயாகையிலிருந்து ஸாதோபந்த் வரை உள்ள இந்த க்ஷேத்திரத்திற்கு பத்ரி விஷால் என்று பெயர்.  பத்ரியைத் தரிசிக்காமல் முக்தி அடைய முடியாது என்பது நம்பிக்கை. ரிக் வேதத்தின் சில வாசகங்கள் இங்கு எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. 
 
 
பத்ரிநாதர் ‘பத்ரீசர்’ என்றும் குறிப்பிடப்படுகிறார். இவர் வைணவர்களுக்கு வைகுண்டநாதராகவும், சிவனடியார்களுக்கு பஞ்சமுகி சிவனாகவும், அம்மன் உபாசகர்களுக்கு காளியாகவும் காட்சி தருகிறார் என்பது நம்பிக்கை. எனவே, இது சைவ வைணவத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் பௌத்தர்களுக்கு சாக்கிய முனியாகவும், ஜைனர்களுக்கு தீர்த்தங்கரராகவும் காட்சி தருகிறார் என்றும் நம்பப்படுகிறது. அதாவது தரிசிக்க வரும் பக்தர் எந்த உருவில் பத்ரிநாதரைத் தரிசிக்க விரும்புகிறார்களோ அந்த உருவில் காட்சிதந்து அருள்பாலிக்கிறார் என்பது நம்பிக்கை. 
 
ஆபத்தும் அழகும் நிறைந்த பாதை
 
இப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த பத்ரிநாத், சமோலியிலிருந்து கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆயினும் இந்த தூரத்தைக் கடக்க நான்கரை மணிநேரம் ஆகிறது. ஒற்றைப்பாதையாகத்தான் சாலை செல்கிறது. இந்த ஒற்றைப்பாதையில்தான் இருவழிப் பயணங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு பக்கம் அதலபாதாளமும், ஒரு பக்கம் உயர்ந்த மலைச்சாரல்களும் என்று இந்தச் சாலை ஓட்டுனர்களுக்குச் சவாலாக இருக்கிறது. மேலும், கடந்த 2013 வெள்ளத்தில் நிலச்சரிவுகளினால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளதால், இச்சாலையில் செல்வது ‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற வாசகத்துக்குப் பொறுத்தமாக இருக்கிறது. சாலைப்பணிகள் வேறு ஆங்காங்கே நடந்துகொண்டிருந்ததால், பயணம் சற்று மெதுவாகவே தான் இருந்தது.
 
 
 
On way to Badrinath 1
 
 
“இந்தப் பயணத்தில் இயற்கைக் காட்சிகள் அருமையாக இருக்கும். நீங்கள் புகைப்படம் எடுப்பதற்கு வசதியாக ஓட்டுனரின் அருகில் உட்கார்ந்துகொள்ளுங்களேன்” என்று எங்களுடன் வந்திருந்த ஸ்வாமி சுஷாந்தா யோசனைத் தெரிவித்தார். அதன்படி காமிரா சகிதமாக நான் ஓட்டுனரின் காபினுக்குள் சென்று அவர் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தேன். அருகே ஓட்டுனரின் உதவியாளரும் இருந்தார். கூடவே நண்பர் கௌதமனும் அமர்ந்திருந்தார். அருகே எஞ்ஜின் பெட்டி மேல் நண்பர் செங்கோட்டை ஸ்ரீராமும் அமர்ந்திருந்தார்.  
 
 
ஓட்டுனரின் அருகே அவர் காபினில் அமர்ந்து பயணம் செய்வது எங்களுக்கு ஒரு விதத்தில் பெரும் சவாலாக இருந்தது. அவர் ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவை பீடி புகைத்தார். தன் முன்னே குறைந்த பக்ஷம் அரை டஜன் பீடிக் கட்டுகளை வைத்திருந்தார். அவருடைய காபினில் பீடிப் புகை சூழ்ந்திருந்தது. ஆனால் மிகவும் திறமையான ஓட்டுனர் என்பதாலும், அவர் தனக்கு உறக்கமோ, அசதியோ ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகப் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையானவராக இருக்கலாம் என்கிற எண்ணத்தினாலும், சகித்துக்கொண்டோம். சில நிமிடங்களிலேயே எங்களுடைய கஷ்டத்தைப் புரிந்துகொண்ட ஓட்டுனர் புகைப்பதைக் குறைத்துக்கொண்டார்.
 
 
 
Efficient Driver
 
 
இங்கே ஒரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும். பேருந்துக்குள் உள்ள எங்கள் இருக்கையிலிருந்து புகைப்படங்கள் எடுப்பதைவிட, ஓட்டுனரின் காபினிலிருந்து புகைப்படம் எடுப்பது சற்று சௌகரியமாக இருந்தது. இந்த யாத்திரையில் 2000 புகைப்படங்களுக்கு மேலாக எடுதிருக்கிறேன். அதில் கிட்டத்தட்ட 1000 புகைப்படங்கள் ஓடும் பேருந்திலிருந்து எடுக்கப்பட்டவைதான். 
 
 
உயர்ந்த மலைச்சாரல்கள்; பனிச்சிகரங்கள்; அடர்ந்த காடுகள்; மெல்லிய கீற்றுகளாக மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள்; சிற்றோடைகள்; சில இடங்களில் நிதானமாகவும், சில இடங்களில் ஆக்ரோஷமாகவும் ஓடிவரும் ஆறுகள்; வளைந்து நெளிந்து போகும் சாலை; பயணிப்பதற்குச் சவாலாக இருக்கும் மண்சரிவு மிகுந்த ஆபத்தான இடங்கள்; சில இடங்களில் பனிப்பாறைகளுக்கு அடியிலிருந்து ஊற்றெடுத்து வரும் நீர்; என்று அருமையான இயற்கைக் காட்சிகள். அனைத்தையும் காமிராவில் சிறைப்பிடித்தேன். 
 
 
 
On way to Badrinath 2
 
 
சில இடங்களில் நீர்வீழ்ச்சிகள் சாலையிலும் குறுக்கிட்டு செல்கின்றன. அவ்விடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது. அந்த மாதிரியான இடங்களில் எதிர் எதிரில் வாகனங்கள் சந்திக்கும்போது இருபக்கத்து ஓட்டுனர்களுக்கும் நல்ல புரிதல் ஏற்படுவது அவசியம். அதற்கு ஏற்றார்போல் இந்த அபாயம் மிகுந்த சாலையில் ஓட்டும் ஓட்டுனர்கள் நிதானமாகவும், ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடனும், மிகவும் திறமையாகவும் ஓட்டுகிறார்கள். இப்பாதையில் அடிக்கடி பயணம் செய்யும் அனுபவம் வாய்ந்த பஸ், லாரி மற்றும் டிராவல்ஸ் கம்பெனி ஓட்டுனர்கள் நன்றாகச் சமாளித்து ஓட்டுகிறார்கள். ஆனால் அனுபவம் இல்லாமல் வருகின்ற ஓட்டுனர்கள் திணறித்தான் போகிறார்கள்.
 
 
நீர் வீழ்ழ்ச்சி குறுக்கிடும் ஓரிடத்தில் இரு சக்கர வாகன்ங்கள் ஓட்டி வந்தவர்கள் பாடு பெரும்பாடாகிவிட்டது. நீரினால் நிலம் அரிக்கப்பட்டுள்ளதால் சாலையில் வெறும் கூழாங்கற்களே இருந்தன. அந்தக் கூழாங்கற்கள் மீது இரு சக்கர வாகனங்கள் வழுக்கிக்கொண்டு விழுகின்றன. இறங்கித் தள்ளிக்கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. கூழாங்கற்களின் மேல் தள்ளுவதும் மிகவும் சிரமம். ஆகவே மிகவும் திணறிப்போனார்கள். 
 
 
 
On way to Badrinath 4
 
 
சாலை செப்பனிடும் பணி நடந்துகொண்டிருந்த ஓரிடத்தில் மேடும் பள்ளமுமாக இருந்த சாலையின் மேல் தகரங்களை வரிசையாக வைத்து சற்றே சமன் படுத்தியிருந்தார்கள். அந்தத் தகரங்களின் மேல்தான் வாகனங்கள் செல்ல வேண்டியிருந்தது.
 
 
 
Tin Sheets laid on road
 
 
இவ்வாறாக ஆபத்தையும் அழகையும் ஒருங்கே ரசித்தப்படி பத்ரிநாத் சென்றடைந்தோம். 
 
பத்ரிநாத் தரிசனம்
 
 
பத்ரிநாத் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தபோது, நான்கு பக்கமும் இமயமலைச் சிகரங்கள் வானுயர்ந்து நிற்பது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அவையாவன நீலகண்ட பர்வதம் (சிவபெருமான்), ஊர்வசி பர்வதம் மற்றும் நர-நாராயண பர்வதங்கள் ஆகும். மஹாவிஷ்ணு, நர நாராயணர்களாக அவதரித்து, இந்த லோகக்ஷேமத்திற்காக நீண்ட நெடிய தவம் புரிந்து வருகிறார். நர நாராயணர்களின் தவத்தைக் கண்டு அஞ்சிய தேவேந்திரன் அவர்களது தவத்தைக் கலைக்க அப்ஸரஸ்களை அனுப்புகிறான். உடனே மஹாவிஷ்ணுவானவர் அந்த அப்ஸரஸ்களின் அகம்பாவத்தை அடக்கவும், தேவேந்திரனுக்குப் பாடம் கற்பிக்கவும், தன் துடையிலிருந்து மிகவும் அழகான தேவதையைப் போன்ற ஊர்வசியை உருவாக்குகிறார். ஊர்வசியின் அழகைக் கண்டு வெட்கிப்போன அப்ஸரஸ்கள் தங்கள் அகம்பாவத்தைக் களைகின்றனர். தேவேந்திரன் மனம் திருந்துகிறான். பிறகு நர நாராயணர்கள் ஊர்வசியைத் தேவேந்திரனின் அரண்மனைக்கே அனுப்புகிறார்கள். அவளும் தேவேந்திரனின் அரசவையில் ஆடலரசியாகப் பணிபுரிகிறாள். 
 
 
இந்த நான்கு பர்வதங்களும் நெடிதுயர்ந்து நிற்கும் ரம்மியமான இயற்கைச் சூழலைக் கொண்ட பத்ரிநாத் தலத்தைத் தரிசிக்க, பேருந்திலிருந்து வேண்டிய பொருட்களையும் மாற்று உடைகளையும் மட்டும் எடுத்துக்கொண்டு ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஏப்ரல் மாத இறுதியிலிருந்து மே மாத முதல் வாரத்திற்குள் ஒரு நல்ல நாளாக ஜோதிடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்ரிநாத் ஆலயம் திறக்கப்படுகிறது. பிறகு நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மூடப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் முக்கிய விசேஷ தினங்களாக கோவில் திறக்கும் முதல் நாள் (ஜோதி தரிசனம்), வாமன த்வாதசி, ஜன்மாஷ்டமி, ராமநவமி, ஏகாதசி ஆகிய தினங்கள் கருதப்படுகின்றன. 
 
 
காலை 5 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது. தரிசன நேரம் காலை 6.30 முதல் பகல் 1 மணி வரையிலும், பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும். ஆலயம் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. கோவில் வாயிலில் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் விதமாகப் பத்து தூண்கள் அமைந்துளன. கருடன் அழகாக வீற்றிருக்கிறார். அருகே விநாயகர் விக்ரகமும், ஹனுமான் விக்ரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களைத் தாண்டி உள்ளே பிரவேசித்தால் கண்டா கர்ணனுக்கும், மஹாலக்ஷ்மிக்கும் தனி சன்னிதிகள் இருக்கின்றன. குபேரன், நாரதர், உத்தவர், நர நாராயணர்கள் ஆகியோரும் காணப்படுகின்றனர். ஆதி சங்கரர், ராமானுஜர், வேதாந்த தேசிகர் ஆகியோரின் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.  
 
 
கருவரையில் தவம் செய்யும் நிலையில் பத்ரிநாதர் காட்சி தருகிறார். இவரைத் தரிசிக்காமல் முக்தி அடைய முடியாது என்பது நம்பிக்கை. கருவரைக்கு அருகே தர்ம சிலா என்கிற உண்டியலும் ஹோம குண்டமும் இருக்கின்றன.   
 
 
மூலஸ்தானமான கர்ப்பக்கிருகத்தின் விமானம் பொன்னால் வேயப்பட்டிருக்கிறது. அடுத்து உள்ள தரிசன மண்டபத்தில் பூஜைகளும் இதர வழிபாடுகளும் நடைபெறுகின்றன.  மூன்றாவதாக உள்ள சபா மண்டபத்தில் இருந்துதான் பக்தர்கள் பத்ரிநாதரைத் தரிசனம் செய்ய முடியும். 
 
 
வராஹ ஷிலா, நாரத ஷிலா, நரசிங்க ஷிலா, கருட ஷிலா, மற்றும் மார்கண்டேய ஷிலா என்று பஞ்ச ஷிலாக்கள் இங்கே இருக்கின்றன. இவை தப்த குண்டத்திற்கு மேலே அமைந்திருக்கின்றன. அதே போல தப்த குண்டத்தைச் சுற்றிலும் பிரஹலாத தாரா, கூர்ம தாரா, ஊர்வசி தாரா, பிருகு தாரா, இந்திர தாரா ஆகிய ஐந்து அருவிகள் (பஞ்ச தாரா) இருக்கின்றன. சிரார்த்தம், தர்பணம் முதலிய பித்ரு காரியங்களைச் செய்வதற்கு அலக்நந்தா கரையில் பிரம்ம கபாலம் என்கிற இடம் உள்ளது. 
 
 
கருட ஷிலாவிலிருந்து உற்பத்தியாகும் வெந்நீர் ஊற்றுதான் தப்த குண்டமாகவும், நாரத குண்டமாகவும் உருவாகியிருக்கிறது. இந்த நாரத குண்டத்திலிருந்துதான் ஆதி சங்கரருக்கு சாளக்ராமம் கிடைக்கிறது. பத்ரி நாதார் ஆலயம் முதன் முதல் எப்போது நிறுவப்பட்டது என்பதற்குச் சான்றுகள் கிட்டவில்லை. நாரத குண்டத்தில் ஸ்நானம் செய்ய முழுகிய சங்கரர் கையில் ஒரு சாளக்ராமம் கிடைக்கவே, அதை தப்த குண்டத்திற்கும் கருட சிலைக்கும் நடுவே பிரதிஷ்டை செய்தார். பிறகு 5ம் நூற்றாண்டில் குஷ்ட நோயால் அவதிப்பட்ட கர்வால் மகாராஜா, வரதராஜ ஆச்சாரியார் என்ற தன் குருவின் ஆலோசனைப்படி, இந்த மூர்த்தியைத் தற்போது உள்ள மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியுள்ளார். அதன் பயனாக அவருடைய நோயும் நீங்கப்பெற்றுள்ளது. 
 
 
மஹாபாரதம், ஸ்கந்த புராணம், பாகவத புராணம் ஆகியவை பதிரநாத் தலத்தைப் பற்றிப் பேசுகின்றன. பத்ம புராணம் இந்தப் பகுதியைப் பற்றிச் சொல்கிறது. பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பத்ரி நாதைரின் பெருமைகளைத் திவ்யப் பிர்பந்தங்களாகப் பாடியுள்ளனர்.  
 
 
பத்ரிநாதர் யோக நிலையில் பத்மாஸனத்தில் இருப்பதால், பௌத்தர்கள் இவ்வாலயத்தைப் பௌத்த விஹாரமாகவும், இறைவனை புத்தராகவும் கருதி இங்கே வருகிறார்கள். 
 
 
கருமை நிற சாளக்ராமத்தில் உள்ள பத்ரி நாதருக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் நடைபெருகிறது. ’மஹாபோக்’ என்ற நிவேதனம் செய்த பின் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை சிங்கார தரிசனத்தின் போது, விஷ்ணு சஹஸ்ரநாமமும், கீத கோவிந்தமும் பாடப்படுகின்றன. 
 
 
பத்ரி நாதருக்குப் பூஜை செய்யும் உரிமையை மலையாள நம்பூதரிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் ஆதி சங்கரர். எனவே அவருடைய காலத்திலிருந்து அவர்களே பாரம்பரியமாக இங்கே இறைத்தொண்டு புரிந்து வருகிறார்கள். மலையாள நம்பூதரிக்கு ‘ராவல்’ என்று பெயர். இவர்களை பத்ரிநாத் கோவில் அறங்காவலர் குழுவினரும் கர்வால் மஹாராஜாக்களும் நியமிக்கிறார்கள். 
 
 
நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் கோவில் மூடப்பட்ட பிறகு, இவர்கள் பத்ரியிலிருந்து இறங்கி கீழே ஜோஷி மடத்திற்குச் சென்று விடுவார்கள். மீண்டும் கோடை காலத்தில் கோவில் திறக்கப்படும் வரை அங்கே தான் இருப்பார்கள். 
 
 
பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் அரை கிலோமீட்டர் நடந்த பிறகு கடைத்தெருக்கள் வழியாகக் கோவிலை அடைந்தோம். கோவில் அருகிலேயே அலக்நந்தா நதி வேகமாக சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறது. கோவில் படிக்கட்டுகள் அருகே அமர்ந்து ஸ்நான சங்கல்பம் செய்துகொண்டோம். பிறகு வெந்நீர் ஊறும் தப்த குண்டத்தில் நீராடி ஸந்தியாவந்தனம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்து முடித்தோம். மாலை நான்கு மனிக்குத்தான் நடை திறப்பார்கள் என்பதால் படித்துறையில் ஏகாந்தமாக தியானம் செய்யவும் நேரம் கிடைத்தது. 
 
 
 
Alaknandha River near Badrinath Temple
 
 
பிறகு கோவில் பண்டா (புரோகிதர்) ஒருவர் மஹா சங்கல்பம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தோம். பிறகு புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் பாராயணம் செய்தோம். நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் ஆழ்வார் பாசுரங்கள் சிலவற்றைப் பாடி எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார்.
 
 
பின்னர் ஆலயம் சென்று பத்ரிநாதனைத் திருப்தியாகத் தரிசனம் செய்து, வெளியே மஹாலக்ஷ்மியையும் தரிசனம் செய்து, கோவிலை வலம் வந்து நமஸ்கரித்தோம். 
 
 
 
Badrinath Dharshan
 
 
இந்திய-திபேத்திய எல்லையில் இந்தியாவின் கடைசிக் கிராமம் 
 
 
பத்ரி நாதனைத் தரிசித்த பிறகு, அங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மனா கிராமத்தை வந்தடைந்தோம். மனா கிராமம் இந்திய-திபேத்திய எல்லையில் உள்ள இந்தியாவின் கடைசிக் கிராமம். கடல் மட்டத்திலிருந்து 10,130 அடி உயரத்தில் இருக்கிறது. எல்லையில் பேருந்துகளும் மற்ற வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. அதற்குப் பிறகு கிராமத்திற்குச் செல்ல நடைபாதைதான் இருக்கிறது. நடைபாதை என்பதை விட மலைப்பாதை என்று சொல்வதே சரி. நடக்கத் தொடங்கியதுமே சில்லென்ற காற்றுடன் மழைத்தூறலும் சேர்ந்துகொண்டு நம்மைச் சீண்டுகின்றன. 
 
 
 
Indias Last Village A view from a distance
 
 
குளிர் தாங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கவே, அனைவரும் குளிரில் நடுங்கியபடியே நடக்கிறோம். சிலர் அங்கேயிருக்கும் வனவாசிகளிடம் குரங்குக் குல்லாய்கள் வாங்கி தலையையும் காதுகளையும் மறைத்து அணிந்துகொள்கிறோம். அந்தப் பகுதியில் வசிக்கும் வனவாசிகள், “ஜெய் ஸ்ரீராம்”, “பாரத் மாதா கி ஜெய்” என்று சொல்லி நம்மை வரவேற்கிறார்கள்.   
 
 
 
Mana Village on Indo Tibetan Border
 
 
அழகான இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதி. மனா கிராமத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வசுதரா நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 120 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுகிறது. அதிலிருந்துதான் அலக்நந்தா நதியானவள் குதித்தோடி வருகிறாள். அலக்நந்தா பள்ளத்தாக்கு மனதைக் கொள்ளை கொள்கிறது. பள்ளத் தாக்கில் ஒரு கோவிலும் இருக்கிறது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வனத்திற்கு லக்ஷ்மி வனம் என்று பெயர். இங்கே லக்ஷ்மி தவம் செய்ததாக நம்பிக்கை.    
 
 
இந்தக் கிராமத்திற்குள் நுழைந்து சென்று சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானத்தை அடையலாம். போகும் வழியில், கணேசர் குகை, வியாசர் குகை, பீமன் குகை இருக்கின்றன. வியாசர் சொல்ல கணேசர் மஹாபாரதம் எழுதிய இடம் இது தான். மேலும் மஹாபாரதம் எழுதிய பிறகு வியாசர் மன சஞ்சலத்துடன் இருந்தபோது, நாரதர் ஆலோசனைப்படி மானுடரின் மோக்ஷத்திற்காக பாகவதம் எழுதிய இடம்தான் வியாச குகை என்று நம்பப்படுகிறது. இது 5300 வருடங்களுக்கு மேல் பழமையானது.   
 
 
 
Sri Ganesha Cave
 
 
கணேசர் குகையிலும், வியாசர் குகையிலும் விக்ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிவ லிங்கமும் இருக்கிறது. பண்டாக்கள் எனப்படும் புரோகிதர்கள் அந்த இடங்களின் புராணக் கதைகளைச் சொல்லி, நமக்குத் தரிசனம் செய்து வைத்துப் பிரசாதம் வழங்குகிறார்கள். 
 
 
 
Sri Vyasas Cave
 
 
அதன் பிறகு நாம் தொடர்ந்து செல்லும்போது கிராமத்தின் எல்லையில் “இந்தியாவின் கடைசி தேநீர் கடை” இருக்கிறது. இந்தியாவின் கடைசித் தேநீர் கடைக்குச் சென்றுவிட்டு தேநீர் அருந்தாமல் வரலாமா? எங்கள் குழுவில் தேநீர், காபி பழக்கமே இல்லாத தம்பி பால கௌதமன் கூட அங்கே எங்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தினார். சில்லென்ற காற்று வீச மழைச்சாரலும் நம்மைத் தாக்க, சூடான தேநீர் குடித்தது மனதுக்கும் உடலுக்கும் இதமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. 
 
 
 
Indias Last Tea Shop Indo Tibetan Border
 
 
தேநீர் தந்த உற்சாகத்துடன் மேலும் நடந்தோமானால், சரஸ்வதி நதியின் உற்பத்திஸ்தானத்தை அடைகிறோம். அந்த இடத்தை நெருங்கும்போதே நாம் பரவசத்தின் உச்சத்தை எட்டுகிறோம். ஏனென்றால் இந்த இடத்தில் மட்டும்தான் சரஸ்வதியை நாம் கண்களால் காண முடியும். நமது தேசமெங்கும் பூமிக்கடியே  அந்தர்யாமியாகப் பிரவகித்து ஓடிக்கொண்டிருக்கும் மஹா புண்ணிய நதியான சரஸ்வதியைக் கண்களால் பார்க்க நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!  
 
 
 
Saraswathi Starting Point
 
 
ஓ.... என்கிற சப்தம் மட்டும் கேட்கும் அமைதியான சூழ்நிலையில், நாம் நிற்கும் இடத்திலிருந்து சற்றே கீழே, நம்மால் நெருங்க முடியாத ஒரு பள்ளமான பகுதியில் இருக்கிறது சரஸ்வதியின் உற்பத்தி ஸ்தானம். ஒரு சிறிய குகை போன்ற இடத்திற்குள்ளிருந்து வெளியே வருகிறாள் சரஸ்வதி. வெளியே வந்து அலக்நந்தா பள்ளத்தாக்கை அடைந்து அவளுடன் இரண்டறக் கலக்கிறாள். கலந்தபின், அந்தர்யாமியாகிவிடுகிறாள். சரஸ்வதியும் அலக்நந்தாவும் கலக்குமிடம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இளம்பச்சை நிறத்தில் தெளிவாக சரஸ்வதியும், சற்றே மண்கலந்த வெள்ளை நிறத்தில் அலக்ந்ந்தாவும் சேருகின்ற இடம் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. இவ்விடத்திற்கு கேசவ பிரயாகை என்று பெயர்.
 
 
 
Saraswathi Alaknandha Sangamam 
 
 
சரஸ்வதி நதியைக் குப்பியில் பெற்றுக்கொண்டு திரும்புகிறோம். பத்ரிநாத் ஊருக்குள், உடுப்பியைச் சேர்ந்த ஸ்ரீ ஆனந்த மடத்தின் கிளை இருக்கிறது. இரவு அங்கே தங்கினோம். அந்தக் குளிரில் எங்கள் அனைவருக்கும் சூடாக உப்புமா உணவளித்து எங்களை மக்ழிச்சியில் ஆழ்த்தினர் மடத்தினர்.  
 
 
 
Sri Ananta Mutt
 
 
அடுத்த நாள் விடியற்காலை சூரிய உதயத்தில் கேதார்நாத்தில் கண்டதைப் போலவே நீலகண்ட பர்வதத்தின் சிகரங்களைத் தங்க நிறத்தில் பார்க்க வேண்டும் என்கிற அவா மனதில் எழுந்தது. ஆனால் மேகக்கூட்டங்களும் பனியும் மூடியிடுந்ததால் அந்தக் காட்சி கைகூடவில்லை. 
 
 
 
Neelkhand Parvath
 
 
 
பிறகு கோவிலுக்குச் சென்று  மீண்டும் பத்ரிநாதரின் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு அருள்பெற்றோம். 
பார்க்க வேண்டிய மற்ற இடங்கள் 
 
பஞ்ச பத்ரி
 
 
விஷால் பத்ரி (பத்ரி விஷால்) ஏற்கனவே பார்த்தோம். இதுதான் பத்ரிநாதரின் பிரதான தலமாகும். பூஜைகள் நடக்கும்போது, “ஜெய் பத்ரி விஷால் கி” என்று பக்தர்கள் கோஷம் எழுப்புகிறார்கள். 
 
 
யோகபத்ரி பத்ரிநாத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஜோஷி மட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பாண்டு மஹாராஜா, பாண்டுகேஷ்வரரைத் துதித்து தியானம் செய்ததால், இது “யோகத்யான் பத்ரி” என்று பெயர் பெற்றது. 
 
 
பவிஷ்ய பத்ரி என்கிற இந்த ஊர், ஜோஷி மட்டிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், 2744 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 
 
 
விருத்த பத்ரி ஜோஷி மட்டிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், பீப்பல் கோட் போகும் பாதையில் அமைந்துள்ளது. இது ‘ப்ரித பத்ரி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட தலமாகும். 
 
 
ஆதிபத்ரி கர்ண பிரயாகையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் ராணி கேத் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இங்கே குப்தர்கள் கால கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் நாராயணன் கோவில் மிகவும் பிரசித்தமானது. 
 
 
விஷால் பத்ரி, யோக பத்ரி, பவிஷ்ய பத்ரி, விருத்த பத்ரி, ஆதிபத்ரி ஆகிய இவை ஐந்தும் “பஞ்ச பத்ரி” என்று வழங்கப்படுகின்றன.
 
 
கருடகங்கா: பத்ரிநாதர் தன்னுடைய கருட வாகனத்தில் பத்ரி வனத்திற்குச் செல்லும்போது கருடனை இங்கே விட்டுச் சென்றதால், இவ்விடம் கருடகங்கா என்று பெயர் பெற்றது. 
 
 
பாண்டுகேஷ்வர்: பாண்டு மஹாராஜ தன்னுடைய இறுதி காலத்தை இங்கே கழித்ததாகச் சொல்லப்படுகிறது, இங்கே பத்ரிநாதர் யோகத்யானத்தில் காட்சி தருவதாக நம்பிக்கை. 
 
 
ஹனுமான் சட்டி: ஹனுமார் இவ்விடத்தில் நிஷ்டையில் அமர்ந்து பத்ரிநாதரைக் குறித்துத் தவம் புரிந்தார் என்பது நம்பிக்கை. பாண்டவர்களும் இங்கே ஹனுமாருக்குப் பூஜை செய்ய, அவர்களுக்கு ஹனுமான் காட்சி தந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே, இவ்விடம் ஹனுமான் சட்டி என்கிற பெயரைப் பெற்றுள்ளது. 
 
 
தேவ்தர்ஷன்: இவ்விடத்திலிருந்துதான் பத்ரிவனம் துவங்குகிறது. பெயருக்கு ஏற்றார் போல், இங்கிருந்து பார்த்தால் பள்ளத்தாக்கில் பத்ரிநாத் ஆலயத்தைத் தரிசனம் செய்ய முடியும். 
 
 
பாம்னி: இங்கே விஷ்ணுவின் பாத வடிவில் அமைந்துள்ள ஒரு பாறை சரணபாதுகா என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஊர்வசிக்கு ஒரு கோவிலும் உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பத்ரிநாத் உள்ளது.  
 
 
ஜோஷிமட்: ஆதி சங்கரர் நிறுவிய மடங்களுள் ஒன்றான இந்த ஜோஷிமட் மிகவும் புகழ் பெற்றதாகும். இங்குள்ள கல்பவிருக்ஷம் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. நரசிம்மர், துர்கை ஆகியோருக்கு இங்கே கோவில்கள் இருக்கின்றன. இங்கிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபோவனம் என்கிற பள்ளத்தாக்கில் பவிஷ்ய பத்ரி இருக்கிறது. குளிர்காலத்தில் பத்ரி நாத் கோவில் மூடப்படுவதால், ஜோஷி மட்டில்உள்ள நரசிம்மர் கோவிலில் பத்ரிநாதரை வழிபடுகிறார்கள்.  
 
 
பத்ரிநாதர் தரிசனத்தை முடித்துக்கொண்ட பிறகு அங்கிருந்து கிளம்பி பஞ்சப்பிரயாகைத் தலங்களைத் தரிசிக்கச் சென்றோம். 
 
தொடரும்...  
  
         
Read 1760 times
Rate this item
(2 votes)
Last modified on Monday, 10 August 2015 11:16

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment