×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

முழுமையான இறையனுபவம் – 7 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

Saturday, 29 August 2015 08:52 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
பஞ்ச பிரயாகை
இரண்டு அல்லது மூன்று நதிகள் சந்திக்கும் இடங்கள் பிராயாகை என்று சொல்லப்படுகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாகை (அல்லஹாபாத்) மிகவும் பிரபலமான சிறப்பு வாய்ந்த தலமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் இது. இங்கேதான் உலகப் புகழ் பெற்ற கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. 
இதே போல, உத்தர்கண்ட் மாநிலத்திலும் ”பஞ்ச பிரயாகை” என்று சொல்லப்படுகிற ஐந்து பிரயாகைகள் உள்ளன. விஷ்ணு பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை, தேவ பிரயாகை ஆகியவை. இவை அலக்நந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் ஆகும். 
 
 
 
Pancha Prayag 1
 
பத்ரிநாத் தரிசனத்தை முடித்துக்கொண்டு பஞ்ச பிரயாகைத் தலங்களைத் தரிசிக்கக் கிளம்பினோம். 
விஷ்ணு பிரயாகை:
சமோலி மாவட்டத்தில் ஜோஷி மட்டுக்கும் பத்ரிநாத்துக்கும் இடையில் இருக்கிறது விஷ்ணு பிரயாகை. இது. ’அலக்நந்தா’ நதியும் ’தௌலி கங்கா’ நதியும் சங்கமிக்கும் இடமாகும்.
 
 
 
Vishnu Prayag 1
 
 
 
கார்வால் ஹிமாலயத்தொடரில் உள்ள சௌகம்பா என்கிற சிகரத்தில் உள்ள பனியாறுகளிலிருந்து இந்நதி கிளம்புகிறது.  அங்கிருந்து கிளம்பிய பின்னர் இந்திய-திபேத்திய எல்லையில் இருக்கும் மனா என்கிற கிராமத்தில் உற்பத்தியாகும் சரஸ்வதி நதியுடன் சங்கமித்து, பிறகு பதிரிநாத் வழியாக வருகிறது. இந்தப் பாதையில் செல்லும் அலக்நந்தாவுக்கு ‘விஷ்ணு கங்கா’ என்கிற பெயரும் உண்டு. இது நாரதர் விஷ்ணுவுக்குப் பூஜைகள் செய்து வழிபட்ட தலம். இந்தோர் மஹாராணி அஹல்யாபாய் 1889ல் கட்டிய கோவில் இருக்கிறது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யக் கட்டப்பட்ட கோவிலானாலும், தற்போது மஹாவிஷ்ணு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். கோவிலிலிருந்து செல்லும் பாதை, சங்கமத்திற்கு அருகே ‘விஷ்ணு குண்டம்’ என்கிற இடத்திற்குக் கொண்டு செல்கிறது. 
 
 
 
Vishnu Prayag 2
 
இங்கே அருகில் உள்ள ஹனுமான் சட்டி என்கிற இடத்தில் ஜேய்பீ தொழில்நிறுவனத்தாரின் நிர் மின்நிலையத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ”விஷ்ணு பிரயாகை நீர் மின் திட்டம்” என்றே வழங்கப்படுகிறது. இதிலிருந்து 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  
நந்த பிரயாகை
 
 
 
Nanda Prayag 1
 
 
நந்த பிரயாகையும் சமோலி மாவட்டத்தில் இருக்கும் நகரப் பஞ்சாயத்தாகும். இது ’அலக்நந்தா’ நதியும் ’நந்தாகினி’ நதியும் சங்கமிக்கும் இடம்.
 
 
 
 
Nanda Prayag 2
 
 
 
சக்கரவர்த்தி நந்தன் யாகம் செய்த இடமாகையால் அவனுடைய பெயரில் வழங்கப்படுகிறது. கிருஷ்ணரை வளர்த்த யசோதையின் கணவன் நந்தனின் நினைவாகவும் இந்தப் பெயர் என்றும் சொல்லப்படுகிறது. இது கன்வ மஹரிஷி தவம் செய்த இடமாகவும், துஷ்யந்தன்-சகுந்தலை திருமணம் நடந்த இடமாகவும் அறியப்படுகிறது. இங்கே கோபாலனுக்கு ஒரு கோவில் இருக்கிறது.
கர்ண பிரயாகை
கர்ண பிரயாகையும் சமோலி மாவட்டத்தில் உள்ளது. இது ’அலக்நந்தா’ நதியும் ‘பிண்டார்’ நதியும் சங்கமிக்கும் இடம். கர்ணன் தவம் செய்த இடமாதலால் அந்தப் பெயர் பெற்றது.
 
 
 
 
Karna Prayag
 
 
 
மஹாகவி காளிதாசனின் மேக தூதத்தில், சதோபந்த் பனியாற்றில் பாகீரதி சங்கமித்த பின்னர் பிண்டார் தோன்றி இங்கே வந்தடைந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. காளிதாசனின் அபிஞ்ஞான சாகுந்தலையில் துஷ்யந்தனும் சகுந்தலையும் இங்கே நடனமாடியதாகக் கூறப்பட்டுள்ளது. 
இங்கே ஸ்வாமி விவேகானந்தர் 18 நாட்கள் தியானத்தில் இருந்துள்ளார். 
சிவன், பார்வதி, விநாயகர் உள்ள கற்கோவில் இருக்கிறது. இது ஆதி சங்கரரால் புதுப்பிக்கப்பட்டது. கர்ணன் நினைவாக கட்டப்பட்ட பார்வதி கோவிலும் இருக்கிறது. சங்கமத்திற்குச் செல்லப் படிக்கட்டுகள் உள்ளன. 
ருத்ர பிரயாகை
கேதார் நாத்திலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவில், ருத்ர பிரயாகை மாவட்டத்தில் உள்ளது ருத்ர பிரயாகை என்னும் இத்தலம். இது ’அலக்நந்தா’ நதியும் ‘மந்தாகினி’ நதியும் சங்கமிக்கும் இடம். இங்கே சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாலும், ருத்ர வீணையில் இசை மீட்டியதாலும் இவ்விடம் ருத்ர பிரயாகை என்று வழங்கப்படுகிறது. 
 
 
 
 
Rudra Prayag 2
 
இவ்விடத்தைப் பற்றி மற்றொரு சுவாரஸ்யமான கதையும் சொல்லப்படுகிறது. ஒரு முறை நாரதருக்குத் தன்னுடைய இசைத்திறமையின் மீது மிகவும் கர்வம் ஏற்பட்டது. தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கிருஷ்ணர் அவரிடம், “உன்னுடைய இசைத்திறமையில் சிவனும் பார்வதியும் மனதைப் பறிகொடுத்துள்ளனர்: என்று சொல்ல, வியந்து போன நாரதர் அவர்களைத் தரிசிக்க இமயத்திற்குப் பயணம் மேற்கொண்டபோது, இந்த இடத்தில் பெண்ணுரு கொண்டு வந்த ராகங்களின் அழகு கெட்டுப்போனது. நாரதர் தவறாக வீணை வாசித்ததால்தான் ராகங்களின் அழகு கெட்டுப்போனதென்று அவர் மீது பழி ஏற்பட, நாரதரின் கர்வம் நீங்கியது. பிறகு சிவபெருமானின் சீடராக நாரதர் விளங்கினார்.
 
 
 
 
Rudra Prayag 1 
 
 
தக்ஷண் சிவபெருமானை அவமதித்ததால், நெருப்பில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்ட ’சதி’ (தாக்ஷாயிணி), பிறகு பர்வத ராஜன் ஹிமவானின் புத்ரி பார்வதியாகப் பிறந்து, அவன் எதிர்ப்பையும் மீறி, கடும் தவம் புரிந்து சிவபெருமானைக் கணவனாக அடைந்தாள். அவள் தவம் புரிந்து இடமாகவும் இது சொல்லப்படுகிறது. 
ருத்ரனுக்கும் சாமுண்டிக்கும் இங்கே கோவில்கள் உள்ளன. 
இந்த நான்கு பிரயாகைத் தலங்களுக்கும் சென்று ஸ்நான சங்கல்பம் செய்து, புண்ணிய நதிகளையும் எடுத்துக்கொண்டோம். பிறகு பித்ருக்களுக்குத் தர்ப்பணமும் செய்தோம். ஒவ்வொரு இடத்திலும், நதிகள் சங்கமிக்கும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. ரம்மியமான இயற்கை சூழலில் மனதைப் பறிகொடுத்து நின்றோம். 
மேலே சாலையிலிருந்து கீழே படித்துறைகளுக்கு, அதாவது நதிகள் சங்கமிக்கும் இடங்களுக்குச் செல்லப் படிகள் கட்டப்பட்டுள்ளன. பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அருகில் இருக்கும் கோவில்கள் அழகாகப் பராமரிக்கப்படுகின்றன.
நான்கு பிரயாகைகள் தரிசித்தவுடன் சூரியன் அஸ்தமனம் ஆகிவிட்ட படியால் தேவ பிரயாகையை அடுத்த நாள் பயணத்திற்குத் தள்ளி விட்டு, ஸ்ரீநகர் வந்து அங்கே இரவு தங்கினோம்.  
தேவ பிரயாகை
 
 
 
Dev Prayag 1
 
 
விடியற்காலை தேவ பிரயாகை தரிசித்துவிட்டு அப்படியே ரிஷிகேஷ் செல்வதாகத் திட்டம். சுறுசுறுப்பாக தேவ பிரயாகை கிளம்பினோம். ஹிமாலயப் பயணத்தில் தேவ பிரயாகை ஒரு முக்கியமான தலமாகும். உத்தர்கண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் நகராட்சியாக இருக்கிறது தேவ பிரயாகை. இது ஸ்ரீநகரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சடோபந்திலிருந்து வரும் அலக்நந்தா நதியும், கௌமுகியிலிருந்து பாய்ந்தோடி வரும் பாகீரதியும் சங்கமித்து கங்கையாகப் பெயர் பெறும் இடமாகும். சற்றே பழுப்பு நிறத்தில் அலக்நந்தாவும், இளம் பச்சை நிறத்தில் பாகீரதியும் சங்கமிக்கும் இடம் மிகவும் அழகாய் இருக்கிறது. 
தேவப்பிரயாகை சங்கமத்திற்கு மேலே அரை கிலோமீட்டர் ஏறிச் சென்றால் ரகுநாதர் கோவிலைக் காணலாம். மிகவும் பிரசித்து பெற்ற இக்கோவில் திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்று.
 
 
 
 
Dev Prayag 3
 
 
 
 
இங்கே வருகை தந்த பெரியாழ்வார் ரகுநாதனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடியிருக்கிறார். இந்தத் தலத்தை “கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டமெனும் கடிநகர்” என்று புகழ்கிறார். அவருடைய பாசுரங்களைக் கல்வெட்டாகப் பதித்திருக்கிறார்கள். கற்களால் ஆன இக்கோவில் மிகவும் அழகாக இருக்கிறது. 
 
 
 
 
Dev Prayag 4
 
 
இங்கேயுள்ள ரகுநாதனின் பாதக் கமலங்களிலிருந்து சரஸ்வதி நதியானவள் அந்தர்யாமியாக உற்பத்தியாகி தேவ பிரயாகையில் அலக்நந்தாவுடனும் பாகீரதியுடனும் சங்கமிப்பதாக ஐதீகம். ’தேவ பிரயாகை’ என்றால் ‘தெய்வீக
சங்கமம்’ என்று அர்த்தம். 
 
 
 
 
Dev Prayag 2
 
 
 
தேவபிரயாகையைச் சுற்றி கித்தஞ்சல பர்வதம், தசரதாஞ்சல பர்வதம், நரசிங்கஞ்சல பர்வதம் என்று மூன்று சிகரங்கள் உள்ளன. தசரதாஞ்சல் பர்வதத்தில் சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் தொண்டேஷ்வர் மஹாதேவர் என்றும் தானேஷ்வர் மஹாதேவர் என்றும் போற்றப்படுகிறார். மஹா சிவராத்ரி இங்கே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. 
தேவ பிரயாகையிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள புந்தல் எனும் கிராமத்தில் துர்கைக் கோவில் இருக்கிறது. இங்கே துர்கை புவனேஸ்வரியாக வழிபடப்படுகிறாள். 
தேவ பிரயாகை வந்தடைந்ததும், பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் நடந்து சங்கமத்திற்குச் சென்றோம். அங்கே படிக்கட்டுக்கள் வழியே கீழே இறங்கினால் அலக்நந்தா-பாகீரதி சங்கமத்தை அடையலாம். அனைவரும் ஸ்நான சங்கல்பம் செய்துகொண்டு ஆனந்தமாகக் குளித்தோம். பிறகு தர்ப்பணம் செய்துவிட்டு, அங்கிருந்து மேலே அரை கிலோமீட்டர் ஏறிச் சென்று ரகுநாதர் கோவில் சென்று ரகுநாதனைத் தரிசித்தோம். கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருந்த பெரியாழ்வாரின் பாசுரங்களைப் படித்து ரகுநாதனைத் துதித்தோம். 
 
(தொடரும்)
Read 1392 times
Rate this item
(1 Vote)
Last modified on Saturday, 29 August 2015 13:17

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment