×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

முழுமையான இறையனுபவம் – 8 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

Monday, 21 September 2015 11:26 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

ரிஷிகேஷ்

 


உத்தர்கண்ட் மாநிலம் தேஹ்ராடூன் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ், ஹரித்வாரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. ஹரித்வாரிலிருந்து ரயில் பயண வசதியும் பேருந்து பயண வசதியும் நிறைய இருக்கிறது. சார்தாம் யாத்திரையின் துவக்கம் இங்கிருந்துதான். அழகாக அமைதியாக ஆனால் வேகமாக ஓடி வரும் கங்கைக்கரையில் அமைந்த அழகான நகரம்.

 

 

Rishikesh 2

 

 

ஆரம்பகாலங்களில் அற்புதமான மலைவாசஸ்தலமாக இயற்கை அழகுடன் இருந்த ரிஷிகேஷ், இன்று ஒரு நகரத்தின் லக்ஷணங்கள் அனைத்தையும் கொண்டிருப்பது தான் நமக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் கொளுத்தும் வெயிலை அங்கேயும் அனுபவித்தோம். வனங்கள் அழிக்கப்பட்டு மாபெரும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் அழகான காட்சிகள் தென்பட்டாலும் மறுபுறம் காட்டு மரங்களை அழித்து ஏராளமான நவீன கட்டிடங்கள் கட்டப்படுவது நமக்கு வெறுப்பையும் வேதனையையும் ஒருங்கே தருகிறது. ஒரு மலைவாசஸ்தலத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வே இல்லை. மாலை சூரியன் அஸ்தமனமான பிறகுதான் லேசாகக் குளிர்ந்த காற்று வீசுகிறது.

 


நகரெங்கும் யோகா மையங்கள் காளான்களைப் போலப் பரவி வருகின்றன. உலகெங்கும் உள்ள நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து இங்கே யோகா கற்றுச் செல்லுகின்றனர். ஆகவே, இது ”உலகின் யோகா தலைநகரம்” என்று போற்றப்படுகின்றது.

 

 

 

Rishikesh Worlds Yoga Capital

 

 


ரிஷிகேஷ் ஹிந்துக்களின் மிகப்புனிதமானத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ’இமாலய மலைத்தொடர்களின் நுழைவாயில்’ என்றும் போற்றப்படுகிறது. ”ரிஷிகேஷ்” என்கிற மஹாவிஷ்ணுவின் பெயருக்கு “இந்திரியங்களுக்கு அதிபர்” (புலன்களின் கடவுள்) என்று பெயர். ரைப்ய மஹரிஷி தன் புலன்களை அடக்கி இந்தத்தலத்தில் கடுந்தவம் புரிய, அவருக்கு ரிஷிகேஷ் நாராயணராக மஹா விஷ்ணு காட்சி தந்ததால் இந்தத்தலம் ரிஷிகேஷ் என்று பெயர் பெற்றது.

 

 

ஆதி சங்கரரும் ஸ்ரீ ராமானுஜரும் இங்கு வந்து தவம் புரிந்துள்ளார்கள்.

 


லக்ஷ்மண் ஜூலா

 


ராவணனைக் கொன்றதற்காக ராமபிரான் இங்கே பிராயச்சித்தம் செய்ததாகவும் ஐதீகம். ராமர் பிராயச்சித்தச் சடங்குகளைச் செய்யும்போது ஆர்பரித்து ஓடும் கங்கை தொந்தரவாக இருந்ததால், ஒரு அம்பை எய்து அதை அமைதியாக்குகிறான் லக்ஷ்மணன். இன்றும் கங்கை அமைதியாகத்தான் அங்கே ஓடிக்கொண்டிருக்கிறாள். மேலும் கங்கையைக் கடந்து செல்ல லக்ஷ்மணன் ஒரு தொங்குப் பாலத்தைக் கட்டியதாகப் புராணம் கூறுகிறது.

 

 

பிறகு 1889ம் ஆண்டில் தூண்கள் எதுவும் இல்லாத இந்தக் கயிற்றுப்பாலம் அதிர்வுகளைத் தாங்கும் விதமாக இரும்புக் கம்பிகளுடன் இணைத்துக் கட்டப்பட்டது. அது 1924ல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது மேலும் வலுவானதாக ஆக்கப்பட்டுள்ள பாலம் 1927-29ல் உத்தரப் பிரதேச அரசால் கட்டப்பட்டு 1930ல் திறக்கப்பட்டது. இது லக்ஷ்மண் பெயரில் “லக்ஷ்மண் ஜூலா” (ஜூலா என்றால் பாலம் என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது. அருகிலேயே “ராமன் ஜூலா” என்கிற பெயரில் ஒரு பாலத்தையும் அரசு கட்டியுள்ளது. ஆனால் இதற்கு எந்தப் புராண சம்பந்தமும் இல்லை.

 

 

 

Lakshman Jhula Rishikesh

 

 


ராமர், லக்ஷ்மணர் ஆகியோருக்குக் கோவில்கள் இருக்கின்றன. லக்ஷ்மண் ஜூலாவில் கங்கையைத் தாண்டி அக்கரைக்குச் சென்றால் பிரம்மாண்டமான “பீட்டில்ஸ் ஆஸ்ரமம்” நம்மை வரவேற்கிறது. மேற்கத்திய இசைக்குழுவினரான “பீட்டில்ஸ்” (Beatles) மஹரிஷி மஹேஷ் யோகியின் அழைப்புக்கு இணங்கி இங்கே வந்து யோகாவும் தியானமும் கற்றுப் பயன் பெற்றனர்.

 

 

 

Beatles Ashram Rishikesh

 

 

 

இக்கரையில் ஹேமகுண்ட் நிர்வாக அறக்கட்டளைக்குச் சொந்தமான சீக்கிய குருத்வாரா உள்ளது.

 

 

 

Gurudwara Rishikesh

 

 

 

இது ரிஷிகேஷிலிருந்து லக்ஷ்மண் ஜூலா செல்லும் வழியில் இருக்கிறது. நவீனக் கட்டடக் கலையம்சத்துடன் அழகாகக் கட்டப்பட்டுள்ளது. தொலைவிலிருந்தே பயணிகளின் கண்களைக் கவர்கின்றது.

 

 


பரத் மந்திர்

 


ரிஷிகேஷ் நகருக்கு மிகவும் நெருங்கிய சொந்தமான ஒரு கோவில் ”பரத் மந்திர்” தான். மிகவும் புராதனமான இந்தக் கோவில் தான் ரிஷிகேஷ் நகரம் உருவாவதற்குக் காரணம். ரைப்ய மஹரிஷி புலன்களை அடக்கித் தவமிருந்தபோது மஹாவிஷ்ணு காட்சி தந்த இடம் இதுதான். மிகவும் விஸ்தாரமான நிலத்தில் அழகாகக் கட்டப்பட்டுள்ளது இந்தக் கோவில். கோவிலுக்குள் நுழைந்தவுடன் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. இதனுடன் அரச மரமும் அதே வகையான வேறொரு மரமுமாக மூன்று மரங்கள் பின்னிப்பிணைந்து ஒரே மரமாகக் காட்சி தருகின்றன. இவை மூன்றையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளாக மக்கள் வழிபடுகின்றனர். இந்த மரங்களின் வயது கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் எனக் கணிக்கப்படுகிறது.

 

 

 

Bharat Mandir Rishikesh

 

 

 


இந்தக் கோவிலின் தெய்வமான ரிஷிகேஷ் நாராயணர் சங்கு, சக்கிரம், கதை, பாடம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் தாங்கி, கலியுகத்தில் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக “பரத் மஹாராஜா” என்கிற பெயரில் அருள் பாலிக்கிறார்.

 

 

 

Bharat Maharaja Rishikesh Narayanar

 

 

 

அதனால் தான் இந்தக் கோவிலுக்கு பரத் மந்திர் என்று பெயர் வந்தது. ஆகவே, இந்தக் கோவிலுக்கும் ஸ்ரீ ராமரின் சகோதரன் பரதனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

 


மஹாபாரதம் முடிந்த பிறகு பாண்டவர்கள் மேலோகத்திற்குச் செல்லும் வழியில் இங்கே சில காலம் இருந்து தவம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

 


புத்தரும் இங்கு வருகை புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் ரிஷிகேஷில் உள்ள பல கோவில்கள் பௌத்த மடாலயங்களாக மாற்றப்பட்டதாகவும், பரத் மந்திரும் அதற்குத் தப்பவில்லையெனவும் கூறப்படுகிறது. பிறகு ஆதிசங்கரர் காலத்தில் இங்கே வசந்த பஞ்சமி அன்று ரிஷிகேஷ் நாராயணரைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அதன் பிறகு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒவ்வொரு வசந்த பஞ்சமி அன்றும் சாளக்ராமம் மாயாகுண்டத்திற்குத் தீர்த்தவாரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பிறகு நகர்வலம் கொண்டுவரப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைகிறது. மேலும் அக்ஷய த்ரிதியை அன்று இந்தக் கோவிலை 108 முறை வலம் வந்து நாராயணரின் பாதங்களைத் தரிசிப்பவர்கள் (அன்று மட்டும் ரிஷிகேஷ் நாராயணரின் பாதங்கள் தெரிகின்ற மாதிரி அலங்காரம் செய்யப்படும்) பத்ரிநாத் யாத்திரையை நிறைவேற்றிய புண்ணியத்தையும் பலன்களையும் அடைகிறார்கள்.

 

 


அகழ்வாராய்ச்சி செய்யும்போது கிடைத்த ஒரு சிலையை புத்தரின் சிலை என்று வெளியே உள்ள ஆலமரத்தின் கீழ் வைத்து வழிபடுகிறார்கள்.

 

 


கோவில் வளாகத்திலேயே அரசு தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் அருங்காட்சியகம் இருக்கிறது. இதில் இங்கே அகழ்வாராய்ச்சி செய்தபோது கிடைத்த பல பொருட்களை அந்த அந்தக் கால அளவுகளுடனும் தகவல்களுடனும் வைத்து சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். காலை கங்கையில் ஸ்நானம் முடித்து அப்படியே இந்தக் கோவிலுக்கும் சென்று ரிஷிகேஷ் நாராயணரை ஆனந்தமாகத் தரிசனம் செய்தோம்.

 

 


திரிவேணி கட்டம்

 

 


பரத் மந்திரை அடுத்த கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது திரிவேணி கட்டம். இங்கேதான் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கின்றன. எனவே திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே தினமும் மாலையில் பிரசித்தி பெற்ற கங்கா ஆரத்தி நடைபெறுகிறது.

 

 

 

Ganga Aarti Triveni Sangamam Rishikesh

 

 

 

இந்தத் திரிவேணி சங்கமத்தின் வளாகத்திலேயே ஹனுமாருக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. வெளியே ஹனுமானின் அழகிய சிலை பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Hanuman Temple Triveni Sangamam Rishikesh

 

 

 

 

திரிவேணி சங்கமத்திற்குச் சற்றுத் தள்ளி ரகுநாத் மந்திர் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மேலும் சில சிறிய கோவில்களும் இருக்கின்றன.

 

 

 

நீலகண்டர் கோவில்

 

 


ரிஷிகேஷிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் நீலகண்டர் கோவில் இருக்கிறது. போகும் வழியில் வில்வ மரங்கள் அடர்ந்து இருக்கின்றன.

 

 

 

Neelakandar Temple Rishikesh 

 

 

 

அந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கம் மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அம்மரத்தில் தேனீக்கள் குடிகொண்டிருக்கின்றன. தேனீக்களின் ரீங்காரத்தை சாமகானமாகக் கேட்டு மகிழ்ந்திருக்கும் சிவபெருமானைத் தரிசித்தோம். இங்கே பார்வதிக்கும் ஹனுமானுக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. அஞ்சனையின் கைகளில் பால ஹனுமானாகக் காட்சி தருகிறார் அஞ்சனாசுதன்.

 

 

 

(தொடரும்)

Read 6003 times
Rate this item
(0 votes)
Last modified on Monday, 21 September 2015 14:38

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment