×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

முழுமையான இறையனுபவம் – 9 (ஹிமாலய யாத்திரை / காசி யாத்திரை – பயணத் தொடர்)

Tuesday, 13 October 2015 14:24 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
ஹரித்வார்
 
Haridwar 2
 
 
உத்தர்கண்ட் மாநிலத்தில் சிவாலிக் என்கிற இடம் கடல்மட்டத்திலிருந்து 950 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த சிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் கங்கை நதியின் கீழ்கரையில் சமவெளியில் அமைந்துள்ளது ஹரித்வார். இது மிகவும் புராதனமான, புனிதமான நகரம். கங்கோத்ரியில் புறப்பட்ட கங்கை கிட்டத்தட்ட 320 கிலோமீட்டர்கள் ஹிமாலயத்தில் பல இடங்களைக் கடந்து இங்கே வந்து சேர்கிறாள். இங்கே கிட்டத்தட்ட 1 மைல் அகலத்தில் பயணிக்கிறாள் கங்கை. ரிஷிகேஷைப் போலவே இதையும் ஹிமாலயக் கோவில்களின் நுழைவாயில் எனலாம். இங்கிருந்துதான் சார்தாம் யாத்திரை துவங்குகிறது. இந்தத் தலத்திற்கு கங்காத்வாரம், மாயாபுரி என்கிற பெயர்களும் உண்டு. 
 
 
Haridwar Ganga
 
 
பண்டைய காலத்தில் இங்கே “கங்காத்வார்” என்கிற கோவில் இருந்ததாக நம்பப்படுகிறது. அதுவே கங்காத்வாரம் என்கிற பெயர் வரக்காரணம். சகரர்களை எரித்துச் சாம்பலாக்கிய கபில மஹரிஷி தவம் புரிந்த இடமான இது கபிலஸ்தலம் என்றும் மாயாபுரி என்றும் வழங்கப்படுகிறது. கங்கா தசரா நாளில்தான் சிவபெருமான் தன் தலைமுடியிலிருந்து கங்கையைக் கீழே விட, அந்நதி ஹரித்வாரை வந்தடைந்தது. எனவே, இங்கே கங்கா தசரா என்னும் விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கே கொண்டாடப்படும் கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றது. வியாழன் கிரகம் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது. அது மட்டுமில்லாமல் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அர்த்த கும்பமேளாவும் இங்கே பிரசித்தம். இரண்டு விழாக்களிலும் பல லக்ஷக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். 
 
 
ஆலய தரிசனம்
 
  
காலை புறப்பட்டு அருகே உள்ள குஞ்சாபுரி என்கிற கோவிலுக்குச் சென்றோம்.. குன்றின்மேல் இருக்கும் அழகான சிறிய கோவில். சுமார் 150 படிக்கட்டுகள் கொண்டது. படிகளில் ஏறும் போதும் இறங்கும்போதும் தேவியின் நாமங்களைப் படித்துக்கொண்டே செல்லும் விதமாக மேற்கூரையில் ஸ்லோகங்கள் எழுதப்பட்டுள்ளன. தேவியையும் மஹாதேவரையும் தரிசனம் செய்தோம். குன்றின் மேலிருந்து பார்க்கும்போது ஹரித்வார் நகரம், அகண்ட கங்கை நதிக்கரையில் அழகாகக் காட்சி தருகிறது. 
 
 
 
 
Haridwar Kunchapuri Temple
 
 
பிறகு அங்கிருந்து கிளம்பி ”மா சண்டி தேவி” ஆலயத்திற்குச் சென்றோம். 
 
 
 
Haridwar Ma Chandi Devi Temple
 
 
 
இந்த ஆலயத்திற்குச் செல்ல ‘கேபிள் கார்’ (Cable Car) வசதி திறம்படச் செய்யப்பட்டுள்ளது. அலுவலர்கள் புன்சிரிப்புடன் மிகவும் மரியாதையாக நம்மை நடத்துகிறார்கள். சில நிமிடங்களிலேயே கோவிலை அடைந்து மா சண்டி தேவியைத் தரிசனம் செய்தோம். 
 
 
 
Haridwar Ma Chandi Devi Temple Cable Cars
 
 
அந்த மலைக்கு மறுபுறம் ”மானஸ தேவி மந்திர்” இருக்கிறது. இதற்குச் செல்லவும் கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. மானஸ தேவியையும் திவ்யமாகத் தரிசனம் செய்தோம். இரண்டு கோவில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு கோவில்களிலும் மக்கள் பொறுமையாக வரிசையில் நின்று தரிசனம் செய்கிறார்கள். நமது தமிழகத்தில் உள்ளது போல சிறப்பு தரிசனம், சிறப்பு அர்ச்சனை போன்ற அறநிலையத்துறைக் கூத்துகள் இல்லை. 
 
 
 
Haridwar Maanasa Devi Temple
 
 
 
கங்கா ஆரத்தி
 
பிறகு ’ஹர்கி பைரி’ என்கிற இடம் வந்து சேர்ந்தோம். ‘ஹரி’ என்றால் விஷ்ணு; ‘பைரி’ என்றால் ‘பாதம்’. இந்த இடம் ‘ஹர்கி பைரி’ (விஷ்ணுவின் பாதம்) என்று வழங்கப்படுகின்றது. பத்ரி நாத்திலிருந்து ஹரித்வார் வரை உள்ள விஷ்ணுவின் பாதம் ஹரித்வாரின் கரையில் அமைவதாக நம்பிக்கை. எனவே தான் இந்தப் பெயரைப் பெற்றது. 
 
 
 
 
Haridwar Harki Pairi
 
 
 
இங்கே தினமும் மாலை வேளையில் விஷ்ணுவின் பாதத்தை வழிபடும் விதமாகக் கங்கைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். கரையில் இருக்கும் பல கோவில்களிலிருந்து தீபாராதனை காட்டப்படுகின்றது. பெரிய மணிகளை அடித்தபடியே விஷ்ணு, சிவன், கங்கைத்தாய் ஆகிய இறைத்திருநாமங்களைச் சொல்லியபடியே ஆரத்தி காண்பித்து வழிபடுகிறார்கள். கரை முழுவதும் பெரிய பெரிய தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் கங்கையின் இரு கரைகளிலும் கூடி தீபாராதனை செய்து வழிபடுவது காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. மதியம் முதலாகவே மக்கள் வெள்ளம் கூட ஆரம்பித்து விடுகின்றது.
 
 
 
Haridwar Ganga Aarthi at Harki Pairi
 
 
 
 
ஹரிகி பைரியில் அற்புதமான ஆரத்தி விழாவைக் கண்டு இறையருள் பெற்றுத் திரும்பினோம். 
 
 
பார்க்க வேண்டிய மற்ற இடங்கள்
 
 
யாத்திரை நாட்கள் அதிகம் கைவசம் உள்ளவர்கள் மேலும் சில இடங்களுக்குச் செல்லலாம்.
 
 
பீமன் குளிப்பதற்காகப் பூமியைத் தோண்டிய இடமான பீமகோடா குளம் நகரிலிருந்து 1கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. 
 
 
சப்த ரிஷிகள் இங்கே தங்கித் தவம் புரிவதற்காகவே கங்கை ஏழு அருவிகளாக இங்கே வந்தாள் என்கிற நம்பிக்கை உண்டு. இவ்விடம் சப்தரிஷி ஆசிரமம் என்று வழங்கப்படுகிறது. 1954ல் கட்டப்பட்ட இந்த ஆசிரமத்தில் சிவன் கோவில் ஒன்றும் உண்டு. 
 
 
ஸ்வாமி சுக்தேவானந்த் அவர்கள் நிர்மாணித்தது பரமார்த்த ஆசிரமம். இங்கே நமது பாரத தேசத்தின் ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 
 
 
பரமார்த்த ஆசிரமத்தின் அருகிலேயே பாரத மாதா மந்திர் அமைந்துள்ளது. சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறாள் பாரதத் தாய்!
 
 
மேலும் ம்ருத்யுஞ்ஜய் மஹாதேவ் கோவில், குஷாவர்த் காட், மாயாபூர் அணை, சுபாஷ் காட், குருத்வாரா சிங் ஷாபா, பிரம்ம குண்டம், சப்த சரோவர், பாவன் தாம், ராகவேந்திரர் கோவில் மற்றும் தக்ஷணுக்கென்று ஒரு கோவில் ஆகிய இடங்களும் இருக்கின்றன.
 
 
ஸதி தன் உடலைத் தியாகம் செய்த இடம் ஸதி குண்டம் என்று வழங்கப்படுகிறது. 
 
 
ஸனத்குமாரர் சித்தி அடைந்த இடமும் ஹரித்வார் தான். 
 
 
ஹரித்வார் மிகவும் வளர்ச்சி பெற்ற நகரமாகிவிட்டது. அனைத்து வசதிகளும் உள்ளன. பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்த ஆசிரமங்களும் உள்ளன. நூற்றுக்கணக்கான தர்ம சாலைகள் உள்ளன. 
 
 
இத்துடன் ஹிமாலய யாத்திரை நிறைவு பெறுகின்றது. அடுத்து காசி யாத்திரையைத் தொடர்கிறேன். 
Read 1929 times
Rate this item
(2 votes)
Last modified on Tuesday, 13 October 2015 15:27

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment