×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
Print this page

இன்று ஜலியன் வாலாபாக் நினைவு தினம் - பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம்.

ஏப்ரல் மாதம் 10ம் தேதி 1919.... அமிர்தசரஸ் நகரின் துணை ஆணையர் இல்லத்தை நோக்கி, நாடுகடத்த ஆணையிடப்பட்ட 2 பிரபலமான தலைவர்களை விடுவிக்கக் கோரி, ஒரு கும்பல் ஊர்வலம் சென்றது. அவர்களை நோக்கி ஒரு ராணுவப் பிரிவு சுட்டது. அன்றே பிறகு பல வங்கிகள், பிற கட்டிடங்கள், ப்ரிட்டிஷ் அரசின் சின்னமாகக் கருதப்படும் எந்த அமைப்புக்கும் தீவைக்கப்பட்டது. தனித் தனி சம்பவங்களில் 4 ஐரோப்பியர்கள் கொலை செய்யப்பட்டார்கள்; அதே நேரம் 20 இந்தியர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள். அடுத்த 2 நாட்கள் அமிர்தசரஸ் நகரம் அமைதியாக இருந்தது, ஆனால் அந்த பயங்கர அமைதி, பிளவுபடாத பஞ்சாப் மாகாணத்தின் பிற பகுதிகளின் புரட்சிக் குரலின் பிரதிபலிப்பாகத் தோன்றியது. இரயில்வே தண்டவாஙங்கள் வெட்டப்பட்டன, தந்திக்கம்பங்கள் நொறுக்கப்பட்டன, அரசு அலுவலகங்கள் எரிக்கப்பட்டன....

 


ஏப்ரல் மாதம் 13ம் தேதி....... ஆயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் அம்ருதசரஸின் மையத்தில் இருந்த ஜலியன்வாலா பாக்கில் குழுமினார்கள்.... இந்த நகரம் பிளவுறாத பஞ்சாப் மாகாணத்தின் மிக முக்கியமான கலாச்சார, சமய, வர்த்தக நகரங்களில் ஒன்றாக விளங்கியது. அன்று பைசாக்கி, ஒரு சீக்கிய சமய கொண்டாட்ட நாள். பைசாக்கி திருவிழாவைக் கொண்டாட சீக்கியர்கள் பாரம்பரியமாக அமிர்தசரஸில் கூடுவது வழக்கம். அமிர்தசரஸின் ஊரகப் பகுதிகளிலிருந்து வரும் பேர்களுக்கு 2 நாட்கள் முன்பாக அமிர்தசரஸில் நடந்தவை ஏதும் தெரியாது; ஏனென்றால் அன்றைய காலங்களில் தகவல் பரிமாற்றம் போதுமானவையாக இல்லாததோடு, பஞ்சாபில் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சட்டரீதியாக, அந்த பூங்காவில் கூடுவது பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை மீறிய செயலாகும். ஆம், அங்கே ராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, 4 அல்லது 5 பேர்களுக்கு மேலே கூடியிருப்பது தடை செய்யப்பட்டிருந்தது.

 


90 போர் வீரர்கள்.... கைகளில் துப்பாக்கிகளும் குக்ரிக்கள் என்ற நீண்ட வாட்களும் ஏந்தி, 2 கவச வண்டிகளில் இயந்திரத் துப்பாக்கிகளை ஏற்றிக் கொண்டு பூங்காவை நோக்கிப் பயணிக்கிறார்கள்..... வாகனங்கள் பூங்கா இருந்த குறுகலான நுழைவாயிலுக்குள் நுழைய முடியவில்லை..... அந்த ராணுவப் பிரிவிக்குத் தலைமை தாங்கியவன் பெயர் ப்ரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர். அவன் உடனடியாக பூங்காவினுள் நுழைந்து, எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் செய்யாமல், நெருக்கமாகக் குழுமியிருந்த இடத்தை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நிகழ்த்த உத்தரவிட்டான்...... மாலை 5.15க்கு தொடங்கிய இந்த துப்பாக்கிச் சூடு சுமார் பத்து முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்தது..... நாற்புறத்திலும் செங்கற்சுவர்களும், கட்டிடங்களும் சூழ்ந்த அந்தப் பூங்காவுக்கு 5 குறுகலான நுழைவாயில்கள் தாம் உண்டு, பெரும்பாலானவை கிட்டத்தட்ட நிரந்தரமாகவே பூட்டியே வைக்கப்பட்டிருக்கும். வெளியேறும் வாயில் ஒன்று தான், அதையும் டையரின் துருப்புக்கள் ஆக்ரமித்திருந்தபடியால், வேறு வழியில்லாமல் மக்கள் தோட்டாக்களிடமிருந்து தப்ப உயரமான செங்கல் சுவர்கள் மீது ஏறத் தலைப்பட்டார்கள்; சிலர் அங்கே இருந்த கிணற்றில் கூடக் குதித்தார்கள். நினைவுச் சின்னத்தில் இருக்கும் ஒரு அறிவிப்புப் பலகை, அந்தக் கிணற்றிலிருந்து மட்டும் சுமார் 120 பிணங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

 jaliwalabhag massacres

துப்பாக்கிச் சூடு முடிந்த பின்னர், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தார்கள். அதிகார பூர்வமான தகவல்கள் படி, 379 பேர்கள் கொல்லப்பட்டார்கள் - அவற்றில் 337 பேர்கள் ஆண்கள், 41 சிறுவர்கள், ஒரு 6 வார கால குழந்தையும் அடங்கும். மேலும் 200 பேர்கள் காயமடைந்தார்கள் என்று அது கூறினாலும், உண்மையான எண்ணிக்கை அதை விட பல மடங்கு அதிகம். தனிப்பட்ட ஆதாரங்கள்படி அந்த எண்ணிக்கை சுமார் 1000 முதல் 1200 வரை இருக்கும் என்று தெரிவிக்கிறது. சிவில் சர்ஜன் டா. ஸ்மித்தின் கூற்றுப்படி, காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1800க்கும் மேற்பட்டது என்று சொல்லுகிறது. அரசியல் காரணங்களுக்காக அந்த எண்ணிக்கை முழுவதுமாக அறுதி செய்யப் படவேயில்லை. தனது தலைமையகம் திரும்பிய டயர், தனது மேலதிகாரிகளிடம் தான் புரட்சிப் படை ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும், பஞ்சாபுக்கு ஒரு தார்மீகப் பாடம் புகட்ட வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தான். டயருக்கு அனுப்பப்பட்ட ஒரு தந்தியில், பஞ்சாப் மாகாணத்தின் லெஃப்டின்ணட் கவர்னரான சர் மைக்கெல் ஓ ட்வையர் இப்படி எழுதுகிறார்: “உங்கள் நடவடிக்கை சரியானது தான். லெஃப்டின்ண்ட் கவர்னரான நான் ஆமோதிக்கிறேன்”. இந்தியாவிலும் சரி, இங்கிலாந்திலும் சரி பத்திரிக்கைகளும், பல ஆங்கிலேயர்களும், ஆங்கிலேயர்களின் கௌரவத்தைக் காப்பாற்றிய மனிதர் டயர் என்றபடி கருதினார்கள்.

 


ஓ ட்வையர் அமிர்தசரஸிலும் பிற பகுதிகளிலும் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட விண்ணப்பித்தார்; இதை அந்தப் படுகொலைக்குப் பிறகு வைஸ்ராயாக இருந்த செல்ம்ஸ்ஃபோர்ட் பிரபு வழங்கினார். டயர், இந்திய உள்துறைச் செயலராக இருந்த எட்வின் மாண்டேகு 1919 பிற்பகுதியில் கூட்டிய ஹண்டர் ஆணையம் முன்பாக, தான் ஏன் அந்தப் படுகொலையை நிகழ்த்தினேன் என்று விளக்க வேண்டி வந்தது. அந்த ஆணையம் முன்பாக, தனக்கு ஜலியான்வாலா பாகில் அன்று பிற்பகல் 12.40க்கே கூடியிருந்த கூட்டம் பற்றிய தகவல் தெரியுமென்றும், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தான். அங்கே குழுமியிருந்த அந்தக் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்த வேண்டும் என்று வேண்டுமென்றே அங்கே சென்றதாகவும் அவன் தெரிவித்தான். “என்னால் அந்தக் கும்பலை துப்பாக்கிச் சூடு நிகழ்த்தாமலேயே கலைந்து போயிருக்கச் செய்திருக்க முடியும், ஆனால் அவர்கள் திரும்பக் கூடி என்னைப் பார்த்து நகைத்திருப்பார்கள், நான் முட்டாளாகி இருப்பேன்” - ஹண்டர் ஆணையத்தின் விசாரணைக்கு டயர் அளித்த பதில் இது. அந்தப் பூங்காவுக்குள் தன்னால் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு போக முடிந்திருந்தால், தாம் அவற்றைப் பயன்படுத்தியிருப்பேன் என்றும் அவை கவச வண்டிகளில் ஏற்றப்பட்டிருந்ததால், அவற்றைக் கொண்டு செல்ல இயலவில்லை என்றும் கூறினான். கூட்டம் கலையும் போதும் தான் சுடுவதை ஏன் நிறுத்தவில்லை என்றால், கூட்டம் முழுமையாகக் கலையும் வரை சுடுவது தனது கடமை என்றும் கருதியதாகத் தெரிவித்தான். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று ஒப்புக் கொண்டான். ஏன் என்று கேட்டதற்கு, ”மருத்துவமனைகள் இருக்கின்றன, அவர்களே அங்கே சிகிச்சை பெற முடியும். இது எனது வேலை இல்லை” என்று கூறியிருக்கிறான்.

 

1920ம் ஆண்டு ஹண்டர் ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது முதல் டயர் செயல்பாட்டில் இருப்போர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, ப்ரிகேடியர் பதவியிலிருந்து கர்னலாகக் குறைக்கப்பட்டான். அப்போது ராணுவத் தலைவராக இருந்தவர், டயரை இந்தியாவில் பணியமர்த்த மாட்டோம் என்றார். டயரின் உடல் நலமும் சீரழிந்த்ததால், அவன் ஒரு மருத்துவக் கப்பலில் ஏற்றப்பட்டு இங்கிலாந்து அனுப்பப்பட்டான். இந்த ‘’இன்னொரு இந்தியக் கலகத்தை’’ அடக்கியதுக்காக சில மூத்த ராணுவ அதிகாரிகளும் பல சிவில் மக்களும் அவனைப் பாராட்டினார்கள். இங்கிலாந்தின் பிரபுக்கள் சபையான house of lords அவனைப் பாராட்டியது; ஆனால் சாமான்யர்கள் சபையான the house of commons அவனைக் கண்டித்தது; ஒரு விவாதத்தின் போது, முன்னாள் ப்ரிட்டிஷ் பிரதமராக பின்னாளில் ஆன வின்ஸ்டர் சர்ச்சில், ‘’ஜலியான் வாலா பாக் படுகொலை ஒரு அசாதாரண நிகழ்வாக, ஒரு ராட்சத நிகழ்வாக, படுபயங்கரத்தில் தனியொரு இடம் பிடித்த ஒன்றாக அமைந்திருக்கிறது” என்றார். டயரின் செயல்கள் உலகமுழுவதிலும் கண்டிக்கப்பட்டது. அவனை ஆங்கிலேய அரசு அதிகார பூர்வமாக கண்டித்த பின்னர் அவர் 1920ம் ஆண்டு ராஜினாமா செய்தார். அவனுக்காக morning post என்ற பத்திரிக்கை நிதி திரட்டியதில், அதில் 26000 பவுண்டுகள் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் இது பெரும் துயரையும், கடுங்கோபத்தையும் ஏற்படுத்தியது. பஞ்சாபில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியது, காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு வித்தாக அமைந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரவீந்திரநாத டகோர் ஆங்கில மன்னரிடம் தனது knight பதவியைத் திரும்பக் கொடுத்தார். மொத்தத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றால் மிகையல்ல.

 

jaliwalabhag memorial smalljaliwalabhag memorial


இந்திய தேசிய காங்கிரஸில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் படி 1920ம் ஆண்டு அந்த இடத்தில் ஒரு நினைவகம் கட்டப்பட தீர்மானிக்கப்பட்டு 1920ம் ஆண்டு ஒரு அறக் கட்டளை உருவாக்கப்பட்டது. 1923ம் ஆண்டு இந்த அறக்கட்டளை இந்தத் திட்டத்துக்காக நிலத்தை வாங்கியது. அங்கே ஒரு நினைவிடம் கட்டப்பட்டு, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த டா. ராஜேந்திர பிரசாத் அவர்களால் ஏப்ரல் மாதம் 13ம் தேதி 1961ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு, பிற தலைவர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த இடத்தில் பின்னாளில் ஒரு சுவாலையும் இணைக்கப்பட்டது.

wall small

இன்றும் கூட அங்கே இருக்கும் செங்கற் சுவர்களில் தோட்டாக்கள் அடையாளத்தைத் துல்லியமாகக் காண முடிகிறது. உயிர் தப்ப மக்கள் வேறு வழியில்லாமல் குதித்த கிணறும் பூங்காவுக்குள் பாதுகாக்கப்பட்ட சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.

martyrswellmartyrswell1

 

 

 udhamsingh

அமிருத்சரஸின் இந்த கொடூரங்களையெல்லாம் பார்த்து, அதில் காயமடைந்த பஞ்சாபின் சூனம் என்ற இடத்தைச் சேர்ந்த ஊதம் சிங் என்ற புரட்சியாளர், மார்ச் மாதம் 13ம் தேதி 1940ம் ஆண்டு, இந்த படுகொலைக்குப் பின்னே முக்கிய மூளையாக கருதப்பட்ட சர் மைக்கேல் ஓ ட்வையரை லண்டனில் உள்ள Caxton hallலில் சுட்டுக் கொன்றார். (டயர் சில ஆண்டுகள் முன்னதாக இறந்து விட்டிருந்தான்)

 


தனது மார்ச் மாதம் 18ம் தேதி 1940ம் ஆண்டு இதழில் அம்ரித் பாஜார் பத்ரிக்கா, “ஓ ட்வையரின் பெயர் பஞ்சாப் நிகழ்வுகளோடு சம்பந்தப் பட்டிருக்கிறது, இதை இந்தியா என்றும் மறவாது’’ என்று எழுதியது. தனது வழக்கு விசாரணையின் போது ஊதம் சிங் - “ஓ ட்வையரைப் பழி வாங்கவே நான் அப்படிச் செய்தேன். அவனுக்கு அது தேவை தான். அவன் தான் நிஜமான குற்றவாளி. அவன் என் மக்களின் உணர்வுகளை நசுக்க விரும்பினான், ஆகையால் நான் அவனை நசுக்க வேண்டியிருந்த்து. 21 ஆண்டுகள் முழுமையும் நான் பழி வாங்கக் காத்திருந்தேன். என் வேலையை நான் செய்ததில் மகிழ்கிறேன். எனக்கு மரண பயம் இல்லை. என் தாய் நாட்டுக்காக நான் இறக்கிறேன். ப்ரிட்டிஷ் அரசு ஆட்சியின் கீழ் என் மக்கள் பட்டினியில் அவதிப்படுவதைப் பார்த்திருக்கிறேன். நான் இதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன், இது என் கடமை. என் தாய்த் திருநாட்டுக்காக மரணத்தைத் தழுவுவதை விடப் பெரிய பேறு வேறு என்ன இருக்க முடியும்?” என்றார்.

 


ஜூலை மாதம் 31ம் தேதி 1940ம் ஆண்டு ஊதம் சிங்கை தூக்கிலிட்டார்கள். வேடிக்கை என்னவென்றால், ஊதம் சிங் செய்த சர்வபரித் தியாகத்தை ஜவஹர்லால் நேரு, காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் முட்டாள்தனமானது என்று மார்ச் மாதம் 1940ம் ஆண்டு கண்டித்தார்கள்; ஆனால் அதே ஜவஹர்லால் நேரு 1952ம் ஆண்டு ஊதம் சிங்கின் தியாகத்தைப் பாராட்டியது பர்த்தாப் என்ற தினசரியில் வெளிவந்தது - “நான் தியாகி ஊதம் சிங்கை வணக்கத்தோடு தலை வணங்குகிறேன், நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்”.

 

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறாகட்டும், ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்ட சரிதமாகட்டும், சில முக்கியமான மைல்கற்கள் இந்த சோகக் கதையின் திருப்பு முனைகளாக, மாறாத வடுக்களாக இன்னமும் கூட ஜீரணிக்க முடியாதபடி முள்ளாக, தொண்டையில் அடைக்கிறது. வந்தவாசிப் போர், ப்ளாஸி யுத்தம், 1857ல் நடந்த முதல் சுதந்திரப் போர், 1905ம் ஆண்டு வங்காளப் பிரிவினை, 1919ம் ஆண்டு ஜலியன் வாலா பாக் படுகொலை போன்றவை அவற்றில் அடங்கும். இந்த அராஜகப் படுகொலை இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்தாய், விதையாய், உதிரத்தின் முளையாய்க் கிளை விட்டுப் படர்ந்தது. சும்மாவா வந்தது சுதந்திரம்? வியர்வை பெருக்கும் களத்தில் உதிரமல்லவா பெருக்கினார்கள் பெருமானார்கள்! அவர்கள் உடமைகளை மட்டுமா தியாகம் செய்தார்கள்? அனைத்துயிருக்கும் வெல்லக் கட்டியாம் உயிரையே அல்லவா தாய்த் திருநாட்டுக்கு பலிதானம் ஆக்கினார்கள்! இந்த மாணிக்கங்கள் சமைத்த தேரில் அல்லவா இன்று சுதந்திரக் காற்றை சுவாசித்து நாம் உல்லாச பவனி வருகிறோம்!

 

அத்தகைய புனிதர்களை, மஹான்களை, பெருந்தகைகளை, தூயோர்களை நினைந்து நினைந்து அவர் தம் ஆன்மா சாந்தியடையவும், அவர் தம் நோக்கமும் தியாகமும் நிறைவேறவும் உறுதி பூணும் நாள்................... இன்று.

Read 2912 times
Rate this item
(1 Vote)
Last modified on Thursday, 09 October 2014 18:31

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Latest from சக்கரத்தாழ்வார்