மஹாராணா ப்ரதாப் சிங்கின் பெயரோடு நாளைத் துவக்கினால், மதிப்பானது, மங்களமானது. தன் இன்னுயிரைக் கொடுத்து தேசத்தை, தர்மத்தை, கலாச்சாரத்தை, நாட்டின் சுதந்திரத்தைக் காத்த, மாண்பும் வீரமும் செரிந்த அரசர்களில் அவரது பெயர் தலையாயது. அவரது தீரம் குறித்த புனிதமான நினைவு கூர்தல், இதோ.
யாருக்குத் தான் மேவாரின் மகத்தான அரசன் மஹாராணா ப்ரதாப் சிங்கைப் பற்றித் தெரியாது? இந்திய சரித்திரத்திலேயே, இந்தப் பெயர் வீரம், சாகஸம், தியாகம், பலிதானம் ஆகிய குணங்களுக்காக எப்போதும் கருத்தாக்கம் கொடுக்கும் பெயராக விளங்கி வந்திருக்கிறது. பப்பா ராவல், ராணா ஹமீர், ராணா சாங்கா போன்ற பெருந்தகைகள் எல்லோரும் மேவாடின் சிசோதியா குடும்பத்தில் பிறந்தவர்கள், அவர்கள் அனைவருக்கும் ராணா என்ற பட்டப் பெயர் இடப்பட்டது. ஆனால் மஹாராணா என்ற பட்டப் பெயர் ப்ரதாப் சிங்குக்கும் மட்டுமே உரித்தாக்கப்பட்டது.
1540ம் ஆண்டு…… மஹாராணா ப்ரதாப் சிங் பிறப்பு. மேவாரின் 2வது ராணா உதய் சிங்குக்கு 33 குழந்தைகள். அவர்களில் மூத்தவர் தாம் ப்ரதாப் சிங். சுயமரியாதையும் நற்பண்புகளுமே ப்ரதாப் சிங்கின் பிரதான குணங்களாக விளங்கின. அவர் தனது குழந்தை பிராயத்திலேயே கூட தைரியமாகவும், வீரம் நிறைந்தவராகவும் விளங்கினார்; அவர் வளரும் போதே அவர் மிகப் பெரிய தீரனாக இருப்பார் என்று அனைவருமே நம்பினார்கள். சராசரிக் கல்வி கற்பதை விட அவர் விளையாட்டுக்கள் மற்றும் ஆயுதப் பயிற்சியிலேயே அதிக நாட்டம் கொண்டவராக விளங்கினார்.
மஹாராணா ப்ரதாப்பின் காலத்தில் தில்லியின் பேரரசராக முகலாய மன்னன் அக்பர் ஆட்சி செய்தார். ஹிந்து அரசர்களின் பலத்தைப் பயன்படுத்தியே பிற ஹிந்து அரசர்களை அடிபணிய வைப்பது தான் அக்பரின் கொள்கையாக இருந்தது. பல ராஜபுத்திர அரசர்கள், தங்கள் மகோன்னதமான பாரம்பரியங்களையும், போரிடும் குணத்தையும் விடுத்து, பரிசுகளும், கௌரவமும் பெற்றுக் கொள்ள, தங்கள் மகள்களையும், மருமகள்களையும், அக்பரின் அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்தார்கள். உதய் சிங் தான் இறப்பதற்கு முன்பாக, தனது இளைய மனைவியின் மகன் ஜகம்மல் என்பவரை தனது வாரிசாக நியமித்தார்; ப்ரதாப் சிங் ஜகம்மலை விட மூத்தவராக இருந்தாலும் கூட, அவர் தனது உரிமைகள் அனைத்தையும் பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைப் போல துறந்து மேவாரை விட்டுச் செல்லத் தயாராக இருந்தார். ஆனால் தளபதிகளுக்கு தங்கள் அரசர் எடுத்த முடிவில் சம்மதமில்லை. இது தவிர, ஜகம்மலுக்கு ஒரு அரசருக்கும் ஒரு தலைவனுக்கும் முக்கியமான தேவையாக கருதப்படும் தைரியம், சுயமரியாதை போன்ற குணங்கள் இல்லை என்று நினைத்தார்கள். ஆகையால் அவர்கள் ஒட்டுமொத்தமாக, ஜகம்மல் சிம்மாஸனத்தைத் துறக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். மஹாராண ப்ரதாப்பும் கூட தளபதிகளின் விருப்பத்துக்கும், மக்களின் எதிர்பார்ப்புக்கும் உரிய மரியாதை கொடுத்து, மேவார் மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக, 1568ல், ராணா 2ம் உதய் சிங்கின் ஆட்சியின் போது சித்தூர் முகலாய அரசன் அக்பரால் கைப்பற்றப்பட்டது. சித்தூரின் 3வது ஜௌஹர்
அரங்கேறியது; கோட்டையின் பெண்கள் தங்கள் மானம் காக்க தீ புகுந்தார்கள், ஆண்கள் போர்க்களத்தில் வீர மரணம் எய்தினார்கள். இந்த பெரு நாசத்துக்கு முன்பாகவே உதய் சிங்கும் அவரது குடும்பத்தாரும் புத்திசாலித்தனமாக அராவலி மலைத்தொடரின் அடிவாரத்தில் அவர் ஏற்கெனவே சமைத்திருந்த உதய்புர் நகருக்கு சென்று விட்டார்கள். இதற்குப் பின்னர் தான் ஜகம்மல் அகற்றப்பட்டு மஹாராணா ப்ரதாப் சிங் அரியணை ஏறினார். மஹாராணா எப்போதுமே இந்தியாவின் ஆட்சியாளராக அக்பரை அங்கீகரித்ததில்லை. அக்பர் முதலில் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி, மஹாரானா ப்ரதாப்பை வெற்றி கொள்ள நினைத்தாலும், அவரால் அக்பரை அரசனாக ஏற்றுக் கொண்டு தலை வணங்க முடியவில்லை. மஹாராணா அக்பரை அரசராக கூட ஒரு வேளை ஏற்றுக் கொண்டிருக்கலாம், ஆனால் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்ததால், அப்பாவி சிவிலியன்கள் 30000 பேர்களை சித்தூர் போருக்குப் பின் அக்பர் கொன்று குவித்ததை மஹாராணாவால் மன்னிக்க முடியவில்லை, அத்தகைய அநியாயத்துக்கும், கொடுமைக்கும் தான் தலை வணங்கப் போவதில்லை என்று தீர்மானித்ததாக சில அறிஞர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால், ஹிந்து வீர சம்பிரதாயப்படி போர்வீரன் அல்லாதவர்களையோ, ஆயுதங்களை எறிந்து சரணடைந்தவனையோ தாக்குவது மரபல்ல, தர்மமல்ல.
மஹாராணாவின் மூதாதையர்கள் இருப்பிடமான சித்தோர்கட் (சித்தூர் கோட்டை) முகலாயர்கள் பிடியில் இருந்தது. சித்தூரை மீட்பது தான் மஹாராணாவின் கனவாக இருந்து வந்தது, அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியவையாகவே இருந்தன. கிட்டத்தட்ட மஹாராணாவின் சக ராஜபுத்திர அரசர்கள் எல்லோரும் முகலாயர்களிடம் கைகட்டி சேவகம் செய்து வந்தார்கள். மஹாராணாவின் சொந்த சகோதரர்களான சக்தி சிங்கும், சாகர் சிங்குமே கூட அக்பரிடம் சேவகம் புரிந்தார்கள். ஏன், அம்பரின் ராஜா மான் சிங் போன்றோர் அக்பரின் படையில் தளபதிகளாகவும், அவரது குழுவில் ஆலோசகர்களாகவும் பணி புரிந்தார்கள். அக்பர் மொத்தம் 6 ராஜரீக தூதுக்களை மஹாராணாவிடம் அனுப்பி, பிற ராஜபுத்திர அரசர்களிடம் அவர் ஏற்படுத்தியிருந்த பரந்து பட்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள அனுப்பினார், ஆனால் மஹாராணா ஒவ்வொரு முயற்சியிலும் மண்ணை அள்ளிப் போட்டார். புதிய தலைநகரான உதய்பூருக்காக ராணா உதய் சிங், 1565ம் ஆண்டு உதய் சாகர் என்ற ஒரு நீர்த்தேக்கத்தை உருவாக்கினார். ஜூன் மாதம் 1573ம் ஆண்டு அம்பரின் குவர் மான் சிங், அந்த அணை மீது, முகலாய அரசன் அக்பரின் தூதுவனாக நின்று கொண்டு, தன்னை கௌரவப்படுத்த நடத்தப்படும் விருந்தில், மரபுச் சீர்முறையை விடுத்து மஹாராணா கலந்து கொள்ள வேண்டும் என்று ஆணவத்தோடு மொழிந்தார். மஹாராணாவும் மான்சிங்கும் ஒரே வயது உடையவர்கள், இருவருமே மே மாதம் 9ம் தேதி 1540ம் ஆண்டு பிறந்தவர்கள், ஆனால் ஒருவர் அரசர் மற்றவரோ இளவரசர். மஹாராணா ப்ரதாப், மரபுச் சீர் முறையைப் பின்பற்றி தனது மகன் குவர் அமர் சிங்கை, அக்பரின் சிறப்பு தூதுவரான குவர் மான் சிங்கோடு விருந்தில் பங்கு கொள்ள அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சி தான் முகலாயர்-மேவாரின் போருக்கு வழி வகுத்தது.
எதிரி மேவாரைச் சூழ்ந்து விட்டான். முதல் பிரச்சனை, நேரடியான ஒரு யுத்தம் நடத்த தேவையான படை வீர்ர்களைத் திரட்டுவது; ஆனால் இதைச் செய்ய பெரும் நிதி தேவைப்படும், மஹாராணாவின் கஜானாவோ காலிக் கிடங்காகிக் கிடந்தது. அக்பரிடத்தில் பெரும்படை, ஏராளமான பணம், மேலும் பல சாதகங்கள் நிறைந்து கிடந்தன. ஆனால் மஹாராணா ப்ரதாப் மயங்கி விடவுமில்லை, மனம் தளரவுமில்லை, அக்பரோடு ஒப்பிடும் போது தான் பலவீனமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கவுமில்லை. அவருக்கு இருந்த ஒரே கவலை எப்படியாவது முகலாயர்களின் பிடியிலிருந்து தாய் நாட்டை மீட்பது ஒன்று தான். ஒரு நாள் அவர் தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளை அழைத்து, மிக முனைப்பும், எழுச்சியும் மிக்க உரையாற்றினார். அதில் அவர், ‘’தைரியம் நிறைந்த என் வீர சகோதரர்களே, நமது தாய்நாடான இந்த புனித மேவார் பூமி, இன்னமும் முகலாயர்களின் பிடியில் சிக்கி இருக்கிறது. இன்று நான் உங்கள் அனைவரின் முன்பாகவும் சபதம் செய்கிறேன், சித்தூர் விடுதலை பெறும் வரை, நான் தங்கம் அல்லது வெள்ளித் தட்டுக்களில் உணவருந்த மாட்டேன், பஞ்சு மெத்தையில் படுத்துறங்க மாட்டேன், அரண்மனையில் வசிக்க மாட்டேன்; மாறாக நான் இலையில் தான் உணவு உண்பேன், கட்டாந்தரையிலே, ஒரு குடிசையிலே தான் படுத்துறுங்குவேன். அதே போல சித்தூர் விடுவிக்கப்படும் வரை என் முடியைக் கூட நான் ஷவரம் செய்து கொள்ள மாட்டேன். என் வீர சகோதரர்களே, இந்த சபதம் நிறைவேறும் வரை உங்கள் மனம், உடல், செல்வம் என அனைத்தையும் நீங்கள் அர்ப்பணித்து எனக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்’’ என்று சூளுரைத்தார். அனைத்து தளபதிகளும் தங்கள் அரசனின் இந்த சபதத்தால் கருத்தூக்கம் பெற்று, தங்கள் இறுதி சொட்டு உதிரம் உள்ள மட்டும் சித்தூரை விடுவிப்பதிலும், முகலாயர்களை எதிர்ப்பதிலும் மஹாராணாவுக்கு துணை நிற்பதாக வாக்களித்தார்கள்; தங்கள் இலக்கை விட்டுப் பின்வாங்கப் போவதில்லை என்று உறுதி பூண்டார்கள். அவர்கள், ‘’ராணா, நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்று நம்பிக்கையோடு இருங்கள்; உங்கள் சமிக்கை கிடைத்தால் மட்டும் போதும், நாங்கள் எங்கள் உயிரைத் தியாகம் செய்ய சித்தமாக இருக்கிறோம்’’ என்றார்கள்.
மஹாராணாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அக்பர் செய்த பெரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவின. எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் கோபமடைந்த அக்பர் போர் அறிவிப்பு செய்தார். ராணா பிரதாப்பும் முஸ்தீபுகளை மேற்கொண்டார். அவர், அடைய கடினமாக இருக்கும் அராவலி மலைத்தொடரில் அமைந்த கும்பல்கட்டுக்கு தன் தலை நகரை மாற்றிக் கொண்டார். அவர் காடுகளில் வசிக்கும் மலைக்குடியினரை தன் படையில் சேர்த்துக் கொண்டார். இவர்களுக்கு போர் புரிந்த அனுபவமே கிடையாது, ஆனால் அவர் அவர்களுக்கு பயிற்சி அளித்தார். மேவாரின் விடுதலைக்காக அவர் அனைத்து ராஜபுத்திர தளபதிகளையும் ஒரு கொடியின் கீழ் வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ராணா பிரதாப்பின் 22000 வீரர்கள் கொண்ட படை அக்பரின் 2 லட்சம் வீரரக்ள் கொண்ட படையோடு ஹல்திகாட்டில் பொருதியது. ராணா ப்ரதாப்பும் அவரது படையினரும் இந்தப் போரில் பெருவீரம் காட்டினார்கள்; ஆனாலும் அவர் பின் வாங்க நேர்ந்தது. அதே சமயம் அக்பரின் படையாலும் முழுமையாக ராணா பிரதாப்பை முறியடிக்க முடியவில்லை.
ராணா ப்ரதாப்புடன் கூட அவரது விசுவாசமான குதிரையான சேத்தக்கும் இந்தப் போரில் அமர நிலை எய்தியது. சேத்தக் ஹல்திகாட்டிப் போரில் ஆபத்தான காயம் பட்டாலும், தனது எஜமானனின் உயிரைக் காப்பாற்ற அது ஒரு கால்வாயைத் தாண்டியது. கால்வாய் கடந்தவுடன், சேத்தக் மடிந்தது, மஹாராணாவின் உயிரைக் காத்தது. நெஞ்சுரம் கொண்ட மஹாராணாவே கூட ஒரு சிறு குழந்தை போல தனது விசுவாசமான குதிரை உடல் மீது கதறிக் கதறி அழுதார். பின்னர் சேத்தக் தனது கடைசி மூச்சை விட்ட இடத்தில் ஒரு அழகான நந்தவனம் அமைத்தார். பிறகு, அக்பரே தாக்குதலுக்கு தலைமை ஏற்றார், ஆனால் 6 மாதக் காலப் போருக்குப் பிறகு, அக்பரால் ராணா ப்ரதாப்பை முறியடிக்க முடியாமல் தில்லி திரும்பினார். கடைசி உத்தியாக, அக்பர் 1584ம் ஆண்டு மேலும் ஒரு மகத்தான தளபதியான ஜகன்னாத்தை ஒரு பெரும் படையோடு மேவாருக்கு அனுப்பினார், ஆனால் 2 ஆண்டுகள் இடைவிடாது முயற்சி செய்த பின்னர் கூட அவரால் ராணா ப்ரதாப்பைக் கைப்பற்ற இயலவில்லை. காடுகளிலும், மலைகளின் பள்ளத்தாக்குகளிலும் திரிந்த மஹாராணா ப்ரதாப் தன்னுடன் தனது குடும்பத்தாரையும் கூட்டிச் செல்வது வழக்கம். எதிரி எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தாக்க கூடிய அபாயம் இருந்தது. காடுகளில் சரியான உணவு கிடைப்பதில் சிரமம் இருந்தது. பல முறைகளில் அவர்கள் உணவில்லாமல் போக கூடிய சூழலும் ஏற்பட்டது.
அவர்கள் உணவோ உறக்கமோ கூட இல்லாமல் மலைகளிலும் காடுகளிலும் சுற்றித் திரிய வேண்டி இருந்தது. உணவைத் துறந்து, எதிரியின் வருகை அறிந்து வேறு ஒரு இடத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அவர்கள் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டே இருக்க நேர்ந்தது. ஒரு முறை மஹாராணி காட்டில் ரொட்டிகளை (பக்ரிக்களை) சுட்டுக் கொண்டிருந்தார்; தங்கள் பங்கை உண்ட பின்னர், அவர் தனது மகளிடம், மிச்சம் இருந்த பக்ரியை இரவு உணவுக்கு வைத்திருக்க சொன்னார், ஆனால் அந்த நேரத்தில் ஒரு காட்டுப் பூனை தாக்கி இளவரசி கையிலிருந்த பக்ரியை பிடிங்கிக் கொண்டு சென்றதால், அரசகுமாரி அழ ஆரம்பித்தாள். அந்த பக்ரித் துண்டு கூட அவள் உண்ண விதிக்கப்படவில்லை. ராணா ப்ரதாப்புக்கு தன் மகளின் நிலையைக் கண்டு வருத்தம் ஏற்பட்டது; தனது சாகஸம், வீரம், சுயமரியாதை பற்றி அவருக்கே கோபம் உண்டானது; இத்தனை போராட்டமும் தேவை தானா, மதிப்பானது தானா என்ற சந்தேகமும் எழுந்தது. இத்தகைய தடுமாற்றம் மேலிட, அவர் அக்பரோடு சமரஸம் பேச ஒப்புக் கொண்டார். அக்பரின் அரசவையில் இருந்த ஒரு கவி ப்ருதிவிராஜ் என்பவர், மஹாராணா ப்ரதாப்பை பார்த்து வியப்பவர்களில் ஒருவர். அவர் ராஜஸ்தானி மொழியில் மஹாராணாவுக்கு ஒரு நீண்ட கடிதம் வரைந்து, அதில் அக்பரோடு சமரஸம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறி, மஹாராணாவை ஊக்கும் விதமாக எழுதியிருந்தார். அந்த கடிதத்தைப் படித்த பின்னர் மஹாராணாவுக்கு பத்தாயிரம் வீரர்களின் பலம் கிடைத்த உணர்வு ஏற்பட்டது. அவரது மனம் அமைதியடைந்து, நிதானத்தை எய்தியது. அவர் அக்பரிடம் சரண் அடையும் எண்ணைத்தைத் துறந்தார். மாறாக, அவர் தனது படையைப் பெருக்கி, மேலும் புதிய உத்வேகத்தோடு தனது இலக்கை அடைய கச்சை கட்டி இறங்கினார்.
மஹாராணா ப்ரதாப்பின் முன்னோர்களின் அவையில் அமைச்சராகப் பணி புரிந்த ஒரு ராஜபுத்திர தளபதி இருந்தார். தனது அரசன் காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிதல் கண்டு மனம் நொந்து போயிருந்தார். ராணா ப்ரதாப் எதிர்கொண்ட இடர்களையும் துயரங்களையும் பற்றித் தெரிந்து வேதனைப் பட்டார். 25000 வீரர்களை அடுத்த 12 ஆண்டுகளுக்கு பராமரிக்கத் தேவையான செல்வத்தை அவர் மஹாராணாவுக்கு அளித்தார். மஹாராணாவுக்கு பெருமகிழ்ச்சி, நெஞ்சாற நன்றி பாராட்டினார். தொடக்கத்தில் பாமாஷா அளித்த செல்வத்தை பெற அவர் தயக்கம் காட்டினாலும், பாமாஷா தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், அவர் இந்த அர்ப்பணிப்பை ஏற்றுக் கொண்டார். பாமாஷாவிடமிருந்து பணம் பெற்ற மஹாராணா பிற ஆதாரங்களிடமிருந்தும் செல்வம் பெறத் தொடங்கினார். தனது செல்வம் அனைத்தையும் பயன்படுத்தி தனது படையைப் பெருக்கி, முகலாயர்கள் வசம் இருந்த சித்தோரைத் தவிர மேவார் முழுக்கவும் மீட்டெடுத்தார். அக்பர் ஒன்றன் பின் ஒன்று என மஹாராணா ப்ரதாப்புக்கு எதிராக பல படைகளை அனுப்பினாலும், அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் நிறைய பணத்தையும், வீரர்களையும் மஹாராணா ப்ரதாப்பை தோற்கடிப்பதில் இழந்தது தான் மிச்சம். 30 ஆண்டுகள் மஹாராணா அக்பரின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்; தனது இறுதி பத்தாண்டுகளில் தனது ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியை மீட்க முடிந்தாலும், சித்தோர் கோட்டை மட்டும் எட்டாக் கனியாக, கானல் நீராக இருந்தது. அவருக்கு இது துயரமானதாக இருந்தாலும், அவரது மறைவுக்குப் பிறகு அவரது மூத்த மகன் அமர் சிங், சித்தோரை மீட்டான். மஹாராணா ப்ரதாப் ஒரு வேட்டையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இறந்தார். அவர் ஜனவரி மாதம் 29ம் தேதி 1597ம் ஆண்டு சாவண்டில் தனது 56வது வயதில் இறந்தார். தனது மகன் அமர் சிங்கை தனது வாரிசாக நியமித்த மஹாராணா, இறக்கும் தறுவாயில் முகலாயர்களிடம் தொடர்ந்து போரிடுவேன் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டார். சங்கடமான சூழ்நிலைகள் கூட அவரது திட வைராக்கியத்தை மாற்றவில்லை. தன் இறுதி மூச்சு உள்ள மட்டும் அவர் பஞ்சு மெத்தையில் உறங்கவுமில்லை, தங்கத் தாம்பாளத்தில் உணவருந்தவுமில்லை, மாளிகை வாசமும் செய்யவில்லை.
மஹாராணா ப்ரதாப்பின் மகன் அமர் சிங் முகலாயர்களோடு 17 போர்களை மேற்கொண்டாலும், சில ஷரத்துக்களுக்கு உட்பட்டு, அவர்களை ஆட்சியாளர்களாக ஏற்றுக் கொண்டான். இதே சமயத்தில், மஹாராணா ப்ரதாப்பின் விசுவாசம் மிக்க ராஜபுத்திரர்களின் பெரும் பகுதியினர், இந்த சரணாகதியால் மனம் வெதும்பி ராஜஸ்தானத்தை விட்டே வெளியேறினார்கள். இந்தக் குழுவில் ராட்டோர்கள், தியோரா சௌஹான்கள், பரிஹாரர்கள், தோமர்கள், கச்வாஹாக்கள், ஜாலாக்கள் ஆகியோர் அடக்கம். அவர்களில் பெரும்பாலானோர் ஹரியாணாவிலும், சில உத்திர பிரதேசத்திலும் குடி பெயர்ந்தார்கள். அவர்களை ரோர்கள் என்று அழைப்பார்கள். சுவாரசியமான நிகழ்வுகள் சிலவற்றில் இரண்டு:
ஹல்திகாட்டி போருக்கு முன்பாக, மான் சிங் கச்வாஹா சில பேர்கள் துணை கொண்டு வேட்டையாடிக் கொண்டிருந்த போது, ராணாவின் பீல் இன வேவுக் காரர்கள், இதை சில கி.மீ தொலைவில் இருந்த ராணாவுக்கு தெரிவித்தார்கள். மஹாராணாவின் பிரபுக்கள் சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மான் சிங்கை கொன்று விடலாம் என்று கூறிய போது, மஹாராணா அதற்கு சம்மதிக்கவில்லை, இது அவரது மாண்பினை வெளிப்படுத்துகிறது.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு முகலாய அதிகாரி அப்துர் ரஹீம் கான்கானாவின் குடும்பப் பெண்கள், ராணாவின் மகன் அமர்சிங்கிடம் சிக்கி விட்டார்கள். இந்த கட்டத்தில் கான்கானா, ப்ரதாப்புக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருந்தார்; அவர் ராணாவுக்கு எதிரான தாக்குதலுக்கு ஷேர்புரில் இருந்து தயார் செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பொருட்படுத்தாத மஹாராணா தனது மகன் அமர் சிங்கிடம், முகலாய பெண்களை பாதுகாப்பாக அவர்கள் கூடாரம் அனுப்பி வைக்குமாறு ஆணை இட்டார். இந்த நிகழ்வு கான்கானாவை எந்த அளவுக்கு பாதித்தது என்றால், அத்தகைய மாண்பு மிக்க ஒரு பேரரசனுக்கு எதிராக தன்னால் போரிட முடியாது என்று தீர்மானித்து, அக்பரிடம் தன்னை தனது பதவியிலிருந்து நீக்கி விடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னர் அவர் அக்பரின் சொந்த மகன் சலீமுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த அப்துர் ரஹீம் கான்கானாவைத் தான் ரஹீம் தாஸ் என்று ஹிந்தி மொழிக் கவிதையில் கருதப்படுகிறார்.