Home கட்டுரைகள் ஜான்சியின் வீராங்கனை ராணி லக்ஷ்மிபாய்

ஜான்சியின் வீராங்கனை ராணி லக்ஷ்மிபாய்

8 second read
0

1857ம் ஆண்டு நிகழ்ந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னணி வீராங்கனையாக விளங்கிய ஜான்ஸி ராணி என்று அழைக்கப்படும் ராணி லக்ஷ்மிபாய் இந்தியாவில் ப்ரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக விளங்கினார். இந்திய வரலாற்றில் அவரை இந்தியாவின் ஜோஆன் ஆஃப் ஆர்க் என்று அழைக்கிறார்கள். அவரை மணிகர்ணிகா என்ற பெயர் கொண்டு அழைப்பார்கள். அவரது குடும்பத்தினர் அவரை பிரியத்தோடு மனு என்று கூப்பிடுவார்கள். தளிர் வயதான 4 வயதிலேயே அவர் அன்னையை இழந்தார். இதன் விளைவாக அவரை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர் தந்தையார் தோள்களில் சுமத்தப்பட்டது. படிப்பை மேற்கொள்ளும் அதே நேரத்தில், குதிரையேற்றம், வாட்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற போர்க் கலைகளிலும் அவர் பயிற்சி பெற்றார். பிறந்த போது மணிகர்ணிகா எனவும், பிரியத்தோடு மனு எனவும் அழைக்கப்பட்ட ராணி லக்ஷ்மிபாய் 1835ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி சதாராவின் துவாதஸி மாவட்டத்தைச் சேர்ந்த மஹாராஷ்ட்டிர கர்ஹடே அந்தணக் குடும்பத்தில் வாராணசியில் பிறந்தார். அவரது தந்தையார் மோரோபந்த் தாம்பே பேஷ்வா 2ம் பாஜி ராவின் அரசவையில் பணி புரிந்த பின்னர், மனுவுக்கு 13 வயதான பின்னர் ஜான்ஸியின் மஹாராஜா கங்காதர் ராவ் நெவால்கரின் அவைக்கு குடி பெயர்ந்தார். ஜான்ஸியின் அரசர் கங்காதர் ராவுடன் மனுவுக்கு அவரது 14வது வயதில் திருமணம் ஆனது. அவரது திருமணத்துக்குப் பிறகு அவருக்கு லக்ஷ்மிபாய் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவரது தந்தைக்கு அரசவையில் இருந்த செல்வாக்கு காரணமாக ராணி லக்ஷ்மி பாய்க்கு பெரும்பாலான பெண்களை விட சுதந்திரம் அதிகம். 1851ல் ராணி லக்ஷ்மி பாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார், ஆனால் இந்தக் குழந்தைக்கு 4 மாதங்கள் இருக்கும் போது அது இறந்தது. தங்கள் மகன் இறந்த பின்னர் ஜான்ஸியின் ராஜாவும் ராணியும் தாமோதர் ராவை தத்து எடுத்துக் கொண்டார்கள். ஆனால் தனது மகன் இறந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் உடைந்த மனதனோடு 1853ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி ராஜா இறந்தார்.

அந்தக் கால கட்டத்தில் டல்ஹவுசிப் பிரபு தான் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். மனு கங்காதர ராவ் தம்பதியினரின் சுவீகார புத்திரனுக்கு தாமோதர ராவ் என்று பெயரிட்டார்கள். ஹிந்து பாரம்பரியப்படி, அவர் தான் சட்டபூர்வமான வாரிசு என்றாலும், ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தாமோதர ராவை சட்டபூர்வமான வாரிசாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். வாரிசு இழப்புக் கொள்கை, Doctrine of Lapseன் படி டல்ஹௌசிப் பிரபு அரசு ஜான்ஸி ராஜ்ஜியத்தை கையகப்படுத்த தீர்மானித்தது. ராணி லக்ஷ்மிபாய் ஒரு ப்ரிட்டிஷ் வழக்குரைஞரிடம் ஆலோசனைகள் செய்தார். அதன் பின்னர் அவர் லண்டனில் வழக்கு தாக்கல் செய்தார்; அது நிராகரிக்கப்பட்டது.

ப்ரிட்டிஷ் அதிகாரிகள் ராஜ்ஜியத்தின் நகைகளைக் கையகப் படுத்தினார்கள். அதோட கூடவே 60000 ரூபாய்கள் ஓய்வூதியமாகக் கொடுத்து, ஜான்ஸி கோட்டையை விட்டு வெளியேறி ராணி மெஹலுக்கு ராணியை செல்லுமாறும் உத்திரவிட்டார்கள். ஆனால் ராணி லக்ஷ்மிபாய் ஜான்ஸி ராஜ்ஜியத்தை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியோடு இருந்தார்.

அவர் அதன் அரண்களை பலப்படுத்தினார், ஒரு தன்னார்வலர் படையை ஏற்படுத்தினார்; பெண்களுக்கும் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. ராணியின் படைகளோடு குலாம் கௌஸ் கான், தோஸ்ட் கான், குதா பக்‌ஷ், லாலா பாவு பக்‌ஷ், மோதி பாய், சுந்தர்-முண்டர், காஷி பாய், திவான் ரகுநாத் சிங், திவான் ஜவஹர் சிங் போன்ற வீர்ர்கள் இணைந்து கொண்டார்கள்.

இவை அனைத்தும் ஜான்ஸியில் நடந்து வந்த போது மே மாதம் 10ம் தேதி 1857ம் ஆண்டு மேரட்டில் ப்ரிட்டிஷ் படையின் இந்தியப் பிரிவில் புரட்சி வெடித்தது. இது தான் ப்ரிட்டிஷாருக்கு எதிரான கலகத்தை வெடிக்கச் செய்யும் பொறியாக இருந்தது. தங்கள் என்ஃபீல்ட் ரைஃபிள்களின் மேலே இருக்கும் உறைகள், பன்றி மற்றும் பசுவின் கொழுப்பால் பூசப்பட்டிருக்கிறது என்ற வதந்திகள் பெருக ஆரம்பித்தது. பன்றி இஸ்லாமியர்களுக்கு சமயரீதியாக விரோதமான விலங்கு, பசுவோ ஹிந்துக்களுக்கு தாய் போன்றது, புனிதமானது, உண்ணத் தகாதது. ப்ரிட்டிஷ் கமாண்டர்கள் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதி, அதை மதிக்காதவர்களுக்கு தண்டனையும் வழங்க ஆரம்பித்தார்கள். இந்த புரட்சியின் போது, பல ப்ரிட்டிஷார் சிப்பாய்களால் கொல்லப் பட்டார்கள். ப்ரிட்டிஷார் இந்தப் புரட்சியை வேகமாக முடிக்க நினைத்தார்கள். இதற்கிடையில் இந்தியா முழுக்க புரட்சித் தீ பரவத் தொடங்கியது, மே மாதம் 1857ம் ஆண்டு முதல் சுதந்திரம் போர் வட பாரதத்தின் பல இடங்களில் வெடிக்கத் தொடங்கியது. இந்த குழப்பமான நேரத்தில், ப்ரிட்டிஷார் தங்கள் கவனத்தை வேறு இடத்தில் திருப்ப வேண்டி வந்தது, லக்ஷ்மி பாய் ஜான்ஸியை ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டார். இந்த நேரத்தில், ஜான்ஸியில் உருவான சச்சரவுகளை விரைவாகவும், திறம்படவும் தன் துருப்புக்களுக்குத் தலைமை தாங்கி ராணி முறியடித்தார். இந்த தலைமை காரணமாக அவரால் சுற்றிலும் இருந்த புரட்சியைத் தாண்டி ஜான்ஸியை அமைதியாக வைத்திருக்க முடிந்தது.

இந்த கட்டம் வரையில் அவர் ப்ரிட்டிஷாருக்கு எதிராக போர்க் கொடி தூக்குவதில் தயக்கம் காட்டினார். ஆனால் Sir Hugh Rose தலைமையிலான ப்ரிட்டிஷ் துருப்புக்கள் 1858ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி முற்றுகை இட்ட போது அவரது தயக்கம் முடிவுக்கு வந்த்து. ஜான்ஸியின் ராணியும் அவரது விசுவாசம் மிக்க வீரர்களும் சரணடைவதில்லை என்று தீர்மானித்தார்கள். போர் சுமார் 2 வார காலம் நீடித்தது. ஜான்ஸிக்கு எதிரான பீரங்கித் தாக்குதல் தீவிரமாக இருந்த்து. ஜான்ஸியில் பெண்களும் கூட வெடிப் பொருட்களை சுமந்து சென்றார்கள், வீர்ர்களுக்கு உணவு கொண்டு சேர்த்தார்கள். ராணி லக்ஷ்மி பாய் மிக சுறுசுறுப்பாக செயல்பட்டார். அவர் தானே முன்னின்று கோட்டை பாதுகாப்பைக் கண்காணித்தார். அவர் தன் துருப்புக்களை முடுக்கி விட்டு கடுமையாக ப்ரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார். ஆனால் 20000 பேர்கள் அடங்கிய புரட்சித் தலைவர் தாத்தியா தோபே தலைமையிலான ஒரு படை ஜான்ஸியை விடுதலை செய்து, லக்ஷ்மிபாயை விடுவிக்க வந்து கொண்டிருந்தது. ஆனால் 1540 பேர்களே இருந்த ப்ரிட்டிஷ் படை இந்த முற்றுகை முறியடிக்கப் படாமல் இருக்க திறமையாக செயல்பட்டது; நல்ல பயிற்சியும், ஒழுங்கும் இருந்த ப்ரிட்டிஷ் படைகள் முன்பு, அனுபவமில்லாத, பயிற்சி இல்லாத படைகள் தாக்குப் பிடிக்க முடியாமல், மார்ச் மாதம் 31ம் தேதி ப்ரிட்டிஷ் தாக்குதலுக்குப் பின்னர் சிதறி ஓடின. லக்ஷ்மிபாயின் படைகளால் 3 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் போன நிலையில், கோட்டைச் சுவற்றில் சேதம் ஏற்பட்டது. ராணி லக்ஷ்மிபாய் சுவர் வழியே இரவோடு இரவாக தன் காவலர்கள் புடை சூழ தப்பிச் சென்றார்; அவர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிட்த் தக்கது. இளம் தாமோதர் ராவோடு ராணி கல்பிக்கு தன் படைகளோடு தப்பினார், அங்கே தாதியா தோபேயின் படைகள் உட்பட மற்ற புரட்சிப் படைகளும் இணைந்தன. ராணியும் தாத்தியா தோபேயும் க்வாலியருக்கு சென்றார்கள். அங்கே ஒருங்கிணைந்ஹ புரட்ச்சியாளர் படை க்வாலியர் மஹாராஜாவின் படையை முறியடித்தது, அவரது படைகள் புரட்சியாளர் படைகளோடு சேர்ந்து கொண்டன. க்வாலியர் கோட்டை கைவசம் ஆனது.

ஆனால் க்வாலியரின் ஃபூல் பாக்குக்கு அருகே இருந்த கோடா கி சராய் என்ற இட்த்தில் 8வது hussarsடன் நடைபெற்ற போரில் ஜூன் மாதம் 18ம் தேதி 1858ம் ஆண்டு ராணி இறக்கிறார். அவர் வீரனின் உடைகளை அணிந்து க்வாலியர் கோட்டையைக் காக்க போரில் குதிக்கிறார். ஆனால் ப்ரிட்டிஷார் 3 நாள் கழித்து க்வாலியரைக் கைப்பற்றினார்கள். க்வாலியர் போர் பற்றிய தனது அறிக்கையில் general Sir Hugh Rose, ”குறிப்பிடத்தக்க அழகும், தந்திரமும், விடாமுயற்சியும்” கொண்டவர் ராணி என்றும் அவர் தான் புரட்சித் தலைவர்களிலேயே மிக ஆபத்தானவர் என்றும் கூறியிருக்கிறார். அவரது தைரியம், சாகஸம், மதிநுட்பம், 19ம் நூற்றாண்டில் மகளிர் அதிகாரம் வழங்கலில் முற்போக்கு சிந்தனைகள் மற்றும் அவரது தியாகங்கள் காரணமாக அவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் சின்னமாக ஆனார். ராணியின் வெண்கலச் சிலைகள் ஜான்ஸியிலும் க்வாலியரிலும் குதிரை சவாரி செய்வது போல வடிக்கப்பட்டிருக்கின்றன. ராணியின் தந்தையார் மோரோபந்த் தாம்பே கைப்பற்றப்பட்டு, ஜான்ஸி வீழ்ந்த சில நாட்களிலேயே தூக்கிலடப்பட்டார். ராணியின் சுவீகாரப் பிள்ளையான தாமோதர ராவுக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கொடுக்கப்பட்டாலும், அவரது சொத்துக்கள் அவருக்கு அளிக்கப்படவில்லை.

ராணி லக்ஷ்மி பாய் ஒரு தேசிய வீராங்கனையாக ஆனார், இந்தியாவில் பெண் வீரத்துக்கு ஒரு சின்னமாக திகழ்ந்தார். இந்திய தேசியப் படை உருவாக்கப்பட்ட போது, அதன் முதல் பெண் பிரிவுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. இந்திய கவிதாயினி சுபத்ரா குமாரி சௌஹான் வீர ரஸத்தில் ராணி லக்ஷ்மிபாய் பற்றி எழுதிய கவிதை இன்றைய இந்தியாவின் பள்ளிகளிலும் பிள்ளைகளால் ஒப்பிக்கப் படுகிற்து. இன்றும் கூட ராணியின் வீர தீர சாகஸங்கள் புந்தேல்கண்ட் பகுதியின் நாட்டுப்புற பாடல்களாக, செவி வழிக் கதைகளாக, உணர்ச்சி பொங்க பாடப்பட்டு பேசப்பட்டு வருகின்றன. ஹிந்தியில், கூப் லடி மர்தானி தீ, வோ ஜான்ஸீ வாலி ரானீ தீ என்ற பாடல் இதற்கு சான்று. (தீரமான ஆண்மையோடு போரிட்டாள், அவள் தான் ஜான்ஸியைச் சேர்ந்த ராணி) என்பது அதன் பொருள்.

Load More Related Articles

Check Also

ஸ்ரீ அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை

உங்களுடைய சபையின் ஆண்டுவிழாவில் பேசும்படி என்னைக் கேட்டுக்கொண்டப்பொழுது இன்றையப் பேச்சுப் …