Home கட்டுரைகள் புரட்சிச்சுடர் விநாயகர் தமோதர் சாவர்க்கர்

புரட்சிச்சுடர் விநாயகர் தமோதர் சாவர்க்கர்

17 second read
0

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் வகிப்பவர் வீர சாவர்க்கர். அவரது பெயரைச் சொன்னால் சர்ச்சை கிளப்பப் படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மிகச் சிறந்த புரட்சியாளர்களில் ஒருவராக அவரை சிலர் கருதுகிறார்கள்; ஆனால் பிறரோ அவரை சமயவாதி என்றும், இத்தாலிய சாணக்கியன் என்று கருதப்படும் Machiavelliயைப் போன்ற சூழ்ச்சிக்காரர், குயுக்தியான ராஜதந்திரி என்றும் கருதுகிறார்கள். வீர சாவர்க்கர் ஒரு மகத்தான பேச்சாளர், அற்புதமான எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர், கவிஞர், தத்துவ ஞானி, சமூக சேவகர். அவர் ஹிந்து சமயத்தின் மிக நேர்த்தியான பண்டிதர். அவர் தான் telephone, photography, parliament போன்ற பல ஆங்கிலச் சொற்களுக்கு ஹிந்தி மொழிப் பதங்களை அளித்தவர்.

விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற வீர சாவர்க்கர் மே மாதம் 28ம் தேதி 1883ம் ஆண்டு, நாசிக் அருகே இருக்கும் பாக்புர் என்ற கிராமத்தில் பிறந்தார். தாமோதர்பந்து சாவர்க்கருக்கும், ராதாபாய் அம்மையாருக்கும் பிறந்த 4 பிள்ளைகளில் அவரும் ஒருவர். வீர சாவர்க்கர் நாசிக்கில் இருந்த சிவாஜி பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைப் பயின்றார். அவருக்கு 9 வயது இருக்கும் போது தனது தாயை இழந்தார். பிறந்த காலம் தொட்டே சாவர்க்கர் ஒரு புரட்சியாளர் தான். அவருக்கு 11 வயது ஆன போதே தன் வயது ஒத்த பிள்ளைகளைக் கூட்டி, வானர சேனை என்ற ஒரு கூட்டத்தை ஏற்படுத்தினார். அவரது உயர் பள்ளிப் பருவ நாட்களில், வீர சாவர்க்கர் சிவாஜி உத்ஸவம், பால கங்காதர திலகர் தொடக்கி வைத்த கணேச உத்ஸவம் ஆகிய கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார். திலகரைத் தான் தனது குருவாக சாவர்க்கர் கருதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொண்டாட்டங்களைப் பயன்படுத்தி அவர் தேசியக் கருத்துக்களை வலியுறுத்தும் நாடகங்களை அரங்கேற்றுவார். வீர சாவர்க்கரின் தந்தையார் 1899ல் தாக்கிய கொள்ளை நோயில் மறைந்தார். மார்ச் மாதம் 1901ம் ஆண்டு அவர் யமுனாபாய் என்ற அம்மையாரை மணந்தார். திருமணத்துக்குப் பின்னர் 1902ம் ஆண்டு, வீர சாவர்க்கர் புணேயில் இருந்த Fergusson கல்லூரியில் இணைந்தார்.

புணேயில் வீர சாவர்க்கர் அபிநவ பாரத் சொஸைடி என்ற ஒரு அமைப்பை நிறுவினார். அதோடு கூட அவர் சுதேசி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பின்னர் திலகரின் ஸ்வராஜ் கட்சியில் சேர்ந்தார். அவரது எழுச்சி ஊட்டும் தேச பக்தி உரைகளும், செயல்பாடுகளும் ப்ரிட்டிஷ் சர்க்காரின் கோபத்திற்கு இலக்காக அவரை ஆக்கியது. இதன் விளைவாக ப்ரிட்டிஷ் சர்க்கார் அவரது இளங்கலை பட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டது.

ஜூன் மாதம் 1906ம் ஆண்டு வீர சாவர்க்கர் பேரிஸ்டர் பட்டம் பெற லண்டன் ஏகினார். ஆனா லண்டனுக்கு சென்ற பின்னர், இந்தியாவில் நடக்கும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இங்கிலாந்தில் இருக்கும் இந்திய மாணவர்கள் மனங்களில் எழுச்சியைத் தூண்டினார். அங்கே Free India Society என்ற அமைப்பை ஏற்படுத்தினார்; இந்த அமைப்பு திருவிழாக்கள், சுதந்திரப் போராட்ட முக்கிய நிகழ்வுகள் உட்பட இந்திய அட்டவணையில் உள்ள பல நிகழ்வுகளை கொண்டாடியது, இந்திய சுதந்திரம் பற்றிய விவாதங்களையும் கருத்துக்களையும் பரப்ப முனைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டதாக விளங்கியது. இந்திய விடுதலைக்காக ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை முன் வைத்ததோடு, இங்கிலாந்தில் ஆயுதங்கள் தாங்கிய இந்தியர்கள் குழு ஒன்றையும் ஏற்படுத்தினார். இதில் பல பிரபலமான புரட்சியாளர்கள் பயற்சி பெற்றார்கள்; தமிழ்நாட்டைச் சேர்ந்த மாபெரும் புரட்சியாளர்களில் ஒருவரான குளத்தங்கரை அரசமரம் சிறுகதையின் படைப்பாளியும், தமிழ்ச் சிறுகதை உலகின் மூத்த முன்னோடியுமான வ.வே.சு. அய்யரும் வீரசாவர்க்கரின் துப்பாக்கி பாசறையில் பயின்றவர். அவர் வீரசாவர்க்கரை தனது மானசீக குருவாக வரித்திருந்தார்.

1908ம் ஆண்டு, ஆதாரம் நிறைந்த தகவல்கள் அடங்கிய, ஆய்வு நூலான 1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்று ப்ரிட்டிஷார் பழித்துரைக்கும் The Great Indian Revolt பற்றி எழுதி வெளியிட்டார். இந்தப் புத்தகத்தின் பெயர் The Great Indian War of Independence 1857 என்பதாகும். ப்ரிட்டிஷ் அரசு உடனடியாக அந்த புத்தகம் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் வெளியிடத் தடை விதித்தது. பின்னர், இது Madame Bhikaiji Cama என்ற பெண்மணியால் ஹாலந்தில் வெளியிடப்பட்டு, ப்ரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் புரட்சியாளர்களிடம் சேர்ப்பிக்கப்பட, இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டது.
1909ம் ஆண்டு மதன்லால் டீங்ரா என்ற வீர சாவர்க்கரின் தீவிர விசுவாசி, அப்போதைய வைஸ்ராயாக இருந்த கர்ஸன் பிரபு மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தோல்வியைத் தழுவி, மாறாக Sir Wyllie என்பவரைக் கொல்ல நேர்ந்த்து. வீர சாவர்க்கர் அந்த நிகழ்வைக் கண்டிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரிந்த்து. நாசிக்கின் ப்ரிட்டிஷ் ஆட்சியரான AMT Jackson ஒரு இளைஞரால் கொல்லப்பட்ட போது, வீர சாவர்க்கர், கடைசியில் ப்ரிட்டிஷாரின் வலையில் சிக்க நேர்ந்தது. வீர சாவர்க்கர் லண்டனில் 1910ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு, இந்தியா அனுப்பப் பட்டார். முறையான நீதி விசாரணைக்குப் பின்னர், ஆயுதங்களை சட்ட விரோதமாக கடத்தியதற்காகவும், புரட்சி உரைகள் ஆற்றியமைக்காகவும், தேச துரோக குற்றத்துக்காகவும் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, காலாபானி என்று அழைக்கப்படும் அந்தமான் செல்லுலர் சிறைக்கு நாடு கடத்தப்பட்டார்.

1920ம் ஆண்டு வித்தல்பாய் படேல், மஹாத்மா காந்தி, பால கங்காதர திலகர் போன்ற முன்னணி தேச பக்தர்கள் சாவர்க்கரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். மே மாதம் 21ம் தேதி 1921ம் ஆண்டு, வீர சாவர்க்கரை ரத்னகிரி சிறைச்சாலைக்கு மாற்றினார்கள், அங்கிருந்து பின்னர் யரவாடா சிறைக்கு கொண்டு சென்றார்கள். ரத்னகிரி சிறையில் தான் சாவர்க்கர் ஹிந்துத்வா என்ற புத்தகத்தை எழுதினார். ஜனவரி மாதம் 6ம் தேதி 1924ம் ஆண்டு, அவர் ரத்னகிரி மாவட்டத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த அரசியல் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட மாட்டேன் என்ற உறுதி மொழி அளித்ததன் பேரில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டவுடன், இந்தியாவின் பண்டைய கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாக்கவும், சமூக நலனுக்காக வேலை செய்யவும் வீர சாவர்க்கர் ரத்னகிரி ஹிந்து சபை என்ற அமைப்பை ஜனவரி மாதம் 23ம் தேதி 1924ம் ஆண்டு நிறுவினார்.

பின்னர் வீர சாவர்க்கர் திலகரின் ஸ்வராஜ்ய கட்சியில் இணைந்து, ஹிந்து மஹாசபை என்ற ஒரு தனி அரசியல் அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராக ஆனார். ஹிந்து தேசியத்துக்காக பாடுபட்ட வீர சாவர்க்கர் பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். ஹிந்து மஹாசபை பாகிஸ்தான் உருவாக்கத்தை எதிர்த்தது, காந்தி கடைபிடித்து வந்த திருப்திப்படுத்தல் அதாவது appeasement கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஹிந்து மஹாசபையின் தன்னார்வலராக இருந்த நாதுராம் கோட்ஸே என்பவர் காந்தியை 1948ம் ஆண்டு சுட்டுக் கொன்று, தூக்கு மேடை ஏறும் வரை தன் செய்கைகளின் நியாயத்தை எடுத்து இயம்பினார். காந்தி படுகொலை வழக்கில் வீர சாவர்க்கர் இந்திய அரசால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாலும், உச்ச நீதி மன்றம் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவரை விடுதலை செய்தது.

நாடு, நாட்டு நலன், நாட்டு விடுதலை, பிளவு படாத இந்தியா என்ற ஒன்றையே நினைந்து, மண்ணின் மாண்பு, கலாச்சாரம் ஓங்க வேண்டும், அறம் தழைக்க வேண்டும் என்பதையே உயிர் மூச்சாகக் கொண்ட தலை சிறந்த தேச பக்தர்களில் ஒருவரான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் உயிர் அவரது 83ம் வயதில் பிப்ரவரி மாதம் 26ம் தேதி 1966ம் ஆண்டு பிரிந்தது.

Load More Related Articles

Check Also

Best Online casinos In america

Posts How we Courtroom An educated Real money Harbors United states Casinos on the interne…